Thursday, October 20, 2016

அமெரிக்க தேர்தல்: நவம்பர் 2000 - அப்படி என்ன அதிசயம் நடந்தது ஃபுளோரிடாவில்?


டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் நேற்றைய "அக்டோபர் 19,2016" அதிபர் தேர்தல்  மூன்றாவது பட்டிமன்றப் பேச்சில், சொன்ன விசயங்களிலேயே முக்கியமானதும், இன்று பல நியூசு மீடியாக்களுக்கு சோறு போட்டுக்கொண்டு இருப்பதுமான முக்கிய செய்தி இதுதான்.

"ஒருவேளை நீங்கள் தோற்கும் ப‌ட்சத்தில், தேர்தல் முடிவை ஏற்று, வெற்றி பெற்றவரை வாழ்த்தி, அடுத்த அரசாங்கம் அமைய துணையாய் இருப்பீர்களா?" என்ற கேள்விக்கு ட்ரம்ப் அவர்களின் பதில் " அது நடக்கும் போது பார்ப்போம், நான் அதுவரை உங்களை suspense லேயே வைத்து  இருப்பேன்" என்றார்.

இப்போது அந்த 'பேனை'ப் பெருமாளாக்கி , ஒரு ஆழ்ந்த அறிவார்ந்த மொக்கை , நேசனல் விவாதத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

அந்த இமாலயக் கேள்வியின் சாராம்சம் இதுதான்

1) 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்...
2) அவர் தேர்தலை எதிர்த்து வழக்குப் போட முடியுமா?
3) 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் அப்படி நடந்ததே?

தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்?

  1. அது அவருக்கே தெரியாது. 
  2. ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்து மேலும் பல சண்டைகளை வளர்க்கலாம். அவரின் ஆதரவாளர்களை வைத்து ஏதேனும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். 
  3. ஓயாது பேசிக்கொண்டே, ட்விட்டரில் வம்பிழுத்துக்கொண்டும், ரேடியோ நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டும் இருக்கலாம். 
என்ன செய்யலாம் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்று பார்ப்போம்.

அவர் 2016 அதிபர் தேர்தலில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட முடியாது. வேண்டுமானால் நேரத்தைப் போக்க சில வழக்குகளை போட்டுவைக்கலாம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை நடத்துவது மாநிலம். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிகளைக் கொண்டது. உதாரணத்திற்கு குறைந்த அளவே வித்தியாசத்தில் இவர் ஒரு மாநிலத்தில் தோற்றால், அந்த மாநிலம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடலாம்.ஏன் மறு தேர்தலேகூட நடத்தலாம். என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் என்று மாநிலத்திற்கு மிகத் தெளிவான விதிகள் இருப்பதால், இவர் ஒன்றும் செய்துவிட முடியாது.

பலர் 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் நடந்த குழ‌ப்பங்களை இதனோடு ஒப்பிடுகிறார்கள். என்ன கொடுமை இது? ட்ரம்ப்பிடம் கேட்ட கேள்விக்கும், 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் நடந்த ஃபுளோரிடா குழப்பங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஏன் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டது என்பதை புரிய முயற்சித்தால் நமது மண்டை உச்சி பிச்சிக்கும். இருந்தாலும் பிச்சுக்குவோம் வாங்க.

நவம்பர் 7, 2000:
அமெரிக்க அதிபர் தேர்தல் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.

நவம்பர் 8, 2000:
எல்லா மாநிலங்களும் அவர்களின் எலக்டரல் ஓட்டுக்களை கட்டாக அனுப்பிவிட்டார்கள்.

ஃபுளோரிடா மாநிலத்தில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரின் வெற்றி மிக மிக குறைந்த சதவீத ஓட்டில் வந்து நிற்கிறது.

ஃபுளோரிடா தேர்தல் அதிகாரி/செகரட்டரி ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் George W. Bush48.8 சதவீத ஓட்டுகளை வாங்கியதாக‌ அறிவிக்கிறது.

மொத்த வாக்கில் அவர் 1,784 ஓட்டுகளே எதிர் தரப்பு டெமாக்ரடிக் வேட்பாளர் Al Gore ஐ விட அதிகம் எடுத்து இருந்தார்.

வெற்றி பெற்ற ஓட்டு (The margin of victory ) 0.5 % க்கும்குறைவானதே என்பதால், ஃபுளோரிடா மாநில அப்போதைய சட்டப்படி , வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்படுகிறது. இதை " automatically trigger state-funded election recounts" என்று சொல்வார்கள். அதாவது மறு எண்ணிக்கை வேண்டும் என்று யாரும் முறையிட தேவையே இல்லை. அது பாட்டுக்கு செய்யப்படும் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும். அது அந்த மாநில சட்டம்.
http://www.flsenate.gov/Laws/Statutes/2012/102.141

நவம்பர் 10, 2000:
ஃபுளோரிடா மாநில சட்டப்படி யாரும் கேட்கமலேயே நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் (automatically trigger state-funded election recounts )  அடுத்த ஆச்சரயம் இருந்தது. ஆம் இம்முறை , வாக்கு வித்தியாசம் 1,784 ல் இருந்து 327 ஆக குறைந்தது.

இப்படி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், 18 கவுண்ட்டிகளில் ( கவுண்ட்டி , மாநிலத்தில் இருக்கும் மாவட்ட அமைப்பு போன்றது) சட்டப்படி செய்யவேண்டிய "எந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணுவது"  கடைபிடிக்கப்படவில்லை என்ற குண்டை Jeffrey Toobin என்ற ஒரு அரசியல்/சட்ட விமர்சகர் கொளுத்திப் போடுகிறார்.

தோற்றதாகக் கருதப்படும் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்  'Al Gore'  அதுகுறித்து எந்த‌ கேள்வியும் கேட்கவில்லை வழக்கும் போடவில்லை. அமைதியாகவே இருந்தார். அவர் அப்போதைய அமெரிக்க துணை அதிபரும்கூட. ஆனால் அவர் , 4 கவுண்ட்டிகளில் மட்டும் "மறுபடியும் ஒரு முறை கையால் ஓட்டுகள் எண்ணப்படவேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். ஃபுளோரிடா சட்டப்படி அது சரியானது. அவர் கேட்டதற்கு காரணம் , அந்த கவுண்டிகளில் அவருக்கு அதிக வாக்குகள் ஏற்கனவே இருந்தது. கையால் வாக்குகளை எண்ணினால் , தவறுகள் களையப்பட்டு ,அவரின் மொத்த வாக்குகள் கூடலாம் என்று நம்பியிருக்கலாம் அவர்.

அந்த நான்கு கவுண்ட்டிகளும் (Volusia, Palm Beach, Broward and Miami-Dade, ) இவரின் விண்ணப்பத்தை ஏற்று கையால் ஓட்டு எண்ணும் வேலையை ஆரம்பித்தார்கள்.

இதற்கு இடையில் அதே ஃபுளோரிடா மாநில இன்னொரு சட்டப்பிரிவு குறுக்கே வருகிறது. அதன்படி ,தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் , மாநிலத்தில் உள்ள எல்லாக் கவுண்டிகளும் ஓட்டு எண்ணிக்கையை முடித்து, இறுதி அறிக்கையை ஃபுளோரிடா மாநில செகரட்டரய்க்கு Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது சட்டம்.

தேர்தல் நடந்த தேதி நவம்பர் 7, 2000. அதில் இருந்து 7 நாட்களுக்குள் என்றால் , அனைத்து கவுண்ட்டிகளும் நவம்பர் 14,2000 க்குள் ஓட்டு எண்ணிக்கையை Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கையால் ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த கவுண்டிகள்,  கையை ஊன்றி கரணமடித்தாலும், இந்த நவம்பர் 14,2000 தேதிக்குள் ஓட்டுகளை எண்ணி முடிக்க முடியாது.

கையால் ஓட்டு எண்ணக் கோரிக்கை வைக்கலாம் என்ற ஒரு சட்டம், அதே சமயம் ஓட்டு எண்ணிக்கையை தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் மாநில செகரட்டரிக்கு கவுண்டிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற ஒரு சட்டம். இப்படி ஃபுளோரிடா மாநிலம் அது எழுதிய சட்டங்களின் சந்துகளுக்குள் மாட்டிக்கொண்டது.

நவம்பர் 14, 2000 இறுதிநாள் வந்துவிட்டது.
கையால் ஓட்டை எண்ண ஆரம்பித்த நான்கு கவுண்டிகளில் ஒன்றான Volusia கவுண்ட்டி வெற்றிகரமாக ஓட்டுகளை எண்ணிவிட்டது. இறுதிநேரம் முடிந்த நிலையில் மாநிலத்தில் உள்ள மூண்று க‌வுண்ட்டிகள் (Palm Beach, Broward and Miami-Dade,  )  தவிர எல்லாக் கவுண்ட்டிகளும் அவர்களின் ஒட்டு எண்ணிக்கையை மாநில செகரட்டரியிடம் சமர்ப்பித்து விட்டு, வீட்டுக்கு போய்விட்டார்கள் அப்போது நேரம் , மாலை 5 , நவம்பர் 14,2000.

இன்னும் ஆமை வேகத்தில் கையால் ஓட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கும் மற்ற மூன்று கவுண்ட்டிகளின் வாக்கை என்ன செய்வது? அங்கேதான் சனிபகவான் வந்து நிக்கிறான் . இதற்கும் ஃபுளோரிடா சட்டம் ஒரு தீர்வைச் சொல்கிறது. அதாவது,  மாநில செகரட்டரி , உண்மைகளையும், சூழைநிலைகளையும் ( considering all attendant facts and circumstances )ஆராய்ந்து இறுதி தேதிக்குப் பிறகுகூட (மாலை 5 மணி , நவம்பர் 14,2000 க்குப் பிறகும்) மாநில அளவிலான ஓட்டுக்களில் கவுண்டி ஓட்டுகளை சேர்த்துக்கொள்ளலாம் என்பதே.

ற்கனவே சிரிப்பாய் சிரிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஃபுளோரிடாவின் சட்ட சந்துகளில் மாட்டிக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், இதனால் மேலும் குழப்பமடைகிறது. ஃபுளோரிடாவில் என்னதான் நடக்கிறது என்று ஒட்டு மொத்த அமெரிக்காவும் பார்க்க ஆரம்பித்து விட்டன. ஏன் என்றால் இன்னும் யார் அதிபர் என்பது முடிவாகாமல் , ஃபுளோரிடாக்காக காத்துக்கொண்டு உள்ளது அமெரிக்கா.

பல வழக்குகள்:
இப்படி ஓட்டு எண்ணிக்கை மாறி மாறி நடப்பதை எதிர்த்தும், ஆதரித்தும் பலர் மாநில அளவில் மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். சிலர் 'மாநிலம் முழுமைக்கும் கையால் வாக்கு எண்ண வேண்டும்' என்றார்கள். சிலர் 'போதும் நிறுத்திக்குவோம் நாங்கள் வெற்றியில் இருப்பதால், மறு எண்ணிக்கை கூடாது' என்று வழக்குப் போட்டார்கள். இப்படி தான் வகுத்த பல சட்டப்பிரிவுகள் தன்னைச் சுற்றி நின்று கொட்டமடிக்க,  இடியாப்பச் சிக்கலுக்குள் போய்விட்டது ஃபுளோரிடா மாநிலம். மாநிலத்தை , காக்கும் கடமை உச்ச நீதிமன்றதிற்கு வருகிறது.

ச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் பலரால் தொடரப்பட்டது இந்த விசயத்தில். உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமே வேறு வேறு கருத்துகள். கடைசியாக உச்ச நீதிமன்றம் இப்படி நாட்டமை தீர்ப்பைச் சொல்கிறது.

அமெரிக்க உச்ச நீதிமனறம் 9 தலைமை நீதிபதிகளைக் கொண்டது. அதில் 5 பேர் மட்டுமே ஆதரிக்க (மற்ற‌ 4 பேர் இதை ஏற்கவில்லை) பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தாக, கீழ்க்கண்ட தீர்ப்பை ஃபுளோரிடா மாநிலத்திற்கு உத்தரவிட்டது.


  • ஃபுளோரிடா நீதிமன்றம், சில கவுண்ட்டிகளில் மட்டும் வாக்கு மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டு/அனுமதித்து அமெரிக்காவின் சட்டமான 14 சட்டச் சேர்க்கையை Fourteenth Amendment (violated the equal-protection guarantees of the Fourteenth Amendment.  ) மீறிவிட்டது.
  • ஏற்கனவே நடத்தப்பட்ட மறு எண்ணிக்கை முடிவை கடைசி நேரம் (தேர்தல் முடிவை அறிவிக்கும் நேரம்) வரை தாமதப்படுத்த வேண்டியது இல்லை. ஏற்கனவே இருக்கும் முடிவை இறுதி முடிவாக அறிவித்து விடவும்.

இன்று பல பல்கலைக்கழகங்களில் இந்த வழக்கு ஒரு பாடமாக, இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.

நீதி என்னவென்றால், அண்ணன் ட்ரம்ப் இப்போது சொல்லியுள்ள உங்களை சசுபென்ஃசில் வைப்பேன் என்பது 2000 ஆண்டு நடந்த புளோரிடா சட்டக்குழப்பங்களுடன் ஒப்பிடவே முடியாத ஒன்று. ஒருவேளை நம்மூர் பழமொழிப்படி, "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் முதல்ல, அப்பால பார்க்கலாம் சித்தப்பாவா அழைப்பதா என்று" ட்ரம்ப் சொல்லுகிறாரோ என்னவோ.

விக்கிகளில் மூலம் நான் புரிந்து கொண்டது தூசி அளவு. அதற்கே தாவு தீர்ந்துவிட்டது. இன்னும் படித்தால் நான் பைத்தியக்காரனாகிவிடுவேன் என்று சொல்லி, நீங்களும் உங்கள் உச்சி மண்டையை பிய்த்துக்கொள்ள‌ ஆசிர்வதிக்கிறேன்.

இன்னும் பல சட்ட சிக்கல்கள் கொண்டது இந்த ஃபுளோரிடா பஞ்சாயத்து. 9 ல் 4 நீதிபதிக‌ள் ஏற்றுக்கொள்ளாத தீர்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆம் பெரும்பான்மை வெல்லும். நேரமின்மை கருதி இதை இப்படியே விட்டுவிட்டு நமது எலக்டர்களின் ஆராய்ச்சியைத் தொடருவோம்.

...தொடரும்

தொடர்பான பதிவுகள்:
(1) அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

(2) அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html

(3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?
http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html

(4) அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_20.html

.

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

மெரிக்க அதிபர் தேர்தலில், சில மாநிலங்களில் 'எலக்கடரின்' பெயர்கள் அதிபர் வேட்பாளரின் பெயருடன் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டு இருக்கும், சில மாநிலங்களில் இருக்காது. எது எப்படியோ, ஒவ்வொரு மாநிலமும்  அந்தந்த‌ மாநிலத்திற்கான எலக்டர்களை , 'மக்களின் நேரடி வாக்கு'கள் மூலமே தேர்ந்தெடுக்கிறது. இந்த எலக்டர்கள், பிறகு அதிபரை தேர்வு செய்வார்கள். Official President Election Ballot - STATE OF MARYLAND, BALTIMORE CITY

ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை எப்படி தேர்வு செய்கிறது என்பதை, ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

 "வடக்கு கரோலைனா" மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15.

2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்)

இந்த 15 எலக்டரல் ஓட்டுக்களையும் பெற்றுவிட, 'வடக்கு கரோலைனா' மாநிலத்தில் போட்டியிடும் 'டெமாக்ரடிக்' மற்றும் 'ரிபப்ளிகன்' கட்சிகள் , அவர்கள் கட்சி சார்பாக,  யார்? யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று அவர்களுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை தேர்தலுக்கு முன்னரே மாநில அரசிடம் கொடுப்பார்கள்.

மாநில வாக்குச் சீட்டில், இரண்டு கட்சி சார்பாகவும் ( வேறு சில கட்சிகளும் இருக்கலாம்) போட்டியிடும் "அதிபர்" மற்றும் "துணை அதிபர்" பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். வாக்காளர் , இதில் யாரோ ஒரு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்.

அவ்வளவுதான் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

மாநில அளவிலான எல்கடர் தேர்வு கணக்கு (உதாரணம்/மாதிரி/Sample/Assumption)
https://drive.google.com/file/d/0BxBcI4tKJgizLV9FcVZIYW9LcGc/view



2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 'வடக்கு கரோலைனா' மாநில மக்கள் தொகை "9,535,483". (2010 அமெரிக்க சென்சஃச் கணக்கின் அதிகாரபூர்வ எண்ணிக்கை) . இந்த மக்கள் தொகையில் பதிவு செய்துள்ள /வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை "9,000,000" என்று வைத்துக்கொள்வோம். ( இது எடுத்துக்காட்டிற்காக நான் எடுத்துக்கொட ஒரு மாதிரி assumption/ sample எண்ணிக்கை மட்டுமே).

நடைபெறும் 2016 அதிபர் தேர்தலில் இந்த "9,000,000" மக்களும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது மாநிலத்தில் பதிவான வாக்குகள் "9,000,000".

வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "5,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "4,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம். இந்த மாநிலத்தில் இப்படி மக்கள் செலுத்திய வாக்கை "பாப்புலர் ஒட்டுகள்" ( popular vote ) என்று சொல்வார்கள். இப்படியாக, '2016 அதிபர்' தேர்தலில் "வடக்கு கரோலைனா" மாநிலத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' 5,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்', 'ரிபப்ளிகன் கட்சி' 4,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்' பெற்றுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

மாநிலம் எப்படி எலக்டர்களை தேர்வுசெய்கிறது?

அமெரிக்காவில் "வடக்கு கரோலைனா" மாநிலம் உட்பட , 48 மாநிலங்கள் 'வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்' ( winner-takes-all system ) என்ற நடைமுறையப் பின்பற்றுகின்றன. அதாவது எந்தக் கட்சி மாநில அளவில் (ஒட்டுமொத்த மாநிலம்) அதிக‌ ஓட்டுகளை பெறுகிறதோ, அந்தக் கட்சிக்கே மாநிலத்தின் அனைத்து எலக்டர்களையும் வழங்குவது என்பது. அதன்படி இங்கே 5,000,000 பாப்புலர் ஒட்டுகளை பெற்று 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்று இருப்பதால்,  'வடக்கு கரோலைனா' மாநில அரசாங்கம், அந்த கட்சி சார்பாக கொடுக்கப்பட்டுள்ள, 15 எலக்டர்களையும் அங்கீகரித்து சான்றிதழ் கொடுக்கும்.

இப்படியாக டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ள 15 ( Potential Electors )  களும் , மாநிலத்தின் அதிகாரபூர்வ எலக்கடராக (State appointed / certified ) ஆக நியமிக்கப்படுகிறார்கள்.

"வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )தவிர வேறு என்ன நடைமுறைகள் உள்ளது?

அமெரிக்கா முழுக்க முழுக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசாங்கம். எப்படி ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை தேர்வு செய்கிறது என்பது, அந்த மாநிலத்தின் உரிமை. 50 மாநிலங்களில் 48 மாநிலங்கள்  "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )முறையைப் பின்பற்றும் போது, மெயின் (Maine) மற்றும் நெபராஃச்கா (Nebraska ) என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும் Split Electoral Votes என்ற வேறு முறையைப் பின்பற்றுகிறது.

"பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes) எப்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது இந்த மாநிலங்களில்?

இது கொஞ்சம் சிக்கலானது. உதாரணத்திற்கு  'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 5.

ஒரு உதாரணத்திற்கு , இங்கே நடக்கும் அதிபர் தேர்தலில் , ரிபப்ளிகன் கட்சி "900,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்) டெமாக்ரடிக் கட்சி "600,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்), பெறுவதாகக் கொள்வோம்.  இதன்படி 'மாநில பாப்புலர்' ஓட்டுகளின் அடிப்படையில் "ரிபப்ளிகன் கட்சி" வெற்றி பெற்றதாகிறது. மற்ற மாநிலம் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்று இருந்திருந்தால் , இந்த மாநிலத்தின் 5 எலக்டரல் ஓட்டுகளும் , இந்தக் கட்சிக்கே கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் இந்த மாநிலம் மேலும் ஒரு உட்கட்ட பகிர்வு ( Split Electoral Votes) ) அரசியலைச் செய்கிறது.

இந்த மாநிலத்திற்கான 5 எலக்டரல் ஓட்டுகள் என்பது, அந்த மாநிலத்திற்கான‌ 2 செனட் பதவி மற்றும் 3 கங்கிரச‌னல் பதவிகள் இரண்டையும் கூட்டி 5 என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முறையில் மாநில முழுமைக்குமான பாப்புலர் ஓட்டுகளின் அடிப்படையில் , வெற்றி பெற்ற "ரிபப்ளிகன் கட்சி" அந்த 5 எலக்டர்களில் , 2 எலக்டரை (2 செனட் பதவிகளின் இடம்) பெற்றுவிடும்.

மீதியுள்ள 3 எலக்டர்களை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பாப்புலர் ஓட்டுகளை கணக்கில் கொள்ளாமல், அந்த மாநிலத்தில் உள்ள  3 'கங்கிரச‌னல் தொகுதிகளில்' ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதோ அவர்களுக்கு கொடுப்பார்கள்.

வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

இந்தக் குழப்பமான நடைமுறையை நமக்கு அதிகம் பழகிப்போன, டீக்கடைகளிலும் அரசமர பஞ்சாயத்துகளிலும் விவாதிக்கப்பட்ட , நாம் எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்துள்ள, இந்தியத் தேர்தல் முறையையும் சொல்லி அதன் வழியாக‌ விளக்கலாம்.

உதாரணத்திற்கு இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஆம் தமிழ்நாடு 51 ஆவது மாநிலமாக அமெரிக்காவுடன் 'அம்மா' புண்ணியத்தில் சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே சமயம் நமது 'தாத்தா', ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் வரையறையை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று  உட்கட்சி தீர்மானம் போடுகிறார். அந்த உட்கட்சி தீர்மானத்தை , அண்ணன் 'பன்னீர்' அவர்களிடம், 'தளபதி' கொடுத்து, அவரும் அதை அம்பேரிக்காவிற்கு கடிதமாக 'அம்மா' சொன்னதாக சொல்லிவிடுகிறார்.

 ஏற்கனவே ஃகிளாரி கிளிண்டனால ஆடிப் போய் இருக்கும் அண்ணன் ட்ரம்பும்  இன்னொரு அம்மாவை சமாளிக்க முடியாது என்று , பார்காமலேயே எல்லா விதிகளுக்கும் ஒத்துக்கொள்கிறார். இப்படியாக நம் தமிழகமும் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கெடுக்கிறது.

மிழ்நாட்டில் 39 மக்களவை எம்.பி தொகுதிகள் (Lok Sabha - மக்களவை) உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ கங்கிரசனல் தொகுதிகள் ( congressional districts ) என்று வைத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி  (Rajya Sabha -மாநிலங்களவை ) பதவிகள் 18 உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ 'செனட்' பதவிகள் என்று வைத்துக்கொள்வோம்.

ஆக மொத்தம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57

தமிழ்நாட்டில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "10,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "8,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம்.இதன்படி ,இப்போதுபாப்புலர் ஓட்டுகள் (மக்கள் நேரடியாக செலுத்திய வாக்கு) அடிப்படையில் தமிழகத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்றுவிடுகிறது.

தமிழ்நாடு "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற கணக்கைப் பின்பற்றினால் சனநாயகம் செத்துவிடும் என்று அண்ணன் 'வைகோ' , கன்னியாகுமரி முதல் மதுரை வரை நடந்து, அழகிரியின் சபையில் கால்சிலம்பை உடைக்கிறார்.

வைகோவின் இந்தப் பஞ்சாயத்துகளில் அதிகம் நேரம் செலவழிக்க முடியாது என்று 'அம்மா' முடிவு செய்து ,  Rule 110 அறிக்கையாக‌ , அப்போலோ மருத்துவமனை வழியாக ஒரு அறிக்கை விடுகிறார்.

இதுதான் அந்த அறிக்கை. "அமெரிக்காவின் 'மெயின்' (Maine) மற்றும்  'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலங்கள் மட்டும் என்ன செல்லப்பிள்ளைகளா?  தமிழகமும்  ,"பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes)   முறையைப் பின்பற்றும்" . இப்படி சொல்லி வைகோ உட்பட பல மாங்கனிகளை பறிக்கிறார் அம்மா.

மருத்துவமனை வாசலிலேயே கவர்னர் உட்பட அனைவரும் இருப்பதால், அது உடனடி சட்டமாகி அப்போதே அமலாக்கம் செய்யப்படுகிறது.  இது தவறு என்று சொன்ன சுசாமிக்கு மருத்துவமனை அருகே உள்ள திடீர் கோவிலில் வேப்பிலை ஆட்டங்கள் காண்பிக்கப்படுகிறது.

இதன்படி தமிழ்நாட்டில் இருந்து, இரண்டு கட்சிகளும் கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகளை, அய்யா நல்லக்கண்ணு தலைமையில் பிரித்துக் கொடுக்ககிறார்கள்.

பாப்புலர் ஓட்டுகள் அடிப்படையில் மாநில அளவில் வென்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு  18 எலக்டரல் ஓட்டுகள் வழங்கபடும்.

மீதம் உள்ள 39 எலக்டரல் ஓட்டுகள், எந்த எம்.பி தொகுதியில் யார் அதிகம் ஓட்டுகளைப் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். 'திண்டுக்கல்' எம்.பி தொகுதியை மட்டும் கணக்கில் கொள்ளும்போது அந்தப் பகுதியில் 'ரிபப்ளிகன்' கட்சியானது 'டெமாக்ரடிக்' கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த மீதமுள்ள 39 எலக்டரில், ஒரு இடத்தை திண்டுக்கல் சார்பாக 'ரிபப்ளிகன் கட்சி' பெற்றுவிடும்.

அப்படி 39 எம்.பி தொகுதிகளை தனித்தனியாக பார்க்கும் போது , 30 எம்.பி தொகுதிகளில் 'ரிபப்ளிகன் கட்சி' யும் , 9 எம்.பி தொகுதிகளில் 'டெமாக்ரடிக் கட்சி' யும் முன்னணி வாக்கைப் பெற்று இருப்பதால் , கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகள் பிரிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57

(1) மாநில அளவில் பாப்புலர் ஓட்டின் மூலம் வெற்றி பெற்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு 18 ஓட்டுகள்.

(2) 9 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு  'டெமாக்ரடிக் கட்சி'க்கு அந்த 9 எலக்டரல் ஓட்டுகள்.

(3) மாநில அளவில் தோற்றாலும், 30 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக, அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு,  'ரிபப்ளிகன் கட்சி' க்கு 30 எலக்டரல் ஓட்டுகள்.

தமிழக மாநில அரசு கட்சிகளுக்கு ஒதுக்கும் எலக்டரல் ஓட்டுகளின் முடிவான எலக்டரல் ஓட்டுகள் எண்ணிக்கை.

டெமாக்ரடிக் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்=  18+9=27
ரிபப்ளிகன் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்=  30

இதுவே தமிழகமும் அமெரிக்காவில் உள்ள மற்ற 48 மாநிலங்கள் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைப் பின்பற்றி இருந்திருக்குமேயானால்  டெமாக்ரடிக் கட்சியே அந்த 57 எலக்டரல் (electoral college ) ஓட்டுகளையும் பெற்று , ரிபப்ளிகன் கட்சிக்கு ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும். ஆனால் , குழப்பமானதாக இருந்தாலும் இப்படி பிரித்துக் கொடுக்கும் முறையால் , மாநிலத்திற்குள் இருக்கும் தொகுதிகள் சார்பான மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் கிடைக்கிற‌து.

கொஞ்சம் இருங்கள்....
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி , அய்யா 'மோடி' அவர்கள் தமிழகம் அமெரிக்காவுடன் சேர்ந்ததை அவரின் அமெரிக்க பயணத்தில் அறிந்து கொள்கிறார். அவசரமாக அது செல்லாது என்று அர்னாபை விட்டு, தொலைக்காட்சியில் அலறவிடுகிறார். இருக்கும் ஆசுபத்திரி தொல்லைகளில் , இந்த சத்தம் தேவையா என்று, அம்மா தமிழகத்தை மறுபடியும் இந்தியாவோடு சேர்த்துவிடுகிறார். எனவே நாம் மறுபடியும் அமெரிக்காவிற்கு வருவோம்.

ப்படியாக அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான எலக்டர்களை  (electoral college ) மக்களின் நேரடி அதிபர் ஓட்டுமூலம் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறது.

ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் ( end in a tie vote) என்னாகும்?

"வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைக் கடைபிடிக்கும் மாநிலத்தில் இப்படி நடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் , எந்தக் கட்சிக்கு எலக்டரல் (electoral college ) ஓட்டுகளை கொடுப்பது என்பது சிக்கலாகிவிடும். இப்படியான சமயங்களில், மறு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்கு , மறு தேர்தல் என்று ஏதேனும் ஒன்றை , மாநில அரசு அதன் சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு.

ஒரு வேளை மறு தேர்தலிலும் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்னாகும்? எதுவுமே வேலைக்காது என்று முடிவான பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள அப்போதைய அரசு (கவர்னர் ,மாநில செனட் மற்றும் மாநில காங்கிரஃச்) எலக்டர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறலாம். மாநில அளவில் அப்படி இதுவரை நடந்தது இல்லை.

2000 ஆண்டு ஃபுளோரிடாவில் அப்படி என்னதான் நடந்தது?

2000 ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் ஒரு பெரிய கட்டப் பஞ்சாயத்து நடந்தது. வழக்கு ,வாய்தா,மறு எண்ணிக்கை என்று ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாயத்துகள் நடந்தது. இறுதியாக நடந்த மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில்,   ரிபப்ளிகன் கட்சி   ( George W. Bush ) 2,912,790 பாப்புலர் வாக்குகளும் , டெமாக்ரடிக் கட்சி (Al Gore ) 2,912,253 பாப்புலர் வாக்குகளும் பெற்று அவர்களுக்கிடையேயான ஓட்டு வித்திசாயம் வெறும் 537 என்று இருந்தது.  இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு , ரிபப்ளிகன் கட்சி ( George W. Bush ) வேட்பாளருக்கே 25 எலக்டரல் ஓட்டுகளையும் அந்த மாநிலம் வழங்க வேண்டும் என்று நாட்டமை தீர்ப்பாகி, அதன் மூலமே அண்ணன் புஃச் ( George W. Bush ) அமெரிக்காவின் 43 ஆவது அதிபரானார்.

இந்த எலக்டர்கள் எப்போது? எப்படி? வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பார்கள்.....தொடரும்.

தொடர்பான பதிவுகள்
அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?
http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html

Wednesday, October 19, 2016

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?

மெரிக்காவில் குழந்தைகளுக்கு அரசியலமைப்பைச் சொல்லிக் கொடுக்கும் போது , பள்ளியில் முதலில் சொல்லித்தருவது , "அரசாங்கத்தின் பிரிவுகள் மூன்று,அவையாவன" என்று ஆரம்பிப்பார்கள். இந்தவகையான அரசாங்கப் பிரிவுகள் மாநில அரசிற்கும் பொருந்தும் என்றாலும் , இந்த அதிபர் தேர்தலின் முக்கியத்துவம் கருதி ஃபெடரல் அரசின் அந்த மூன்று முக்கிய பிரிவுகளைப் பார்க்கலாம்.

ஃபெடரல் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகள்.

  1. சட்டங்களை இயற்றவல்ல  The Legislative Branch.
  2. சட்டங்களை அமல்படுத்தக்கூடிய The Executive Branch.
  3. சட்டங்களை பரிசீலனை செய்யவும், அதன் பொருட்டு வரும் சிக்கல்களைத் தீர்க்கவும் அதிகாரம் படைத்த The Judicial Branch.


ஃபெடரல் அரசாங்கத்தின் இந்த மூன்று முக்கிய பிரிவுகளையும் , மாநில அரசாங்கங்கள் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வழியாக, கட்டுக்குள் வைத்துள்ளது. வெளிப்பார்வைக்கு "ஃபெடரல்" அரசு அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டில் இயங்குவது போல தோன்றினாலும், அது உண்மை அல்ல. அதிபரின் அலுவலகம் (The Executive Branch ) என்பது தனியான ஒரு அமைப்பு. மற்ற இரண்டு அமைப்புகளுடன் ஒத்து இயங்க வேண்டியவறாகிறார் அதிபர் .

மாநிலங்கள் அந்த அந்த மாநிலங்களின் தேர்தலை நடத்துகிறது. இதில் ஃபெடரல் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு மாநிலம் அதற்கான தேர்தலை நடத்தி, அதன் பிரதிநிதிகளை "ஃபெடரல் அரசில்" பங்கேற்க அனுப்பி வைக்கிறது. The Legislative Branch ல் இருக்கும் செனட் ( Senate )மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ் (House of Representatives) இரண்டும் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

மாநிலத்திற்கு இரண்டு செனட்டர் வீதம் மொத்தம் 100 செனட்டர்களை கொண்டது செனட்டர் சபை. ஒவ்வொரு செனட்டரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். இவர்கள் மக்களின் நேரடி வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மாநிலத்திற்கான இரண்டு செனட்டரும் மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். ஒரு மாநிலத்திற்கென்று இரண்டு செனட்டர்கள் இருந்தாலும் , அந்த மாநிலத்தில் இரண்டு செனட் தொகுதிகள் இல்லை. ஒவ்வொரு செனட்டரும் அந்த மாநிலம் முழுமைக்கும் பொறுப்பானவர்கள். இப்ப‌டியாக தலா இரண்டு செனட்டர்களை ஒவ்வொரு மாநிலமும் அனுப்பி செனட் சபையை நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அது போல மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான மக்கள் தொகை விகிதாச்சார‌ அளவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களை தேர்ந்தெடுத்து  (50 மாநிலங்களும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியாயும்" DC /The District of Columbia ) சேர்த்து 435 "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" உள்ளார்கள் . இப்படி "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" சபையையும் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது மாநிலங்கள்.

திபர் தேர்வையும் மாநிலங்கள் அவற்றின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பது உண்மை. அமெரிக்க அதிபரை மக்கள் நேரடி வாக்கில் தேர்ந்தெடுப்பது இல்லை. அதே சமயம், இந்த செனட்டர் (Senate)  மற்றும் கங்கிரசனல் உறுப்பினர்களும் (House of Representatives) அதிபரை தேர்ந்தெடுக்க உரிமை இல்லாதவர்கள். செனட்டருக்கான தேர்தல் ( 6 வருடங்களுக்கு ஒரு முறை) , "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" களுக்கான தேர்தல் (2 வருடங்களுக்கு ஒருமுறை) மற்றும் இந்த  "அதிபர்" தேர்தல் ( 4 வருடங்களுக்கு ஒருமுறை) அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத தேர்தல்கள். இப்படியான குழப்படிகளில் , இந்திய‌ "எம்.பி" கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது போல,  அமெரிக்க 'செனட்டரோ'  ,'கங்கிரசனல்' உறுப்பினர்களோ அதிபரை தேர்ந்தெடுப்பது இயலாத காரியம்.

சரி, பின் யார்தான் அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், இங்குதான் எலக்டர் ( Electoral College) என்ற அமைப்பு வருகிறது. "செனட்" மற்றும் "காங்கிரஃச்" சபைகள் போல  Electoral College என்பது ஏதோ ஒரு கட்டிடத்தில் இயங்கும் சபை கிடையாது. அது ஒரு தேர்வு முறை , அதே சமயம் அந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிசமான மனிதர்களே

எலக்டர் (  Electoral College )யார்?

அதிமுக்கியமான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் "எலக்டர்கள்" என்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்றாலும், அவர்கள் யார் என்பது அமெரிக்காவில் , அதிபர் தேர்தலில் ஓட்டுப்போடும் ஒரு அமெரிக்க குடிமகனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிச் சொல்வதால் , அவர்கள் 'பொது அறிவு' இல்லாதவர்கள் என்று அர்த்தமோ , மக்களுக்கு தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று அர்த்தமோ கிடையாது. தான் செலுத்தும் வாக்கின் மூலம் எந்த எலக்டர்  ( Electoral College) தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை சில மாநிலங்கள் தேர்தலின் போது அறியத்தருகிறது . சில மாநிலங்களில் அப்படி எந்த சட்ட அவசியமும் இல்லை. அமெரிக்க அரசியல் சட்டம் அப்படித்தான் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும்  தேர்தலில், ஒவ்வொரு மாநிலமும் அதற்கான சட்டங்களை இயற்றி அவர்கள் பாணியில் எலக்டர்களை தேர்ந்தெடுக்கலாம். அதற்காக எப்படியும் செய்யலாம் என்பதும் இல்லை.

  1. எலக்டர் என்பவர்கள், அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் மாநிலப் பிரதிநிதிகள். 
  2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை எலக்டர் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. 
  3. செனட்டரோ அல்லது கங்கிரசனல் உறுப்பினர்களோ எலக்டராக இருக்க முடியாது.
  4. Electoral College என்பது அதிபர் தேர்தலின் போது மட்டும் வந்து போகும் தேர்வுமுறை.
  5. எலக்டர்கள் ஓட்டுப்போட்டு அதிபரைத் தேர்ந்தெடுத்தவுடன்  Electoral College என்ற  அமைப்பு தானாக மறைந்துவிடும்.

ஒரு மாநிலத்திற்கு எத்தனை எலக்டர்?

ஒவ்வொரு மாநிலமும் எத்தனை எலக்டரை ( அல்லது எலக்டரல் ஓட்டுகள்) தேர்வு செய்ய முடியும் என்பதை , அமெரிக்கச் சட்டம் Article II சொல்கிறது.

//Number of Electors, equal to the whole Number of Senators and Representatives to which the State may be entitled in the Congress: but no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector//

ஒரு மாநிலத்திற்கான எலக்டர் = அந்த மாநிலத்திற்கான அமெரிக்க‌ செனட் பதவி எண்ணிக்கை  + அந்த மாநில அமெரிக்க கங்கிரசனல் பதவிகளின் எண்ணிக்கை.  

உதாரணத்திற்கு 'வடக்கு கரோலைனா' மாநிலத்தின்  மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15.

 2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்).





இப்படியாக , அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கிற்கும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'செனட்டர்' மற்றும் 'கங்கிரச‌னல் உறுபினர்களுக்கும்' தொடர்பே இல்லாத, எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்)
என்பவர்கள்தான்,மாநிலங்கள் சார்பாக  வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர்கள்.

50 மாநிலங்களின் மொத்த எலக்டரல் ஓட்டுகள், மற்றும் "டிஃச்ரிக்ட் ஆப் கொலம்பியா"விற்கு அளிக்கப்பட்டுள்ள 3 எலக்டரல் ஓட்டுகள் என்று அமெரிக்கா முழுமைக்கும் மொத்தம் 538 எலக்டரல் ஓட்டுகள் உள்ளது.
  • இந்த 538 ல் குறைந்த பட்சம் 270 ஓட்டுகள் எடுப்பவர் அமெரிக்க அதிபராகிறார். 
  • இந்த எலக்டரல் வாக்கை அளிப்பவர்கள் எலக்டர் எனப்படுவார்கள். 
  • இந்த எலக்டர்களை நியமிப்பது மாநிலங்கள்.
எலக்டர்களை ( Elector / Electoral College ) மாநிலங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறது?

யார் எலக்டராக இருக்கலாம் என்பதைவிட , யார் எலக்டராக இருக்க முடியாது என்பதை அமெரிக்கச் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. அமெரிக்க சட்டம் Article II, section 1, clause 2

//  no Senator or Representative, or Person holding an Office of Trust or Profit under the United States, shall be appointed an Elector.  //

ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் எலக்டர்களை தேர்ந்தெடுப்பது இரண்டு படிகள் கொண்ட நடைமுறை.

மாநிலங்களின் எலக்டர் தேர்வின் முதல் படி:
அந்த அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி சார்பாக யார்?  யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று தேர்தலுக்கு முன்னரே தெரிவு செய்துகொள்ளும். முக்கியம், இவர்கள்  Potential Electors தான் தவிர,  இன்னும் மாநிலத்தால் அதிகாரபூர்வ எலக்டராக அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான "டெமாக்ரடிக்" மற்றும் "ரிபபளிகன்" கட்சிகள், அவர்களின் கட்சியில் உள்ள முக்கிய நபர்களை  Potential Electors ஆக தெரிவு செய்து வைத்துக்கொள்வார்கள். அதிபர் தேர்தலில் போட்டியிடும் சின்னஞ்ச்சிறு கட்சிகள், கட்சி சாரா தனிநபர்களும் அவர்களுக்கான Potential Electors ஐ தெரிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உட்கட்சி நியமனம். இவர்களை தெரிவு செய்வதில் , இந்த முதல் படியில்,  மத்திய/மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

உதாரணத்திற்கு தற்போதைய தேர்தலில் (2016) வடக்கு கரோலைனா மாநிலத்தில் உள்ள 'ரிபப்ளிகன்' கட்சி , அந்த கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும். அது போலவே 'டெமாக்ரடிக்' கட்சி அந்தக் கட்சி சார்பாக 15 எலக்டர்கள் பட்டியலை மாநில அர‌சிடம் கொடுக்கும்.

இரண்டாவது நிலை ( Electors)
இப்படி கட்சிகள் தெரிவு செய்து வைத்துள்ள  (Potential Electors  list ) அட்டவ‌ணையில் இருந்து , மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள (உதாரணம் வடக்கு கரோலைனா மாநிலத்திற்கு 15 எலக்டர்கள்) எண்ணிக்கை எலக்கடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து (அங்கீகரித்து) மாநில அரசு சான்றிதழ் வழங்கும்.

// Each state's Certificates of Ascertainment confirms the names of its appointed electors. A state's certification of its electors is generally sufficient to establish the qualifications of electors.//

கட்சிகள் எப்படி அவர்களுக்கான எலக்டர்களை மாநில அரசிடம் பதிவு செய்கிறது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு வேட்பாளரும் செய்ய வேண்டி முக்கியமான ஒன்று , ஒவ்வொரு மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலில் தத்தம் பெயரை பதிவு செய்துகொள்வது. அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஃபெடரல் அரசு நடத்துல் தேர்தல் அல்ல. அது மாநிலம் நடத்தும் தேர்தல். எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதற்கான அலுவலர் மூலம் (Secretary of State or appropriate election office ) பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு என்பது, வேட்பாளர் பெயர் மட்டும் அல்ல. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு மாநிலத்திலும் கீழக்கண்டவற்றைச் செய்ய வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் சில வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் இதுதான் பொதுவான நடைமுறை.
  1. அவர்களின் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் மற்றும் துணை அதிபரின் பெயர்கள்.
  2. அவர்களின் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள எலக்டர்களின் பெயர்கள்.(கட்சிக்கு விசுவாசமாக‌ இருப்பதாக எலக்டர்கள் எடுத்த உறுதிமொழிப் பத்திரத்துடன்)
  3. எலக்டர்கள் கட்சி விசுவாசத்தை மீறி ஏதேனும் செய்தால் அவர்களுக்கான மாற்று நபர்கள்.

என்று பலவற்றை மாநில பதிவர்/செயலர்/தனி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 50 மாநிலங்களிலும் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வார்கள். சிலர் காலதாமதத்தால் அல்லது சுய விருப்பத்தால் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே பதிவு செய்துகொள்வார்கள். அந்த அந்த மாநிலத்தில் பதிவு செய்தவர்களின் பெயர்கள் மட்டுமெ அந்த அந்த மாநில வாக்குச் சீட்டில் இடம் பெறும்.

இந்த 2016 அதிபர் தேர்தலில் திரு.டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கட்சி , மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் அவர்களின் பெயரை பதிவு செய்ய மறந்து அது பல குழப்பங்களுக்கு உள்ளானது.

Trump makes Minnesota ballot at last minute
https://www.washingtonpost.com/news/the-fix/wp/2016/08/25/how-donald-trump-almost-missed-the-ballot-in-minnesota-and-what-that-says-about-his-campaign/

எல்லா மாநிலத்திற்கும் பொதுவான ஒரு பதிவாளார் என்று இல்லை. அமெரிக்காவிலும் ஒரு தேர்வாணையம் உள்ளது (Federal Election Commission  http://www.fec.gov/ , ஆனால் அது இந்திய தேர்தல் ஆணையம் போல தேர்தல் நடத்தவோ , மேற்பார்வையிடவோ, வெற்றியாளரை அறிவிக்கவோ அல்ல. அது வேட்பாளர் செலவு செய்யும் பணம் மற்றும் அது சார்ந்த கட்டுப்பாடுகளுக்கானது.

எலக்டர்களை (Electoral College) தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு பங்கு உண்டா?

மாநில அரசு எலக்டர்களை தேர்வு செய்கிறது.அவர்கள் அதிபரை தேர்வு செய்கிறார்கள். எல்லாம் சரி, கைப்புள்ள ரேஞ்சில் ஓட்டுப்போடும் மக்களின் கதி? அவர்கள் யாருக்குத்தான் ஓட்டுப்போடுகிறார்கள்? அவர்களின் ஓட்டு என்ன காமெடிப் பீசா?   அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அவர்களின் ஓட்டு என்ன "விழலுக்கு இறைத்த நீரா?" என்றால் அதுவும் இல்லை.  அவர்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் அவர்களே முடிவு செய்வதில்லை என்பதுதான் "அமெரிக்க அடேங்கப்பா" சிக்கல் அரசியல்.

இந்த தருணத்தில்தான் , அதிகம் பேசப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலின் இடியாப்பச் சிக்கல் தொடங்குகிறது.

ஒரு மாநிலம் நடத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலில், அந்த மாநிலத்தின் அரசாங்கத்திடம் பெயரைப் பதிவு செய்த "அதிபர் வேட்பளர்கள்" வாக்குச் சீட்டில் இடம் பெறுவார்கள். அந்த வாக்குச்சீட்டில் மக்கள் செலுத்தும் வாக்கு என்பது , உண்மையில் அந்த வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் சார்பாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள  Potential Electors எலக்டரை தேர்ந்தெடுக்கச் சொல்லி மாநிலத்திற்கு வழிகாட்டும் செயல். ஆம் வழிகாட்டும் செயல்தான். ஏன் என்றால், இவர்களின் ஓட்டு மட்டுமே அதிபரை முடிவு செய்வதில்லை.

அமெரிக்க குடிமகன், நான்காண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச்சீட்டில் இடும் அந்த வாக்கின் அர்த்தம் இதுதான்.  ..."அமெரிக்க குடிமகனகிய நான் , இந்த அதிபர் மற்றும் துணை அதிபர் சார்ந்துள்ள கட்சி ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள 'எலக்டர்களை' ஆதரித்து , எனது வாக்கைச் செலுத்துகிறேன். எனது மாநில அரசாகிய நீங்கள் , நான் வாக்களித்துள்ள நபர்கள் (அதிபர்/துணை அதிபர்) சார்ந்துள்ள கட்சி எலக்டர்களை தேர்வு செய்யுமாறு  (அங்கீகரிக்குமாறு certify  )  மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்..."

சில மாநிலங்களில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான வேட்பாளர்களின் பெயருடன் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் எலக்டர்களின் பெயரும் அச்சிடப்பட்டு இருக்கலாம். ஆனால் அது அவசியம் அல்ல. இது முழுக்க முழுக்க மாநில நடைமுறை சார்ந்த விசயம். இப்படியாக அனைத்து மாநிலங்களிலும் , எலக்டரைத்தான் தேர்வு செய்கிறார்கள் தவிர நேரடியாக அதிபரை அல்ல.

ஒரு மாநிலம் அதற்கான எலக்டர்களை எப்படி அங்கீகரிக்கிறது இந்த தேர்தல் வழியாக? ... தொடரும்.

********

தொடர்பான பதிவுகள்
அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html


Tuesday, October 18, 2016

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!

ந்தியாவில் உள்ள 29 மாநிலங்களும் ( தெலுங்கானா பிரிவிற்குப் பின் 29 ) ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை கொண்டது. உணவு, உடை, மொழி,வாழும் முறை, விளையும் பயிர்கள், வனங்கள், புவியியல் மற்றும் இயற்கை அமைப்புகள் என்று. இந்த சூழலில் இந்தியாவின் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்), ஐரோப்பிய யூனியன் போல பல தனிநாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே இயங்க வேண்டும் / கருதப்பட வேண்டும். அதாவது தனித்தன்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மாநிலங்கள் அதிகாரத்தை மற்றும் தனித்தன்மையை இழந்து கல்லூரி தேர்வுமுதல் எது சாப்பிடலாம் கூடாது என்பது வரை மத்திய அரசாங்கம் தலையிட இந்தியாவில் வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் அப்படியான தனிச்சுதந்திரம் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது. மாநிலங்களின் தனித்தன்மையைக் காக்கவும், ஃபெடரல் அரசின் (மத்திய அரசு/ அதிபர் ) கட்டுப்பாட்டுக்குள், எதுவரை ஒரு மாநிலம் இருக்கலாம், என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கான தனிக்கொடி, தனியான மாநிலப் பறவைகள் , மாநிலப் பூக்கள் என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான நாடுகள் போன்றதுதான். ஒரு காலத்தில் அவர்களுக்கான தனித்தனி நாணயங்களும் இருந்ததுண்டு. அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்  என்பது இன்றைய தேதியில் உருமாறிவிட்டது. ஆனால் ஒன்றுபட்ட அமெரிக்கா உருவான காலத்தில் , அதில் பங்கெடுத்த மாநிலங்கள், எதிர்த்த மாநிலங்கள் என்று பல சிக்கல்கள் இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் (civil war) நடந்த காலத்தில், மாநிலங்கள் அதற்கான படைகளை வைத்து இருந்தார்கள். அந்தப் படைகள் மத்திய அரசை எதிர்த்து போரிட்டார்கள். எல்லாம் முடிந்து இன்றைய அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒன்றுபட்ட அமெரிக்காவில் இணைத்த காரணத்தினாலேயே மாநிலங்கள் அவர்களின் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை. வரும் காலத்தில் மத்திய அரசு (ஃபெடரல் அரசாங்கம்) மாநிலங்களின்மீது அதிக அதிகாரம் செலுத்தி, மாநிலங்களின் தனித்தன்மையை நசுக்கிவிடக்கூடாது என்பதற்காக சேர்க்கப்பட்ட சட்ட இணைப்புதான். அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை (Second Amendment) .

//The Second Amendment of the United States Constitution reads: "A well regulated Militia, being necessary to the security of a free State, the right of the people to keep and bear Arms, shall not be infringed."// 

அதில் சொல்லியுள்ள "சுதந்திரமான மாநில அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வண்ணம் மக்களுக்கு துப்பாக்கிச் சுதந்திரம் வேண்டும்" என்பது முக்கியமானது. மத்திய அரசாங்கம் மாநிலத்தை நசுக்க நினைத்து ஃபெடரல் இராணுவம் தருவிக்கப்பட்டால் , மாநில மக்கள் அதை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு தளவாடங்கள் தேவை என்ற அர்த்தமும் கொண்டது இந்த அமெரிக்க சட்ட சாசன இரண்டாவது சேர்க்கை. இதை பலவாறு அர்த்தம் கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், மக்கள் அரசை ஆயுதம் கொண்டும் எதிர்க்க வாய்ப்பைக் கொடுக்கும் சட்டவரைவாகவே பலரும் பார்க்கிறார்கள். இதைச் சொல்வதற்கான காரணம், மாநிலங்களின் தனிப்பட்ட உரிமைகள், தனித்தன்மை என்பது அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று. இத்தகைய மனநிலை கொண்ட அமெரிக்காவில், 'ஃபெடரல் அரசின்' முக்கிய அங்கமான 'அதிபரை' தேர்ந்தெடுப்பதில் மாநிலங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது . 

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியத் தேர்தல் போல இல்லை. இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் ஒன்று. அமெரிக்காவில் அப்படி ஒரு மத்திய தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தல் நடத்துவது, அதிபர் தேர்தலில் எப்படியான அணுகுமுறையைக் கடைபிடிப்பது போன்றவை மாநிலங்களின் முடிவு. அதிபர் தேர்தலுக்கான பொதுவான நடைமுறைகள், வழிகாட்டி அமைப்புகள் இருந்தாலும், மாநிலங்களின் முடிவு மிக முக்கியமானது. அதன் விளைவே ஒவ்வொரு மாநிலமும் அதிபர் தேர்தலுக்கான வாக்கை கொடுப்பதில் (அதிபரை தேர்ந்தெடுக்க எலக்டரை தேர்ந்தெடுக்கும் முறை) வித்தியாசப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் (மத்திய) அரசாங்கத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக மிக முக்கியமானது. அதற்காகவே பல சட்டமுறைகள் உள்ளது. அதுவே அதிக குழப்பத்திற்கு வழிவகை செய்கிறது. 


அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்தில் , அமெரிக்க காங்கிரஃச் (United States Congress)  என்பது இரண்டு சபைகள் கொண்டது. ஒன்று செனட் ( Senate)மற்ற ஒன்று "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்"  ( House of Representatives) 

Congress is made up of the Senate and the House of Representatives, and both senators and representatives of the House are referred to as congressmen. A senator can always be referred to as a congressman, but a congressman is not necessarily a senator in the event they are a representative.

சிறிதும் பெரிதுமாக அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளது. அலாஃச்கா (Alaska)பரப்பளவில் பெரியது 570,374 சதுர‌ மைல்கள் . ரோஃட் ஐலேண்ட் (Rhode Island) பரப்பளவில் மிகச்சிறியது 1,045  சதுர‌ மைல்கள்.  மக்கள் தொகை அளவில் , கலிபோர்னியா ( California) முதல் இடத்திலும், கடைசி இடத்தில் வயோமிங் (Wyoming ) ம் உள்ளது. இப்படியான மாறுபட்ட மக்கள் விகிதாச்சாரம் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கிய ஃபெடரல் அரசங்கம், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும், அனைவருக்கும் சரியான ஓட்டு விகிதாச்சாரம் வேண்டும் என்ற நோக்கில் சில விதிகள் உள்ளது. அதில் முக்கியமானது இந்த இரு சபைகளுக்கும் எப்படி பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது.

"கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" ( House of Representatives) தேர்ந்தெடுக்கும் முறை

து ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை சார்ந்தது. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதிகளைப் பெறும். இந்த பிரதிநிதிகள் மாநிலத்தில் உள்ள கங்கிரசனல்  மாவட்டங்களுக்கு (Congressional Districts ) ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள்  மட்டுமே. இந்த மாவட்டம் என்பது கவுண்ட்டி (County) அல்ல. இந்த கங்கிரசனல் மாவட்டம் என்பது, ஃபெடரல் அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளை அந்த மாநிலம் தேர்வு செய்ய வகுக்கப்பட்ட ஒரு எல்லை அளவு. இந்த "கங்கிரசனல் மாவட்ட எல்லை" என்பது, அந்த நேரத்தில் உள்ள மக்கள் தொகை, விகிதாச்சாரம் போன்ற அளவுகோளின்படி மாற்றியும் வரையப்படலாம். இது மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதே சமயம் இதில் மத்திய அரசாங்கத்தின் நீதிமன்றங்கள் தலையிடலாம். சமீபத்தில் வடக்கு கரோலைனா மாநிலத்தில் அப்படியான  கங்கிரசனல் மாவட்ட எல்லை மறு சீரமைப்பில் நீதி மன்றம் தலையிட்டுள்ளது. கவுண்ட்டி எல்லை என்பது மாறாத ஒன்று முக்கியமாக நிலப்பரப்பு சார்ந்தது. 

இப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனைதான் என்று காங்கிரஃச் உறுப்பினர்கள் உள்ளார்கள். 


இப்படி மக்கள் தொகை விகிதச்சாரத்தில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிக அதிகாரத்தைப் பெறுகிறது. உதாரணத்திற்கு அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா ( California) மாநிலம் 53  "கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்" (   ( House of Representatives. ) பிரதிநிதிகளையும் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட வயோமிங் ( Wyoming ) ஒரே ஒரு பிரதிநிதியையும் பெறுகிறது. இங்கே அதிகாரப்பகிர்வு என்பது கேள்விக்குறியகிறது. இந்த சிக்கலைத் தீர்ப்பதுதான் "செனட்" சபை.

செனட்டர்களை (United States Senate) தேர்ந்தெடுக்கும் முறை

நிலப்பரப்பு, மக்கட் தொகை என்று எந்த அளவுகளும் பாதிக்காத வண்ணம், சிறிதோ பெரிதோ , நெட்டையோ குட்டையோ , அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தில் இருந்து இரண்டு செனட்டர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.  இந்த 'செனட்டர்' பதவியின் காலம் ஆறு ஆண்டுகள். செனட்டருக்கு என்று பிரிக்கப்பட்ட தொகுதிகள் இல்லை. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் பதவிகள் இருந்தாலும், அந்த மாநிலத்தில் இரண்டு 'செனட்' தொகுதிகள் இருப்பது இல்லை. மாநிலங்களுக்கான இரண்டு செனட்டர்களும் மாநில முழுமைக்கும் பொதுவாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு மாநிலத்தின் எந்தப்பகுதியில் நீங்கள் இருந்தாலும், உங்களுக்கான செனட்டர் இருவருமே. யாரை வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம் உங்களின் பிரச்சனைகளுக்காக. 

50 மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 செனட்டர் என்ற அளவில் "100 செனட்டர்களை" மட்டுமே கொண்டது செனட்டர் சபை. எந்த ஒரு புதிய சட்ட வரைவுகளும் (bill)  சட்டமாவதற்கு முன் இரு சபைகளின் (செனட் மற்றும் கவுஃச் ஆப் ரெபரசன்டேட்டிவ்) ஒப்புதல் பெற்ற பிறகே அதிபருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதால், சின்ன மாநிலங்களுக்கும் இதில் சம அளவில் அதிகாரம் கிடைக்கிறது. இதை சாத்தியமாக்குவது இந்த செனட் சபையின் பிரதிநிதித்துவம்.

ந்தியாவில் அப்படி அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் தேர்வு ( Lok Sabha- Members of Parliament ) என்பது மாநிலங்களின் மக்கள் தொகை சார்ந்த ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் அதிகப் பிரதிநிதளைப் பெறும். உத்திரப் பிரதேசம் 80 மக்களைவை உறுப்பினர்களையும்,  திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை ஒரே ஒரு மக்களைவை உறுப்பினரையும் கொண்டவை. சரி மக்களைவைதான் இப்படி உள்ளது, மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர் தேர்வுமுறையாவது இதைச் சமன் செய்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

மாநிலங்களவை (Rajya Sabha ) உறுப்பினர்களின் எண்ணிக்கை , அந்த அந்த மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படும்போது , அது மறுபடியும் "அதிக மக்கள் அதிக உறுப்பினர்"என்றே முடிகிறது. இதனால் திரிபுரா,மிசோரம், சிக்கிம் மற்றும் நாகலாந்து போன்றவை மாநிலங்களவையிலும் சிறுபான்மையாகிவிடுகிறது. ஆம் அங்கும் அவர்களுக்கு ஒரு உறுப்பினர்தான். சனாதிபதியால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களை இங்கு கணக்கில் கொள்ளவில்லை.

மெரிக்காவில் அதிபர் தேர்தலில் மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டது. தேர்தல் நடத்துவதில் இருந்து, யாரை அதிபராக்குவது என்பது வரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிக பங்குள்ளது. இந்தியா போல மத்திய அரசே தேர்தல் நடத்தி, மத்திய அரசே முடிவு செய்துகொள்ளும் முறை  அல்ல. மாநிலங்களின் கூட்டாட்சி முறை என்பது , மாநிலங்களுக்கான தனிக்கொடி, தனிச் சின்னம், தனித்தன்மை, ஒருவேளை ஏதாவது ஏடாகூடமாக நடந்து மறுமுறையும் சிவில் யுத்தம் வந்தால், அதில் மத்திய அரசை எதிர்கொள்ள மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமை, பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்ததிரம் என்று ஒப்பீட்டளவில் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட மாநிலங்களின் உரிமையில் அதிக கவனம் கொண்ட அமைப்பு. இந்தகைய பின்னனிகொண்ட அமெரிக்காவில், அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல, மாநிலங்களால் (ஆளும் மாநில அரசால்) நியமிக்கப்படும் எலக்டர் ( Elector / electoral college ) என்பவர்களே.  தொடரும்..

Monday, October 17, 2016

அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்


லகமே (ஆம் உலகம் முழுக்கத்தான்) இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் கண் வைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்க தேர்தலில் "இரஃச்யா" (Russia) தன் உளவுவேலைகளின் மூலம் , ட்ரம்ப்-பை (Donald J. Trump) வெற்றிபெற வைக்கப் பார்க்கிறது என்று ஒரு செய்தி உலாவிக்கொண்டுள்ளது.  இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடர்பான "பிரக்ஃசிட்" (Brexit) பஞ்சாயத்துகளின் மத்தியில் நடக்கும் இந்த தேர்தல்,  தேர்ந்தெடுக்கப்படும்- 2016 அமெரிக்க அதிபர் , எப்படி யாருக்கு ( கிரேட் பிரிட்டன் vs ஐரோப்பிய யூனியன் ) சாதகமாக இருப்பார் என்று அவர்களுக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் 'ஒபாமா' அவர்கள் பிரக்ஃசிட் க்கிற்கு எதிரானவர். ஆனால் பிரக்ஃசிட் நடந்துவிட்டது.

தீர்க்கமுடியாத மத்திய கிழக்கு நாடுகளின் 'சிரியா' பஞ்சாயத்துகள் ஒருபுறம் இந்த தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது. இவை எல்லாம் தாண்டி, இந்தியாவில் இருந்து வரும் சுப்பிரமணிசுவாமி (Member of the Rajya Sabha) போன்றவர்களின்  இந்துத்துவ மத அரசியலின்  'ட்ரம்ப்' ஆதரவுக் குரல்கள் கலக்கம் தருகிறது.

அமெரிக்காவையும் தாண்டி , உலக அளவில் நோக்கப்படும் இந்த "2016 அமெரிக்க அதிபர்" தேர்தலில் பலருக்கும் அறிமுகமானவர்கள் இருவர் . திருமதி "ஃகிளாரி கிளிண்டன்" Hillary Clinton (டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர்) மற்றும் திரு. "டொனால்ட் ட்ரம்ப்" Donald J. Trump (ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்). இவர்கள் இருவரையும் தாண்டி,  இன்னும் பல கட்சிகள், கட்சி சாராத தனிநபர் கூட்டணிகள் "அமெரிக்க அதிபர் 2016" தேர்தலுக்கு போட்டியில் களத்தில் உள்ளார்கள்.

இன்றைய சூழ்நிலையில் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் தாண்டி மற்றவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றாலும்,  சிலர் இன்னும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள். அது எப்படி என்பதில் பல அரசியல் சட்டக் குழப்பங்கள் உள்ளது. இந்தியாவில் திரு.தேவகவுடா (Haradanahalli Doddegowda Deve Gowda) மற்றும் திரு.சந்திரசேகர் (Chandra Shekhar Singh) போன்றவர்கள் எதிர்பாராமல் பிரதமரானவர்கள். அது போல இலட்சத்தில் ஒரு வாய்பாக, சில குழப்பமான அமெரிக்க அதிபர் தேர்வு சட்டங்களின் துணையில், வெற்றி பெறலாம் என்று ஒரு வேட்பாளர் நம்பிக்கையில் உள்ளார்.

யார் யார் எந்தக் கட்சி சார்பாக களத்தில் உள்ளார்கள்?

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான (Federal District") டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா" (District of Columbia aka D.C )அனைத்திலும் போட்டியிடுபவர்கள்.

டெமாக்ரடிக் (DEMOCRATIC PARTY) கட்சி சார்பாக‌:
அதிபர் தேர்தலில்: ஃகிளாரி கிளிண்டன் ( Hillary Clinton )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: டிம் கெயின் (Tim Kaine )

ரிபப்ளிகன் (REPUBLICAN PARTY)கட்சி சார்பாக‌:
அதிபர் தேர்தலில் : டொனால்ட் ட்ரம்ப்  (Donald J. Trump )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: மைக் பென்ஃச் (Mike Pence )

லிபரட்டேரியன் (LIBERTARIAN PARTY) கட்சி சார்பாக‌:
அதிபர் தேர்தலில் : கேரி சான்சன் (Gary Johnson )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: வில்லியம் வெல்ட் (William Weld)

அமெரிக்காவில் உள்ள 40 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசமான "டிச்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா"விலும் போட்டியிடுபவர்கள்.

கிரீன் பார்ட்டி (GREEN PARTY) சார்பாக‌:
அதிபர் தேர்தலில் : சில் ஃச்டெயின் (Dr. Jill Stein)
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: அசாமு பார்க்கா(Ajamu Baraka )

கான்சிடிடுயூசன் (CONSTITUTION PARTY) கட்சி சார்பாக‌:
அதிபர் தேர்தலில் : டேரல் கேஃச்டில் (Darrell Castle )
அவருடன் சேர்ந்து துணை அதிபர் தேர்தலில்: ஃச்காட் பிராட்லி( Scott Bradley )


இவர்களைத் தவிர கட்சி சார்பற்ற பலர் போட்டி போடுகிறார்கள். இதில் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் கணக்கில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுப்பட்துபோல வெளி உலகிற்கு தோற்றம் கொடுத்தாலும் , உண்மை அதுவல்ல. அது சிக்கலானது. அந்த அந்த சிக்கலான தேர்தல்முறை மேலும் பல சிக்கல்களை தோற்றுவிக்க வல்லது.

அமெரிக்க வரலாற்றில் இப்படி ஒரு பெருங்குழப்பம் நடந்துள்ளது. 1797–1801 ஆண்டிற்கான அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத விடையைக் கொடுத்தது. அப்போது நடந்த தேர்தலில் இரும்பெரும் கட்சிகளின் சார்பாக அதிபர் பதவிற்கு போட்டியிட்டவர்கள் இருவர். "பெடரலிஃச்ட் கட்சி" (Federalist Party - the first American political party) சார்பாக "சான் ஆதம்ஃச்" (John Adams) ம், அந்த பெடரலிஃச்ட் கட்சியை எதிர்த்து "டெமாக்ரடிக்‍ ரிபப்ளிகன்" (Democratic-Republican Party) என்ற புதுகட்சி தொடங்கி , எதிர் தரப்பில் போட்டியிட்டவர்  "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) .

இந்த‌ அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு யாரும் எதிர்பார்க்காத அதிசியத்தைக் கொடுத்தது. அதிபராக "சான் ஆதம்ஃச்" (John Adams)  ம் , அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட "டெமாக்ரடிக்‍ ரிபப்ளிகன்" கட்சி வேட்பாளர் "தாமஃச் செபர்சன்" (Thomas Jefferson) துணை அதிபராகவும் தேர்ச்தெடுக்கப்பட்ட  வரலாறு நடந்தது. அம்மா "செயலலிதா" முதல்வராகவும் தாத்தா "கலைஞர்" துணைமுதல்வராகவும் அல்லது அன்னை "சோனியா" பிரதமரகவும் அண்ணன் "மோடி" துணை பிரதமாராகவும் வந்தால் எப்படி இருக்கும்?  அப்படியான சிக்கலைத்தான் அமெரிக்கா 1797–1801 தேர்தலில் சந்தித்தது.

அதிபர் ஒரு கட்சி , துணை அதிபர் ஒரு கட்சி என்று எதிர்காலத்தில் மறுபடியும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில்,  அதற்குப்பிறகு சேர்க்கப்பட்ட அரசியல் சாசன‌ சட்டம்தான் 12 ஆவது பிற்சேர்க்கை (12TH AMENDMENT) எனப்படும் அமெரிக்க அரசியல் சாசனம்.  இந்த சட்டம்,  எதிரெதிர் முகாமில் இருந்து எதிரும் புதிருமான கொள்கையுள்ள‌,  அதிபர் மற்றும் துணை அதிபர் வருவதை தவிர்க்கவே. மற்றபடி இன்னும் அடேங்கப்பா அதிபர் தேர்தல் குழப்பமான நடைமுறைகள் அப்படியே உள்ளது.

அப்படியான சட்டக்குழப்பங்களின் மத்தியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடாலாம் என்ற நம்பிக்கையில் ஒருவர் 2016 தேர்தலில் களத்தில் உள்ளார். அவர்தான் "இவான் மெக்முல்லன்" Evan McMullin (Utah). அவரோடு சேர்ந்து துணை அதிபருக்கு போட்டியிடுபவர் கூகிள் மற்றும் டிவிட்டரில் நிறுவனங்களில் வேலை பார்த்த Mindy Finn (District of Columbia)

அமெரிக்காவின் குழப்படியான அதிபர் தேர்தல் முறை தொடரும்.....

Thursday, October 13, 2016

Locker Room

லாக்கர் ரூமில் அம்மணம் என்பது சகசம். ஆண்கள் லாக்கர் ரூமில் பல‌ பெருசுகள் தொந்தியும் தொப்பையுமாக மணி மணி என்று நடந்துகொன்டு இருப்பார்கள்.

இருபாலருக்கான இடங்களிலும் நிர்வாணம் ஒரு பொருட்டே அல்ல.

நிர்வாணம் இருந்தாலும் அது ஏதோ கட்டற்ற காட்டுச் சுதந்திரமும் அல்ல. பாதுகாக்கப்பட்ட இடமே. "லாக்கர் ரூம்" என்பது ஒரு குடும்ப சூழல் கொண்டதுதான். அங்கே ஆட்கள் அம்மணமாக உள்ளார்கள் என்பதற்காக எல்லாரும் எல்லாமும் பேசுவது இல்லை.  நம்மூர் படித்துறை போல என்று கொள்ளலாம்.

 ஆண்களுக்கான லாக்கர் ரூமில் அம்மாக்கள் கதவு தாண்டி வந்து, சுவர் மறைப்பில் இருந்து ,அவர்களின் குழந்தைகளின் பெயரைச் சொல்லி கூப்பிடுவார்கள். அதுபோல பெண்களுக்கான லாக்கர் ரூமிலும் அப்பாக்கள் கதவுதாண்டி சுவர் மறைவில் இருந்து தங்கள் குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பார்கள்.  உள்ளே போய் வெட்டியாக நேரம் கடத்தும் குழந்தைகளை சத்தம் போட்டு அழைப்பார்கள்.

***

ட்ரம்பின் 2005 வீடியோ https://www.youtube.com/watch?v=IY8FwWwIVyQ வில் , அவர்  ஒரு செலிபிரட்டியாக/பணம் படைத்தவராக இருப்பதால் பெண்ணின் யோனியைப் பிடித்துகூட இழுக்க முடியும் என்று சொல்லியுள்ளார். சொன்னதை அவர் மறுக்கவே இல்லை. அப்படியான பேச்சுகள் "லாக்கர் ரூம்" ( அமெரிக்க பாத்ரூம்/குளியலறை/ஓய்வறை/உடைமாற்றுமிடம்) பேச்சு என்று புறந்தள்ளிவிட்டார்.

ஒருவேளை அப்படியே டர்ட்டி விசயங்கள் பேசப்பட்டாலும், ட்ரம்ப் பேசியது லாக்கர் ரூமில் அல்ல . அவரின் தொழில் சம்பந்தப்பட்ட இடத்தில்.
***
"எவாஞ்சலிஃச்ட்" (evangelist)  என்று ஒரு பிரிவு உள்ளது. இதுதான்  எவாஞ்சலிஃச்ட் கொள்கை என்று சொல்லிவிடமுடியாது. கன்சர்வேட்டிவ் &  மதம் என்று கலந்த கலவை இது. இதில் கறுப்பின எவாஞ்சலிஃச்ட் "டெமாக்ரக்டிக்காக" இருக்கவும் வெள்ளை இன எவாஞ்சலிஃச்ட் "ரிபப்ளிகனாக" இருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

அப்படியான எவாஞ்சலிஃச்ட்கள் , பெண்கள் குறித்து கேவலாமகப் பேசிய ட்ரம்ப்பை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது.......," கிறித்துவம் மன்னிக்கச் சொல்கிறது. யார்தான் இப்படிச் செய்யலை. மைக் இருப்பது தெரிந்திருந்தால்  இப்படி பேசியிருக்க மாட்டார் ட்ரம்ப்"........ என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே மக்கள்தான் எக்காரணம் கொண்டும் ,கிளிண்டனை எதற்கும் மன்னிக்கத் தயாராக இல்லை. ஏன் என்பது, பாவ மன்னிப்பு கொள்கை வகுத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது.
சில பிரைவேட் பேச்சுகள் , பப்ளிக்காகும் என்று தெரிந்தால் , அனைவரும் சுதாரித்துக்கொள்வார்கள். இங்கு G+..சோசியல் மீடியாவில் பிரைவேட்டாக‌ பேசும்போது , பாலியல் விசயங்கள் கரடுமுரடாக இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். அந்த பகிர்வு வட்டங்களில் பெண்களும் உள்ளார்கள். அவர்கள் அதை கடந்து போய்விடுகிறார்கள். அல்லது சிரித்து வைக்கிறார்கள். (டமில் சம்முவம் அந்த அளவுதான் அவர்களுக்கு இடம் கொடுக்கிறது) யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சமூகத்தில் பாலினப் பேச்சுகள் ஒரு அங்கம். ஆனால் எங்கு எப்படி என்பதில்தான் சூட்சும/நாகரீகம் உள்ளது.

***
கிணற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுகவும் தயாராகிவிட்ட எவாஞ்சலிஃச்ட் பிரிவு, இப்போது வெளிவந்துள்ள ஆடியோவிற்கு என்ன சமாதானம் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

இதில் ட்ரம்ப் மிகத் தெளிவாக https://youtu.be/xzqCN4wGhJ0?t=109 வானொலியில் ஒருவருக்கு பேட்டியாகவே கொடுக்கிறார். அதன் அடக்கம் இதுதான்.

"நான் அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தின் முதலாளி. என்னால் எந்த இடத்திற்கும் போக முடியும். பெண்கள் அம்மணமாக‌ இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளேன். அவர்களைப் பார்த்துள்ளேன். இப்படி நான் செய்தாலும் எனக்கு ஒரு பயமும் இல்லை ( I can get away with this )" என்று சொல்கிறார்.

இதற்கு மேலும் இவரின் நடத்தையைப் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாக்களில் தயாரிப்பாளருக்கு (அவர் பணம் போடுவதால்) இப்படியான சலுகைகள் உண்டு என்பது போன்ற வதந்திகள் உண்டு. ஆனால் இதுவரை எந்த நடிகையும் வெளிப்படையாக குற்றம் சாட்டவும் இல்லை. அப்படிச் செய்தவர்கள் "நான் இப்படிச் செய்தேன்" என்று மிர்சி எப்எம்மில் சவடால் அடித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் ட்ரம்ப் தனியார் முதலாளியாக தான் Power abuse  செய்வதை பெருமையாகச் சொல்கிறார்.

***
நம் அனைவருக்கும் (ஆண்கள்) சில அனுபவங்கள் இருக்கலாம். திருமண வீடுகள், குடும்ப விழாக்கள், உற்ற நண்பனின் திருமணம் என்று ஏதாவது ஒன்றின் போது, நீங்கள் மணப்பெண்ணின் அறைக்கு அல்லது அத்தை,பெரியம்மா, பிள்ளைகள் தங்கியிருக்கும் அறைக்கு ஏதேனும் பொருள் தேடி அல்லது அவர்களே உங்களை ஒரு உதவிக்காக அழைத்து இருக்கலாம். எனது நண்பனின் அக்கா திருமணத்தில்,   அவரின் அறையில் அவர் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் சென்றுள்ளோம் கல்லூரிக் காலத்தில். "புடவை நல்லாருக்காட" என்று எங்களைப் கேட்டதுண்டு. தோடு காணோம் வளையல் காணோம் என்று  சில பசங்களை அழைத்து தேடச் சொல்லும் சம்பவங்களும் நடக்கும்.

இது எல்லாம் அவர்கள் நம்மின் மேல் உள்ள நம்பிக்கை, குடும்பம் என்ற உணர்வில் செய்வது. அதை Privilege  ஆக , கொடுக்கப்பட்ட மரியாதையாக எடுத்துக்கொள்ளாமல், வெளியில் வந்து தவறாகப் பேசினால்,  அங்கு மனிதப் பண்புகள் செத்துவிடுகிறது.

இப்போதும் அமெரிக்காவில் நாடகம், ஆட்டம் என்று மேடையில்  நடத்தும் போது , ஆண் பெண் குழந்தைகள் என்று ஒரு இடத்தில் உடை மாற்றுவது , மேக்கப் போடுவது என்று எல்லைகளுக்குள் , ஒரு புரிதலில் , நம்பிக்கையில் நடக்கும் விசயங்கள். இவை எல்லாம் இப்படியான வல்லூறு  மனச் சிந்தனைகளால்  சிதைக்கப்படுமானால் , என்ன மயிறு வாழ்க்கை என்று ஆகிவிடும்.

***

ட்ரம்ப் அவரின் மகளையே ஒரு பாலியல் பொருளாகவே பல இடங்களில் பாவித்து பேசுகிறார். ஒரு அப்பாவாக‌, அவர் தெரிந்துதான் செய்கிறாரா அல்லது லூசுத்தனமாக உளறுகிறாரா என்று தெரியவில்லை.

எனது மகளாக இல்லை என்றால் நான் இவாங்காவை டேட்டிங் செய்வேன்
https://www.youtube.com/watch?v=DP7yf8-Lk80

ரேடியோவில் அடுத்தவர் தனது மகளை Piece of a** என்று சொல்ல இவர் கேட்டுக்கொண்டு மட்டும் இல்லாமல் , அப்படி அழைப்பதை ஊக்குவிக்கவும் செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=tT2byX53PlY

***
அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எதோ ஒரு வயதில் ஏதாவது செய்து நாம் மறந்து இருந்தாலும் இது போன்ற சமயங்களில் தோண்டி எடுக்கப்படும். அதைக் குற்றம் சொல்லாமல் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியாக , "நான் இப்படியானவன். நான்  இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று ட்ரம்ப் சொல்லிவிடலாம். ஆனால் மாறாக அவர் பில் கிளிண்டனின் குப்பையைக் கிளறுகிறார்.இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

1.ஏன் வரி செலுத்தவில்லை என்றால். அது என் சமார்த்தியம் என்கிறார்.

2.ஏன் இப்படிப் பெசினீர்கள் என்றால் அது "லாக்கர் ரூம் டாக்" என்கிறார். (லாக்கர் ரூம் டர்ட்டி டாக்கை ஏன் வேலை இடத்தில் செய்கிறார் என்றால் பதில் இல்லை)

3.ஆனால் அவரே வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரிந்தே, அவரின் பெண்களின் மீதான "பாலியல் வன்முறைச் செயல்களை" அதிகாரம் உள்ளதால் செய்தேன் என்று ( Power abuse ) பெருமையாகச் சொல்கிறார்.

4.ம‌களைப் மற்றவர்கள் தவறாகப் பேச அனுமதிப்பதோடு, இவரே ஏதேனும் சொல்லி வைக்கிறார்.

.

Wednesday, October 12, 2016

படிப்பு அறிவாளித்தனம் சுசா

(https://moldover407.wikispaces.com/file/view/amanda.jpg/501008006/amanda.jpg)

ஏட்டுப்படிப்பைவிட  Interpersonal skills அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஐஐடி யாக இருந்தாலும்/ பிஎச்டி மாணவனைவிட , வார்டு கவுன்சிலருக்கு அதிக அளவில் மக்கள் தொடர்பு திறமை/மக்களுடன் பழகும் திறமை இருக்கும். அது போல சினிமாத் துறையில் இருக்கும் நபர்களுக்கும் அது அதிக அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது. சில நடிகர்/நடிகைகளின் பேட்டிகள்/செயல்களைப் பார்த்து அடேங்கப்பா என்று இருக்கும். நாம் தான் அவர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். உண்மையில் நாம்தான் முட்டாள்கள்.

சுண்டைக்காய் வெத்து வேட்டு பொறியியல் பட்டம் வாங்கி வைத்துக்கொண்டு பொட்டி தட்டிக்கொண்டு , அண்ணன் "வடிவேல்" முதல் அக்கா "இராதிகா அப்தே" வரை சவுண்டுவிட்டுக்கொண்டு இருப்போம்.

உள்ளூர் நடிகைகளில் எனக்கு ரோகிணி மற்றும் ரேவதி மேல் அதிக மரியாதை உண்டு. அவர்களின் சோசியல் பார்வைகள்/செயல்பாட்டுக்களுக்காக. அது போல வடக்கே எனக்குப் பிடித்த நடிகர் "நானா படேகர்" (Nana Patekar) நடிகைகளில் "நந்திதா தாஃச்" (Nanditha Das) . சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்.

90 களின் மத்தியில் அம்பத்தூரில் 800 ரூவாய்க்கு இஞ்சினியர் என்ற பெயரில் வெல்டரோடு வெல்டராகவும் ஃபிட்டரோடு ஃபிட்டராகவும் இருந்த காலம் முதல் இன்றுவரை அதுவே ( Interpersonal skills) உதவுகிறது. அம்பேரிக்கர்கள் இதில் சிறப்பாக உள்ளார்கள் ஒப்பீட்டளவில். உதாரணத்திற்கு பிரதமர் மோடியையும் அதிபர் ஒபாமாவையும் எடுத்துக்கொள்ளலாம்.

நம் இளைய தலைமுறைக்கு ஏட்டுக்கல்விதாண்டி  Interpersonal skills அவசியம். இன்றைய நாளில் Interpersonal skills என்பது ஒருவகை சோசியல்மீடியா லைக், ஃசேர், கமெண்ட் என்ற அளவில் நீர்த்துப்போகிறதோ என்னவோ என்ற பயம் உள்ளது எனக்கு. மனிதன் நேருக்கு நேர் உட்கர்ந்து பேசும் சந்தர்ப்பங்கள் அருகிவருகிறது.

***
சுசாமி

“He is the Swamy of America,” the 76-year-old Indian lawmaker, who formerly lectured at Harvard University, said of Donald Trump in an interview at Bloomberg’s New Delhi office. “I came much earlier than him.”
https://www.thestar.com/news/world/2016/05/25/just-dont-call-subramanian-swamy-the-trump-of-india.html

கல்லூரிக் காலங்களில் என் அப்பா சுசா வைக் காட்டி (செய்திகள் வாயிலாக) இவர் நல்லா படித்தவர். பொருளாதார நிபுணர். அம்பேரீக்காவரை தெரிந்த திறமைசாலி என்று சொல்லிக்கொண்டு இருப்பார். சின்ன வயதில் நாம் டயப்பருடன் அல்லது ட‌வுசரை நனைத்துக்கொண்டு இருந்திருப்போம். அதற்காக இன்றும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ என்பது மாதிரி சுசா வகையறாக்கள் பலரின் புத்தியை ஆண்டு கொண்டு இருந்தார்கள். இப்போதுள்ள இணைய/சோசியல் செய்திகளுக்கும் மத்தியில்,  சுசா அம்பேரிக்க அரசியல் பற்றிச் பேசிக் கொண்டு இருப்பதும் அதையும் நம்ப மக்கள் உள்ளார்கள் என்பதும் ஆச்சர்யமான செய்தி எனக்கு.

இணையம் இருந்தாலும்,  நாமாக தேடிப்போய் படிக்காவிடில் செய்திகளின் மறுபார்வை தெரிய வாய்ப்பே இல்லை. எல்லாம் என்றும் இருக்கிறது விண்ணில் மாறிக்கொண்டே . நம்மிடம் தொலை நோக்கி இல்லாததே அவைகளின் இருப்பை நாம் அறியாமல் போனதற்கு காரணம்.

பூனைகள் கண்களைத் திறந்தாலும் , எல்லா வண்ணங்களும் தெரியாது. அதுபோல சோசியல் மீடியாவில் குப்பை கொட்டுவதாலேயே அனைத்து பரிணாமங்களும் அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்ல. அது எனக்கும் தான்.

.

Friday, October 07, 2016

நியாயத் தராசு நமக்கானது மட்டுமே

ட்டகத்தின் திறன் பனிப்பிரதேசத்தில் சல்லிக்காசிற்கு உதவாது. ஒரு ஒட்டகம் அதன் அளவுகோலைக் கொண்டு பனிக்கரடியை அளக்க நினைத்தால் எப்படி இருக்கும்? நமது நியாயத் தராசுகளைக் கொண்டு அடுத்தவர்களை, அடுத்த துறையை , அடுத்த இடத்தை எடைபோட்டுவிட முடியாது. அதுபோல ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு புனிதர் பட்டங்களையோ வேறு எந்த வணிக, பரம்பரைப்பட்டங்களின் பொருட்டு மரியாதை கொடுக்க முடியாது. ஒருவருக்கு மற்றவரின் மீதான அன்பு அல்லது மரியாதை என்பது, இருவ‌ருக்கும் பொதுவான ஒரு தளத்தில் ஏற்பட்டு இருக்கவேண்டும். அங்கே இருவருக்குமான உரையாடலும் சாத்தியப்பட்டு இருக்க வேண்டும். பீடங்களில் இருந்து கொண்டு பிரசங்கம் செய்வதும் , பார்வையாளனாக கேட்பதும் ஒரு அறிமுகமாக இருக்கலாம். ஆனால் அதுதாண்டி உரையாடல் தளத்திற்கு செல்வது என்பது , இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் சம அளவு மரியாதையில்தான் உள்ளது.

இரு மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் என்பது , அதில் இருக்கும் ஒருவருக்கான உரிமை அல்ல. ஒருவகையான சலுகைதான் (privilege). அந்த சலுகையை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது உரையாடலை முறித்து சூன்யத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்.

செலிபிரட்டி என்று நான் யாரையும் வியந்தோதுவது இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்தவர்களே.  பணம் , அதிக அளவில் விளம்பரம்  , பதவிகளால் வரும் வெளிச்சம் என்று எல்லாம் கலந்துகட்டி சிலர் அதிகம் வெளிச்சத்தில்  இருப்பது ஒரு நிகழ்தகவு தான் (probability) .

உதாரணம்: அருகருகே இருக்கும் கடையில் ஒரே பொருள் , ஒரே விலையில் விற்கப்பட்டாலும், வரும் ஒரு வாடிக்கையாளர் , ஏதோ ஒரு கடையில் நுழைந்துவிடுவது சின்ன கணிதம்தான். அப்படி நடந்துவிடுவதால் மட்டுமே அந்தக் கடையில் சிறப்பு ஏதும் இல்லை. அப்படி வந்த ஒருவரை தக்க வைத்துக்கொள்வதில்தான் அடுத்த கட்டம் உள்ளது. அது இருதரப்பு மரியாதை மற்றும் மனிதம் போற்றும் பண்புகளால் வருவது.

ஏதோ ஒரு காரணத்தினால் நான் பின்தொடர்ந்த‌ சிலரை நான் இப்போது தொடருவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னை அவர்களின் வேலிக்கு வெளியே வைத்துள்ளார்கள் (blocked) . இது சரியான ஒன்றே.

ஒருவருடனான உரையாடல் என்பது, அவர்கள் நமக்கு அளிக்கும் உயர்ந்த பட்ச மரியாதை (இணையத்தில்) அது மறுக்கப்படும்போது அல்லது உரையாட அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அது இழப்பே. நான் சிலரோடு உரையாடுவதை நிறுத்திவிட்டேன். அதுபோல பலர் என்னிடம் உரையாடுவதை நிறுத்திவிட்டார்கள் அல்லது எனக்கு தொடர்பில்லாத தளங்களில் என் கண்ணிற்கு தெரியாத வண்ணம் உரையாடுகிறார்கள். இருதரப்பிற்கும் இது இழப்புத்தான். இது தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு இருதரப்பிலும்.

பதிவர் இளவஞ்சியின் (http://www.ilavanji.com)  "உங்களைப் போலவே நானும் தனித்துவமானவன்" என்ற வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. "ஆம் அனைவரும் தனித்துவமானவர்கள்". தனித்துவம் கொண்டவர்களுக்கு இடையேயான‌ உரையாடல் என்பது,  இருதரப்பு மரியாதைக்குரியது. பீடங்களில் இருந்து சொல்லப்படும் வியாக்கியானங்களை/போதனைகளை அது ஏற்காது. அந்தப் புரிதலுடனே தனித்துவம் இயங்க முடியும்.


***

சமமான மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலைகிடையாது.

டைலர் ஃசுவிட் (Taylor Swift) போன்ற இசைக் குழு , லாரி லாரியாக சாமான் சட்டுகளை எடுத்துச் செல்வார்கள் எங்கு போனாலும். அவர்களே அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். இதற்கு என்றே பெரிய குழு (logistics  crew )இருக்கும். வாக்கி டாக்கியுடன் போர்க்கால அடிப்படையில் இயங்குவார்கள் இவர்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முந்தையநாள் இரவில் இருந்து, பம்பரமாய்ச் சுழன்று மேடை , வாத்தியக் கருவிகள், ஒலி & ஒளி அமைப்பைச் செய்வார்கள். நிகழ்ச்சி தொடங்கும் நாளில் பல மணிநேரம் ஒலிச் சோதனை (sound test) செய்வார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த தமிழ்சங்க முத்தமிழ் விழாவில் , எங்களின் இசை நிகழ்ச்சி இடைவேளைக்கு முன் நடந்த ( just before the break ) ஒன்று.

இடைவேளை முடிந்தவுடன் (immediately  after the break)  நடக்க இருந்த நிகழ்ச்சி "அந்தோணிதாசன்" அவர்களின் இசைக்குழு நிகழ்ச்சி. அவர்கள் கொட்டு மேளம், நாதசுவரம், உருமி மேளம் போன்ற வாத்தியங்களுடன் Bass கிடாரும் வைத்து இருந்தார்கள். அவர்களில் ஒரு ட்ரம்மரும் உண்டு. ஆனால் ட்ரம் செட் (drum set) கிடையாது. பயணத்தில் ட்ரம் செட் எடுத்துச் செல்வது என்பது யானையைக் கூட்டிக்கொண்டு அலைவது போன்றது. எனவே அவர்கள் ட்ரம் செட் இல்லாமல் வந்து இருந்தார்கள். அந்த ட்ரம்மர் ஒரு Octapad  வைத்து இருந்தார். உள்ளூரில் யாரிடமாவது வாங்கிக் கொள்ளலாம் என்று வந்துள்ளார்கள். சங்கத்து நிர்வாகிகள் அவர்களுக்கு ஏதோ ஒரு ட்ரம் செட் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்கள். எங்களின் இசைக்குழுவின் ட்ரம் செட் , அதற்கான மைக் மற்றும் அனைத்தும் கொண்ட ஒரு தொழில்முறை நேர்த்தி கொண்டது (professionally equipped) . அதைப் பார்த்த அந்த ட்ரம்மர் , அவர்களின் நிலையைச் சொல்லி எங்களின் ட்ரம் செட்டையே அவர்களின் நிகழ்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார்.


இதில் எந்த மிடில் மேனும் கிடையாது. அவரே நேரிடையாக எங்கள் குழு ட்ரம்மரிடம் பேசி உதவ முடியுமா என்று கேட்டார். நான் இந்த இடத்தில் இளையராசா அல்லது இரகுமான் போன்றவர்களின் இசைக்குழுவை ஒப்பிட நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், இரகுமான் கீபோர்ட் (Keyborad) கேட்டு எங்களை அணுகமாட்டார். இராசா இடதுகையால்கூட எங்களைச் சுட்டமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். யாராவது உதவியாளர்கள் வந்து "அய்யா இதைக்கேட்கிறார்" என்றுதான் சொல்லி இருப்பார்கள். அப்படி நடந்து இருந்தால் "போங்க பாசு போய் வீட்டுல பெரியாள் இருந்தா வரச்சொல்லுங்க" என்றுதான் சொல்லி இருப்பேன் நான்.

அந்தோணிதாசன் குழுவில் உள்ள யாரும் தங்களை பீடங்களில் வைத்துக் கொள்ளவில்லை. Down-to-earth என்று சொல்வார்களே அந்த அளவில் மிகவும் எளிய உள்ளங்களாக இருந்தார்கள். அந்தோணிதாசனின் மனைவியும் பாடகியான "ரீட்டா" அவர்களிடம் , என் மனைவி சென்று " உங்கள் குரல் கணீரென்று சிறப்பாக உள்ளது" என்று சொன்னதற்கு, "எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தாம்மா" என்று சொல்லியுள்ளார். அதைக்கண்டு திகைத்துவிட்டார் என் மனைவி. சினிமா புகழ் / ஒளி வட்டத்தில் இருந்தாலும், "இரசிகர்களின் ஆசிர்வாதத்தில்தான் எலாம்" என்று சொல்லும் பாங்கு அதிசியமானது இந்தக்காலத்தில். என் மனைவியும் பாடகி ரீட்டா அந்தோணிதாசன் அவர்களும் அப்படியே குழந்தை குட்டி, அவர்களின் படிப்பு என்று  பேசி வழக்கமான அம்மாக்களின் உரையாடல் டெம்ப்பிளேட்டில் ஐக்கியமாகிவிட்டார்கள்.


இடைவேளையின் போது அந்தக் குழுவின் ட்ரம்மருடன் நான் பேசினேன். அவரும் மதுரைக்காரர் என்றவுடன் ஊர்ப்பாசமும் கூடிவிட்டது. எங்களின் ட்ரம்செட்டை அவரின் விருப்பதிற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியின் முடிவில் அனைவரிடமும் பேசினேன்.

"அண்ணே நீங்க வாங்கண்ணே, நீங்களும் வாங்கண்ணே" என்று "அந்தோணிதாசன்" தான் அனைவரையும் அழைத்து போட்டோ பிடிக்க வைத்தார். அவர்களுக்கான சிகரங்களைத் தொட்டாலும், மற்றவர்களை சக மனிதர்களாக மட்டும் நினைத்துப் பழகும் /மதிக்கும் அந்த மனிதர்களின் வாஞ்சையான அன்பு மறக்க முடியாதது.

அந்தோணிதாசன்
https://www.youtube.com/watch?v=g3N-jZTXn7k

http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/singer-anthonydasan-cinema-entertainment-115051600033_1.html

****
எனவே உரையாடல் என்பது ஒரே தளத்தில்தான் சாத்தியமாகும். உரையாட‌லுக்கான வாய்ப்பு என்பது எனக்கு நீங்கள் கொடுக்கும் சலுகை/வாய்ப்பு என்பதில்  நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அந்த வாய்ப்பிற்கு என்றும் நன்றி!

பீடங்களில் இருந்து வருவது சத்தமாக மட்டுமே எனக்கு கேட்கும்.

*

Friday, September 16, 2016

காவிரி


1. தற்கொலை, கொலை , வாகன எரிப்பு போன்ற செயல்களும் மூடத்தனங்களே.

2. அரசியல் என்பது அய்ட்டி வேலை, சாமியார் வேலை, கதை பொத்தகம் எழுதும் வேலை, கொத்தனார் வேலை போன்றதொரு வேலை. அதற்கு சிபாரிசு, பண முதலீடு என்று எல்லாம் உள்ளது.

3.உங்களின் ஓட்டுக்கு விலை கொடுத்தாகிவிட்டது. தங்கள் வாக்கு உரிமையை காசுக்கு வித்த சமூகம் , அதை வாங்கியவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டாகிவிட்டது. அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க உங்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

4. மழை நீர் சேமிப்பு, ஏரிகள் பரமாரிப்பு என்ற எந்த சுய சொரணயும் அற்ற சமுதாயம் நம்முடையது. அம்பேரிக்கா வந்தும் அரசால் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கான ஏரிகளில் பொம்மைகளை கரைப்பது, பூசை என்ற பெயரில் குப்பைகளை எறிவது என்று நடத்தும் நாம் சிவில் விதிகளைக் கையாளவே முடியாது.

5. சினிமா தொழிலாளிகளை அல்லது கதை பொத்தக தொழிலாளிகளை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. அவர்கள் உங்களுக்கான பொழுது போக்கு விசயங்களை விற்று தொழில் செய்பவர்கள்.

6.பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டத்திற்கு தலைவனாக‌ ஒரு கொலைகாரனே வரமுடியும். மக்களாகிய‌  நாம் எந்த விதிகளையும், சிவில் விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. நம்மை ஆள, நம்மில் சிறந்த மொள்ளமாரிகளால்தான் முடியும்.

7. இந்தப் பிரச்சனையை இணையத்தில் பேசி தீர்க்கமுடியாது. உலக அளவில் இந்த நூற்றாண்டிற்கான அரசியல் போராட்டவடிவம் மாறி இருந்தாலும், இந்தியா  & தமிழர்கள்  இன்னும் கதை பொத்தகம்  சினிமா தாண்டி இணையத்தை உருப்படியாக பயன்படுத்துவது கிடையாது.

8.கருத்துச் சுதந்திரம் என்பது, உங்களுக்கு பிடித்த கருத்தை நான் சொல்லும்போது நீங்கள் போடும் + அல்ல, உங்களுக்கு பிடிக்காத கருத்தை நான் சொல்லும்போது நீங்கள் எனது சொல்லும் உரிமைக்கு கொடுக்கும் + தான்.

9.கருத்து , உரையாடல் என்பது அரசியல் அம்மாவிற்கும்  அரசியல் அய்யாவிற்குமே நடக்காது எனும்போது , அடுத்த மாநிலத்துடன் பேசுவது (கருத்து , உரையாடல்)  என்பது என்றுமே நடக்கப்போவது இல்லை. இது கசப்பான உண்மை.

10.தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள ஒரே பொது அமைப்பு என்பது மத ரீதியான இந்து என்ற சனாதனமும் (அதிக மக்களால் கடைபிடிக்கப்படுவது) அரசியல் ரீதியான இந்தியா பொது  விதிகளும்தான். இப்படியான இருவருக்கும் உள்ள ஒற்றுமை அம்சங்களால் இதற்கு விடைகாண முடியவில்லை என்றால் எதனாலும் முடியாது.

.

Tuesday, August 09, 2016

இரோம் சர்மிளா ‍ - காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை

ணிப்பூர் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. அங்கே உள்ள "லோக்டக்" ஏரி ( Loktak Lake) உலகில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா.

http://www.thebetterindia.com/38244/loktak-lake-manipur-floating-national-park/

https://www.youtube.com/watch?v=ieEkp_jgsLU

பார்க்க வேண்டிய இடங்கள் என்ற எனது ஆசை மற்றும் பேராசைப் பட்டியலில் இன்றுவரை இந்த இடம் இருந்து கொண்டுள்ளது. மணிப்பூர் , இந்தியா என்ற அடையாளத்துடன் இருந்தாலும், லாட்டரி சீட்டுகளே தமிழகத்தில் அந்த மாநிலத்தின் இருப்பை எனக்கு உணரச் செய்தது. பாடப்புத்தகங்கள் சொன்னதைவிட மதுரை "கே.ஏ.எஃச் சேகர்" லாட்டரி கடைகளே இந்த மாநிலத்திற்கு அதிக வெளிச்சம் அடித்துக்காட்டியது.

அதன் பிறகு மணிப்பூர் என்றாலே என் நினைவிற்கு வருவது இரோம் சர்மிளா.
AFSPA என்ற இந்திய இராணுவச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியவர். இப்போது அதை கைவிடுகிறார்.

Armed Forces Special Powers Act (AFSPA), which gives soldiers sweeping powers to arrest without warrants and even shoot to kill in certain situations. AFSPA is in effect in several Indian states, including in Manipur and Indian-administered Kashmir.

ஆம் இப்படியான சட்டம் காந்தியின் தேசத்தில்தான் உள்ளது. அதை எதிர்த்து ,அதே காந்தி தேசப் பெண்தான் , அதே காந்திய வழியில் 16 வருடமாக போராடினார். காந்தியின் பேர் சொல்லும் கட்சியோ, கடவுளின் பேர் சொல்லும் கட்சியோ ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. கிரிக்கெட்டுக்கு கூவும் மக்களும் , மதத்திற்கு மல்லுக்கட்டும் மக்களும் கார்பரேட்டு அடிமைகளான என்போன்ற சாம்பிராணிகளும் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

உலகில் ஏதேனும் போராட்டங்கள் நடந்தால் பலர் தங்களின் சொம்புகளைத் தூக்கிக்கொண்டு மடச்சாம்பிராணி பக்த கோடிகளுக்கு காந்தியம் உபதேசம் செய்வார்கள். காந்தி குல்லா போட்டு கல்லா கட்டுவார்கள். ஆம் நீங்கள் காலம்முழுக்க தாங்கிப்பிடித்த காந்தீயம் இன்று பல்லிளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு துரும்பைக்கூட அசைக்க வலுவற்றது இந்த போராட்ட முறை. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு போராட்ட முறையின் வெற்றி தோல்வியில், அதன் மறுமுனையில் உள்ளவர்களின் பங்கும் முக்கியமானது. காந்தியின் அகிம்சைப் போராட்டம்தான் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது என்று நீங்கள் நம்பினால், அதன் அர்த்தம், அந்த போராட்ட வடிவத்தை மறுதரப்பு மதித்தது என்பதுதான் உண்மை. இன்று உலகில் உள்ள அரசாங்கங்கள் எதுவும் நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் மனிதநேயம் கொண்டது அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் , அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட அமைப்புகள்.

ஒரு கொள்ளையர்களின் கூட்டத்திற்கு பெருங்கொலைகாரனே தலைவானக‌ இருக்க முடியும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று மக்களின் மீதான ஒரு அவ நம்பிக்கையை கோடிட்டுகாட்டியுள்ளார் சர்மிளா.

Irom Sharmila: World's longest hunger strike ends
http://www.bbc.com/news/world-asia-india-37007494

//Some people are seeing me as a strange woman because I want to join politics. They say politics is a dirty, but so is society.//

-சர்மிளா உங்களின் அரசியல் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

-அரசியல்பாதை சரியானதுதான் அதில் பங்கெடுக்கும் மக்கள் சரியானவர்களாக‌ இருக்கும்வரை.

-இந்தியாவில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக‌ வேண்டும்.


கல்வெட்டு: பாலஸ்தீனம்-இலங்கை ...
http://kalvetu.balloonmama.net/2009/11/blog-post_17.html

பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்



நீங்களும் என்னைப்போல ஒரு ‘இணைய மொண்ணையாக’ இருப்பின் உங்களுக்கு நான் ஒரு இணைய மொண்ணையாக மட்டுமே அறிமுகமாயிருப்பேன். நான் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் இணைய மொண்ணையின் கருத்தாகவே இருக்கும். நான் மெய்வாழ்வில் என்ன செய்கிறேன் ( What I do for living ) என்பது உங்களுக்கு தெரியாதததால் , நான் சொல்லும் கருத்தின் அளவு (வீச்சு) "ஒரு இணைய மொண்ணையின் கருத்து" என்ற அளவில்தான் உங்களுக்கு வந்து அடையும். நீங்களும் அந்த அளவில்தான் என்னை எடைபோடுவீர்கள் அல்லது எனக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உங்களுக்கு தமிழகத்தின் வார /மாத பத்திரிக்கைகளின் நடைமுறை தெரிந்து இருக்கும். நீங்கள் ஒரு செயலினால் மக்களை அதிகம் கவர்ந்துவிட்டால், உங்களுக்கு அதிக பக்கம் ஒதுக்கி, உங்களை மற்ற ஒன்றையும் செய்யச் சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் கார்ட்டூனிஃச்ட் "மதன்". இவரின் முகவரி கார்ட்டூன். அதில் கிடைத்த வெளிச்சத்தில் இவர் கேள்வி பதில் சொல்ல ஆரம்பித்தார். "அயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி?" என்பதில் இருந்து அம்பேரிக்கா வரை சளைக்காமல் பதில் சொல்வார். "எனக்கு இது தெரியாது?" என்று பதில் இருக்கவே இருக்காது. அப்படியான கேள்விகள் ஒதுக்கப்படும் ஏன் என்றால் இங்கே பதில் வேண்டும்.

இவரின் பதில்கள் மக்களால் எப்படி உள்வாங்கப்படும் என்றால் "மதனே சொல்லிவிட்டார்" என்றுதான் இருக்கும். இங்கே இவரது ஒலி பெருக்கி இவரின் "கார்ட்டூன்" தானே தவிர உண்மையான கருத்தின் சத்தம் (உண்மைத்தன்மை ) அல்ல. இப்படித்தான் அண்ணன் பா. ராகவனும் இணையத்தில் சவுண்டு விடுவார் "எப்படி எழுத வேண்டும்?" என்று. இங்கே அவரின் ஒலிபெருக்கி அவரின் கதை எழுதும் திறன். பா.ராவே சொல்கிறார் என்றுதான் கருத்து சென்றடையும்.

பிளாக்கர் செ.மோ யும் இப்படித்தான். அவரின் ஒலிபெருக்கி புனைவுக் கதை எழுதும் திறன்.

**

கிளிண்ட் ஈஃச்ட்வுட்

இவர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்று தெரியாது. எனக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் நடிகராக மற்றும் இயக்குநராகவே அறிமுகமாயுள்ளார். ஒரு துறையில் கிடைத்த புகழின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி (விரும்பியோ விரும்பாமலோ அதுதான் அவர்களின் ஒலிபெருக்கி) அடுத்த துறையில் கருத்துச் சொல்லும்போது "நடிகர் கிளிண்ட்" என்ற சத்தமே மக்களை திரும்ப வைக்கிறது. இவரே ஒரு இணைய மொண்ணையாக இருந்திருந்தால், நானும் மெனக்கெட்டு இருக்க மாட்டேன் நீங்களும் வந்து பேசி இருக்க மாட்டீர்கள். இங்கே அவர்களின் பழைய தொழில் சத்தமே மூலதனமாக உள்ளது அவர்களின் கருத்து அல்ல.

இவர்களுக்கு கிடைத்த ஒலி பெருக்கியின் அளவு சாமான்யனைவிட அதிகமானது. இவர்களின் சத்தத்தின் அளவில்தான் இவர்களின் கருத்துகள் பெரும்பாலும் எடைபோடப்படுகிறதே தவிர அதன் உண்மைத் தன்மையில் அல்ல. இவர்கள் பழைய‌ தொழில் ( What they do for living  ) வெளிச்சத்தின் உதவியால் வைக்கும் கருத்துக்களையே விமர்சிக்கிறேன்.

நான் சொல்வது இவர்களின் ஒலிபெருக்கியின் சத்தங்களில் தொலைந்துபோகாமல் ( Just because they are great in that profession doesn’t mean ) கருத்தை எடைபோடவேண்டும் என்பதே.

எனக்கு அவர்களின் கருத்தில் ஏற்பில்லை கோமாளித்தனமாக உள்ளது. ஆனால் அவர்களின் ஒலிபெருக்கியின் அளவு (சத்தம்) பலரைச் சென்றடையவும், அதன் பேரில் அதை ஏற்கவும் வாய்ப்பு இருப்பதால் , ஒரு துறையில் கிடைக்கும் ஒளிவட்டத்தால் எடைபோட வேண்டாம் என்கிறேன்.

எனக்கு இருக்கும் "இணைய மொண்ணை" ஒலிபெருக்கியில்தான் என் கருத்து சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அது கருத்திற்காக மட்டும் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். நான் என் துறையில் கொம்பன் அல்லது சும்பன் என்பதற்காக அல்ல.

Wednesday, January 06, 2016

புத்தாண்டில் கடவுளானேன்

ந்தப் பெண்கள் முதல்முறை வந்தபோது "வேலையாக இருக்கிறேன் மன்னிக்க". என்று சொல்லி சமாளித்தேன். அக்மார்க் உண்மையாக அன்று நான் வீட்டில் இருந்து அலுவலக வேலைதான் பார்த்துக்கொண்டு இருந்தேன். கதவைத் தட்டினார்கள் என்பதற்காக அவர்களிடம் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்ன். அதில் ஒரு புண்ணியவதி  " எல்லாரும் வேலைதான் பார்க்கிறார்கள்" என்று நக்கலாக ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னார். அப்படியே "நீங்கள் இந்துவா?" கேள்வியைச் சொருகினார்கள். "எனக்கு வேலை உள்ளது மன்னிக்க" என்று சொல்லி , அவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன் கதவை மூடிவிட்டேன்.  வீட்டிற்கு Desi TV புரோக்ராம் வாங்குங்கள் என்று வரும் விளம்பர அட்டைகள் முதல் இப்படி மதவிற்பனையாளர்கள் வரை மொகரையை வைத்து சிலவற்றை முடிவு செய்கிறார்கள்.

ஏற்கனவே பலமுறை இப்படி எனக்கு நடந்துள்ளது. இதற்கு முன் ஒருமுறை "மார்மன்" நம்பிக்கையைச் சார்ந்த யுவதிகள் நாங்கள் இருந்த அடுக்ககத்தில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் தங்கி இருந்தார்கள்.  மார்மன் (https://en.wikipedia.org/wiki/Mormonism  ) நம்பிக்கையாளர்கள் இப்படி "மிசன்" தொண்டு செய்யவேண்டும் என்பது ஒருவித அமைப்பு முறை.

சென்ற தேர்தலில் ஒபாமாவுடன் மோதிய Mitt Romney இந்த அமைப்பச் சேர்ந்தவர்தான். அம்பேரிக்காவில் பல இளைஞர்களை பார்க்கலாம் . இரட்டை இரட்டையாக மிதிவண்டியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.   எங்கள் வீட்டெதிரில் இருந்த இந்தப் பெண்கள்  தினமும் வெளியில் வந்து உடற்பயிற்சி செய்வார்கள். ஒருமுறை கடவுள், மதம் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்டார்கள். அவர்களின் நோக்கம் அவர்களின் 'மதப்பரப்பல்' அதுதாண்டி ஒன்றும் இல்லை. "எனக்கு மதம் அல்லது கடவுள் தேவை இல்லை. ஏன் என்றால் நான்தான் கடவுள், எனக்காக உங்களைப்போல் பலர் ஊழியிம் செய்கிறார்கள்" என்று சொல்லிவிட்டேன்.

நான் சொன்னபதிலில் அவர்கள் அதற்கடுத்து என்னிடம் கடவுள் குறித்து பேசுவது இல்லை. அங்கே இருந்தவரை வெறும் அண்டைவீட்டு நட்பு அளவில், சிரித்து முகமன் கூறிக்கொள்வோம் அவ்வளவே.

ந்த முறை புத்தாண்டு தினத்தில் நான் முதலில் சொன்ன அதே பெண்கள் கதவைத் தட்டினார்கள்.  சன்னல் வழியே அவர்களைப் பார்த்த மனைவி " நீங்களே போய் பதில் சொல்லுங்கள்.அவர்கள் பைபிள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்" என்று என்னை விரட்டினார்.  இந்தமுறையும் நான் அவர்களிடம் சரியான பதிலைச் சொல்லாவிடில் , அவர்கள் மூன்றாம் முறையாகவும் கதவைத் தட்டக்கூடும் என்பதால், நேரம் எடுத்து பேசத் தயாரானேன்.  வந்தவர்கள அதே இரு பெண்கள்தான். உள்ளூர் தேவாலய முகவரி அச்சிடப்பட்ட சில அட்டைகளை என்னிடம் திணித்தார்கள். அவர்களே அவர்களின் முந்தைய வரவை நினைவு கூர்ந்து, "இன்று உங்களுக்கு விடுமுறைதானே? வேலையில் இல்லவே" என்று பேச்சை ஆரம்பித்தார்கள். "ஆம்" என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொன்னேன்.  வந்தவரில் ஒருவர்,  இயேசு சொன்னார் என்று ஏதோ ஒரு வார்த்தையை அட்டையில் இருந்து எடுத்துச் சொல்லி,  "நீங்கள் எந்த மதம்?" என்று என்னைக் கேட்டார்.

நான் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவருக்கும் கை கொடுத்து "I love you " என்று சொன்னேன்.  சொன்னபிறகு,  "நான் இப்படி உங்கள் மீது அன்பு செலுத்த எனக்கு எந்த கடவுளும் தேவை இல்லை . எந்த புனித புத்தகங்களும் தேவை இல்லை.  கீழே விழப்போகும் ஒரு குழந்தையை தாங்கிப்பிடிக்க, அல்லது எப்படிப் பிடிக்க வேண்டும் என்று மதங்கள் சொன்னால்தான் செய்வேன் என்று நான்  இருப்பது இல்லை. இவை எல்லாம் ஒரு மனிதன் சக மனிதனுக்கு காட்டும் அன்பு.  எனக்கு அது உள்ளது. உங்களுக்கும், அது இருக்கும் இந்தப் புத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்." என்றேன்.

அதுக்கும் மசியாமல் "இதயேதான் ஏசும் சொன்னார்" என்றார் வந்தவரில் ஒருவர். நான் சிரித்துக்கொண்டே "அடுத்த வீடுகளுக்கு போகும்போது நானும் இதையே சொன்னதாகச் சொல்லவும்" என்று சொன்னேன். நமட்டுச் சிரிப்புடன் போய்விட்டார்கள். இனிமேல் கதவைத் தட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.