Wednesday, November 21, 2007

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்


பே ர் அண்டு லவ்லி க்ரீம் போட்டால் 3 வாரத்தில் ஒரு அக்கா(அ) தங்கச்சி அப்படியே சிவப்பாக மாறுவதாகக் காண்பிக்கிறார்கள். அது உண்மையானால் அந்த "பேர் அண்டு லவ்லி" இன்னும் காஸ்மாட்டிக் சரக்காக இருக்காது பார்மச்சூட்டிகல் சரக்காக அவதாரம் எடுத்துவிடும். அதாவது சோதனை செய்து அறிவியல் பூர்வமாக சொல்லப்படும் பலன்களை "பேர் அண்டு லவ்லி" கொடுத்தால் அதை பார்மச்சூட்டிகல் சரக்காக ( படை ,சொறி, சிரங்கு, களிம்பு வகைகள் போல) விற்க அனுமதி கிடைக்கலாம்.

ஏன் "பேர் அண்டு லவ்லி" இன்னும் காஸ்மட்டிக்காகவே இருக்கிறது என்றால் ஒரு தலைமுறையே உபயோகித்தாலும் கலர் மாறாது அதுதான் உண்மை. கலர் மாறுவதற்காக உடல் முழுதும் அறுவை சிகிச்சை செய்த மைக்கேல் ஜாக்சன் என்ன முட்டாளா? மூன்றே வாரத்தில் "பேர் அண்டு லவ்லி" தடவி மாறியிருக்கலாமே?

கோழியூர் (காழியூரா ? கோழியூரா ?? ) நாராயணனும் அவரைப்போல தொழில் செய்யும் மனிதர்களும் ஜோதிடத்தை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் பலன்களை நிரூபித்து அறிவியலுக்கான ( ஜோதிடம் அறிவியலாம் !!) நோபல் பரிசு வாங்க வேண்டியதுதானே?

ஜோதிடம் ஒரு பொழுது போக்குக் கலை அவ்வளவே. அது கலையாக இருப்பதனால்தான் எந்த வரையரையும் இல்லாமல் நட்சத்திரமும் கிரகமும் ஒண்ணுதான் என்று நினைத்தவாறு பிதற்றமுடிகிறது. கலை (Art) என்று வந்துவிட்டால் எந்த அறிவியல் மூலமும் தேவை இல்லை. எதைக் கிறுக்கினாலும் மாடர்ன் ஆர்ட்டாக மாறும்.

அறிவியலில் கிறுக்கல் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ ஏற்றுக்கொள்ளமுடியாது.கிறுக்கல் கிறுக்கலாகவே வரையறுக்கப்படும்.


ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.
http://classroom2007.blogspot.com/2007/11/jl51.html

சுனாமி போன்ற விபத்துகளில் இறந்தவர்கள் அனைவரும் அன்று சாவார்கள் என்று சுப்பையா வாத்தியாரால் சொல்ல முடிந்திருக்கும் யாரும் இவரை அணுகவில்லை என்பது வேதனையான விசயம். தமிழக பிறப்பு இறப்பு பதிவுத்துறை இவரை அணுகி வரும் நாட்களில் சாகப்போகும் மக்களின் பட்டியலை தாயாரித்துக் கொள்ளலாம். தேவை கைரேககையோ ஜாதகமோதான். குடி மக்களிம் ரேசன் கார்டில் ஜாதகம் தேவை என்று ஒரு சின்ன சட்டத்திருத்தம்மூலம் இதனைச் செயல்படுத்தலாம்.

  • இனிமேலாவது இவர் சொல்லும் புத்தகங்களைப் படித்துவிட்டு அதன்படி இன்சூரன்ஸ் செய்யுங்கள்.
  • இந்த புத்தகங்கள் உதவியுடன் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம். இது பயணம் செய்வதற்குமுன் நீங்கள் சாவீர்களா அல்லது பத்திரமாக பயணம் செய்வீர்களா என்று தெரிந்து கொள்ள உதவும் . அதன்படி டிக்கட் புக் செய்யலாம்.
  • கும்பகோணம்போல் பள்ளி விபத்துகளைத் தவிர்க்க (தவிர்க்க முடியாதாம் ஆனால் சாகும் தேதியை தெரிந்து கொள்ளலாம்) குழந்தைகளை ஜோதிடம் பார்த்து சாகும் நாள் குறித்து அனுப்பவும்.இதனால அதிர்ச்சிகள் தவிர்க்கப்படும்.
  • எல்லாச் சாவுகளும் ஜாதகப்படி(கைரேகைப்படி) நடப்பதால் விபத்து இழப்பீட்டிற்கு அரசாங்கம் முன்கூட்டியே பட்ஜெட் போடலாம்.
  • இன்சூரன்ஸ் செய்தவர்களின் ஜாதம் இருந்தால் (கைரேகை ??) அவர்களின் சாவு தேதியை முன்கூட்டியே அறிந்து சாகும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக பாலிஸியை கேன்சல் செய்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் இலாபம் ஈட்டலாம்.
  • அல்லது கடைசித் தேதி அன்று பணப்பட்டுவாட செய்து சாகப் போகும் பாலிசிதாராரிடம் நல்ல பெயர் எடுக்கலாம்.
  • ரேசன் கார்டில் ஜாதம் இணைத்து அனுப்பினால் அரசாங்கம் யார் யார் எந்த ஆண்டுவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று Expiry Date ம் அடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஜோதிடம் உண்மையா? பொய்யா?.முடிவு என்ன?
http://jaallyjumper.blogspot.com/2007/11/blog-post_19.html


Picture courtesy: Internet

9 comments:

  1. கோழியூர் இல்லை,காழியூர் தான் சரி.

    LICக்கு லாபம் தரும் யோசனையை மக்கள் விரும்ப மாட்டார்கள்.சாகும் தேதி தெரிந்துவிட்டால் ஒரு மாதத்திற்கு முன்னால் பாலிசி எடுத்து ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்தலாமே.

    ReplyDelete
  2. கல்வெட்டு
    ஜோதிடர் சொல்வதை கேட்டு படிக்கும் துறை தேர்ந்தெடுக்க, படிப்பை நிறுத்தி திருமணம் செய்ய, தன் அம்மாவின் நல்லொழுக்கத்தை தெரிந்துகொள்ள பலர் இருக்கிறார்கள். பிறப்பின் நேரம் துல்லியமாக தெரியாத ஜாதகம் பலரின் வாழ்க்கையை கணிக்கிறது.

    ReplyDelete
  3. ஃபேர் அண்ட் லவ்லி உவமை இந்த இடத்தில்..மிகப் பொருத்தம்...நன்று.

    ReplyDelete
  4. கலக்கல்...ஆனா..இது தமிழ்மணத்திலே பாத்த மாதிரி தெரியலையே...

    ReplyDelete
  5. தோலின் நிறம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வெயிலில் அலையும் நேரங்களில் சற்றுக்கருப்பாகவும், மற்ற நேரங்களில் சற்று சிவப்பாகவும் இருக்கிறது என்று நான் நிஜமாகவே நம்புகிறேன்.
    நான் ஃபேர் அண்ட் லவ்லி (+2 படிக்கும்போது) உபயோகிக்கையில் கொஞ்சம் நிறம் மாறியதாக உணர்ந்தேன். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  6. உமையணன்,
    உடலின்(தோலின்) வண்ணங்கள் உள்ளிருந்து(biologoical) நிர்ணயிக்கப்படுபவை.
    நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களை நல்ல பராமரிப்பில் கவர்ச்சியாகப் வைத்துக்கொள்ளலாம்.
    குடை,கார்,A/C, வசதி... போன்றவை வனப்பைத் தரும் .

    கருப்பை வெளுப்பாக்கினால் அது காஸ்மாட்டிக் அல்ல, நிச்சயம் நோபல் பரிசு பெறத்தக்க கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இது நிகழலாம்,

    ஆனால் நிச்சய்ம் பேர்-அண்ட்-லவ்லி அந்த வகை அல்ல அதனால்தான் அது இன்னும் "காஸ்மாட்டிக்" ஆக உள்ளது.


    ***

    TBCD,
    தமிழ்மணத்தில் எனது பதிவுகள் திரட்டப்படுவது இல்லை. நான் வலிந்து விலக்கிக்கொண்டது. அதில் தமிழ்மணத்தின் குறை ஏதும் இல்லை.

    ***


    பாச மலர்
    பேர்-அண்ட்-லவ்லி நம்பிக்கை சார்ந்த ஒரு சந்தைப்படுத்தல். நம்பிக்கையை கிண்டல் செய்ய இது போன்ற பல உதாரணங்கள் உண்டு.


    ***
    பத்மா
    ஒன்றை நம்பிவிட்டால் அதன் போக்கில் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துவிடவே மக்கள் விரும்புகிறார்கள்.

    ***

    தருமி

    :-)

    உங்கள் பதிவை அந்தக்காலத்திலேயே நான் படித்து விட்டேன்.
    இணைப்பு புதியவர்களுக்கு ஒரு அறிமுகமாக இருக்கும்.

    ஜாலி ஜம்பர்
    திருத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. ஜோதிடம் சொல்பவனுக்கு அவனது எதிர்காலம் பற்றிய அறிவிருக்குமா? அப்படியிருந்தால் ஏன் மரத்தடியில் ஜோதிடம் சொல்லி கையேந்த வேண்டும்?

    R.K.Narayan எழுதிய An astrologer's Day படித்துள்ளீர்களா? அது தான் நினைவில் வருகிறது.

    ReplyDelete
  8. //நான் ஃபேர் அண்ட் லவ்லி (+2 படிக்கும்போது) உபயோகிக்கையில் கொஞ்சம் நிறம் மாறியதாக உணர்ந்தேன். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

    சும்மா வெளியே போயிட்டு வந்து முகத்தை கழுவிப்பாருங்க, வெள்ளையா ஆனமாதிரி தான் தெரியும்! இதுக்கு எதுக்கு பேர் அண்ட் லவ்லி!

    ReplyDelete