Tuesday, November 15, 2005

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

பதிவு18:போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

போகிப் பண்டிகை பற்றி யாராவது ஆராய்ச்சி செய்து சொன்னால் நல்லது. எனக்குத் தெரிந்து யாரும் எங்கள் கிராமத்தில் வேண்டாத பொருட்களைத் தீ வைத்துக் கொழுத்தி புகை போட்டுப் பார்த்ததில்லை. "போகி" என்ற வார்த்தை தமிழ் போல் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த ஹிந்தி அறிவில், இரயில் பெட்டியைத்தான் போகி என்று சொல்வார்கள் ஹிந்திக்கார மக்கள். அப்புறம் இது எப்படி தமிழ்நாடு வந்து இப்படிக் குப்பையாய் நாறுகிறது? இது பற்றி கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் அவர் கீழ்க்கண்டவாறு சோதிடம் சொல்கிறார்.

"Bogi festival or Bhogi is the first day of Pongal and is celebrated in honor of Lord Indra, "the God of Clouds and Rains". Lord Indra is worshiped for the abundance of harvest, thereby bringing plenty and prosperity to the land. Thus, this day is also known as Indran"

http://www.familyculture.com/holidays/pongal.htm
http://www.pongalfestival.org/bogi-festival.html

இந்திரன் கொஞ்சம் விவகாரமான ஆளு. குப்பைய எரிக்கிற சடங்கு அவருக்குப் பொருந்தும்.அவருக்கெல்லாம் மாலை போட்டா நன்றி சொல்ல முடியும்? ஆனா மழைக்கும் இந்த புகை மூட்டத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
குப்பைய எரிக்கிற, இந்த குப்பை-புகைத் திருவிழாவ சென்னையில் இருக்கும் போது பார்த்து "புகைந்து" இருக்கிறேன். அதிலும் குப்பை கிடைக்காத பட்சதில் இந்த
இ(ய)ந்திரமயமான குப்பை/பழைய பொருள் எரிப்புச் சடங்கை நிறைவேற்றுவதற்காக வாகனங்களின் (சைக்கிள், மோட்டார் சைக்கிள்) பழைய டயர்களை எரித்து புகை போடுவார்கள்.கிராமத்தில் பெரும்பாலான மக்கள் "புது துணிகூட கிடைக்கும் பழைய துணிக்கு எங்கே போவது" என்று பழைய துணியை சேர்த்து வைத்ததைத்தான் பார்த்து இருக்கிறேன். எங்கள் அம்மா கிழிந்து போன பழைய துணிகளை, ஒரு மஞ்சப் பையில் அடைத்து தைத்து, பல தலையணைகளை செய்து வைப்பார்.

துணிகள் நல்ல உபயோகத்தில் இருக்கும் போது எங்களால் போட முடியாமல் போய்விட்டால் (வளர்ச்சி காரணமாக) அது நெருங்கிய சொந்தங்களுக்கு போய்ச் சேரும். இப்போது நான் அமெரிக்காவில் இருந்தாலும் , நான் என் அம்மாவிடம் பேசும் போது ,ஒவ்வொரு முறையும் அவர் "பழைய துணியை கீழே போடாமல் எடுத்துவாடா" என்று சொல்லுவார்.

13 வயசில் நான் போட்ட எனது முதல் "பேண்ட்" எனது அத்தை மகனின் பழைய "பேண்ட்" தான். எனது அத்தைக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. எங்கள் வீட்டில் எனது அக்கா, அண்ணன் அப்புறம் நான். பள்ளிப் புத்தகங்ளில் ஆரம்பித்து மறு உபயோகத்திற்கு தோதாக உள்ள அனைத்து பொருட்களும் ஒரு முழுச் சுற்று சுற்றிவிடும். இதில் எனது அத்தை மகள் தான் கடைசி. பாவம்,அவளுக்குப் போகும் போது புத்தகம் கிழிந்து நொந்து நூலாகி இருக்கும். இடையில் அரசாங்கம் பாட அட்டவணையை மாற்றிவிட்டால் அந்தச் சுற்றில் வருபவர்களுக்கு மணக்க மணக்க புதுப் புத்தகம் கிடைக்கும்.


அமெரிக்கா வந்தபின்பு இங்குள்ள "Yard Sale" (Garage Sale) எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமான விசயம். சொந்த வீடு உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் அவர்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை Sofa ல் ஆரம்பித்து உள்ளாடைகள் வரை அனைத்தையும் குறைந்த விலைக்கு விற்பார்கள். மறுஉபயோகத்திற்குத் தோதான பொருட்களை குப்பைத்தொட்டிக்கு அருகே பத்திரமாக விட்டுச் செல்வார்கள். எங்கள் அலுவலகத்தில் "Scrap Swap" நடக்கும் (Give one scrap and take one scrap).நமக்குத் தேவையில்லாத அல்லது நாம் பயன்படுத்தி முடித்த பொருட்கள் பிறருக்குத் தேவைப்படுவதாய் இருக்கலாம். Recycling என்பதை இங்கே அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம். குப்பைக்கு அருகில் விடப்பட்டுள்ள பழைய பொருட்களை யாருக்கும் தெரியாமல் இரவில் எடுத்து வரும் நமது மக்களையும் , பகல் நேரத்தில் எந்த குற்றவுணர்வோ, கூச்சமோ இல்லாமல் பொறுமையாக அதேவகைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அமெரிக்க மக்களையும் பார்க்கலாம்.


Yard Sale செய்வது ஒரு கலை. இதை விளம்பரப்படுத்த , விற்பனை பற்றி அறிந்து கொள்ள என்றே பல இணையத் தளங்கள் உள்ளன.

Garage Sale Hunter
http://www.garagesalehunter.com/
How To Operate A Successful Garage Sale
http://www.ifg-inc.com/Consumer_Reports/GarageSale.shtml
Garage Sale Tools
http://garagesaletools.com/

அதே போல் "Yard Sale" ல் பொருட்கள் வாங்குதையே பொழுது போக்காகக் கொண்ட நமது மக்களும் உண்டு. நான் எனது மூத்த பையனுக்கு வாங்கிய Crib (குழந்தைக் கட்டில்) எனது பக்கத்து வீட்டு அமெரிக்கரிடம் இருந்து இலவசமாகப் பெற்றது. அதே போல் மற்றொரு தமிழ் நண்பரிடம் இருந்து , அவரது பையனுக்குச் சிறியதாகிப்போன உடைகளை எனது மகனுக்குப் பயன் படுத்தியுள்ளோம்.

இங்குள்ள சில நண்பர்களுடன் எங்களுக்குள் பழைய துணிகள் , பழைய விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் மறு உபயோகம் செய்து கொள்வதில் எந்த தயக்கமோ,கூச்சம், குற்றவுணர்வோ ஏற்பட்டது இல்லை. இப்போது எங்களிடம் பல குழந்தைச் சாமான்கள் சேர்ந்து விட்டது. பையனுக்கு 4 வயதாகிவிட்டதால் அவனின் பொருட்களும், மகளின் ஒரு வயது விளையாட்டுப் பொருட்களும் பல உண்டு. எனக்குத் தெரிந்து நெருங்கிய வட்டத்தில் யாருக்கும் தேவை இல்லாததால் ,இதை வேறு சில தமிழ் நண்பர்களிடம், அவர்களுக்கு வேண்டுமா ( அவர்கள் அந்தப் பொருட்களின் தேவைக் காலத்தில் உள்ளார்கள்) என்று கேட்டால், யாரும் வேண்டும் என்று சொல்வது இல்லை. நாங்கள் எல்லாத்தையும் இங்குள்ள பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க உள்ளோம்.நம் மக்கள் ஏன் இந்த விசயத்தில் இப்படி இருக்கிறார்கள்.

அது அவரவர் உரிமை, பழக்க வழக்கம் என்றாலும் அதற்கான காரணங்களாக நான் நினைப்பது.
**முதல் குழந்தைக்கு பழைய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.
**பழைய பொருட்களைத் தெரிந்தவரிடம் வாங்குவது தவறு. (கார் இதற்கு விதி விலக்கு!)
**பழைய பொருட்களை வாங்குவது கெளரவக் குறையானது.
**நம்மை நாலுபேர் தப்பாக நினைத்துக் கொள்வார்கள்.
**சாஸ்திர சம்பிரதாய விசயங்கள்...

பிச்சைக்காரர்களும், வீட்டு வேலைக்காரப் பெண்களும்தான் நம்மூரில் பழைய துணிகளைச் சந்தோசமாப் பெறுபவர்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் இந்தப் பழைய துணியை(பொருட்களை) நல்ல முறையில் சுத்தமாக அடுத்தருக்கு கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியே தேவைப்படுபவர்களுக்கு நாம் நல்ல முறையில் இந்த உதவிகளைச் செய்ய முயன்றாலும், அவர்கள்(உதவி பெறுபவர்கள்) கேட்ட நம்மைத் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து பலர் இந்த வகை உதவி செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.

1.இந்த பழைய பொருள்/குப்பை எரிக்கும் இந்திரச் சடங்கு தேவையா?
2.இது எப்போது இருந்து தமிழ் கலாச்சாரமாக மாறியது?
3.குப்பை எரிப்பினால் வரும் புகைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்?
4.இந்த "இந்திரன்" சாமி எப்படி இந்தக் குப்பையோட சம்பந்தப்படுறார்?
5.இந்துக்களைத் தவிர யாரும் இப்படிக் குப்பைத் எரிப்பு போன்ற பண்டிகைகளை வேறு எங்கும் நடத்துகிறார்களா?


தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


****************


****************

படங்கள்:
நன்றி Hindu மற்றும் பிற இணையப் பக்கங்கள்.

15 comments:

 1. கார்த்திகை தீபத்தின் போது கிராமங்களில் 'சொக்கப் பனை' கொளுத்துதல் என்று ஒரு வழக்கம் உண்டு, அப்பொழுது பழைய பொருட்களையும் கொளுத்துவார்கள். மற்றபடி, இந்த போகி எப்படி பொங்கலோடு சேர்ந்தது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 2. சுதர்சன்,
  ஆமா அதிலயும் இந்த புகை போடும் சமாச்சாரம் உண்டு.
  பழைய பொருட்களை வெட்டியாக எரிப்பதும் , சுற்றுச் சூழலுக்கு பாதகமாக புகை போடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

  இருக்கிற புகை மண்டலத்தில் மேலும் பண்டிகை என்ற பெயரில் புகை தேவைஇல்லை.

  ReplyDelete
 3. பழைய காலத்துலே பொங்கல் பண்டிகைக்கு வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளை அடிக்கிற வழக்கம் இருந்துச்சுல்லெ.
  அப்படி வீட்டைச் சுத்தம் செய்யறப்ப கிழிஞ்சபாய், எண்ணெய்ப்பிசுக்குப் பிடிச்ச தலகாணி, கிழிஞ்ச முறம், கட்டையாப்போன
  விளக்குமாறுன்னு பல சாமான்கள் கிடைக்குமுல்லே. அதையெல்லாம் டிஸ்போஸ் பண்ணறதுக்காக ஆரம்பிச்சதா இருக்கும்
  இந்த போகின்றது.

  அப்ப மார்கழிமாசம் வேறயா, குளுரா இருக்குமே. அப்பக் காலையிலே குளுருக்கு இதமா தீமூட்டிக் குளுர் காய
  இதையெல்லாம் கொளுத்தியிருப்பாங்க.

  புகைமண்டலம் மேலே போகப்போக கருப்பா மேகக் கூட்டம் மாதிரி தெரிஞ்சிருக்கும். உடனே மழைக்கு அதிபதி இந்திரன்னு
  ஆரம்பிச்சிருக்கலாம்.' பழையன கழிதலும் புதியன புகுதலும்'தான்

  அப்பவாவது கொஞ்சம் சாமான்கள். இப்பெல்லாம் பார்த்தீங்களா, வாராவாரம் ரப்பிஷ் கலெக்ஷன்லே வைக்கரதுக்கு
  ரெண்டு மூட்டை குப்பை சேர்ந்துருது.

  இந்த கரேஜ் சேல்/யார்ட் சேல் பத்தி ரொம்ப இருக்குங்க சொல்றதுக்கு. அப்புறம் ஒருநாள் அதுபத்தி ஒரு பதிவே
  போட்டுறவேண்டியதுதான்:-)

  ReplyDelete
 4. துளசிக்கா,
  //கிழிஞ்சபாய், எண்ணெய்ப்பிசுக்குப் பிடிச்ச தலகாணி, கிழிஞ்ச முறம், கட்டையாப்போன
  விளக்குமாறுன்னு பல சாமான்கள் கிடைக்குமுல்லே//

  //அப்ப மார்கழிமாசம் வேறயா, குளுரா இருக்குமே. அப்பக் காலையிலே குளுருக்கு இதமா தீமூட்டிக் குளுர் காய
  இதையெல்லாம் கொளுத்தியிருப்பாங்க//

  //புகைமண்டலம் மேலே போகப்போக கருப்பா மேகக் கூட்டம் மாதிரி தெரிஞ்சிருக்கும்//

  :-))))

  நீங்க சொல்ரது உண்மையாத்தான் இருக்கும்.

  அப்ப பண்ணுனத இப்பயும் டயர் கொளுத்தி கொண்டாடுறது நல்லதா? சொல்லுங்க?

  ReplyDelete
 5. நம்ம ஜனங்களுக்கு ஏன் செய்யறொம் எதுக்குன்னு எல்லாம் சிந்திக்க 'டைம் ' கிடையாது.
  எதுவுமே சாஸ்திர சம்பிரதாயம்தான். போகின்னா கொளுத்தணும். அவ்வளோதான்.

  வேற ஒண்ணும் கிடைக்கலையா, கொளுத்து எது கிடைச்சாலும்னு போகுது. இப்ப ஈஸியாக் கிடைக்கறது
  பழைய டயர்தானாமே. வண்டிங்க பெருத்துப்போச்சுல்லே.

  ReplyDelete
 6. எங்க ஊர்ப்பக்கமும் போகிக்கு கொளுத்துவது அறவே கிடையாது. சென்னை போனபின் தான் இப்படி ஒரு வழக்கம் இருப்பதே தெரியும். அதுவும் அதற்கென்றே ஒரு 'உடனடி' முரசு எல்லாம் உண்டு. குப்பையைக் கொளுத்துவது பரவாயில்லை. கொளுத்துவதற்காகக் குப்பை சேகரிப்பது (டயர்) தான் வெட்டிவேலை.

  ReplyDelete
 7. சுதர்சன், சுந்தரவடிவேல்,துளசி,காசி கருத்துக்கு நன்றி.
  தனக்குப் பயன்படாத பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவாமல் எரிக்கும் செயலே தவறு என்றுதான் சொல்ல வந்தேன்.
  ஒரு வேளை நான் சொல்ல வந்த "போகி + Yard Sale" விசயம் சரியாகச் சொல்லப்படவில்லையோ?

  என்ன புராண, சாஸ்திரங்களோ போகி என்ற பெயரில் எரிப்பது சரியல்ல. இதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று "தமிழர்கள் சார்பாக" பிறகு விளக்கமா
  சொல்லுகிறேன்.

  ReplyDelete
 8. கல்வெட்டு, போகி பற்றி சரியா சொல்லத்தெரியலை. ஆனா குழந்தைகளுக்கு மற்றவங்களோட பழைய உடுப்புகள் போடறது வழக்குல உண்டு. புதுசா பிறந்த குழந்தைக்குப் போடவே என்கிட்ட பலர் பழைய சட்டைகள் கேட்டு வாங்கியிருக்காங்க. நானும் என் குழந்தைகளுக்கு முதல் 10 நாள் பழைய உடுப்புதான் போட்டிருக்கேன். மற்ற குழந்தைகளோட ட்ரெஸ் வாங்கிப் போட்டா ஆயுள்வளரும்னு ஒரு நம்பிக்கை. உடல்நலமில்லாம குழந்தை இருந்தாகூட சிலர் தன் வீட்டு சாப்பாட்டைக் கொடுக்காம அடுத்தவங்க வீட்டுல வாங்கிக் கொடுத்தா சரியாயிடும்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. (இதுக்குப் பின்னாலயும் ஒரு 'ருசியான' காரணம் இருக்கலாம். ;-)] ஒருவேளை இப்ப அதெல்லாம் ஒரு பிரெஸ்டீஜ் விஷயமா மாறி மறுக்கலாம்; தெரியலை.

  விளையாட்டுப் பொருள்கள் அந்தந்த பெற்றோர் கிட்ட கேட்டா வேண்டாம்னு தான் சொல்வாங்க. நான் சகஜமா அந்தக் குழந்தைகள் எங்கவீட்டுக்கு விளையாட வரும்போது, விரும்பி விளையாடற பொம்மையை குழந்தை கைலயே கொடுத்துடுவேன். இது பிரச்சனை ஆகாது.

  ஆனா ஆதாரமா இப்ப இதுக்கெல்லாம் காரணம், பெற்றோர்களுக்கே குழந்தைகள் கேட்கறதை எல்லாம் வாங்கித் தர வசதி அல்லது வசதியை மீறின ஆர்வம் இருக்கறதும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள்கற பேர்ல குவிஞ்சுடற விளையாட்டுப் பொருள்களும்தான்.

  ReplyDelete
 9. நண்பரே!

  எங்க ஊரில் கூட கார்த்திகையின் போது சொக்கபனை கொளுத்துவாங்க, அது மட்டும் இல்லை மழை இல்லாத காலங்களில் மழை கடவுளுக்கு வேண்டுதல் செய்தும், சொக்கப்பனை கொழுத்துவாங்க, எங்க பாட்டி சொல்லியிருக்காங்க, அப்படி கொளுத்திட்டு வீட்டுக்கு வருவதற்குள் மழை பிடித்து விடுமாம், சத்தியமாக நான் பார்த்தது இல்லை.

  ஆனால் போகியானது தற்போதைக்கு தேவையில்லாத பண்டிகை, அன்றைய காலக்கட்டத்தில் கிராமபுரங்களில் பிளாஸ்டிக் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட பொருட்கள் கிடையாது. மேலும் போகியின் போது பழைய பொருட்களை எரித்து அந்த சாம்பலை உரமாக உபயோகித்து இருக்கலாம்.

  ஆனால் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் தான் அதிகம், அவற்றை எரிப்பதால் உண்டாகும் கேடு எல்லோருக்கும் தெரியும், இருந்தாலும் படித்தவர், படிக்காதவர் என்று இல்லாமல் அனைவரும் சேர்ந்து கொளுத்துவது, மற்றவர் கொளுத்துவதை வேடிக்கை பார்ப்பதும் வருத்தம் கொடுக்கிறது.

  யாருமே உபயோகிக்க முடியாதவற்றை அப்படியே தூக்கி எரிந்தும், நீங்க சொன்ன மாதிரி துணிமணிகளை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவலாம். நானும் கூட சின்னவயது முதல் என் பெரியப்பா மகன்கள் உடைகள், அத்தை பையன்கள் உடைகளை வாங்கி தான் உடுத்தியிருக்கிறேன். இப்போ கூட அனைத்து துணிகளையும் அப்படியே வைத்திருப்பேன், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழும் போது நண்பர்கள் துணிகள் சேகரிக்கும் போது அவற்றில் நல்லவற்றை கொடுத்து விடுகிறேன், இடமும் காலியாகுது, தேவையானவங்களுக்கு அது போய் சேருது.

  சின்ன குழந்தைகளுக்கும் புகையால் ஏற்படும் தீமைகளை சொல்லிக் கொடுத்தல் அவசியம்.

  கடைசி செய்தி: சின்னவயதில் சொக்கப்பனை பெரியவங்க கொளுத்த, நானும் என் நண்பனும் பழைய டயரை கொளுத்தி தெரு முழுவதும் நாற்றம், அதன் பின்னர் எங்க அம்மா போட்டு சாத்துனாங்க.

  ReplyDelete
 10. //ஆனா குழந்தைகளுக்கு மற்றவங்களோட பழைய உடுப்புகள் போடறது வழக்குல உண்டு.//
  பிறந்த குழந்தைக்கு முதல் துணி பழையாதாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. இதை நான் எனது வீடு உட்பட பல இடத்தில் பார்த்து உள்ளேன்.

  // உடல்நலமில்லாம குழந்தை இருந்தாகூட சிலர் தன் வீட்டு சாப்பாட்டைக் கொடுக்காம அடுத்தவங்க வீட்டுல வாங்கிக் கொடுத்தா சரியாயிடும்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. (இதுக்குப் பின்னாலயும் ஒரு 'ருசியான' காரணம் இருக்கலாம். ;-)] //

  :-))))

  //நான் சகஜமா அந்தக் குழந்தைகள் எங்கவீட்டுக்கு விளையாட வரும்போது, விரும்பி விளையாடற பொம்மையை குழந்தை கைலயே கொடுத்துடுவேன். இது பிரச்சனை ஆகாது.//

  நல்ல ஐடியாவா இருக்கே.

  //பெற்றோர்களுக்கே குழந்தைகள் கேட்கறதை எல்லாம் வாங்கித் தர வசதி அல்லது வசதியை மீறின ஆர்வம் இருக்கறதும்//

  100% உண்மை

  //பிறந்தநாள் கொண்டாட்டங்கள்கற பேர்ல குவிஞ்சுடற விளையாட்டுப் பொருள்களும்தான்.//

  இந்த வகையில வருகிர விளையாட்டுப் பொருட்கள் அதிகம். எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் நம்மூர் "கல்யாண மொய்" விசயம் போல் இது ஒரு சடங்காகிவிட்டது. மேலும் அந்த வயதில் குழந்தைகள் பரிசுப் பொருட்களை தங்கள் நண்பர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அது போல் பிறந்தநாள் விழாக்களில் இந்த goody bag -யையும் அவர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். அவர்களை ஏமாற்ற மனது வரவில்லை.

  .....
  இப்படி வந்த பொருட்களை சரியான முறையில் மறு உபயோகம் (தேவைப் பட்டவர்களுக்கு) செய்ய, சேவை அமைப்புகள் நடத்தும் கலெக்சன் சென்டர்களே சரியானவை என்பதே எனது அனுபவ உண்மை.

  விரிவான கருத்துக்கு நன்றி ஜெஸ்ரீ (ஜெயஸ்ரீ ??)

  ReplyDelete
 11. பரஞ்சோதி,
  //சொக்கப்பனை கொழுத்துவாங்க//
  சுதர்சன் சொன்னது போல் கார்த்திகை தீபத்தின் 'சொக்கப் பனை' பார்த்திருக்கிறேன். சில கிராமங்களில் (எனது தாத்தா பாட்டி ஊரில்) அந்த ஊர்த் திருவிழாவின் போதும் இந்த சொக்கப்பனை இருக்கும்.

  //மேலும் போகியின் போது பழைய பொருட்களை எரித்து அந்த சாம்பலை உரமாக உபயோகித்து இருக்கலாம்.//

  இருக்கலாம். ஆனால் இந்த போகியின் வரலாறு தெரியாத ஒரு புதிர். யாராவது சென்னைவாசிகள் சொன்னால் நல்லது. அங்குதான் இது மேளத்துடன் (முரசு) இன்னும் கொளுத்தப்பட்டு வருகிறது.

  //படித்தவர், படிக்காதவர் என்று இல்லாமல் அனைவரும் சேர்ந்து கொளுத்துவது, மற்றவர் கொளுத்துவதை வேடிக்கை பார்ப்பதும் வருத்தம் கொடுக்கிறது//
  //சின்ன குழந்தைகளுக்கும் புகையால் ஏற்படும் தீமைகளை சொல்லிக் கொடுத்தல் அவசியம்.//


  பண்டிகை என்றாகிவிட்டால் அதில் மதம் சம்பிரதாயம் சேர்ந்து விடுகிறது. அதுதான் அனைவரும் குற்றவுணர்வு இல்லாமல் (??) இப்படிச் செய்கிறார்கள்.

  //நானும் என் நண்பனும் பழைய டயரை கொளுத்தி தெரு முழுவதும் நாற்றம், அதன் பின்னர் எங்க அம்மா போட்டு சாத்துனாங்க//

  :-))

  நன்றி பரஞ்சோதி

  ReplyDelete
 12. கல்வெட்டு நண்பரே. இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா தான் இப்போது போகியாய்க் கொண்டாடப்படுகிறது என்று படித்திருக்கிறேன். ஆனால் அதில் பழையதை எரிப்பது என்னும் சடங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. மதுரையில் எங்கள் வீட்டில் இப்படி எரிப்பது கிடையாது.

  நீங்கள் சொல்வது மாதிரி பழைய பொருட்களுக்கு எத்தனையோ உபயோகம் இருக்கிறது. உங்கள் தாயார் சொன்ன மாதிரி நாங்களும் ஒவ்வொரு வருடம் இந்தியா போகும் போதும் இங்கிருந்து இரண்டு பெட்டிகள் எங்களுக்கு வேண்டாதவை ஆனால் நம் ஊரில் நிறைய பேருக்குப் பயன்படுபவை என்று பார்த்து எடுத்துச் செல்வோம். எப்போதாவது பழையது கொண்டு போக இல்லாவிட்டால் புதிதாய் எடுத்தும் கொடுத்திருக்கிறோம்.

  ReplyDelete
 13. குமரன்,
  கருத்துக்கு நன்றி.
  //சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழா தான் இப்போது போகியாய்க் கொண்டாடப்படுகிறது என்று படித்திருக்கிறேன்.//

  சிலப்பதிகாரத்தில் இருந்து வந்து இருக்கலாம். குப்பை ஏன் இந்திரனோடு சேர்ந்தது என்று தெரியவில்லை.

  //நம் ஊரில் நிறைய பேருக்குப் பயன்படுபவை என்று பார்த்து எடுத்துச் செல்வோம்//

  நல்லது நண்பரே. வீணே போகாமல் அடுத்தவருக்குப் பயன் பட்டால் நல்லதே.

  ReplyDelete