Wednesday, May 31, 2006

நன்றி கலைஞரே நன்றி !!!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக தமிழ்:

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய முதல் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. 2வது பாடமாக ஆங்கிலமும், 3வது பாடமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும், 4வது பாடமாக பிற மொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் தமிழ் நாட்டில் கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

இது Internatinal School/ CBSE/ICSE/ களுக்கும் சேர்த்தா?
L.K.G/U.K.G போன்ற சிறார் பள்ளி முதல் நடைமுறைப் படுத்தினால் நல்லது.


நிகர்நிலைப் பல்கலைக்கழகம்/தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் : 30 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் : 20 %
பட்டியல் இனத்தோர் : 18 %
பழங்குடியினர் : 1 %

இதில் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்கள் இடம் பெறாதது வருத்தமே. சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் மதங்களிலும் (இனங்களிலும்) பிற்படுத்தப்பட்டோர்கள் உண்டு. அவர்களுக்கும் ஏதேனும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.

நன்றி கலைஞரே நன்றி !!!

****************


****************

Wednesday, May 24, 2006

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?

பக்கத்தில் இருக்கும் படத்தில் இந்தப் பையன் சொல்ல வரும் கருத்து என்ன? ஒதுக்கீட்டில் வருபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றா?சில சமயம் இந்த சமுதாயத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அல்லது எனக்குத்தான் சிந்தனை மழுங்கிவிட்டதா?இருக்கலாம்.இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களைப் பார்த்தால் எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது.மனிதன் என்ன படித்து, எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவனின் நாய்க்குணம் மாறுவதில்லை. தெரு நாய்கள் அந்த தெருவுக்குள் புதிய நாய்கள் வந்தால், அட அதுவும் நம்ம ஆள்தானே வந்து போகட்டும் , என்று விட்டுவிடுவதில்லை. அவைகள் கடுமையான போரில் இறங்கும்.இது நாய்க்கு மட்டும் இல்லை. மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒரு பொதுவான குணம்.உலகில் மனிதன் முதன் முதலில் நாயைப் பார்த்த காலத்தில் இருந்து இன்றுவரை நாய் நாயாகவே இருக்கிறது. என்னதான் வீட்டு நாய்க்கு சொக்காய் போட்டு அழகு பார்த்தாலும் நாயின் குணம் மாறுவது இல்லை.

மனிதன் அப்படி இல்லை.தனது பகுத்தறிவினால எத்தனையோ மாற்றங்களைக் கண்டு, இன்று மற்ற விலங்கினங்களில் இருந்து வித்தியாசப் பட்டு இருக்கிறான்.ஆனால், அவனுக்கு அவனையும் அறியாமல் இந்த நாய்க்குணம் பல நேரங்களில் வந்து விடும்.

நீங்க எப்பவாவது பதிவு செய்யாமல், பொதுவான இரயில் பொட்டியில் பயணம் செய்து இருக்கீங்களா? அங்க இந்த மாதிரி எல்லாக் கூத்தையும் பார்க்கலாம். சென்னையில் இருந்து இரயில் கன்னியாகுமரி வரை போகுதுன்னு வைங்க.இந்தப் பொட்டியில் பயணம் செய்யும் நம்ம மகா சனங்கள் தனக்கு ஒண்ட இடம் கிடைத்தால் போதும், அடுத்து வரும் நிலையத்தில் ஏறக்கூடிய சக பயணியைப் பற்றிக் கண்டுக்கவே மாட்டாங்க. என்னமோ அவுங்கள வேண்டா வெறுப்பா உள்ள சேத்துக்குவாங்க. இப்படி உள்ளே வந்த ஆசாமியும் அதே மாதிரி குணத்தை அதற்கடுத்த நிலையத்தில் வரும் பயணியிடம் காட்டுவான். இது இப்படியே தொடரும்.அதனாலதான் இதற்கு தொடர் வண்டி என்று பெயர். இதில் கொடுமை என்னவென்றால் சில சமயம் அந்த பொட்டிக் கதவையே பூட்டிவிட்டு படுத்துருவாங்க. என்னதான் தட்டுனாலும் தூங்குறமாதிரி படுத்துக்கிட்டு திறக்க அடம் பிடிப்பாங்க.அடுத்த நிலையத்தில் ஏறும் பயணி, புள்ளை குட்டிகளோட கதவைப் போட்டுத் தட்டுவான்... இது ஒரு தொடர்கதை...


அதே மாதிரிதான் இந்தக் கல்வி,வேலை சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடும். இங்க இப்ப நடக்குற கூத்த மட்டும் பாப்போம்.

  • மனிதன் என்பவன் படிப்பதால் வரும் அறிவுக்குப் பெயர் படிப்பறிவு(கல்வியறிவு).
  • பல விசயங்களைக் கேட்பதால் வரும் அறிவு கேள்வியறிவு.
  • தானே தனது அனுபவத்தில் இருந்து அறியும் அறிவு பட்டறிவு.

இவை அனைத்தையும் தாண்டி Common sense அப்படீன்னு ஒன்று இருக்கு. தமிழில் இதை பகுத்தறிவுன்னு சொல்லலாமா? இது என்னன்னா படித்த,கேட்ட மற்றும் அனுபவித்த எல்லாத்தையும் சீர்தூக்கிப் பார்த்து,இங்கே , இப்போது எது தேவை,எது சரி என்று தனது சொந்தப் புத்தியால் சிந்திக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைத்து அறிவாளிகளும் அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.அப்படிச் செய்தால் இப்படிப் பேசமாட்டார்கள்.இதுவரையில் நான் படித்த அனைத்து எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்கள்....


உதாரணத்திற்கு கரண் தாபரின் கேள்விகள்:
http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

//the NSSO is correct in pointing out that already 23.5 per cent of the college seats are with the OBC, then you don't have a
case in terms of need.//

//For example, a study done by the IITs themselves shows that 50 per cent of the IIT seats for the SCs and STs remain vacant and for the remaining 50 per cent, 25 per cent are thecandidates, who even after six years fail to get their degrees. So,clearly, in their case, reservations are not working.//


கரணின் கேள்விகளையும் மற்ற எதிர்ப்பாளர்களின் கேள்வியையும் தொகுத்தால் நமக்கு கிடைப்பது

  • இட ஒதுக்கீட்டில் கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.
  • ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.
  • அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.
  • ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

இந்த கரண், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடும் மாணவர்களிடம் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்டு,OBC பக்கம் இருக்கும் எதாவது நியாத்தை பட்டியலிட்டு இருந்தால் யாரவது சொல்லவும்.கரணின் பார்வையில், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இல்லை, நாடு கல்வியறிவில் சமத்துவமாக எல்லாத் தரப்பினரையும் சென்று அடைகிறது. செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகி விட்டது. இன்னும் எதற்கு என்ற தொனியே இருகிறது. இட ஒதுக்கீடு கேட்பவர்களிடம் ஒரு நியாமும் இல்லை, என்ற கருத்தும் மறைமுகமாக முன் வைக்கப்படுகிறது.

இப்படி இவரின் செய்தியை மட்டுமே படிப்பவர்களுக்கு இவர் சொல்வதெல்லாம் சரி என்றே படும். உண்மை அதுவல்ல.


இவரின் குற்றச் சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் முன் மற்ற சில அடிப்படைக் கேள்விகளைப் பார்க்கலாம்.

  1. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?
  2. சாதி அடிப்படையில் இருக்கும் போது மத அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா?
  3. பொருளாதார அடிப்படையில் இருந்தால் என்ன குறைச்சல்?

இப்படி பல கேள்விகளை அடுக்கலாம்.எல்லாம் ஒரே கோணத்தில் இருந்து பார்க்கும் போது சரியாகவும், வேறு இடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு கேணத்தனமாகவும் இருக்கும்.எந்த முறையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சிகள் எல்லாம் குப்பையாக இருந்தாலும் எப்படி நாம், நல்ல குப்பையாக தேர்ந்தெடுக்கிறோமோ அது போலத்தான் இதுவும். இருப்பதில் ஒரு முறையை கையாளவேண்டும்.அந்த முறை அனைவருக்கும் பயன்படும் வண்ணம் செயல் படுத்தப் படவேண்டும்.

இந்தியாவில் இந்தியர்கள் இருக்கும் வரை சாதியும் மதமும் இருக்கப் போகிறது. நாம் என்ன சீனர்களா?( பார்க்க1 பார்க்க2 )சாதி மதத்தை குப்பையில் போட்டு விட்டு, வேறு உருப்படியான வேலையைப் பார்க்க.அட போங்க சார்.

இப்போது,இங்கே உள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படை இட ஒதுக்கீடு இன்னும் தேவை.இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்றால் ஒதுக்கப்பட்ட SC/ST எல்லாம் நிரம்பி,அதில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பட்டம் பெற்று வரும் வரை.இப்போது எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்குப் போவோம்.


இட ஒதுக்கீட்டில் கல்வியை கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.

இதுதான் Common sense இல்லாமல் கேட்கப்படும் கேள்வி வகை. எல்லாரும் சொல்கிறார்கள் என்று அனைவரும் சொல்லும் Stereo type விவாதம். இதை விரிவாகப் பார்ப்போம். உதாரணமாக IIT ஐ எடுத்துக் கொள்வோம். அங்கு சேரும் வரைக்குத்தான் இட ஒதுக்கீடு. அதாவது சேருவதற்குத்தான் இட ஒதுக்கீடு. சேர்ந்தபின் அனைத்து மாணவர்களும் (Irrespective of the quota they used to join) ஒரே பாடத்திட்டத்தையும் ,ஒரே தேர்வு முறையையும்தான் சந்திக்கிறார்கள். இந்த முறையில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் எப்படி தரத்தில் குறைய முடியும்.

இட ஒதுக்கீடு என்பது வாய்புகளற்ற மாணவனுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு முடிவடைகிறது. அவனின் படிப்புக்கும் ,அவனது தேர்ச்சிக்கும் அது உதவுவது இல்லை. கொட்டாம்பட்டி கண்மாயில் நன்றாக நீச்சல் அடிக்கும் ஒருவனுக்கு,நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள சலுகை செய்கிறது அரசு அவ்வளவே. அந்தப் போட்டியில் அவன்தான் நீச்சல் அடிக்கப் போகிறான்.அங்கே அவன் எல்லா தரப்பு ஆட்களுடன் ஒரே களத்தில் ஒரே விதியின் கீழ் விளையாடப் போகிறான். இங்கே எப்படி தரம் குறையும். புரிந்தால் சொல்லுங்கள்.


ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.

சொல்வதற்கு வெட்கமாய் இல்லை? அரசு அறிவித்த சலுகைகள் இன்னும் சரியாக மக்களுக்குச் சேரவில்லை என்றுதானே அர்த்தம். இந்த இடங்களுக்கு SC/ST மாணவர்களை நிரப்ப அந்த கல்லூரி என்ன செய்தது? பள்ளிகளுக்கு பசங்கள் வரவில்லை என்றதும்,அவர்கள் ஏன் வரவில்லை?அவர்களைத் தடுப்பது எது? என்றெல்லாம் சிந்தித்து, அதனை அரசுக்குத் தெரியப்படுத்தாமல், SC/ST மாணவர்களுக்காக எந்த சுய முயற்சியும் எடுக்காமல், இபோது குற்றம் சொல்லும் இவர்கள் இந்த நாள் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

கல்வி என்பது சமுதாயத்திற்கு பயன்படுவதாய் இருக்க வேண்டும். IIT ல் படித்தவன் NASA வில் வேலை பார்க்கிறான் என்று சொல்லுவதுதான் பெருமை என்றால் அந்தப் பெருமை எனக்குத் தேவை இல்லை.இங்குள்ள SC/ST இடங்கள் போதவில்லை இன்னும் ஒதுக்கீடு செய்யுங்கள் ,மாணவர்களின் விண்ணப்பம் குவிகிறது, என்று ஒரு IIT சொல்லும் நாள் வருமேயானால் ,அப்போதுதான் அதை நல்ல சமுதாய கல்வி நிறுவனமாகக் கருதுவேன்.


அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.

நீ என்ன செய்தாய்? அவர்கள் முன்னேற வேண்டும் என்றுதானே சலுகை கொடுத்து அனுப்பினோம்.அவர்களுக்கு தனிப்பட்ட கவனம் கொடுத்தால் நீ என்ன குறைந்தாய் போவாய்.SC/CT மாணவர்களுக்கு அதிகப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அரசே! இன்னும் நிதியையும் ஆசிரியர்களையும் ஒதுக்கு என்று எந்த IIT யாவது குரல் கொடுத்து இருக்கிறதா? இல்லை உண்ணாவிரதம் இருந்திருகிறதா? சமுதாய அக்கறை இல்லை உங்களுக்கு. குற்றம் சொல்லும் அனைவரும் சேர்ந்து உதவ வேண்டும். அரசு மட்டும் சட்டத்தால் இதனை சாதித்து விட முடியாது.

ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

புள்ளி விவரங்கள் தேவைதான். ஆனால் இது IIT போன்ற கல்வி நிலையங்களில் OBC க்கு 23.5 சதவீதம் இல்லை என்றே நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.அப்படியே புள்ளி விவரங்களில் தவறு என்றால் அரசு அது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு குழப்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக...

'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால்

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?

இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக! விண்ணப்பம்

Tuesday, May 23, 2006

Soho Saxo மாமாமீடியா

நியூயார்க் வயலின் பெண் தொடர்ச்சி


மாமாமீடியா அப்படீன்னு ஒன்னு இருக்கு. யாருக்காவது தெரியுமா? வீட்ல குழந்தைகளுக்குப் பொழுதுபோலேன்னா இங்க போய் கொஞ்சம் விளையாடச் சொல்லுங்க.என்னடா இந்த பலூன்காரன், இப்படி மாமாமீடியான்னு ஒரு இடத்துக்கு பிள்ளைகளப் போகச் சொல்றானேன்னு பயப்பட வேண்டாம்.இது குழந்தைகளுக்கான இணையத்தளம்.நான் கொஞ்சநாள் இங்க குப்பை கொட்டி இருக்கேன்.நியூயார்க்கின் இன்னொரு பரிணாமத்தை Soho ஏரியாவுலதான் பாக்கணும்.அப்படி ஒரு அரதப் பழசான கட்டடங்களைப் பார்க்கலாம்.இது கார்ப்போரேட் கலாச்சாரம் உடைய Manhattan பகுதிக்கு நேர் மாறான இடம். மாமாமீடியா புண்ணியத்தில்தான் எனக்கு இந்த ஏரியா அறிமுகமானது.இங்க நான் வேலை பார்த்த இந்த மாமாமீடியா ஒரு அசாதரணமான அலுவலகம்.வேலை செய்பவர்கள் ஒரு உன்னத மகிழ்வுணர்வோடு வேலை செய்து வந்தார்கள்.

அமெரிக்காவுல யாரும் "நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?"ன்னு கேட்க மாட்டாங்க. அவர்கள் கேட்கும் கேள்வி "What you do for living?" என்று அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். புரியுதா? அட மக்கா உங்களத்தேன் புரியுதா? இங்கே வாழ்வதும் (living) வாழ்வதற்காக செய்யும் வேலையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கப்படும். நம்மூர்மாதிரி வேலையே வாழ்க்கையாக இருக்க மாட்டார்கள். இங்கே பெரும்பாலானவர்களுக்கு வாழ்வது (வாழ்ககை) என்பது தனி. செய்யும் வேலை, வாழும் வாழ்க்கைக்கு பொருளீட்ட மட்டுமே. பலர் தனக்குப் பிடித்த மற்ற ஒரு தொழிலை, தங்களுக்கு அது பிடித்து இருக்கிறது என்பதற்காகவே செய்வார்கள்.இவ்வாறு செய்யப்படும் வேலை (?) அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் ஒரு நிறைவையும் தருகிறது

நான் பார்த்த வயலின் பெண்ணும் அப்படித்தான். அன்று அவரை நேரில் பார்த்தவுடன், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் நோக்கில், ஆர்வம் பொங்க நேரில் பேசிவிட முடிவெடுத்து அவரை அணுகினேன். நான் அவரிடம் அவரைப் பார்த்த இடங்கள் , அவரின் வயலின் வாசிக்கும் நேர்த்தி போன்ற பலவற்றை சுருக்கமாகச் சொல்லி அவரிடம் பேச வேண்டும் என்ற விருப்பத்தைச் சென்னேன். (யாரங்கே ஜொள்ளுன்னு சிரிக்கிறது?) அவர் முதலில் என்னை நம்பவில்லை.ஒரு கேள்விக்குறி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தார், பின்பு எப்படியோ நம்பிகை வந்தவராக, என்னுடன் பேச சம்மதித்தார்.அன்று மதியம் Soho ஏரியாவில் உள்ள ஒரு ரோட்டோர கடையில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த மக்களின் வாழ்க்கை முறையே அலாதியானது.குளிர்காலத்தில் பனியுடன் மண்டை காஞ்சு(?) போன மக்கள் கோடை காலத்தை ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். என்னிக்காவது "sunny day" என்றால் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இந்த ரோட்டோர உணவுக்கடைகளில் இதற்காகவே வெளியே நல்ல வசதி செய்து கொடுப்பார்கள். திறந்த வெளியில் (நடைபாதையில்) அப்படியே பராக்கு பார்த்துக்கிட்டு சாப்பிடலாம்.Soho பகுதியில் இப்படி நிறைய கடைகள் இருக்கும்.எனக்கு நியூயார்க்கில் ரொம்பப் பிடித்த விசயம், காலை வேளையில் தள்ளுவண்டியில் விற்கும் "bagel" ம் காப்பியும்தான். சும்மா google ல்ல bagel ன்னு தேடிப்பாருங்க . நம்ம ஊர் இட்லி மாதிரி இந்த நியூயார்க் பேகல் பிரசித்தி பெற்றது. என்ன மொத மொத சாப்பிடறவங்களுக்கு இது ஏதோ வேகாத சப்பாத்தி மாவு போல இருக்கும். பல்லுல பூராம் ஒட்டிக்கும். ஆனா பிடிச்சுப்போச்சுன்னா நீங்க ரொம்ப பாக்கியவான். பின்ன ஒரு டாலர் கொடுத்தால் கிரீம் போட்ட பேகலும் ஒரு சுடச்சுட ஒர் காப்பியும் தருவார்கள்.பேகல் பிடித்த எனனைய மாதிரி ஆளுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

காலையில ஒரு பேகல், காப்பி மத்தியானம் இப்படி ஏதேனும் ஒரு பிளாட்பாரக் கடையில் பாதி வெந்தும் வேகாத பீன்ஸ், கொஞ்சம் Rajma (red kidney bean) கலந்த சோறு சாப்பிட்டால் ஆண்டி கூட ஒரு நாளை சிக்கனமாக ஓட்டிவிடலாம் இங்கே.அன்றைக்கும் அப்படியே நான் ஒரு சாப்பாட்டை சொல்லிவிட்டு அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் bake செய்யப்பட்ட உருளைக்கிழங்கும், கீரைகள் நிறைந்த காய்கறிக் கலவைவையும் (salad) வாங்கிக் கொண்டார்.எங்கள் பேச்சு எங்கெங்கோ சுத்திவிட்டு கடைசியில் அவரின் வயலின் விசயத்தில் வந்து நின்றது.

அவர் சொன்ன தவல்கள் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.அறிவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்.சில காலம் ஒரு பெரிய நிறுவனத்தில், பெரிய அதிகாரம் வாய்ந்த பதவியில் இருந்தவர்.இவை எல்லாத்தையும் உதறிவிட்டு பகுதி நேர வேலையாக தாபால் நிலையத்தில் வேலை செய்கிறார். காரணம் கேட்டால். "எனக்கு இது மகிழ்வைத் தருகிறது" என்கிறார். முன்னர் இருந்த வேலையில் அதிக வேலைப்பளு வாழ்க்கையை வாழ முடியவில்லை, என்றும் இப்போது தன்னால் காலையில் மனதுக்குப் பிடித்த வயலின் வாசிக்கவும்,மதியம் தபால் நிலையத்தில் வேலை செய்யவும்,இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சுற்றுவும் முடிகிறது என்கிறார்.வருடம் ஒரு முறை ஏதேனும் ஒரு புதிய நாட்டுக்குச் செல்கிறார்.அதற்காக எவ்வளவு பணம் தேவையோ அதை தனது கடன் அட்டை மூலம் செலவு செய்துவிட்டு அதை திருப்பிச் செலுத்தும் வரை மட்டும் இரண்டு வேலை பார்க்கிறார்.

இங்கே ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை பார்ப்பது மிகச் சாதாரணம்.இவர் தனக்கு எது தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதற்காக மட்டுமே உழைக்கிறார். அதிகப் பணம் சேர்க்கும் ஆர்வமோ , பணம் சம்பந்த்ப்பட்ட கனவுகளோ கிடையாது. அவரைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருந்தது எனக்கு. பணத்திற்காக எது வேண்டுமானலும் செய்பவர்கள் மத்தியில், அதுவும் உலகின் பொருளாதாரத் தலை நகரில் இப்படியும் சிலர்.இவ்வளவுக்கும் இடையில் இவர் ஒரு முதியோர் இல்லத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார்.சம்பளம் கிடையாது.எதையும் எதிர்பார்க்காமல் ஒரு தவம் போல் செய்து வருகிறார்.அவரிடம் எனக்கு இருந்த பிரமிப்பு மிகவும் கூடியது. என்னிடம் அவர் இந்தியா பற்றி பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அதற்குப்பிறகு நான் அவரை பலமுறை அதே பாதாள இரயில் பாதையில் பார்த்து இருக்கிறேன். இப்போதெல்லாம் ஒரு சிநேகப் புன்னகையையுடன் என்னைப்பார்த்து வயலின் வாசிப்பிற்கு இடையேயும் தலையசைப்பார்.எனக்கும் அவர் போல மனமகிழ்வுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.நம்ம குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கிறகாரியமா? மாமா மீடியாவில் எனக்கு இருந்த வேலை ஒப்பந்தம் முடிந்து (அதாவது சீட்டைக் கிழித்து) அனுப்பிவிட்டார்கள்.

அதற்கு பிறகு வேலை கிடைத்த இடம் வேறு மாநிலம்.மூட்டை முடிச்சுகளோடு வீட்டைக் காலி செய்து வடக்கு கரோலைனா வந்து விட்டோம்.இருந்தாலும் எனக்கு நியூயார்க் பாதாள இரயில் பாதையில் அவரைப்போல பொழுது போக்கும் ஆசை விடவே இல்லை.என்ன செய்யலாம் என்று யோசித்த போது "saxophone" வாசிக்கலாம் என்று தோன்றியது.எனக்கு ரொம்ப காலமாக இந்த "saxophone" ல் ஒரு ஆசை. அதன் பளப்பளா கலரும் அதன் வடிவமும் ஒரு கவர்ச்சியாக இருக்கும்.என்ன கற்றுக் கொள்ளலாம் என்று குழம்பிய போது இந்த "saxophone" கனவில் வந்து ஆசை காட்டினார்.

நானும் இந்த "saxophone" வுடன் என்னை நியூயார்க் பாதாள இரயில் பாதையில் கற்பனை செய்து கொண்டேன்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை.உடனேயே ஒரு "saxophone" குருவைத் தேடி பாடம் படிக்க இயலவில்லை. நம்ம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? காலம் செல்லச் செல்ல நான் இந்தக் கனவையே மறந்து விட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென்று அந்தக் கனவு நனவாகத் தொடங்கியது.எனக்கும் ஒரு குரு கிடைத்தார்.தொடரும்.....

****************


****************

Thursday, May 18, 2006

தேர்தல் அலசல்3: கலைஞர் இன்னும் கலைஞரா?

ன்னும் எத்தனை காலத்துக்குத்தான் கலைஞர் கலைஞராகவே இருப்பது?

கலைஞன் என்பவன் யார் ? கலைஞன் என்பவன் ஒரு கலையில் வித்தகன்.அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி. கட்டடக் கலைஞன்,புகைப்படக் கலைஞன்,சினிமாக் கலைஞன் என்று பல.இந்தக் கலைஞர் எதில் வித்தகர்? அரசியலா? சினிமாவா? அல்லது சாணக்கியத்தனதில் வித்தகரா? அல்லது குடும்பத்தை கட்டிக்காத்து அனைவரையும் நல்ல வசதியான நிலையில் அமர்த்துவதில் வித்தகரா? எனக்கு என்னமோ இவர் பல்கலைக் கலைஞராகவே தோன்றுகிறது.

திரைத்துறையில் கண்ணம்மா வரை வசனம்,பாடல்,இலக்கியத்தில் தொல்காப்பிய பூங்கா,அரசியலில் 5 வது முறையாக முதல்வர்,குடும்பத்தில் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்த நல்ல அப்பா,மாமா மற்றும் தாத்தா (மு.க முத்து எப்படி சோடை போனார்?) .இப்படி இன்னும் அடுக்கலாம்.இவர் இதில் எல்லாம் வித்தகர்/கலைஞர்.இந்த வித்தகத்தன்மையால் யாருக்கு இலாபம்? இன்னும் எத்தனை காலத்துக்கு கலைஞராகவே இருந்து இலாபம் அடந்த்தவர்களே மேலும் மேலும் இலாபம் அடையப் போகிறார்கள்? 82 வயதாகும் கலைஞரே நீங்கள் கலைஞராக இருந்து இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் போதும்.மதுரையில் தன் கட்சிக்காக உழைத்தவன் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி,கேபிள் டி.வி க்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தபோதும் சரி நீங்கள் காட்டிய குடும்ப பாசம் உலகமே அறியும்.இப்போதும் உங்களால் குடும்பத்தை மீறி ஒரு எதுவும் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது.

நீங்கள் இந்த வட்டத்தை விட்டு வரவேண்டும். உங்களிடம் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்களின் கட்சி அரசியல்,குடும்பப் பாசம் எல்லாவற்றையும் தாண்டி உங்களிடம் நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.உங்களிடம் தலைமைப் பண்புகள் இருக்கிறது.தமிழில் நல்ல புலமை இருக்கிறது.என்னதான் ஜெயகாந்தன்களும் ,ஜெயமோகன்களும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், நீங்கள் இந்த நூற்றாண்டின் தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

நீங்கள் இப்போது நாத்திகம் என்னும் செத்த பாம்பை அடிப்பதாக பேசுபவர்களுக்கு, நீங்கள் இளமைக் காலங்களில் உயிருள்ள பாம்பை கையில் பிடித்த கதைகள் தெரிய வாய்ப்பு இல்லை.அல்லது மறந்து இருக்கலாம்.அப்படிப் பிடித்ததால்தான் நீங்கள் இந்த நிலைமையை அடைய முடிந்துள்ளது.உங்களின் அந்தக்கால உழைப்புகள்தான் இன்று யாரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட வைத்துள்ளது.அதுவும் உங்களின் கைகளால் சட்டம் இயற்றப்பட்டது எங்களுக்கெல்லாம் பெருமை.என்ன வருத்தம் என்றால் தமிழன், தனது நாட்டில் உள்ள கோவில்களுக்கு போவதற்கும் ,கருவறை உரிமை கொண்டாடவும் சட்டம் போட வேண்டிய நிலை.தேவதாசி முறையை ஒழிக்க அரசு சட்டம் போட்டபோது ஒரு பெரியவர் "இது புனிதமான கடவுள் சேவை" என்று சொல்லி தடுக்கப் பார்த்ததும், இன்றும் உடன்கட்டை ஏறுவதை புனிதமாக கருதும் அரைவேக்காட்டு மடங்களும் இன்னும் இங்கே உள்ளது.

அந்தக் கும்பல்களுக்கு ஒடுக்கப்பட்டவனின் வலி தெரியாது.இந்தச் சட்டம் யாருக்கு இலாபமோ இல்லையோ தமிழகத்தில் பீடித்துக் கிடக்கும் கோவில் கருவறைத் தீண்டாமைக்கு ஒரு சாவு மணியாகவே பார்க்கிறேன்.இது வரவேற்கப்படவேண்டியது.

இருந்தாலும் என்னால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.உங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சியின் தலைவராகவோ,கட்சி சார்பாக முதல்வராகவோ வர முடியுமா?உங்கள் குடும்பம் தாண்டி வேறு யாரையாவது தலைவர் அல்லது முதல்வர் பதவிக்கு நீங்கள் அடையாளம் காட்ட முடியுமா? அப்படிச் செய்தால் நல்லது.இல்லையென்றால் சுழற்சி முறையிலாவது ஏதேனும் செய்ய முடியுமா? இதற்கு உங்களின் பதில்"பொதுக்குழு முடிவு செய்யும்" என்றால் அதை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் வகுத்த தவறான முன்னுதாரணத்தால் இப்போதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்டமன்றம் செல்லுவதில்லை.இரண்டாம் மட்ட தலைவர்களை நியமித்து விடுகிறார்கள்.முதல்வர் பதவி என்றால் நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்றால் இரண்டாம் கட்ட தலைமை என்பது தமிழகத்தில் இனி ஒரு எழுதப்படாத சட்டமாகவே ஆகிவிடும்.

ந்த அரசியல் குப்பைகள் கிடக்கட்டும்.இப்போது நீங்கள் நினைத்தால் திராவிடக் கொள்கைகள் எல்லாவற்றையும் உங்களின் கையெழுத்துகளில் சட்டமாக மாற்ற முடியும்.தமிழ் திராவிடத்தை தாண்டி அடுத்த பரிணாமத்தை அடைந்து பல வருடங்களாகி விட்டது.தமிழ் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.இது எந்த இந்திய மொழிகளுக்கும் கிடைக்காத சிறப்பு.இந்த நிலையில் நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி சமஸ்கிருதம் போன்ற பேச்சு வழக்கு ஒழிந்த மொழிகளுடன் போட்டி போடாமல், தமிழை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உங்களுக்கு நன்கு தெரிந்த கலைகளில் கலைஞராக இருந்து, மேலும் மேலும் பயன்களை அந்த வட்டத்திற்கு மட்டுமே அளிக்கப் போகிறீர்கள்?

தமிழ்த் தாத்தவாக மாறுங்கள்:
தமிழ்,தமிழர் வாழ்க்கை போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவும், அதை ஆவணப்படுத்தவும் ஒரு நிரந்தர, ஆக்க பூர்வமான அமைப்பை ஏற்படுத்துங்கள்.சோற்றால் அடித்த பிண்டமாகிய நாங்கள் இலவச டி.வி யிலும், அரிசியிலும் குங்குமம் தரும் ஓசி சாம்பூவிலும் காலத்தை ஓட்டி விடுவோம்.ஆனால் தமிழ்? அது அப்படி இல்லையே உங்களுக்குப் பின்னால் தமிழ் வரலாறு தெரிந்த எந்த அரசியல் தலைவர்களும் இனிமேல் தோன்றப் போவது இல்லை. அரசியல் ,குடும்பம் போன்ற அனைத்து விவாதப் பேச்சுக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தமிழ்த் தாத்தவாக மாறுங்கள்.திராவிடம் பேசும் பொதுச் செயலாளர் ஓட்டுப் போடாதவனை திட்டும் அளவுக்கு போய்விட்டார்.இப்போது உள்ள அரசியல் தலைகள் அனைவருக்கும் இனிமேல் இந்த 5 வருட அரசியல் ஆட்சிக் கூட்டணிக்கு பேரம் பேசவே நேரம் இருக்காது.ஒரு முக்கியமான தலைமுறையின் கடைசித் தலைவராகவே உங்களைப் பார்க்கிறோம்.நீங்கள் வைத்த வள்ளுவன் சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கிருந்து உங்களின் தமிழ்ப் பணி மீண்டு(ம்) தொடங்கட்டும்.

மூத்த விவசாயியாக மாறுங்கள்:
என்னதான் கடனை இரத்து செய்தாலும்,அதிக விலையில் நெல் கொள்முதல் செய்தாலும், இவை எல்லாம் தற்காலிகத் தீர்வுகளே என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.ஆற்று மணல் திருடர்களையும், கண்மாய் ஆக்கிரமிப்புக் காரர்களையும் உங்களால் எதாவது செய்ய முடியுமா? கிராமங்களில் நீர்பிடிப்பை பெருக்க புதிய குளங்கள் அமைக்க வேண்டும்.இருக்கும் குளங்களை தூர்வாரி மக்களுக்கு நிரந்த நன்மை செய்யவேண்டும்.என்னதான் கார் தொழிற்சாலைகளைக் தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், நமது வாழ்வியல் ஆதாரமாகிய விவாசாயம் அழிந்து போக விடக்கூடாது.

நல்ல வழிகாட்டியாக மாறுங்கள்:
இந்த வயதிலும் உங்களின் உழைப்பும்,காலையில் 4 மணிக்கே எழுந்து பல வேலைகளைச் செய்யும் அயராத சுறுசுறுப்பும் இன்று தமிழகத்தில் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.யாரும் அழைக்காவிட்டாலும் நீங்களாக மாதம் ஒரு கல்லூரி/பல்கலைக் கழகங்கள் என்று தேர்ந்தெடுத்து மாணவர்களிடம் பேசுங்கள்.மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருங்கள்.எந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்வது இல்லை.செய்ய நினைப்பதுகூட இல்லை.மாணவர்களிடம் உங்கள் உழைப்பின் இரகசியத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.கல்லூரிகளில் இருக்கும் அரசியல் சாயம் பூசப்பட்ட மாணவர் இயக்கங்களுக்குப் பதிலாக நல்ல குழுக்களை ஊக்குவிக்கவேண்டுமானால் பொது வாழ்வில் உள்ள, உங்களைப் போன்ற தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.

****************


****************

Friday, May 12, 2006

தேர்தல் அலசல்2: You too Vaikoo?


னுசன் இப்படி ஆவாருன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.நடைப் பயணம், ஊரில் கண்மாய் வெட்டுதல், பிரதமர் மற்றும் எல்லா அரசியல் பிரமுகர்களிடம் நல்ல உறவு.நல்ல பேச்சாற்றல் இப்படி பல இருந்தும் தேர்தல் என்று வந்ததும் இவர் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை.சரி அதுதான் தேர்தல் நேரம் எல்லாரும் மனட்சாட்சியை தூக்கி பரணில் போட்டுவிட்டு தேர்தல் கூட்டணிகள் அமைக்கலாம். ஏனென்றால் தேர்தல் கூட்டு என்பது வெட்கம் அறியாதது.

ஒருவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றால் பிற்காலங்களில் அதுவே சாணக்கியத்தனமாகவும், தோல்வி அடைந்தால் கேவலாமாகவும் பார்க்கப்படும். சரி இப்போதுதான் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் ஏன் அம்மா புராணம். கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தால் போதும். தேவை இல்லாமல் அங்கேயே குடியிருப்பது நல்லதல்ல.

எப்படியோ முதல் முதலாக சட்டசபையில் கணக்கு தொடங்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

ஏற்கனவே தமிழகத்தில் தனி மனிதப் பண்புகள் செத்து சுண்ணாம்பாகி விட்டது.போன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர், முதல்வராக இருந்தால்தான் சட்டசபைக்குப் போவேன் இல்லாங்காட்டி கையெழுத்து மட்டும் போடுவேன் என்று புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்தார்.அப்போது இருந்த முதல்வரோ மத்தியில் இருக்கும் பிரதமர்,மற்றும் அமைச்சர்களை மதிப்பது, பார்ப்பது தன்க்கு இழுக்கு என்று இருந்தார்.தமிழகம் அரசியல் பண்புகளை இழந்து குப்பையாகி விட்டது.

தனது தந்தையின் இறுதிக் காரியத்துக்குப் போகாத இன்பத்தமிழனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

அது என்ன அந்தக் கூட்டணியில் இருந்தால் எல்லாரும் மாறி விடுகிறார்கள்?
அய்யா, தமிழக இளைய தலைமுறைக்கு நல்ல பண்புகளைக் காட்டுங்கள்.

புரியவில்லை ?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்துச் சொல்லுங்கள்.

அவரின் கொள்கையும்(?) உங்களின் கொள்கையும்(?) வேறாக இருக்கலாம்.அதற்காக இப்படி எல்லாம் நீங்கள் மாறிப் போனது உங்களுக்கே வெட்கமாக இல்லை?ஒருவேளை நீங்கள் வாழ்த்து தந்தி அனுப்பி இருக்கலாம். அது போதாது.

தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்காக என்ன உருப்படியாக செய்யலாம் என்று சிந்தித்து தொண்டாற்றுங்கள். நீங்கள் இப்போது செய்யும் செயல்கள் உங்களின் வருங்காலத்திற்கு அடித்தளமாக மாறும்.பொட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு வெளியே வாருங்கள் போதும் தேர்தல் அலசலும் அறிக்கைகளும்.

****************


****************

விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க வால் முடியுமா?


தேர்தல் அலசல்1:
விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க- வால் முடியுமா?

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப் படுபவர் கேப்டன் விஜயகாந்த்.சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் பா.ம.க நிறுவனர் கூட்டணி வைத்து இருப்பது அன்று வந்த "பராசக்தி" முதல் நேற்று வந்த "கண்ணம்மா" வரை திரைப்படத்திற்கு வசனம் எழுதும் ஒரு மூத்த, சினிமாத்துறையுடன் பலகாலம் தொடர்பு உள்ள கலைஞர் கருணாநிதியுடன்.அது போல, அதே கூட்டணியில் நெப்போலியன் , சந்திரசேகர் போன்ற பல சினிமாத் தலைகள் உண்டு.சினிமாத்துறையில் உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே விஜயகாந்தை அவரது துறையைக் காட்டி விமர்சித்தது சந்தர்ப்பவாதம். அதன் பலனை இப்போது அவர் அறுவடை செய்கிறார்.

ஜெயலிதாவுடன் பா.ம.க கூட்டணி வைத்த காலங்களில் ஜெயலிதாவும் அரிதாரம் பூசிய ஒரு முன்னாள் நடிகை என்பதை வசதியாக மறந்து விட்டு "அரிதாரம்" பூசியவர்கள் அரசியலுக்கு வரலாமா? என்று கேட்பது இவர்களால் மட்டுமே முடியும்.என்னதான் கூட்டணி வென்றாலும், மாம்பழத்தில் ஒரு உள்ள "கரு வண்டு" போல் விஜயகாந்தின் வெற்றி பா.ம.க வை உறுத்தத்தான் செய்யும்.அதுவும் பா.ம.க விருத்தாச்சலத்தை ஒரு மானப் பிரச்சனையாக கருதியது என்று கார்த்திக் தேவருக்கு கூடத்(?) தெரியும்.

சினிமா என்பது ஒரு கலை. அதற்காக கல்லூரியும் அரசின் விருதுகளும் உண்டு.மருத்துவத்துறையை தவறாகப் பயன்படுத்தும் மருத்துவர்கள்போல் இந்த சினிமாத்துறையிலும் அதை தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு.இது எல்லாத் துறையிலும் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவை முக்கியமாகக் கருதி பா.ம.க நடத்திய போராட்டங்கள், அவர்கள் விஜயகாந்தை விமர்சித்த விதம் இவைகள்தான் விஜயகாந்தை இந்த விருத்தாச்சலத்தில் (பா.ம.க கோட்டை) நிற்க வைத்து வெற்றியையும் கொடுத்திருக்கிறது.

சினிமாக் கவர்ச்சி மட்டும்தான் விஜயகாந்தின் வெற்றிக்கு காரணம் என்று இவர்கள் சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.சினிமாவில் இருந்து வந்த அனைவரும் அரசியலில் சாதிக்கவில்லை. M.G.R க்கு அடுத்து வந்த சிவாஜி,பாக்யராஜ், விஜய ராஜேந்தர் போன்ற அனைவரும் அரசியலில் நிற்க முடியவில்லை.விருத்தாச்சலத்தில் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னிறுத்திய சாதீயம் மற்றும் அந்தப் பகுதி மக்கள் விரும்பிய மாற்றம்.விருத்தாசலத்தில் பா.ம.க விஜயகாந்திற்கு எதிராக செய்த தேர்தல் சித்து விளையாட்டுகள் அதிகம்.அதையும் மீறி விஜயகாந்த் வெற்றி பெற்று இருப்பது பா.ம.க விற்கு ஒரு எச்சரிக்கைதான்.

பா.ம.க சினிமாவிற்கு எதிரான போக்கை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான போராட்டங்களிலும், உண்மையான மக்கள் தொண்டிலும் தன்னை இணைத்துக் கொள்ளாதவரை அவர்கள் கூட்டணியுடனேயே வாழவேண்டியதுதான். தனது இன மக்களுக்குச் சலுகைகளை மட்டும் பெற்றுத் தறுவதே அந்தக் கட்சியின் நோக்கம் என்றால் ஏதும் புதிதாகச் செய்யத்தேவை இல்லை.உண்மையில் நல்ல மாற்று அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்றால் முதலில் தனது கோட்டையில் வெற்றி பெற்ற தனது எதிரிக்கு வாழ்த்துச் சொல்லி அவரைப் பாரட்டுவதே நல்லது.தனது இன மக்களுக்காக சிந்திப்பவர் மருத்துவர் இராமதாஸ் என்றால் அதே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியுடன் சேர்ந்து உழைக்கத் தயங்கக் கூடாது.

எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே கல்லூரித் தொழில்,குடும்ப அரசியல்,தேர்தல் கால இலவச அறிவிப்புகள் என்று சகலத்துடன் வந்து களம் இறஙகியிருக்கும் விஜயகாந்த்தினை தமிழகக் காவல் தெய்வமாக நினைக்கவும் முடியாது. வரும் காலங்களில் இவரும் பழைய மொந்தையில் புது கள்ளாக மாறிவிடலாம்.

சினிமாவில் எல்லாம் சாத்தியம். நிஜத்தில் பல அரசியல் தடைகள் உண்டு.விஜயகாந்த் வெற்றி பெற்றாலும் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு நலல பிரதிநிதியாக இருக்க வேண்டும். இவருக்கு இது முதல் அனுபவம் என்பதால் இவரை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைதத விஜயகாந்திற்கு வாழ்த்துகள். விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் தோற்று இருந்தால் கூட பா.ம.க வை அதன் தொகுதியிலேயே சந்திக்க நினைத்த தைரியத்தை பாராட்டித்தான் இருப்பேன். ஏனென்றால்....

பா.ம.க வின் நிறுவனரோ அல்லது அக்கட்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கியப் பிரமுகரோ எந்தக் கூட்டணித் துணையும் இல்லாமல், தனியாக தென் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் எதேனும் ஒன்றில் நின்று ஜெயிக்க முடியாது.தனியாக தென் மாட்டங்களில் நிற்பதற்கே இவர்களால் யோசிக்க முடியாது.வட மாவட்டங்களில் மட்டுமே இவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் உள்ளது.அதிலும் கூட இவர்களின் முக்கிய பலம் கூட்டணி.கூட்டணி இல்லாமல் எப்படி பார்வட் பிளாக்கால் ஆண்டிபட்டி உசிலம்பட்டியில் (தேவர் இனம் அதிகம் உள்ள பகுதி) கூட வெற்றி பெற முடியவில்லயோ அது போல் பா.ம.க வாலும் வட மாவட்டங்களில் இந்த அளவு வெற்றி பெற முடியாது.

தனது வெற்றி மாம்பழங்களை எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் விருந்து வைக்கிறதோ அதைப் பொறுத்தே வரும் காலங்களில் பா.ம.க வின் அரசியல் வாழ்க்கை இருக்கும். இல்லை என்றால் விஜயகாந்தை நோக்கி மக்கள் போவதை தவிர்ப்பது சிரமமே.

****************


****************