Monday, November 21, 2005

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

துன்பங்கள் (சுனாமி போன்ற இயற்கைத் துயரங்கள்) என்று வரும் போது நாம் அனைவரும் நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நமது விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக , அடுத்தவர் கலந்து கொள்ள முடியாத, கலந்து கொள்ள விரும்பாத குட்டிக் குட்டிக் தீவாகவே உள்ளது.மேலும் ஒருவர் கொண்டாடும் சாதி,மத விழாக்கள் அடுத்தவர்களுக்கு பிரச்சனை தருவதாகவோ ,சீண்டுவதாகவோ பல சமயங்களில் உள்ளது. இந்த தவறுகளை எல்லாம் சாதி,மத வேறுபாடுகள் உள்ளவரை முற்றிலுமாக நம்மால் நீக்க முடியாது.

மனித வாழ்விற்கு கொண்டாட்டங்கள் மிகவும் அவசியமானவை, அவைதான் மனித வாழ்வை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பவை என்று நம்புகிறவன் நான். நீங்களும் இதனை ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.நாம் அனைவரும் சேர்ந்து, சாதி மத சமய வேறுபாடு இல்லாமல் சந்தோசமாக விமர்சையாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாள் இல்லை, என்பது எனது நெடுநாளைய ஆதங்கம். இவ்வாறு கொண்டாடுவதற்கு நாம் புதிதாக ஒரு பண்டிகையை கண்டுபிடிக்கத்தேவை இல்லை. அது அநாவசியமானதும் ஆகும்.

நமக்கு இதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இருந்தும் அது அவ்வளவாக கொண்டாடப்படுவது இல்லை. அதுதான் பொங்கல் பண்டிகை.

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.

பொங்கல் திருநாள் ஒரு அறுவடைத் திருநாள்.

பொங்கல் திருநாள் நமக்காக உழைத்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

பொங்கல் திருநாள் வயலுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் நாள்.

இந்துக்கள் (யார் இந்துக்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். வேண்டுமானல் இந்துக்கள் என்று தன்னைத்தானே நம்புபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.) என்று சொல்லப்படுவர்களைத் தவிர வேறு யார் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து இதனைக் கொண்டாடுகிறார்கள்? கிறித்துவ , முஸ்லிம் மதங்களில் ஒரு சிலர் இதனைத்னைத் தங்கள் விழாவாக,தமிழ் விழாவாக நினைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கும், தீபாவளிக்கும்,மற்ற சமய விழாக்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் யாரும் இந்த நன்றித் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு கொடுப்பது இல்லை.நான் விரும்புவது இதுதான். சாதி,மத,சமய மற்றும் எந்தவிதமான வித்தியாசங்களும் இல்லாமல்,ஒவ்வொரு தமிழனும் வெகு விமர்சையாக இந்த விழாவைக் கொண்டாட வேண்டும்.

இதில் எங்கு வந்தது சாதி, மதச்சடங்குகள்?
தமிழர்கள் அனைவரும் ஏன் இந்த விழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடக் கூடாது?

உங்களின் கருத்துகளை அறிய ஆசை.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html




****************



****************

32 comments:

  1. தமிழர் என்பவர் முதன் முதலில் இந்து இவர்களது கடவுள் சூரியன் பிறகுதான் சிவன் அதற்கடுத்து மற்றகடவுள்கள்.
    இவர்கள் தான், முதன் முதலில் அறுவடை செய்த தானியத்தை சூரியனால் தான் நாம் உயிர் வாழ்கின்றோம் தானியங்களும் விளைந்தன ஆகவே முதன் முதலில் அவனுக்குப் படைப்போம் என செய்கின்றனர். மற்றவர்கள் மதம் மாறியதால் அதை விட்டு விட்டனர்
    இது என்னுடையகருத்து கல்வெட்டு எனக்குத்தெரிந்தது அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. நன்றி என்னார்,
    சூரியன் அனைவருக்கும் தான் வெளிச்சம் கொடுக்கிறது.
    சூரியனை இயற்கையான, just ஒரு Energy resource ஆகா நினைத்து நன்றி சொல்லலாமே?

    //தமிழர் என்பவர் முதன் முதலில் இந்து //
    இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
    தமிழர் தமிழர்தான். வேண்டுமானால் அவர்கள் பல சமய உட்பிரிவுகளைக் கொண்டவர்களாக இருக்கலாம். எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் எப்போதும் (மதம் மாறிய பின்னும்) தமிழரே. இந்த பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகையே தவிர சூரியனுக்கும், மாட்டுக்கும் நன்றி சொல்வதால் பிற மதங்கள் இதனைக் கொண்டாடுவதைத் தடுக்காது என்பதே எனது எண்ணம்.

    பிற மதங்களில்,சமய ரீதியாக இதனைக் கொண்டாடக் கூடாது என்பதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?

    ReplyDelete
  3. yes kalvattu. now days RC christian church ask to celebrate 'Pongal' and RC churches also celebrating.

    beleive other christians and muslims will follow it soon.

    ReplyDelete
  4. நான் சூரியனையோ அல்லது எந்தக் குறீயீட்டையுமோ கும்பிடச் சொல்லவில்லை. இஸ்லாமில் அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் கேட்பது இதுதான்.
    நன்றி சொல்லலாமே?
    இதன் மூலம் அனைவரும் இணைந்து ஒரு பண்டிகையை கோலாகலாமா கொண்டாட வேண்டும் என்பதே எனது ஆசை.

    ReplyDelete
  5. நண்பர் கல்வெட்டு அவர்களே!

    மிக அவசியமான பதிவை போட்டிருக்கீங்க, பாராட்டுகள்.

    நீங்க சொன்னது அத்தனையும் மிகச்சரியே. அனைத்து தமிழர்களும் ஒன்று கூடி கொண்டாட ஒரு பண்டிகை மிகவும் அவசியம், அதற்கு பொங்கல் பண்டிகை தான் மிகச்சரியான ஒன்று.

    பொங்கலை தனியாக கொண்டாட இஸ்லாமிய, கிறிஸ்துவ நண்பர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் தங்களுக்கு நெருக்கமான இந்து நண்பர்களோடு சேர்ந்து பண்டிகையை மட்டும் கொண்டாடலாமே (இறைவணக்கத்தை தவிர்த்து).

    இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஓணம் கொண்டாடுவதை காணும் போது எனக்கும் நீங்க சொன்னது எல்லாம் தோணும்.

    எங்க கம்பெனியில் ஓணப்பண்டிகை வந்தால் அதை தலைமை ஏற்று நடத்துபவர் ஒரு கிறிஸ்துவ மலையாளி நண்பர், மேலும் அக்குழுவில் முக்கிய பொறுப்புகளை இஸ்லாமிய மலையாளி நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவார்கள். மன்னர் மகாபலி வேடம் ஏற்பவரும் ஒரு கிறிஸ்துவ நண்பர் தான்.

    அத்தகைய பண்டிகைகளில் நானும் கலந்துக் கொள்வேன், அப்போ பல முறை என் மலையாளி நண்பர்களே கேட்டதுண்டு, ஏன் நம்ம கம்பெனியில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் கூடி உங்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடக்கூடாது, நானும் முயற்சித்தேன், பலனளிக்கவில்லை.

    உங்களுடைய இப்பதிவையாவது பார்த்து அன்பு நண்பர்கள் கொண்டாடத் தொடங்க வேண்டும், விரைவில் அனைத்து தமிழர்களும் மதம், ஜாதி வேறுபாடு இல்லாமல் உலகமே வியக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என்பதே என் ஆசை.

    நான் ஒவ்வொரு ஆண்டும் என் நண்பர்களின் வீட்டில் கிறிஸ்துமஸ், ரமதான் பண்டிகைகளை கொண்டாடும் போது கலந்துக் கொள்வேன். இந்தியா செல்லும் போது அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு போவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன்.

    என் மகள் சக்திக்கும் அதையே செய்ய வழி செய்வேன், மதம் என்பது நம்மை ஒழுங்கு படுத்தவே, அதை விடுத்து நம்மை நாமே நம் உறவினர்கள் (மற்ற மதத்தவர்கள்) இடத்திலிருந்து பிரித்து பார்க்க இல்லை.

    ReplyDelete
  6. //now days RC christian church ask to celebrate 'Pongal' and RC churches also celebrating.

    beleive other christians and muslims will follow it soon//

    நன்றி எட்வின். அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

    ReplyDelete
  7. நன்றி பரஞ்சோதி,

    //பொங்கலை தனியாக கொண்டாட இஸ்லாமிய, கிறிஸ்துவ நண்பர்கள் விரும்பவில்லை என்றால், //

    ஏன் அவர்கள் விரும்பவில்லை என்று அறிய ஆவலாக உள்ளேன்.
    ஏதாவது மதக்காரனம் உள்ளதா?
    பொங்கல் ஒரு நன்றிக் கொண்டாட்டமே தவிர அதில் சாதி,மதங்கள் நுழையத்தேவை இல்லை என்பதே எனது கருத்து. எப்படி இது இந்துக்களுக்கு மட்டுமேயான கொண்டாட்டமாக மாறியது.

    //அவர்கள் தங்களுக்கு நெருக்கமான இந்து நண்பர்களோடு சேர்ந்து பண்டிகையை மட்டும் கொண்டாடலாமே (இறைவணக்கத்தை தவிர்த்து).//

    அப்படியே இந்துக்கள் அவர்கள் சாமிக்கு நன்றி சொன்னால் கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் அவர்கள் நம்பும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலால்மே?.

    ReplyDelete
  8. உண்மை என்னவென்றால் இஸ்லாம்,கிறித்துவ மதத்தவர்களின் மக்கள் தொகை சதவீத அடிப்படையில் பார்த்தால் அவர்களில் பலரும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். இந்து என்று சொல்லப் படுகிறவர்களில் குறைந்த சதவிகித்தினரே பொங்கல் கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் தீபாவளிக்கு தரும் முக்கியத்துவத்தை பொங்கலுக்குத் தருவதில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் பண்டிகைக்கு மாற்று மத நண்பர்களுடன் பலகாரங்கள் பரிமாறிக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. ஒருவர் பண்டிகையில் மற்றவர் விருந்தாளியாகப் பங்கேற்பதும் சமத்துவசூழலை உருவாக்கி உதவியது. BJP மற்றும் RSS தமிழ்நாட்டில் வேரூன்றத தொடங்கியது முதல் இவ்வழக்கங்கள் நீங்கி அவரவர் மதங்களின் தனித்துவ பண்டிகைகளும் விழாக்களும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.

    ReplyDelete
  9. நன்றி அனானி,

    //உண்மை என்னவென்றால் இஸ்லாம்,கிறித்துவ மதத்தவர்களின் மக்கள் தொகை சதவீத அடிப்படையில் பார்த்தால் அவர்களில் பலரும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். //
    //இந்து என்று சொல்லப் படுகிறவர்களில் குறைந்த சதவிகித்தினரே பொங்கல் கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் தீபாவளிக்கு தரும் முக்கியத்துவத்தை பொங்கலுக்குத் தருவதில்லை//


    இது முற்றிலும் உண்மை. இந்துக்கள் என்போர் தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தை இதற்கு தருவதில்லை. அனைவரும் சேர்ந்து (சாதி, மதங்களைத் தள்ளி வைத்துவிட்டு) இதனைத் தமிழர் விழாவாக கொண்டாட வேண்டும்.

    //ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் பண்டிகைக்கு மாற்று மத நண்பர்களுடன் பலகாரங்கள் பரிமாறிக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. ஒருவர் பண்டிகையில் மற்றவர் விருந்தாளியாகப் பங்கேற்பதும் சமத்துவசூழலை உருவாக்கி உதவியது.//

    இப்போதும் இது சில இடங்களில் (எனது கிராமம், எனது அப்பாவின் நண்பர்கள், எனது நண்பர்களுடன் நான்) இருக்கிறது.

    அனைவரும் தனது விழாவாக எண்ணிக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் மதம் சார்ந்த விழாக்கள் நிறைய உண்டு. பொங்கல் விழாவை சாதி மதத்தில் இருந்து விடுவித்து, தமிழர் நன்றித் திருநாளாக மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  10. நான் கல்வெட்டு அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு கல்வெட்டு.. எனக்கு நினைவு தெரிந்து எங்கள் ஊரில் மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை பொங்கல் தான்.

    பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான நகரங்களில் பொங்கல் பண்டிகைக்கு தீபாவளி அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை அது தான்.

    ReplyDelete
  12. கல்வெட்டு,
    தைப்பொங்கல் சந்தேகமின்றி தமிழர் திருநாள்தான்.
    ஈழத்தில் அது தமிழர் திருநாளாகவே கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்கர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். தேவாலயத்தில் வழமைபோலவே பொங்கி, சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறார்கள். (ஆனால் வீடுகளில் தனித்தனியாகப் பொங்குவது இன்னும் பரவலாகவில்லை. ஆனால் அதிகரித்துவருகிறது.)
    இவ்விடயம் விவாதத்துக்கு வரும்போது, பிள்ளையார் பிடிப்பது என்ற சடங்குதான் குழப்பத்தைத் தந்தது. அது மட்டுமே இதை சமயச்சடங்காகப் பார்க்க வைக்கிறது.

    ஈழத்தில் ஒப்பீட்டளவில் தீபாவளிக்குத்தரும் முக்கியத்துவம் குறைவு. தமிழகத்தோடு ஒப்பிடுகையில் மிகமிகக்குறைவென்றே சொல்வேன்.
    தைப்பொங்கலைப் புறக்கணிப்பதென்பது வேதனையானதுதான். மலேசியாவில் தீபாவளிக்கு அரசவிடுமுறை, ஆனால் தைப்பொங்கலைப் பற்றி யாரும் கண்டுகொள்வதேயில்லை. அது வழமையான ஒரு நாள்தான்.

    ReplyDelete
  13. உங்கள் கேள்விக்கு நன்றி .. உங்கள் கருத்து சரியே!!

    தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம்.. கிராமங்களில் மிக சிறப்பாக இருக்கும் .. கோயிலில் பொங்கல் வைத்து பூஜை முடித்து , மஞ்சு விரட்டும் (சிறிய அள்வில்) முடித்து பொங்கல் கொண்டாடுவோம் .. சில கிராம்ங்களில் அதற்கு 'அந்தோனியார் பொங்கல்' என்ற நாமகரணமும் உண்டு (காரணம் தெரியவில்லை!!) .. அது ஏன் முழுக்க முழுக்க இந்து பண்டிகையான 'தீபாவளி'கூட 'தீபத்திருநாளாய்' சில கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது .

    ReplyDelete
  14. //தமிழர் என்பவர் முதன் முதலில் இந்து //
    //இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
    தமிழர் தமிழர்தான். வேண்டுமானால் அவர்கள் பல சமய//
    உலகிலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய்மதமான இந்து மதத்தின் சார்பான நன்றி தெரிவிக்கிறேன் என்றார் விவேகானந்தர்; சிகாகோவில்
    கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றியது தமிழ் குடி என நான் படித்து கேட்டது தான்
    அதான் சொன்னேன் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே தமிழர்களுடையது இவர்கள் தெய்வம் சிவன் //பிறவா யாக்கை பெரியோன்//என சிவனை சொல்வார்கள் மற்றை தெய்வங்கள் எல்லாம். பிறந்து இறப்பன ஆதலால் அவை உண்மையில் தெங்வங்கள் ஆகா அதனால் அது பெரியனதும் ஆகா . மற்று சிவபெருமான் ஒருவனே பிறவா ஒளியுருவினாகலான் அவனே உண்மையான தெய்வமாவன் அனால் அவனே பெரியன்(மகாதேவன்) ஆவான். என்று அச்சொற்றொடரில் அறிவுறத்தியிருக்கின்றனர் இத்தகைய மெய்ம்யைச் சொற் தொடரால் மற்றைய தெய்வங்களை வேறு எங்கும் அவர் ஓதிற்றிலர்.//
    இப்படித்தான் நான் கேள்விப்பட்டேன் அவ்வளவுதான் எனக்குத் தெரியும்
    நல்லது கல்வெட்டு

    ReplyDelete
  15. முஸ்லீம்களிலிருந்து யாருமே இதுவரை கமெண்ட் போடவில்லையா?

    என்ன காரணம்?

    :-)

    நட்புடன் ஆரோக்கியம்
    http://ennamopo.blogsome.com

    ReplyDelete
  16. கல்வெட்டு,
    நான் ஒரு கத்தோலிக்கன் .இது பற்றி என்னுடைய பழைய பதிவு இதோ

    http://cdjm.blogspot.com/2005/08/blog-post.html

    ReplyDelete
  17. நான் ஒரு கத்தோலிக்கன் .இது பற்றி என்னுடைய பழைய பதிவு இதோ

    http://cdjm.blogspot.com/2005/08/blog-post.html

    ReplyDelete
  18. தமிழர் திருநாள் என்று கூறப்படுவதால் இந்துக்களிலேயே சிலர் இதை கொண்டாட மனத்தடை இருக்கிறது. தமிழர் என்று தங்களை நினைத்துக்கொள்வதில் கூச்சப்படும் ஜென்மங்கள் நிறைய வாழும் இடத்தில் இருக்கிறோம் நாம் என்பதை இங்கே பதிக்கிறேன்.

    ReplyDelete
  19. தமிழர் திருநாள் என்று கூறப்படுவதால் இந்துக்களிலேயே சிலர் இதை கொண்டாட மனத்தடை இருக்கிறது. தமிழர் என்று தங்களை நினைத்துக்கொள்வதில் கூச்சப்படும் ஜென்மங்கள் நிறைய வாழும் இடத்தில் இருக்கிறோம் நாம் என்பதை இங்கே பதிக்கிறேன்.

    Very correct Muthu. Villages are better than coso.

    In my dist(kanya kumari) now days CPM party clebrating Pongal well.

    ReplyDelete
  20. முஸ்லீம்களிலிருந்து யாருமே இதுவரை கமெண்ட் போடவில்லையா?

    என்ன காரணம்?

    :-)
    Over to Asif Meeran ANNACHI........

    ReplyDelete
  21. //முஸ்லீம்களிலிருந்து யாருமே இதுவரை கமெண்ட் போடவில்லையா?

    என்ன காரணம்?

    :-)

    நட்புடன் ஆரோக்கியம்//

    ஆரோக்கியம் சொகமா இர்க்கியலா? புத்த மதத்துக்கு ஆள் பிடிக்கும் சோலி முடிஞ்சுட்ச்சா?

    ReplyDelete
  22. குமரன்,
    நீங்கள் என் கருத்தை வழிமொழிந்தமைக்கு நன்றி!

    ================

    சுரேஷ் பாபு,
    உங்கள் ஊரில் அனைவரும் கொண்டாடுகிறார்கள் என்பது சந்தோசமான விசயம்.
    பெரும்பாலும் தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்படுவது இல்லை.

    =========

    வசந்தன்,
    ஈழத்தில் இது தமிழர் திருநாளாகவே கொண்டாடப்படுகிறது என்பதும் கத்தோலிக்கர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள் என்பதும் சந்தோசமான விசயம்.

    //தைப்பொங்கலைப் புறக்கணிப்பதென்பது வேதனையானதுதான். மலேசியாவில் தீபாவளிக்கு அரசவிடுமுறை, ஆனால் தைப்பொங்கலைப் பற்றி யாரும் கண்டுகொள்வதேயில்லை. //

    எனக்கும் அதே வருத்தம் தான்.


    ======
    ஆரோக்கியம்,
    நான் இஸ்லாமியரின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். என்ன காரணத்தினாலோ அவர்கள் யாரும் வரவில்லை.

    =====

    ஜோ,
    உங்களுடைய பதிவைப்படிதேன். மிகவும் சந்தோசம். கொண்டாட்டங்களில் நாம் அனைவரும் மத,சாதி வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். பொங்கல் அதற்கு ஏற்ற கொண்டாட்டம்.

    =======
    முத்து,

    //தமிழர் திருநாள் என்று கூறப்படுவதால் இந்துக்களிலேயே சிலர் இதை கொண்டாட மனத்தடை இருக்கிறது. தமிழர் என்று தங்களை நினைத்துக்கொள்வதில் கூச்சப்படும் ..//

    தமிழர் என்று சொல்லிக்கொள்ள கூச்சப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதே வேதனையான விசயம். தன்னைத்தான் தமிழர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுபவர்கள் மட்டுமே தமிழர்கள் அவர்களுக்கு மட்டுமே இந்தப் பொங்கல் கொண்டாட்டம்.


    கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. கிறித்துவர்களில் RC பிரிவினர் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்பது மிகவும் சந்தோசம்.

    இஸ்லாம் நண்பர்கள் ஏன் கருத்துக் கூறவில்லை?

    ReplyDelete
  23. --L-L-D-a-s-u--- ,
    //தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம்.. கிராமங்களில் மிக சிறப்பாக இருக்கும் //

    மகிழ்ச்சியான செய்தி.

    =======

    என்னார்,
    உங்களின் விளக்கத்துக்கு நன்றி.
    பொங்கல் கொண்டாட்டத்தை சாதி,மதங்களில் இருந்து மீட்டெடுத்து தமிழர் பண்டிகையாக கொண்டாடவேண்டும் என்பதே எனது எண்னம்.

    ReplyDelete
  24. அதுதான் குடுமி குப்புசாமி என்ற முஸ்லீம் கருத்து சொல்லியிருக்கிறாரே..
    அப்புறம் என்ன?

    ennamopo.BLOGSOME.com

    கல்வெட்டு. எனக்கு காரணம் தெரியும். அதை இப்போது எழுத வேண்டாம் என்று இருக்கிறேன். அது பிறகொரு நாள். உங்களது நல்ல எண்ணத்தை கெடுக்கும் எண்ணம் இல்லை. அதனால், முஸ்லீம்களிடமிருந்து நானும் ஒரு நல்ல கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  25. In our family, and for many others that I know Pongal is more important than Diwali. There is also a strong sentiment to promote it as a more secular and "Tamil" celeberation. There are no "God" related rituals associated with it. There is an element of Nature worship, which extreme Islamic or Christian traditions may not want to contemplate as an alternate to the ONE.

    ReplyDelete
  26. இஸ்லாமியர்கள் கருத்து கூறாததற்குக் காரணம் -

    இது குறியீடுகளால் கடவுளாகக் கொள்ளப்பட்ட சில வடிவங்கள் சார்ந்தவற்றை மையப்படுத்துவதால் தான்.

    இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம் -
    அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு வழிபாடுதல்கள் செய்யப்படுவது தான்.

    இஸ்லாமியர்கள் தாங்கள் வணங்கவில்லையென்பதால் விலகிக் கொள்கின்றனரே தவிர, இத்தகைய வணக்க முறைகளை
    பிறர் செய்வதை கண்டிப்பதில்லை. இந்த படையல்களிலிருந்து வரக் கூடிய பொங்கல், கரும்பு முதலானவற்றை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
    அத்தகைய உணவுகளை உண்ணவும் செய்கின்றனர். அதே போல தீபாவளிப் பண்டிகையையும் அவர்கள் செய்வதில்லை என்றாலும், புற அடையாளங்களான
    வெடிகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிடவும் தான் செய்கின்றனர். வழிபாடு என்ற நிலையில் மட்டுமே அவர்கள் அதில் கலந்து கொள்வதில்லை.
    ஆனால் மற்ற வடிவங்களில் அதில் பங்கு கொள்கின்றனர்.

    நான் வீடு கட்ட ஆரம்பித்த பொழுது கட்டிட மேஸ்திரி வந்ததும் பூசை போடனும் என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம்பா நேரா வேலையை ஆரம்பித்து விடு என்று
    சொல்லியும் கேளாமல், வற்புறுத்தி பணம் வாங்கிப் போய் - தேங்காய், பழம், பொரி கடலை குங்குமம் என்று வாங்கி வந்து
    அருகே இருந்த சில செங்கற்களையே நிறுத்தி வைத்து பூசைகளை செய்து விட்டு தான் ஆரம்பித்தார். அவருடைய கோணம் - பூசை செய்யாமல் போய் ஏதாவது விபத்துகள்
    ஆகக் கூடாது என்ற பயம் தான். இறைவனைத் தவிர வேறு எந்த மத குறியீடுகளையும் சம்பிராதாயங்களையும் ஏற்பதில்லை என்ற முடிவு செய்து அதன்படியே வாழும் எனக்கும்,
    என் மனைவிக்கும் அந்த மனிதரின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்று தோன்றி இணங்கினோமே அன்றி அவருடைய எந்த ஒரு வழிபாடுகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற
    எண்ணம் கிடையாது.

    அதே போல தலைவாசல் நிலை வைக்கும் பொழுது - சில பூசைகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அவரே செய்தார். தான் கட்டிய வீட்டில் வாழப்போகிறவர்கள் நன்றாக
    இருக்க வேண்டும் - அதன் மூலம் கைராசியான மனிதன் என்ற பேர் வாங்கி தொழில் செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை. நம்பிக்கையற்ற வழிபாடுகள் வேண்டாமென்றாலும் ஒரு
    தனிமனிதனின் மீதான எங்களது மதிப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர் தன் வழிபாடுகள் அனைத்தையும் செய்து தான் கட்டித் தந்தார்.

    இந்த மனிதநேயத்தின் மீதான மதிப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. எந்தப் பிரச்சினையாகவுமிருக்காது. ஆனால், இன்று சிறிய சிறிய குக்கிராமங்களில் கூட
    இந்துத்துவா மனிதநேயத்தைக் கொன்று விட்டது. இனி இந்தக் கோடுகளைத் தாண்டி வருவதற்கு நீண்ட கால முய்ற்சிகள் தேவைப்படும்.

    என்றாலும் முடியாத காரியமில்லை அது...

    ReplyDelete
  27. நண்பரே,
    கருத்துக்கு நன்றி.
    இஸ்லாம் நண்பர்கள் யாரும் பேசாதபோது நீங்கள் வந்து விளக்கம் கூறியது மிக்க சந்தோசம்.

    //இது குறியீடுகளால் கடவுளாகக் கொள்ளப்பட்ட சில வடிவங்கள் சார்ந்தவற்றை மையப்படுத்துவதால் தான்.//

    நான் சொல்ல வருவதே இதுதான்.
    பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

    இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.

    சூரியனுக்கு (கடவுள் இல்லை...சூரியன் என்ற கோளுக்கு அது நமக்கு ஒளி தருவதற்காக), விவசாயிக்கு, மாட்டுக்கு...என்று பலவற்றைக் கூறலாம்.

    இதனக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் நன்றியைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். இதே பொங்கலை இஸ்லாம் நண்பர்கள் வைத்து, அல்லாவுக்கும், அவர்கள் விரும்பும் (இஸ்லாம் நெறிப்படி) வேறு மனிதர்களுக்கோ பெரியவர்களுக்கோ நன்றி சொல்லிக் கொண்டாடலாமே?

    //இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம் -
    அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு வழிபாடுதல்கள் செய்யப்படுவது தான். //

    எதையும் வழிபாடு செய்யவேண்டாம். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக எதுவும் செய்யவேண்டாம்.
    நன்றி கூறுவது இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். தவறு இருந்தால் திருத்தவும்.

    தமிழர்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாட பொங்கலை விட்டால் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடையாது.
    ஒவ்வொரு வீடுகளிலும் இது சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்

    //இந்த மனிதநேயத்தின் மீதான மதிப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. //

    உங்களின் மனித நேயமதிப்பை போற்றுகிறேன்.

    //இந்துத்துவா மனிதநேயத்தைக் கொன்று விட்டது. இனி இந்தக் கோடுகளைத் தாண்டி வருவதற்கு நீண்ட கால முய்ற்சிகள் தேவைப்படும். என்றாலும் முடியாத காரியமில்லை அது... //

    உங்களின் நம்பிக்கையைப் போற்றுகிறேன். வாருங்கள் இப்போதே அந்த நம்பிக்கைக்கு ஒளி தருவோம்

    ReplyDelete
  28. அருமையான, யோசிக்க வைத்த பதிவு இது.

    ReplyDelete
  29. //இஸ்லாம் நண்பர்கள் ஏன் கருத்துக் கூறவில்லை?//

    நண்பர்.கல்வெட்டுக்கு! (?)

    இது பற்றி பலூன் மாமா என்ற பெயரில் எனக்கு தனி மெயில் வந்தது. அதற்கான பதிலை சென்ற மாதம் எனது புதியவலைப்பூவில் பதிந்து தமிழ்மணத்தில் இணைக்க அனுமதி கேட்டிருந்தேன். என்ன காரணத்தாலோ திரு.காசி அவர்கள் இணைக்கவில்லை.

    அனானிமஸ் பின்னூட்டங்களையும் அநாகரிக பின்னூட்டங்களையும் உங்களால் கட்டுப்படுத்தி நடுநிலையான விவாதத்திற்கு களம் அமைக்க முடியுமென்றால் உங்களின் நியாயமான கேள்விக்கு பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்.

    இப்போதெல்லாம் முஸ்லிம் வலைப்பூவாசிகள் என்றாலே எதையாவது சொல்லி திசை திருப்ப பல புதிய முயற்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, "தமிழர்கள்" என்ற நட்புறவுடன் அழைத்தமைக்கு நன்றிகள்.

    அன்புடன்,

    ReplyDelete
  30. அன்பு நண்பர் கல்வெட்டிற்கு,

    நண்பன் என்ற பெயரில் எழுதும் நான் ஒரு இஸ்லாமியனே.

    நன்றி சொல்லுவது தொழுகையில் ஒரு பகுதியாக தினம் தினம் செய்யப்படுகிறது.

    இஸ்லாத்தின் இனிமையான பக்கங்களைப் பாராது வெறுமனே அல்கொயதாவை மட்டுமே கொண்டு எடை போட கூடாது. அல்கொய்தாவை அடக்க வேண்டுமென்றால், முதலில் இந்த தீவிரவாதிகளுக்கு ஆதர்ச நண்பனாக விளங்கும் அமெரிக்க நேச நாடுகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

    என்றாலும் அல் கொய்தாவை இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை உருவாக்க உலகின் சில தலைவர்கள் (அப்படி சொல்லிக் கொள்பவர்கள் ) முனைகிறார்கள் - அதை மனித நேயமிக்க அனைவருக் கண்டிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா...

    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  31. கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இதனை ஏற்றுக் கொண்டால்தான் முஸ்லிம். படைத்து பரிபாலித்து, இறக்கச் செய்து பிறகு உயிர்த்தெழச் செய்பவன் அல்லாஹ்வே என்றும் அவனே செலவத்தையும், இன்பத்தையும் அதேபோல் சோதனைகளையும், துன்பத்தையும் தருபவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை.

    பொங்கல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

    முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள். (பார்க்க : http://uyirppu.yarl.net/archives/000190.html )

    பொங்கலை உழவுக்கு உதவியவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படும் பண்டிகை என்று சொல்லி விட்டு நம்மில் எத்தனை பேர் உழவர்களுக்கு சரியான கூலியை வழங்குகிறோம்? மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப்படுத்துகிறோம். இதுவா உழவுக்கு உதவியவ்ர்களுக்கு வந்தனம் செய்யும் முறை?

    உண்மையில் பொங்கலன்று மட்டும் நன்றி செலுத்துவதை விட இஸ்லாம் எல்லா நாளும் நன்றியுடையவர்களாக இருக்கச் சொல்கிறது. உதாரணமாக, உழைப்பவனின் வியர்வைத் துளி உலரும் முன் அவனுக்குறிய கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் அருள் மொழி. மேலும் அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்


    'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்)
    நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:)
    உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்)
    அதற்கான நற்பலன் கிடைக்கும்''
    என்று கூறினார்கள் (புகாரி-6009)

    பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது. இஸ்லாம் மற்ற மதத்தவரின் வழிபாடுகளில் தலையிடுவதில்லை. தங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தால்தான் அவற்றைக் கொண்டாடுவதில்லையே தவிர காழ்புணர்வோ அல்லத் வேறு காரணங்களோ அல்ல.

    மேலும் பார்க்க : http://nalladiyar.blogspot.com/

    அன்புடன்,

    ReplyDelete
  32. நன்றி கவெட்டு!

    என்னுடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி இது.

    உழவர்கள் தை மாதத்தில் தங்களுக்கு உதவிய சூரியன், உழவு மாடு (தற்சமயம் டிராக்ட்டர் தான்) இவைகளுக்கு நன்றி சொல்ல இந்த கொண்டாட்டம்.

    நான் என் மதக்கடவுளை தவிர வேறு எதையும் வணக்க மாட்டேன் என்று சொல்லும் வேற்று மதத்தினர், குறைந்த பட்சம் சூரியனை வணங்காவிடினும் ஊருடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடலாம், கேரளாவில் கொண்டாடும் ஊனம் பண்டிகைப்போல.......

    ReplyDelete