Monday, October 21, 2019

மயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி


கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஆரம்பித்த மையல் (crush) பலகாலம் போகவில்லை. இன்று இதை எழுத அமரும்போது பல நினைவுகள் வந்து போகிற‌து. மதுரையில் அலங்கார் திரையரங்கம் என நினைக்கிறேன். அங்குதான் திரிதேவ் (Tridev) பார்த்தேன். கூடைநிறைய பூக்களைக் கொடுத்து ஒன்றை எடுத்துக்கொள் என்றால் என்ன செய்வது? "ஓயே ஓயே" பாட்டு அப்படித்தான் இருந்தது. மூன்று இளம்பெண்கள் "அங்கிள்"களுடன் ஆடவைக்கப்பட்டார்கள். நான் இன்று அங்கிளாகிவிட்டேன் என்பது தனிக்கதை. 

அப்போதெல்லாம் "மாதுரி" இந்த அளவுக்கு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை. என் மனதில் அப்போது இடம் பிடித்தது "சங்கீதா" தான். "சோனம்" அந்தப்பாடலில் இருந்தாலும் அவ்வளவாக என்னைக் கவரவில்லை. திரிதேவ் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சென்னை "கேசினோ" (Casino) திரையரங்கில் பல ஃகிந்தி படங்கள் பார்த்துள்ளேன். ரங்கீலா படம் அங்கு வெளியானது என நினைக்கிறேன். அதை பார்த்து "ஊர்மிளா" மீது சிறிது மையல் வந்து போனது.

ஆனால் கல்லூரி காலத்தில் என் அறையில் இருந்த படம் Sangeeta Bijlani ன் படம்தான். பச்சைக்கலர் பாவாடை உடையில் இருக்கும் படம் இன்றும் நினைவில் உள்ளது. 1996 ல் Sangeeta Bijlani அசாருதீனை மமுடித்த போது அசாருதீன்மேல் வெறுப்பு வந்தது. அதே காலகட்டத்தில் பார்த்திபன் சீதா திருமணம் நடைபெற்று, பார்த்திபன் மீதும் வெறுப்பு வந்தது.கல்லூரிக்காலத்தில் வகுப்பறையில் , கணக்குப்பாடம் நடக்கும் போது, ஓயே ஒயே பாடலைப் பாடி ஆசிரியையால் வெளியில் அனுப்பப்பட்டேன். அதே ஆசிரியரை 20 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து மனம்விட்டு பேசிக்கொண்டோம் என்பது தனிக்கதை. என்னை மன்னித்ததோடு என்னுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

கல்லூரிக் காலத்தில் என் அறையில் சங்கீதாவின் படத்துடன் நான் வைத்திருந்த இன்னொரு படம் Andre Agassi ன் படம். 

இப்போது யாரவது Andre Agassi என்று தேடினால் மொட்டத்தலை Andre Agassi தான் வருகிறார். நான் அகாசியை விரும்பியது அவரின் டென்னிஃச் ஆட்டத்திற்காக அல்ல. அவரின் கூந்தல். ஆம் ஆண்களில் அழகான முடி வைத்திருந்தவர் அப்போது அவர்தான் ன்பது என் கணிப்பு. அவரைப் போலவே முடி வளர்க்க ஆசைப்பட்டு, கல்லூரி இம்சைகள், அப்பாவின் கெடுபிடிகள் என கூந்தல் வளர்க்க முடியவில்லை. ஆனால், கழுத்துக்குகீழேயும் முடி தொங்கும் வண்ணம் ஓரளவிற்கு வைத்து, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை அளவில் தேற்றிக்கொண்டேன்.


கல்லூரி முடித்து வேலைதேடி அம்பத்தூர் முதல் அம்பானியின் ரிலையன்சுவரை அலைந்து திரிந்த காலங்களில், "கூந்தல் ஒரு கேடா?" என்று முடிவெடுத்து காலம் ஓடிவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய கூந்தல் வளர்க்கும் ஆசையைச் சொன்னபோது முதல் எதிர்ப்பு என் மகளிடம் இருந்து வந்தது. சரி என்று தள்ளிப்போட்டுவிட்டேன்.

2020 ல் ஒன்றை புதிதாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து "சரி மயிரை வளர்ப்போம்" என்று 'முடி'வெடுத்துள்ளேன். சென்றவாரம் எனக்கு முடி திருத்தும் கசகஃச்தான் (Kazakhstan) பெண்மணியிடம், "கூந்தல் வளர்க்க ஆசைப்படுகிறேன். என்ன செய்யவேண்டும்? அதற்கு ஏற்ப வெட்டிவிடவும்" என்றேன். கடந்த இரண்டு வருடங்களாக இவர்தான் எனக்கு முடி திருத்திவிடுகிறார். அவர் சொன்ன ஆலோசனையின்படி இரண்டுமாதங்கள் வளர்த்துப் பார்க்கப்போகிறேன். பராமரிப்பு மற்றும் மற்ற சவால்களை வைத்து, கூந்தலின் நீளம் மாறும்.

எனது முடிவை மனைவி, மகளிடம் சொன்னேன். மகள் " அப்பா, I don't know you " என்று சொல்லிவிட்டாள். மனைவியும் "எப்படியோ போங்க" என்று சொல்லிவிட்டார். "பெண்கள் மட்டும்தான் கூந்தல் வளர்க்க வேண்டும் என்பது sexism" என்று தத்துவ விளக்கம் கொடுத்துவிட்டு, மயிறு குறித்தான சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.

கல்லூரிக்காலங்கள் வேறு. இப்போது உள்ள நிலையில் இரண்டு இஞ்ச் வளர்ந்தாலே எனக்கு தலையில் கல்லை வைத்தது போல உள்ளது. இருந்தாலும் முடி வளர்த்துப் பார்ப்போம் வந்தால் கூந்தல் போனால் மயிறு என்று இறங்கிவிட்டேன்.

நேற்றும் மழை பெய்தது:நான் இறந்துவிட்டால் இப்படிச் சொல்லுங்கள்

நேற்றும் மழை பெய்தது.
சன்னல் ஓரத்தில் கண்ணீராய் கொட்டி கவிதை பாடியது. மழைக்கும் எனக்குமான் உறவு அந்தரங்கமானது. காட்டில் நாங்கள் தனியாய் இருந்துள்ளோம். நடு இரவில் எனக்கு தாலாட்டுப் பாடியுள்ளது மழை. நாங்கள் இருவரும் உடல்தழுவி, நிர்வாணமாய் ஆறுகளில் விழுந்து கரைந்துள்ளோம். 

நேற்றும் அப்படியே மழை பெய்தது. என் வழக்கமான பாதையில் ஓட ஆரம்பித்தேன். குடை மட்டுமல்ல ஆடையும் மழைக்கு எதிரியே. 

சட்டையை கழற்றிவிட்டு, மெலிதான தூறலில் ஓட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மழையின்போதும் பாதைகள் புதிய காட்சிகளைத் தருகிறது. அன்று என்னமோ இறப்பு குறித்தான எண்ணங்கள் அதிகமாக வந்துபோனது. ஒருவேளை அன்று எனக்கு வந்த ஒரு செய்தியின் தாக்கமாக இருக்கலாம். அலுவலகத்தில் ஒருவர் (45+ வயது) புற்று நோயால் இறந்துவிட்டார். அதே சமயம், எனது அலுவலக நண்பர் (white) ஒருவரின் aunt 101 வயதில் இறந்துவிட்டார். 1918 ல் பிறந்தவர்  அவர். அவரின் புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்த போது ஒரு வரலாற்றைப் பார்ப்பது போல இருந்தது. அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, எனது இருப்பு குறித்தான சிந்தனைகளும் வந்து போனது.
**
"நல்லாத்தான் இருந்தாப்ல. தினமும் எக்சர்சைசு செய்வாப்ல. கறி கூட சாப்ட மாட்டார். சுத்த வெசிடேரியன்.அவருக்கே இப்படியா? என்னத்த வாழ்க்கை. என்ன செஞ்சு என்ன புண்ணியம்?" கேள்விப்படும் மரணச்செய்திகளில் எல்லாம், யாரோ ஒருவர் இப்படி அங்கலாய்ப்பது தொடருகிறது. சமீபகாலமாக கேள்விப்படும் மத்திய வயது மரணங்கள்,அதுவும் ஆணின் மரணத்தின் போது இது அதிகம் பேசப்படுகிறது. இப்பொழுதுதான் இப்படியான செய்திகள் அதிகம் வருவது போல இருந்தாலும், அகால மரணங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. என்றும் இருக்கும். இணையமும் செய்தித்தொடர்பும் வளர்ந்த நிலையில், செய்திகள் அதிகமாக‌ நம்மை வந்து சேர்கிறது அவ்வளவே.

 70 வயது அல்லது 80 க்கு மேலான மரணங்களும் உறவுகளுக்கு வலியானது என்றாலும், அது எளிதில் கடக்கப்படுவதன் காரணம், இறந்தவரின் நிறைவான வாழ்க்கை மட்டும் அல்ல. பொருளாதார ,வாழ்வியல் காரணங்களுக்காக அவரை நம்பி அவரின் குழந்தைகள் இல்லை என்ற ஆறுதலே அத்தகைய மரணங்களை எளிதாகக் கடக்க உதவுகிறது என எண்ணுகிறேன். 40 அல்லது 50 வயதில் ஒரு ஆண் மரணிக்கும்போது, மனம் சார்ந்த துன்பம்தாண்டி, அவர் விட்டுச் சென்ற பொருளாதர சிக்கல்கள் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும்.
**
சரியான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆயுளை நீடிக்கும் என்று யாராவது  நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்பது என் நிலைப்பாடு. வாழும் காலத்தில், உடல்நலத்தோடு சிறப்பாக வாழ இவைகள் உதவலாமே தவிர அதிக நாள் வாழ அல்ல. நான் நாளையே இறந்துவிடலாம். மைல் கணக்கில் ஓடும் நரம்புகளில் எங்காவது, ஏதாவது நடந்து, என் மூளை செயலிழக்கலாம். ஏதோ ஒரு உறுப்பு, ஏதோ ஒரு காரணத்தால் செயலிழக்கலாம். நான் சரியாகவே வாகனம் ஓட்டினாலும், யாரோ ஒருவர் என் வாகனத்தின்மீது மோதி என்னைக் கொன்றுவிடலாம். காட்டில் நடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்து, அதளபாதாளத்தில், கேட்க நாதியற்று புழுத்துப்போய் இறந்துவிடலாம்.

எந்தச் செயலும் அதிக நாள் வாழ உறுதிகொடுக்காது. ஆனால், பிழைத்து இருக்கும் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழலாம் என்று நாம் திட்டமிடலாம் அவ்வளவே.
நான் இறந்துவிட்டால்..
"எல்லாத்தையும் செஞ்சான். வாரம் 15 மைல்கள் ஓடினான். சமைச்சி சாப்பிட்டான். அப்படி இப்படி பேசினான். காடு மலையெல்லாம் சுத்துனான். ஆனா பாருங்க, 50 வயசுலேயே பொக்குன்னு போயிட்டான். என்ன வாழ்க்கை?" என்று சொல்ல சிலர் இருக்கலாம். நான் இறந்துவிடுவதாலேயே, வாழும் போது நான் செய்தவை எனக்கு பயனற்றைவையாகிப்போனது என்று யாராவது புலம்பி, அவர்களின் வாழ்வையும் கசந்துகொண்டால், அதை மறுத்து எழுத நான் இருக்க மாட்டேன்.

இப்படிச் சொல்லுங்கள்..
இதை நான் G+ ல் அடிக்கடி சொல்வேன். இங்கும் சொல்கிறேன். 

எனது இறப்புச் செய்திகேட்டால் , உங்களின் மதுக்கோப்பையை உயர்த்தி சொல்லுங்கள், "போறதுக்கு முன்னால நல்லா வாழ்ந்துட்டான்யா" என்று. ஏதாவது ஒரு புதிய‌ ஊரின் காஃபிக்கடையில் மழையில் நனைந்து கொண்டு காஃபி குடியுங்கள். எங்கேனும் ஒரு இடத்திற்கு தனியாக ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். 
பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு.
There are differences between being alive and living. Life is more than just breathing.

**
மழையில் திருடிய மலர்:உடெலெங்கும் பெய்யும் மழை

https://kalvetu.blogspot.com/2018/04/blog-post.html

Tuesday, October 08, 2019

நேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound


ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவில்லை. காரின் சாவியை பிடுங்கிய மறுவினாடி துண்டிக்கப்படும் குரல் தொடர்பை, அது சொல்லும் தகவலை இழக்க விரும்பாமல் அமர்ந்து இருந்தேன். நான் வசிக்கும் ஊரில், இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகும்  Fresh Air நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் Terry Gross. Pennsylvania மாநிலம் Philadelphia ல் உள்ள WHYY   (https://whyy.org/ ) என்ற வானொலி நிலையத்தால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா முழுமைக்கும் 624 வானொலி நிலையங்களில் NPR  (https://www.npr.org/) மூலம் கொண்டு செல்லப்படும் பெரிய நிகழ்ச்சி.


https://en.wikipedia.org/wiki/Fresh_Air
//As of 2017, the show was syndicated to 624 stations and claimed nearly 5 million listeners.//

**
“This Fresh Air I am Terry Gross”
இந்த ஒலியை கேட்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வந்து போகும் எனக்கு. இந்த ஒலி, பலரைக் கட்டிபோட்டுள்ளது அமெரிக்காவில்.

அரசிய‌ல்,சினிமா, இசை,புத்தகம் என்று இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். இது நேரடி ஒலிபரப்பு அல்ல. பதிவு செய்யப்பட்டு, வெட்டி ஒட்டி தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் ஒன்று. எது ஒலிபரப்பக்கூடாது என்று பேட்டிஎடுக்கப்படுபவர் சொல்கிறாரோ அது ஒலிபரப்பாகாது. அது போல, டெர்ரி குரோஃச் இதுதான், இப்படித்தான் கேள்வி என்று விதி வைத்துக்கொள்ளமாட்டார்.

எது வேண்டுமானாலும் கேட்பேன். ஆனால் கேட்கப்படும்போது, எதுகூடாது என்பதைச் சொல்லும் உரிமையை பேட்டிஎடுப்பவருக்கு கொடுத்துவிடுவார். அப்படி இருந்தும்,இவர் உரையாடலின்போது எழுந்து போனவர்கள் உண்டு.
**
இது ஏன் பலரால் கொண்டாடப்படுகிறது என்றால், டெர்ரி குரோசின் உரையாடும் திறமை. என்னை யாராவது நேர்காணல் செய்யவேண்டும் என்றால் நான் விரும்புவது இவராகவே இருக்கும் இந்த தேதியில்.விருந்தினர் எதிர்பார்க்காத கோணத்தில் கேள்வி கெட்டு சிதறடிக்கவேண்டும் என்பது இவரின் நோக்கமாக இருக்காது. ஆனால் இவரால் கேட்க்கப்படும் கேள்விகள், விருந்தினரையே அவரின் தெரியாத அல்ல அவர் எண்ணிப்பார்க்காத திசைகளில் திருப்பி செய்திகளைக்கொண்டு வரும்.

**
Radio is pure sound. No nods or wings or nudges என்பது இவரின் நம்பிக்கை. இதுவே இவரின் உரையாடல்களை சிறப்பாக்குகிறது. இவர் யாரையும் "நேர்"காணல் செய்ய மாட்டார். ஆம் நேர்கால் இல்லை. உரையாடுவது மட்டுமே. வானொலியில், நேயர்களுக்கு ஒலி மட்டுமே கடத்தப்படுவதால், இவர் பேட்டியெடுக்கும் யாரையும் இவர் நேரில் பார்த்து பேட்டியெடுக்க மாட்டார். அதுவே சிறப்பு.

அமெரிக்க அதிபராக இருந்தாலும், அல்லது பேட்டி கொடுப்பவர் ஃபிலடெல்பியாவில் WHYY வானொலி நிலையத்திற்கு அருகே இருந்தாலும், உரையாடல் நேரில் நடக்காது. டெர்ரி குரோஃச் அவருக்கான அறையில், மங்கிய ஒளியில் விரித்து வைக்கப்பட்ட புத்தகங்கள், எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் இருக்க, பேட்டியாளர் வேறு ஒரு அறையில் இருப்பார். அல்லது வேறு ஒரு ஊரில் ,மாநிலத்தில் இருந்து குரல் தொடர்பு மட்டுமே.

**
நாம் அனைவரும், சினிமாவை வெறும் வசனமாக‌ வானொலியில் , திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கேட்டு இருப்போம். "திருவிளையாடல்" & "விதி" பட வசனங்கள் நல்ல எடுத்துக்காட்டு. சினிமா பார்க்காமல் வெறும் வசனத்தை மட்டுமே, கூம்பு குழாய்களில் முதன் முறையாக கேட்பவரால் அதை முழுவதுமாக உள்வாங்க முடியாது. படத்தை திரையில் ஏற்கனவே பார்த்திருந்தால், வசனத்தோடு உங்களின் மனதில் நீங்கள் ஏற்கனவே பார்த்த காட்சிகள் ஓடி அதை நிறைவு செய்யும்.

**
"அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த அவளை, 'சோ'வெனக் கொட்டிய மழை அனைத்தது. அவளின் தலையில் இருந்து நழுவும் மயிர் கீற்றின் வழியே இறங்கி, கன்னம் தொட்டு, கழுத்தின் வழியே வழிந்து, இடைக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முலைக்காம்பு தொட்டு தேனாக மாறிவந்த மழைத்துளியை. தொட்டுவிட‌, காலிலிருந்த எறும்பொன்று இடைநோக்கி படையெடுத்தது........" நீங்கள் வாசிக்கும் கதையில் இப்படி ஒரு வர்ணிப்பு இருந்தால், உங்கள் மனது இதை காட்சிப்படுத்த என்ன செய்யும்?

புத்தகம் எழுதிய ஆசிரியர் கண்ட காடோ, அவள் யாரை நினைத்து அந்தப் பெண்ணை புனைந்தாரோ அந்தப் பெண் உங்கள் காட்சிக்கு வரமாட்டாள். மாறாக‌ நீங்கள் மெய்வாழ்வில் கண்ட ஒரு காட்டையும், பெண்ணையுமே உருவகப்படுத்தி கதையில் நகர்வீர்கள். முலையின் அழக‌றியாத சிறுவர்கள் இதை வாசித்தால், முழுச்செய்தியும் அவர்களுக்கு கடத்தப்படாது. அதனால்தான், எந்த ஒரு ஊடகமும், அது செய்தியைக் கடத்தும் தன்மையில் தனித்து நிற்கிறது.

எழுதிய கதை சினிமாவாக‌ காட்சிப்படுத்தும்போது அதில் வரும் காடும், பெண்ணும் நீங்கள் உங்கள் மனதிற்குள் பார்த்து இரசித்ததாக இருக்காது.. கதை எழுதிய ஆசிரியர் நினைவில் விரிந்த காட்சிகளும் கிடையாது. அது, அந்தப் பட இயக்குநரின் பார்வையில் விரியும் காட்சியாகும். பெண்ணாகும். மழையாகும்.முலையாகும். அதனாலேதான் புத்தகமாக படித்தவர்களுக்கு திரையில் ஏமாற்றம்.

**
நீங்கள் என்றாவது, யாருடைய பேட்டிகளின் YouTube நிகழ்ச்சிகளை, "காணொளி"யாக இல்லாமல், "ஒலி"யாக மட்டுமே கேட்டு இருக்கின்றீர்களா?

Lost in Translation என்பது போல, உங்களின் காதுகளுக்கு "ஒலி"யாக மட்டுமே வந்தடையும் "காணொளி" செய்தி முழுமையாக இருக்காது. 

நேர்காணலில், பேட்டி காண்பவருக்கும் பேட்டி கொடுப்பவருக்கும் நடக்கும் உரையால் என்பது, வெறுமனே "ஒலி" யாக இல்லாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் nods ,wings & nudges  உங்களுக்கு ஒலியாக கடத்தப்படமுடியாது தொலைந்துவிடும். ஏதோ ஒரு காரணத்திற்காக பார்வையால் பார்த்து, அவர்கள் சிரித்துக்கொண்டால்கூட, ஏன் சிரிக்கிறார்கள் என்ற context உங்களுக்குத் தெரியாது.

**

வானொலியில் "ஒலி"யை மட்டுமே நம்பியுள்ள தனது நேயர்களுக்காக நிகழ்ச்சி தயாரிக்கும் டெர்ரி குரோஃச், அவர் காணும் பேட்டிகளை 100% ஒலி உரையாடலாக மட்டுமே செய்வார். 

இது வேறுவகையிலும்அவருக்கு வசதியாக உள்ளது. முகம் பார்த்து கேட்கமுடியாத கடினமான கேள்விகளை,தொலைதூர உரையாடலாக இருக்கும் போது எளிதாக கேட்டுவிட முடிகிறது. மேலும், நிகழ்ச்சிக்கான குறிப்புகளை,  பேட்டியெடுக்கப்படுபவருடன் கவனம் சிதறா வண்ண‌ம், இவரின் தனி அறையில் பரப்பி வைத்துக் கொள்ளவும் வசதி.
**
ஒலிகோர்வையோ , ஒளிக்காட்சியோ அது யாருக்காக, எந்த வடிவத்தில் செல்கிறதோ, அந்த வடிவத்தில் தயாரிக்கப்படும்போதும், கேட்கப்படும்போதும் மட்டுமே, அங்கு சிந்தாமல் சிதறாமல் எல்லாம் கடத்தப்படும்.


Terry Gross. 
Peabody Award-winning interviews on arts & issues.

https://www.npr.org/programs/fresh-air/
https://twitter.com/nprfreshair

Thursday, September 26, 2019

I could have been a better father:வழிநெடுக எண்ணங்கள்

காலையில் Derrick Knob Shelter ல் இருந்து, மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை Garmin tracker மூலம் அனுப்புவிட்டேன். அன்று நடக்க வேண்டிய 15 மைல்கள் நடந்து, Siler Bald shelter அடையும் வரை அவனது நினைவாகவே இருந்தது. எனக்கும் என் அப்பாவுக்குமான உறவு ஒருபுறமும், எனக்கும் என் மகனுக்குமான உறவு ஒருபுறமும் நினைவுகளில் எழுந்து எரிந்துகொண்டு இருந்தது. நடக்கும் போதே அழுதுவிடுவேன். கத்தி அழுதாலும் கேட்க யாரும் அற்ற அப்பலாச்சியன் காட்டில், எனது அழுகை என்னமோ சத்தமற்ற கண்ணீராக வழிந்துகொண்டு இருந்தது.
**

குழந்தைகள் வளர்ப்பு பற்றி யாரும் தெரிந்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது இல்லை. On the job training போல அவர்களை வளர்த்தே வளர்ப்பு பற்றி அறிகிறோம். ஓரளவு நமக்கு புரிவதற்குள் அவர்கள் சிறகு முளைத்து வெளியேறிவிடுகிறார்கள். மகனை கல்லூரியில் விட்டு வந்தகையோடு என் அப்பலாச்சியன் பயணம் தொடங்க்கிவிட்டது. அவன் பிறந்தநாளின்போது நான் Smoky Mountain காட்டுக்குள் எங்கோ நடந்து கொண்டுள்ளேன். மகளும் மனைவியும் வீட்டில்.

மகளின் பிறந்த நாளின்போது நான் வீட்டுக்கு வந்துவிடும் திட்டத்தோடுதான் என் 23 நாள் பயணத்தை நான் அமைத்து இருந்தேன். மகனும் அந்த நாளின் கல்லுரியில் இருந்து வந்துவிட்டால், இருவரின் பிறந்த நாளையும் ஒரே நாளில் கொண்டாடிக்கொள்ளலாம் என்று திட்டம்.
**
எனக்கும் என் மகனுக்குமான உறவு அவனின் சின்னவயதில் வசந்தமாக ஆரம்பித்து, பிற்காலத்தில் இலையுதிர்கால மரங்கள் போல பொலிவிழந்து இருந்ததுண்டு. அவனின் 10 ஆம் வகுப்பு காலம், எங்கள் வீட்டில் புயல்போன்றது. குழந்தைகளை அவர்களின் டீன் வயதில் வழிநடத்துவது சிக்கலானது. First one is a throw away என்பார்கள். முதல் குழந்தை, பெற்றோர்கள் வளர்த்துப்பழகும் குழந்தையாகவே இருந்துவிடுகிறது. அதற்காக முதல் குழந்தையை வளர்த்த அனுபவம், இரண்டாம் குழந்தையை வளர்க்க உதவும் என்றால் அதுவும் இல்லை.

குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்கள் அளவில் தனித்துவமானவர்கள் என்பதால், ஒரு குழந்தையை வளர்த்ததில் கற்ற எதுவும் உதவுவது இல்லை.
**
மகனின் இந்த பிறந்தநாள் முக்கியமானது. 18 வயது ஆகிறது. கல்லூரியில் காலடி எடுத்து வைத்துள்ளான். சண்டைகளும் சச்சரவுகளுமிருந்தாலும், . பள்ளியில் பலர் அழைத்து பேசக்கேட்கும் அளவிற்கும், நண்பர்கள் மத்தியில் விரும்பப்படுபவனாகவும் வளர்ந்துவிட்டான். பள்ளியில் Founder's Award பெற்றான். கல்லூரியில் என்ன படிக்கப் போகிறான் என்பதும் அவனின் விருப்பம். "பிடித்ததைப்படி. வாங்கப் போகும் சம்பளத்திற்காக கல்லூரி வாழ்க்கையை வீணடிக்காதே. College education is an experience you should not study for future job & salary in mind" என்றுதான் சொன்னேன்.

அவன் விருப்பப்படியே நல்ல கல்லூரியில் சேர்ந்துவிட்டான். எனக்கு அதிகம் செலவு இருக்கக்கூடாது என்று அவன் federal loan எடுத்துள்ளான். எனக்கு தெரிந்து இங்கே என் நண்பர்கள் வட்டத்தில் இப்படி வங்கி கடன் வங்கியுள்ளது இவன் ஒருவனே. This brings the responsibility.

**
மகனைச் சந்திக்கும்போது அவனது பிறந்த நாளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தபோது கிடைத்ததுதான் இந்த காய்ந்துபோன மரக்குச்சி.Smoky Mountain ல் அவனின் பிறந்தநாளின்போது எடுத்தது. அதை என்ன செய்யவேண்டும்? அதில் என்ன எழுத வேண்டும்? என்ற எண்ணம் அப்போது ஓடியது. மகளின் பிறந்தநாளும் வருவதால் அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்ற சிந்தனையிலும் நடந்து கொண்டே அன்று இரவு தங்க வேண்டிய shelter  ஐ அடைந்தேன்.
**


Smoky Mountain ல் விடாது பெய்த மழையில் எனது hiking gear பாதிக்கப்பட்டு எனது பயணம் இரண்டு நாட்கள் தடைப்பட்டபோது, பயணத்தை இடையில் நிறுத்தியதன் ஒரு முக்கிய காரணம் குழந்தைகளின் பிறந்த நாள். 23 நாள் பயணம் முடித்து, வீடு வந்தால்தான், மகன் ஊருக்கு வரும்போது நான் வீட்டில் இருக்க முடியும். பயணத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அதிகப்படியான இரண்டு  நாட்கள் மொத்த நாட்களை 25 ஆக்கும் என்பதால், Hot springs என்ற‌ ஊரோடு பயணத்தை  முடித்துக்கொண்டேன்.
**வீட்டிற்கு வந்ததும், மகனுக்கும் மகளுக்கும் என் கைப்பட பரிசுப் பொருட்களை செய்தேன். மகனுக்கு எனது எண்ணங்களை எழுதி, அதை metal plate engraving செய்யக் கொடுத்த இடத்தில், அதை வாசித்துவிட்டு, அதன் பணியாளர்கள் என்னிடம் பேசிகொண்டிருந்தார்கள். கண் கலங்கியபடியே என் எண்ணங்கள், ஏன் அப்படி நான் என்று சொன்னேன். ஆம் நான் இப்போது எல்லாம் அதிகம் கதை சொல்கிறேன்.


தனிமைப் பயணங்கள் அதுவும் ஆளில்லா காட்டில் கரடிகள் பயத்திலும், புதிய மனிதர்களைச் சந்திப்பதும் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளது.

  • It's impossible to explain what I have witnessed.
  • Its impossible to explain what I have done.
  • Impossible to express what I have become.

*****
Dear ---,
I ran with you when you were a toddler. Somewhere along the run , I stopped and let you run alone. I know there were ups and downs in our relationship. As a father, I could have done better in making you feel happy at home. Trust me, I have tried but I was not sure what to do.

I know I didn't hand you a golden baton, but you ran with it well. Continue your successful run dude. I always miss you at home.

~I could have been a better father~

On your 18th birthday
Appa,

From "Appalachian Trail"
Derrick Knob Shelter,
Aug xx, 2019
*****

 


Monday, July 22, 2019

Being good is enough! In your own term.

ல்லது கெட்டது என்பது எதுவும் தீர்க்கமான முன்முடிவுகள் அல்ல. இடம் காலம் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக பிகினி உடை கடற்கரையோரம் சரியானது. ஆனால், ஒரு அலுவலகத்தில் சரியானது அல்ல. எனவே, இதுதான் சரி இதுதான் தவறு என்று சடங்கு போன்ற‌ பிறரின் அளவீடுகளின் வழியாகவே நம்மை எடைபோட்டுக்கொண்டு இருக்கக்கூடாது.

“Consistency is the virtue of an ass” -- Dr. Ambedkar

என்றாவது கோவிலுக்கு அல்லது பசனை மடங்களுக்குச் சென்றுள்ளீர்களா? சில மந்திரங்களயோ, சில பாசுரங்களையோ ஏதோ சில தகவல்களையோ அறிந்தவர்கள், உங்களிடம் பேசி உங்களின் பக்தி போதாத ஒன்று , இன்னும் மெனக்கிடனும் என்ற எண்ணத்தை விதைப்பார்கள். உங்கள் மனைவியோ அல்லது தந்தையோ " அவரை பாருங்க எவ்வளவு நல்லவரா இருக்கார்" என்று சொல்லக்கூடும்.

Dans ses écrits, un sage Italien
Dit que le mieux est l'ennemi du bien. - Voltaire
(a wise Italian says that the best is the enemy of the good)

உங்களுக்கு கோவிலுக்கு (I call that as a social gathering building in the name of adult Santa)  வருவது என்பது ஒருவகை தேவை அல்லது அதுவே போதுமானதாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒருவரைச் சந்திக்கும் போது, உங்களுக்கு போதுமானதாக இருந்த ஓன்று, இப்போது பற்றாக்குறையானதாக மாறி இருக்கும்.
பணம் பொருள் பதவி என்ற எல்லா விசயங்களில்லும் இதை பொருத்திப் பார்க்கலாம். இது வெறும் எண்ணங்களின் விளைவே. மெய் அன்று.
நல்லவர்கள் யோக்கியர்கள் ஞானிகள் யோக்கியவான்கள் என்று சொல்லிகொள்பவர்கள் மத்தியில் நான் இருக்கமாட்டேன்.  

'Don't Let the Perfect Be the Enemy of the Good'

எனது வெள்ளைக்கார நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்க நேர்ந்தது. சராசரி என்ற வாழ்வை வாழ்பவர் அல்ல. அவரது அறையில் தங்கியிருந்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டேன். " She's a traveler " என்றார். ஒரு 10 வருடங்களுக்கு முன் என்றால் என்னால் இதை புரிந்து உள்வாங்கவே எனக்கு நாக்கு தள்ளியிருக்கும். ஆனால் இப்போதுள்ள மனநிலையில் ஒன்றும் தோன்றவில்லை. தங்க இடம் கிடையாது. அவருக்கான பொருட்கள் என்று ஒரு சின்னைப் பை மட்டுமே. இப்படி பலரைச் சந்தித்து உள்ளேன். யாருமே என்னை குறைவானவனாக உணரவைத்ததே இல்லை. 

நான் நானாக இருப்பதை அவர்களும், அவர்கள் அவர்களாக இருப்பதை நானும் ஏற்றுக்கொண்ட தருணத்தில், எந்தவிதமான judgement ம் இருப்பது இல்லை. நிர்வாணமாக இருக்கும் resort களில் உடல் ஒரு பொருட்டே இல்லாமல் ஆகிவிடும்.

கஞ்சா அடிப்பவர் உங்களை குற்றவாளியாக உணரச்செய்யமாட்டார். ஆனால், நீங்கள் ஒரு குல்பி சாப்பிட்டால்கூட, பேலியோவாதி ஒருவன் உங்களை குற்றவாளிகளாக உணரச்செய்துவிடுவான்.

புது வருடத்தில் சில சபதங்களை எடுத்து, ஒருமாதம் கடைபிடித்து, ஒருநாள் கடைபிடிக்கமுடியாமல் போகும்போது don't be hard on yourself. 
குறைகளற்ற ஒன்று என்று எதுவுமே இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக நம்புவது, கடவுளை (Idea of god) இருக்கிறார் என்று நம்பும் முட்டாள்தனத்தை ஒத்தது.Perfection in its elusive glory is like a unicorn.

அப்படியே, எதையாவது ஒன்றை எடுத்து, better ஆக வேண்டும் என்று நினைத்தாலும் perfection ஆக வேண்டும் என்று நாட்களை தொலைக்காதீர்கள். எல்லா விளையாட்டுகளிலும் தவறுகளுக்கு அனுமதியுண்டு. Trying to make something perfect can actually prevent us from making it just good. 

அரசியல் குறித்த பேச்சின் போது, வழக்கமான கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஆரம்பித்த ஒரு நண்பரை கடுமையாகவே பேசிவிட்டேன். இதைக் கேட்டுக்கேட்டு சலிப்பாகிவிட்டது எனக்கு. நான் அவரிடம் கேட்ட சில கேள்விகள். தூய்மைவாதம் பேசும் யாரும் இதை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம்.

ஏன் கால்பந்தில் மஞ்சள், சிகப்பு அட்டை என்று உள்ளது? தவறே கூடது என்றால் ஏன் மஞ்சள் அட்டை உள்ளது?
நீங்கள் எப்போதாவது போக்குவரத்து காவலரிடம் டிக்கெட் வாங்கியுள்ளீர்களா? ஏன் உங்களால் தவறே செய்யாமல் இருக்க முடியவில்லை?
வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஏன் நீங்கள் serve செய்யும்போது நீங்களே கோட்டைவிட்டால் எதிரணிக்கு புள்ளிகள் கொடுப்பதில்லை. அவர்கள் விடும்போது மறுவாய்ப்பாக உங்களுக்கும் வருகிறது?
பிறரின் தோல்வியில் உங்களின் நியாயத்தை திணிக்காதீர்கள். ஏன் என்றால் அவர்களின் வெற்றியில் நீங்கள் மகிழ்வதும் இல்லை.  கலைஞர் செய்த ஏதாவது நாலு நன்மைகள் தெரியுமா? என்று கேட்டுவிட்டு நாற்பது நன்மைகளை பட்டியலிட்டேன். அதற்குப்பிறகு அவர் பேசவில்லை.

ஆம், absolute  தூய்மைவாதம் என்பது உங்களின் மன உறுதியை ஆட்டம காணச் செய்யவே. அவர்களுக்கு நடுவிரல் காட்டி நகர்ந்துவிடுங்கள்.

Don't let the so called good person to knock you down. Being good is enough!


Voltaire: “The best is the enemy of the good.”
Confucius: "Better a diamond with a flaw than a pebble without."
Shakespeare: “Striving to better, oft we mar what's well.”

Wednesday, June 12, 2019

"கிருசுணசாமி 2.0" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார்

ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தேன். பொம்மைத்தனமாக கார்ட்டூன் படங்களில் வந்து போய் கொண்டிருந்த ரசினியை, ரஞ்சித் இதில் நடிக்கவைத்துவிட்டார் என்பதற்காக, ரசினி ரசிர்கள், ரஞ்சித்தை திட்டிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது நான், இந்த ரஞ்சித் வெற்றிபெற வேண்டும் என்றே நினத்தேன்.

மனித‌ அவலங்களை குறியீடுகளாக வெகுசன சினிமாவில் கடத்தத்தெரிந்தவன் மிக அவசியம். அதுவும், ரசினி போன்ற பெரிய ஒலிபெருக்கி வாயிலாக சொல்லப்படும் சின்ன செய்திகளும், அதிக மக்களைச் சென்றடையும். ஆம்,சினிமா வலிமையான ஒன்று.

காலா என்ற படம். அதே ரசினையை வைத்து, அதே ரஞ்சித் எடுத்தார். அதையும் ரஞ்சித்திற்காகவே பார்த்தேன். படு குப்பையான ஒன்று. தன் இலக்கை மறந்துவிட்டார் ரஞ்சித் அல்லது புதிய இலக்கை வகுத்துக்கொண்டார் என்றே எனக்குத் தோன்றியது.

"ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்"
"ரசினி இனிமேல் ரஞ்சித் படத்தில் நடிக்கக்கூடாது" என்றெல்லாம் "ரசினி காவடிகள்" கூவ ஆரம்பித்துவிட்டார்கள். இதில் குறிப்பாக அய்யர் & அய்யங்கார் சாதி வெறியர்கள், "ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்" என்று கொதித்தார்கள். அவர்களின் கவலை,  ரசினி தோற்றுவிடுவாரோ என்று அல்ல. அவர்களின் intent ,"இப்படி ரசினி இவருக்கு ஒலிபெருக்கியாய் இருந்தால், எங்கே ரஞ்சித் வென்றுவிடுவாரோ?" என்ற கவலையே. 

**
ரசினி காசுக்கு நடிக்கும் ஒரு நடிகர். தனக்கு காசு கொடுத்து, யார் நடிக்கக்கூப்பிட்டாலும் போகும் சந்தையில் இருப்பவர். ஒரு கதையில் நடிக்க சரி என்று ஒப்பந்தம் போட்டபிறகு, இயக்குநர் சொல்வதை நடித்துக் கொடுக்க வேண்டிய தொழிலாளி ஒரு நடிகன். படம் என்றுமே இயக்குநரின் படம்தான். மேலும் காசு கொடுத்து ஏமாற்றிவிட ரசினி ஒன்றும் சிறுபிள்ளை அல்ல. நியாயமாக கொடுக்கவேண்டிய வேண்டிய வாடகைப்பண‌த்தையே , "கொடுக்க முடியாது" என்று வழக்குப்போட்டு இழுத்தடிக்கும் குடும்ப பாரம்பரியம் கொண்டவர் அவர்.

கலையுலகில் ரஞ்சித்தின் வெற்றி அவசியமான தேவை, என்பது என் நிலைப்பாடாகவே இருந்தது. அதற்கு ஒரு காரணம்,அந்த பணத்தை ரஞ்சித்முதலீடு செய்த Casteless Collective போன்ற முயற்சிகள். ரஞ்சித் ரசினி என்ற பொம்மையை வைத்து சம்பாரிக்கும் பணம், இப்படியான நல்ல முதலீடுகளாக ஆவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
**

ரஞ்சித்திற்கு திராவிட & பெரியாரிய ஒவ்வாமை உள்ளது என்பதை நான் ஆரம்பத்துலேயே கணித்துவிட்டேன். சீமான் ஒரு மக்கு என்பதை, அவரின் ஆரம்ப காலத்திலேயே கணித்து, சக பதிவர் ஒருவருடன் நீண்ட உரையாடல் நடந்தது. 

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html
**
ரஞ்சித் பிற்காலத்தில் ஒரு சீமானாக மாறுவார் என்ற பயம் எனக்கு உள்ளூர இருந்தது . ரஞ்சித் மறந்தும் , 2019 பாராளுமன்ற தேர்தலில் திருமாவிற்காக வாக்கு கேட்டு ரோட்டில் இறங்கவே இல்லை. திருமாவின் வெற்றி இழுபறியாக இருந்து, அனைவருமே கவலையில் இருந்தபோது, ரஞ்சித் எதுவும் பேசவில்லை. வெற்றி அடைந்ததும், சாதி அடையாளத்தை தூக்கிக்கொண்டு தெருவிற்கு வந்து வாழ்த்துச் சொன்னார். அதே சமயம், அவர் மறந்தும் ஆ.ராசாவை வாழ்த்தவில்லை. ஏன் என்றால் ரஞ்சித்தின் திமுக திராவிட ஒவ்வாமை. 

ரஞ்சித்தின் தற்போதைய பேச்சு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அவர் சீமானையும் தாண்டி, "கிருசுணசாமி 2.0" ஆக மாறிவிடுவாரோ என்ற பயம் இப்போது எனக்கு வந்துள்ளது.

"உன் கடவுளைத் தின்கிறேன்" என்கிறார். மகிழ்ச்சி கொண்டாடப்படும் புனிதத்தை, தன் உணவை வைத்து தன்னை இழிவுபடுத்தும் கூட்டத்திற்கு, "உன் கடவுளையே தின்பவன் நான்" என்கிறார். சரியானதே. ஆனால், இதுதாண்டி இவரின் மற்ற சில பேச்சுகள் இவரை வெளிப்படுத்துகிறது.


"எனக்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. அடிப்படையில் நான் கலைஞன். பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்." -- ரஞ்சித்

ஒரு சாதியில் ஒரு மதத்தில் ஒரு வர்ணத்தில் பிறந்ததாலேயே ( Just being born into a caste/varnam) எனக்கு சில திறமைகள் வந்தது என்று நம்புவது பார்ப்பனிசம். சனாதன வர்ணம் என்பது, பிறப்பின் அடிப்படையில் சிலவற்றை பிரித்து, தீண்டாமை ( Discrimination) பாவிக்கும் ஒன்று. Fascism,Racism, Nazisim வரிசையில் சனாதன வேத மததின் (aka Hindu) கொடை இந்த Parppanism என்ற பிறப்பின் அடிப்படை தீண்டாமை ( Discrimination) 

நான் அய்யராக/அய்யங்காராக பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் சிலைகள் உள்ள கட்டிடத்தில் கருவறை பூசை செய்பவன் நான்.
நான் வன்னியராக, தேவராக (முக்குலத்தோனாக‌) பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் நான் ஆண்ட பரம்பரை"
நான் பறையனாகப் பிறந்தேன்,  பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்."

இந்த மூன்றிலும் தெரிவது பார்ப்பனிச அறைகூவல்தான்.

ரஞ்சித்திற்கான கேள்வி?
பொதரவண்ணார் (புதிரை வண்ணார்) என்ற ஒரு சாதி உள்ளது. அது பறையர்களுக்கு துணி வெளுக்கும் சாதி. ஆம், அவர்கள் ஆண்ட பரம்பரைக்கோ, அய்யர் பரம்பரைக்கோ துணி வெளுப்பவர்கள் அல்ல. பொதரவண்ணார் சாதி, ஆண்ட பரம்பரை, அய்யர் பரம்பரையின் அழுக்கு பீத்துணிகளைக்கூட வெளுக்க தகுதியற்றவர்கள். ஏன்,கண்களால்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கீழான நிலையினராம்.

"பிறவி பறைக்கலைஞரான" ரஞ்சித் போன்றோரின் அழுக்குத் துணிகளை, வெளுத்து வெள்ளாவி வைக்கவென்றே பிறந்தவர்கள் பொதரவண்ணார்.
உங்களின் "பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்" என்ற சனாதன வர்ண தியரிப்படி , பொதரவண்ணார் பிறப்பின் அடிப்படையில், உங்கள் அழுக்குத் துணிகளை வெளுக்கப் பிறந்தவர்களா என்ன?


"பிறப்பால் பறை அடிக்கும் கலைஞன்" என்று பறைய இனத்திற்கு ஆள் சேர்க்கும் ரஞ்சித்திற்கு, அதே பறையர் இனம், சக்கிலியர் இனத்தின் மீதும், பொதரை வண்ணார்களிடமும் காட்டும் தீண்டாமை தெரியுமா? 

இவர் பிறப்பால் பறை கலைஞர் என்று ( Just being born into a caste/varnam)  இவருக்கு ஒரு தகுதியைக் கொடுக்கிறது என்றால், சக்கிலியருக்கு just being born into a caste/varnam பீயள்ளவும், பொதரை வண்ணாருக்கு just being born into a caste/varnam பீயள்ளிய சக்கிலியருக்கும் , பறை அடிக்கும் பறையருக்கும் துணி துவைக்கும் தகுதியைக் கொடுக்கிறது என்றுதானே சொல்கிறார் இவர்? 

அதாவது சனாதன வேத மதம்(aka இந்து) சொல்லும் வர்ணாசிரம தீண்டாமை அடுக்கை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்? 
**
பொதரை வண்ணார்களின் வாழ்க்கையை,அவர்களுக்கு பறையர், சகிலியர் இனம் கொடுக்கும் தீண்டாமையை அருகில் இருந்து பார்த்தவன் நான்.
அய்யர்/அய்யங்கார்களுக்கு கவுண்ட‌ர், வன்னியர், பறையர், பள்ளர், பொதரவண்ணார் அனைவருமே சூத்திரர்களே. ஆனால், இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் , பிறப்பால் நான் "இவன்" என்று கூவும்போது, இவர்களின் உள்ளிருக்கும் பார்ப்பனிசம் வெளிவருகிறது.
அய்யர்/அய்யங்கார்கள் வைசிய,சத்ரிய,சூத்திரர்களிடம் காட்டுவது பார்ப்பனிசம். வைசிய,சத்ரிய,சூத்திரர்கள் அவர்களுக்குள் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர்,  just being born into a caste/varnam  எனக்கு ஒரு தகுதியை கொடுக்கிறது என்பதும் பார்ப்பனிசமே.

"கொடிய பார்ப்பனிசம்" எது என்றால்  பறையர் & சக்கிலியர்கள் தனக்கும் கீழ் ஒரு அடிமை சாதி உள்ளது என்று கடைசிக் கட்ட  பொதரவண்ணார்களை மிதிப்பது.

**
ரஞ்சித் வரலாறு தெரிந்தவர் என்று இவர் என்று நினைத்து இருந்தேன். மக்கு சீமானாகி, இப்போது குப்பை கிருச்ணசாமி 2.0 ஆகிவிட்டார். நலங்கெட புழுதியில் விழுந்து பொஉரளும் வீணையாகவே நினைக்கிறேன் இவரை. வருத்தமாய் உள்ளது.

திராவிடம் = சமூகச் சமநிலை
ஆரியம் = சனாதன வர்ண discrimination.

ரஞ்சித், திராவிடம் & பெரியாரை ஏற்காதவர். அது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அவருக்கு எதிரி ஆரியமா அல்லது திராவிடமா என்று அவர் சொன்னால் நல்லது.  சினிமாவில் ரசினி போன்ற மனிதர்களின் வாய்ப்பிற்கான சமரசமாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், பிறப்பின் அடிப்படையில் தனக்கு ஒன்று வந்தது (just being born into a caste/varnam  ) என்று சொல்வது அம்பேத்காரின் அரசியல் அல்ல. அம்பேத்கர் நிச்சயம் உங்களை ஏற்கமாட்டார்.

**
"சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறீர்களே?" என்று சீமான்/கிச்சாத்தனமான கேள்வியை வைக்கிறார் ரஞ்சித்.

ஓட்டரசியல் குறித்து எதுவும் தெரியாத தற்குறியாகவே உள்ளார் இவர். ஓட்டரசியல் கடுமையான சமரசங்களைக் கொண்டது. திராவிடம் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியான கட்சியில் இருக்கும் தலித் தலைவர்களை நினைத்துப் பார்க்கலாம் இவர்.  திமுக‌ ஆ.ராசா  & திமுக‌ கூட்டணியில் இருக்கும் திருமா. இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. 

அம்பேத்கர் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டவர். அதை எதிர்த்து அழிச்சாட்டிய நாடகம் ஆடியவர் காந்தி. "காந்தி செத்தாலும் பரவாயில்லை, உங்கள் இரட்டை வாக்கு கோரிக்கையில் இருந்து பின் வாங்காதீர்கள்" என்று , அம்பேத்கருக்குச் சொன்னவர் பெரியார்.

இன்று தனித்தொகுதி மட்டுமே உள்ளது. ரஞ்சித்தின் நுனிப்புல் அரசியல், அதற்கும் வேட்டு வைத்துவிடும்போல உள்ளது. அருந்ததியினரை முன்னேறியவர்களாக ஆக்கச் சொல்லி, கிச்சா தூதரகம் முன் போராடிய கூத்தாக உள்ளது இவரின் புரிதல்.

**
சமூகத்தில் சாதி உள்ளது. அம்பேத்கர் சொன்னது போல, வர்ணம்/சாதி என்பது கண்ணுக்குத் தெரியும் சுவரல்ல இடித்து விட்டு வெற்றியைக் கொண்டாட. அது மக்களின் மூளையில் இருக்கும் அழுக்குச் சிந்தனை. அப்படியான சமூகத்தில், சாதி பார்த்துத்தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது.

பெரும்பான்மை அரசியல் ஒரு கொடிய சமரச விளையாட்டு. அதிகாரத்தை பெற சில விளையாட்டுகள் தேவை. Absolute தூய்மைவாதம் தேர்தல் அரசியலில் சாத்தியமில்லை.
ஆனால் யார் பேசுகிறார்கள்? ஏன்? என்ற கேள்விகள் முக்கியம். 

கனிமொழி, முத்துராமலிங்கம் சிலைக்கு மாலைபோடும் intent என்னவாக இருக்கும்?
அப்படியான கட்சியில் கூட்டணியில் இருக்கும் திருமாவின் intent என்ன?
சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்திய கலைஞரின் intent என்ன?

இதுதான் நமது கேள்வியாக இருக்கவேண்டும். சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தி, பெற்ற வெற்றி & அதிகாரமே இன்று இவ்வளவு சீர்திருத்தங்களுக்கு காரணமாய் உள்ளது. பெண் சொத்துரிமை முதல், தேவதாசி ஒழிப்பு தொட்டு இன்றைய "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம" சட்டம் வரை, சாதி பார்த்து திமுக நிறுத்திய அதே அரசியல் வெற்றியின் பயன்களே. வெறுமனே மேம்போக்காக சாதி பார்த்து நிறுத்துகிறீர்களே என்பது 'சீமான்'தனம்.
**
தம்பி ரஞ்சித், திராவிடமோ அல்லது அரசியல் அமைப்பான‌ திமுகவோ வளரவேண்டும் என்ற நோக்கில் விமர்சிக்கவில்லை. ஏதோ ஒரு வன்மத்தில்,அடிமரத்தை வெட்ட பார்க்கிறார் கிளையில் அமர்ந்துகொண்டு. பெரியார், அவரின் தம்பிகள் அதிகாரத்தில் இருப்பதை கொண்டாடியவர். தம்பிகள் வெல்ல வேண்டும் என்று விரும்பியவர். விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் intent தம்பிகளின் தோல்வி அல்ல. ரஞ்சித் திருமாவிற்கு ஓட்டு கேட்டாரா என்ன? ரஞ்சித் கிருச்ணசாமியாக வளர்கிறார்.

திராவிடத்தின் சமூகச் சமநீதிக்கான பாதை is not a project with an end date. It's a process.அதிகாரம் இல்லாமல் சாத்தியமே இல்லை

தம்பி ரஞ்சித்திற்கு கேட்கும் உரிமை உள்ளது. தடியெடுத்த பாட்டன் பெரியாரும், படித்த பாட்டன் அம்பேத்காரும், அண்ணாவும், கலைஞரும் அந்த உரிமையை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளார்கள். ஆனால், உரிமை மீட்டவனையே விமர்சனம் என்ற பெயரில் அடிப்பது சரியல்ல. சேர்ந்து பயணிப்பது அவசியம்.

Tuesday, March 19, 2019

2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது

1. வெளியுறவுக் கொள்கை முடிவுகளில், அடுத்த நாட்டுடன் கடல், நில எல்லையைப் பகிரும் மாநிலங்களின் கருத்து முதல் நிலையில் இருக்க வேண்டும். State inclusive decision on foreign policy. State interest first.

2. கவர்னர் &சனாதிபதி பதவிகள் நீக்கப்பட வேண்டும். State representative union govt.ல், கவர்னர் என்பது conflict of interest. Parliament (இரு சபைகளும்) approve செய்த மசோதாவை சனாதிபதி காலம் தாழ்த்துவது conflict of interest.

3. கல்வி என்பது மாநிலங்களின் உரிமையாகவே இருக்க வேண்டும். மத்திய அரசு பரிந்துரை மட்டுமே செய்யலாம். இறுதி முடிவு அந்த மாநில சட்டசபையின் முடிவாகவே இருக்க வேண்டும். NEET, 5th, 8th exam போன்ற குளறுபடிகள் உடனே களையப்பட வேண்டும்.

4. கடவுச்சீட்டு(passport) ஆங்கிலத்துடன் அந்த அந்த மாநிலங்களின் மொழி அட்டையில் இருக்க வேண்டும். நாட்டைவிட்டு செல்லும் போது பயன்படும் ஆவணத்தில் இந்தி தேவையற்றது. பார்வையற்றவர்களுக்கு Brille எழுத்துகள் அட்டையில் இருக்க வேண்டும்

5. இரயில் போக்குவரத்து என்பது மாநில மக்களின் அக்கறைகொண்ட  மண்டலங்களாக இயங்க வேண்டும். அந்த அந்த மாநிலங்களின் மொழி முதன்மையாகவும்,  இரண்டாவது ஆங்கிலமாகவும் மூன்றாவது அந்த மண்டலம் அமைந்துள்ள கூட்டு மாநிலங்களின் விருப்ப மொழி.

6.மாநிலத்தின் தலைமை மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் மத்திய துறை அதிகாரிகள்,அந்த அந்த மாநிலத்து அதிகாரிகளாக இருக்க வேண்டும். 70%அந்தந்த மாநில மக்களும்30% பிற மாநில மக்களும் இருக்கலாம் போன்றதொரு State represent சட்டம் must

7. India is a union of states. மாநிலங்களுக்கு அரசு இலச்சினை (state seal) வாழ்த்துப்பாடல் (State Anthem) உள்ளது போல, மாநில கொடிகள் குறித்தான சட்டம். தேசியக் கொடி , மாநிலக் கொடியை விட இரண்டடி உயரமாக பறக்கவிடவேண்டும்.

8. நதிநீர் பங்கீடு குறித்தான சட்டம்.  இதை ஒரு living document ஆக இருக்குமாறு. அதாவது வறட்சி காலத்தில் என்ன செய்வது , வெள்ளம் வரும்போது என்ன செய்வது போன்ற வழிகாட்டுதலுடன்.

9. மத்திய அரசின் மானியங்களில் (சமையல் எரிவாயு) நடந்த குளறுபடிகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.

10.கைரேகை, கண் retina , பெயர், முகவரி என்று அனைத்தையும் ஒரு அட்டையிலும் ஒரு database லும் வைத்திருக்கும் ஆதார் ஒரு அழிவுக்கான பார்முலா. ஆதாரை அழித்துவிட்டு,PAN , Voter # என்று தனியாக வைத்திருக்கும் முறைக்கு திரும்ப வேண்டும்.

11. பிறப்புச் சான்றிதழ் தவிர பாஃச்போர்டிற்கு எதுவும் தேவை இல்லை. வீட்டு முகவரி மற்றும் PAN# தவிர வங்கிகளுக்கு எதுவும் தேவை இல்லை. எல்லாவற்றையும் அனைவரும் கேட்கும் முறையை மாற்ற வேண்டும். டிசிட்டல் காலத்தில் இது security issue.

12. வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநித்துவம் MP க்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் உண்மையாக இல்லை. சின்ன மாநிலங்களுக்கு இது அநீதி.  Rajya Sabha பிரதிநிதித்துவத்தை அமெரிக்க செனட் போல அமைக்க சட்டம். அனைத்து மாநிலங்களுக்கும் இரண்டு (Rajys Sabha)  உறுப்பினர்கள் மட்டுமே irrespective of their MLA count in state assembly.

13. பல்கலைக் கழகங்களில் ஆளுநரை வேந்தராக வைக்கும் மரபு தேவையற்றது. மாநில அரசு நடத்தும் பலகலைக்கு.அந்த மாநில கல்வித்துறை அமைச்சரே வேந்தர். தனியார் பல்கலை இருக்கும் மாநிலத்தில் அந்த மாநிலத்திற்கு கட்டுப்பட்டது.

14. மாநில உயர்நீதி மன்றம்  தொடங்கி அதற்கு கீழே உள்ள நீதி அமைப்புகளில் அந்த மாநில மொழியே முதன்மை மொழி என்ற சட்டம். தலைமை நீதிபதி அந்த மாநிலத்தவர் அந்த மாநில மொழி தெரிந்தவர் என்ற சட்டம்.

15. பேச்சுரிமை என்பது even if you get offended I can say what I want என்று இருக்கவேண்டும்பத்திரிக்கை சுதந்திரம். Hate crime என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. குடிமகன் அரசாங்கத்தை , நீதிமன்றத்தை விமர்சிக்க உரிமை வேண்டும்.

16. இயற்கைவளம் , கனிம வளம் போன்ற கொள்கை முடிவுகளில் அந்தந்த மாநிலங்களேஇறுதி முடிவை எடுக்க வேண்டும். தேசிய நலன் என்ற போர்வையில், மாநில வளங்களைச் சூறையாடுவதை தடுக்க சட்டம்.

17. தேசியப் பூங்கா என்பது.மரம் காடு மட்டுமல்ல. பரந்த கடற்கரையும் மீன் பிடி தொழிலும் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கி கடல்சார் பாதுகாப்பு திட்டம், புவி வெப்பமயமாதல் குறித்தான தொலைநோக்கு திட்டங்கள்.

18. சமூகச் சமநீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மக்களை வர்ணம் பிரிக்கும் புத்தகங்களை குறித்தான விவாதமும், மத அமைப்புகள் நடத்தும் மேளாக்கள், நதிச் சீர்கேடு போன்றவற்றிற்கான வழிகாட்டும் சட்டங்களும் அவசியம்.

19. கட்சிகளுக்கு தனிநபர், தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பணம் வெளிப்படையாக இருக்க வைக்கும் சட்டம். Make every paisa accountable.

20. இந்தியா ஒரு துணைக்கண்டம். அதன் நடுவண் அரசு என்பது Union of State என்பது சொல்லிலும் செயலிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

https://twitter.com/kalvetu/status/1098594789480648711

Friday, March 15, 2019

சட்டெனத் திரும்பும் வளைவுகள்: பஞ்சாலைகளுடன் நின்றுவிட்ட சுவாசம் Franklinville,NC

வளைவுகள் என்றும் அபாயகரமானது. ஆச்சரியங்களை தேக்கி வைத்துள்ள, பள்ளம் மேடுகளைக் கொண்ட வளைவுகள், அலாதியானதும்கூட. அன்றும் அப்படித்தான். அலுவலகம் செல்லும் வழியில், ராம்சேர்(Ramseur) (ராமேசுவரம்?)  தாண்டி, வலதுபுறம் 'கைகாட்டி' காட்டிய ஊருக்குள் திரும்பினேன்.

ப‌யணம் என்பது, கண்டம் விட்டு கண்டம் தாண்ட வேண்டும் என்பது அல்ல. என் ஊரிலேயே நான் செல்லாத தெருக்களும், பார்க்காத மனிதர்களும் பல. தினமும் ஒரு புதிய பாதையில் செல்வதே புதிய பயணம் தான். உள்ளமும் உடலும் புதிய பாதையில் விழித்துக்கொள்ளும்.பழகிய இடங்களில் மூளைக்கு வேலை இல்லை.

Muscle memory என்று சொல்வார்கள். பழகிய இடங்களில் அது வேலையைக் காட்டும். மூளை ஓய்வெடுக்கும்.
**

"ஃபிராங்ளின்வில்" (Franklinville) என்ற ஊரை நான் அலுவலகம் செல்லும் பாதையில் உள்ள கைகாட்டி மரத்தில் பார்த்தது தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை என்னிடம் அப்போது. சட்டெனத்திரும்பி, சில மைல்தூரம் சென்றிருப்பேன்.இடிபாடுகளுடன் கூடிய, செடிகள் மண்டிய கட்டிடம் வரவேற்றது. அதன் அருகில் உள்ள ஒரு கார் ரிப்பேர் கடையில் சில தலைகள் தென்பட்டது.

ஒரு ஊரின் முகப்பே அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடும். "ஃபிராங்ளின்வில்" ஊர் சோம்பலுடன் காட்சி அளித்தது. எந்த ஆரவாரமும் இல்லை. ஏன், மக்களின் நடமாட்டம் இல்லை.
**

முக்கிய வீதி என்ற வீதியில் ஒரே ஒரு கடை இயங்கிக்கொண்டு இருந்தது. அதுதான் அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு உணவகமும்கூட‌. தயக்கத்துடனே உள்ளே நுழைந்தேன். "வழிதவறி வந்துவிட்டானோ இவன்?" என்றவாறு தலைகள் திரும்பியது. கிராமத்து மணம் நிரம்பிய கடை. உள்ளூர் மனிதர்கள் உள்ளே. அவர்களின் உடைந்த ட்ரக்குகள் வெளியே.

சங்கிலித் தொடர் உணவங்களில் இருப்பதுபோல பழக்கமான மெனு எதுவும் இல்லை. கல்லாவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், சமையல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களும் இருந்தார்கள்.என்ன கேட்பது என்று தெரியாமல், "நான் அகறி (No meat) .எனக்கு முட்டை மற்றும் காய்கறி கலந்து, ஆம்லேட் மாதிரி ஏதாவது செய்துதர முடியுமா?" என்றேன். தன்னிடம் இருக்கும் காய்கறிகளைச் சொல்லி, அது போதுமா என்று கேட்டு எனக்கான உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்.
**

1847 பதிவு செய்யப்பட்ட இந்த ஊரின் மக்கள் மன்றம் (Town Hall ) ஒரு பாழடைந்த கட்டடம்போன்ற‌ ஒன்றில் இயங்கி வருகிறது. அதன் பின்னால் நூலகம். அதை ஒட்டிய இன்னொரு பக்கம்தான் இந்த ஊரின் ஒரே ஒரு உணவகமான இந்த Franklinville Restaurant உள்ளது. எனக்கான சமையல் ரெடியாகிகொண்டிருந்தது. காத்திருக்கும் நேரத்தில் அங்கு வாங்கிய காஃபியை, கடைக்கு வெளியில் வந்து அந்த ஊரின் காற்றையும் சேர்த்து உறிஞ்சினேன்.
**

வடக்கு கேரொலைனா மாநிலம் புகையிலைக்கும், பஞ்சாலைக்கும் பெயர் பெற்றது. பஞ்சாலைத் தொழிலின்போது கம்யூனிசம் இருந்திருக்கிறது இந்த மாநிலத்தில். ஆலைதோறும் கூட்டம் போட்டு, தொழிற்சங்கங்களை வளர்த்தவர்களின் வரலாறு உண்டு இங்கே.

முக்கியமான திரைப்படம் -Norma Rae (1979)
https://www.youtube.com/watch?v=X8ulYIVcCeY

இந்த மாநிலத்தின் பழையகால பஞ்சாலைக் கதையை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டும் இந்தப்படம். கிராமங்களில் நடந்த வரலாறுகள் தேடினால் மட்டுமே கிடைப்பவை.

Norma Rae (1979) IMDB
https://www.imdb.com/title/tt0079638/

இந்தப்படம் உண்மையான ஒரு கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
https://en.wikipedia.org/wiki/Crystal_Lee_Sutton

இந்த மாநிலம் இப்படி பல தொழிற்சங்க கதைகளைக் கொண்டது.
https://en.wikipedia.org/wiki/Loray_Mill_strike

**
அமெரிக்க உள்நாட்டு போருக்கு (U.S. Civil War ) முன்னான காலத்தை, Antebellum (before the war) என்று சொல்வார்கள். அப்போது Deep River என்ற ஆற்றின் கரையில் இருந்த இரண்டு பஞ்சாலைகளைச் சுற்றி இரண்டு ஊர்கள் உருவாகி வந்தது. 1847 வாக்கில் இந்த இரண்டும் சேர்ந்து Franklinville என்ற ஊராக அதிகாரபூர்வமாக உருவாகிற்று. ஊரின் இரண்டு முனைகளில் முளைத்த பஞ்சாலைகள், அந்த ஊரின் நடுவில் ஓடும் Deep River என்ற ஆற்றின் ஆற்றுநீரைப் பயன்படுத்திக்கொண்டது.

இன்றும் அந்த ஆறு ஆரவாரமற்று ஓடுகிறது. ஆனால், ஆலைகள் அழிந்துவிட்டது. வெற்று கட்டிடங்களாக, ஊர் காக்கும் எல்லைக் காவல் தெய்வங்கள் போல செயலற்று நின்றுவிட்டது இரண்டு ஆலைகளும்.
**

கிரீன்ஃச்பொரோ (Greensboro) பக்கம் உருவாகும் இந்த Deep River ஆறு, ஆஃச்பரோ (Asheboro) ,ஃபிராங்ளின்வில் வழியாகப் பாய்ந்து , சான்போஃர்ட் (Sanford) வரை சென்று, அதற்குப்பிறகு Haw River டன் இணைந்து Cape Fear River,  என்ற ஆறாக மாறி கிழக்கு கடல்வரை செல்கிற‌து .
https://en.wikipedia.org/wiki/Cape_Fear_River

Deep River ம், Haw River ம் இணையும் இடத்தில்தான் (சான்போஃர்ட் - Sanford) ,நம் முப்பாட்டன் முருகனுக்கு கடைவிரித்து ஆன்மீகத் தொழில் செய்ய சிலர் முதல் போட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கான கூடுதல் தகவ‌ல்.
**

https://youtu.be/0h8WSR5Z1NM

எனக்கான உணவு சமைக்கப்பட்டுவிட்டதை அந்தப் பெண் வந்து சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அதை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.ஐந்து நிமிட கார் பயணத்தில் மொத்த ஊரையும் சுற்றிவிடலாம். டவுன் என்பது இந்த உணவகமும், அதன் மேல் இருக்கும் நூலகமும், அவற்றுக்கு நடுவில் இருக்கும் ஊர்ப்பஞ்சாயத்து கட்டிடமும்தான். மூன்றும் ஒரே கட்டிடத்தில் உள்ளது.

இதற்கு எதிர் புறத்தில் தீயணைப்பு நிலையம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் பள்ளிக்கூடமும், அஞ்சல் அலுவலகமும் வரும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தேன். நான் வசிக்கும் இடத்தில் உள்ள பள்ளியின் சொகுசும், இந்தப் பள்ளியின் நிலையும், சற்றே தடுமாற வைத்தது. இப்படியான கிராமங்கள் பல உள்ளது. இவர்களும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள். இதுவும் அமெரிக்காதான்.

இப்போது இந்த ஊரின் வருமானத்தைப் பெருகச் செய்ய, Deep River ஆற்றினை ஒட்டி, பூங்காக்கள், கேம்ப் சைட் , என்று விரிவாக்கம் செய்து வருகிறார்கள்.
**

அழகான அந்த ஆறு,பல கதைகளை கரைகளில் விட்டுவிட்டு, நீரோடு ஓடிக்கொண்டே உள்ளது. தங்கிவிட்ட கதைகள் கேட்பாரன்றி கிடந்தன. சிறிதுநேரம் அந்தப் புல்வெளியில் அமர்ந்து அவற்றின் கதைகளை உள்வாங்கிக்கொண்டேன் உணர்வில்.

இந்த ஊரில் வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இந்த நதியின் தோற்றுவாயில் ஆரம்பித்து இந்த ஊரின் கரையில் முடிக்கவேண்டும். இப்போதைக்கு இயலாதது. இடிந்த கட்டிடங்களை புகைப்படமாகவும், தொலைந்துபோன சுவாசங்களை மனதிலும் ஏற்றிக்கொண்டேன்.மறுமுறை இந்த ஊருக்கு வருவேனா என்று தெரியாது.
**

"ஃபிராங்ளின்வில்" ஊரின் சுவாசம், அங்கிருந்த பஞ்சாலைகள் நின்றபோது நின்றுவிட்டது போல.இரண்டாவது பயணம் என்பது சுவைக்கப்பட்ட கரும்பின் சக்கைபோல ஆகிவிடுகிறது எனக்கு. இருந்தாலும் இந்த ஊர் என்னை என்னவோ செய்கிறது. ஒரு இரவு ஏதேனும் ஒரு வீட்டில் கேட்டு தங்க வேண்டும். ஒரு இரவு தங்காத ஊர்களை சுவாசித்தேன் என்று சொல்லிக்கொள்வது இல்லை நான்.

http://www.townoffranklinvillenc.org/
http://www.livingplaces.com/NC/Randolph_County/Franklinville_Town/Franklinville_Historic_District.html
https://sites.google.com/site/macwhat/lowermill
http://eofp.net/franklinville.html