Friday, February 08, 2008

வரும் வழியில் அந்த நீல நிற பூக்களைப் பார்த்தேன், நின்று நலம் விசாரிக்க முடியவில்லை

தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது.சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். ஒரு வேளை அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன். திரும்பிக்கூட பார்க்காமல் அந்த பூக்களுக்கு விடை கொடுத்தேன். அவை நாளையும் இருக்குமா என்று தெரியாது.

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.

எல்லோரும்வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.

பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.

நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும. எப்படி இருக்கிறீர்கள? என்று.

2 comments:

  1. நிதர்சனமான உண்மை.. பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லைதான்.. நானும் பல நாட்களில் இதே மாதிரி யோசித்திருக்கிறேன்.

    ReplyDelete