Monday, October 15, 2018

96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி? ஏன்?

நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்திற்காக 'விசய் சேதுபதி' அதிகம் மெனக்கெட்டு உடம்பை வளர்த்துள்ளார். டி ராசேந்தரை நினைவுபடுத்தும் தோற்றத்தைக்கொண்டுவர, அதிகம் உழைத்துள்ளதை பாராட்டவேண்டும்.

தொந்தியும் தொப்பையுமாக, சதக் பொதக் என்று, ஒரு சராசரி ஆண் வர்க்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் விசய் சேதுபதி.சினிமாவைக் காதலிக்கும் ஒரு நடிகனால் மட்டுமே படத்திற்காக இப்படி உடம்பில் மாற்றம் காட்ட முடியும்.

ராமச்சந்திரனாக வாழ்ந்து இருக்கிறார்

நட்சத்திர விடுதியில் திரிசாவுடன் தரையில் அமர்ந்திருக்கையில் தள்ளி அமர்வது, குழந்தை போல பாசாங்கு காட்டுவது, கார் கதவைத் திறக்கும்போது சசிகலாவிற்கு எடப்பாடி அய்யா காட்டும் வகையான‌ பவ்யம், எல்லாவற்றையும் தாண்டி, தூங்குபவளின் தாலியை வணங்கி கண்ணில் ஒற்றுவது போன்ற "அரைவேக்காட்டுத்தனம் + பத்தாம் வகுப்பிற்கு மேல் மனதளவில் வளராத‌" கேரக்டரை நம் கண்முன் கொண்டுவருகிறார் அவரின் தேர்ந்த நடிப்பால். வெல்டன் சேதுபதி!

குறியீடுகள்

ராமச்சந்திரன் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை பல குறியீடுகளாலும் இயக்குநர் உணர்த்துகிறார். அறையில் இருக்கும் நம்மாழ்வார் படம், தொழிலதிபர் 'சக்கி' புரோமோட் செய்யும் காப்பர் சொம்பு & டம்ளர் என்று பல குறியீடுகளால், ராமச்சந்திரன் கேரக்டர் வாழும்,  "ஃகீலர் வாழ்க்கையை" நமக்கு குறிப்பால் குறிப்பால் உணர்த்தி, அந்த அரைவேக்காட்டுக் கேரக்டரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதையும் தாண்டி, பெண்கள் "சிலீவ் லெஃச்" போடக்கூடாது என்று ராமச்சந்திரன் கேரக்டர் சொல்வதாக அவரின் மாணவிகளை வைத்தும் சொல்லியிருக்கிறார். இப்படியான காட்சிப்படுத்தல்கள்மூலம், 96 க்குப்பிறகு வளராமல் தேங்கிவிட்ட "முன்னோர்கள் என்ன முட்டாள்களா?" என்று சொல்லும் இன்றைய வாட்சப்பு மனிதர்களின் பிரதிநிதியாக ராமச்சந்திரனை கச்சிதமாக திரையில் கொண்டுவருகிறார் விசய் சேதுபதி. வெல்டன்!

பாலுறவு நடக்குமா /நடக்காதா

"வீடு பக்கத்துல இருக்கு வாங்க பேசுவோம்" என்று 1986  பத்தாம் வகுப்பு கிழக்கூட்டமான நானே சகசமாக சொல்லியிருக்கிறேன் என் ஆரம்பப்பள்ளி பப்பி லவ் பெண்களிடம். 1996 ல் பத்து படித்த கூட்டம், "பாலுறவு" நடந்துவிடலாம் அல்லது நடந்துவிடுமோ? என்பது குறித்தே பயப்படுகிறார்கள் அல்லது அதையே முக்கிய கருவாக வைத்து பயம் காட்டுகிறார்கள் பார்வையாளர்களுக்கு.

மேலும் , "ஒன்னியும் நடக்காது தைரியமா படம் பாருங்க" என்பதை "ரம்பாவே ஆடினாலும் அசையாதவர்" என்று கீரோயின் வழியாக‌ பிலடப், "அய்யா நல்லவர் வல்லவர்" என்ற லோக்கல் தாதாக்களின் அல்லக்கை பில்டப்பிற்கு சிறிதும் சளைக்காத மாணவி கதாபாத்திரம்.

இப்படி பலவழிகளில் பாலுறவு நடக்குமா /நடக்காதா/நடக்கவே நடக்காது/ தங்கக்கம்பி தம்பி என்று, சானு‍-ராமச்சந்திரன் சந்திப்புகள் திகிலாகவே போகிறது. அவர்கள் அருகில் இருந்தாலே ஏதாவது நடந்துவிடலாம் என்ற பில்டப்புகளை இயக்குநர் குறியீடுகளாலும், சவலைப்பிள்ளை போன்றதொரு மன்னாரு பாத்திரத்தை தன் நடிப்பாலும், நம் கண்முன் கொண்டுவந்து விசய்சேதுபதியும் "சபாசு" என்று சொல்ல வைக்கிறார்கள்.
**
"அந்த விசயம்" நடந்துவிடுமோ?

இது எல்லாம் தாண்டி நட்சத்திர விடுதியில் , திரிசா படுக்கையில் இருந்துகொண்டு "மேல வாடா" என்று அழைத்தவுடன் விசய் சேதுபதி "அஞ்சரைக்குள்ள வண்டி" லெவலில் சீன் போட்டு, தட்டுத்தடுமாதிரி படுக்கையில் கைவைத்து ஏறி, மனம் எல்லாம் காமம் மட்டுமே உள்ள அந்நியனாக நடிப்பில் அசத்துகிறார். படம் முழுக்க "அந்த விசயம்" நடந்துவிடுமோ என்ற பரிதவிப்பில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவருவதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். இயக்குநரின் சிறப்பு!

வெறுமனே நடிப்பால் மட்டும் இல்லாமல், உரையாடல்ககளிலும் நேரடியாகவே,  "ஏதாவது ஆயிருமா?", "என்னடா இந்த வேகத்தில் இருக்காங்க" என்று தோழியாக வரும் ஒரு கேரக்டர் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே உள்ளது கதைக்கு வலுச்சேர்க்கிறது.

திரிசா தவிர எல்லா நண்பர்களும் "ஏதாவது ஆயிருமோ?" என்ற சிந்தனையிலேயே படத்தை நகர்த்துகிறார்கள். அருமையான திரைக்கதை ஒருவித படப்படப்புடன் ஏதாவது ஆகாதா? அல்லது ஆயிருமோ? என்ற பரிதவிப்பை படத்தின் பின்பாதி முழுக்க தெளித்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் எதிர்பார்ப்பை தன் சீரிய நடிப்பால் சிறக்கச் செய்கிறார் விசய்சேதுபதி.
**
நீ இன்னும் வெர்சினா?

எனது 1986 பத்தாம் வகுப்பு காலம் மற்றும் இந்தப்படம் நடக்கும் 1996 பத்தாம் வகுப்பு காலங்களில் வளர்ந்து "ஆளான "ஆணுக்கோ பெண்ணுக்கோ கன்னிகழிதல் என்பது திருமணம் முதலிரவு நேரமே. சுய இன்பங்கள் தவிர்த்து, வெர்சினிட்டியை இழப்பது என்பது நேரடி உடலுறவில் மட்டுமே சாத்தியம்.

ராமச்சந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தும், சானு அவரிடம் "நீ இன்னும் வெர்சினா?" என்று கேட்பது, ரம்பை வந்தாலும் கவுந்தடித்துப் படுக்கும் "குலக்குத்துவிளக்கு" கேரக்டராக காட்டப்படும் ஒரு கதாபாத்திரத்தை, அவமதிப்பதாகவே உள்ளது. இது திரைக்கதையில்/கேரக்டர் பில்டப்புகளில் சின்ன சறுக்கல்.

ராமச்சந்திரன் paid sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும் அல்லது dating, சேர்ந்துவாழ்தல் போன்ற மியூச்சுவல் கன்சன்ட் sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும்.

ஆனால், கொடுக்கப்பட்ட "கேரக்டர்பில்டப்புகள்"படி, ராமச்சந்திரன் அப்படி இல்லை. இது தெரிந்தும், "வெர்சினா?" என்று சானு கேட்பதும் , அதற்கு  ராமு உடம்பெல்லாம் தெறித்து, நடுங்கி, சீன் போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விசய் சேதுபதி சரியாகச் செய்தாலும், ஏன் இயக்குநர் இப்படி தான் பில்டப் கொடுத்த ஒரு "குலக்குத்துவிளக்கு" கேரக்டரை அவரே கேரக்டர் அசாசினிசேசன் செய்கிறார் என்று தெரியவில்லை.

காதல் கல்யாணக் குழப்பம்

"யாரையாவது காதலிச்சியா" என்ற கேள்விக்கு "ஆமா கல்லூரில ஒரு பொண்ணு..." என்று கதை சொல்கிறார். ஆக, இவர் சானுவை பாலத்தில் கடக்காமல் நின்றாலும், பிற பெண்களை காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் க‌ல்யாணம் என்று சொன்னவுடன் இவரின் 'சானு' நினைவு வந்துவிட்டதாகச் சொல்லி விலகிவிட்டதாகச் சொல்கிறார். காதலுக்கு "ரீட்டா" கல்யாணத்திற்கு "சானு" என்ற பழையகால கதைகளை கண்முன் கொண்டு வந்துள்ளார் தனது நடிப்பால்.

பத்தாவது படிக்கும்போது இனம் புரியாத உணர்வாக சானுவை விரும்பியவர், கல்லூரியில் அடுத்தவரைக் காதலித்தேன் என்று சொல்கிறார். ஆனால், திருமணம் என்றவுடன் சட்டென்று 'சானு' நினைவிற்கு வந்து காதலை கலாய்க்கிறார்.

கடைசிவரை காதல் என்றால் என்னவென்று புரியவே புரியாத மயிலாப்பூர் சந்துரு வகை மனிதர்களை, அச்சு அசலாக காட்சிப்படுத்துகிறார் விசய் சேதுபதி தன் நடிப்பால். வெல்டன் சேது!

சானுவின் நிம்மதி

சானு கேரக்டர் ராமச்சந்திரனைக் கட்டாமல் நிம்மதியாய் இருப்பதாகச் சொல்வதன் மூலம், பத்தாவது வகுப்பிற்குப்பிறகு வளராமல் பாலத்திலேயே நின்றுவிட்ட ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், சானு நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை,விழாவிற்கு வருபவர்களை வைத்து குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்.

அந்த 96 கூட்டத்தில் சானு மட்டுமே "Jean Legging" பாட்டமும், சுரிதார் டாப்பும் அணிந்தவர். மற்றவர்கள் எல்லாம் சேலையும் சுரிதாருமாக உள்ள பெண்கள். ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், வீட்டிலேயே பிரசவம் என்ற பாரிசாலன், ஃகீலர் ரேஞ்சு வாழ்க்கையாகி இருந்திருக்கலாம் சானுவிற்கு யார் கண்டார்கள்? நம்மாழ்வார் படம் மற்றும்  காப்பர் டம்ளர் வகையில் வாழும் ராமச்சந்திரன் சானுவை மணந்திருந்தால், 96 பத்தாம் வகுப்பு சந்திப்பிற்கு "பின் கொசுவம் வைத்து" சேலை கட்டிவர வேண்டும் என்றுகூட சானுவிடம் சொல்லியிருக்கலாம்.

பலூனை உடைத்துகொண்டும், தலையைக் குனிந்து கொண்டு சவலைப்பிள்ளையாக இருக்கும் ராமச்சந்திரன் கேரக்டர், அதைத்தான் உணர்த்துகிற‌து. மனம் வளர்ச்சியில்லாமல் பத்தாம் வகுப்பிலேயே தேங்கிவிட்ட ஒரு கேரக்டரை, த‌ன் நடிப்பால் பின்னி எடுக்கிறார் விசய் சேதுபதி. இவர் ஒரு சாதனைபதி!!

திரிசா


அருமையான நடிப்பு. Ageing gracefully!

இந்தப்படத்தின் மொத்த சுமையையும் சுமக்கிறார். மனவளர்ச்சி தடைப்பட்ட பழைய காதலன்(?), ஏதாவது நடந்துவிடுமோ என்ற பாலியல் பரவச பில்டப் கொடுக்கும் நண்பர்கள் கூட்டம் என்று பல அரைகுறை மனவளர்ச்சி கதா பாத்திரங்களுடன் சமாளித்து, கதையை நகர்த்திச் செல்கிறார்.

இறுதிக்காட்சியில், "இப்படி இன்னும் வளராமயே இருக்கானே" என்ற உணர்வில், தலையில் கைவைத்து ஆசிர்வாதம் கொடுத்து பிரிகிறார், அழுகிறார்.

ஒருவேளை திருமணம் நடந்திருந்தால் 96 ன் இரண்டாம் பாகமாக "சிப்பிக்குள் முத்து" இருக்கும்.

விசய் சேதுபதி

"நடுப் பக்கத்தைக் காணோம்" படத்தில் அவ்வளவாக வசனம் இல்லை. அதற்கடுத்து (நான் பார்த்தது) ஏதோ ஒரு ரவுடிப் படம் (நயன்தாராவுடன்).சவசவ என்று பேசினார்.  நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் வசனமாடல் ஒருகாலத்திலும், மணிரத்தினத்தின் முனுமுனு வசனங்கள் ஒருகாலத்திலும், இயல்பான பேச்சு மொழி வசனங்கள் ஒரு காலத்திலும் சக்கை போடு போட்டது. அந்த ட்ரெண்டுகளை மாற்றி, ஒருவித "சவசவ" பேச்சுமொழியை  அறிமுகப்படுத்தி, அனைவர் உள்ளங்களையும் கவர்ந்து வருகிரார் விசய் சேதுபதி.

வாட்சப்பு குரூப்புகளில் இருந்துகொண்டு, காப்பர், நம்மாழ்வார் என்று எதையாவது பார்வேர்டு செய்து, கண்டதைப் பின்பற்றி , கண்டதைத் தின்று தொந்தி வளர்த்து அலையும் மனிதர்களை கண்கூடாகக் கொண்டுவர நிறைய மெனக்கெட்டு இருக்கார்.

இந்தப் படத்திற்காக உடம்பில் முன்னேற்றம். சிறப்பு!

இசை
அருமை. கண்களை மூடிக்கொண்டே ரசிக்கலாம் படத்தை.

விசய்சேதுபதியின் சவலைப்பிள்ளைத்தனமான, 'கிள்ளினா அழுதிடுவேன்', 'கிட்ட வந்தா கடிச்சு வச்சுடுவேன்', 'தள்ளியே நிப்பேன்', 'பலூன் உடைப்பேன்' வகை நடிப்பு சமயங்களில், நாம் சிறிது நேரம் கண்ணை மூடி, நம்மை இயல்புக்கு கொண்டுவர, இப்படி இசையை இரசிப்பது தேவை.

இயக்கம்
எடுத்துக்கொண்ட கதை அருமை. " மயிலை மன்னாரு" வகை கதாபாத்திரத்தையும், சின்னவயசு காதலையும்,கவட்டைச் சிந்தனையிலேயே அலையும் அரைவேக்காட்டு நண்பர்களையும் ஒரு சேர ஒரு திரைக்கதையில் எடுக்க நினைத்து, டைரக்டர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

96 ல் பத்தாம் வகுப்பு முடித்துபிறகு, சானுவை அவரின் திருமணம்வரை பின் தொடர்ந்திருக்கிறார் இராமச்சந்திரன். இது ஒரு creeping சைக்கோ மனநிலை. வேறு ஒரு பார்வையில் இதைப் பார்த்தால் இது ஒரு சீரியல் கில்லர் வகைப்படமாக எடுக்க நிறைய scope உள்ளது தெரியும். ஆனால், சிறிதும் வழுவாமல், வளராத மனநிலை கொண்ட ஃகீரோவை வைத்து "பெட்டியை மூடும் வரை" சிறப்பாக கதையை நகர்த்தி வெற்றி பெறுகிறார் இயக்குநர்.

டைரக்டர் டச்சு
பிடித்த பெண்ணிற்கு திருமணமானபின், அவரின் குழந்தை அவரைப்போல் இருப்பதால், "குழந்தையை சைட்டு அடிக்கிறான்" என்ற கூமுட்டை வசனங்களை சைக்கோத்தனமாக பேசினாலும், அதை அனைவரும் இரசிப்பதாகக் காட்டுகிறார். இதெல்லாம் ஈவ்டீசிங் அல்ல அழுக்கு மனங்களின் வெளிப்பாடு. இப்படியான கேப்மாரித்தனங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர். சிறப்பு!

பள்ளிக்காலம்
பள்ளிக்காலத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர். ராமச்சந்திரன் சைக்கிளில் உள்ள பச்சை கலர் handbrake sleeve , பள்ளியில் காட்டப்படும் duster , ராமச்சந்திரனின் புத்தககப்பை என்று அந்தக் கால நினைவுகளைக் கொண்டு வருகிறார் இயக்குநர். சிறப்பு.

தோழியாக வரும் பெண் அணிந்துள்ள  Dental braces தவறாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் braces ஒரே ஒரு கம்பியில்தான் இருக்கும். இந்தப் பெண் ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி அழுத்தம் கொடுக்கும் இந்தக்கால braces அணிந்துள்ளார். 96 ல் தஞ்சாவூர்/கும்பகோணம் பக்கம் அது கிடைத்ததா என்பதை அந்த ஊர்க்காரர்கள் விளக்கலாம்.

நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை

மருத்துவர் சாலினியின் மருத்துவமனையில் கீரோ நுழைவது போல முடித்திருந்தால் "நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை" திரைக்கதைக்கு வலுக்கூடியிருக்கும்.

அது போல இப்படியான எதிர்மறை ஃகீரோ கேரக்டரை இரசிகர்கள் ஏன் மாய்ந்து மாய்ந்து இரசிக்கிறார்கள் என்று  மனநல மருத்துவர் சாலினி பேசிக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும்.

****

தன்னை மணக்காமல் சானு ஏன் நிம்மதியாக இருக்கிறார்? என்பதை, ராமச்சந்திரன் தன் நடிப்பால் justify செய்து இருக்கிறார்.

வெல்டன் இயக்குநர் & ஃகீரோ!

No comments:

Post a Comment