Friday, September 23, 2005

பதிவு07:சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்

கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
http://kalvetu.blogspot.com/

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்குமுன், நான் எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்தேன். பெரும்பாலும் கவனிக்கப்படாத, இதுவரை பொது விவாதத்திற்கு வராத,இந்த விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினேன்.

நான் இதுவரையில் அரசாங்கம் சார்ந்த மனுக்களையோ, விண்ணப்பங்களையோ எழுதியது கிடையாது.அதனால் நான் ஏதாவது விதிமுறைகளை (Protocol) மீறியிருந்தால் மன்னிக்கவும்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.

பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை.
அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anshu K. Gupta தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல சேவைகளைச் செய்து வருகிறார்.பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார்.அவரின் சேவை,முகவரி பற்றிய விவரங்களை இந்த இணையத் தளத்தில்காணலாம் http://www.goonj.org/ .

நீங்கள் தாயன்புடன் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கியது போல, அனைத்துப் பெண்களுக்கும் இது கிடைக்கச் செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்,
கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
==========================

இந்தக் கடிதம் தமிழக முதல்வரின் பார்வைக்கு cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு pdf கோப்பாக அனுப்பப் பட்டுள்ளது. முதல்வரின் 044-25671441 என்ற எண்ணில் Fax செய்ய முடியவில்லை. தொழில்நுட்பக் கோளாராக இருக்கலாம். மேலும் இதன் நகல், மங்கையர் மலருக்கும் (Fax: 91-44-2225 1021) குமுதத்திற்கும் ( +91 44-26425824 ) அனுப்பப் பட்டுள்ளது.

====

வலைப்பதிவு (தமிழ்மண) நண்பர்களுக்கு,
நான் அனுப்பிய இந்தக் கடிதம் எந்த அளவுக்கு முதல்வரின் கவனத்தைப் பெறும் என்று தெரியாது. ஆனால், அவரின் பார்வையில் பட்டால் நிச்சயம் ஏதாவது செய்வார் என்றே நம்புகிறேன்.பெண்களின் இந்தப் பிரச்சனை ஊமை கண்ட கனவாக அதிகம் பேசப்படாமலே உள்ளது.

நண்பர்கள் யாராவது இதனை வேறு எங்கேனும்(பத்திரிக்கை/அரசு) அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கடிதத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். யாரேனும் இதனை அரசு அதிகாரிகள்/அமைச்சர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்றாலும் மிக்க நல்லதே.

பொதுத் தொண்டு நிறுவனங்கள் நல்லது செய்தாலும், அரசின் தலையீடு உதவியைப் பரவலாக்கும் என்றே எண்ணுகிறேன். பிரச்சனை நாம் விரும்பிய வண்ணம் தீர்க்கப் படாவிட்டாலும்,குறைந்தபட்சம் இதுபற்றி வெளிப்படையான விவாதம் தொடங்க அது வகை செய்யும்.