Friday, October 28, 2005

பதிவு16: தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


மொத மொத இந்த அமெரிக்காவுக்கு கையில
இரண்டு சூட்கேசோட வந்து, டெக்சாஸ் மாகாணம் Dallas அருகில் இருக்கும் Irving என்ற ஊரில்தான் "பெஞ்ச" தேய்ச்சுக்கிட்டு இருந்தோம். இருந்தோமுன்னா அந்த அபார்ட்மெண்ட்டுல 8 பேர் இருந்தோம். எல்லாரும் அமெரிக்கா கனவுகளோட "ஜாவா" கப்பல்ல ஏறி வந்த மக்கள். ஜாவாவ அரைகுறையாப் படிச்சுட்டு டாட்காம் புண்ணியத்துல எப்படியோ எங்களுக்கும் விசா கிடைச்சு ( அதான் விசா விசா மட்டுமே வேலை இல்லை ) வந்து சேர்ந்து ஆறு வருசமாகப் போகிறது. என்ன இருந்தாலும் எனக்கும் என் நண்பனுக்கும் Irving -ல் ஏற்பட்ட Halloween அனுபவம் மறக்க முடியாதது.

நாங்க இருந்த அந்த அபார்ட்மெண்ட் தரைத்தளதில் இருந்தது. நாங்கள் வந்து இரண்டுவாரமே ஆகி இருந்தது. எங்களை அழைத்து வந்த கன்சல்டிங் கம்பெனிக்காரர்கள் எங்களை " அநாவசியமாக வெளியில் போகக்கூடாது. அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பலர் இந்த அபார்ட்மெண்ட்டில் தங்கி இருப்பதால் ,அபார்ட்மெண்ட்காரர்கள் எதாவது நடவடிக்கை எடுக்கக்கூடும்" என்று எச்சரித்து இருந்தார்கள். அதனால் சமைப்பது,இரவில் மட்டும் போய் தாபால் செக் பண்ணுவது டெலிபோன் இன்டர்வியூ attend பன்ணுவது என்று எங்கள் இரண்டுவார வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.

ஒருநாள் இரவில் கதவில் தட் தட் தட் என்று பலர் தட்டும் சத்தம். போச்சுடா அபார்ட்மெண்ட்காரர்கள்தான் வந்துவிட்டார்கள் என்று நினைத்து இருந்த 8 பேரில் 4 பேர் போய் ஒளிந்து கொள்ள, நானும் மற்ற நண்பர் ஒருவரும் கதவில் உள்ள Eye Piece வழியாகப் பார்த்தோம். வீட்டுக்கதவுமுன் பல சிறுவர் சிறுமியர்கள் நின்று கொண்டு இருந்தனர்.கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேய்,நாய்,சூப்பர் மேன், தேவதை போன்ற பலவிதமான் ஆடை அலங்காரத்தில் நின்று கொண்டுஇருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய கூடை நிறைய பலவிதமான வண்ண சாக்லேட்டுகளும், இன்னும் பல பேர் புரியா வகை வஸ்துகளும் இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன ஏது என்று புரியவில்லை.

அவர்களைப் பார்த்து Hello சொன்னோம். அவர்கள் கோரசாக என்னமோ சொன்னார்கள். அவர்கள் பேசிய ஆங்கிலம் எங்களுக்குப் புரியவில்லை,நாங்கள் பேசிய ஆங்கிலம் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு எங்கே இருந்து அது தோன்றியதோ தெரியவில்லை. நான் அது அவர்களின் பிறந்த நாள் என்று நினைத்து,ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, அவர்களுக்குள் என்னமோ பேசிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமானர்கள். அவர்களை நிறுத்தி எனது நண்பனும் அவன் பங்குக்கு சாக்லேட் எடுத்துக்கொண்டு அவர்களிடம் தேங்க்யூ சொன்னான். அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள்.பிறந்தநாள் சாக்லேட் கொடுத்துட்டு ஏன் இதுக இப்படி ஓடுதுக? அப்படீன்னு நொள்ள பேசிக்கிட்டு சாக்லேட்டை வாயில் போட்டோம்.

பின்பு நாங்கள் இருவரும் விசயம் தெரிந்த சிலரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அது "Halloween" விழாவாம். நாம் தான் குழந்தைகளுக்கு மிட்டாய் போடவேண்டுமாம். அவர்கள் சட்டி பானையில் இருந்து மிட்டாய் எடுக்கக்கூடாதாம். அன்று குழந்தைகளிடம் மிட்டாய் எடுத்த பாவத்திற்காக இப்போது வருடா வருடம் நான் பல குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி Halloween ஐ சிறப்பாக கொண்டாடி வருகிறேன்.

Halloween வரலாறு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (அப்பல்லாம் நம்ம தமிழ் மொழி இருந்துச்சுபோல அதனாலதன் செம்மொழி அந்தஸ்து ஆமா) இப்போது அயர்லாந்து,இங்கிலாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதிகளில் "செல்ட்ஸ்" இன மக்களின் புத்தாண்டு நவம்பர் 1. கோடைகாலம் முடிவடைந்து, வயல் வரப்பு வேலைகள், அறுவடை எல்லாம் முடிஞ்சு கடுங்குளிர் காலத்தோட தொடக்கம் தான் இந்த நவம்பர் 1. அந்த "செல்ட்ஸ்" இன மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கை இருந்தது. இந்த அக்டோபர் 31 இரவு முடிந்து நவம்பர் 1 ஆரம்பிக்கும், அந்த நடுநிசி வேளையில், இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஒரு நம்பிக்கை. அந்தக் காலங்களில் அவர்கள் விதவிதமான உடைகள் அணிந்து இரவில் அவர்களுக்குள் குறி சொல்லிக்கொண்டும், அந்தப் பேய்களுக்கு தானியங்கள்,விலங்குகளைப் பலியாகக் கொடுப்பதும் வாடிக்கை. இந்த விழா Samhain (pronounced sow-in) என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த இன மக்கள் AD 43 வாக்கில் ரோமர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் ரோமர்களின் "பெரலியா "(Feralia) பண்டிகை மற்றும் "பொம்னா" (Pomona) பண்டிகைகளுடன் கலந்தே இதுவும் கொண்டாடப்பட்டு வந்தது. கி.பி 800 ஆம் ஆண்டுவாக்கில் கிறிஸ்துவ மதத்தின் தாக்கம் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்பட்டு இருக்கிறது. அப்போது போப் ஆண்டவர் "Pope Boniface IV" நவம்பர்1 ஐ இறந்தவர்களுக்கும்(martyrs), சாதுக்களுக்குமான நாளாக அறிவிக்கிறார். இறந்தவர்களுக்காக "செல்ட்ஸ்" மக்கள் கொண்டாடிய விழாவை கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட விழாவாக போப் மாற்றி விட்டதாக நம்பப்படுவதும் உண்டு.

இந்த விழா "அல் ஹாலோஸ்" (All-hallows) அல்லது "அல் ஹலோமாஸ்" (All-hallowmas) என்றும் அழைக்கப்படும். (Alholowmesse meaning All Saints' Day). அதுவே இப்போது ஹலோவீனாக (Halloween) மாறி உள்ளது.

Halloween தகவலின் மூலம்:
http://www.historychannel.com/exhibits/halloween/?page=origins

மேலும் விவரங்களுக்கு:
http://www.halloween.com/
http://www.historychannel.com/exhibits/halloween/


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்:
நம்ம ஊர் கிறிஸ்துவர்கள் ஏன் இதைக் கொண்டாடுவது இல்லை?



தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்


****************


****************