Friday, September 23, 2005

பதிவு07:சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்

கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
http://kalvetu.blogspot.com/

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்குமுன், நான் எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்தேன். பெரும்பாலும் கவனிக்கப்படாத, இதுவரை பொது விவாதத்திற்கு வராத,இந்த விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினேன்.

நான் இதுவரையில் அரசாங்கம் சார்ந்த மனுக்களையோ, விண்ணப்பங்களையோ எழுதியது கிடையாது.அதனால் நான் ஏதாவது விதிமுறைகளை (Protocol) மீறியிருந்தால் மன்னிக்கவும்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.

பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை.
அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anshu K. Gupta தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல சேவைகளைச் செய்து வருகிறார்.பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார்.அவரின் சேவை,முகவரி பற்றிய விவரங்களை இந்த இணையத் தளத்தில்காணலாம் http://www.goonj.org/ .

நீங்கள் தாயன்புடன் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கியது போல, அனைத்துப் பெண்களுக்கும் இது கிடைக்கச் செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்,
கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
==========================

இந்தக் கடிதம் தமிழக முதல்வரின் பார்வைக்கு cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு pdf கோப்பாக அனுப்பப் பட்டுள்ளது. முதல்வரின் 044-25671441 என்ற எண்ணில் Fax செய்ய முடியவில்லை. தொழில்நுட்பக் கோளாராக இருக்கலாம். மேலும் இதன் நகல், மங்கையர் மலருக்கும் (Fax: 91-44-2225 1021) குமுதத்திற்கும் ( +91 44-26425824 ) அனுப்பப் பட்டுள்ளது.

====

வலைப்பதிவு (தமிழ்மண) நண்பர்களுக்கு,
நான் அனுப்பிய இந்தக் கடிதம் எந்த அளவுக்கு முதல்வரின் கவனத்தைப் பெறும் என்று தெரியாது. ஆனால், அவரின் பார்வையில் பட்டால் நிச்சயம் ஏதாவது செய்வார் என்றே நம்புகிறேன்.பெண்களின் இந்தப் பிரச்சனை ஊமை கண்ட கனவாக அதிகம் பேசப்படாமலே உள்ளது.

நண்பர்கள் யாராவது இதனை வேறு எங்கேனும்(பத்திரிக்கை/அரசு) அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கடிதத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். யாரேனும் இதனை அரசு அதிகாரிகள்/அமைச்சர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்றாலும் மிக்க நல்லதே.

பொதுத் தொண்டு நிறுவனங்கள் நல்லது செய்தாலும், அரசின் தலையீடு உதவியைப் பரவலாக்கும் என்றே எண்ணுகிறேன். பிரச்சனை நாம் விரும்பிய வண்ணம் தீர்க்கப் படாவிட்டாலும்,குறைந்தபட்சம் இதுபற்றி வெளிப்படையான விவாதம் தொடங்க அது வகை செய்யும்.

26 comments:

  1. நல்ல வேலை செய்தீர்கள் கல்வெட்டு. நன்றிகள் பல.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கல்வெட்டு. இது குறித்து மாதர்சங்கங்கள் பல செயல் பட ஆரம்பித்தால் கூட உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி கல்வெட்டு.

    ReplyDelete
  4. இதற்கு பெட்டிஷன் கூட தயார் செய்து அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பலாம்.

    ReplyDelete
  5. Nandrigal. ithu oru aakkapoorvamaana, sugaathaara mempaatirkaana muyachi. Meendun nandrigal.

    ReplyDelete
  6. தகவல்கள் அருமை.
    இந்தப் பிரச்சினை குறித்துப் பேச துவங்குவதே ஒரு நல்ல முடிவிற்கு ஆரம்பமாகும்.

    நன்றி.

    ReplyDelete
  7. கல்வெட்டு,
    இப்படிக் கொடுங்க உங்க கையை. ஒரு நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க.

    இது விஷயமா எதாவது விடிவு வந்தே தீரணும்.

    நன்றிங்க.

    ReplyDelete
  8. தங்கமணி,தேன் துளி,கார்த்திக்ராம்ஸ்,Chameleon,துளசி(க்கா) அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.

    தேன் துளி,
    மாதர் சங்கங்களில் இது அவ்வளவாக விவாதிக்கப் படவிலை என்றே எண்ணுகிறேன்.
    அப்படி விவாதித்தால் நல்ல விழிப்புணர்வும் தீர்வும் ஏற்படும்.

    கார்த்திக்ராம்ஸ்,
    பெட்டிசன் போடுவது நல்ல முயற்சிதான். ஆனால் இங்கு (அமெரிக்காவில் அல்லது வேறு நாடுகளில்) இருந்து கொண்டு எப்படி அதைச் செய்வது என்று தெரியவில்லை.

    இணையத்தில் உள்ள online பெட்டிசனுக்கெல்லாம் (உதாரணம்: http://www.petitiononline.com/petition.html)தமிழக அரசு பதில் சொல்லுமா என்று தெரியவில்லை.

    மக்களிடம் நேரில் கையெழுத்து வாங்கி முதல்வரை நேரில் பார்த்துக் கொடுத்தால்தான் உண்டு. அதனை உள்ளூர் நண்பர்கள் யாரேனும் செய்தால் நல்லது. ஆனால் எந்த அளவுக்கு இது சாத்தியம் என்று தெரியவில்லை.

    கொஞ்சநாள் கழித்து வேறு ஏதாவது வழியில் முதல்வரை அணுக முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  9. கல்வெட்டு நல்ல பணி.

    வாழ்க நீவீர்.

    ReplyDelete
  10. 'நன்றே செய் அதை இன்றே செய் 'என்று செயற்பட விரும்பியிருக்கின்றீர்கள். நல்ல விடயம். நன்றி.

    ReplyDelete
  11. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் !! அப்படியே நமது ஜனாதிபதிக்கும் ஒரு நகல் அனுப்பிடலாமே !!

    http://presidentofindia.nic.in/scripts/writetopresident.jsp

    ReplyDelete
  12. நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் கல்வெட்டு. சுரேஷ் சொல்வதுபோல ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் போட்டுவிடுங்கள்.

    -மதி

    ReplyDelete
  13. பரணி,டிசே தமிழன்,சுரேஷ் செல்வா,பெயரிலி,மதி கந்தசாமி நன்றி.

    சுரேஷ்,மதி,
    presidentofindia@rb.nic.in க்கும் ஒரு CC போட்டாகி விட்டது.

    ReplyDelete
  14. என் பதிவைப் படித்து விட்டு நீங்க எடுத்த நல்ல முயற்சிக்கு மிக்க நன்றி கல்வெட்டு..இதனால் இந்த விஷயத்திற்கு ஒரு சிறு கவனிப்பு ஏற்பட்டால் கூட அது ஒரு பெரிய வெற்றி தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  15. எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.

    "மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்."
    இந்த அமைப்பினைப்பற்றி மேலும் விவரங்களை அறிய முயற்சி எடுத்துள்ளேன். கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  16. இதற்கு பெட்டிஷன் கூட தயார் செய்து அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பலாம்//
    karthikramas சொன்னது போல "நாம்" அனைவரும் ஒருங்கிணைந்து, சென்னை பதிவர்கள் மூலமாக இதை இன்னும் வலுப்படுத்தி ஒரு நல்ல பின்விளைவை நோக்கிப் பயணிப்போமே!?

    ReplyDelete
  17. கல்வெட்டு
    NSS மூலம் நான் கல்லூரியில் படிக்கும் போது கிராமங்களுக்கு சென்றூ இது குறித்தும் சுத்தமாய் இருப்பது குறிப்பது பற்றியும் ஒவ்வொரு வார இறுதியிலும் பேசி இருக்கிறேன். அதே போல இப்போது உலக சுகாதார மையம் மூலமாக கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு இவற்றை தொடர்ந்து அளிக்க உதவி செய்யும் உறிப்பினர்களுக்கு சில தேவையான விளக்கங்கள் தருகிறேன்.
    நான் இதை பற்றி எழுத எண்ணி இருந்தது அப்படி சில கிராமங்களில் முட்கள் மூலம் செயற்கையாக மாதவிலக்கு வர செய்கிறார்கள், இது எப்படி சீழ் பிடித்து இளம் சிறுமிகள் அல்லறுகிறார்கள் என்பது போன்ற விவரங்கள், மாதவிலக்கு நாட்களில் உடலுறவு போன்றவை குறித்தும் விழிப்புணர்வு வர வேண்டும். இவை அனைத்தும் பலவித பரிமானங்கள் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினை ஆகும்.பல ஆண்கள் மாதவிலக்கு சமயத்தில் உறவு கொண்டால் கரு தரிக்காது என்ற தவறான என்ணத்தில் இருக்கிறார்கள். அப்போது கடின வேலைச் எய்யும் பெண்கள் prolapsed uterus போன்ற நோய்களால் அவதியுறுவதும் இந்தியாவில் அதிகம்.

    ReplyDelete
  18. ஒரு பெரிய விஷயம் செய்திருக்கீங்க... நன்றியும், பாராட்டுக்களும்.

    (இன்னொன்று...
    தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்:
    நீங்கள் அரசுக்கு அனுப்பியுள்ளதால், உங்கள் பெயரிலேயே அனுப்பியிருக்கலாம் - அவர்கள் 'மொட்டைக்கடுதாசி' என்று வகைப்படுத்தாமலிருக்க)

    ReplyDelete
  19. ரம்யா,
    உங்களின் பதிவுதான் இதற்கு முதல் காரணம்.
    அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது கடிதத்தின் நோக்கம்.
    குறைந்தபட்ச விழிப்புணர்வு வந்தால் நல்லதுதான்.

    தருமி,
    //மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து//
    இதை நான் குமுதத்தில் படித்ததாக ஞாபகம்.அப்போது எனக்கு இது பற்றிய அவ்வளவு உந்துதல் இல்லாமையால் (அறியாமை) விட்டுவிட்டேன். தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்.

    தேன் துளி,
    //சில கிராமங்களில் முட்கள் மூலம் செயற்கையாக மாதவிலக்கு வர செய்கிறார்கள்//
    எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பாலியல் கல்வி என்பதைவிட "உடலியல் கல்வி" என்ற நோக்கில் மேல்நிலை/உயர்நிலைப் பள்ளிகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இது சம்பந்தமான போதனை அவசியம்.

    //மாதவிலக்கு நாட்களில் உடலுறவு போன்றவை குறித்தும் விழிப்புணர்வு வர வேண்டும்.//
    //ஆண்கள் மாதவிலக்கு சமயத்தில் உறவு கொண்டால் கரு தரிக்காது என்ற தவறான என்ணத்தில் இருக்கிறார்கள்.//
    //அப்போது கடின வேலைச் எய்யும் பெண்கள் prolapsed uterus போன்ற நோய்களால் அவதியுறுவதும் இந்தியாவில் அதிகம். //

    //இவை அனைத்தும் பலவித பரிமானங்கள் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினை ஆகும்.//

    நீங்கள் சொன்னதுபோல் இது பல பரிணாமங்கள் கொண்ட பிரச்சனை. இது பற்றிப் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பதே ஒரு நல்ல ஆரம்பம். குடும்பக்கட்டுப்பாடு, AIDS, ஆணுறை போன்ற விசயங்கள் அரசின் முயற்சியினாலேயே மக்களிடம் இந்த அளவுக்குப் பரவி உள்ளது. தொண்டு நிறுவனங்கள் சேவை செய்தாலும் அவர்களின் reach ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க முடியும்.

    அன்பு,
    நீங்கள் சொல்வது சரி. பிளாக்கில் எழுதுவது போல எழுதி அனுப்பி விட்டேன். ஆனால் எனக்குத் தெரிந்தவரை முதல்வரின் செல் அனைத்துக் கடிதங்களுக்கும் முக்கியத்துவம் தருகிறது என்றே நினைக்கிறேன்.

    அனைவருக்கும் நன்றி!!

    ReplyDelete
  20. கல்வெட்டு: நல்ல செயல். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவோம்.

    அவர் நல்ல முடிவு எடுத்தாலும், பன்னாட்டு கம்பெனிகள் (ஹிந்துஸ்தான் லீவர், கோத்ரேஜ் அல்லது ப்ராக்டர் அண்ட் கேம்பிள்) இவ்வாறு தங்கள் சந்தையை இழக்க விரும்புவார்களா அல்லது இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களா என பார்ப்போம். ஷாம்பு விஷயத்தில் எப்படி சாஷேக்கள் வந்ததும் அவர்களும் 2 ரூபாய் சாஷேக்கள் உற்பத்தி செய்தார்களோ அதேபோல் இதிலும் கெவின் கேர் மாதிரி குறைந்தவிலை நாப்கின் உற்பத்தி செய்து நல்லபடி மார்கெடிங் செய்து வெற்றி பெற்றால், பன்னாட்டு கம்பெனிகளும் விலை குறைப்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. Parattukalum,Vaztthukalum Ungalathu Muyartchiyum Akkaraiyum Mikuntha Bayanalikkum...... Arasidam korikkai Vaippathodu Nintruvidaamal Namum Nammaal mudintha Vakayil Vizippunarvu Pirachchaarangalai Maerkkolla vaendum,,,,,Kurippaaka Namathu Veedukalil Athanai Cheyya Vaendum....

    ReplyDelete
  22. நல்ல முயற்சி
    மனமார்ந்த நன்றி ரம்யா,கல்வெட்டு

    ReplyDelete
  23. மிக நல்ல முயற்சி கல்வெட்டு. பெண்கள் தங்கள் அலட்சியங்களினாலும், அறியாமையினாலும் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். குறிப்பாக இந்த மாதவிடாய் பிரச்சனை, மார்பக புற்று நோய் போன்றவைகள். பல நேரங்களில் நேய் முற்றிய நிலையில்தான் அதைப்பற்றி தெரிந்தே கொள்கிறார்கள். ஆகவே பெண்கள் தங்கள் உடல்நலத்தை பேணி பாதுகாப்பது குறித்து இன்னும் அதிகப்படியான விழிப்புணர்வு அடைய வேண்டும்....

    உங்களின் இந்த சிறுமுயற்சி நல்ல பலன்களை தரும் என்றூ நம்புகிறேன்....

    வாழ்த்துகள்

    ReplyDelete
  24. நண்பரே!

    அருமையான சேவை, பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் சமூகசேவை.

    ReplyDelete
  25. மிக நல்ல முயற்சி கல்வேட்டு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete