Wednesday, February 13, 2008

Gabbeh -வானவில்லின் வண்ணங்களை போர்த்தியவள் அல்லது பூக்களில் இருந்து பறிக்கப்பட்ட நிறங்களின் மீது தூங்குபவள்.

படங்களின் கதாபாத்திரங்களைவிட அவர்கள் வாழ்ந்த இடம் சொல்லும் வரலாறுகளை , அந்தக் கதாபாத்திரங்கள் அவர்களுடன் என்னையும் கைபிடித்து அழைத்துச் சென்று அறியக் காட்டிய தருணங்கள் சில முறை வாய்த்தது உண்டு. கனவில் பல சமயம் ஆகாயத்தில் பறப்பது போலவும் , வானவில்லின் மேல் உரசிச் செல்வது போலவும் கண்டது உண்டு. அந்தக் கனவுகள் இன்னும் தொடர்கிறது என்பது தனிக்கதை.வாழ்க்கையில் எப்போதாவது திட்டமிடாமல் சொர்க்கங்களுக்குள் நுழைவதும் உண்டு.அப்படி நடந்த நிகழ்வுகளை பதிந்ததுவும் இல்லை. Spring,Summer,Fall,Winter...and Spring (http://www.sonyclassics.com/spring/shell.html) பார்த்துவிட்டு அந்த ஏரியில் சில மணி நேரம் அந்த கதாபாத்திரங்களுடன் தங்கியது போல உணர்வு ஏற்பட்டது உண்டு.

வெறுமனே கதாபாத்திரங்களை சுட்டிக் கொண்டு இருக்காமல் , அந்த கதா பாத்திரங்களின் வழியாக, அவர்கள் வாழும் இடம்,வாழ்க்கை முதலியவற்றை, அவர்களுடன் நானும் ஒரு சக பயணியாக மாறி , அவர்கள் என் கை கோர்த்து அந்த உலகிற்கு என்னையும் அழைத்துச் செல்லும் போதுதான் அந்த திரைப்படம் என்னளவில் நல்ல அனுபவமாக அமைகிறது அல்லது ஒன்றிப் பார்க்க முடிகிறது. படம் பார்த்து முடிந்தவுடன் எதோ ஒரு அதிசிய உலகுக்கு சென்று , உடனேயே சடாரென்று தூக்கி எறியப்பட்டு நிச வாழ்விற்கு வந்தது போன்ற உணர்வை பல படங்கள் எனக்கு கொடுத்து உள்ளன.

Gabbeh - என்பது ஒரு கார்பெட் என்று எளிதாகச் சொல்லிவிட்டு விலகிச் செல்ல முடியாது. மனிதர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தும் , மலர்களின் வண்ணங்களை தன்மீது பூசிக் கொண்டும், வரலாற்றை தன்னுள் தேக்கி வைத்து இருக்கும் ஒரு அழகிய Persian rug தான் Gabbeh - என்பது .ஒரு rug தனது கதையைச் சொல்வது போல் பின்னப்பட்டிருக்கும் , இந்த படத்தில் வரும் அந்த அழகிய பெண்ணின் பெயரும் Gabbeh .

இந்த கதையும், இதில் நடித்தவர்களும், படம் பிடிக்கப்பட்ட இடத்தின் அழகை நெய்ய உதவும் நார்கள் போலத்தான் பயன்பட்டு இருகிறார்கள். வண்ணங்களே தங்களை முன்னிறுத்திக் கொள்கிறது. அழகும், வண்ணங்களின கலவையும் கிறங்கடிப்பவை. இயற்கை வண்ணங்களே இந்த படத்தின் நாயகர்கள்.

Nomadic Qashqai என்ற ஈரானிய பழங்குடியினரின் வாழ்க்கையில் முக்கிய அங்கம்தான் இந்த Gabbeh என்றழைக்கப்படும் கார்பெட் . ஒரு காலத்தில் பல மைல்கள் இடம் பெயருவது என்பது இவர்களுக்கு சர்வசாதரணம்.வெயில் காலங்களில் Shiraz வடக்குப் பகுதியிலும், குளிர்காலங்களில் தாழ்வான மற்றும் கதகதப்பான நிலங்களுக்கும் ( Persian Gulf- southwest of Shiraz) இடம் பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். இந்தப் பழங்குடியினரின் பின்னனியில் சொல்லப்படும் அழகான கதைதான் Gabbeh. இவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

பொறாமைப்படத்தக்க இயற்கைச் சூழலில், சிறிய ஓடையில் அமிழ்ந்து செல்லும் கார்பெட் (Rug) -ன் நீர்ப்பாதையில் படம் ஆரம்பிக்கிறது. அந்த நீரோடையையும், அதன் இயற்கைச் சூழலையும் காட்டிய வண்ணம் அருகில் உள்ள ஒரு குடிசையில் இருந்து வரும் இரண்டு முதியவர்களின் அறிமுகத்தோடு Gabbeh நமக்கும் அறிமுகமாகிறது. Gabbeh என்பதே Persian rug . இங்கே அதன் வழியாக வரும் கதையின் நாயகியின் பெயரும் Gabbeh.

Gabbeh(rug) யார் அன்று நீரில் அலசுவது ? என்ற சின்ன விவாதங்களில் அந்த முதியவர்களின் பரஸ்பர அன்பும், அவர்கள் அந்த Gabbeh(rug) வின் மேல் கொண்ட அன்பும் (?) நமக்கு புரியவைக்கப்படுகிறது. Gabbeh(rug) இல் இடம் பெற்றிருக்கும் குதிரைமேல் செல்லும் இரண்டு சின்ன உருவங்களை நோக்கி , அந்த முதிய பெண் பேசுவது போல காட்சிகள் நகர ஆரம்பிக்கின்றன. முதிய பெண் அணிந்திருக்கும் நீல நிற உடை அந்த Gabbeh(rug) இன் வண்ணத்தை ஒத்து இருக்கிறது. அது ஏன் என்று நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, Gabbeh (Shaghayeh Djodat) என்ற அந்த அழகிய பெண்ணின் அறிமுகம்.

அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள். ஒநாயின் ஒலியின் வழியாகவே காதலன் அறிமுகப்படுத்தப்படுகிறான். எங்கோ ஒரு நிழலாக , ஒரு குதிரையின் மீது வரும் இந்த வாலிபன்தான் Gabbeh (Girl) -ன் உள்ளம் கவர்ந்த காதலன். ஓநாயின் ஒலியே இவர்களுக்கு இடையே இருக்கும் சங்கேத ஒலி. இவள் செல்லும் இடமெல்லாம் அவன் பின் தொடர்கிறான்.

இவர்களின் காதலை Gabbeh (Girl) அப்பா அங்கீகரித்தாலும், குடும்பத்தில் இருக்கும் 57 வயது uncle க்கு மணமான பின்னர்தான் இவளுக்கு திருமணம் என்றும் , அதை மீறினால் சுட்டுவிடுவதாகவும் சொல்லியுள்ளதால், அந்த ஓநாய் ஒலிக்கு இவளின் சிறு புன்னகையே பதிலாக இருக்கும். இவள் செல்லும் இடம் எல்லாம் அவன் வருகிறான் . படத்தின் இறுதிக்காட்சிகளில் இவள் , அவனைபோல சத்தமெழுப்ப முயற்சித்து விட்டுவிடுவது , இவள் சொல்ல நினைப்பதை சொல்லாமல் சொல்லும்.

இவளின் வழியாக காதல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் போதே, நமக்கு இயற்கையையும் அதன் வண்ணங்களையும் 57 வயது உள்ள முதியவராக(Abbas Sayah ) வரும் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இந்த uncle இன்னும் மணமுடிக்காத , மணம் முடிக்க பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கும் சுவராசியமான ஆள். இவர் அறிமுகம் ஆகும் இடம் நமக்கு வண்ணங்களை அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு வண்ணங்களைச் சொல்லிக் கொடுக்கும் இடமும், அந்த குழந்தைகள் ஆட்டின் கழுத்தில் கட்டி இருக்கும் மணியையே பள்ளிக்கு நேரம் அறிவிக்கப்பயன்படுத்துவதும் அழகை அழகாய்ச் சொல்லும் இடங்கள்.

இந்த uncle வழியாக Gabbeh(rug) தயாரிக்கப்படும் விதத்தை கவிதையாச் சொல்லி இருக்கிறார்கள் படத்தில். இயற்கையின் மலர்களில் இருந்து வண்ணம் எடுத்து , கொதிக்கவைத்து, wool க்கு வண்ணம் ஏற்றப்படும் காட்சிகளும், Gabbeh(rug) நெய்யப்படும் காட்சிகளும் படத்தின் பின்னனியை ஆக்ரமித்து நம்முடன் வந்து கொண்டே இருக்கும். ஒரு நீரோடையின் அருகில் , கவிதை பாடும் பெண்ணைக் கனவில் கண்டு , அவளைத் தேடி அலையும் uncle , ஒரு வழியாக அத்தகைய பெண்ணைக் கண்டு பிடிக்கிறார். அந்த இடத்தில் அவர்சொல்லும் கவிதைகள் எளிமையானவை இனிமையானவை.

இந்த நிகழ்வுகள் எல்லாம், Gabbeh (Girl) , முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட முதியவர்களுக்குச் சொல்லும் வண்ணமே கதை இயங்குகிறது. படம் முழுக்க ஈரானிய பாலைவனப் பகுதிகளையும் , மலர்களையும் நமக்கு யாராவது தந்து கொண்டே இருக்கிறார்கள். மலர்கள் இல்லாத , வண்ணங்கள் இல்லாத நிமிடம் கிடையாது.

57 வயது uncle க்கு மணம் ஆன பின்னாலும், தாயிற்கு பிறக்கப்போகும் குழந்தை மற்றும் பல காரணங்களால் Gabbeh (Girl) திருமணம் அவளின் தந்தையால் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருப்பதில், அவள் பின்னால் அந்த குடும்பத்தைப் பிரிந்து, அந்த ஓநாய் ஒலி இளைஞனுடன் செல்லப் போவதற்கான காரணங்கள் கட்டமைக்கப்படுகிறது. தனது தாயால் தொடங்கப்பட்ட Gabbeh (rug) நெய்து முடித்தவுடன் மிகுந்த சந்தோசம் அடையும் uncle-ம் , அந்தப் பெண்ணின் காதலுக்கு ஆதரவாக மாறிவிடுகிறார்.

அடுத்த இடப் பெயர்வின் போது, தன்னைத் தொடரும் ஓநாய் ஒலி இளைஞனுடன் , அப்பாவிற்குத் தெரியாமல் சென்றுவிடுகிறாள் இவள். செல்லும் போது அவளுடன் எப்போதும் இருக்கும் ஒரு Gabbeh(rug) யையும் எடுத்துச்சொல்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னே வரும் பாலைவன இரவுகள் கவிதையாய் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். குதிரையில் தப்பிச் செல்லும் இவர்களை, அப்பா உடனடியாகத் தேடிச் செல்வது நமக்கு , அந்த காதல் முடியப்போவதை உணர்த்தும்.

இரண்டு தோட்டாக்களின் சத்தத்தை அடுத்து, திரும்பி வரும் அப்பா, அவள் எடுத்துச் சென்ற rug -ஐ மட்டும் திரும்ப கொண்டுவருவார். அத்துடன் அந்த பாலைவனக் காட்சிகளும் , அந்த பழங்குடியினரின் கூட்டமும் மறைந்து, ஆரம்பித்த முதியவர்கள் இடத்திற்கு காட்சி மாறிவிடும்.

"அப்பா எங்களைக் கொல்லவில்லை, வேறு யாரும் இனிமேல் அவ்வாறு செய்யாவண்ணம் இருக்க சும்மா தோட்டாக்களை துப்பிவிட்டுச் சென்றுவிட்டார்" என்று Gabbeh (Girl) சொல்வதுடன் அந்த காதல் கதை முடியும்.

மறுபடியும், முதியவர்களிடம் வரும் கதை, அந்த முதியவர் ஒநாய் போல் கத்திக் கொண்டு அவரிடம் உள்ள Gabbeh(rug) ஐ அடித்துக் கொண்டு உனக்கு காதல் இல்லை என்று பேசுவது போல அமைக்கப்பட்டு இருக்கும்.


Gabbeh- Persian Movie இது டாக்குமெண்டரியாக , கார்பெட் (rug) துறை சார்ந்த நிதிஉதவியுடனும்,ஈரான் சுற்றுலா நோக்கிலும் எடுக்கப்பட்டது என்பது உபரித்தகவல்.

Gabbeh Script:
http://www.makhmalbaf.com/doc/gabbeh.doc

http://www.makhmalbaf.com/movies.php?m=7

IMDb- Gabbeh (1996)
http://www.imdb.com/title/tt0116384/

Gabbeh- Carpet
http://www.oldcarpet.com/gabbeh.htm

Spring,Summer,Fall,Winter...and Spring
http://naayakan.blogspot.com/2008/02/blog-post.html

Friday, February 08, 2008

வரும் வழியில் அந்த நீல நிற பூக்களைப் பார்த்தேன், நின்று நலம் விசாரிக்க முடியவில்லை

தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது.சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். ஒரு வேளை அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன். திரும்பிக்கூட பார்க்காமல் அந்த பூக்களுக்கு விடை கொடுத்தேன். அவை நாளையும் இருக்குமா என்று தெரியாது.

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.

எல்லோரும்வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.

பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.

நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும. எப்படி இருக்கிறீர்கள? என்று.