Friday, September 23, 2005

பதிவு07:சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்

கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
http://kalvetu.blogspot.com/

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்குமுன், நான் எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்தேன். பெரும்பாலும் கவனிக்கப்படாத, இதுவரை பொது விவாதத்திற்கு வராத,இந்த விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினேன்.

நான் இதுவரையில் அரசாங்கம் சார்ந்த மனுக்களையோ, விண்ணப்பங்களையோ எழுதியது கிடையாது.அதனால் நான் ஏதாவது விதிமுறைகளை (Protocol) மீறியிருந்தால் மன்னிக்கவும்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.

பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை.
அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anshu K. Gupta தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல சேவைகளைச் செய்து வருகிறார்.பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார்.அவரின் சேவை,முகவரி பற்றிய விவரங்களை இந்த இணையத் தளத்தில்காணலாம் http://www.goonj.org/ .

நீங்கள் தாயன்புடன் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கியது போல, அனைத்துப் பெண்களுக்கும் இது கிடைக்கச் செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்,
கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
==========================

இந்தக் கடிதம் தமிழக முதல்வரின் பார்வைக்கு cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு pdf கோப்பாக அனுப்பப் பட்டுள்ளது. முதல்வரின் 044-25671441 என்ற எண்ணில் Fax செய்ய முடியவில்லை. தொழில்நுட்பக் கோளாராக இருக்கலாம். மேலும் இதன் நகல், மங்கையர் மலருக்கும் (Fax: 91-44-2225 1021) குமுதத்திற்கும் ( +91 44-26425824 ) அனுப்பப் பட்டுள்ளது.

====

வலைப்பதிவு (தமிழ்மண) நண்பர்களுக்கு,
நான் அனுப்பிய இந்தக் கடிதம் எந்த அளவுக்கு முதல்வரின் கவனத்தைப் பெறும் என்று தெரியாது. ஆனால், அவரின் பார்வையில் பட்டால் நிச்சயம் ஏதாவது செய்வார் என்றே நம்புகிறேன்.பெண்களின் இந்தப் பிரச்சனை ஊமை கண்ட கனவாக அதிகம் பேசப்படாமலே உள்ளது.

நண்பர்கள் யாராவது இதனை வேறு எங்கேனும்(பத்திரிக்கை/அரசு) அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கடிதத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். யாரேனும் இதனை அரசு அதிகாரிகள்/அமைச்சர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்றாலும் மிக்க நல்லதே.

பொதுத் தொண்டு நிறுவனங்கள் நல்லது செய்தாலும், அரசின் தலையீடு உதவியைப் பரவலாக்கும் என்றே எண்ணுகிறேன். பிரச்சனை நாம் விரும்பிய வண்ணம் தீர்க்கப் படாவிட்டாலும்,குறைந்தபட்சம் இதுபற்றி வெளிப்படையான விவாதம் தொடங்க அது வகை செய்யும்.

Wednesday, September 21, 2005

பதிவு:06 வாங்க நம்ம பஸ்ல ஓசியாப் போலாம்


One Less Car Today

எங்க போற நீ?

அடையாறு.

அடையாறுன்னா எங்க எல்லாமே அடையாறுதான் எந்த ஸ்டாப்புல எறங்கனும் நீ?

அடையாறு சிக்னல்.

யே இன்னா நீ காலங்காத்தால வந்து உயிர வாங்குற..உனக்கு நாந்தான் கிடைச்சனா? சில்லரை இல்ல உன்னாண்ட? முழு நோட்டா நீட்டுற?

இல்லையேப்பா இதுதான் இருக்கு.

சரி இறங்கும்போது மறக்காம வாங்கிக்க. ஒன்ன மாதிரி 10 பேரு வந்தா நான் எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்க முடியாது. அப்புறம் கண்டக்டரு கொள்ளை அடிசுட்டானு, பொலம்பக்கூடாது இன்னா புரிஞ்தா?

சரிப்பா
..
சரியான சில்லறை இல்லாமல் எத்தனை முறை நாம் நம்மூர் பேருந்தில் சென்று திட்டு வாங்கியிருக்கிறோம்? சரியான சில்லரை தரவும் என்று எழுதி வச்சாலும் நாம் கண்டு கொள்வதில்லை. இதற்காக மாத பாஸ்,நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு வசதி என்று பல இருந்தும் அதிகப் பேர் இன்னும் சரியான சில்லரை இல்லாமல் தான் பயணம் செய்கிறார்கள்.

எங்க அப்பா எப்போதுமே சரியான சில்லரையுடன்தான் பஸ் ஏறுவார்.
ஆனாலும் ஒருமுறை ஒரு 10 பைசா குறைவினால் (சரியான சில்லரை இல்லை) முழு நோட்டை நீட்ட ..."சில்லரை இல்லைனா எறங்கிக்க", என்று இறக்கி விடப்பட்டார். யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. அன்னைக்கு அந்த கண்டக்டருக்கு என்ன பிரச்சினையோ? அப்பாவின் போதாத காலம். அப்பா, கண்டக்டர் சொன்னபடி இறங்கிக் கொண்டார்.

பஸ்சில் நாம் இறங்க வேண்டிய இடம் வந்தால் குதிக்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லைனா அம்புட்டுத்தான். அதுவும் ஏறும் வழி , இறங்கும் வழி எல்லாம் சும்மா ஒரு தாமசுக்காக எழுதி வைத்து இருப்பார்கள். யாரும் பார்ப்பது கிடையாது. ஆண், பெண்களுக்கான இருக்கைகளின் ரிசர்வேசன் ஒவ்வொரு மாவட்டங்களில் ஒரு மாதிரி இருக்கும்.

உதாரணமாக மதுரைப் பகுதியில் வலதுபுறம் ஆண்களும் இடதுபுறம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.சென்னை பட்டணத்திலும் கோயம்புத்தூரிலும் வேறுமாதிரி இருக்கும். பெரும்பாலும் இது அந்தந்த பேருந்துக் கழகத்தின் இயக்குனர்களின் முடிவைப் பொறுத்து அவ்வப்போது மாறும்.

கேரளாவில் ஒரு மணி (Bell) ட்ரைவரின் சீட்டுக்குமேலே இருக்கும். கண்டக்டரோ அல்லது இறங்க வேண்டிய பயணியோ அதைப்பிடித்து இழுத்தால் ட்ரைவர் பஸ்சை ஸ்டாப்பில் நிறுத்துவார். இதுபோன்று
கோயம்புத்தூரிலும் இருக்கும். மற்ற இடங்களில் பார்த்தது கிடையாது.

எனது பையன் பாலர் பள்ளி (Pre School) செல்ல ஆரம்பித்த பிறகு ஒரு காரை வைத்து சாமாளிக்க முடியாமல் போனதால், நான் வாரத்தில் 2 நாட்களுக்கு பஸ்சில் செல்ல ஆரம்பித்தேன். நியூஜெர்சி (New Jersey) -ல் தங்கி மான்ஹாட்டனில் (Manhattan) வேலை பார்த்துக் கொண்ட்டிருந்தபோது கார்
தேவைப்படவில்லை. ஆறுமாதங்கள் கார் இல்லாமலேயே ஓட்டிவிட்டோம்.
இந்த ஊர் அப்படி இல்லை. சின்ன ஊர். பொது வாகனப் போக்குவரத்து எல்லா நேரங்களிலும் இருக்காது.





TTA Bus புண்ணியத்தில் எப்படியோ எனக்கு குறைந்தபட்ச வசதி கிடைத்தது. வீட்டில் இருந்து பஸ் ஸ்டாப் அரைமணிநேர நடை (5 நிமிட கார் பயணம்)தொலைவில் உள்ளது. மழை,குளிர்காலத்தில் மனைவி என்னை இந்த பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார்.

மழை குளிர் இல்லாத காலங்களில் நான் நடந்து வந்து விடுவேன். என்ன ஒரே ஒரு பிரச்சனை. பஸ் ஸ்டாப் வருவதற்குள் வேர்த்து தொப்பலாக நனைந்து விடுவேன். இந்த ஊர் அப்படி. மேலும் பொதுவாகவே எனக்கு வேர்க்கும் உடம்பு.

பள்ளி, கல்லூரி காலங்களில் தேர்வின் போது பேப்பர் நனைந்துவிடும். அதற்காக கர்ச்சீப்பை கைக்கடியில் விரித்து வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவேன். நம்ம போதாத காலத்திற்கு கேள்விக்கு பதில் தெரியாமல் டென்சனானால், நம்ம பேப்பர் கதி அதோகதிதான்.

இந்த வேர்வைப் பிரச்சனைக்குத் தீர்வாக, நான் ஆபிசுக்கு போட வேண்டிய சட்டையை தனியாக எடுத்து பையில் வைத்துக்கொள்வேன். வீட்டில் இருந்து ஒரு சாதாரண சட்டையில் பஸ் ஸ்டாப் வந்து விடுவேன். இங்கு அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் உடை மாற்றிக்கொண்டு புதுசு கண்ணா புதுசாக பஸ் ஏறிவிடுவேன்.

இந்த வாரம் நம்ம TTA Bus காரர்கள் Smart Commute உடன் சேர்ந்து One Less Car Today என்ற வாரத்தை கொண்டாடுகிறார்கள். அதனால், இந்த வாரம் பூராவும் இலவச பஸ் பயணம். ஒரு தடவை பயணத்திற்கு (One trip) ஒரு காலத்தில் $1.50 வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது $2.00 வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.





அவர்களும் பாவம், என்ன செய்வார்கள். 40 இருக்கைகள் கொண்ட பஸ், அலுவலக நேரமான peak hour-ல் கூட 5 அல்லது 10 பேருடன்தான் செல்லும். அதுவும் சில சமயம் நானும் ட்ரைவரும் மட்டுமே இருப்போம்.
என்னை இறக்கிவிட்டுவிட்டு அவர் வெறும் வண்டியை அடுத்த அரைமணி நேரத்திற்கு சும்மா ஓட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தம் செல்வார்.

One Less Car Today ஓசிப் பயணம் நல்லாவே வேலை செய்கிறது.பல புது முகங்கள் வர ஆரம்பித்துவிட்டனர். சும்மா காத்தாடும் இந்த பஸ் கொஞ்சம் களை கட்டிவிட்டது. என்னெ இந்த இலவச பயணம் முடிந்த பிறகு அனைவரும் கழன்று விடுவார்கள். வழக்கம்போல் ரெகுலர் பயணிகளே இருப்பார்கள். அரைமணி நேர பஸ் பயணம் மிகவும் இனிமையாக இருக்கும். பேப்பர் படித்துக் கொண்டும்,காதில் மாட்டிய பலவிதமான ரேடியோ, சி.டி பிளேயர் இப்ப புதுசா iPod உடனும் பலவிதமான மக்களின் ஜாலியான இடம்.

இது மட்டும் இல்லாமல் GoTriangle என்னும்அமைப்பு இந்தப் பகுதியில் மக்களை காரைத்தவிர மாற்று ஏற்பாட்டில் ஆபிஸ் செல்ல வைப்பதற்கு பலவிதமான முயற்சிகளையும் திட்டங்களையும் புதுசு புதுசாக அறிமுகப் படுத்திக்கொண்டே இருப்பார்கள். சைக்கிளில் வந்து, சைக்கிளை பஸ்சின் முன்னால் உள்ள ஒரு கம்பியில் மாட்டிவிட்டு, பஸ்சில் ஏறிக்கொள்ளலாம். இறங்கியவுடன் எடுத்துக்கொண்டு நாம் பாட்டுக்கு கிளம்பிவிடலாம்.

இதைத்தவிர Car Pool Van Pool போன்ற திட்டங்களும் உண்டு. நமக்குப் பிடிச்சது சைக்கிள்தான். சின்ன வயசுல இருந்து ஒரு காதல் அதுமேல. என்ன கார் வாங்கலாமுன்னு திட்டம் போடுறத விட ,நான் எந்த சைக்கிள் வாங்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன். எப்படி நமக்குத் தோதான சைக்கிள் வாங்குறதுன்னு பின்னால ஒரு பதிவே போடலாம்.

TTA Bus சமீபத்தில் காத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட, பெட்ரோல் தட்டுப்பாட்டைக் குறைக்க குறிப்பிட்ட வழித்தடங்களில் (நெடுந்தூரப் பயணம்) இலவச சேவை செய்தது. பொதுவாகவே இங்கே உள்ள பஸ் நிறுத்தங்களில் ஆளே இல்லாட்டியும் நிறுத்தி, கதவைத் திறந்து, பஸ் ஸ்டாப்பின் பெயரை உரக்க ஒலி பெருக்கியில் அறிவித்தபின்தான் வண்டியை மறுபடி நகர்த்துவார்கள். ம்..ம்ம்.. இப்படி ஆளில்லா பஸ்டாப்பில் சும்மா வெட்டியாக நிற்காமல் சென்றாலே பெட்ரோலைச் சேமிக்கலாம். என்ன செய்வது இவர்களின் சேவைத்தரம் அப்படி.


நீங்கள் பஸ்டாப்பில் நிக்குறீங்கன்னு வச்சுக்குவோம். நீங்கள் ஏற வேண்டிய பஸ் வருகிறது. நீங்கள் கையைக் காட்டவோ அல்லது ரோட்டில் நின்று கொண்டு இரண்டு கையையும் காலையும் ஆட்டி டான்ஸ் ஆடவோ வேண்டாம். அப்படி ஆடினாலும், அரைக்கிலோ மீட்டர் தள்ளி நிறுத்துவது எல்லாம் சென்னைப் பட்டணத்தில்.(இப்படியே அவுங்கள நொள்ள சொல்லுங்க. நம்ம பிளாட்பாரத்தின் மேலே நிக்காமல் பாதி ரோட்டில் நின்றால் அவர்கள் எங்கே சரியாக நிறுத்த முடியும்.) இங்கே நீங்க சும்மா திரும்பி (வேறு பக்கம்) பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தாலும் , TTA காரர்கள் பஸ்சை நிறுத்தி, கதவைத் திறந்து சாவாசகமாக மைக்கை எடுத்து ஸ்டாப்பின் பெயரை உரக்க சொல்லுவார். நீங்கள் அப்புறம் ஏறிக் கொள்ளலாம். பஸ் ஸ்டாப்பில் யாருமே இல்லாட்டியும் அப்படித்தான் செய்வார்கள்.

ஊருப்பட்ட கார்களை வைத்துக் கொண்டு இவர்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க பஸ்ல வாங்க வாங்க அப்படீன்னு கூவாத குறையாக, தலைகீழ நின்னு தண்ணி குடிச்சுப் பாக்குராங்க, யாரும் கண்டுக்கிறது இல்லை.போக வர $4.00 செலவு செய்வதற்கு ஒன்ரைக் கேலன் பெட்ரோல் போட்டுட்டு சொகுசாக ஆபிஸ் போயிட்டு வந்துராலாம். பயணிகளைச் சொல்லியும் குத்தமில்லை.


இருக்கப்பட்ட மகராசனுங்க எப்படி வேணுமின்னாலும் போலாம். நம்ம ஊரில சைக்கிளுக்கு ஒரு தனிப்பாதை போட்டால், சைக்கிள் பயன் படுத்துபவர்களை ஊக்குவிக்கலாம். என்ன சொல்றீங்க? ஓ அதுவா நடக்கப் போட்ட பிளாட்பாரத்திலேயே கடைவச்சு அதுக்கு சங்கமமும் வச்சுட்டாங்க அப்படீங்றீங்களா? அதுவும் வாஸ்தவம்தான்.

யாரை நொந்துக்கிறது. கல்கோனா,கடலை மிட்டாயும், மசாலா மாங்காவும் வித்து ஜீவனம் நடத்துர பாட்டியும் தான் பிளாட்பாரத்துல கடை வச்சு இருக்கு.

பிளாட்பாரத்தை மொத்தமா ஆக்ரமிச்சுட்டு புள்ளையார் அந்தப் பக்கம் ஒக்காந்து அருள் செய்றார்.

தலைவன் தலைவிக்கு கொடி,சிலை மற்றும் மன்றம். அதெல்லாம் போக
பெரிய தாதா, அரசியல் தலிவர்களின் தலையீடு. ஒரு ஏக்கர் நிலம் கூட வாங்கிரலாம் பிளாட்பார கடையப் போடுறது தமிழ் நாட்டுல ரொம்ப சிரமங்க.

அய்யோ நம்ம பஸ்டாப்பு வந்துட்டதா TTA ட்ரைவர் சொல்லிட்டார், இறங்கனும். அப்புறம் பாப்பொமுங்க.

என்ன? கண்டக்டரா? நல்லாக் கேட்டீங்க போங்க. இங்க எல்லாமே ஒரே ஆளுதான்.

ட்ரைவர் கம் கண்டக்டர் கம் கிளீனர் அவர்தான். சில்லரை இல்லை இறங்கும் போது தாங்க, அப்படீன்ற பேச்சல்லாம் இல்லை. சரியான சில்லரை இல்லாட்டி ஒன்னும் பண்ண முடியாது. பெப்பேதான். ஆபிசுக்கு போக முடியாது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டியதுதான்.

Friday, September 16, 2005

பதிவு05:ஜார்ஜ் புஷ்சுக்கு எதிரான போராட்டத்தில் நான்





ராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் செயல்பாட்டை விரும்பாத, ஏற்றுக் கொள்ளாத பலரில் நானும் ஒருவன். ஈராக் மட்டுமல்ல அமெரிக்கா பல நாடுகளில் பலவாறாக ஆட்டம் ஆடியுள்ளது. சமீபத்தில் நான் வசிக்கும் இடத்தில் UnitedForPeace.org என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.


நான் "No WAR" என்று எழுதிய அட்டைய வீட்டில் இருந்து எடுத்துச் சென்று இருந்தேன். காரை கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் நிறுத்திவிட்டு "No WAR" அட்டையுடன் நடக்க ஆரம்பித்தேன். காரை நிறுத்திய இடம் நான் வழக்கமாக செல்லும் பஸ் நிறுத்ததிற்கு அருகில் உள்ள வங்கிக்கருகில் இருந்ததால் பயம் ஏதும் இல்லை.

அகடமி தெருவில் (Academy Street) உள்ள நூலகத்தின் முன்புறம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிகபட்சம் 5 போலீஸ் வாகனங்கள் கண்ணில் பட்டன. நான் ஒருவனே அந்தக் கூட்டத்தில் இந்தியமுகம் ஆதலால் போலீஸ் என்னை ஒரு வேற்றுகிரக ஜீவனைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். அதிலும் ஒருவர் நான் எடுத்துச் சென்ற அட்டையில் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்.

நான் அவரைப் பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். அந்த ஹலோ எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மெளனப் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. சில நேரங்களில் ஒரு சாதரண ஹலோவும் சிநேகப் புன்னகையும் பல மேஜிக்குகளை செய்ய வல்லது.

புதிதாக பஸ் நிறுத்ததில் அல்லது ஒரு பொது இடத்தில் தனியாக இருக்கும் போது அருகில் உள்ளவர்களை (ஆணோ பெண்ணோ) பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை வீசிப்பாருங்கள். தமிழ் நாட்டில் பஸ் நிறுத்ததில் நிற்கும், தெரியாத பெண்களிடம் சிரித்து, நீங்கள் ஈவ் டீசிங்கில் மாட்டி, உங்கள் வாழ்க்கை சிரிப்பாய் சிரித்துப்போனால் நான் பொறுப்பல்ல.



சிறிய ஊராக இருந்த போதும், ஒரு 50 பேர் கூடிவிட்டோம். பெரும்பாலும் அமெரிக்க மக்களே இருந்தனர். கூட்டத்தில் ஒரே ஒரு முஸ்லீம் குடும்பத்தைப் பார்க்க முடிந்தது. "No War" என்று எழுதிய அட்டையை எடுத்துச்சென்ற நான், மெழுகுவர்த்தி எடுத்துச் செல்லவில்லை.

இதை கண்டனக் கூட்டம் என்றே நினைத்து இருந்ததால் மெழுகுவர்த்தி என் புத்திக்கு எட்டவில்லை. அட்டையை இரண்டு கையாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நானும் கலந்துவிட்டேன்.

என்னிடம் மெழுகுவர்த்தி இல்லாதது கண்டு அருகில் இருந்த ஒரு பெண், தன்னிடம் இருந்த இரண்டு மெழுகுவர்த்திகளில் ஒன்றை எனக்குத்தந்தார். அவர் செய்தது அவரின் 4 வயது பையனுக்குப் பிடிக்கவில்லை. அவன் அவனது அம்மாவிடம் சண்டை போட்டு அழுக ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. அந்தப் பையனிடமே மெழுகுவர்த்தியை திருப்பித்தர முயன்றேன். ஆனால் அந்தப் பெண் அதை தடுத்துவிட்டு தனது மகனுக்கு பகிர்ந்து கொள்ளல் (Sharing) பற்றி ஒரு குட்டி லெக்சர் கொடுத்தார்.

அவன் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அழுகை நின்றுவிட்டது. கூட்டம் முடியும் வரை அவன் என்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்குப் பார்த்துக் கொண்டே இருந்தான்.



ஈராக் போரில் இறந்த அமெரிக்கப் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் ஆரம்பித்தது. அனைவரும் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி பல பாட்டுகளைப் பாடினார்கள். எனக்கு ஒன்றும் தெரியாதலால் தேமே என்று நின்று கொண்டு இருந்தேன். பாட்டுகள் முடிந்தவுடன் பலர் புஷ்சின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

எங்களது கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு எதிர்ப்புறம் புஷ் ஆதரவாளர்கள் "புஷ்" மற்றும் "ஈராக்" போர் ஆதரவு அட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் ஏதும் கோஷம் போடவில்லை. அமைதியாக தங்களின் ஆதரவை புஷ்சுக்கும் ,எதிர்ப்பை எங்களுக்கும் தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.




எனது அருகே இருந்த இரண்டு கல்லூரிப் பெண்கள் புஷ் ஆதரவாளர்களை நோக்கி "He is not my President" என்ற அட்டைகளைக் காட்டி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் மெழுகுவர்த்திகளை பலமாக அசைத்து பேசிக்கொண்டு இருந்தபடியால் அது அடிக்கடி அணைந்து போயிற்று. அவர்களின் மெழுகுவர்த்திகளை மறுபடி ஏற்றிட உதவி செய்தேன்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த அந்த கண்டன + பிரார்த்தனைக் கூட்டம் நல்லபடியாக எந்த கலவரங்களும்(??? ) இல்லாமல் நடந்து முடிந்தது.

இந்த மாதிரியான போராட்டங்களால் புஷ் ஒன்றும் திருந்தப் போவது இல்லை.

மனதில் எனக்கு இருந்த கோபம்,இயலாமை,இரக்கம் ....இப்படி பலப்பல உணர்வுகளுக்கு, இந்தப் போராட்டம் ஒரு வடிகாலாக அமைந்து இருந்தது.


அதிக விவரங்களுக்கு:

UUSC STOP (Stop Torture Permanently) Campaign

What You Can Do to Oppose the U.S. Military Occupation of Iraq

Thursday, September 15, 2005

பதிவு04:வாஷிங்டனில் வளைகாப்பு-4

வாஷிங்டனில் வளைகாப்பு - நிறைவுப் பகுதி


நாங்கள் எங்கே தொலைந்துபோய் விடுவோமோ என்று நண்பர் விழாமண்டபத்தின் வாசலிலேயே காத்து இருந்தார். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு மூட்டை முடிசுக்களை இறக்கி குழந்தைகளுடன் மண்டபத்தை (Community Center) நோக்கி நடந்தோம்.

இங்கெல்லாம் கம்யூனிட்டி சென்டர் என்பது ஒரு நல்ல நோக்கத்துடன் நடந்து வருகிறது. குழந்தைகள் விளையாட இடம், பெரியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், தனியார் /பொது நிகழ்ச்சி நடத்துவதற்கான சிறிய மற்றும் பெரிய அரங்கங்கள் ,குழந்தைகளுக்கான கோடை விடுமுறைப் பயிற்சிகள் எனப் பல வகைகளில் இந்த கம்யூனிட்டி சென்டர்கள் செயல்படுகின்றன. இவையெல்லாம் அந்த அந்த பகுதி County (மாவட்டம் ??பேரூராட்சி ??முனிசிபல் ?? ) நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன.

விழாவிற்கான சிறிய அறைகளும் பெரிய அரங்கங்களும் மிகக்குறைந்த வாடகையில் கிடைக்கும். பூங்காக்களை பராமரிப்பு செய்வத்ற்கென தனி துறையே இருக்கும். இதைவிடச் சிறப்பம்சம் குழந்தைகளின் கல்வியில் இவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு. http://projectenlightenment.wcpss.net/ என்னும் ஒரு அமைப்பு பல வழிகளில் குழந்தைகளுக்கு உதவுகிறது. இது அந்த county பொது நூலகத்துறையுடன் சேர்ந்து செயல்படுகிறது.

நூலகங்கள்..... இங்கு உள்ள நூலகங்களின் அமைப்பும் பயன்பாடும் பற்றி எழுத தனிப் பதிவே போடவேண்டும். எனக்குப் பிடிச்சது நூலகத்தில் இலவசமாகக் கிடைக்கும் வீடியோ கேசட்தான் ( ஹி..ஹி.. நம்ம புத்தி).

கம்யூனிட்டி சென்டரின் உள்ளே நுழைந்தவுடன் பெரிய அந்தக்காலத்துக் கடிகாரம் பார்வைக்காக(Show case) வைக்கப்பட்டு இருந்தது. கவுண்ட்டியால் பராமரிக்கப்படும் இந்த இடம் ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒப்பானதாக தூய்மையுடனும் அழகாக அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.ஒரு பெரிய மீன் தொட்டியும் அதனுள் இருந்த பெரிய மீன்களும் பொடிசுகளை கவர்ந்து விட்டது. இரண்டு பொடிசுகளும் மீன் தொட்டியை விட்டு வர மறுத்து விட்டார்கள்.

இவர்களை இப்படியேவிட்டால் விழாவிற்கு யார் போவது? ஒருவர் இவர்களுடன் நிற்க மற்றவர்கள் விழா அறைக்குச்சென்றோம்.நண்பர் ஏற்பாடு செய்து இருந்த விழா அரங்கம் 40-50 பேர்களுக்குப் போதுமானதாக இருந்தது. எங்களுக்கு முன்னரே ஒரு சிலர் வந்து இருந்தனர். Baby Shower என்று எழுதப்பட்ட பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. பெண்கள் தங்களுக்குள் பட்டுப்புடவையில் ஆரம்பித்து ஊர்ப்பொரணி உலகப்பொரணி பேச ஆரம்பித்துவிட்டனர்.

நாமளா...நாம்மாளுவ என்னத்தப் பேசுவானுக? வழக்கம் போலதான்.


வேலை எப்படிப் போகுது?

என்னமோ இன்னும் 3 மாசம் ஓடுமுன்னு நினைகிறேன்..பாப்போம்.

எக்ஸ்டன் பண்ணுவாங்க?

தெரியல போனதடவ பண்ணினாங்க இப்ப என்ன ஆகுமோ?

இங்க எல்லாருக்கும் நிலையான வேலையோ இருப்பிடமோ அமைந்துவிடுவதில்லை. வேலையும் இருப்பிடமும் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கும். குழந்தை குட்டியுடன் அடிக்கடி ஊர் மாறுவது மிகச் சிரமம்.


அனைவரும் நண்பருக்கு விழா அமைப்பு வேலையில் உதவ ஆரம்பித்து விட்டோம். சாப்பாடு எடுக்க சிலர் சென்றனர். வாண்டுகள் சத்தம் அறைய நிரப்பியது. வாண்டுகள் இல்லாத பங்ஷன் என்னா பங்ஷன் ? இந்தப் பொடுசுகள் இருந்தால்தான் விழாவுக்கு அழகே. அதுகள் போடும் சத்தமும், சண்டையும், மாறி மாறி வந்து போகும் சிரிப்பும், அழுகையும் அரங்கை நிறைத்துவிடும்.

நான் அப்படியே அந்த community center ஒரு சுற்று சுற்றி வந்தேன். அருகிலே உள்ள பெரிய விழா அரங்கில் வட இந்திய சமுதாய மக்கள் Graduation Party கொண்டாடிக் கொண்டு இருந்தனர். சும்மா தீபாவளியையும் ஹோலிப் பண்டிகையயுமே ஒரு கலக்கு கலக்கும் இளசுகள் Graduation Party யில் கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டு இருந்தனர். ம்..ம்.. நம்ம ஊரில் விழாக் கொண்டாட்டங்கள் குறைவு. என்ன செய்வது என்று தெரியாமல் பல நாட்கள் சும்மவே இருப்போம்.

தீபாவளியை விட்டால் நம்மக்கு ஏதானும் பண்டிகைக் கொண்டாட்டம் உண்டா?

பொங்கல்..?

அட விடுங்க சார் எத்தனை பேர் பொங்கலை கொண்டாடுறோம். தமிழகம் ரொம்ப மோசம். கேரளாவில் ஓணம் ஒரு நல்ல சமுதாயக் கொண்டாட்டம். நான் இங்கு வந்த பிறகு எந்தக் கொண்டாட்டங்களையும் விடுவதில்லை.

அடடா நம்ம பங்ஷன் ஆரம்பிச்சுருச்சு வாங்க வாங்க எல்லோரும் உள்ளே போவம்.

ஒரு நல்ல ஹோட்டலில் இருந்து அட்டகாசமான உணவு வகைகள் வந்து சேர்ந்த்தாயிற்று. நம்ம விழா நாயகி, கர்ப்பிணி வயிற்றோடு வலம் வந்து கொண்டு இருந்தார். ஊரில் இருந்து அவரது மாமியார் தான் கொண்டுவந்த நகைகள் , சடைக்குத் (ஜடை ??) தேவையான அலங்காரப் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்து மிக நன்றாக அலங்காரம் செய்து இருந்தார். ஒரு தட்டில் அழகாக ரோஜா மலர்களை வைத்து நன்றாக அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

போட்டோ எடுப்பது வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை நானும் நியூஜெர்சி நண்பரும் செய்து கொண்டு இருந்தோம். எனக்கு வீடியோ எடுக்கும் வேலை. நண்பரின் அம்மா தனது மருமளின் சடை அலங்காரத்தை மறக்காமல் படம் பிடிக்கச் சொன்னார். பெண்கள் அனைவரும் கூடி சம்பிரதாயமான வளையல் போடும் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். ஒவ்வொருவராக விழா நாயகிக்கு வளையல் போட்டு வாழ்த்தை தெரிவித்தனர்.

இந்த விதமான நிகழ்ச்சிகளுக்கு மத ரீதியாக அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி தாயாகப் போகிறவரை வாழ்த்துவதற்கு இது வழி செய்கிறது. எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இது ஏதோ பெண்கள் விழாவாகவே நடத்தப்படுகிறது. ஒரு பொதுவான வைபவ நிகழ்ச்சியாக (ஆண்களும் பங்கேற்கும்) யாரும் நடத்திப் பார்த்ததில்லை.

அதுவும் பெரும்பாலும் பெண்ணின் அம்மா வீட்டில் (சில சமயம் கணவர் இல்லாமலேயே ) நடத்தப் படுகிறது. பூப்புனித நீராட்டு விழாவுக்கெல்லாம் (இது தேவையா?? அந்த சண்டைக்கெல்லாம் நான் வரலீங்க) ஊரையே கூப்பிடும் நம்ம சாதி சனம், இதில் யாரையும் கண்டுகொள்வதில்லை. மக்கட்தொகை அதிகமுள்ளதால் புதுக்குழந்தைக்கும் புதுத்தாயிற்கும் வரவேற்பு இல்லையோ?

ஆனால் இங்கு, இந்த விழாக்களும் குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களும் இல்லை என்றால் குடும்ப விழாக்களே இல்லாமல் போயிருக்கும்.

காதுகுத்து, கல்யாணம் போன்றவைகள் ரொம்ப அரிதாக நடைபெறும். 90% மக்கள் கல்யாணம் காது குத்துக்கு இந்தியா போய்விடுகின்றனர். ஒரு வேளை இந்த புதுக் குழந்தைகளுக்கு சிட்டிசன்சிப் இல்லாமல் இருந்தால் மகப்பேறுக்கு மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி இருப்போமோ? இருக்கலாம் யார் கண்டார்.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தது. அனைவரும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தோம். காலையில் இருந்து அலைந்த அலைச்சலுக்கு அருமையான சாப்பாடு. சாப்பாட்டின் போதுதான் பல புது நண்பர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள முடிந்தது.

என்னதான் சொல்லுங்கள் இந்த மாதிரியான விழாக்களில் சாப்பிட்டுக்கொண்டே சினிமா , அரசியல், ஊர்வம்பு பேசுவது ஒரு நல்ல பொழுது போக்கு. ஜாக்கிரதை அரசியல் பேசி சண்டையில் முடிந்துவிடக்கூடாது. எனக்கு அது பல முறை நடந்துள்ளது. இப்போதெல்லாம் மிகச் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.



விழா முடிந்த கையோடு நண்பரின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

மற்றொரு நண்பன் வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடித்துவிட்டு பல நல்ல நினைவுகளோடு அனைவரும் பிரியாவிடை பெற்றோம்.

முற்றும்.

பி.கு:

நண்பரின் விழா சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அனுமதி இல்லாததால் இப்படி நெகட்டிவ்வாகப் போடப்பட்டுள்ளது.

Tuesday, September 06, 2005

பதிவு03:வாஷிங்டனில் வளைகாப்பு தொடர்ச்சி -3



Room-க்கு வந்தா மனைவி நமக்கு அடுத்த வேலையைத் தயாராக வைத்து இருந்தார். அப்படி இல்லாம நம்மளை free யா விட்டுட்டா அப்புறம் என்னா மனைவியாம்?

பிள்ளைகளுக்குச் சாப்பிட ஏதும் இல்லை போய் பாலும் காலைச் சாப்பாட்டுக்கு ஏதானும் வாங்கிட்டு வாங்க.

என்னத்த வாங்குறது? பக்கத்துல என்ன முருகன் இட்லிகடையா இருக்கு. அந்த வீணாப்போன burger ம் Taco வும்தான் இருக்கு. வேணுமின்னா பக்கத்துல 7 Eleven (இது நம்ம ஊரு பொட்டிக்கடை மாதிரி Petrol bunk ம் அதனோடு சேர்ந்த பொட்டிக்கடை) இருக்கு அங்க போயி எதாவது எடுத்திட்டு வரேன். அதுக்குள்ள நீ ரெடியா இரு. நான் வந்த பிறகு லேட்டாகக் கூடாது. என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு hotel ஐ விட்டு கிளம்பினேன்.

மத்தியப் பிரதேச மாநில நகரமான போபாலில் எப்படி நல்ல மனைவியா இருக்கிறதுன்னு ஒரு ஸ்கூல் நடத்துறாங்களாம். Manju Sanskar Kendra என்ற அந்தக் கல்விநிலையத்தின் நோக்கம், 'உருப்படியான' மனைவிகளை உருவாக்குவது. இது வரை சுமார் ரெண்டாயிரம் பேர், இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு, ஐடியல் மனைவி என்று சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

இளைஞர்களே B.A ,B.Sc யை விட்டுவிட்டு னைவி. Sc படிச்ச பொண்ணுங்களா பாருங்க. அதிக விவரங்களுக்கு icarus prakash -ன் Happy Independence Day படிக்கவும்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து சாலையில் காரை செலுத்தினேன்.இப்போது கொஞ்சம் சன நடமாட்டம் இருந்தது. சனிக்கிழமை காலை என்பதால் அவ்வளவாக ட்ராபிக் இல்லை. அருகில் இருந்த பஸ்
நிருத்தத்தில் ஒரு பெண் சவாசமாக உட்கார்ந்து புகைத்துக் கொண்டு இருந்தாள். Taco கடையில் இரண்டு கார் Drive Thru வில் (Drive In) நின்று கொண்டு இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டே காரை ஓட்டினேன்.

அதிக நேரம் கடந்தும் நடந்து வரும் போது கண்ணில் பட்ட அந்த 7 Eleven மட்டும் இப்போது தெரியவில்லை. எங்கோ வழி தவறி வந்துவிட்டேன். ஆகா எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.

ஆமாம் வலதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக இடதுபுறம் திரும்பி தெரியாமல் வாஷிங்டன் நோக்கிச்செல்லும் I-270 -ல்(நம்மூர் National Highway NH போல் இங்கு Interstate highway) நுழைந்து விட்டேன். நம்ம காரில் நல்ல மேய்ப்பர் இல்லை. அட அதுதாங்க GPS (Global position system) தொழில்நுட்பத்தில் வந்துள்ள சாலைப் பயண வழிகாட்டி.

வழிதவறிய ஆட்டுக்குட்டியை போல் தேமே என்று ரோடு போற ரூட்டில் வண்டியை விட்டேன். அடுத்து வந்த exit -ல் வண்டியைத் திருப்பி மறுபடியும் hotel ஐ கண்டுபிடித்து தொடங்கிய இடத்திற்கே வந்தேன். ம்.ம்.. இதில் ஒரு அரைமணி நேரம் தொலந்துவிட்டது.

மறுபடி சரியான பாதையில் திரும்பி 7 Eleven கடைக்கு போய்ச்சேர்ந்தேன். பால்,பன் (பொறை) ஜூஸ் ,வாழைப்பழம் அயிட்டங்களை வாங்கிக்கொண்டு தங்கியிருக்கும் hotel ஐ நோக்கி காரை செலுத்தினேன்.

ஹோட்டல் வராண்டாவில் நியூ ஜெர்சி நண்பரின் மகளும் அவரது மாமனாரும் விழாவிற்கு ரெடியாகிவிட்டு சும்மா நடந்து பொழுதைப்போக்கிக் கொண்டு இருந்தனர்.

அந்தப் பெண்ணை இரண்டுவயதில் பார்த்தது. இப்போது நான்கு வயது அவளுக்கு. அழகாக வளர்ந்து இருந்தாள். தமிழ் ஆங்கிலம் கலந்த பேச்சு. என்னை அவளுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பு இல்லை.




காரை ஓரம்கட்டி அவளுடனும், அவளது தாத்தாவுடனும் கொஞ்சம் நேரம் பேசினேன். பின்பு அவர்களிடம் விடைபெற்றுவிட்டு எங்களது ரூமை அடைந்தேன்.


இந்த hotel-ல் ஒரு மினி சமையலறை உண்டு. அங்கு இருந்த மைக்ரொவேவ் அவனில் பாலைச்சுட வைத்து காம்ப்ளான் போட்டு பெரியவனுக்கு கொடுத்தேன். அவன் பாலைக்குடிக்காமல் அம்மா இது நம்ம வீட்டுப்பால் மாதிரி இல்லை. எனக்கு வேண்டாம் என்றான். டேய் எல்லாம் ஒண்ணுதான் பேசாம குடி என்று ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு சின்னவளுக்கு உடை மாற்றத் தயாரானேன்.

அம்மா இந்தப்பால் நம்ம வீட்டுப்பால் மாதிரி இல்லை. எனக்கு வேண்டாம்..

மறுபடியும் அடம் பிடித்தான். டேய் சும்மா நச்சரிக்காதே எல்லாம் ஒரே பால்தான் என்று அவனை மிரட்டி குடிக்க வைத்தோம். இப்போது வேண்டாம் என்பான் பிறகு அம்மா பசிக்குது என்று கேட்பான். எல்லா குழந்தைகளும் இப்படித்தான். அதுவும் வெளியூருக்கு வந்திருக்கும் நேரத்தில் ஹோட்டலிலேயே முடிந்தவரை குழந்தைகளுக்கு உணவைக் கொடுத்துவிடுவது நல்லது.

ஒருவழியாக அவனும் அந்தப்பாலை அழுதுகொண்டே குடித்து முடித்தான்.
அவன் பால் குடித்த டம்ளரைக் கழுவும்போதுதான் எனக்கு தெரியவந்தது அவனது பாலில் சீனி (சக்கரை/சுகர்..??) போட மறந்துவிட்டது. ஆகா பிள்ளையைத் தவறாகக் கடிந்து கொண்டோமே என்று மிகவும் வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டோம். அவன் its OKப்பா என்று கூறிவிட்டு தங்கையுடன் விளையாடக் கிளம்பி விட்டான்.

குழந்தைகள் எவ்வளவு சீக்கிரம் நம்மை மன்னித்துவிடுகிறார்கள். மனைவியிடம் பேசியபிறகுதான் தெரிந்தது நாங்கள் வீட்டில் இருந்து சீனி எடுத்துவர மறந்துவிட்டோம் என்று. பொதுவாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துவைத்து விடும் நாங்கள் இம்முறை 'சீனி'யில் கோட்டை விட்டுவிட்டோம் ஆனால் தண்டனை மகனுக்கு.

ஒருவழியாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு விழாவிற்குச் செல்லத் தயாரானோம். ஹோட்டலை விட்டு மறுபடியும் மூட்டை முடிச்சுகளுடன் (Stroller, பால் டப்பா, Diaper Bag etc..) முதல் மாடியில் இருந்து கிழே இறங்கினோம்.

அப்பாடா இப்போதுதான் எனது நியூஜெர்சி நண்பரைப் கண்ணால் பார்க்க முடிந்தது. இரண்டு குடும்பங்களும் சிறிது நேரம் பேசி விட்டு விழா நடக்கும் இடமான Bohrer Park -ஐ நோக்கி கிளம்பினோம்.

இது உள்ள இடம் Gaithersburg. ஹோட்டலில் இருந்து கால்மணிநேர பயணம். எங்களது கார் முன்னே செல்ல நண்பரின் கார் பின் தொடர்ந்தது. போவதற்கான வழியை Yahoo Map-ல் எடுத்து வைத்து வைத்து இருந்தேன்.
ஆனால் வழக்கம் போல் Yahoo சொதப்பிவிட்டது.

பின்னே என்னங்க Yahoo Map-ல் எடுக்கும் Driving Direction பாதி நேரம் தவறாகவே உள்ளது. இல்லாத ஊருக்கு வழி சொல்வதில் அவர்கள் கில்லாடி.
இப்பெல்லாம் Yahoo-ல வழி சொல்லும் போதே ...ரோடு இருக்கானு பாத்துக்கிறது உங்க பொறுப்பு....அப்படீனு ஒரு டிஸ்கிளைமர் போட்டுறாங்க.



இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு, கார ஓட்டிக்கிட்டு போகும் போது காருக்கு முன்னால ரோடு இருக்கானு எட்டி எட்டி பார்த்துக்கிட்டே போக முடியுமா என்ன? நம்மளே ஒரு குத்துமதிப்பா கார இரண்டு கோட்டுக்கு நடுவில ஓட்டிட்டுப் போறோம். Yahoo Map இலவச சேவை என்ன செய்ய முடியும்?

எங்களது Pittsburgh tour-ன் போதும் வெங்கடாசலபதி கோவிலுக்கு போகும் வழியை Yahoo Map-ல் எடுத்துவைத்துக்கொண்டு சென்றோம். ஆனால்
முடிவில் அடைந்தது ஒரு Dead End. (ஒரு வேளை அதுதான் சொர்க்கவாசலோ? பகவானுக்கே வெளிச்சம்) ஆள் அரவமற்ற ஒரு அத்துவான காட்டில் கொண்டு போய் எங்களை சேர்த்தது இந்த Yahoo.
அங்கு இருந்த அணில், பறவைகளுக்கெல்லாம் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ஒருவழியாக கோவிலை அடைந்தது பெரிய கதை.

சொல்லிவைத்தாற்போல இப்போதும் Yahoo சொதப்பிவிட்டது. காரை பக்கத்தில் இருந்த ஒரு வணிக வளாகத்தில் நிறுத்தி விட்டு பூவா தலையா போட்டு ஒரு வழியைத் தெர்ந்தெடுத்து மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

போகும் வழியில் விழா நடத்தும் நண்பருக்கு அடிக்கடி போன் போட்டு வழி கேட்டுச்சென்றோம். யாரேனும் விழா வைத்தால் வழி சொல்வதற்கென்றே ஒரு உள்ளூர் நண்பரை நியமித்து விடுவது நல்லது. இல்லையென்றால் விழா நடத்துபர்கள் வருபவர்களுக்கு வழி சொல்லியே தாவு தீர்ந்துவிடும்.

இங்கு நடைபெறும் எல்லா விழாக்களிலும் இதனைப் பார்க்கலாம். ஒரு அப்பாவி ஜீவன் ஒரு ஓரமா செல்போனக் காதுல வச்சுக்கிட்டு இப்படிப் பேசிக்கிட்டு இருப்பார்.

..ஆமா third signal -ல ரைட்டு அப்புறம் McDonald க்கிட்ட லெப்ட்டு ,அப்படியே நேரா வந்தீங்கன்னா Wal-Mart வரும் அங்க ரைட்டு எடுத்துட்டு அந்த ரோட்டுல கீப் ரைட்டு அப்புறம் தேர்டு லைட்டுல இருமுனா சாரி திரும்புனா நம்ம இடம் வந்துரும்....

அங்கதிரும்பு இங்க திரும்புன்னு சொல்லிச் சொல்லியே இவருக்கு இருமல் வந்துரும்.

அங்க சுத்தி இங்க சுத்தி நாங்க ஒருவழியா விழாமண்டபத்தை அடைந்துவிட்டோம்...

Thursday, September 01, 2005

பதிவு 02: Kiss & Ride

(வாஷிங்டனில் வளைகாப்பு தொடர்ச்சி.... )

மூட்டை முடிச்சை பிரிச்சு hotel அறையில் அடுக்கி வைத்தது என் வேலை. இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி இரவு உணவு கொடுத்து தூங்க வைத்தது மனைவியின் வேலை. இதை எல்லாம் முடித்து, அடுத்த நாள் விழாவிற்குத்தேவையான துணிகளை மடித்து வைத்துவிட்டு படுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னர் நாங்கள் சென்ற Pittsburgh பயணத்தின் போது இரவு நேரங்களில், அதுவும் வந்து விடுதியில் இறங்கியவுடன் ஊர்வம்பு பேசிப்பேசியே பொழுதைப் போக்கிவிடுவோம். இப்போது என்னடாவென்றால் சின்னப் பொண்ணுக்கு Diaper மாத்துவது Similac கலக்குவது (Similac நம்ம ஊர் அமுல் பவுடர் போல் ஒன்று) பெரியவனை குளிப்பாட்டுவது படுக்கை ஏற்பாடு செய்வது.......

என்னத்த சொல்ல போங்கள் பக்கத்து அறையில் இருந்த நியூஜெர்சி நண்பருடன் கூட இரவில் பேச முடியவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பார்கப்போகும் நண்பர் பக்கத்து அறையிலேயே இருந்தாலும் பார்க்க முடியவில்லை.

அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்கிறீகளா? அதேதான் அவரும் சம்சாரி ஆயிட்டார். எனது மகன் வயதில் அவருக்கு ஒரு மகள். அது தவிர இந்தியாவில் இருந்து அவரது மாமனார் மாமியார் வந்து இருந்தனர். வளைகாப்புடன் வாஷிங்டன் Tour ம் அவரது சுற்றுலா அட்டவணையில் இருந்தது. பாவம் அவர் வண்டி ஓட்டி ஓட்டியே பஞ்சராகி படுத்துவிட்டார்.

புதிதாக எந்த ஊர் போனாலும் அந்த ஊரை அதிகாலையில் சுற்றி வருவது எனக்குப் பிடிக்கும். இந்த முறை அதிக அலுப்பாக இருந்தமையால் காலையில் எந்திரிக்க முடியவில்லை. விழா மதியம் தான் என்பதால் காலையில் கொஞ்சம் லேட்டாக எந்திரிக்க முடிந்தது.

காலை பத்துமணிக்குமேல் எழுந்து வெளியே வந்து hotel-ஐ ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஆகா ஆகா என்ன அருமையான இடம். பக்கதிலேயே பெரிய திரை அரங்கம். அருகிலேயே சின்ன சின்ன கடைகள். பெரிய திறந்தவெளி மைதானத்தின் ஒரு மூலையில் Eckerd shop அருகில் Taco Bell. மறுபுறத்தில் சிறிய பஸ் நிறுத்தம். அங்கே காத்திருக்கும் பயணிகள்.

எனக்கு அந்த இடத்தின் அமைப்பும் அமைதியும் சட்டெனப் பிடித்துவிட்டது.
எல்லாவற்றையும்விட அதிகம் பிடித்தது அங்கு பஸ் நிறுத்ததில் காணப்பட்ட இந்த அறிவிப்பு பலகைதான்.





Park and Ride பார்த்திருக்கிறேன் ஆனால் Kiss and Ride இப்போதுதான் பார்க்கிறேன். Park and Ride என்றால் காரில் வருபவர்கள் தங்கள் காரை அங்கேயே (அதற்கென்று இருக்கும்) உள்ள parking area வில் விட்டுவிட்டு பஸ்சில் வேலைக்குச் செல்வார்கள். மாலையில் திரும்ப வரும்போது பஸ்சில் இருந்து இறங்கி தங்கள் காரை நோக்கி நடையைக் கட்டுவார்கள்.

Kiss & Ride இது என்ன?

என்ன நீங்களும் என்னை மாதிரி எதை எதையே கற்பனை பண்ணி டயத்த வேஸ்ட்டு பண்ண வேண்டாம். கூகிள் ஆண்டவன் மேல பாரத்தப் போடுங்கள்.

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் கண்டுபிடித்தது.

The Kiss & Ride is a designated area (identified by signs) for parents picking up or unloading their children by private vehicle. The area is separate from the bus loading/unloading location so there is no conflict with the two operations.

For the Kiss & Ride to function properly, several procedures must be followed:

  • A school staff member, normally assisted by student safety patrols, provides supervision.
  • Children load and unload from the passenger side of the car only, so they will not have to cross the driveway in front of traffic.
  • Drivers remain in the car. Safety patrols will assist with the car door.
  • Cars stay in a single file line as they move to and from the Kiss & Ride.
  • Parents wanting to enter the school must park in an available parking space. They are not to enter the Kiss & Ride line in this case.
  • Arrive early.
  • The busiest time at the Kiss & Ride area is five minutes before the start of classes. Plan to arrive 10 to 15 minutes before the final bell, when the traffic is lighter.

அதிக விபரங்களுக்கு. கூகிள் ஆண்டவரின் ஜோசியம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குதான் எத்தனை பாதுகாப்பு விதிகள். இந்த மக்கள் அதைப் பின்பற்றும் விதமே தனி. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு எனது நாட்டைப் பற்றிய எண்ணம் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா இவனும் இந்த பேவரட் மேட்டர.அங்க குந்திக்கினு இந்த நொள்ளப் பேச்சு பேசாமா அடங்கமாட்டானுக இவனுக. அப்படீனு நீங்க கத்துறது காதுல விழல..விழவேயில்ல

இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒப்பிடக்கூடாதுதான். என்றாலும் இங்க இருந்து எதை எதையோ காப்பி செய்யும் நம்மால் நல்லவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும் நமது உடன் பிறந்த அலட்சியம் நம்மை விட்டுப் போக ரொம்ப நாளாகும் என்றே தோன்றுகிறது.

சாலையைக் கடப்பதற்கு என்றே உள்ள சுரங்கப்பாதையில் செல்லாமல் குறுக்குக் கம்பியைத்தாண்டும் பாதசாரிகளும், ஒரு மணிநேரம் சாலையக்கடக்க நின்றாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு நின்று வழி கொடுக்காமல் செல்லும் வாகனங்களும், பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கும் குழந்தைகளுக்காக நின்று வழிகொடாமல் முந்திச்செல்லும் வாகனங்களும் நிச்சயம் ஒருநாள் மாறவேண்டும்.

பல எண்ணங்களுடன் Germantown ஐ ஒரு சுற்று சுற்றி காலாரா நடந்த திருப்தியில் விடுதி அறைக்கு வந்தால்.......