Monday, January 05, 2009

காட்டு வளம்,கனிம வளம் அப்புறம் மனித வளம்

கார்ப்போரேட் நிறுவனங்களில் காணப்படும் Human Resources (HR) என்னும் ஒரு குப்பைக்குச் சமமான துறை, ஆளை வேலைக்கு எடுப்பதும், தேவையில்லாத போது அவர்களை தூக்கி எறிவதுமான Hiring & Firing துறையாகவே இருக்கிறது. கண்துடைப்பிற்காக சும்மா சில குஜ்ஜால் விளையாட்டுகளை எப்போவாவது நடத்தி முட்டையிடும் லாகான் கோழிகளை குஷிப்படுத்தி வைக்கிறது.

ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நூற்பாலைகள், கரும்பு ஆலைகளில், என்னதான் கட்டப்பஞ்சாயத்துகள் நடந்தாலும் , தொழிலாளிக்கு ஒரு குறைந்தபட்ச வாழ்க்கைச் சூழல் கிடைத்தது.

* மில் அருகே குடியிருப்பு.
* குழந்தைகளுக்கு மில் சார்ந்த பள்ளிக்கூடம்.
* குறைந்த விலையில் பொருட்கள் வாங்க கூட்டுறவு சொசைட்டி
* அவசரத் தேவைக்கு கடன்வாங்க கூட்டுறவு சொசைட்டி

என்று சமுதாய நலன் சார்ந்த சில சிறப்பான அம்சங்கள் இருந்தது.


எந்த ஒரு நிறுவனமும் அதன் தொழிலாளிகளை ஒரு பொருளாக/ஜடமாக/கறிவேப்பிலையாக decent ஆகச் சொன்னால் Resource ஆக மட்டும் நினைக்கக்கூடாது. இபோது இருக்கும் கார்ப்போரேட் உலகில், வேலை செய்யும் மனிதன் ஒரு Head Count அல்லது ஒரு Resource Count அவ்வளவுதான். மின்சாரம், தண்ணீர் , காபி,கக்கூசு போல இவன் முதலாளிகளின் பொருளாதாரத் தேவைக்கான புராஜக்டில் ஒரு Resource Count .

ஒவ்வொரு ஊழியருக்கும் பின்னால் ஒரு குடும்பம் உள்ளது. மனைவி,குழந்தை,அப்பா , அம்மா... இப்படி எண்ணற்ற உறவுகள் உள்ளது.
மாதச் சம்பளக்காரர்களுக்கு வேலை என்பது வாழ்வதற்கான ஒரே பொருளீட்டும் ஆதாரம். ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் ஒருவன் , அதனை நம்பி தனது குடும்பத்தை குடியமர்த்துகிறான்,குழந்தைகளை பள்ளிக்குச் சேர்க்கிறான், நாளைய சோற்றுக்கு இந்தவேலை உதவியாக இருக்கும் என்று நம்புகிறான். அனைத்தும் அவனின் வேலை என்ற ஒன்றைச் சுற்றிப் பின்னப்படுகிறது. தீடிரென்று அவனை வேலையில் இருந்து போகச்சொல்வது கார்ப்போரேட் சட்டங்களின் படியும் சரியாக இருந்தாலும், மாதச் சம்பளக்காரனின் பார்வையில் அது ஒரு சூறாவளியே.

நாளை வரும் ஒரு புராஜக்டிற்கு இன்றே உத்தேச முறையில் ஆட்களை எடுப்பதும், அது வரவில்லை என்றால் அவனை Performance சரியில்லை என்று வீட்டுக்கு அனுப்புவதும் தவறு. நினைத்தபோது திருகி தண்ணீர் பிடிப்பதற்கும், நாளைக்காக‌ தொட்டியில் சேர்த்து வைத்துக் கொள்ளவும் அவன் தண்ணீர் அல்ல. இரத்தமும் சதையும் உடைய ஒரு மனிதன்.

Performance based Appraisal என்ற பெயரில் சிலரை குறைத்து மதிப்பிடுவது அல்லது அதனை வைத்து அவர்களை வேலையில் இருந்து தூக்குவது என்பது சரியல்ல. ஒருவர் வேலைக்குச் சேரும் போதே ,நிறுவனம் அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதைச் தெளிவாகச் சொல்லிவிடவேண்டும். எந்தக் காலத்திலும் அடுத்தவர்களுடன் ஒப்பீ்டு செய்து அவர்களை காயப்படுத்தல் கூடாது.

எக்கனாமி,சுனாமி, சுண்டைக்காய் என்று அல்லது அடுதவனுடன் ஒப்பிட்டு வேலையைப் பிடுங்கிஅவர்களை நிராதரவாகவிடுவது ஒரு சமுதாயக் குற்றம்.

மனித உடலில் மூளைதான் பெரிய ஆள் ,திறமைசாலி என்று சொல்லலாம். ஆனால் உடல் முழுதுமே மூளையா ஒரு 80 கிலோ மூளைப்பந்தாக இருந்தால் அது எப்படி இருக்கும்? மூளையின் செயல்பாட்டைக் கொண்டு காலின் செயல்பாட்டுத்திறமையை எடைபோடக்கூடாது. கை,கால்,கண் , காது,மூக்கு... என்று ஒவ்வொரு பாகமும் மனிதன் வாழ இன்றியமையாதது. 80 கிலோ மூளைப்பந்தாக (கை,கால் இல்லாமல்) மனிதன் இருந்து இருந்தால் அவனால் நன்றாக சிந்திக்கமட்டுமே முடிந்திருக்கும்.

வேலையைச் செய்ய கை,கால் இல்லாமல் சிந்தனையால் மட்டும் எப்படிப் பயன் இல்லையோ அது போல ஆகச் சிறந்த அறிவாளித் தொழிலாளிகளால் மட்டும் நிறுவனம் இயங்க முடியாது. எட்டாவதுவரை மட்டும் படித்த ஒருவரால் கம்ப்யூட்டர்பணி செய்யமுடியாமல் இருக்கலாம், ஆனால் அவர் யாரும் செய்ய இயலாத வேறு சில பணிகளைச் செய்யக்கூடும். வேலைக்கு எடுக்கும் போதே எதற்கு எடுக்கிறோம் என்று தெளிவாக இருதரப்பும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஒருவரின் எந்த திறமைக்காக அவர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாரோ அந்த திறமையில் சுணக்கம் வருமாயின் அவர்களிடம் பேசி அவர்களின் குறைகள் களையப்படவேண்டும்.

* மனச்சோர்வு
* குடும்பத்தில் பிரச்சனை
* வேலை அழுத்தம்
* உடல் நலக் குறைவு
* பணத் தேவை
* வேலையில் சுவராசியம் குறைவு

என்று பல காரணங்களை அவ‌ர்களிடம் பேசி அவர்களுக்கு உதவுவது முக்கியம்.

* மாத விடுப்பு கொடுக்கலாம்.
* அவர்களுக்கு பணத்தேவை இருப்பின் கடன் கொடுக்க முயற்சி செய்யலாம்.
* குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களின் குறைகளைக் கேட்கலாம்.
*பகுதி நேரம் பணி செய்யச் சொல்லலாம்.
*அவர்களுக்கு பிடித்த வேறு ஒரு துறையில் பணியாற்றச் சொல்லலாம்.

ஒருவேளை அவர்களாகவே வேறு வேலைக்குச் செல்ல முடிவு எடுத்துவிட்டால்கூட , அவர்களுக்கான எல்லா உதவியையும் செய்யத் தாயாராக நிறுவனம் இருப்பதை ( referral,experience certs etc) தெரிவித்துவிட வேண்டும்.
ஒரு நிர்ப்பந்ததின் பேரில் அவர்களை வேலை செய்ய வைப்பது அவருக்கும் நிறுவனத்திற்கும் நட்டமே.

மாதம் ஒருமுறை நேரிடையான பேச்சு அவசியம். நிறுவனத்தின் நலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தனிமனிதனின் பிரச்சனைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் அது இருக்க வேண்டும்.

அதுபோல இன்று வேலைக்குச் சேரும் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகளுக்கு அப்படியே அதே திறமையுடனும் , ஆர்வத்துடனும் இருப்பார் என்று எண்ணுவது தவறு.வயது,உடல்ச் சோர்வு, திருமணம், குழந்தை, நோய்கள், ..என்று எண்ணற்ற பிரச்சனைகள் தினமும் மனிதனை மாற்றும். நிறுவனம் அதைப் புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

விடுப்பே எடுக்காதவர்களை எந்தக் காலத்திலும் பாராட்டக்கூடாது. மாறாக , நிர்ணயிக்கப்பட்ட விடுப்புகளை எடுத்துக் கொள்ள, குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க நிறுவனம் ஊக்கப்படுத்த வேண்டும்.

வேலை ஒருவருக்கு நல்ல வாழ்வைக் கொடுக்க வேண்டுமே தவிர , வேலையையே வாழ்க்கையாக நினைத்து வாழக் கற்றுக் கொடுக்கக்கூடாது.

கைக்குழந்தைகள் உள்ள பெண் வேலை செய்தால், அவரின் குழந்தைக்கு அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே தொட்டில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். கிராமத்தில் வயல்வேலை செய்யும் பெண் அருகில் உள்ள மரத்திலேயே தனது குழந்தையை தூங்கச்செய்து கவனிக்க முடியும் போது, கார்ப்போரேட் என்ற ஒழுக்கத்தில் எங்கோ ஒரு இடத்தில் குழந்தையை தாய் விட நேர்கிறது. மணமான பெண்/ஆண் அல்லது குழந்தைகள் உள்ள ஒரு நபர் என்றால் அவர் சரியான நேரத்தில் வீடு செல்கிறாரா என்று கவனித்து அவரை உடனேயே அனுப்ப வேண்டும். நிறுவனக் காரணக்களுக்காக அவரின் விலைமதிப்பில்லாத குடும்பத்தின் நேரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

எக்கனாமி சரியில்லை என்று மாதச்சம்பளக்காரனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கோடிகளில் புரளும் மல்லையா,அம்பானி,மூர்த்தி வகையாறா முதாலாளிகள், தொழிலாளியை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன் மனிதாபிமானத்துடன் ஒருகணமாவது சிந்திக்க வேண்டும்.

மாதச் சம்பளக்காரன் இருக்கும் வேலையை விட்டுவிட்டு போயே தீருவது என்று முடிவு எடுத்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால், அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்களா என்று தெரிந்து கொள்வது அவசியம்.

தனிமனிதன் தான் செய்யும் வேலைக்கு உண்மையாய் இருப்பதும், நிறுவனம் தனிமனிதனின் வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கையாய் இருப்பதும் அவசியம்.

தொடர் சேமிப்பும், அவசியமான செலவும் எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் ஒரு பிளான் B வைத்து இருப்பதும் மாதச்சம்பளக்காரர்களுக்கு அவசியம்.