Thursday, February 21, 2013

இறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாட்சியாய் இவன்

ப்பனின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக சின்னப்பிள்ளைகளை இப்படி ஆற அமர உட்கார வைத்து பிஸ்கெட் கொடுத்து குளோஸ் ரேஞ்சில் (close range) கொல்வதற்கு வன்மங்களால் நிரம்பி வழியும் கொடுமனம் கொண்டிருக்க‌ வேண்டும். இப்படியான ஒரு சாவிற்குப்பதில் ,வானில் இருந்து பொழிந்த எண்ணற்ற குண்டுவீச்சுகளில் ஏதோ ஒரு ஒன்றில் அழிந்துபோன, முகம் பதிவுசெய்யப்படாத எண்ணற்ற குழந்தைகளில் ஒன்றாக சேர்ந்து இறந்திருக்கலாம் இவன். அப்படியான கூட்டுக்கொலை தருணங்களிலாவது பற்றிக்கொண்டுசாக ஏதோ ஒரு கரம் கூடவே இருந்து இருக்கும். சாகும்போதான‌ தனிமை , அதுவும் இப்படியான ஒரு நிலைமை , அதுவும் குழந்தைகளுக்கு கொடியது. அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் இப்ப‌டித்தான் குளோஸ் ரேஞ்சில் வைத்து சுடப்பட்டார்கள். http://en.wikipedia.org/wiki/Sandy_Hook_Elementary_School_shooting

குழந்தையைப் பறி கொடுத்த ஒரு தாய் சொன்னது  "....எனது குழந்தை சாகும்போது அவன் ஆசிரியரின் கையைப் பிடித்துக்கொண்டே இறந்துள்ளான். என் குழந்தை தனியாக இருக்கவில்லை. அந்தக் கொடுமையான தருணத்தில்கூட அவனை அணைக்க ஒரு கரம் இருந்துள்ளது. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாக உள்ளது....." என்று சொன்னார். (அந்தக் குழந்தையுடன் அந்த ஆசிரியையும் இறந்துகிடந்த கோலத்தைப் பார்த்து காவல் அதிகாரிகள் அந்த அம்மாவிற்கு சொல்லியுள்ளார்கள்.)

ஆம் கொடுமையாக நடத்தொழிக்கப்பட்ட இனப்போரில் இறந்துபோன எத்தனையோ குழந்தைகளில் இவனும் ஒருவன். இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதற்காக இவனின் இறப்பு எந்த சிறப்பான தகுதியையும் பெற்றுவிடவில்லை. ஆனால், இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்த ஒரே காரணத்திற்காக, நிறுத்தி நிதானமாக இவன் கொல்லப்பட்ட விதம் புகைப்படமாக வெளிவந்தவுடன் மனதைப் பிசைகிறது. "சித்திரவதைப்படுத்தாமல் விட்டார்களே" என்று எண்ணினால்கூட, குழந்தைகள் உலகத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தக் காட்சிகள் சொல்லும் கதைகள் மனதை அறுக்கும். எளிதில் கடந்துபோய்விட முடியாத ஒன்று இந்தக் காட்சி.
போரில் இறந்த அனைத்து குழந்தைகளின் கொலைகளுக்கும் சாட்சியாய் இவன். இவனின் அப்பாவித்தனம் மனசைப் பிசைகிறது.


J
allianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living) முக்கியம். எத்தகைய கொடூரங்கள் நடந்தாலும் தின்று செரித்துவிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜடங்களாய் ஆகிவிட்டோம் நாம். ஆம், தனி மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.நாம் அனைவரும் நம்மீது எறியப்படும் கல்லின் அளவிற்கு ஏற்ப முனகும் சாமானியர்கள். கற்கள் நம்மீது வந்து விழாதவரை கவலைப்படுவது இல்லை. ஆசிரியர்கள் ஒரு சமூக அங்கமாக இருந்தாலும் , அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு அவர்கள் மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். விவசாயிகள் சமூகத்தின் ஆதரமான சக்தியாக இருந்தாலும் , எலிக்கறி தின்று கொண்டு நாசமடைந்தாலும் அது "டெல்டா விவசாயிகளின் பிரச்சனையாக" மட்டுமே வந்துபோய்க்கொண்டு இருக்கும். நெசவுத் தொழில் சீரழிந்து கஞ்சித்தொட்டிகள் வைக்கப்பட்டாலும் , அந்த நிகழ்வு அவர்களின் பிரச்சனையாக மட்டுமே ஆராயப்படும். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிறகு மக்கள் சேர்ந்து நடந்திய எந்த பெரிய எதிர்ப்புகளும் இதுவரை இல்லை.

ப்படியான பொதுசன‌ங்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் மனிதர்களில் இந்த நடுத்தரவரக்கம் (பணத்தில் அல்ல குணநலன்களில்) தேங்கிப்போன ஒரு குட்டை. இவர்களின் தேடல் பயணம் நின்று நெடுநாளாகிவிட்டது. குளம் குட்டை போன்ற நீர்நிலைகள் தன் மீது கொட்டப்படும் நீரை வைத்து பிழைத்துக்கொண்டு இருக்கும். பயணம் (தேடல்) இருக்காது. சாக்கடை வந்து சேர்ந்தாலும் அமைதியாய் இருக்கும். இத்தகைய குளங்கள் கல்லெறியப்படும்போது மட்டுமே கலங்கும். அப்படி கலங்கும் போது வரும் அலைகள்கூட கரையைத்தொடாது. எறியப்படும் கல்லின் அளவைப் பொறுத்து உண்டான அலைகள் நடுவில் நின்றுவிடும். நம் போன்றவர்கள் இத்தகைய குளம். தேங்கிவிட்டவர்கள். கல்லெறியப்படும்போது நம்மால் முடிந்த அலைகளை எழுப்பிவிட்டு அமைதியாகிவிடுகிறோம். அசிங்கமாய் இருந்தாலும் அதுதான் நிதர்சனம் என்பதில் எனக்கும் வெட்கம் உண்டு.

பொது மக்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவு எந்தப் பிரச்சனைகளுக்கும் கொந்தளித்ததாக தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் "அன்னா கசாரே" ஊழல் எதிர்ப்பு பேரணிகள் மற்றும் "டெல்லி பெண்ணின் வண்புணர்வு கொலைக்கு" எதிராக ஒரு புதிய கூட்டம் தெருவிற்கு வந்து குரல் கொடுத்தது. நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று இவர்களின் போராட்டம்.  இவர்கள் யார்? எங்கே வாழ்கிறார்கள்? இவர்களிடம் எப்படி மற்ற பிரச்சனைகளையும் கொண்டு சேர்ப்பது? விவசாயி, ஆசிரியர், நெசவாளி போன்ற பொதுப்பிரச்சனைகளில் இவர்களையும் எப்படி பங்கு கொள்ள வைப்பது? என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் மின்னல் போல வந்துவிட்டு போய்விடுகிறார்கள். இவர்களின் உணர்வுகளை ஒரு சில ஊடக தந்திரங்களால் மட்டுமே தட்டி எழுப்ப முடிகிறது. சொந்த சகோதரன் அவனது பிரச்சனையை முன்னிருத்தி அற‌வழியில் போராடினாலும் , கூடங்குளம் பிரச்சனையை அது ஒரு என்ஜிஓ பிரச்சனை என்று சுலபமாக கடந்து செல்ல முடிகிற‌து இவர்களால். ஒரு சின்ன நீர்க்குமிழிக்குள் வாழும் இவர்களின் செயல்பாடுகள் வெகுசன ஊடகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. "எதற்காக மட்டும் குரல் கொடுக்கலாம்?" என்பதை இவர்கள் பார்க்கும் செய்தி ஊடகமும் அது திணிக்கும் செய்திகளுமே தீர்மானிக்கிறது.

ழம் என்றாலே எதோ தமிழர்கள் அவர்களாக விரும்பி விளையாடும் விளையாட்டு எனவும், அவர்கள்தான் முதல் குற்றவாளிகள் எனவும் இத்தனை காலமமாக சித்தரித்து வந்த இந்து பத்திரிக்கை அதன் லங்க ரத்னா அவார்ட் வின்னர் இராமின் தலைமைக்குப்பிறகு , ஏன் இப்போது இதைச் செய்தியாக்குகிறார்கள்? http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece  ஒருவேளை இப்போதுதான் இவர்களுக்கு இலங்கையின் செயல்பாடுகள் தெரியவருகிறதா? அல்லது இப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்களா?

த்திரிக்கைகளின் ஆதரவு எதிர்ப்பு நிலைகளைத்தாண்டி தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் அரசியல் நிலை என்னவென்று தெரியவில்லை. இத்தைகைய சூழலில் மக்கள் தேர்ந்தெடுத்த அதிகாரமும் ஆட்சியும் தான் இறுதி நம்பிக்கை. அரசியல் கட்சிகளும் , அதிகார மையங்களும் பேராறு போன்ற திறன் கொண்டவை. எப்போதும் சலசலத்து பயணித்துகொண்டே இருக்கும். இறுதியில் தன்னை அழித்துக்கொள்ளவும் செய்யும். அப்படித்தான் கடந்த காலத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும், மக்கள் இயக்கங்களும் சமூக மாற்றங்களுக்காக போராடின. ஆனால் இன்று அப்படியான அரசியல் கட்சிகளோ தலைமையோ இல்லை. பேராறு போன்ற திறன் கொண்டு போராடவேண்டிய இயக்கங்களே குளமாகிவிடும்போது அனைத்தும் தேங்கிவிடுகிறது.

ந்தச் சிறுவனின் அப்பாவி முகத்தையும், அதற்கு அடுத்த படத்தில் அவன் இறந்துகிடக்கும் காட்சியைப் பார்த்த பலரும் நெஞ்சு துடித்து தத்தம் அளவில் வருத்தத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும்போது (காங்கிரஸ் கட்சி) அரசு வெளியுறவு அமைச்சர் "சல்மான் குர்ஷித்" அவர்கள் இப்படியான ஒரு செய்தியைச் சொல்கிறார்.
1. இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள்.
2. சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது.

http://tamil.oneindia.in/news/2013/02/20/india-prabakaran-son-death-lanka-defiant-india-cautious-170162.html
து எப்படி இருக்கிறது? இவர்கள் எந்த மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. சரி இவர்கள்தான் இப்படி எங்கோ இருக்கிறார்கள் தமிழரகளின் உணர்வு தெரியவில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் , போர் நடந்துகொண்டு இருக்கும்போது அதிகாரத்தில் இருந்தவர் என்ற முறையில் கலைஞ‌ரின் செயல்பாடுகள் எனக்கு உவப்பானதும் அல்ல. பெரும்பகுதிகடற்கரை பகுதியை மாநில எல்லையாகக்கொண்ட அதுவும் தனது எல்லையில் அடுத்த நாட்டைக்கொண்டுள்ள தமிழகத்திற்கு வெளிவிவகாரங்களில் அதிக பொறுப்பு உள்ளது. கலைஞர் வர்களுக்கு அது நன்றாகே தெரியும். மேலும் அவர் மாநில அரசின் அதிகாரத்தின் எல்லைகளை அறிந்தவர். நிர்ப்பந்தங்களை எபப்டி கொடுக்கலாம் என்பதை அறிந்தவர். ஆனால் அவர் அதை செயல்படுத்த முனையவில்லை. முள்ளிவாய்க்கால் போர்க்காலத்தில் ஏன் அவர் அப்படி பட்டும்பாடாமலும் நடந்துகொண்டார் என்று வரை எனக்கு விடை தெரியவில்லை. "ஈழத்திற்காக நிறைய செய்துவிட்டேன் இனிமேலும் இழக்க முடியாது என்று சொல்லிவிடலாம். யாரும் கேட்கப்போவது இல்லை. ஆனால், ஒருபுறம் டெசோ போன்ற கூட்டங்களை நடத்திக்கொண்டும், மறுபுறம்  "கொள்கைகள் ஒத்து இருப்பதால்தான் கூட்டணி தொடர்கிறது" என்றும் கலைஞர் சொல்கிறார்.
"கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை"
http://tamil.oneindia.in/news/2012/09/22/tamilnadu-will-not-quit-the-upa-haste-karunanidhi-161888.html
லங்கை விசயத்தில், காங்கிரசின் கொள்கையும் , திமுகவின் கொள்கையும் போர்க்காலத்தில் ஒத்து இருந்ததால்தான் போர்க்காலத்தின்போது கூட்டணி முறியவில்லை.கொள்கை மாறுபட்டிருந்தால் கலைஞர் நிச்சயம் கூட்டணியைத் தொடர்ந்து இருக்கமாட்டார். ஏன் என்றால் "கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை" என்று அவரே சொல்கிறார். இதுதான் எனது புரிதல். ஈழவிசயத்தில் கலைஞரின் நிலைப்பாடுகள் குழப்பமாக உள்ளது என்பதால்தான் அவரைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. "டெசோ" போன்ற விளையாட்டுகள் இல்லாமல், "நாங்க அப்ப ஆதரிச்சோம் பல இழப்புகள்,  இப்ப கொள்கை மாறிட்டோம்" என்று ஈழ வியசத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டால் திமுக நிலைப்பாடுகளை கேள்வி கேட்காமல் விட்டுவிடலாம். துக்ளக் "சோ" போன்றவர்களை ஏதும் கேட்பதில்லை. ஏன் என்றால் அவர்களின் நிலைப்பாடுகள் உள்ளங்கை பூசணிக்காய் போன்றது. ஆரம்பகாலம் முதல் அவர்களின் நிலைப்பாடுகள் மாறவில்லை.

மேலும் அதிமுக vs திமுக என்று கட்சிக்காரர்கள் எடுக்கும் நிலைகளும்,  அதற்கு அவர்கள் வைக்கும் வாதப் பிரதிவாதங்களும் ஈழ விசயத்தில் உதவாது. சேற்றைவாரி இறைத்துக்கொள்வதால் நெல் விளைந்துவிடாது. நானும் அந்த அரசியல் தளத்தில் இருந்து சொல்லவில்லை. அதிமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே திமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். அதுபோல திமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே அதிமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து, நம் கண்முன் நடக்கும் மனிதநேயத்திற்கு சாவால்விடும் கொலைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய இயலுமா? என்று சிந்திக்கலாம். வெறுமனே "ஒப்பீட்டளவில் திமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ அல்லது "இல்லை இல்லை, ஒப்பீட்டளவில் அதிமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ என்ன கிடைத்துவிடப்போகிறது,துயரில் சாகும் குழந்தைகளுக்கு? செயல்படாத தன்மை விசம் போன்றது. "பாலிடால்" என்ற கொல்லி "சயனைவிட" சமத்து என்று சொல்வதால் அதைக்குடித்தவனின் சாவு நிற்கப்போவது இல்லை...தள்ளிப்போகும். இதில் என்ன சிறப்பு உள்ளது?

 
ந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு வந்து போகிறார் இராஜபக்சே. ஆம் காசு கொடுத்து அர்ச்சனைச்சீட்டு வாங்கிவிட்டால் ஆண்டவனுக்கு கொலைகாரன்கூட வாடிக்கையாளர்தான். அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்துவிடமுடியும் புலம்புவதைத்தவிர.

For PDF version:
http://pdfmyurl.com/?url=http://kalvetu.balloonmama.net/2013/02/blog-post_1855.html

.

Thursday, February 14, 2013

காதலர் தினத்தில் வெட்கப்படுவோம் வாருங்கள்

கோ வாவில் நடந்த சம்பவம், பெங்களூர் சம்பவம், டெல்லி சம்பவம் இன்று காரைக்கால் இளம்பெண் வினோதினி   ......இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு செய்தியைச் சொல்கிறது...

பசியோடு அலையும் மிருகங்களாகவே ஆண்கள் இருக்கிறார்கள் அல்லது வாய்ப்புகள் வராதவரை நல்லவர்களாக இருக்கிறார்கள். பாட்டி தொடங்கி தன் அம்மா முதல் சகோதரி வரை பிகினியில் பார்த்து சேர்ந்து வாழும் , சேர்ந்தே குளிக்கும் ஒரு மேற்கு கலாச்சார ஆணுக்கு , தன் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணத்துடன் படுத்து சூரியக் குளியல் செய்தாலும் , புணரும் வெறி வராது. ஆனால் பாரதிராஜா நாயகிகள் காட்டும் கணுக்கால் கொலுசில்கூட சொப்பன ஸ்கலிதம் வரும் அளவிற்கே ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள் தமிழகத்தில். இந்த வியசத்தில் வடக்கு பரவாயில்லை. மும்பையில் ஆண் பெண் பேருந்தில் சேர்ந்து அமரலாம். சூரத் போன்ற இடங்களில் ஷேர் ஆட்டோவில் தெரியா ஆண் பெண் இடித்துக்கொண்டுதான் அமருவார்கள்.

சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

ம் சமுதாய அமைப்பில் பிழை உள்ளது. உடல்சார்ந்த புரிதல்கள் தமிழகத்தில் (இந்தியாவில்) குறைவு ஒப்பீட்டளவில். ஏன் இப்படி இந்திய சமுதாயம் உள்ளது என்று சிந்திக்கலாம். பெண்களை ஈவ் டீசிங் செய்யும் வகையிலேயே திரைப்பாடல்கள் (கும்பலாக 10 பேர்  ஆட்டம் போடுவது... என்னாடி பந்தாடும் பாப்பாக்களே என்று ) இன்றுவரை உள்ளது. அதைப்பார்த்து ஆண் ஏன் இரசிக்கிறான்? மெய் வாழ்க்கையில் தன்னால் செய்ய இயலாத, நினைத்துப் பார்க்கவே முடியாத செயல்களை (பெண்ணுடன் பேசுவது, சேர்ந்து சில இடங்களுக்கு போவது) , சமூகம் இன்னும் அங்கீகரிக்காத செயல்களுக்கு , க‌தாநாயகன் செய்யும் அடாவடி ஈவ்டீசிங் பாடல்களை ஒரு வடிகாலகப் பார்க்கிறான். நிச வாழ்வில் அவன் பார்க்கும் பெண்கள் திரையில் அவன் கண்ட நாயகிகளையே உணர்த்துகிறாள் என்று எண்ணுகிறேன். கும்பலுடன் அவன் இருக்கும்போது , படங்களில் பார்த்த நாயகன் நாயகியைக் கூட்டமாக சேர்ந்து பாட்டுப்பாடி கலாய்க்கும் காட்சிகள் வந்துபோகுமோ என்னவோ.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படகுக் குழு ( rowing team from Groningen, Netherlands  ) "Why this Kolaveri Di?"  என்ற தமிழ்ப்பட பாடலுக்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில் இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்.

"Why this Kolaveri Di?" goes Dutch
http://www.youtube.com/watch?v=Cd77LenKLHg



அதே சமயம் இந்தப்படத்தின் அதிகாரபூர்வமான பாடலில் பெண்கள் (வெளிநாட்டுப் பெண்களும் உண்டு) எப்படி கையாளப்படுகிறார்கள் என்றும் பாருங்கள்.

WHY THIS KOLAVERI DI - Official Movie Full Song Video
http://www.youtube.com/watch?v=5DK-ZWyxZ8k

ப்படி ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து , புணருவதை நோக்கிய மிருகமாகவே ஆண்கள் தயார் செய்யப்படுகிறார்கள் நமது சமுதாயத்தில் என்பது என் எண்ணம். திருமணமே பெண்ணின் அருகாமைக்கான  ஒரே வழி என்றே இன்னும் உள்ளது. காமம் வேறு , காதல் வேறு என்பது புரியவில்லை. சளிக்காமல் உடலுறவு கொண்டாலும் , அதைத்தாண்டி காதல் வேண்டும் என்னை மணந்துகொள் என்று சொல்லும் ஆண்களையும் காட்டும் படங்கள் உண்டு மேற்குலகில். (http://www.imdb.com/title/tt1411238/) ஆனால் பெண்ணிடம் உடல் சார்ந்த உறவே , ஆண் பெண் உறவின் உட்சம் என்பதுபோலத்தான் நம் சமுதாயம் உள்ளது.

வ் டீசிங் பாடல்களை எந்த புரிதலும் இல்லாமல் இன்றுவரை கேட்டுக்கொண்டுள்ளோம், ஆனால் சின்னச் சின்ன ஆண் பெண் அணைத்தலைக்கூட கொலைக்குற்றமாகப் பார்க்கிறோம். சேலை கட்டிக்கொண்டு வக்கிரமாக ஆடுவதை குடும்பத்துடன் இரசிக்கும் நாம், மேலை நாட்டுப் பெண்கள் பிகினியில் குளித்தால்கூட அவர்களின் கலாச்சாரத்தை
 கேலிசெய்கிறோம். மேற்குலகில் குற்றமே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உடல் விரட்டல் இப்படி இல்லை என்று என்னால் சொல்லமுடியும். பிகினியோடு ஒரு பெண் என்னருகில் வந்தால் அது இயல்பாய் இருக்கிறது. உடல் ஈர்ப்பு என்பது (வெறி) முதன்மை இல்லை.
முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் எனது அனுபவம் (பல பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளது)

நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.

டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும்.  ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம்.  நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன்.  நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.  இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.  நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை.  நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது. மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

ந்தாம் வகுப்பிற்குப் பிறகு உடன் படித்த பெண்களின் கையைக்கூட தொட முடியாது. இப்படி விலக்கியே வளர்க்கப்பட்ட நம் சமுதாய ஆணையும்
பெண்ணையும் சட்டென்று திருமணம் செய்து  வைத்து, முதல் நாள் இரவிலேயே போய் புணருங்கள் என்று சொல்லி கதவடைத்தால் அதில் எங்கே காதல் வரும்.
காதல் என்றால் என்ன?

சின்ன வயதில் வரும் பாலியல் ஈர்ப்ப்பு என்பது வெறும் Crush. பலர் இந்த வெறும் Crush  ஐ புனிதமாக கருதுவதுபோல ஒரு உருவாக்கம் தமிழகத்தில் உள்ளது. அதனாலதான் அழகான பெண்ணை தூரத்தில் இருந்து இரசிப்பதுடன் நிறுத்தாமல், ஒருதலைக்காதல் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருதலைக்காதல் என்ற ஒன்று இல்லை. அது ஆசை (Crush) மட்டும். இது ஒரு நோய்க்கூறு. அதாவது ஒருதலைக்காதல் என்பதே நோய். அப்படி ஒன்று இல்லை. அதற்குப் பெயர் ஆசை Crush . Love கிடையாது .

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வருவது ஆசை (Crush) , அதை எப்படி காதலாக (Love) மாற்றுவது... அதாவது அந்தப் பெண்ணை அணுகி (approach) எப்படி தன் விருப்பத்தை தெரிவித்து அந்தப்பெண் விரும்பும் பட்சத்தில் பழக ஆரம்பித்து,  அதற்குப் பின்னால் திருமண விருப்பதைச் சொல்வது என்று கற்றுத்தரப்பட வேண்டும். இடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும்  அழகாகப் பிரியவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனது உடன் வேலை பார்க்கும் பெண் விவகாரத்துப் பெற்றவர். இன்னும் அவர் கார் நடுவழியில் பழுதாகி நின்றால் அழைப்பது அதே விவகாரத்து செய்யப்பட்ட பழைய /முன்னாள் கண‌வனைத்தான்.

காதலைக் கற்றுக்கொடுப்போம்.
ணுக்கால் தெரிந்தவுடன் வருவது காதல் அல்ல. அது பெண்ணுடல் பார்த்தவுடன் வரும் காமம். அதில் தவறு இல்லை. ஆனால் பார்த்தவுடன் புணரவேண்டும் அதற்கு தமிழகத்தில் ஒரே வழி கல்யாணம் என்பதால், அதைக் காதலாகக் கருதி அலையக்கூடாது. No Strings Attached (2011) என்ற படத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் , காமம் தாண்டி தவிப்பது, காதலுக்காக. திகட்ட திகட்ட உடலுறவு கிடைத்தாலும் அதையும் தாண்டி காதலிக்கப்பட வேண்டும் , காதலிக்க வேண்டும் என்பது தேவை என்று கதை சொல்லப்பட்டு இருக்கும்.  காமம் என்பது காதலைத்தூண்ட ஒரு வாசனைத் திரவியம் மேஜிக். ஆனால் காதல் என்பது புரிந்துகொள்ளல் அன்பு செலுத்துதல் ப்ரியமாய் இருத்தல் துணையாய் இருத்தல். அது உள்ளதா?

Valentine's Day
மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine's Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் . அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், ஆசிரியர், அக்கம் பக்கம் என்று யாரும் யாருக்கு வேண்டுமானலும் வாழ்த்துகள் சொல்லலாம்.  அதாவது காமம் கடந்த ஒரு வழக்கமாக மாறிவிட்டது.  இருந்தாலும், காமம் கலந்த காதலில் (கணவன்-மனைவி) இது புது அர்த்தம் பெறுகிறது. தமிழில் காதல் என்பது காமம் கலந்த ஒன்றைத்தவிர மற்றதற்கு பயன்படுத்த முடியாது. எனது தோழர்களிடம் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும். சரி உங்களுடன் அன்பாகியிருக்கிறேன் என்று சொன்னாலும் ஏதோ சப்பென்று உள்ளது. என்ன சொல்லலாம்...

தமிழ் இணையைப் பயனாளர்கள் அனைவருக்கும் எனது அன்பும் ப்ரியங்களும் I love you all .

காதலைக் கற்றுக்கொடுப்போம் இளைஞர்களுக்கு. ஆரோக்கியமான‌ நல்ல ஆண் பெண் உறவுகளை வளர்த்தெடுங்கள்


.

Thursday, February 07, 2013

சிறந்த இலக்கியவாதி பாக்யராஜ் (What is Literature?)

ணையத்தில் நான் பார்த்தவரை இலக்கியவியாதிகள் என்ற ஒரு எலைட் குழு உள்ளது. இவர்கள் தமிழில் வந்துள்ள பிரிண்டட் &  பைண்டட் (printed) கதை புத்தகங்களைப் படித்திருப்பார்கள்.  (சும்மா இணையத்தில் படித்தால் அது வாசிப்பு அல்ல அது ப்ரெளசிங்- browsing) மேலும் அந்த புத்தகங்களைச் சேர்த்து வைத்தும் இருப்பார்கள். சிலர் ஆங்கில கதைப் புத்தகங்களையும் வாசித்து இருப்பார்கள். இப்படி படித்துவிட்டு அமைதியாக இருந்தால் இலக்கியவியாதி என்ற தகுதி வந்துவிடாது. அதை அவ்வப்போது பட்டியல் இட வேண்டும். அது பற்றி சங்க கூட்டங்களில் பேச வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக , "இரசினி" , "விசயகாந்த்" இரசிகர் மன்றம் போல ஏதேனும் ஒரு எலக்கியவியாதி சங்கத்தில் ஐக்கியமாகிவிட வேண்டும். அப்படி சங்கத்தில் ஐக்கியம் ஆகி , சங்கம் சார்ந்த செயல்களில் ஈடுபடவேண்டும். அபிமான கதை வியபாரியின் சரக்கு வெளிவந்தால் அதற்கு கண், காது ,மூக்கு வைத்து , "மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய திரைக்கதையே இல்லை, அதையும் விட மேலானது" என்று சொல்ல வேண்டும். மேலும் "படிமம்", "பிரதி" என்று மானே தேனேயும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப்படம் எத்தனை பிரிண்ட் போடப்பட்டது என்றால் நீங்கள் லோக்கல். இந்தச் சினிமா எத்தனை பிரதி போடப்பட்டது என்றால் நீங்கள் எலக்ஸ். இதைத் தவிர முக்கியமான ஒன்று உள்ளது. அதாவது வணிகரீதியாக நன்றாக விற்பனை ஆகும் கதைகளை எழுதுபவர்களை, மறந்தும் இலக்கியவியாதி என்று ஒத்துக்கொள்ளவே கூடாது.அவர்கள் எல்லாம் மட்டமான கடைமட்ட இரசிகக்குஞ்சுக்காக எழுதுபவர்கள். இவர்களின் பீடாதிபதி மட்டும் தேவாதி தேவர்களுக்காக எழுதுபவர் போன்ற பில்டப்புகளை உருவாக்க வேண்டும்.

சரி கழுதை தேஞ்சு கட்டெரும்பு ஆன கதையாக , இவர்கள் பீடாதிபதிகள் சப்பையான திரைக்கதையை சினிமாவிற்கு எழுதிவிட்டால், அதே பீடாதிபதியே அதை இலக்கியம் என்று சொல்லிவிடுவார். திரைக்கதை இலக்கியமா ?? என்று இரசிக குஞ்சுகள் மலைத்துவிடுவார்கள். ஏன் என்றால் , தமிழில் குழப்பமற்ற திரைக்கதை என்றால் அது பாக்யராஜ் என்று போய் முடியும். அந்த அளவில் பாக்யராஜும் ஒரு இலக்கியவாதியாகிவிடுவார். "என்ன கொடுமை இது? இவ்வளவு நாள் பாக்கெட் கதை மன்னன் அசோகன் பதிப்பில் எழுதிய அனைவரையும் இலக்கியவியாதிகச் சேர்க்க மறுத்தோம், இப்படி தடாலடியாக நம்ம தல திரைக்கதையையும் இலக்கியம் என்று சொல்லி, பாக்யராசும் இலக்கியவியாதியாகி விட்டாரே?" என்று இரசிக சிகாமணிகள் வருந்தலாம்.

இதுதான் இலக்கியம் என்பதற்கு எந்த வரைமுறையும் இல்லை. 

திருவள்ளுவர் தவிர அந்தக் காலத்தில் முதல் அடியில் 4 இரண்டாவது அடியில் 3 என்று வார்த்தை வைத்து ட்வீட் செய்தவர்கள் ((Twitter) ) இல்லை. அது அந்தக் காலத்தில் புதுமையான முயற்சியாக இருந்து இருக்கலாம். அதை அந்தக் கால இலக்கியவியாதிகள் இலக்கியம் இல்லை என்று கூட மறுத்து இருக்கலாம். ஆனால் இன்று அது கொண்டாடப்படுகிறது. வெறுமனே பாட்டு பாடிக்கொண்டிருந்த காலத்தில், யாராவது ஒருவர் உரைநடையை ஆரம்பித்து இருக்கலாம். அவரும் ஏதாவது ஒரு மடத்தின் இரசிகக் குஞ்சுகளால் "இதெல்லாம் எலக்கியம் அல்ல" என்று திட்டு வாங்கியிருக்கலாம்.

இன்று மடாதிபதி திரைக்கதையும் இலக்கியம் என்று அருள்வாக்கு கூறியுள்ளார். ஏன் என்றால், இனிமேல் இவர் எழுதும் திரைக்கதைகளை யாரும் எலக்கியம் இல்லை என்று சொல்லிவிடக்கூடாதே? அப்படி நல்ல திரைக்கதைகளைக் சொன்ன பாக்யராஜும் சிறந்த இலக்கியவாதி. அவருக்கு அடுத்த இரசிகர் மன்ற விருதைக் கொடுக்கலாமே?
What is Literature?
The quest to discover a definition for “literature” is a road that is much traveled, though the point of arrival, if ever reached, is seldom satisfactory.  Most attempted definitions are broad and vague, and they inevitably change over time.  In fact, the only thing that is certain about defining literature is that the definition will change.  Concepts of what is literature change over time as well.
http://dlibrary.acu.edu.au/staffhome/siryan/academy/foundation/what_is_literature.htm

இயல்,இசை, நாடம் போல திரைக்கதை,பதிவு, ட்வீட், ப்ளஸ் என்று எழுத்தின் எந்த வடிவம் வேண்டுமானாலும் இலக்கியம் ஆகலாம். இதுதான் இறுதி வடிவம் என்று இலக்கியத்திற்கான எந்த சட்டகமும் இல்லை.
  • சில Literature வணிக அளவில் வெற்றி பெறுகிறது.
  • சில Literature வணிக அளவில் வெற்றி பெறுவது இல்லை. 
எது உங்களுக்கு பிடித்த இலக்கியம் என்றோ அல்லது கொடுப்பட்ட பத்தில் இதுதான் முதல் இடம் பெறும் இலக்கியம் என்றோ எந்த இரசிக மன்றமும் அவர்களுக்கான் ஒன்றைக் கொண்டாடலாம்.  ஆனால், மற்றதை இலக்கியம் இல்லை என்றோ வெறும் வணிக எழுத்து என்றோ சொல்வீர்களேயானால் , உங்களுக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

இதுதான் இலக்கியத்தின் இறுதிவடிவம் என்று சொல்ல நீங்கள் யார்?

திரைக்கதையும் இலக்கியம்-அருள்வாக்கு
http://www.youtube.com/watch?v=deA8YbZAAZ0

Google +  உரையாடல்
https://plus.google.com/u/0/104594757340298036421/posts/horgFZJnjGD

Wednesday, February 06, 2013

பதிவர் டோண்டு மரணம்

"ரணத்தை நோக்கியே வாழ்க்கை பயணிக்கிறது, வழியில் அது வாழ்ந்து செல்கிறது" என்றால் மிகையாகாது. ஒவ்வோரு இரவு உறக்கமும், காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் அணைக்கிறது. நாம் எழாமல் போகும் நாட்களில் நமக்காக அழ எத்தனை பேரைப் பெற்று இருக்கிறோம் என்பதில்தான் வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் உள்ளது.  இதோ இரவில் தூங்கிய ஒரு பதிவர் இன்று எழுந்திருக்கவில்லை. டோண்டு என்ற பதிவர் இறந்துவிட்டார். இனிமேல் அவர் பதிவுகள் எழுதப் போவது இல்லை என்ற துயரமான செய்தியுடன் இன்றைய பொழுது தொடங்குகிறது எனக்கு.

பதிவர் டோண்டு இராகவன் அவர்கள் (http://dondu.blogspot.com), எனக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்டவர். அவரின் அதீத‌ சாதி,மதப் பற்றும், அதை அவர் வெளிக்காட்டிய விதமும், என்னை அவரிடம் இருந்து விலக்கியே வைத்து இருந்தது.  ஆரம்ப காலங்களில் அவரின் பதிவுகளில் உரையாடி இருந்தாலும்,காலப்போக்கில் நான் அவரை ஒதுக்கும் அளவிற்கே அவரின் சாதிப்பற்று இருந்தது. பலமுறை அவரை சந்திக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், பலமுறை அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தும், நான் அதை ஒதுக்கிவிட்டேன். "இவரிடம் போய் நேரில் பேச வேண்டுமா?" என்று இருந்துவிட்டேன். இன்று பேச நினைத்தாலும் அவர் இல்லை. ஆரம்பகால பதிவர் சந்திப்புகளில் அவர் அடிக்கடி கலந்து கொள்வார். அது போல , அவர் தலைமையில் நடக்கும் "உட்லேண்ட்ஸ் ஓட்டல் போண்டா சந்திப்புகள்" பிரசித்தி பெற்றவை. கருத்து வேறுபாடுகள் தாண்டி அவர் பலரிடம் நன்றாக பழகிவந்துள்ளார். எனது நண்பர் ஒருவரிடம் "எப்படி இவரிடம் எல்லாம் நட்பு வைத்துக்கொள்கிறீர்கள்?" என்று கூட கேட்டதுண்டு.

 கருத்து வேறுபாடுகளால், சந்திக்க விரும்பாதவர்களைக்கூட சந்தித்துவிடவேண்டும் , பேசிவிட வேண்டும் என்று இந்த ஆங்கில புத்தாண்டில் பலரை அழைத்துப் பேசிவிட்டேன் உறவுகளில். டோண்டு இன்னும் சில காலம் இருந்திருந்தால் அவரையும் நான் சந்தித்து இருப்பேன். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் நான். நீங்கள்?

அடுத்தவர்களின் நினைவில் வாழ்வதுதான் சொர்க்கம் அதுபோல உங்கள் நினைவில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பதில் பல சுகங்களும் சுமைகளும் உள்ளது. பதிவர் டோண்டு இராகவன் பதிவர்கள் பலராலும் இன்று நினைக்கப்படுகிறார். ஒத்த கருத்தோ மாற்று கருத்தோ, அவர் பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளார். பிடிவாதக்காரராகவும்,கடும் உழைப்பாளியாகவும்,சாதி/மதப் பிரியராகவும் அறியப்பட்ட இவர் இன்று நம்முடன் இல்லை. ஒரு சக பதிவராக பலவேறு கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் , அவர் இல்லாத வெறுமை என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


Feb 06,2013