Thursday, October 24, 2019

தீபாவளி 2.0: சூர்ப்பனதேவியின் பேரழகு -1

மிரண்டுபோய் ஓடிவந்து, கட்டிலில் இன்னும் உறக்கம் கலையாமல் படுத்திருந்த த‌ன் தாயை அணைத்தபடி ஒட்டிக்கொண்டாள் இளவரசி பூங்கோதை. பூங்கோதைக்கு 13 வயது ஆகிறது. அதிகாலையில் எதற்கோ வெளியில் சென்றவள் இப்படி ஓடோடி வந்துவிட்டாள்.தன்னை அணைத்த மகளின் கையை இழுத்து அணைத்தபடி, மறுபுறம் கணவனைத் தேடிய சூர்ப்பனதேவி, கணவன் படுக்கையில் இல்லாததைக் கண்டு சட்டென எழுந்துவிட்டாள்.

அழகுக்கு இலக்கணமானவள் சூர்ப்பனதேவி. இடையை விட்டு விலகி, காலோடு பின்னிக்கிடந்த ஆடை மேல்நோக்கிப் பார்த்து, வெட்கத்தால் தரையில் முற்றிலுமாய் விழுந்து த‌ன்முகம் மூடியது. தூக்கத்தில் தளர்வாய் இருந்த மார்புக்கச்சை, மெல்லிய சூரிய ஒளியில் மினுமினுக்கும் அவளின் முலையழகில் மேலும் நாணித் தளர்வாய் இறங்கியது. அவள் எழுந்துகொண்டதை அறிந்த  அதிகாலைச் சூரியன், மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டது.

கலைந்த கூந்தலை சரிசெய்து கொண்டும், பொங்கித் தெறிக்கும் பேரழகை ஆடைக்குள் அணிந்து கொண்டும், படுக்கையறையைவிட்டு மெதுவாக வெளிவந்தாள். மகள் காலையில் எங்கு போனாள்? ஏன் பயந்து வந்தாள்? எங்கே தன் கணவன் நரகாசுரன்? என‌ பல கேள்விக‌ள் அவளுக்குள் ஓடின. உறங்குவது போல நடிக்கும் மகள் பூங்கோதையின் தலைவாரி, அவளை மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள். மெல்ல அவளை எழுப்பி, என்ன நடந்தது? எங்கே சென்றாய்? என வினவினாள். தன் கண்களைத் திறக்காமலேயே, முனகிக்கொண்டே பதில் கொடுத்தாள் பூங்கோதை. அரைகுறையாய் தன் மகள் விவரித்த காட்சிகள் சூர்ப்பனாதேவியை அதிர்ச்சியடையைச் செய்தது.

சட்டென மகளை படுக்கையில் கிடத்திவிட்டு, அந்தப்புரத் தோட்டம் நோக்கி ஓடினாள். அவள் ஓடும்போது அவளுக்கு முன் குதித்து ஓடின , அங்கிருந்த மான்களும், மானுடன் போட்டி போட்டபடியே அவள் மார்பு சுமந்த‌ முலைகளும். சின்னக் குளத்தில் மெதுநடை போட்டுக்கொண்டிருந்த அன்னப்பறவைகள், இவளின் அழகால் வெட்கி, தண்ணீருக்குள் தலையை வைப்பதுபோல நடித்தன. தோட்டம் கடந்து, வீணைக் கால்களுடன் வீதியைத் தொடும் நேரத்தில், சட்டென ஒன்று தரையில் இருந்து விண்வெளியை நோக்கிப் போவது போல இருந்தது. அது என்னவென்று சரியாக ஊகிப்பதற்குள், அது இவளின் கண்களில் இருந்து மறைந்துவிட்டது.
**

டுஇரவில் தன்னை அழைக்க வந்திருந்த அரண்மனை தலைமைக் காவலர் முனியாண்டியை,  ஆச்சர்யத்தோடு வரவேற்றார் அமைச்சர் அய்யனார். முக்கியமான செய்திகள் இருந்தால்தவிர, தலைமைக்காவலர் வரமாட்டார். அதுவும் இரவில்.  வெறுமனே செய்தி சொல்லிச்செல்ல‌, தலைமைக்காவலர் இதுவரை வந்தது இல்லை. முனியாண்டி வந்தால் அது முக்கியமான செய்திகாவே இருக்கும் என்பதை அறிந்த அமைச்சர் அய்யனார், உடனே புறப்பட்டார். இருவரும் அரண்மனையை நோக்கி விரைந்தார்கள். அரண்மனையை நெருங்கும்போது, வான்வெளியில் சில புதிய நட்சத்திரங்கள் போன்ற எதுவோ தோன்றி மறைந்தபடியே இருந்தது. மன்னர் எதற்கு அழைத்திருப்பார்? என்று எண்ணியபடியே சென்ற அமைச்சர் அய்யனார் இதை கவனித்தாலும் அதிக சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், குதிரையைச் செலுத்துவதிலேயே கவனமாய் இருந்தார்.

அமைச்சரை எதிர்நோக்கி அரசர் நரகாசுரன் கோட்டை வாயிலுக்கே வந்துவிட்டார். அரசர் காத்து இருப்பதை தூரத்திலேயே சன்னமான விளக்கொளியிலும் பார்த்துவிட்ட அமைச்சர், தன் குதிரையில் இருந்து, இறங்கி ஓடோடி வந்தார். அய்யனார் அமைச்சர் என்றாலும், போர்க்கலையில் வல்லவர். தளபதி மாடனுடன் சரிக்குச்சமமாக மல்யுத்தம் செய்வதில் வல்லவர் அய்யனார். மதி நுட்பமும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்றவர்.

அய்யனாரைத் தழுவி வரவேற்ற அரசர் அவரை அங்கிருந்த மர நாற்காலி ஒன்றில் அமரச் சொன்னார். அப்போது அங்கே தலைமைக் காவலர் முனியாண்டியும் வந்துவிட்டார் . அவரையும் அமரச் செய்துவிட்டு, அன்று இரவில் தான் கண்ட காட்சியை விவரித்தார் மன்னர்.
**

ழக்கம்போல அன்று இரவும், உப்பரிக்கையில் நின்றுகொண்டு ,நட்சத்திரங்களை வெறித்தபடி சிந்தனையில் இருந்தார் அரசர் நரகாசுரன். நேற்று தன் மைத்துனன் இராவணனிடம் இருந்து வந்த செய்தி அவரை கவலையில் ஆழ்த்தி இருந்தது. மைத்துனன் என்றாலும், இராவணனார் இவருக்கு நல்ல நண்பராகவே இருந்தார். நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

இராவணனார் இலங்கை மன்னர். சிறப்பான நிர்வாகி. அவரின் ஆட்சியில் மக்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். வருடம் ஒருமுறை அவர் தன் தங்கை சூர்ப்பனதேவியைப் பார்க்கவும், மருமகள் பூங்கோதையைப் பார்க்கவும்,  திராவிட நாட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். திராவிடநாட்டையும் இலங்கையையும் கடல் பிரித்தாலும், இராவணனார் தன் தங்கை சூர்ப்பனதேவிமீது கொண்டிருந்த பாசத்தை எதுவும் பிரிக்கமுடியவில்லை.

கணவனின் கொடுமை தாங்காமல், திராவிட நாட்டுக் கடல் பகுதியில் குதித்து, இலங்கை கடற்கரைபக்கம் பாதி உயிருடன்  ஒதுங்கிய ஆரியப்பெண்னொருத்தி, ஊர் திரும்ப மறுத்து , இலங்கையிலேயே இருக்கவேண்டும் என உண்ணாமல் அடம்பிடிப்பதையும், அதனால் தன் அரசுக்கு வரும் தேவையற்ற சிக்கல்களையும் விளக்கி, இராவணனார் தன் மாமன் நரகாசுரனாருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அது குறித்தான சிந்தனையில், இருந்தபோதுதான், விண்வெளியில் இருந்து கலன் போல ஒன்று  பறந்து வந்து , அந்தப்புர தோட்டத்தில் இறங்கியது.

காவலர்கள் கண்ணயர்ந்து இருப்பார்கள் போல யாரும் கவனித்ததாக தெரியவில்லை. மன்னர் நரகாசுரனார், கீழிறங்கி வருவதற்குள் அது மறுபடியும் பறந்துவிட்டது அல்லது மறைந்துவிட்டது. அதே நேரத்தில்,விண்வெளியில் வேறு சில மர்மமான நிகழ்வுகள் நடப்பதுபோலவும் தோன்றியது மன்னருக்கு. தோட்டம் தாண்டி வெளியில் வந்த மன்னர், வீதியில் மாடுகளை ஓட்டிக்கொண்டுபோன சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்தார். சட்டை போடாத, தலையில் முடியை வழித்து குடுமி வைத்த அப்படியான மனிதர்கள் அவர் நாட்டில் இல்லை அவர் எங்கும் பார்த்ததும் இல்லை. அவர்களை சிறிதுதூரம் பின் தொடர்ந்து, அவர்களின் இருப்பிடத‌தை அறிந்துகொண்ட மன்னர், சிந்தித்துக்கொண்டே அரண்மனை திரும்பி தலைமைக்காவலர் முனியாண்டியை அழைத்துவரச் சொன்னார்.


தொடரும்*****

No comments:

Post a Comment