Thursday, October 28, 2010

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்

வே கமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த இரண்டு மீன்கள். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற வெறியில். பின்னால் ஒரு பெரிய சுறாமீன் போன்ற ஒன்று அதைப்பிடிக்க வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக எப்படியோ அந்த இரண்டு மீன்களும் தப்பிவிட்டன. நிம்மதியாக மூச்சுவிட்டாள் என் மகள்.

புதிதாக வந்துள்ள கரடிக்கு மீன் பிடிக்கவே தெரியவில்லை. அதனைச் சுற்றியுள்ள மற்ற கரடிகள் எல்லாம் சுலபமாக மீனைப்பிடித்துச் சாப்பிடும்போது இந்தக் கரடி மட்டும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. எப்படியாவது ஒரு மீனைப் பிடித்து சாப்பிட்டுவிடாதா இந்தக் கரடி, என்று என் மகள் காத்து இருந்தாள். அவளின் முகத்தில் மகிழ்ச்சி. ஆம் ஒருவழியாக அந்தக்கரடி மீனைப் பிடித்துவிட்டது.

மீன் என்ற ஒரு உயிரி தப்ப வேண்டும் என்று Finding the Nemo வில் மீனின் வாழ்விற்காக காத்து இருக்கும் அதே மனம் , Brother Bear இல் வரும் கரடிக்கு மீன் உணவாக கிடைக்காதா என்று ஏங்குகிறது. எப்படி இது சாத்தியம்?

தை சொல்லிகள், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யார் பக்கம் இருக்க வேண்டும், யாருக்காக அழவேண்டும் என்பதை உங்களுக்காக அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள்.  கதை சொல்லியின் பார்வையின் வழியாகவே விரியும் காட்சிகள்,  உங்களின் மனதில் சித்திரங்களை வரையும். Brother Bear படத்தில் கரடி மீனைப்பிடித்து சாப்பிடும்போது "அய்யோ பாவம் மீன்" என்று சொல்லமுடியாத அளவிற்கு கரடியின் பசியின் நியாயம் முன்னரே உங்கள் மனதில் வரையப்பட்டு இருக்கும்.

ழத்தில் சாவு நிகழும்போது உங்கள் மனது வலிக்காத அளவிற்கு அதற்கு முன்னரே ஒரு கதையாடல் நிகழ்த்தப்பட்டு உங்களுக்கான சித்திரத்தை உங்கள் மனதில் வரைந்திருப்பார்கள் ஊடகங்கள். நீங்கள் மறந்தும் அழுதுவிடாத வண்ணம் கவனமாக கதையாடல் நடந்து இருக்கும். அதனால்தான் எந்த வெக்கமும் இல்லாமல் கிரிக்கெட்டை இலங்கையுடன் விளையாடவும் இரசிக்கவும் முடிகிறது உங்களால். கண்முன் நடந்த ஒன்றை நாம் வாழும் காலத்தில் நடந்த ஒன்றைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்கவிடாமல் உங்களைப் பண்படுத்தி ஊறுகாய் போட்டு இருப்பார்கள்.

யாருடைய பார்வையில் நீங்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே உங்களுக்கான சார்பு நிலைகள் உண்டாகிறது. 

ம்பனின் பார்வையில் இராமயணத்தைப் படிக்கும்போது நிச்சயம் இராமன் சூப்பர்மேன்தான். ஏன் என்றால் இராமன் தான் கீரோ என்று முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட கதை அது.  இதே கதையை இலட்சுமணனின் மனைவியின் பார்வையில் காட்சிப்படுத்தினால் , அவள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த துயரம் அலசப்பட்டு , தன் கணவனைப் பிரித்த இராமன் ஒருவேளை வில்லனாக ஆக்கப்பட்டு  இருக்கலாம்.

பல கதையாடல்களால் குப்பையாக இருக்கும் கனவைக் கலைத்துவிட்டு,கதை சொல்லியின் பார்வையை கிழித்து எறிந்துவிட்டு, கதை சொல்லியை தூர நிறுத்திவிட்டு, உங்களுக்கான சித்திரத்தை நீங்களே தீட்டிக் கொள்ளும்போது ஆச்சர்யமான பக்கங்கள் தெரியவரும்.

அருந்ததிராய் பேசியுள்ளது அந்தவகைதான். தேச எழுச்சிப்பாடல்களிலும் , ஊடகங்களாலும் உங்கள் மனதில் வரையப்பட்டுள்ள பிம்பங்கள் நீங்கள் யாரை எதிரியாகப் பார்க்கவேண்டும் என்பதை புரோக்கிராம் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் கார்டுகள் போல ஏற்கனவே உங்கள் மனதில் பதித்துவிட்டன. அதை மாற்றி ஒருவன் தனக்கான‌ ஒரு ஓவியத்தை தன்னால் வரையமுடியாமல் போனதனால்தான் அருந்ததிராய் சொல்லும் எல்லாம் தேசவிரோதச் செயலாகத் தெரிகிறது.

கு ழந்தை பிறந்து வளரும் நாட்களில் அதற்கு மதம், சாதி, நாடு , இனம், எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசி எடுத்தால் அம்மாவின் பால்வாசம் வீசும் முலையும், ஆய் வந்தால் அப்படியே போக வேண்டும் என்ற ஒன்றும்தான் தெரியும். அந்தக் குழந்தை வளர வளர , அது எந்தக்குடும்பத்தில் , நாட்டில் உள்ளதோ அதன் பழக்கவழக்கங்கள் சிறுகச் சிறுக நூதனக் கதையாடல்கள் மூலமாக அல்லது தன் குழந்தை என்ற ஒரே காரணத்தால் பிரயோகிக்கப்படும் சில அத்து மீறல்கள் , சடங்குகள் காரணமாக தனக்கான சித்திரத்தை அடுத்தவர்கள் மனதில் வரைய அனுமதிக்கிறது. இவ்வாறு திணிக்கப்பட்ட ஒன்றை , காலப்போக்கில் தான் தேர்ந்தெடுத்த ஒன்றாகவே நம்பவும் ஆரம்பித்துவிடும் அந்தக்குழந்தை.

 ஷிட் என்று சொல்வது நல்லது ஆனால் பீ என்று சொல்வது கெட்டது என்றுகூட உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாளைக்கு பலமுறை "ஓ ஷிட்" என்று அங்கலாய்க்கும் டவுசர்பாலாஜிக்கள் "ஆ பீ" என்று சொல்ல மாட்டார்கள்.

எப்படி ஒரு வளர்ந்த குழந்தை டயப்பரைத் துறக்கிற‌தோ, அதுபோல குறைந்த பட்சம் ஒருவன் தனது 30 -  40 வயதுகளில் தன்மனதில் இதுவரை அடுத்தவர்களால் வரையப்பட்ட பிம்பங்களை, திணிக்கப்பட்ட சிந்தனைகளை தூர எறிந்துவிட்டு தனக்கான ஒன்றை கடும் தேடலுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் செக்குமாட்டு வாழ்க்கையாகவே சாகும்வரை இருக்கும்.

பாக்சைட் தாதுவை விற்க பங்காளியைக் கொள்ளலாம். அவன் நிலத்தை அபகரிக்கலாம். அவனை சொந்த நாட்டில் அகதியாக்கலாம்.ஆனால் எவன் இந்த உண்மையைச் சொல்கிறானோ அவன் தேசத்துரோகி. தேசம் என்பதில் அவர்கள் இல்லையா?

அடுத்தவன் சொல்லும் கதையின் வழியாகவே நீங்கள் வாழ்க்கையில் சார்பு நிலைகளை எடுத்தால், உங்களுக்கான எதிரியையும் நண்பனையும் அவனே தீர்மானிக்கிறான். நீ என்ன சாப்பிட வேண்டும் , இந்த தீபாவளிக்கு என்ன ஜட்டி போட வேண்டும் என்பதைக்கூட‌  விளம்பரங்கள் என்ற ஹைக்கூ கதையாடல்மூலம் உன் மூளையில் திணிக்கிறார்கள்.

சுய சிந்தனையில்லாத உங்கள் மூளை எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிடலாமே?


India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en

India is a corporate, Hindu state: Arundhati
http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html




Picture courtesy http://download-free-pictures.com

Tuesday, October 12, 2010

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்

லாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும்.  இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம்.  ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா?  டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா?  கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து  வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு.

மிழ்வலைப்பதிவை தமிழ்மணத்திற்கு முன் (த.மு) தமிழ்மணத்திற்குப் பின் (த.பி) என்று இரண்டுகாலங்களாகப் பிரிக்கலாம். எல்லாக் காலகட்டத்திலும் ஒரு வருடம் ஆனவர்கள் ஒருமாதம் ஆனவர்களைப் பார்த்து "எப்படி எழுதவேண்டும்  நாலேமுக்கால் விதிகள்" என்று சொம்பை எடுப்பது தொடரும் நிகழ்வு. 5 ஆண்டுகள் எழுதிய‌  பெரிசுகள் அனாதையாகி ரிடையராவதும் தொடரும் நிகழ்வு.

வலைப்பதிவுகளை பகிரங்கமாக சாடியவர்கள் அல்லது எப்படி எழுதவேண்டும் என்று 10 விதிகள் போட்ட பெரிசுகள் எல்லாம் இப்போது அதே பதிவர்களைக் கொண்டு கதைபுக் பிசினஸ் செய்கிறார்கள். வலைப்பதிவுகள் பெருகிய காலத்தில் "அச்சு ஊடகத்திற்கு இது இணையாகுமா?" , "இதில எழுதியெல்லாம் ஒன்னும் செய்யமுடியாது?" , "இணைய எழுத்துக்களில் இலக்கியப்புண்ணாக்கு இல்லை" என்று சலம்பிய இளக்கிய‌வியாதிகள் , வெளங்காவெட்டித்தனம் பேசிய டவுசர்கள் எல்லாம் இன்று ஆளுக்கொரு பதிவு என்று இணையத்தில் துண்டுபோட்டு எந்தவெக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

இது எப்படி என்றால் மாட்டுக்கறி  துன்னால் தீட்டு என்று சொல்லும் அதே அம்பிகள் , மாட்டின் தோல் பதமாக வந்தவுடன் "பேஷ் பேஷ் நன்னா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே மிருதங்கத்தில் வாரை இழுத்துக்கட்டுவது போன்றது. அறுவடையாகும் வரை நொள்ளை பேசிவிட்டு ஆட்டையப்போட்டுக்கொள்ளும் பார்ப்பனீயதனம். அம்பிகளும் மாமிகளும் தோல்பை , தோல் பர்ஸ், சிப்பியைக் கொன்று எடுக்கப்பட்ட முத்து (மாலை), பட்டுப்புழுவைக் கொன்று செய்யப்பட்ட பட்டுச்சேலை என்று எந்த வெக்கமும் இல்லாமல் வலம் வரும் அதே நேரத்தில் "உயிர்க்கொலை பாவம். நம்ம இருள்நீக்கு சுப்புடு சொல்ருக்கார்" என்று சொல்லித்திரிவார்கள்

கடந்த 10 ஆண்டுகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும், "யார் பிரபலபதிவர்?" என்று வலைப்பதிவுகளில் கலாச்சாரம் போலவே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.  
  • இளைஞர்களால்தான் உலகம் இளமையாக இருக்கிறது.
  • எழுதுபவர்களால்தான் பதிவுகள் இயங்குகிறது.
  • ஒவ்வொருவரும் அன்றைய எழுதும் தினத்தில் புதிய பதிவர்.

நேற்றைய அடையாளங்களை குப்பையாகச் சேர்த்து முதுகில் கட்டிக்கொண்டு பிரபலபதிவர் , மூத்த பதிவர் என்று சொல்லிக்கொள்வது அல்லது அதன்பேரில் "எப்படி எழுதவேண்டும் ‍ நாலேமுக்கால் விதிகள்"  என்று சொம்பை எடுப்பது எல்லாம் இலக்கியவியாதி,எழுத்துவியாதி......என்பதுபோல அடையாளச்சிக்கல் உள்ளவர்களுக்கான பொம்மைக் கிரீடங்கள்.

நீ சொல்லும் விதிகளையே கடைபிடித்து இனிவருபவனும் எழுதினால் புதுமை எங்கே இருந்து வரும்? யாரையும் அவர்களாக இருக்கவிடுவதே நல்லது. பத்தி பத்தியாகதான் எழுத வேண்டும் என்றால் ட்விட்டர் வந்து இருக்காது. மாறுபட்ட சிந்தனைகளும் எழுதும் முறைகளும் நிறைய வரட்டும். சுவராசி**** இருக்கவேண்டும் என்ற கூத்திற்காக 10 விதிகள் டெம்பிளேட் எல்லாம் வேண்டாம்.

புதிய சிந்தனைகள் வளரவேண்டும்.


Picture courtesy
http://www.newzealand.com/travel/library

Friday, October 08, 2010

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்

 சி றையில் இருக்கும் Liu Xiaobo விற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து சீனாவிற்கு இனிமா(enema) கொடுத்துள்ளது நோபல் கமிட்டி.


China Angered By Selection of Dissident Liu Xiaobo for Nobel Peace Prize
http://abcnews.go.com/International/china-angry-nobel-peace-prize-dissident/story?id=11830948


நோபலின் அமைதிப்பரிசு என்பது அரசியல் சதுரங்கத்தில் நடத்தப்படும் காய்களின் நடவடிக்கை போன்றது. அதன் மர்மங்கள் விளையாடுபவர்களுக்கே வெளிச்சம்.   (பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா ) சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளையும் அதன் மனித உரிமை அத்து மீறல்களையும் (இந்தியா ஒழுங்கா??  Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India) மறுபடியும் பேச இந்தப்பரிசு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதற்காக நோபல் கமிட்டிக்கு ஒரு "" போடலாம்.

மதங்கள் போல எல்லா இசங்களும் ஒரு பகுதியில் ஒரு கால கட்டத்தில் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே.  இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது(??) .  யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.  இன்று உள்ள கிறித்துவ மதமும் அது சார்ந்த பல  உட்பிரிவுகளும் தனது பெயரில் தோற்றுவிக்கப்படும் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.  அது போலவே புத்தனும். பொண்டாட்டி பிள்ளைகளை நடு இரவில் விட்டுவிட்டு ஓடிப்போன சித்தார்த்தன் எனது பார்வையில் எந்தச் சிறப்புத்தகுதியும் கொண்டவராகத் தெரியவில்லை. இருந்தாலும் அவரின் தேடலுக்காக அவர் சில சமரசங்களைச் செய்ய நேரிட்டது என்று கொள்ளலாம். அவரும் தனது பெயரில் ஒரு மதம் ஆரம்பிக்கப்பட்டு இப்படி தன்னை கடவுளாக்குவார்கள் , தனது பெயரிலேயே இலங்கையில் கொலை நடத்துவார்கள்  என்று தெரிந்திருக்கமாட்டார்.

உலக அளவில் இன்று நடக்கும் கம்யூனிச கருத்துரைகளும் இப்படித்தான் உள்ளது. தோற்றுவித்தவருக்குப்  பின்னால் மதமாகிப்போன இடியாப்ப சித்தாந்தங்கள் போல , கம்யூனிச கருத்துக்கள் கொத்துபரோட்டாவாக மாறிவிட்டது. இந்தியாவில் இருக்கும் அனைத்து சிகப்புக்கொடி கூட்டங்களும் குருடன் யானையைத் தடவிய கதையாக ஆளுக்கொரு காலையும் சிலர் வாலையும் பிடித்துக்கொண்டு சுயமிழந்த சொம்பாக அவர்களுக்கான சில அடையாளங்களை பூசிக்கொள்கிறார்கள்.

கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.

http://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf

மார்க்ஸ் இறந்தபிறகு கூட , எங்கெல்ஸால் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது. ( ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மார்க்ஸ் எங்கெல்ஸ் சரிபார்ப்பார்கள்) கம்யூனிச‌‌ம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் வேறு எந்த புண்ணாக்க்கு கட்சிக் கொள்கைகளையும் பார்ப்பதற்குமுன் ,  ஆரம்பிக்க வேண்டிய இடம் இந்த மேனிவஸ்ட்தான்.

இந்த 68 பக்க அறிக்கைதான் உலகில் பலரால் பலவாறு அமுலாக்கம் செய்யப்பட்டது.
  1. லெனினின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  2. மாவோவின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  3. பிடலின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  4. சேயின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  5. கிம் (வட கொரியா) கம்யூனிச‌‌ அமலாக்கம்
இவை அனைத்திற்கும் ஒரே மூலம்தான். இந்த 68 பக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அவரவர் அவருக்கான சமையலை அவர்களின் வாய்ருசிக்கு ஏற்ப செய்தார்கள். அதில் எந்த அளவிற்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது அவரவருக்கு வெளிச்சம். ஆனால் ஒவ்வொருவரின் அமுலாக்க அணுகுமுறையும் முற்றிலும் வேறு வேறானது. அதனால்தான் அது லெனினிசமாகம், மாவோசிசமாகவும் அறியப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் கம்யூனிசம் என்பது ஒரு வகையான சாம்பார். யாரை எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கொள்கைகள் இந்த 68 பக்க அறிக்கையில் இருந்து எதைக் எடுத்துக் கொள்கிறது என்று பார்த்தால் தெளிவின்மைதான் இருக்கும்.

இந்தியாவிலும் பிரிவினை வர்க்கம் சார்ந்தது என்றாலும் அதைவிட முக்கிய மையம் வர்ணப்பிரச்சனை.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் 68 பக்க அறிக்கையில் தொழிலாளி வர்க்கம் இருக்குமே தவிர வர்ணம் இருக்காது. அவர்களுக்கு இந்தியாவில் இருந்த வர்ணம் சார்ந்த அடக்குமுறைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. மேலும் அவர்களின் சூழலும் இந்த அறிக்கை தோன்ற ஊக்கியாக இருந்த காரணிகளும் அன்றைய இந்தியச்சூழலுக்கு அந்நியமானவை. இந்திய சூழ்நிலைக்கான சித்தாந்தம் கம்யூனசித்தை அடிப்படையாகக் கொண்டாலும் இந்திய பிரச்சனைகளை பேசுவதற்காக இருக்க வேண்டும்.

அரேபியா பெண்கள் மணற்புயலில் இருந்து பாதுகாக்க போட ஆரம்பித்த (நபி மற்றும் இஸ்லாமிற்கு முன்னரே இருக்கும் பழக்கம்) முழுச்சொக்காயை தமிழகத்த்லும் போடுவது போல, 68 பக்க அறிக்கையை அப்படியே இந்தியாவில் அமுல்படுத்த முடியாது. எப்படி லெனின் அவரது நிலப்பரப்பிற்கு தோதாக அதை அமுல்படுத்தி லெனினிசமாக ஆக்கினாரோ (அது வெற்றியா தோல்வியா என்பது இப்போதைய விவாதம் அல்ல) அதுபோல இந்தியாவின் வர்ணப்பிரச்சனைகளையும் பேசக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

வர்க்க பேதத்துடன் வர்ணபேதத்தையும் சேர்த்து மேலும் மற்ற மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசும் இசம் வேண்டும் நமக்கு. இந்தியாவில் ஒரு கம்யூனிசத்திற்கு மற்ற ஒன்று போலி. :-(((( அப்படித்தான் அழைத்துக் கொள்கிறார்கள். பிழைப்புவாதக் கூட்டணிதான் பெரும்பாலும் இருக்கிறது. 68 பக்க அறிக்கை எந்தனை பேருக்கு இன்னும் பைபிளாக உள்ளது என்று தெரியாது. கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

எந்த ஒரு அமைப்பும் "Why they exists as political party or an organization?"
என்று அவர்களுக்குள் கேட்டுக்கொள்ளல் அவசியம்.


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா
http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_17.html

India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


.