Friday, June 23, 2006

குழந்தைகளின் கல்லறையின் மேல் கோபுரங்கள்

புலிகள் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவைப் படு கொலை செய்ததற்கு இதுவரை நம்பப்படும் காரணம் ஒன்றே. ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட இந்தியப் அமைதிப் படைகள் இலங்கை மண்ணில் நடத்திய கொடுமைகள்.இதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்சசியின் பதிவில் இதனை வேறுவிதமாக பார்க்கிறார்.

//..ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார்.//

அவர் அவர்களுக்கு அவர்களின் அனுபவங்களே பாடம்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இதே புலிகளுக்காக பல முறை தொண்டை கிழிய கத்தி, ஊர்வலம் போய் நிதி சேகரிதவன் நான். அப்போது நான் படித்த அரசாங்கப் பள்ளியே ஜெயவர்த்தேனேக்கு எதிராக ஊர்வலம் ஏற்பாடு செய்தது.என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்த இலங்கைத் தமிழ் நண்பன் ஒருவன் மூலம் அப்போதே இலங்கையைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தது. அப்போது இருந்த தமிழக முதல்வர் (எம்.ஜி.ஆர் ) புலிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.ஒட்டு மொத்த தமிழகமுமே புலிகளைத் தங்களில் ஒருவராகத்தான் பார்த்தது. திண்டுக்கல் அருகே சிறுமலையில் புலிப்பயிற்சி முகாம் இருந்ததாக நான் பள்ளியில் படித்த காலங்களில் ஒரு பேச்சு இருந்தது.ஆனால் இப்போது என்னால் புலிகளை ஒரு நல்ல இயக்கமாகப் பார்க்க முடியவில்லை.அதற்கு ராஜிவ் கொலை ஒரு முக்கியக் காரணம் .

சரி ராஜீவ் என்ன தவறு செய்தார் என்று பார்ப்போம்.

புலிகள்,இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியா ஆகிய மூன்றும் மனம் ஒப்பி செய்த நடவடிக்கையே அமைதிப்படை அனுப்பும் முடிவு. ஒரு இராணுவத்தை நிர்வகிக்கும், அதிலும் பல நாட்டு இராணுவங்களின் போர்க்கால செயல்பாடுகள் பற்றி அறிந்த புலிகளின் விருப்பத்தின் பேரிலேயே அமைதிப்படை இலங்கை சென்றது.மக்களும் அதனை வரவேற்றார்கள். அமைதிப்படை வந்த போது மக்கள் கூட்டம் ஆரவராமாக வரவேற்ற உண்மைகளை மறுத்துவிட முடியாது.இவ்வாறு சென்ற படை தவறு செய்த போது அதற்கான தண்டனை ராஜிவுக்கு மட்டுமே. அதுவும் புலிகளின் வழக்கமான வழியில்.ராஜிவோ அல்லது எந்த ஒரு மனிதனோ அவனால் வழி நடத்தப்படும் ஒரு குழுவின் செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் அதற்கான தண்டனை கொலைதான் என்றால் எவனும் எந்தப் பேச்சு வார்த்தையிலுமே ஈடுபடமாட்டான்.

கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் புலிகள் ராஜிவைக் கொன்றது திட்டமிடப்பட்டு செய்த ஒன்று. இதனால் வரும் எதிர்கால இழப்புகளை சீர்தூக்கிப் பார்க்காமல் இவ்வளவு பெரிய செயலைச் செய்ய புலிகள் முட்டாள்கள் கிடையாது.இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விலக்க வேண்டும் அல்லது அமைதிப் படைகள் செய்த தவறுக்கு பலி வாங்க வேண்டும் அல்லது இரண்டிற்காகவும் புலிகள் நடத்திய கொடூரமே ராஜீவின் கொலை.ராஜீவைக் கொல்வதன் மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க விரும்பிய புலித் தலைமை இப்போது இந்தியாவின் தலையீட்டை விரும்புகிறதா? ஒரு வாதத்திற்கு இந்தியாவின் தற்போதைய பிரதமர் புலிகளுடன் பேசி, புலிகளும் ஒத்துக் கொண்டு ஒரு முடிவை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவின் காரணமாக புலிகளுக்கு வேறு வகையில் ஒரு பெரிய இழப்பு வந்தால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இப்போதைய பிரதமரும் கொல்லப்படுவாரா?

புலிகளின் ஆதரவாளர்கள் எடுத்துக்காட்டும் உதாரணம் இந்தியர்களாலேயே கொல்லப்பட்ட இந்திராவும் ,மகாத்மா காந்தியும். இவர்களின் கொலைக்குப் பிறகும் அதே இன மக்கள் இந்தியாவில் வாழுகிறார்கள்.அவர்களை எல்லாம் மன்னித்த இந்தியா ஏன் புலிகளையும் மன்னிக்கக்கூடாது. இவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திரா மற்றும் மகாத்மா வின் கொலைகளில் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்திய மக்களால் நடத்தப்படும் அரசாங்கத்தின் முன்னால் இது விசாரிக்கப்பட்டது.
ரரஜீவின் கொலை வழக்கிலேயே குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மன்னிக்கப்பட்டவர்கள் உண்டு. கர்ப்பிணி என்பதற்காக நளினிக்கு மனம் இறங்கியதும் அதே ராஜீவின் மனைவிதான்.

நான் ஏற்கனவே சொன்னது போல் காயங்களை மறந்து இனி வரும் சமுதாயம் நன்றாக இருக்க தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

புலிகளின் தலைமை தேடப்படும் குற்றவாளியாகவே இன்னும் இருக்கிறது.சென்ற முறை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஜீவின் கொலை பற்றிய கேள்விக்கு அவர் "அது ஒரு வருத்தமான நிகழ்வு" என்று மட்டுமே சொன்னதாக நினைவு.இது போல் ராஜிவுக்கும் அமைதிப்படையின் செயல்பாடு ஒரு வருத்தாமான நிகழ்வு என்று சொல்ல சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.அப்படி ஒரு விசாரணை நடந்தால் இந்தியப் படைகள் செய்த தவறுகளும் நிரந்தராமாக நீதி மன்றங்களில் பதிவாக ஒரு வாய்ப்பு உள்ளது.


இலங்கையில் துன்புறும் மக்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல விடிவு வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.புலித் தலைமை சொல்லியது போல் என்னால் "இலங்கைப் பிரச்சனையும் ஒரு துன்பமான நிகழ்வு"என்று சொல்லி நழுவதற்கு மனம் வரவில்லை.நல்ல மனிதனால் அப்படி சொல்ல முடியாது.

குழந்தைகளின் வாழ்க்கையில் நெருங்கிப் பழகி வரும் என்னால் அப்பாவி பிஞ்சுகளின் கொலைகளை இனம்/மதம்/மொழி வேறுபாடு காட்டி வருத்தப்பட முடியாது.அது தமிழ் ஈழக்குழந்தையாக இருந்தாலும் சரி சிங்களக் குழந்தையாக இருந்தாலும் சரி ஈராக் குழந்தையாக இருந்தாலும் சரி.குழந்தைகள் குழந்தைகளே.

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு அவர்களைவிட்டால் வேறு வழியும் இல்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக நான் முன்வைப்பவையே ப்போது ங்கே நான் விரும்பும் ஆறு.

1.இந்தியாவிடம் புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.தன்னை முழு விசாரணைக்கு உட்படுத்த தயராக இருக்க வேண்டும்.

2.விசாரணையில் இந்தியாவின் தவறுகள் பதிவு செய்யப்பட்டு நேர்ந்த தவறுகளுக்கு இந்தியா பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3.புலிகள் இந்தியாவின் உதவி தேவை என்று பகிங்கராமாகக் கூற வேண்டும்.(வருங்காலத்தில் நான் இந்தியாவுடன் போரிட நேரிடும் என்று கூறினால், அது தீர்க்க தரிசனம் என்று பலர் சிலாகிக்கலாம். ஆனால் அது இப்போது துன்பப்படும் மக்களுக்கு தீர்வாகாது.)

4.மேலே சொல்லியுள்ள மூன்றும் நடக்கும் பட்சத்தில் இந்தியா புலிகளின் அழைப்பை பரிசீலிக்க வேண்டும். நல்லது நடக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

5.இலங்கை அரசாங்கம் தனி நாடு கொடுக்க எக்காலத்திலும் சம்மதிக்காது. புலிகள் தனி நாட்டைத் தவிர வேறு எதும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பின்பு எதற்கு மண்ணாங்கட்டிப் பேச்சு வார்த்தை?தனி நாடு புலிகளின் இலட்சியமாக இருக்கலாம்.நாடு கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசின் முடிவாக இருக்கலாம்.ஆனால் பேச்சுவார்த்தை என்று வரும் போது Option B என்ற ஒன்றை இருவரும் வைத்து இருக்க வேண்டும்.

6.சண்டைகள் அற்ற அந்த இலங்கை மண்ணில் என்றாவது ஒரு நாள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பலூன்மாமா பலூன் செய்து கொடுக்க வேண்டும்.


போர்தான் Option B என்று ஒரு தரப்பு நினைத்தாலும்....

குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

வெற்றி பெற்றவர்களாலேயே சரித்திரம் எழுதப்படுகிறது.யார் வெல்கிறார்கள் என்பதைப் பொருத்தே இனி வரும் தலைமுறை இப்போது நடந்து வரும் அரசியலைத் தெரிந்து கொள்ளும்.இப்போது செய்யப்படும் குழந்தைக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கனவான்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.உண்மையைச் சொல்ல நம்மில் பெரும்பாலனவர்கள் இருக்க மாட்டோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

இந்தப் பதிவை இலங்கை மண்ணில் செய்வதறியாது பேதலித்துப் போய் இருக்கும் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

=============================================

நான் அழைக்கும் ஆறு பேர்.

1. சிறுவர் பூங்கா பரஞ்சோதி
2. ஜென் கதை கங்கா
3. நிகழ்வுகளின் தாக்கங்கள் ரம்யா
4. இயற்கையின் வினோதங்கள் இயற்கை நேசி
5. விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்திகள் குருவிகள்
6. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்


என்னை அழைத்த விடாது கருப்பு மற்றும் நுனிப்புல் உஷா விற்கு நன்றி!



****************


****************

4 comments:

  1. நல்ல பதிவு....குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல...என்ற வரிகள் ஆயுதம் தூக்கும் அனைவராலும் யோசிக்கப்பட வேண்டியவை.

    ReplyDelete
  2. இந்த மிகச்சிறப்பான பதிவுக்காக உங்களுக்கு பலர் நன்றி சொல்லுவார்கள். சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இங்கே சொல்லவில்லை என்று மனம் வருந்தாதீர்கள்.
    நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  3. அழைப்பினை ஏற்றது நன்றி சகோதரரே.

    ஈழத்தில் இருக்கும் எனது சகோதரர்களை இன்றைக்கு நினைத்தாலும் என் மனசு வலிக்கிறது.

    என்றைக்கு அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறதோ? பேச்சுவார்த்தைகள் சாண் ஏறினால் முழம் அல்லவா சறுக்குகிறது!

    ReplyDelete
  4. நண்பரே!

    நல்லதொரு பதிவு, நீங்க ஆசைப்பட்ட கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன், நான் உங்களுடனே வந்து அக்குழந்தைகளுக்கு கதையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

    ஆறு பதிவுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. நேரம் கிடைத்தவுடன் பதிவு போடுகிறேன்.

    - பரஞ்சோதி

    ReplyDelete