Monday, November 21, 2005

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

துன்பங்கள் (சுனாமி போன்ற இயற்கைத் துயரங்கள்) என்று வரும் போது நாம் அனைவரும் நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நமது விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக , அடுத்தவர் கலந்து கொள்ள முடியாத, கலந்து கொள்ள விரும்பாத குட்டிக் குட்டிக் தீவாகவே உள்ளது.மேலும் ஒருவர் கொண்டாடும் சாதி,மத விழாக்கள் அடுத்தவர்களுக்கு பிரச்சனை தருவதாகவோ ,சீண்டுவதாகவோ பல சமயங்களில் உள்ளது. இந்த தவறுகளை எல்லாம் சாதி,மத வேறுபாடுகள் உள்ளவரை முற்றிலுமாக நம்மால் நீக்க முடியாது.

மனித வாழ்விற்கு கொண்டாட்டங்கள் மிகவும் அவசியமானவை, அவைதான் மனித வாழ்வை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பவை என்று நம்புகிறவன் நான். நீங்களும் இதனை ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.நாம் அனைவரும் சேர்ந்து, சாதி மத சமய வேறுபாடு இல்லாமல் சந்தோசமாக விமர்சையாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாள் இல்லை, என்பது எனது நெடுநாளைய ஆதங்கம். இவ்வாறு கொண்டாடுவதற்கு நாம் புதிதாக ஒரு பண்டிகையை கண்டுபிடிக்கத்தேவை இல்லை. அது அநாவசியமானதும் ஆகும்.

நமக்கு இதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இருந்தும் அது அவ்வளவாக கொண்டாடப்படுவது இல்லை. அதுதான் பொங்கல் பண்டிகை.

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.

பொங்கல் திருநாள் ஒரு அறுவடைத் திருநாள்.

பொங்கல் திருநாள் நமக்காக உழைத்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

பொங்கல் திருநாள் வயலுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் நாள்.

இந்துக்கள் (யார் இந்துக்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். வேண்டுமானல் இந்துக்கள் என்று தன்னைத்தானே நம்புபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.) என்று சொல்லப்படுவர்களைத் தவிர வேறு யார் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து இதனைக் கொண்டாடுகிறார்கள்? கிறித்துவ , முஸ்லிம் மதங்களில் ஒரு சிலர் இதனைத்னைத் தங்கள் விழாவாக,தமிழ் விழாவாக நினைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கும், தீபாவளிக்கும்,மற்ற சமய விழாக்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் யாரும் இந்த நன்றித் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு கொடுப்பது இல்லை.நான் விரும்புவது இதுதான். சாதி,மத,சமய மற்றும் எந்தவிதமான வித்தியாசங்களும் இல்லாமல்,ஒவ்வொரு தமிழனும் வெகு விமர்சையாக இந்த விழாவைக் கொண்டாட வேண்டும்.

இதில் எங்கு வந்தது சாதி, மதச்சடங்குகள்?
தமிழர்கள் அனைவரும் ஏன் இந்த விழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடக் கூடாது?

உங்களின் கருத்துகளை அறிய ஆசை.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html




****************



****************