Friday, December 31, 2010

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-2

சென்றபதிவில் அரசியல் கட்சிகளின் இலக்கு (நோக்கம்) , கொள்கை மற்றும் அதை அடையும் வழிகள் பற்றிப் பார்த்தோம். ஒரு இயக்கம் தீர்க்கமான இலக்கையும், அதை அடையும் வழியாக சில கொள்கைகளையும் தீர்மானித்து, அதை பொதுவில் வெளியிட்டுவிடுகிறது என்று கொள்வோம். அதில் இணையும் ஒவ்வொரு தொண்டரும், இயக்கத்தின் கொள்கைகளைப் பார்த்து, இயக்கம் சென்றடையும் இலக்கைச் சரிபார்த்து, அது தங்களின் தனிப்பட்ட கொள்கை, இலக்கு , விருப்பு வெறுப்புகளுக்கு இயைந்து வரும் பட்சத்தில் மட்டுமே அதில் இணைகிறார்கள் என்று கொள்வோம்.


சில காலம் கழித்து இயக்கம் நிர்ணயத்த இலக்கை, ஏற்றுக்கொண்ட கொள்கையின் (அடையும் வழி) மூலம் சென்று அடையமுடியவில்லை என்று கொள்வோம். இப்போது என்ன செய்யலாம்?


 
1. இலக்கை அப்படியே வைத்துக் கொண்டு அதை அடையும் வழியை(கொள்கை) மாற்ற‌லாம்.
2. இயக்கத்தின் கொள்கையை அப்படியே வைத்துக் கொண்டு இலக்கை மாற்றலாம்.
3. அல்லது கொள்கை மற்றும் இலக்கு இரண்டையுமே மாற்றலாம்.
இதில் 1 தேர்ந்தெடுத்தால் அது சமரசம்.  2 மற்றும் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தால் அது சமரசம் அல்ல அது முற்றிலும் புதிய இயக்கம். இதற்கு இலக்கும் கொள்கையும் புதியதாக நிர்ணயிக்கப்படவேண்டும். சமரசம் என்பதை  மட்டும் இங்கே பார்ப்போம்.

கொள்கையில் சமரசம்

இலக்கு மாறவில்லை ஆனால் அதை அடையும் வழிகளில் மாற்றம் செய்து கொள்வது சமரசம். என்னளவில் சமரசங்கள் செய்வது தவறு அல்ல. ஆனால் எந்த மாதிரி சமரசங்கள் செய்கிறோம் அல்லது யாருக்காக (எதன் பொருட்டு) சமரசம் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. அரசியல்வாதிகள் குடும்ப‌ சொத்து மற்றும் கழக கண்மனிகளின் காண்ட்ராக்ட் கொள்ளை போன்ற சுயநலக் காரணங்களுக்காக மட்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு அவர்களின் இயக்கத்தின் கொள்கை இலக்கு (உதாரணம் ஈழம், காவிரி, முல்லைப்பெரியார், சேது சமுத்திரம்) போன்றவற்றில் தினம் ஒரு நிலை எடுப்பது அல்லது சும்மா இருப்பது அதாவது நாடக‌ம் போடுவது சுயநலம் சார்ந்த சமரசம். 

இது கேவலமான செயல். அதாவது கட்சி,இலக்கு, கொள்கை எல்லாவற்றையும் தனக்காக வளைத்துக்கொள்வது. இது போன்ற செயல்களை கட்சியின் தலைமை செய்யும்போதே கட்சித் தலைமையின் நோக்கம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. தலைமையை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் தெளிவான சுயநலப் போக்கை எடுத்துவிட்டார்கள். அதன் உண்மையான தொண்டன் தான் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதே சிந்திக்க வேண்டிய பிரச்சனை.

தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் இலக்கு போன்றவற்றில் இயக்கம் சீராக பயணிக்காத போது அதன் தொண்டன் என்ன செய்ய வேண்டும்?
  • தலைமையைக் கேள்வி கேட்க வேண்டும்.
  • இயக்கத்தில் எந்த ஒரு தொண்டனும் கேள்வி கேட்டு , அதற்கான பதிலைப் பெற ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இருக்க வேண்டும்.
  • தலைமை, கட்டாயப் பதில் அனுப்ப ஒரு காலக்கெடு இருக்க வேண்டும்.
  • தலைமை அனுப்பும் பதில் தனக்கு ஒத்து வருகிறது என்றால், தொண்டனும் தலைமையின் வழியில் சமாதன சமரசங்களை ஏற்றுக் கொள்ளலாம். அது அவனின் தனிப்பட்ட உரிமை.
  • அப்படிக் கேள்வி கேட்டு , அந்தப்பதில் தனது தனிப்பட்ட எண்ணங்கள் , கொள்கைகளுக்கு ஒத்துவராதபோது இயக்கத்தைவிட்டு வெளியேறுவதே சூடுசொரணை, தன்மானம் உள்ளவன் செய்யும் செயல்.
  • தனக்கு ஒத்துவராத செயல்களில் இயக்கம் ஈடுபடும்போது, தொண்டன் கேள்வி எழுப்ப வேண்டும். இயக்கத் தலைமை கொடுக்கும் பதில் தனக்கு ஏற்புடையதாக இல்லாத போது இயக்கத்தை விடுவதே நல்லது.

அரசியல் கட்சிகளின் தேர்தல்கால கூட்டணிகள்

தேர்தல்காலக் கூட்டணி என்பது "ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணி செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்ந்து இருக்கும் ஒரு ஒப்பந்தம்". இந்த ஒப்பந்தம் கட்சியின் இலக்கை மாற்றுவதாக இருக்கக்கூடாது. ஆனால் இலக்கை அடையும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை போக்கிக்கொள்ளும் விதமாக, கொள்கையில் தற்காலிகச் சமரசமாக இருக்ககலாம்.

உதாரணத்திற்கு ஒரு இயக்கம் ஈழம், காவிரி, முல்லைப் பெரியார், சேது பிரச்சனைகளில் ஒரு தெளிவான நிலையை எடுத்து அதை அறிவித்து ,அதற்காக அதாவது அந்த தெளிவான அறிவிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அரசியல் கூட்டணிகளில் சமரசம் செய்துகொள்வது (சொந்த வாழ்வில் கேவலப்பட்டாவது பொது நலன்சார்ந்த இலக்கை அடைவது) பொதுநலன் சார்ந்த சமரசம். இதை வரவேற்கலாம்.

ஓட்டரசியலில் இது தவிர்க்க முடியாதது. :-((  பெரும்பான்மை இல்லாத போது எடுத்துக்கொண்ட பொது நலன்களுக்காக, அரசியலில் தேர்தல் நேர கூட்டணிகளின் அடைப்படை இதுதான். அல்லது இப்படித்தான் அரசியல் தேர்தல்கால கூட்டணிகள் இருக்க வேண்டும்.

தேர்தல்காலக்கூட்டணிகள் , கொள்கை அல்லது இலக்கில் ஒட்டுமொத்த சமரசம் அல்ல. இடைக்கால குறுக்குவழி.

அதாவது இலக்கை அடைய, கொள்கையில் வளைந்து கொடுப்பது. ஆனால் ஸ்பெக்டரம் ஊழல்போல ஊழல் இலக்கை அடைய தேர்தல் கூட்டணி அமைத்து ,துறை தேர்ந்தெடுத்து, கூட்டுக்கொள்ளை அடித்து மாட்டிக் கொண்டபின்பும்,  இந்தக் அரசியல் கட்சித் தொண்டர்கள் "அவன் செய்யவில்லையா ? அவன் மட்டும் ஒழுங்கா?" என்று எதிராட்டம் ஆடிக் கொண்டிருப்பது "கூமுட்டைகள் மட்டுமே அரசியல் கட்சியில் தொண்டனாக இருக்க முடியும்" என்பதையே நிரூபிக்கிறார்கள்.

 அல்லது தலைமையின் வழியில் இலக்கு கொள்கைகளை கழற்றிவிட்டு சுயநலவாதிகளாக அம்மணமாக இருக்க தொண்டர்களும் தயங்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

பொதுவாக அரசியல் கட்சி ஆட்டுமந்தைகளிடமும், மதவாதக் கும்பல்களுடனும் உரையாடல் நிகழ்த்தவே முடியாது. இவர்கள் மூளையை அடகு வைத்தவர்கள்.  சுயமாகப் பேசவோ அல்லது தான் ஏற்றுக்கொண்ட தலைமை,கொள்கையை பொதுவில் விமர்சிக்கவோ திராணியற்றவர்கள்.

உதாரணத்திற்கு எனது அனுபவம்

ஒருமுறை தமிழ்ச்செல்வன் என்ற பதிவரிடம் (http://satamilselvan.blogspot.com) வரதராஜன் என்பவரின் தனிப்பட்ட பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை கட்சி ரீதியாக விசாரித்தது சம்பந்தமான கேள்விகளைக் கேட்டேன் (http://satamilselvan.blogspot.com/2010/03/2.html) அவர் எதற்கும் பதில் சொல்லாமல் பின்னூட்டங்களை குப்பையில் போட்டுவிட்டார். பதில் சொவது அவரது உரிமை என்றால்கூட , கட்டற்ற சுதந்திரமும் மாற்றுக்கருத்துகளும் புழங்கும் இணைய வெளியில் , மாற்றுக் கேள்விகளை வெளியிடக்கூட தயங்கும் இவரை பதிவராகக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை  . :-((  

கட்சித் தொண்டராக இருப்பது அவர் நேர்ந்துகொண்டது மேலும் ரின் சுய தேர்வு

இந்த போலிச்சமூகத்தில் ஒரு ஆண் அல்லது பெண் மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தாக்கங்கள் கொண்டது. "அழகி" கைது என்று சொல்வதும் ரஞ்சிதாவா என்று கேட்கப்படுவதிலும் அதிக ஆர்வமுள்ள சமுதாயம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வரதராஜன் போன்றோரின் பாலியல் சம்பந்தமான விசயங்களை குடும்பமும் அவரும் மனநலம்/குடும்பநலம் சம்பந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியை நாடாமல் கட்சி கட்டப்பஞ்சாயத்து செய்ததை இன்னும் கண்டிக்காதவர்கள்தான்  இவர் போன்றவர்கள்.(தற்கொலையில் முடிந்த துயரச் சம்பவம்.)

இவர்கள் சொல்லும் காரணம் "ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது. வெளியில் பேசமுடியாது"

ஒரு அமைப்பு ஒரு தொண்டனின் உண்மையான உணர்வுகளைப் பேச தடைவிதிக்கிற‌து என்றால்..ஏன் அந்த அமைப்பில் இருக்க வேண்டும்? வரதராஜனும் இவரும் ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக , பாலியல் குறித்த தனிமனித உணர்வுகளை நிலைப்பாடுகளைப் பேசக்கூடாதா?

எனக்கு புரியாதது....
1.கட்சிக் கொள்கைகளை படித்துவிட்டு, தானே விரும்பித்தானே கட்சியில் சேர்கிறார்கள்? இல்லை வம்சாவழி தீட்சையா?

2.வெளிப்படையாக இருக்கும் கட்சிக்கொள்கைகளில் முரண் தெரியும்போது, அதை ஏன் வெளிப்படையாகப் பேசக்கூடாது?

3.கட்சியில் இருப்பதாலே தன்னை ஒரு அடிமை போல எண்ணிக் கொள்பவர்கள், ஏன் சமூகம் பற்றி சுய கருத்தைச் சொல்லவேண்டும்?
இதே தமிழ்ச்செல்வன்தான் நித்யானந்தாவிற்கு பாலியல் சுதந்திரம் உண்டு என்றார். http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html
//பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. //
அதாவது, இவர் ஒரு சாமியாரின் பாலியல் சம்பந்தமான பிரச்சனையில் பொதுவில் பேசலாம் , கேள்வி கேட்க‌லாம்,கருத்துச் சொல்லலாம் ஆனால் , இவராக விரும்பி ஏற்றுள்ள கட்சியின் பாலியல் பஞ்யாசத்துக்களை இவரிடம் கேட்கக்கூடாது. என்ன கொடுமை இது? இது தொடர்பான மா.சிவக்குமாரின் பதிவில் நடந்த உரையாடல் http://masivakumar.blogspot.com/2010/04/blog-post_23.html

கட்சி என்ன இவர் சம்பள‌ம் வாங்கும் கம்பெனியா? மக்கள் அமைப்பு அல்லவா?
அதன் கொள்கைக்கும் செயல்பாட்டுக்கும் முரண்வரும்போது விளக்கம் அளிக்கவேண்டியது கடமை அல்லவா? இது ஒரு உதாரணம்தான். இது போல பல அரசியல் மொக்கைகளிடம் உரையாடி அவர்களிடம் பேச ஒன்றும் இல்லை (கட்சி அனுமதி இல்லையாம்) என்று விலகிவிட்டேன்.

என்னளவில் ஒரு நல்ல அரசியல்வாதியை (தலைமை மற்றும் தொண்டன்) இப்போது காணமுடியவில்லை. அரசியல் என்றால் என்ன என்றே தெரியாத வம்சாவளி தீட்சை பெற்றவர்கள்  தலைமையில் , நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகளைத் தொண்டர்களாகக் கொண்ட‌ கட்சிகளே உள்ளது. இதை சபிக்கப்பட்ட தமிழகத்தின் தலைவிதி என்றுகொள்வோம்.

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1
http://kalvetu.blogspot.com/2010/11/1.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html


தனிமனித கொள்கைகளும் சமரசங்களும் (போரம்களில் சேர்வது, குழுகளில் சேர்வது,சமரசங்கள் செய்வது,வாழ்க்கை மற்றும் பிழைப்பு ) அடுத்த பதிவில்.......
 
Picture courtesy www.politicsofhealth.org