Tuesday, October 16, 2018

96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி? ஏன்?

நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்திற்காக 'விசய் சேதுபதி' அதிகம் மெனக்கெட்டு உடம்பை வளர்த்துள்ளார். டி ராசேந்தரை நினைவுபடுத்தும் தோற்றத்தைக்கொண்டுவர, அதிகம் உழைத்துள்ளதை பாராட்டவேண்டும்.

தொந்தியும் தொப்பையுமாக, சதக் பொதக் என்று, ஒரு சராசரி ஆண் வர்க்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் விசய் சேதுபதி.சினிமாவைக் காதலிக்கும் ஒரு நடிகனால் மட்டுமே படத்திற்காக இப்படி உடம்பில் மாற்றம் காட்ட முடியும்.

ராமச்சந்திரனாக வாழ்ந்து இருக்கிறார்

நட்சத்திர விடுதியில் திரிசாவுடன் தரையில் அமர்ந்திருக்கையில் தள்ளி அமர்வது, குழந்தை போல பாசாங்கு காட்டுவது, கார் கதவைத் திறக்கும்போது சசிகலாவிற்கு எடப்பாடி அய்யா காட்டும் வகையான‌ பவ்யம், எல்லாவற்றையும் தாண்டி, தூங்குபவளின் தாலியை வணங்கி கண்ணில் ஒற்றுவது போன்ற "அரைவேக்காட்டுத்தனம் + பத்தாம் வகுப்பிற்கு மேல் மனதளவில் வளராத‌" கேரக்டரை நம் கண்முன் கொண்டுவருகிறார் அவரின் தேர்ந்த நடிப்பால். வெல்டன் சேதுபதி!

குறியீடுகள்

ராமச்சந்திரன் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை பல குறியீடுகளாலும் இயக்குநர் உணர்த்துகிறார். அறையில் இருக்கும் நம்மாழ்வார் படம், தொழிலதிபர் 'சக்கி' புரோமோட் செய்யும் காப்பர் சொம்பு & டம்ளர் என்று பல குறியீடுகளால், ராமச்சந்திரன் கேரக்டர் வாழும்,  "ஃகீலர் வாழ்க்கையை" நமக்கு குறிப்பால் குறிப்பால் உணர்த்தி, அந்த அரைவேக்காட்டுக் கேரக்டரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதையும் தாண்டி, பெண்கள் "சிலீவ் லெஃச்" போடக்கூடாது என்று ராமச்சந்திரன் கேரக்டர் சொல்வதாக அவரின் மாணவிகளை வைத்தும் சொல்லியிருக்கிறார். இப்படியான காட்சிப்படுத்தல்கள்மூலம், 96 க்குப்பிறகு வளராமல் தேங்கிவிட்ட "முன்னோர்கள் என்ன முட்டாள்களா?" என்று சொல்லும் இன்றைய வாட்சப்பு மனிதர்களின் பிரதிநிதியாக ராமச்சந்திரனை கச்சிதமாக திரையில் கொண்டுவருகிறார் விசய் சேதுபதி. வெல்டன்!

பாலுறவு நடக்குமா /நடக்காதா

"வீடு பக்கத்துல இருக்கு வாங்க பேசுவோம்" என்று 1986  பத்தாம் வகுப்பு கிழக்கூட்டமான நானே சகசமாக சொல்லியிருக்கிறேன் என் ஆரம்பப்பள்ளி பப்பி லவ் பெண்களிடம். 1996 ல் பத்து படித்த கூட்டம், "பாலுறவு" நடந்துவிடலாம் அல்லது நடந்துவிடுமோ? என்பது குறித்தே பயப்படுகிறார்கள் அல்லது அதையே முக்கிய கருவாக வைத்து பயம் காட்டுகிறார்கள் பார்வையாளர்களுக்கு.

மேலும் , "ஒன்னியும் நடக்காது தைரியமா படம் பாருங்க" என்பதை "ரம்பாவே ஆடினாலும் அசையாதவர்" என்று கீரோயின் வழியாக‌ பிலடப், "அய்யா நல்லவர் வல்லவர்" என்ற லோக்கல் தாதாக்களின் அல்லக்கை பில்டப்பிற்கு சிறிதும் சளைக்காத மாணவி கதாபாத்திரம்.

இப்படி பலவழிகளில் பாலுறவு நடக்குமா /நடக்காதா/நடக்கவே நடக்காது/ தங்கக்கம்பி தம்பி என்று, சானு‍-ராமச்சந்திரன் சந்திப்புகள் திகிலாகவே போகிறது. அவர்கள் அருகில் இருந்தாலே ஏதாவது நடந்துவிடலாம் என்ற பில்டப்புகளை இயக்குநர் குறியீடுகளாலும், சவளப்பிள்ளை போன்றதொரு மன்னாரு பாத்திரத்தை தன் நடிப்பாலும், நம் கண்முன் கொண்டுவந்து விசய்சேதுபதியும் "சபாசு" என்று சொல்ல வைக்கிறார்கள்.
**
"அந்த விசயம்" நடந்துவிடுமோ?

இது எல்லாம் தாண்டி நட்சத்திர விடுதியில் , திரிசா படுக்கையில் இருந்துகொண்டு "மேல வாடா" என்று அழைத்தவுடன் விசய் சேதுபதி "அஞ்சரைக்குள்ள வண்டி" லெவலில் சீன் போட்டு, தட்டுத்தடுமாதிரி படுக்கையில் கைவைத்து ஏறி, மனம் எல்லாம் காமம் மட்டுமே உள்ள அந்நியனாக நடிப்பில் அசத்துகிறார். படம் முழுக்க "அந்த விசயம்" நடந்துவிடுமோ என்ற பரிதவிப்பில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவருவதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். இயக்குநரின் சிறப்பு!

வெறுமனே நடிப்பால் மட்டும் இல்லாமல், உரையாடல்ககளிலும் நேரடியாகவே,  "ஏதாவது ஆயிருமா?", "என்னடா இந்த வேகத்தில் இருக்காங்க" என்று தோழியாக வரும் ஒரு கேரக்டர் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே உள்ளது கதைக்கு வலுச்சேர்க்கிறது.

திரிசா தவிர எல்லா நண்பர்களும் "ஏதாவது ஆயிருமோ?" என்ற சிந்தனையிலேயே படத்தை நகர்த்துகிறார்கள். அருமையான திரைக்கதை ஒருவித படப்படப்புடன் ஏதாவது ஆகாதா? அல்லது ஆயிருமோ? என்ற பரிதவிப்பை படத்தின் பின்பாதி முழுக்க தெளித்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் எதிர்பார்ப்பை தன் சீரிய நடிப்பால் சிறக்கச் செய்கிறார் விசய்சேதுபதி.
**
நீ இன்னும் வெர்சினா?

எனது 1986 பத்தாம் வகுப்பு காலம் மற்றும் இந்தப்படம் நடக்கும் 1996 பத்தாம் வகுப்பு காலங்களில் வளர்ந்து "ஆளான "ஆணுக்கோ பெண்ணுக்கோ கன்னிகழிதல் என்பது திருமணம் முதலிரவு நேரமே. சுய இன்பங்கள் தவிர்த்து, வெர்சினிட்டியை இழப்பது என்பது நேரடி உடலுறவில் மட்டுமே சாத்தியம்.

ராமச்சந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தும், சானு அவரிடம் "நீ இன்னும் வெர்சினா?" என்று கேட்பது, ரம்பை வந்தாலும் கவுந்தடித்துப் படுக்கும் "குலக்குத்துவிளக்கு" கேரக்டராக காட்டப்படும் ஒரு கதாபாத்திரத்தை, அவமதிப்பதாகவே உள்ளது. இது திரைக்கதையில்/கேரக்டர் பில்டப்புகளில் சின்ன சறுக்கல்.

ராமச்சந்திரன் paid sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும் அல்லது dating, சேர்ந்துவாழ்தல் போன்ற மியூச்சுவல் கன்சன்ட் sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும்.

ஆனால், கொடுக்கப்பட்ட "கேரக்டர்பில்டப்புகள்"படி, ராமச்சந்திரன் அப்படி இல்லை. இது தெரிந்தும், "வெர்சினா?" என்று சானு கேட்பதும் , அதற்கு  ராமு உடம்பெல்லாம் தெறித்து, நடுங்கி, சீன் போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விசய் சேதுபதி சரியாகச் செய்தாலும், ஏன் இயக்குநர் இப்படி தான் பில்டப் கொடுத்த ஒரு "குலக்குத்துவிளக்கு" கேரக்டரை அவரே கேரக்டர் அசாசினிசேசன் செய்கிறார் என்று தெரியவில்லை.

காதல் கல்யாணக் குழப்பம்

"யாரையாவது காதலிச்சியா" என்ற கேள்விக்கு "ஆமா கல்லூரில ஒரு பொண்ணு..." என்று கதை சொல்கிறார். ஆக, இவர் சானுவை பாலத்தில் கடக்காமல் நின்றாலும், பிற பெண்களை காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் க‌ல்யாணம் என்று சொன்னவுடன் இவரின் 'சானு' நினைவு வந்துவிட்டதாகச் சொல்லி விலகிவிட்டதாகச் சொல்கிறார். காதலுக்கு "ரீட்டா" கல்யாணத்திற்கு "சானு" என்ற பழையகால கதைகளை கண்முன் கொண்டு வந்துள்ளார் தனது நடிப்பால்.

பத்தாவது படிக்கும்போது இனம் புரியாத உணர்வாக சானுவை விரும்பியவர், கல்லூரியில் அடுத்தவரைக் காதலித்தேன் என்று சொல்கிறார். ஆனால், திருமணம் என்றவுடன் சட்டென்று 'சானு' நினைவிற்கு வந்து காதலை கலாய்க்கிறார்.

கடைசிவரை காதல் என்றால் என்னவென்று புரியவே புரியாத மயிலாப்பூர் சந்துரு வகை மனிதர்களை, அச்சு அசலாக காட்சிப்படுத்துகிறார் விசய் சேதுபதி தன் நடிப்பால். வெல்டன் சேது!

சானுவின் நிம்மதி

சானு கேரக்டர் ராமச்சந்திரனைக் கட்டாமல் நிம்மதியாய் இருப்பதாகச் சொல்வதன் மூலம், பத்தாவது வகுப்பிற்குப்பிறகு வளராமல் பாலத்திலேயே நின்றுவிட்ட ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், சானு நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை,விழாவிற்கு வருபவர்களை வைத்து குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்.

அந்த 96 கூட்டத்தில் சானு மட்டுமே "Jean Legging" பாட்டமும், சுரிதார் டாப்பும் அணிந்தவர். மற்றவர்கள் எல்லாம் சேலையும் சுரிதாருமாக உள்ள பெண்கள். ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், வீட்டிலேயே பிரசவம் என்ற பாரிசாலன், ஃகீலர் ரேஞ்சு வாழ்க்கையாகி இருந்திருக்கலாம் சானுவிற்கு யார் கண்டார்கள்? நம்மாழ்வார் படம் மற்றும்  காப்பர் டம்ளர் வகையில் வாழும் ராமச்சந்திரன் சானுவை மணந்திருந்தால், 96 பத்தாம் வகுப்பு சந்திப்பிற்கு "பின் கொசுவம் வைத்து" சேலை கட்டிவர வேண்டும் என்றுகூட சானுவிடம் சொல்லியிருக்கலாம்.

பலூனை உடைத்துகொண்டும், தலையைக் குனிந்து கொண்டு சவளப்பிள்ளையாக இருக்கும் ராமச்சந்திரன் கேரக்டர், அதைத்தான் உணர்த்துகிற‌து. மனம் வளர்ச்சியில்லாமல் பத்தாம் வகுப்பிலேயே தேங்கிவிட்ட ஒரு கேரக்டரை, த‌ன் நடிப்பால் பின்னி எடுக்கிறார் விசய் சேதுபதி. இவர் ஒரு சாதனைபதி!!

திரிசா


அருமையான நடிப்பு. Ageing gracefully!

இந்தப்படத்தின் மொத்த சுமையையும் சுமக்கிறார். மனவளர்ச்சி தடைப்பட்ட பழைய காதலன்(?), ஏதாவது நடந்துவிடுமோ என்ற பாலியல் பரவச பில்டப் கொடுக்கும் நண்பர்கள் கூட்டம் என்று பல அரைகுறை மனவளர்ச்சி கதா பாத்திரங்களுடன் சமாளித்து, கதையை நகர்த்திச் செல்கிறார்.

இறுதிக்காட்சியில், "இப்படி இன்னும் வளராமயே இருக்கானே" என்ற உணர்வில், தலையில் கைவைத்து ஆசிர்வாதம் கொடுத்து பிரிகிறார், அழுகிறார்.

ஒருவேளை திருமணம் நடந்திருந்தால் 96 ன் இரண்டாம் பாகமாக "சிப்பிக்குள் முத்து" இருக்கும்.

விசய் சேதுபதி

"நடுப் பக்கத்தைக் காணோம்" படத்தில் அவ்வளவாக வசனம் இல்லை. அதற்கடுத்து (நான் பார்த்தது) ஏதோ ஒரு ரவுடிப் படம் (நயன்தாராவுடன்).சவசவ என்று பேசினார்.  நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் வசனமாடல் ஒருகாலத்திலும், மணிரத்தினத்தின் முனுமுனு வசனங்கள் ஒருகாலத்திலும், இயல்பான பேச்சு மொழி வசனங்கள் ஒரு காலத்திலும் சக்கை போடு போட்டது. அந்த ட்ரெண்டுகளை மாற்றி, ஒருவித "சவசவ" பேச்சுமொழியை  அறிமுகப்படுத்தி, அனைவர் உள்ளங்களையும் கவர்ந்து வருகிரார் விசய் சேதுபதி.

வாட்சப்பு குரூப்புகளில் இருந்துகொண்டு, காப்பர், நம்மாழ்வார் என்று எதையாவது பார்வேர்டு செய்து, கண்டதைப் பின்பற்றி , கண்டதைத் தின்று தொந்தி வளர்த்து அலையும் மனிதர்களை கண்கூடாகக் கொண்டுவர நிறைய மெனக்கெட்டு இருக்கார்.

இந்தப் படத்திற்காக உடம்பில் முன்னேற்றம். சிறப்பு!

இசை
அருமை. கண்களை மூடிக்கொண்டே ரசிக்கலாம் படத்தை.

விசய்சேதுபதியின் சவளப்பிள்ளைத்தனமான, 'கிள்ளினா அழுதிடுவேன்', 'கிட்ட வந்தா கடிச்சு வச்சுடுவேன்', 'தள்ளியே நிப்பேன்', 'பலூன் உடைப்பேன்' வகை நடிப்பு சமயங்களில், நாம் சிறிது நேரம் கண்ணை மூடி, நம்மை இயல்புக்கு கொண்டுவர, இப்படி இசையை இரசிப்பது தேவை.

இயக்கம்
எடுத்துக்கொண்ட கதை அருமை. " மயிலை மன்னாரு" வகை கதாபாத்திரத்தையும், சின்னவயசு காதலையும்,கவட்டைச் சிந்தனையிலேயே அலையும் அரைவேக்காட்டு நண்பர்களையும் ஒரு சேர ஒரு திரைக்கதையில் எடுக்க நினைத்து, டைரக்டர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

96 ல் பத்தாம் வகுப்பு முடித்துபிறகு, சானுவை அவரின் திருமணம்வரை பின் தொடர்ந்திருக்கிறார் இராமச்சந்திரன். இது ஒரு creeping சைக்கோ மனநிலை. வேறு ஒரு பார்வையில் இதைப் பார்த்தால் இது ஒரு சீரியல் கில்லர் வகைப்படமாக எடுக்க நிறைய scope உள்ளது தெரியும். ஆனால், சிறிதும் வழுவாமல், வளராத மனநிலை கொண்ட ஃகீரோவை வைத்து "பெட்டியை மூடும் வரை" சிறப்பாக கதையை நகர்த்தி வெற்றி பெறுகிறார் இயக்குநர்.

டைரக்டர் டச்சு
பிடித்த பெண்ணிற்கு திருமணமானபின், அவரின் குழந்தை அவரைப்போல் இருப்பதால், "குழந்தையை சைட்டு அடிக்கிறான்" என்ற கூமுட்டை வசனங்களை சைக்கோத்தனமாக பேசினாலும், அதை அனைவரும் இரசிப்பதாகக் காட்டுகிறார். இதெல்லாம் ஈவ்டீசிங் அல்ல அழுக்கு மனங்களின் வெளிப்பாடு. இப்படியான கேப்மாரித்தனங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர். சிறப்பு!

பள்ளிக்காலம்
பள்ளிக்காலத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர். ராமச்சந்திரன் சைக்கிளில் உள்ள பச்சை கலர் handbrake sleeve , பள்ளியில் காட்டப்படும் duster , ராமச்சந்திரனின் புத்தககப்பை என்று அந்தக் கால நினைவுகளைக் கொண்டு வருகிறார் இயக்குநர். சிறப்பு.

தோழியாக வரும் பெண் அணிந்துள்ள  Dental braces தவறாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் braces ஒரே ஒரு கம்பியில்தான் இருக்கும். இந்தப் பெண் ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி அழுத்தம் கொடுக்கும் இந்தக்கால braces அணிந்துள்ளார். 96 ல் தஞ்சாவூர்/கும்பகோணம் பக்கம் அது கிடைத்ததா என்பதை அந்த ஊர்க்காரர்கள் விளக்கலாம்.

நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை

மருத்துவர் சாலினியின் மருத்துவமனையில் கீரோ நுழைவது போல முடித்திருந்தால் "நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை" திரைக்கதைக்கு வலுக்கூடியிருக்கும்.

அது போல இப்படியான எதிர்மறை ஃகீரோ கேரக்டரை இரசிகர்கள் ஏன் மாய்ந்து மாய்ந்து இரசிக்கிறார்கள் என்று  மனநல மருத்துவர் சாலினி பேசிக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும்.

****

தன்னை மணக்காமல் சானு ஏன் நிம்மதியாக இருக்கிறார்? என்பதை, ராமச்சந்திரன் தன் நடிப்பால் justify செய்து இருக்கிறார்.

வெல்டன் இயக்குநர் & ஃகீரோ!

Monday, October 15, 2018

நீர்'வீழ்ச்சி'களின் பார்வையாளன்: It is another milestone

"ருக்கிறார்" என்பதே எனது பதிலாய் உள்ளது. "அப்பா எப்படி இருக்கிறார்?" என்ற அன்பான கேள்விகளுக்கு. அதுதாண்டி சொல்ல ஒன்றும் இல்லை.கைப்பிடி மண் சொந்தமாக இல்லாவிட்டாலும், பிறந்து விடுவதாலேயே ஒரு ஊர் நமக்கான சொந்த ஊராகிவிடுகிறது.சொந்த வீடு இல்லாதவர்கள்கூட‌ இருக்கலாம். ஆனால், சொந்த ஊர் இல்லாதவர்கள் இல்லை. எனது சொந்த ஊர், என் பெற்றவர்கள் இல்லாத ஊராய் ஆகிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நெருக்கிவரும் உண்மை.

கசங்கிய துணிபோல ஆகிவிட்டார் அப்பா.ஆனால், அவரின் கோவமும் பிடிவாதமும் இன்னும் கஞ்சி போட்ட கதராய் உள்ளது. 83 வயதில் நிலைதடுமாறி விழுந்துவிடுதல் என்பது சிக்கலானது. படுத்த படுக்கையாகிவிட்டார்.
**

" Leave No Trace " என்ற‌ கருத்தாக்கம், மலைப்பயணங்கள் மற்றும் இயற்கையில் மனிதன் ஊடுருவும்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளைக் குறிக்கும். https://lnt.org/learn/7-principles

காடுகளில் பயணம் செய்யும்போது, நீங்கள் அந்தக் காட்டின் பார்வையாளர் மட்டுமே. எதையும் மாற்றி அமைக்க உரிமை இல்லை. உங்கள் கண் முன்னால் புலியொன்று மானை அடித்து வீழ்த்தலாம். மான்கூட்டம் ஒன்று அழகிய புல்வெளியை மேய்ச்சல் நிலமாக்கலாம். நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் வருந்தி, இடையூறு செய்திடமுடியாது. அங்கு நீங்கள் ஒரு பார்வையளர் மட்டுமே. மானை அடித்து தின்னும் புலிக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். அதன் குழந்தைகள் அதன் பாலுக்காக காத்து இருக்கலாம். தாய்ப்புலி பசியாறினால்தான் தன் குழந்தைகள் பசியாறும் நிலை இருக்கலாம். பார்வையாளனான நமக்கு, காட்டின் விதிகள் தெரியாது. அப்படியே பார்வையாளனாக பயணத்தை தொடர்வதே நல்லது.
**

ஒருநாள் முழுக்க அப்பாவின் அருகில் இருந்தேன் அதே அறையில். படுத்த படுக்கையாகிவிட்ட அவர் படுக்கையிலேயே சிறுநீர் போவதைக்கூட உணராமல் இருந்தார். அந்த அறையே துர்நாற்றம் அடித்தது. மறுநாள் காலையில் மதுரை சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் "Prevention of Bed/Pressure Sores Air mattress",  புதிய Full Foam மெத்தை, Adult Diaper இன்னும் சில மருந்துச் சாமான்கள் என்று வாங்கி வந்தேன். அறையை முழுக்கச் சுத்தம் செய்து, வெந்நீர் மற்றும் டெட்டால் கலவையில் கழுவிவிட்டேன். அப்பாவிற்கு "டவல் பாத்" கொடுத்து, பின்புறம் சுத்தம் செய்யும்போதுதான், அவருக்கு பின்பிறத்தில் பெரிய புண் வந்துள்ளதை கண்டேன். அண்ணனை அழைத்து அதைக் காட்டினேன். மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து படுத்தே உள்ளார். தினமும் போர்வையை மட்டும் அலசி காயவைக்கிறார்கள். அவரின் உடம்பைக் கண்காணிக்கவில்லை.

பின்புறம் துடைத்து,மருந்து போட்டு, adult diaper ஐ மாட்டிவிட்டேன். மாலையிலும் ஒருமுறை செய்தேன். மதுரை "வடமலையான் மருத்துவமனை"க்குச் சென்று , அப்பாவை வீட்டில் வந்து பார்த்துக்கொள்ள செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்தேன். இவை எல்லாம் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது.

நான் செய்யும் எந்த செயல்களும் அப்பாவிற்கோ அண்ணனுக்கோ பிடிக்கவில்லை. அண்ணன் எதற்கு எடுத்தாலும், "எங்களுக்குத் தெரியாதா?", "நாங்க இத்தனை நாள் பார்க்கவில்லையா?" என்றே பேசிக்கொண்டு இருந்தான். அப்பாவோ, எதற்கும் ஒத்துழைக்க மறுத்தவண்ணமே இருந்தார். Adult Diaper போடுவது அவருக்கு பிடிக்கவில்லை. நான் அப்பாவிற்கு ஊட்டிவிடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. நடுங்கும் கைகள் என்றாலும் "அவராகவே சாப்பிடவேண்டும் அதுதான் அவருக்கு எக்சர்சைசு" என்று என்னை சத்தம் போட்டான் அண்ணன்.

அப்பா அவரின் நடுங்கும் கைகளால் சாப்பிடும்போது உடல்முழுவதும் சாப்பாட்டை சிந்திவிடுகிறார். அதை யாரும் கவனிப்பது இல்லை. அதனுடனேயே தூங்கி எழுந்து உடல்முழுக்க அழுக்காகிவிடுகிறது.
**

"அவன் கிடக்கிறான் நீங்க எப்பயும் போலவே இருங்க"

"இவன் என்ன, இன்னிக்கு இருப்பான் நாளைக்கு பார்க்கப்போவது நாங்கதானே?" என்ற சத்தம் கேட்டு காலையில் கண்விழித்தேன். இரவு நேரங்கழித்து படுத்தமையால் அதிகநேரம் தூங்கிவிட்டேன்.

ஆம், எனது கவனிப்பு முறைகளால் கோவம் கொண்ட அப்பா, இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார். "நான் இப்படியே இருந்து செத்துவிடுகிறேன்" என்று அவர் ஒருபக்கம் மிரட்ட, "டயப்பர் எல்லாம் வேண்டாம். நீங்க எப்பவும்போலவே இருங்க" என்று அண்ணன் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாய் இருப்பதுபோல என்னை எதிர்க்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் என்னை அந்த அறையில் வேண்டாத விருந்தாளியாக மட்டுமல்ல, ஒரு எதிரியாய் உணரச்செய்து கொண்டிருந்தார்கள்.

காந்தியின் வன்முறை போல அப்பாவின் உண்ணாவிரதம், "இவன் என்ன செய்வது எங்களுக்குத் தெரியாததா?" என்ற அண்ணனின் கோவம் என்று ஆரம்பித்த சண்டைகளில் மனம் வெறுத்துப் போயிற்று எனக்கு.

நான் செய்த‌ வேலைகளை தொடர்ந்து செய்ய நாளை முதல் மதுரை வடமலையான் மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் வருகிறார். நிச்சயம் அவர் இவர்களை மீறி இந்தச் சூழ்நிலையில் வேலை செய்ய முடியாது. அதுவும் நான் ஏற்பாடு செய்த செயல் என்பதால் நிச்சயம் அண்ணனுக்குப் பிடிக்காது. மருத்துவமனையை அழைத்து அவர்களின் சேவையை இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அண்ணனிடம் உனக்குச் சரியென்றுபடும்போது அழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டேன்.
**

எனது ஊரில் எனது வீட்டில் நான் பார்வையாள‌னாகிப் போனேன்.ஓவென்று கீழிற‌ங்கி, தலைகுப்புற வீழ்ந்து, முட்டிமோதி கதறியழும் நிலைகவிழ்ந்த ஆற்றை, நீர்வீழ்ச்சியென்று ஓரமாக இருந்து பார்க்கவேண்டிய நிலை. ஆறு கவிழ்கிறதே என்று பள்ளத்தை சரிசெய்துவிடமுடியாது. அதுதான் காட்டின் விதிகள்.

வீட்டில் பணத்திற்கு குறைவில்லை. என்னைவிட பணக்காரர் என் அப்பா. ஆம், வீடு சேமிப்பு அரசு ஓய்வூதிய‌ம் என்று அவர் நல்ல நிலையிலேயே உள்ளார். அதுதாண்டி அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்யும் விரும்பிய நிலையில் நான். அண்ணனும் வசதியாகவே உள்ளான். இருக்கும் வீடுகள் பத்தாது என்று பல‌ இலட்சங்களைக் கொட்டி பலமாடி வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளான். பணம் என்பது குறை அல்ல இங்கே. ஆனால், அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாய் உள்ளது. நான் சொல்வதோ அல்லது செய்வதோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

போர்வை நனைந்தால் துவைத்துக் கொள்ளலாம். டயப்பர் தேவை இல்லை என்று, தினமும் நனைந்த போர்வையை துவைக்க ஆள் வைக்கிறார்களே தவிர, எப்போதும் நனைந்த படுக்கையும், அதனால் வரும் புண் மற்றும் இதர சிரமங்களையும் புரிய மறுக்கிறார்கள்.
**

கலைஞரைப் பார்த்துக்கொண்ட குடும்பத்தினரைவிட, ஒரு நல்ல நோயாளியாய் மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில், மழை பெய்தாலும் குடைபிடித்து நடந்த கலைஞர் என் கண் முன்னே வந்துபோனார்.

வழக்கம்போலவே தரையில் எறியப்பட்ட மீனாய் உணர்ந்தேன். ஒன்றும் செய்ய இயலவில்லை. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்க அந்த அறையைவிட்டு வெளியில்வந்து மாடிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களாக நான் இருந்தும் இல்லாமலேயே இருந்தேன். அப்பாவிற்கும் உதவமுடியவில்லை. அவரே அதை வெறுக்கிறார். அண்ணனைமீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் சரியெனப்படுவதையே அவர்கள் செய்கிறார்கள். அப்பா, அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தாண்டி வேறு எதுவும் செய்ய விடுவது இல்லை. அண்ணனோ என்னை ஒரு பார்வையாளன் என்ற இடத்திலேயே நிறுத்த விரும்புகிறான்.
**

அன்றைய‌ உடன்கட்டை, தேவதாசி ஆதரவு முதல் இன்றைய அய்யப்பன் ஆதரவு வரை, தான் மதிப்பிழக்கிறோம் என்பது தெரியாமலே ஆதரிக்கிறார்கள் பெண்கள். ஆனால், வேறு சிலருக்கு அது தவறாய்த் தெரிகிறது. நீதிமன்றம் அரசாங்கம் போன்ற அதிகார மையங்களால் மட்டுமே இதனை உடைக்கமுடியும்.

அதிகாரமற்ற பார்வைகள் அதிகாரமில்லாத காரணத்தினாலேயே அவமானப்படுத்தப்படும் ,நிராகரிக்கப்படும். அதுவே எனக்கு நடந்தது. 17 வருடங்களாக தொலைவில் வாழ்வது உறவுகளிடம் தொலைந்த வாழ்க்கையே. Long distance relationship என்பது, காதலில் மட்டுமல்ல எந்த உறவுகளிலும் சரியாக வராது. உறவாடாமல் உறவு இல்லை.
**

அப்பாவின் நண்பர்களிடம் பேசினேன். அனைவரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், இறுதியில் "அப்பா அப்படித்தான். நீதான் செய்யணும்" என்றார்கள். எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை. அது அவர்களுக்கும் தெரியவில்லை.

ஓவென்று கதறிவிழும் அருவியை, நீர்வீழ்ச்சியென நின்று பார்ப்பதே காட்டில் ஒரு பயணியாய் செய்ய முடிந்தது. பாதைகளை மாற்றிவிட முடியாது. நமக்குச் சரியெனப்படுவது மற்றவர்களுக்கும் சரி என்று இருக்காது என்று எனக்குத் தெரிந்த போதும், இது போன்ற மருத்துவச் சூழ்நிலைகளில், நோயாளியின் விருப்பத்திற்கு விட்டுவிடுவது சரியா? என்பது தெரியவில்லை. அதுவும், என் அப்பா போன்ற பிடிவாதக்காரர்கள், என் அண்ணன் போன்றவர்களிடம், அவர்களின் வழிக்கே விட்டுவிடுவது என்பது பலமுறை என்னை " Point of No Return" போய் நிறுத்துயுள்ளது. இந்த முறையும் அதுவே நடந்துவிட்டது.
**

மூன்று வாரங்கள் அப்பாவுடன் அவருக்கு உதவியாய் இருக்க நினைத்துச் சென்றது வேலைக்காகவில்லை. இரண்டு வாரங்களில் கிளம்பிவிட்டேன். மகனாய் ஏதும் செய்ய முடியாது. பார்வையாளனாய் பரிதவிக்கிறேன்.

நல்ல மாணவன், நல்ல கண‌வன், நல்ல குடிமகன்..இப்படியான "நல்ல" நல்லவைகளில் "நல்ல நோயாளி" என்பதும் முக்கியமானது. சின்ன வயதில் அப்பாவை அதிசியத்து அவரிடம் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டேன். "டே நீ அவன் கால்தடத்த மிதிச்சாலும் அவன் புத்தி வராதுடா" என்று ஒரு கிழவி யாரோ ஒருவரைத்திட்டியதைக் கேட்ட நான், என் அப்பாவின் கால்தடங்களை மிதித்தே பின் தொடர்வேன் சின்னவயதில். நானும் அப்பா மாதிரி வரவேண்டும் என்ற ஆசையால்.

இன்றும் அப்பாவிடம் இருந்து பாடங்களைக் கற்கிறேன். எப்படி இருக்கக்கூடாது என்று.
**

ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். நாம் நமது முதுமைக்காலத்திற்கு திட்டமிட வேண்டும். அனைவரும் ஒருகாலத்தில் படுத்த படுக்கையாகவோ  அல்லது படுத்தவுடன் எழுந்திருக்காமல் சென்றுவிடும் சூழலோ வரலாம். அப்படியான நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் இப்போதே சொல்லிவிடவேண்டும். முதுமைக் காலத்தில் குழந்தைகளுடன் இருப்பது சிறந்ததுதான். ஆனால், அதற்கான நடைமுறை வாய்ப்புகள் வருங்காலத்தில் இருக்குமா? இல்லாவிட்டால் எங்கே? எப்படி? முதுமையைக் கழிக்கப்போகிறோம் என்பதற்கான திட்டங்கள் அவசியம்.

உதாரணத்திற்கு Coma (state of unconsciousness) போன்ற நிலைக்குச் சென்றுவிட்டால், நம்மை நம் உறவினர்கள் குழந்தைகள் என்ன செய்யவேண்டும். எவ்வளவு காலம் பராமரிக்கலாம்? சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் மருத்துவத்தை நிறுத்தலாமா? என்பது போன்றவைகளை இப்போதே பேசலாம். அமெரிக்கா போன்ற இடங்களில், பெற்றோர்கள் இருவரும் விபத்தில் இறந்தால் குழந்தைகளுக்கான பராமரிப்பை யார் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்காவிட்டால், அரசு அவர்கள் விதிப்படி பாதுகாவலரை நியமிக்கும். இதுபோன்ற சிக்கல்களை திட்டமிடல்கள்மூலம் தவிர்க்கலாம்.

உறவுகள் தாண்டி நம்மைக் கொண்டாட சிலரும், நாம் இருப்பதற்கான வலுவான காரணங்களையும் (மூத்திரச் சட்டி பெரியார்) ஏற்படுத்திக்கொண்டால் முதுமைகூட இனிக்கும்.
**

இறப்பும் ஒரு milestone. இறுதியான  milestone. அதற்காகவும் திட்டமிடுதல் வேண்டும்.

Friday, August 03, 2018

திசை தொலைத்த பயணி: மெதுவாய்க் கொன்ற பசி

ளர்ந்த மனிதர்கள் நாலு பேர். அது ஒன்றும் ஆளரவமற்ற அத்துவானக்காடு அல்ல. மலை முகட்டில் இருக்கும் சிற்றூரின் (Lansing, NC) நடுவில் இருக்கிறோம். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீடு தெரியாது. அருகில் ஒரு கார் பழுதுபார்க்கும் கடை உள்ளது. அதற்கு அருகில் பெட்ரோல் கடை. இருந்தாலும் தொலைந்ததாக உணர்கிறோம். நடுஇரவு, ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாது. தெருவிளக்குகள் என்ன, மருந்திற்குக்கூட ஒளி கிடையாது. நாங்கள் விடும் மூச்சுக்காற்றே அந்த நடுநிசி அமைதியைக் குலைக்கும் ஒலி.

தேடிவந்த வீட்டைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், ஆட்கள் அனைவரும் எங்கோ இருக்கும் வீடுகளில் உறங்குகிறார்கள். வந்த ஒரு வாகனமும் எங்களைப் பார்த்து மிரண்டு நிறுத்தாமல் போய்விட்டார்கள். மழை கொட்டுகிறது. கைப்பேசி வழியாக காட்டும் பாதை இரண்டுமுறை இருவிதமான வழியைக் காட்டுகிறது. யாரையும் கைப்பேசியில் அழைக்க முடியாது. அங்கு ஃச்பெக்ட்ரம் இழைகளும் துளிர்த்திருக்கவில்லை.

இதுதான் வீடு என்று நினைத்து, பேய்பங்களா போன்ற ஒரு வீட்டை இரவில் தட்டி, உள்ளிருந்து எட்டிப்பார்த்த‌, உள்ளாடை மட்டுமே அணிந்த முதியவரை திகைக்க வைத்தோம். அதுவே முரட்டு மனிதராய் இருந்திருந்தால் எங்களை சுட்டிருக்கவும் வாய்ப்புண்டு. நடுநிசியில் அடுத்தவர் வீட்டுக்கதவை நாலுபேர் தட்டினால் என்ன செய்வார்கள் அவர்களும்?
**
மலையைவிட்டு கீழே இறங்கி, கைப்பேசி வேலை செய்த இடத்தில் இருந்து, வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு, மறுபடியும் மலையேறி, மறுபடியும் தொலைந்து திரும்பினோம்.
**

தமிழில் மலையேற்றம் என்ற ஒற்றைச் சொல்லில் இந்த Hiking, Trekking and Mountaineering மூன்றையும் அடக்கிவிடமுடியாது. மூன்றுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், முக்கியமான வேற்றுமைகளும் உள்ளது.  திசைகள் குறித்தும், செல்லப்போகும் மலைகளின் அமைப்புகள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கைப்பேசியோ அல்லது எந்த எலக்ட்ரானிக் உபகரணங்களும் உதவாது. பேட்டரி தீர்ந்துபோனால் உயிரற்ற உடல்தான அவைகள்.
**

When You Find My Body, Please Call My Husband

66 வயதான Geraldine Largay திசைகாட்டும் கருவியும் அடிப்படையான மலைகளின் அமைப்பும் தெரிந்து வைத்து இருந்திருந்தால் அன்று அப்படி உணவில்லாமல் இறந்து போயிருக்கமாட்டார்.

தன் தோழியுடன் பலநாட்கள் பயணத்திட்டமாக அப்பலாச்சியன் மலைகளில் சென்ற Gerry (Geraldine Largay, known to her friends as Gerry)
பாதையைவிட்டு விலகி, இயற்கைக்கடனைக் கழிக்க சிறிது தூரம் சென்றவர், தான் பயணம் செய்த பாதைக்கு திரும்பத் தெரியாமல் தொலைந்துபோனார். உடன் வந்த தோழி, (இந்தத் தோழியின் நண்பர் எனக்கு திசைகள் குறித்து பாடம் எடுத்தவர்
)  ஒருநாளுக்கு முன்பே தனது பயணத்தை முடித்துக்கொண்டு மலையிறங்கிவிட்டிருந்தார். தனியாகப் பயணப்பட்ட Gerry , தொலைந்துபோனார். இத்தனைக்கும், இவர் தொலைந்த இடத்திற்கு சிலமைல்கள் தொலைவில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பது அவருக்கு தெரிந்திருந்ததா என்பது தெரியாது. அப்படியே தெரிந்து இருந்தாலும், திசைகள் அறியாமல் , ஆழமான காட்டின் அடிப்பகுதியில் இருந்து அதை நோக்கி எப்படி பயணிப்பது?.

பாதையை தொலைத்த தினத்தில் இருந்து, 26 நாட்கள் உயிரோடு உலவிருக்கிறார் அந்த காட்டில். பாதைதேடியும், உதவி தேடியும் திசை தேடியும் அலைந்திருக்கின்றார். இவரின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த கணவருக்கு, இவர் அனுப்பிய தொலைபேசி குறுஞ்செய்திகள் போய்ச்சேரவில்லை. தனது முடிவை உணர்ந்த அவர், தனது போராட்டத்தை கடிதமாக எழுதிவைத்துவிட்டு இயற்கையுடன் போரிடமுடியாமல் தோற்றுவிட்டார்.
**

22 சூலை 2013 அன்று தொலைந்த இவர், இரண்டு ஆண்டுகள் தொலைந்தவராகவே இருந்தார். அக்டோபர் 2015 மலைப்பகுதியில் சிதிலமடைந்த டென்ட், மற்றும் மண்டை ஓடுகளைப் பார்த்த ஒருவரால், இவரின் இறப்பு வெளி உலகிற்கு தெரிய வந்தது. இத்தனைக்கும் சில மைல்கள் தொலைவில்தான் இவர் தொலைத்த‌ பாதை உள்ளது.  எட்டிவிடும் தூரத்தில் உள்ள பாதையின் திசை அறியாமல் எங்குள்ளோம் என்ற குறிப்புணர முடியாமல், தன் டென்ட்டிலேயே இறந்துபோனார்


Hiker who went missing on Appalachian trail survived 26 days before dying
https://www.theguardian.com/us-news/2016/may/26/hiker-who-went-missing-on-appalachian-trail-survived-26-days-before-dying

Map & Compass Navigation

நமது உரையாடல்களை திசையற்ற உரையாடல்கள் எனலாம். ஏன் என்றால், நாம் அன்றாட உரையாடல்களில் திசையைப் பயன்படுத்துவது இல்லை.  " அந்தக் காஃபிக் கோப்பையை வடகிழக்குப்பக்கம் நகர்த்தி வை" என்றோ, "எங்கு போகிறீர்கள்?" என்ற கேள்விக்கு "வட மேற்கே ஆறு மைல் செல்கிறேன்" என்றோ பதில் சொல்வதில்லை. ஆனால், அன்றாட உரையாடலில் திசையைப் பயன்படுத்தும் மக்களும் உள்ளார்கள். ஆசுதிரேலியாவில், அப்ரிசனல் இன, குக் டயர் மக்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். அவர்கள் காடுகளில் தொலைந்து போகும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கலாம் அல்லவா?

How language shapes the way we think - Lera Boroditsky
https://www.ted.com/talks/lera_boroditsky_how_language_shapes_the_way_we_think

//Aboriginal community in Australia that I had the chance to work with. These are the Kuuk Thaayorre people. They live in Pormpuraaw at the very west edge of Cape York. What's cool about Kuuk Thaayorre is, in Kuuk Thaayorre, they don't use words like "left" and "right," and instead, everything is in cardinal directions: north, south, east and west. And when I say everything, I really mean everything. You would say something like, "Oh, there's an ant on your southwest leg." Or, "Move your cup to the north-northeast a little bit." In fact, the way that you say "hello" in Kuuk Thaayorre is you say, "Which way are you going?" And the answer should be, "North-northeast in the far distance. How about you?"//

**
மலைகளுக்கு சாதகம் உள்ளது. Ridge, Spur, Saddle என்று சில நுட்பங்களும், கையில் இருக்கும் வரைபடத்தை வைத்து எங்கே இருக்கின்றோம்? அருகில்  எது உள்ளது? அதை எப்படி அடைவது? என்பதற்கான Backstop , Contour , Contour Interval, Declination, Bearing இன்னபிற‌  தகவல்களும் பயிற்சிகளும் முக்கியம்.  திசை காட்டும் திசைமானியும், அச்சிடப்பட்ட ஒரு மேப்பும் (காடுகளுக்கென்றே Contour & Contour Interval  தகவல்களுடன் தனியான வரைபடம் உள்ளது.

திசைகள் சிக்கலாகுமிடம் வடதுருவம். இங்கு திசைமானி வேலை செய்யாது அல்லது கிறுக்குபிடித்த குரங்காகிவிடும். அது போல எந்த அடையாளங்களும் வைத்துக்கொள்ள முடியாத (reference points) கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் மணலாய் காட்சியளிக்கும் பாலைவனம், அல்லது பனிப்பிரதேசம் சிக்கலைக் கொடுக்கும்.
**

வைத்திருக்கும் திசைமானி மற்றும் அவசர உபகரணங்கள் வாழ்க்கை முழுக்க பயன்படுத்தப்படாமலேயே போய்விடலாம். ஆனால், திசை தவறிய நேரங்களில் இது காக்கவல்லது. எனது வாகனத்தில் இந்த மாநில வரைபடம் அச்சுவடிவம் இருக்கும். அதுபோல மலைப்பயணத்திற்கு "வாக்கி டாக்கி"யும் எடுத்துச் செல்வேன். இரண்டு வாகனங்களில் பயணிக்கும்போது அல்லது கேம்ப் இடத்தில் இருந்து ஒருவர் எங்காவது செல்கிறார் என்றால் (குழந்தைகள் மிதிவண்டி ஓட்டும்போதும்) அவர்களிடம் ஒரு வாக்கி டாக்கி கொடுத்துவிடுவேன். கைப்பேசிகள் வேலை செய்யாது. கண் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டால் இரு மனிதர்களுக்கான தொடர்பு துண்டிக்கப்படும்.

சிக்கலான தருணங்கள் செய்தி சொல்லிவராது. ஆனால், அது எப்போதும் வரலாம் என்று எதிர்பார்த்தே இருப்பது, இப்படியான தருணங்களில் சிறிது சுவாசிக்க, சிந்திக்க இடம் கொடுக்கும்.

தொலைந்தால் என்ன செய்வது? என்பதுதான் மலைப்பயணங்களில் முதலில் சிந்திக்கவேண்டியது. கவிழ்ந்தால் என்ன செய்வது? என்பது கடற்பயணங்களில் முதலில் சிந்திக்க வேண்டியது.
**

அப்பலாச்சியன் மலைத்தொடர் என்பது 14 அமெரிக்க மாநிலங்கள் (Georgia, North Carolina, Tennessee, Virginia, West Virginia, Maryland, Pennsylvania, New Jersey, New York, Connecticut, Massachusetts, Vermont, New Hampshire, and Maine) வழியாகச் செல்லும் 2,200 மைல்கள் (3,500 கிமீ) மலைப்பாதை. பாதை என்பது சாலை அல்ல வெறும் பாதை. தொலைந்தவர்கள், மீண்டவர்கள் இறந்தவர்கள் என்று பல சம்பவங்கள் உண்டு.

Appalachian Trail
https://en.wikipedia.org/wiki/Appalachian_Trail
**

Thru-hiking  என்று சொல்வார்கள். End to End பயணம் செய்ய ஐந்து முதல் ஏழு மாதங்கள் ஆகலாம். அப்படிச் செய்யும் போது "Thru-Hiker Resupply Point" என்ற இடங்களில் உணவு மற்றும் தேவையானவற்றை நிரப்பிக்கொள்வார்கள். குடும்பத்தினர் இந்த இடங்களில் இவர்களைச் சந்திக்கலாம். "இந்த நாளில், இந்த இடத்தில் இருப்பேன்" என்பது திட்டமிடப்பட்ட ஒன்று. அந்த நாள் தவறும்போது, கவலைகள் வந்து கரைசேறும் குடும்பத்தினருக்கு. Resupply Points  விட்டால் எந்தவித தொடர்பும் இருக்காது. பலர் சேர்ந்து பயணப்படுவார்கள். தனியாகச் செல்பவர்களும் உண்டு.
**

இப்படியான பயணங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடை முக்கியம். உதாரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று 5 லிட்டர் பாட்டில்களை கொண்டுசெல்ல முடியாது. தெளிந்த ஓடைகள் பல இருந்தாலும், நீரை அருந்திவிட முடியாது தாகத்திற்கு. அதற்காக சின்னச் சின்ன வடிகட்டிகள் உள்ளது. எவ்வளவு எடையை முதுகில் தூக்கிச் சென்றால், பாதுகாப்பாக நடந்து வரமுடியும் என்ற கணக்குகள் உண்டு.
https://www.rei.com/blog/camp/how-much-should-your-pack-weigh
**

இந்த ஆண்டு அப்பலாச்சியன் மலைத்தொடரின் ஒரு சிறு பகுதியையாவது கடந்து பார்க்கவேண்டும் (மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் பயணமாக) என்ற ஆசை உள்ளது. மரவேலை செய்பவனான‌ எனது சாவிக்கொத்தில், அளக்கும் டேப் இருக்கும். எனது பயணப்பெட்டியில் ஒரு திசைமானி இருக்கும். வானத்து நட்சத்திரங்களைப் பார்க்க தொலைநோக்கியை வைக்கும்போது உதவுவதற்காக. அதை வேறு செயல்களுக்கு பயன்படுத்தியது இல்லை.

உடன் வருபருக்கு எல்லாம் தெரியும் என்று நாம் இருந்துவிடவும் முடியாது. ஏதோ ஒரு காரணங்களினால் அவர் இல்லாமல் போய் , நாம் காட்டில் தனித்துவிடப்பட வாய்ப்புண்டு.  Jungle (2017) என்ற படத்தின் கதை இது போன்றது.
https://en.wikipedia.org/wiki/Jungle_(2017_film)

இதற்காக Map & Compass Navigation வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன். இங்குள்ள Recreational Equipment, Inc. (REI) என்ற கடையில் இதற்கான பயிற்சி உண்டு. $30 டாலர் அடிப்படைப் பயிற்சி முதல் ஒருநாள் முழுக்க உள்ள  $60 Field Workshops வகுப்புகளும் உண்டு.

தொலைந்து போவது குறித்தான பயம், காடுகளில் தனியாக இறந்துவிடுதல் குறித்தான கவலைகள் என்னை இந்த வகுப்புகளுக்கு துரத்தியுள்ளது.

பாதை மாறி காட்டில் தொலைந்துபோய் , உணவின்றி இறந்து போவது ஒருவகை என்றால், கூட்டமாக செய்யும் பயணங்கள்கூட‌, பாதைமாறி இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகி, ஒருவருக்கு ஒருவர் உணவான கதைகள் உண்டு அமெரிக்காவில். அப்படி முடிந்த ஒரு பெரிய பயணம் ....

தொடரும்...

**

Tuesday, July 24, 2018

பறவைகளின் இறுதிக்காலம்: வானத்தில் இருந்து குதித்தவனா நீ?

றவைகளின் வாழ்வு குறித்து அதிக கேள்விகள் உண்டு எனக்கு. முக்கியமாக அதன் இறுதிக்காலம் குறித்து. கூட்டம் கூட்டமாய் அலையும் பறவைகளில், சில உயிர்கள் உதிர்ந்தபின், அந்தக் கூட்டம் என்னவாகும்? எங்கு இறக்கை இறக்கிறது? என்பது குறித்து அதிக கேள்விகள் உண்டு.

சின்ன வயதில் இருந்து, இன்றுவரை என்னைத் தொடரும் ஒரு கனவு, பறப்பது. ஆம். கனவில் அடிக்கடி பறந்துவிடுவேன். வெறும் கையை இறக்கை போல விரித்துக்கொண்டு
ஒரு கிளைடர் பொருத்தப்பட்டதுபோல் வேகமாகப் பறப்பேன். அப்படிப் பறக்கும் போது, மின் கம்பங்களில் மாட்டிக்கொள்ளாமல் பறப்பது ஒரு பெரிய சவால் எனக்கு. கனவு களைந்து எழுந்தாலும், விட்ட இடத்தில் இருந்து, ஒரு வாரஇதழின் தொடர்கதை போல
போல தொடர்ந்துவிடுவேன் பறக்கும் கனவை மட்டும்.
**

விட்டுப்போன கனவுகளும் உண்டு. சின்னவயதில் சாம்பல் நிறப்பூனை ஒன்று என்னை அடிக்கடி விரட்டும் கனவில். சொல்லி வைத்ததுபோல ஒவ்வொரு முறையும் பூட்டிய அறையில் நான் மட்டும் தனியாக பூனையுடன் மாட்டிகொள்வேன். பூட்டிய அறையின் மூலையில் இருந்து என்னைக் குறிவைத்து பாயும். சாம்பல் நிறப்பூனை. கனவில், பயத்தில் நான் அலறும் பெரிய அலறல் சத்தம், வெற்று முனகலாக மெய்யுறக்கத்தில் முனகப்பட்டு கீச்சுக்குரலாய் வரும். அப்போதெல்லாம் அம்மா என்னை எழுப்பிவிட்டு , தண்ணீர் குடிக்கவைத்து
 மீண்டும் படுக்கச் செய்வார்கள். இப்போது பூனைக்கனவு வருவது இல்லை. ஆனால் வந்துவிடுமே என்ற பயம் இன்றும் உள்ளது.

அதுபோல நின்றுபோன ஒரு கனவு. தூக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்னுக்குப்போவது போன்ற கனவு. பூனைக் கனவில் சத்தம் வெளியில் கேட்காது. ஆனால், ஒன்னுக்குப் போகும் கனவில், மிகவும் சுகமாக மெய்யாகவே ஒன்னுக்குப்போய்விடும். அதுவும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே ரோட்டின் ஓரத்தில் சுகமாக ஒன்னுக்குப்போவது போல ஒரு கனவு. நின்றுபோன கனவுகளுக்கு நன்றி.
**

ஆனால், விடாது தொடரும் பறக்கும் கனவை என்ன செய்வது? மிகவும் பிடித்த‌ கனவாயிற்றே. அதுவும் மலைகளின் முகட்டில் இருந்து பறக்க ஆரம்பித்து, ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களுக்கு இடையில் சமார்த்தியமாக இறங்குவது என்பது சாதனை. சின்ன வயதில் எனக்கு பறக்கும் சக்தி உள்ளது என்று நம்பினேன். தனியாக இருக்கும்போது கையை விரித்து ஓடிப்பார்த்து ஏமாந்தும் இருக்கிறேன். இத்தனைக்கும் எனக்கு எனது மகளுடன் ரோலர்கோஃச்டரில் போவது இன்றுவரை பயமான ஒன்று.

ஆனால் அப்படியே பறவை போல பறப்பது பிடிக்கும். பறத்தலில் முரண். ஒருவேளை ரோலர்கோஃச்டரில் இறுகக்கட்டி இருப்பது ஒரு சிறைத்தன்மை என்ற உள்ளுணர்வாய் இருக்கலாம்.
**

நான் ஓவியன் அல்லன். ஆனால் மிகப்பெரிய ஓவியனாக வந்திருக்க வேண்டியவன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். மதுரை பிரிட்டோ பள்ளியில் படித்த போது, ஓவியப் பாடம் எடுத்த ஒரு ஆசிரியரால் எனக்கு ஓவியக் காதல் வந்தது. அந்தக் காதல் பிற்காலத்தில் அப்பா அம்மா பார்த்து வைத்த எஞ்சினியர் டாக்டர் என்ற வரன்களில் எஞ்சினியருக்கு வாக்கப்பட்டுவிட்டதால் அந்த‌ ஓவியக்காதல் கருகிவிட்டது. ஆம் எட்டாம் வகுப்பில் கிராமப்புற‌ மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைக்காக படிக்கத் தொடங்கிய வாழ்க்கை, வெறும் தேர்வை நோக்கிய படிப்பாகிவிட்டது. இப்படி பல காதல்கள் கருகிவிட்டது பிழைப்பிற்காக.
**

A comfort zone is a beautiful place but nothing ever grows there என்று சொல்வார்கள். நாடகம், மேடை இசை அமைப்பு, பாய்மரப் படகு, பலூன், மரவேலை என்று எனக்கான எல்லைகளைச் சோதித்துக்கொண்டே உள்ளேன். தொடரும் கனவுகளை ஏன்  மெய்யாக்கக்கூடாது என்று இந்த இரண்டு வாரங்களில், சட்டென திரும்பும் வளைவுகள் போல, சட்டென்று சிலவற்றுக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன்.
**

30 டாலர் கொடுத்தால், பீர் குடித்துக்கொண்டே தூரிகையில் படம் வரையலாம். இரண்டு மணிநேர சோசியல் அமர்வு என்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். இதுவே சரியான வாய்ப்பு என்று எனது பெயரைப் பதிந்துவிட்டேன்.

வந்திருந்தவர்ககளில் 75 சதவீதம் Millennials தான்.  இந்தக்காலத்து இளைஞர்களாக பிறந்திருக்கலாம் என்ற பொறாமை வந்தது மறுக்க முடியாதது. நானும் எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இளைஞர்களோடு கிழவனாக அமர்ந்துகொண்டேன். பயிற்சியாளர் சொல்லச்சொல்ல, நாம் வரைய வேண்டும். இரண்டு மணிநேரத்தில் ஒரு அழகிய ஓவியக்குழந்தையை பிரசவித்துவிட்டேன். சுற்றி இருந்த இளைஞர் பட்டாளத்துடன் படமும் எடுத்துக்கொண்டேன். 30 டாலர் செலவில் நானும் ஓவியனாகிவிட்டேன்.
**

"வீட்டில் அலங்காரத்திற்காக அடுத்தவன் வரைந்த படங்களை மாட்டுவதில்லை.நம் படங்களுக்கு காட்சியமாக நியூயார்க் கண்காட்சிகள் இடம் கொடுக்காது, நம் வீட்டில் நாம் வரைந்த படங்களே இருக்க வேண்டும்" என்று நான் என் மனைவியிடம் சொல்லி இருந்தேன். அவராக ஏதாவது வாங்கி மாட்டினால் நான் தடுக்கப்போவது இல்லை. ஆனால் நான் வாங்கமாட்டேன். என்று சொன்னது சண்டையாகி, இன்றுவரை எங்கள் வீடு வெறும் சுவராகாவே இருக்கும் எந்த அலங்காரப் படங்களும் இன்றி.

இதோ இன்று முதல் ஓவியம் 30 டாலர் செலவில் நன் வரைந்த ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது வீட்டில். இதைத் தொடர எண்ணம்.


https://www.facebook.com/pg/PinotsPaletteApex/photos/?tab=album&album_id=2123857307860097
**
வானத்தில் இருந்து குதிப்பது என்பது சகலவிதமான சவால்களையும் கொண்டது. முக்கியமான சவால், ஏதாவது ஒன்று நடந்து (வேறு என்ன சாவுதான்), பறவைகளின் இறத்தல் போல நானும் இறந்துவிட்டால், பிள்ளைகள் என்ன செய்வார்கள்? என்ற பயமே. இப்படியான விசயங்களுக்கு குறிப்பிட்டகால ஆயுள் காப்பீடு ஏதும் பணம் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், If Not NOW Then WHEN? என்ற  உந்துதலில், பறக்க ஆயத்தமானேன்.

அலுவலகம் அருகில் உள்ள சின்ன விமான நிலையம் அருகே skydiving கடை ஒன்று இருப்பது ஏற்கனவே தெரிந்து இருந்தாலும், எமனின் வாயிலை தள்ளிப் போடும் நோக்கத்தில் விலகியே இருந்தேன். இதோ இப்போது அதையும் செய்யத்துணிந்துவிட்டேன். சாவு கண்டு பயமில்லை என்றாலும், செத்தபிறகு குடும்பத்தினர் படப்போகும் துயரங்களே குதிக்கும்வரை இருந்தது. நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு இப்படியான செயல்கள் வில்லங்கமே. குடும்பத்தினர் யாரிடமும் சொல்லவில்லை. செத்தால் யாருக்கு தகவல் சொல்வது என்ற இடத்தில் மகனின் கைப்பேசி எண்ணைக் கொடுத்தேன். அவன் இப்போது ஒரு கல்லூரி ஒன்றில் ஒருமாத கோடை வகுப்பிற்காகச் சென்றுள்ளான். அவன் எண்ணைக் கொடுத்துவிட்டு, மீன்பாடி வண்டியை ஒத்த ஒரு அப்பாடக்கர் ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஏறிவிட்டேன்.
**

தனியாகக் குதிக்கப்போவது இல்லை. உடன் குதிக்கும் தேர்ச்சிபெற்ற ஒருவருடன், கங்காருகுட்டிபோல ஒட்டிக்கொண்டு குதிப்பதுதான் என்றாலும், அடிவயிற்றில் பயம் பந்துபோல எழும்பி, நெஞ்சை அடைத்துக்கொண்டது. ஒருவேளை என் சாவுச் செய்தி என் மகனின் தொலைபேசியில் ஒலித்தால்  அவன் என்ன செய்வான் என்ற கலக்கம் இருந்தது.

எல்லாம் அந்த விமானத்தில் இருந்து காலின் கடைசி உறவு முறியும்வரைதான். காற்றில் விழுந்து, மேகத்தில் கலந்து மிதந்தவுடன், எல்லாப் பயமும் போய்விட்டது. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தரை இறங்கும்வரை மகிழ்ச்சியாய் இருப்போம். இறந்தால், முகவரி இழந்த மற்றொரு பறவையாகிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.
**
ஆறாயிரம் மீட்டர் உயரம் வரை கூட்டிச் செல்லப்பட்டு, அங்கிருந்து காற்றில் குதிக்கவேண்டும். முதல் ஆயிரம் மீட்டர் தொலைவு, free fall எனப்படும் அப்படியே வீழ்தல். பாராசூட் அப்போது செயல்படுத்தப்பட்டிருக்காது. மணிக்கு 120 மைல் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டும், மேகத்தை முத்தமிட்டும் விழுதல். மெல்லிய மழை மூட்டம் இருந்ததால் சில்லென்ற மேகங்களின் கன்னம் தொட்டு முத்தமிட்டுச் செல்ல வாய்ப்புகிடைத்தது.
**
எங்கோ குதித்து சரியான இடத்தில் தரை இறங்குவதற்கு, பாராசூட்டில் சின்ன skydiving sailing அமைப்பும் உள்ளது. அதுவும் ஒரு துணிதான். ஆனால் பாய்மரப்படகின் sail போல அதை நேர்த்தியாய் கையாண்டு நம்மை அடுத்த ஆறாயிரம் மீட்டருக்கு பாதுகாப்பாக இறக்குவார்கள்.


**
சின்ன வயதில் வந்து இப்போது நின்றுபோன ஒரு இரகசியகக் கனவும் உள்ளது. ஏதோ ஒரு பெரிய நகரத்தின் வீதியில் நான் மட்டும் ஆடையின்றி கூனிக்குறுகி கவட்டில் கைவைத்து மறைத்து இருப்பது போன்ற ஒரு கனவு. சின்ன வயதில் கிழிந்த டவுசருடன் அலைந்த போது யாராவது கேலி பேசி அல்லது டவுசரை அவிழ்த்து அவமானப்படுத்தியதன் எஞ்சிய பயமாகக் கூட இருந்திருக்கலாம். அப்போது சட்டி போடும் வழக்கம் எல்லாம் இல்லை. செருப்பு சட்டி போன்றவை மேல்தர வர்க்கம் அப்போது. அரைஞான் கயிற்றின் சுறுக்கு முடிச்சு இறங்கி, தொங்கிக் கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து எவனாவது இழுத்துவிட்டு, வகுப்பு பெண்களின் மத்தியில் அவமானப்பட்டு இருக்கலாம். சுமதி இல்லாத கூட்டங்களில் அவமானங்களை ஏற்கத் தயாராகவே இருப்பேன். ஆனால் கேள்விப்பட்டு அடுத்த நாள் அக்கறையாக விசாரிப்பாள்.
**
இங்கு 5k clothing optional ஓட்டம் ஒன்று வருடாவருடம் நடக்கிற‌து. அடுத்து அதற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். Face your fears!

Monday, July 16, 2018

எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்

மெய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்கையில் முதுமைக்கு என்ன செய்வது? முதுமையில் பிச்சையெடுப்பதைத் தவிர்க்க என்ன செய்வது?, என்ற பயத்தின் விளைவாக‌ , சில சேமிப்புகளை காலம் கடந்து ஆரம்பித்தேன்.

முதலீடுகள் பற்றிய அறிவுரைகள் எல்லாம், முதல் வைத்துள்ளவர்களுக்குத்தானே? இருந்தாலும், என் பிணத்தைப் புதைக்கக்கூட பணம் அவசியம் என்பதால், சேமிப்பு முக்கியம். எனது குழந்தைகளுக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் சேமிப்பின் முக்கியத்துவத்தைச் சொல்லுவேன். முதலீடுகளின் முக்கியத்துவம் அதில் இருக்காது. குறைந்தபட்ச சோறுக்கும், கூரைக்கும் உத்திரவாதமாக‌, வயதான காலத்தில் உதவ சேமிப்புகள் தேவை.
**

"பணத்தை வச்சி என்ன செய்ய?" என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இன்றும் பிள்ளைகள் படிப்பு , வீட்டுக்கடன், என்று க‌ழுத்துவரை கடன் வாழ்க்கைதான். வீடு வாங்கி விற்பது, நிலம் வாங்கி விற்பது, பங்குச் சந்தையில் நேரடியாக பணம் போடுவது எல்லாம் எனக்கு தெரியாத செயல்கள். அமெரிக்காவில் 401K எனும் ஓய்வுத்திட்டத்தில், முடிந்ததை போட்டுவிட்டு, மறந்துவிடுவேன். அதற்குமேல் என்ன செய்வது என்பது தெரியாது. உதாரணத்திற்கு "2050 ல் ஓய்வு பெறுபவர்களுக்கான திட்டம்" என்று இருக்கும். அதில் மாதம் சிறு தொகையைப் போட்டுவிடுவேன் அவ்வளவே என் டொக்கு. அதற்குமேல் முதல் இல்லை.

நாளையே நான் மூச்சை நிறுத்திவிட்டால், பிள்ளைகளும் மனைவியும் பிழைத்துக்கிடக்க காசு வேண்டும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கான உயிர்க்காப்பீடு எடுத்துள்ளேன்.  (Term life insurance or term assurance is life insurance that provides coverage at a fixed rate of payments for a limited period of time). அதில் போடும் பணம் கிணற்றில் போடும் பணம். அந்தக் காலத்திற்குள் நான் செத்தால் வாரிசுகளுக்கு வாழ்க்கையை நடத்த  பணம். நான் அந்தக் காலத்திற்குள் சாகாவிட்டால் , போட்ட பணம் கிணற்றில் உள்ள சதுக்க பூதத்திற்கு.

**
2008ல் வாங்கிய ஒரு கேம்ரி கார் அதன் இன்றைய மதிப்பு, $2000 டாலர். அதுதான் நான் அலுவலம் செல்லும் வாகனம். வாரத்தில் 400 மைல்கள் ஓடும். வழியில் நின்றுவிட்டால் சமாளிக்க‌ அதில் அத்தியாவசியமான ரிப்பேர் பொருட்கள் இருக்கும்  அவசர திட்டச் சாமான்கள் கிடக்கும். மாற்றுவதற்கு ஒரு உடை உட்பட.

பஞ்சரானால் டயரை மாத்திவிட்டு வேலைக்குப் போயாகவேண்டுமே? சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடும் வாகனம். பலமுறை ரோட்டில் மூச்சை நிறுத்தியுள்ளது. அள்ளிப்போட்டு ஆசுபத்திரி சேர்த்து அரைகுறை உயிரில் ஓடிக்கொண்டுள்ளது.
**

2008 ல் இருந்து 2012 வரை ஒரு வாகனம் மட்டுமே வைத்து இருந்தோம். நான் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று வருவேன். மழை,வெயில், பனி, புயல் எதுவானாலும், சைக்கிள்தான். ஒரு மஞ்சத் தோல் பையில், பருவநிலை ஆபத்தை சமாளிக்க அதற்கான சாமான்சட்டுகள் இருக்கும். 3 மைல் சைக்கிள் ஓட்டி , பின் பேருந்தில் ஏறி, இறங்கிய இடத்தில் இருந்து அடுத்து 5 மைல் சைக்கிள் ஓட்டி, அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலத்தில் குளிக்கும் வசதி இருந்ததால், சைக்கிளில் சென்ற பிறகு குளித்து வேறு உடைக்கு மாறிவிடுவேன்.


குழந்தைகளை பள்ளியில்விட, நீச்சல் போன்ற‌ பயிற்சிகளுக்கு கூட்டிச் செல்ல,  மனைவியின் பயன்பாட்டில் கார்  இருக்கும். பல நேரம் குழந்தைகளும் நகரப் பேருந்தில் பயணம் செய்தே காலம் ஓட்டினோம்.
**

இரண்டாவது காரின் தேவை இருந்தாலும், வசதி இல்லையாதலால் சமாளித்துகொண்டு இருந்தோம்.ஒருவரின் சம்பளத்தில் வண்டி ஓட்டுவது என்பது சிக்கலானது. ஒருவர் மட்டுமே சம்பாரிக்க வேண்டும். மற்ற ஒருவர் குழந்தைகள் ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை உடன் இருக்க வேண்டும் என்று, நானும் என் மனைவியும் போட்ட திட்டத்தினால், என்னைவிட கணினி மென்பொருள் தொழில்நுட்பத்தில் அதிகம் படித்து,அதிக வேலை வாய்ப்பிருந்த என் மனைவி வீட்டில் தங்கிவிட்டார்.

ஒரு கட்டத்தில் சமாளிக்கவே முடியாமல்தான் இரண்டாவது கார் வாங்கினோம் 5 வருட கடனில். 2012ல் வாங்கிய ஃகோன்டா வேன். அதன் இன்றைய மதிப்பு $12,000 டாலர்கள் இருக்கும். முந்தையதைவிட இது இளமையான‌(பாதுகாப்பான‌) வாகனம் என்பதால், மனைவி மற்றும் பிள்ளைகள் போய்வர பயன்படுத்துவோம். தொலைதூரப் பயணங்களுக்கு இதுதான்.

**
அம்பேரிக்கா வந்து 12 வருடம் கழித்தே வீடு வாங்கினோம்.அதற்கு இன்னும் 13 வருட கடன் உள்ளது. ஒரு மாதம் உழைக்காவிடில் ரோட்டுக்கு கூட்டிவந்துவிடுவார்கள் கடன் கொடுத்த வங்கியாளர்கள்.
**

எனது கதை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தினமும் மூன்று வேலைகள் பார்த்து, உடைந்த காரின் கண்ணாடியை, duct tape கொண்டு ஒட்டி, டயர் மாற்ற காசில்லாமல் ஏற்கனவே பயன்படுத்திய டயர்களை கயலான் கடையில் வாங்கி ஓட்டிக்கொண்டு இருக்கும் அமெரிக்க குடும்பங்கள் உண்டு.

ஒரு காலத்தில் இந்த ஊரில் அதிக நிலம் வைத்து இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர், ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் அந்த நாள் சோறு சாப்பிட முடியாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார். வாழ்ந்து கெட்ட குடும்பங்களும் உண்டு. வாழவே ஆரம்பிக்காத , ஆரம்பிக்கவே முடியாத, சமூகப் பொருளாதாரச் சூழலில் இருப்பவர்களும் உண்டு.

அமெரிக்க கிராமப் பகுதிகளில் நான் பார்க்கும் வாகனங்கள் கண்ணீர் கதைகளைக் கொண்டது.
**

உடன் வேலை செய்யும் தெலுகு நண்பர் ஒருவர், இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது , அவரின் இந்திய லாக்கரில் இருந்த ஒரு கோடிக்கு அதிகமான ரொக்கப்பணத்தை எப்படி வெள்ளையாக்கினார் என்று சொன்னபோது மலைத்துவிட்டேன். அமெரிக்காவில் என்னிடம் இருந்த‌ பத்து ஆயிரம், ரூபாயை எப்படி சட்டபூர்வமாக மாற்றுவது என்று, முறையான வழிகளில் தூதரகம், அதிகார பூர்வ பணமாற்றும் நிறுவனங்கள் அன்று அல்லாடி , விடை ஏதும் கிடைக்காமல், நொந்து போயிருந்த எனக்கு, இந்தியாவில் லாக்கரில் பணமாகக் கோடி என்பது மலைப்பே.ஆம் ,அதிசியமாகப் பார்க்கும் சாதரண வர்க்கமே நான்.

அவரும் அவர் மனைவியும் சம்பாதிக்கிறார்கள். கோவில்களுக்கு நன்கொடை என்றால் ஆயிரம் டாலர் கொடுத்தால்கூட அவரின் அன்றாட வாழ்க்கை அசராது. நூறு டாலர் டொக்கு விழுந்தாலே என் வாழ்க்கை நின்று நிதானிக்கும்.
**

அனைவருக்கும் கிடைக்கும் 24 மணி நேரம் போல, பணம் செய்யும் வாய்ப்புகள் சமமாகக் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும், நாம் எடுக்கும் முடிவுகள், நாம் எப்படியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், குழந்தைகளுக்கு எப்படியான முதலீடு செய்கிறோம்( பணம், நேரம், கல்வி, கலைகள்...) என்பதைப் பொறுத்து, பணம் பறக்கலாம் அல்லது பத்திரமாக இருக்கலாம். இவை எல்லாம் தனிமனித விருப்பங்கள்.
**

பணக்காரரர் ஆக வேண்டும் என்பது குறித்த சிந்தனைகளோ அல்லது ஆசையோ இல்லாவிட்டாலும்,பணம் என்பது பிழைத்திருக்க முக்கியமானது என்பதை ஆரம்பத்தில் இருந்து உணர்ந்தே உள்ளேன். கற்ற கல்வியே சோற்றுக்காகத்தான். கல்வியைக் கைக்கொள்ளாவிட்டால் சோறுக்கான உத்திரவாதம் இல்லை என்ற உந்துதலே என்னை தள்ளிக்கொண்டு கற்க வைத்தது. கற்றபின் கற்றதில் காதல் வந்தது வேறு.

முதலீடுகள் இல்லாத முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் வாழ்க்கை என்பதும், முதலாளி பிள்ளைகளின் வாழ்க்கை என்பதும் ஒன்றல்ல.
**

Financial Freedom என்று சொல்வார்கள். அது தரும் சுதந்திரம் எல்லையில்லாதது. ஆனால், இவ்வளவு பணம் இருந்தால்தான்  Financial Freedom  என்ற எந்த அள்வீடுகளும் இல்லை. இருக்கவும் முடியாது.

ஆசைகள் அளவில்லாதவை. வசதியும் வாய்ப்பும் வந்துவிட்டால், எல்லா ஆசைகளும் ஒரு கட்டத்தில் தங்களுக்கான நியாயங்களுடன், தேவையாக மாறி நிற்கும்.
**

செலவழிக்கப்படாத பணம் சேமிப்பு என்றாலும், சம்பாதிக்க வழி இருந்தால்தானே வருமானம்? பிறகு சேமிப்பு? இருக்கும் வருமானத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் வாழ்க்கை. கோடிகள் இருந்தால் Boat வாங்கலாம்தான். ஆனால், ஒரு மணிநேர வாடகையாக $8 கொடுத்து மாதம் ஒரு முறை, அரசு ஏரியில் பாய்மரப்படகு ஓட்டுவதைச் செய்ய முடியுமே? அதைத்தான் நான்  செய்கிறேன். இதுவே எனக்கான‌  Financial Freedom. அதிகம் சம்பாதிப்பவர்கள் BMW கார் வாங்க ஆசைப்படும்போது நான் $8 ல் மீன் தூண்டி வாங்க விரும்பினேன். இதுவே எனக்கு  Financial Freedom. இதுவே இல்லாமல் அன்றாட உணவிற்கே சிரமப்படும் அமெரிக்கர்கள் உண்டு.
**

உணர்வுகளில் சிறைப்படாமையும், பணத்தில் சிறைப்படாமையும் மனிதனை முழுமையாக‌ விடுவிக்கும் காரணிகள் என்பது என் சித்தாந்தம். அதிகப் பணம்தான் financial freedom என்று சொல்லவில்லை ஆனால், financial freedom  மிக அவசியமானது. அன்றாடம் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு financial freedom  இருக்கலாம், அதே சமயம் கோடிகளில் புரள்பவருக்கு financial freedom  இல்லாமல் இருக்கலாம்.

பணத்தை வைத்து என்ன செய்கிறோம் அல்லது எதற்காக பணம் சேமிக்கிறோம் என்பது முக்கியம். உதாரணத்திற்கு வாழ்க்கை என்பது நண்பர்களுடன் குடித்து பொழுது போக்குவது, அதிக விலை கார் வாங்குவது அல்லது அதிகவிலை போன் வாங்குவது என்ற நிலைப்பாடு உள்ளவர்கள், பணக்காரர் ஆகும்போது அந்த திசையில் செலவழிக்கலாம். இதில் தவறு ஏதும் இல்லை. மகிழ்ச்சி என்பது உனக்கான தனித்துவம். அதில் ஒப்பீடுகள் தேவை இல்லை.
**

நான் சொன்ன தெலுகு நண்பர், சில மாதங்களுக்கு முன் நூறாயிரம் டாலர் செலவில், டெஃச்லா  (Tesla) கார் வாங்கினார். நானும் அவரும் ஒரே அலுவலகம். 200 மைல் தொலைவு பயணம் என்பதால், அவர் காரில் ஒருநாளும், என் காரில் ஒருநாளும் சென்று திரும்புவோம். கை வலிக்கிறது என்பதற்காக, தானாக ஓடும் டெஃச்லா வாங்கிவிட்டடார் ஒருநாள். கார் அதுவாக ஓட, இவர் செல்போனில் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு வருவார். "அதுவாக ஓடும் கார்" எனக்கு பயம் என்பதால், நான்தான் கொட்டக்கொட்ட முழித்து, சாலையைப் பார்த்து வருவேன். தானாக ஓடும் காரில் இருக்கும் software bug எங்களைத் கொன்று இருக்கும் தருணங்களும் கடந்து போனது.
**

நான் பயணங்களுக்காக சேமிக்கிறேன். ஆயிரங்களில் அல்ல வெறும் பத்து இருபதுகளில். நான் வாழும் மாநிலத்தில் 100 கவுண்ட்டிகள் உள்ளது. கவுண்ட்டி என்பதை , நம்மூர் மாவட்டம் என்று ஒப்பீடு செய்துகொள்ளலாம். எல்லாக் கவுண்ட்டிகளின் முக்கிய ஊர்களில் ஒரிரு நாட்களாவது தங்கி வரவேண்டும் என்பதற்கு சேமிப்பதற்கே , குட்டிக்கரணம் அடிக்க வேண்டியுள்ளது. வாழ்தலுக்கான நோக்கங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சேமிப்பிற்கான நோக்கங்களும் செலவழித்தலுக்கான நோக்கங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். எதுவும் தவறு அல்ல.
**

சின்ன வயதில் 50 காசுகள் கொடுத்து வாடகைச் சைக்கிள் எடுத்து மாதம் ஒருமுறை ஓட்டுவதே உச்சகட்ட ஆசையாக இருந்தது. கல்லூரி சென்றபோது ,second hand  ல் அந்தக்கால இத்துபோன Atlas மாடல் சைக்கிள் ஒன்றை, தன் பட்செட்டிற்கு மேல் செல்வதால் நண்பரிடம் கடன் வாங்கித்தான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.

வயர் பிரேக்குகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் சைக்கிள்களும், Yamaha  மற்றும் பல வண்ண மோட்டார் பைக்குகளும் உலா வந்த அந்தக் கல்லூரியில், பெயிண்ட்போன சைக்கிளோடுதான் வலம் வந்தேன் 4 வருடங்களும். நான்கு வருடங்களும் ஒரே shoe தான்.

அமெரிக்கா வந்த பிறகு, தேவையின் பொருட்டு $15,000 கார் வாங்கிய பிறகும்கூட, ஆசைக்காக‌ $100 சைக்கிள் வாங்க நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. தேவைக்காக ஆயிரம் செலவழித்தாலும்,  ஆசைக்காக பத்து ரூபாய் செலவழிக்காமல் அதை அவசரத்தேவைக்கு சேமித்து வைப்போம்.

ஆசைக்காக 2 ரூபாய் டீ குடிக்காமல், மிடறு விழுங்கியே வளர்த்த தந்தைகளின் வளர்ப்பு. என் போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் இன்னும் இப்படி இருக்கலாம்.

தேவை என்ற நிலை வந்தபின்னர்தான், 10 வயதில் ஆசைப்பட்ட சைக்கிள் கனவு 37 வயதில் நிறைவேறியது எனக்கு.
**

வாழ்க்கை என்பது நாடகம் போல் ஒத்திகை அல்ல, சரிசெய்துகொள்ள. அது மெய். ஒவ்வொருகணமும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. ஆசை என்பது அற்ப செலவில் இருந்தாலும், தேவை கேட்கும் அதிகப் பணத்திற்காக பல ஆசைகள் நிராசையாக ஆகிவிடும். சின்னச் சின்னச் ஆசைகளுக்காக செலவழிக்கத் தயங்க வேண்டாம். சீமாட்டியிடம் சிகரட் வாங்கி புகைக்க வெட்கப்படவேண்டாம். அவளே பற்றவைத்தால் அது கூடுதல் அழகு.
**

பொருளின் மதிப்புகள்தாண்டி, ஆசையும் தேவைக்குமான இடைவெளி என்பது, நாம் வகுத்துக்கொள்வது. வாங்கும் சக்தி உள்ள‌வனின் ஆசைகள், சட்டனெ தேவையாக மாறிவிடும். வாங்க வசதிகள் இல்லாதவனின் தேவைகள்கூட, ஆசையாக தேங்கிவிடும். எனது ஆசை மற்றவரின் தேவையாகவும், எனது தேவை மற்றவரின் ஆசையாகவும் இருக்கலாம். எதையும் தட்டையாகப் பார்த்துவிடமுடியாது.

**
இன்றுவரை நிறைவேறாத ஆசைகள் இரண்டு.

Yezdi மோட்டார் சைக்கிள்மீது காதல் இருந்தது இந்தியாவில். வாடகை சைக்கிளே கனவாக இருந்த எனக்கும், TVS 50 யை கனவாக கொண்டிருந்த என் வசதியான நண்பர்களுக்கும் மத்தியில், தன் தாத்தாவின் Yezdi பைக் ஓட்டியிருந்த ஒருவன் பெரிய அம்பானியாகத் தெரிந்த காலம் அது.

கார் மற்றும் பைக் ஓட்டுநர் உரிமத்திற்காக, நண்பன் ஒருவனின் M80  ல் தான் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இன்றுவரை கியர் வைத்த பைக்குகள் சரியாத ஓட்டத் தெரியாது. ஓசியில் ஓட்டிப்பழக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை என்பதே உண்மை.

இத்தனைக்கும், கல்லூரியில் என் அறைத்தோழன் McDowell's Whisky  உற்பத்திச் சொழிற்சாலை வைத்திருந்த அப்பாவின் பிள்ளை. பணக்கார நண்பர்கள் இருந்தாலும், தன்மானம் என்பதும், ஆசைப்பட்டு அடிமையாகிவிடக்கூடாது என்பதும், கனலாக இருக்கும் எப்போதும்.  அறைத்தோழனிடம் பைக் கேட்டு ஓட்டியிருக்கலாம். ஆனால்  "டே, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வர்றியா?" என்று ஏவ வாய்ப்புள்ளது. அதனால் சைக்கிளே சக்கரவர்த்தி என்று வலம் வந்தேன்.

இப்போதுகூட அதிக பணம் புழங்கும் நண்பர்கள் எனக்கு இல்லை. அதிகம் பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளே என் வட்டத்தில்.

திருமணமான பிறகு, மனைவி கொண்டுவந்த அவரின் Bajaj Sunny யை அவர் ஓட்ட, நான் பின்னால் உட்கார்ந்து செல்லும் அளவிற்கே என் திறமை இருந்தது.

கடைசிவரை Yezdi  பைக்கை தொட்டுப்பார்க்கக்கூட முடியாமல் கனவு கலைந்துவிட்டது.
**

இரண்டாவது ஆசை நம்மூர்  Mahindra build Jeep


எனது 2009 கேம்ரி கார் ஓடவே முடியாத நிலையில் உயிரைவிட்டால், கடனை உடனை வாங்கியாவது இந்த ஊர்  Jeep Wrangler வாங்கிவிட வேண்டும் என்று மனது படுத்துகிறது. பார்க்கிங் இடத்தில் Jeep Wrangler ப் பார்த்தால் சுற்றிச் சுற்றி வருவேன் குழந்தையைப் போல்.


இதுவும் Yezdi மோட்டார் சைக்கிள் போல நிறைவேறாத ஆசையாக , கனவாக கலைந்துவிடலாம். ஆனால், ஏதோ ஒரு அழகிய கனவைக் காண்கிறேன். இருந்துவிட்டுப்போகட்டுமே? என்று சமாதானமும் சொல்லிக்கொள்கிறேன். இத்தைய சமாதானக் காரணங்கள் தனித்துவமானவை. ஆனால், என்ன ஆசைப் படுகிறோம் என்பது அனைவருக்கும் தனித்துவமானது. அது உங்களை யார் என்றும் காட்டும் உலகிற்கு.
**

ஏதாவது ஒரு ஆசையை வைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்திருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். Just one more reason to wake up and move forward. பெரும் முதலாளிகள் கோடியில் பணம் வந்தால் ஃபெராரி கார் வாங்க வேண்டும் என நினைத்துவிட்டுப் போகட்டும். ஆயிரத்தில் பணம் வந்தால் 10 ரூபாய் ஃகாபியை, இதுவரை பார்த்திராத ஒரு தெருமுனைக் கடையில் குடிக்க நினைப்பது நம் ஆசையாக இருந்துவிட்டுப் போகட்டும்.
**

ஆசையை தேவையாக மாற்ற நாம் சொல்லிக்கொள்ளும் காரணங்களைக் கலைந்து, ஆசையை ஆசையாகவே அணுகலாம் தவறில்லை. எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதும், எப்படி வாழ நினைக்கிறோம் என்பதும் மட்டுமே தனித்துவமானவை.

அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் இரகசியமாகவேணும்.

**

Wednesday, June 27, 2018

அறியாமையும் முட்டாள்தனமும்:முன்னோர்கள் முட்டாள்களா? இல்லை நீங்களா?

ந‌டுநிலைப் பள்ளிப்படிப்பின் போது (டீன் வயது) ஒரு நாள் படுக்கையில் ஒன்னுக்குப் போய்விட்டேன். எங்கோ சென்றுவந்த அலுப்பு. கனவா? நிசமா?என்று தெரியாமல், நண்பனுடன் தியேட்டர் மூத்திரச் சந்தில் , மூத்திரம் போகும் கனவு வந்த போது, என் மூளை என் பைப்பை படுக்கையிலேயே திறந்துவிட்டிருந்தது காலையில்தான் தெரிய வந்தது.

மகனுக்கு என்னவோ ஆகிவிட்டது. ஒற்றைப்பனைமரம் பக்கம் வெளிக்கிப் போனபோது, முனி அடித்திருக்கலாம், என்று பயந்து , எருக்கார அக்காவிடம்  எனக்கு தண்ணி அடித்து (மூஞ்சியில் அடித்து) விபூதி பூசச் சொன்னார் அம்மா. அதையும் தாண்டி சோசியரையும் பார்த்து வரவேண்டும் என்று என் அப்பாவிடம் சொல்லிவிட்டார்.  

**
ஒரு பிரபல சோதிடரின் அருகில் வளர்ந்தவன் நான். அவரின் செயல்கள், பேச்சுகள் அனைத்தும் சிறுவயதில் அறிந்தவன். அந்த சோதிடர் எங்கள் பக்கத்துவீடு என்பதால், ஒன்னுக்குப்போன கதை தெரிந்தால் அவமானம் என்று(நான்தேன்), அடுத்த தெருவில் உள்ள அவரின் தம்பியிடம் போனோம். 

இந்த தம்பி சோதிடர்  எங்கள் பகுதியில் பேமசான சோதிடர் . கேப்டன் விசயகாந்திற்கு அவர்தான் ஆஃச்தான சோதிடர். அந்த ஆஃச்தான சோதிடர், நான் பத்தாவதில் ஃபெயில் ஆவேன் என்று கணித்தார். 1986 ல் நான் வாங்கிய 445/500 மதிப்பெண் பட்டியலை அவரிடம் சென்று காட்டவேண்டும் என்று என் அப்பாவிடம் அடம்பிடித்தேன். "விட்றா விட்றா" என்று சொல்லிவிட்டார் அப்பா. ஆனால் அடுத்தமுறை அவரை தெருவில் பார்த்தபோது எனது மார்க்கை மறக்காமல் சொல்லிவிட்டேன்.
**

என் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். சூரியனைப் பார்த்து தினமும் ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் சாப்பிடடுவார். அவருக்கு, சூரியன் என்பது கிரகமா? நட்சத்திரமா? என்பது எல்லாம் தெரியாது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவகிரகங்கள் சிலைகளில் சூரியனும் ஒருவர். அவ்வளவே அவரின் புரிதல். 

சனிபகவான், ராகு & கேது பட்டாளங்களில் சூரியனும் ஒரு சாமியைச் சுத்துவதற்கு ஒன்பது பேரைச் சுற்றினால் நல்லதுதானே? எனவே  அறிவியல் சார்ந்த கேள்விகள் என் அம்மாவிடம் இருந்தது இல்லை. அறிந்துகொள்ளவும் இல்லை ஆர்வமும் இல்லை. அவருடைய உலகம் தேங்கிவிட்ட ஒன்று. அதுவே அவருக்குப் போதும் என்றும் இருந்துவிட்டார்.

இங்கே, சூரியன் குறித்த விசயத்தில் என் அம்மா அறிவியல் அறியாதவர். இது அறியாமை. அல்லது கற்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடியாத என் தாத்தா செய்த குற்றம். 

அறியாமை என்பது முட்டாள் இல்லை. அறியாமை என்பது அறியாமை அவ்வளவே.

ஆனால், சூரியனை நட்சத்திரம் என்று பள்ளியில் படித்து, அதைத் தேர்விலும் எழுதி ,அதன் அடிப்படையில் பிழைப்பையும் ஓட்டிக் கொண்டு , தனது பிள்ளைகளுக்கும் அதையே பயிற்றுவித்து , அதே சமயம்,  , 'ராகு கேது சந்திரன்  சூரியன் எல்லாமே கிரகம்' என்ற அடிப்படையில் உள்ள பழைய சோதிட முறையை இன்றும் ஏற்று/ நம்பி செயல்பட்டால்,  அவர்கள் முட்டாள்களே. இவர்கள் என் தலைமுறையினர். முன்னோர்கள் இல்லை.

அறியாமைக்கும் முட்டாள்தனத்திற்கும் இதுதான் வேறுபாடு.

**

நான் ஒருபோதும் என் இன்றைய புரிதலின் அடிப்படையில் முன்னோர்களின் அந்தக் காலத்திய‌ செயல்களை எடைபோடுவது இல்லை. அந்தக் காலத்தில் அவர்களின் புரிதலில் அவர்களின் செயல்கள் சரியாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு வாய்த்த அறிவியல் அவ்வளவுதான்.

என் தலைமுறையினர், முன்னோர்களின் அந்தக்காலச் செயல்பாடுகளை, சடங்காக இன்னும் செய்து கொண்டு, "அதுதான் சரி" என்று சொல்லும்போது, நிச்சயம் அவர்களை முட்டாள் என்று சொல்லலாம்.
**

"ஆன்மீகம் என்பது அயோக்கியத்தனத்தின் பசுத்தோல்" என்பது எனது கருத்து. யாராவது ஆன்மீகம் என்ற பெயரில் அறிவியல் கருத்துகளை திரிக்குக்போது, அவர்களை முட்டாள்கள் என்று சொல்வேன். அப்படிச் சொல்வதால் நான் எல்லாம் அறிந்தவன் அல்ல. அந்த பேசுபொருளில்/உரையாடலின் நிகழ்வில் (In that context) உங்களை நான் முட்டாள் என்று சொல்வதால், நான் எல்லாம் அறிந்தவன் அல்ல. 

நான் எல்லாம் அறிந்தவன் என்று நீங்களாக கற்பனை செய்தால், உங்களின் கடவுளை நீங்களே அவமதிக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் நம்பிக்கையின்படி,  உங்கள் கடவுளே எல்லாம் அறிந்தவன். எனவே என்னை இணை வைக்காதீர்கள்.

**
~ எனது அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். என் அப்பா ஆசிரியர். யாரும் அவரிடம் "உன் மனைவிக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடு"  என்று சொல்லவில்லை. "மனைவிக்கு சொல்லித்தர முடியாதவன், எங்கள் குழந்தைக்குப் பாடம் எடுப்பது போலித்தனம்" என்றும் சாடை பேசவில்லை.

~எனது பாட்டி, பின் கொசுவம் வைத்து ரவிக்கை இல்லாமல் சேலை கட்டுபவர். என் அம்மா, முன் கொசுவம் வைத்து கட்டிய காலத்தில், யாரும் அவரிடம் "உன் அம்மாவைத் திருத்த முடியாத நீ ஏன் இப்படி கட்டுகிறாய்" என்று சொன்னதில்லை.

~என் மனைவி இறைச்சி உண்பவர். அவரிடம் யாரும் "உன் புருசனை இறைச்சிக்கு மாத்தாமல் நீ மட்டும் உண்பதும், அது நல்லது என்று பிள்ளைகளுக்கும் பழக்குவதும் போலித்தனம் " என்று பேசியதில்லை.

~"இறைச்சி சாப்பிடும் மனைவியுடன் எப்படி வாழ்கிறாய்? அவரை இறைச்சி மறுக்கச் செய்யாமல், நீ மட்டும் காய்கறி,முட்டை தின்று வாழும் வாழ்க்கை போலி" என்று என்னை யாரும் விமர்சித்தது இல்லை. 

ஆனால் , "Idea of god ஐ நீ ஏற்காத போது உன் மனைவி ஏற்கிறாரே? அதனால் நீ போலியானவன்.வீட்டை மாற்றாமல் நீ பேசுவது போலி" என்று சாடைமாடையாக பேசுபவர்கள், ஆன்மீகவாதிகளே. 

அதே ஆன்மீகவாதிகள், "என் அம்மா சுரிதார் போடவில்லை. நீ மட்டும் எப்படி சுரிதார் போடலாம்?" என்று தங்கள் மனைவியைக் கேட்பது இல்லை. இதில் பலர் மது அருந்துபவர்கள். "தன் மனைவியையே மதுக்குடிக்க வைக்க முடியாதவர்கள், எப்படி பொது வெளியில் நண்பர்களுடன் மது அருந்தலாம்?" என்ற கேள்வியை எந்த முற்போக்குவாதியும் கேட்பது இல்லை. (அப்படிக் கேட்டால் அவர்கள் ஆன்மீகவாதிகூட்டத்தில் சேர்த்துவிட்டுவிடுங்கள்.)

உங்கள் அப்பா டை கட்டவில்லை என்பதற்காக நீங்கள் கட்டாமல் இருப்பதில்லை. அவரை கட்டவும் வற்புறுத்துவதில்லை. அதே சமயம், உங்கள் நண்பனிடம்  "டை கட்டுவது இன்டர்வியூக்கு நல்லது" என்று சொல்வீர்கள். சரியா? நிலைப்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.

ஆனால், idea of god ல் மட்டும் வேற்றுச் சிந்தனைகள் உள்ள மனிதர்கள் சேர்ந்து வாழவே முடியாது என்பவர்கள், அதே கருணையும், அன்பும், சமத்துவமும் பேசும் ஆத்திகர்கள்தான். அப்படியானவர்கள் மூடர்கள் என்பதில் தவறில்லையே?

**
Idea of god ஐ ஏற்காதவர்களை "நம்பிக்கையில்லாதவர்கள்" என்றும் "நாத்திகவாதிகள்" என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் மறுபேச்சுப் பேசாமல் இன்முகத்தோடு ஏற்கவேண்டும்.  ஆனால், அறிவியலை அறிந்து கொள்ளாதவர்களை , அறியாதவர்கள் என்றும், அறிந்தும் 'சூரியனை கிரகம்' என்று நம்பி சோதிடம் பார்ப்பவர்களை, முட்டாள்கள் என்று சொன்னால் வருந்துகிறார்கள்.
**

ஏற்றத்தாழ்வு
------------

எனது அம்மா எழுதப்படிக்கத் தெரியாதவர். எனக்குத் தெரியும். இது ஒப்பீடு அல்ல. Just a fact 

கடவுள் என்ற கருத்தை ஏற்றவர் ஆத்திகர் ஏற்காதவர் நாத்திகர். இது ஒப்பீடு அல்ல. ஒரு கருத்தில் வேறு நிலை.

ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பேசும் போது அறிந்தவர் என்பதும், அந்த விசயத்தை அறியாதவர் என்பதும் வெறும் fact.(In that context) இதில் என்ன உயர்வு தாழ்வு உள்ளது?

அடுத்தவரை "கடவுளை அறியாதவர்" (நம்பிக்கையற்றவர்/நாத்திகர்) என்று சொல்வது சரியானால், reasoning /evidence தேடதாவரை  "அறிவியல் அறியாதவர்" என்று சொல்வது சரியே.

அறிவியல் அல்லது கடவுளைத் தெரிந்தவர்கள் உயர்ந்தவரும் இல்லை .அதைத் தெரியாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை. இது ஒப்பீடு அல்ல. Statement /fact
**
ஒன்று செய்வோம். நீங்கள் எங்களை நம்பிக்கையில்லாதவர்கள் என்றும் நாங்கள் உங்களை அறிவியல் தெரியாதவர்கள் என்றும் எதிர்மறையாய் விளிக்காமல், எங்களை நீங்கள் "அறிவியல் அறிந்தவர்கள்" என்று சொல்லுங்கள். நாங்கள் உங்களை "கடவுளை அறிந்தவர்கள்" என்று சொல்கிறோம். சரியா?
**

ஒரு கருத்துக்கு எதிர்கருத்து உள்ளதாலும், அதைப் பேசுவதாலும், பகிர்வதாலும், அது "மற்றவர்களைத் திருத்தும் நோக்கில் செய்யப்படும் செயல்" என்ற பார்வை தவறானது. உங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டியது உங்களின் imaginary friend தானே தவிர என் வேலை அல்ல. 

**
"The idea of God is the sole wrong for which I cannot forgive mankind."
-Marquis de Sade

Idea of god 

"Idea of god" is a comforting one. It helps lot of people to move forward.That doesn't mean that idea is a proven fact. Its is simply a choice for people to handle their emotion and/or whatever it is. 

Those people must understand, that there are few people still exists. They try to do reasoning and look for scientific evidences . They separate faith , beliefs, facts etc. 
-Kalvetu
**

Saturday, May 26, 2018

அனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA

A1 இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால்? அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்மீது கடத்திக்கொண்டு பதவியில் இருக்கிறது எடப்பாடி தலைமையிலான மாநில அரசு.

நீட் தேர்வில் தமிழகத்தை அடகுவைத்ததில் முக்கிய சூத்திரதாரியான மாஃபாவை, அமெரிக்க ஃபெட்னா இந்த வருடம் அழைத்து அவரின் சேவையைப் பாராட்ட இருக்கிறது.
https://fetnaconvention.org/en/special-guests

ஆம் அனிதாவிற்கு எடுத்துக்கொடுத்த தூக்குக்கயிறுக்காகவும், தூத்துக்குடிக்கு எடுத்துக்கொடுத்த துப்பாக்கிக்காகவும், நெடுவாசல் தொடங்கி எல்லா இழவுகளுக்கும் காரணமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியை, நீட்டின் சூத்திரதாரியான மாஃபா"வை   அமெரிக்க தமிழர்களின் அமைப்பு கொண்டாட இருக்கிறது. என்னவென்று கேட்டால் அவர்கள் ஃகார்வர்டின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தார்களாம்.

தூத்துக்குடி கொலைகாரர்களை அழைத்து கவுரவிக்கும் ஃபெட்னா, எட்டப்பன்களின் சங்கமாகிறது.இராசபக்சே இவர்களின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தால், அவரையும் அழைப்பார்கள் இவர்கள். தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில், தமிழனுக்கு பாடை கட்டியவர்களை அழைத்து சிறப்பிக்க இருக்கிறது ஃபெட்னா 2018.

ஃகார்வர்டு சேர் செய்கிறோம் என்ற பெயரில், அனிதாக்களைக் கொன்ற , தூத்துக்குடியை சுடுகாடாக்கிய ஒரு ஆட்சியின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறார்கள்.
**

நாஞ்சில் பீட்டர் என்ற ஒருவர் ஃபெட்னாவில் இயக்குநராக இருக்கிறார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தமிழனைக் கொலைசெய்து, யாருக்காக இந்தச் ஃகார்வர்டுச் சேர்? ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அவரின் மறுமுக‌த்தைக் காட்டுகிறார்.

மேலும் "ஃபெட்னா அறத்தின்மீது கட்டப்பட்ட அமைப்பு" என்கிறார் நாஞ்சில் பீட்டர்.

இல்லை அய்யா, ஒருவேளை அது அப்படி கட்டப்பட்டதாக இருக்கலாம், இன்று, உங்களைப் போன்ற எட்டப்பன்களால், எடப்பாடிகள் கொன்ற தமிழர்களின் பிணத்தில் வாழ முயற்சிக்கிறது.

‍‍‍‍==
அமைச்சர் வந்தால் ....
அவரிடமே உங்கள் சினத்தை காட்டுங்கள்.
கோரிக்கையை வையுங்கள்.
யார்வேண்டாம் என்பது.
குறிப்பு: நான் திமுக;
தந்தை பெரியார் தொண்டன்.
சாதி மதமற்றவன்.
==
எடப்பாடிகளும் இப்படியான எட்டப்பர்களும் தமிழர் கொலையில் விழாஎடுப்பவர்கள்.
FETNA's 31st Annual Tamil Conference Press Meet Stills
https://www.youtube.com/watch?v=ph6jvSJTrsQ

அதாவது கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து இவர்கள் விருந்து வைப்பார்களாம், நாம் அந்த விழாவிற்கு மொய் எழுதி , கொலைகார அரசின் பிரதிநிதியிடமே கோரிக்கை வைக்கலாமாம்.

என்ன மாதிரியான மனநிலை. இதில் நான் பெரியார் தொண்டன் என்ற அடிக்குறிப்பு வேறு.

பெரியார் அனிதாக்களின் சமாதியில் அழுது கொண்டிருக்கும்போது, நீங்கள் கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறீர்கள். தயவு செய்து பெரியாரின் தொண்டன் என்று சொல்லி, கிழவனை மறுபடியும் சாகடிக்காதீர்கள்.

இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்வது போல, "உங்களின் பிணங்களைத் தோண்டி தூக்கில் ஏற்றும் காலம் வரும்".

ட்வீட்டர் உரையாடல்.
https://twitter.com/naanjilpeter/status/999713487927631873

https://twitter.com/kalvetu/status/999969019867357184

https://twitter.com/naanjilpeter/status/999744469699366915

Friday, May 18, 2018

கார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்

சொந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீழே இறங்கி, கார் நிறுத்தி இருக்கும் இடத்தில் (garage) கண்களால் நோட்டம் விட்டேன். ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லை அந்த அறையில். ஏதோ நடந்துள்ளது. ஆனால், என்ன என்பது தெரியவில்லை. ஏதேனும் பொருட்கள் விழுந்திருந்தால் தடயம் இருக்கும். எல்லாம் சரியாகவே இருந்தது.

மாலையில் காரேச் (garage) கதவைத் திறக்க முயற்சித்தபோது அது திறக்கவில்லை. மோட்டார் மட்டும் 'ஃகம்' என்ற சத்தத்தோடு திணறிக் கொண்டு இருந்தது.
**
மறுநாள் விடிந்தது. அடிபட்டுச் சென்ற கிரிஃச்டியன் , உடைமாற்றிக் கொண்டு வந்திருந்தான். அருகில் அவனது வீடு இருப்பதாகவும், அதில் சில மனிதர்களை அடைத்து வைத்து இருப்பதாகவும் சொன்னான். உயிர் போகும் நிலையில் கொடியவனிடமும் உதவி கேட்க மனம் துணியும்.

தண்ணீரும் உணவும் கேட்ட அவளுக்கு,  ரம்பத்தைக் கொடுத்தான். ஆம் அவளின் காலை அவளே அறுத்துக் கொண்டு வெளியில்வர. "நீ என்னை சந்தித்தது விதி. இது இப்படித்தான் முடியும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒன்று. அதுவே என்னைச் சந்திக்க வைத்தது. நான் உன்னைத் தேடி வரவில்லை. நீதான் என்ன சந்திக்க இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாய். தப்பிக்க வழியே இல்லை." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் மறுபடியும்.
**
Garage Door என்பது 200 முதல் 300 பவுண்டுகள் எடை இருக்கும். அதிக எடையில் இயங்கும் ஒரு இயந்திரம் என்றே சொல்லலாம். வீடுகளில் மோட்டாரால் தூக்கி இறக்கப்படும், அதிக எடையுள்ள ஒரே பொருள் இது. திறப்பதற்கு மோட்டார் இருந்தாலும், எடையைத் தாங்குவது அதனுள் இருக்கும் கம்பிச் சுருள்(Spring). ஊர்ப்பக்கம் கடைகளின் ஃசட்டர்களின் (shutter)மேலே இப்படியான கம்பிச் சுருளைப் பார்த்திருக்கலாம். கதவை மேலே தூக்கும்போது எடையைத்தாங்கி சுலபமாக்குவது கம்பிச்சுருளே. அது உடைந்துவிட்டால் கதவை நகர்த்த நாலுபேர் வேண்டும்.

எனது காரேச் கதவின் கம்பிச்சுருள் உடைந்திருக்க வேண்டும் என்று சில சோதனைகளில் அறிந்து கொண்டேன். மோட்டார் நன்றாக உள்ளது. கதவைத் தூக்கும் 'பெல்ட்& உருளைகள்' சரியாகவே வேலை செய்கிறது. மோட்டாரை விலக்கிய நிலையில் (disengage), ஒரு கையால் உயர்த்தினாலே சுலபமாக மேலே செல்லும் கதவு, இன்று ஒரு அங்குலம்கூட நகரவில்லை. இது உடைந்த கம்பிச்சுருளின் அறிகுறி.

பெரும்பாலான பழைய கதவுகளில் கம்பிச்சுருள் வெளியில் இருக்கும். எங்கள் கதவின் கம்பிச்சுருள் Torquemaster spring என்ற ஒன்று. இதில், கம்பிச்சுருள் இரும்புக்குழாயினுள் இருக்கும். வெளியில் தெரியாது. விசையேற்றப்பட்ட கம்பிச் சுருளை கழற்றி மாற்றுவது என்பது சிக்கலானது. உயிரழப்போ மற்றும் பெரிய காயங்களையோ ஏற்படுத்திய  விபத்துகள் அதிகம். இதை மாற்றுவது என்றால் 700 டாலர்கள் ஆகலாம். கம்பிச்சருளின் விலை 200 என்றாலும், வேலைக்கான கூலி அதிகம்.
**
யாருமற்ற சூழல்களிலும், நிராதரவான நிலைகளிலும் உயிர் பிழைத்திருக்க மனம் மிருக நிலைக்குச் சென்றுவிடும். பிழைத்திருக்க எது வேண்டுமானாலும் செய்யத்துணியும். காலை மட்டும் வெளியில் எடுத்துவிட்டால் தப்பிவிடலாம் என்ற நிலையில், தனது காலை தானே அறுக்கத் துணிகிறாள் 'ம‌லோரி'. அறுக்க ஆரம்பித்த சில நொடிகளில், வலி தாங்கமுடியாமல் நிறுத்திவிடுகிறாள்.

மழை கொட்ட ஆரம்பிக்கிறது. சிறுநீரும் உடலில் வற்றிவிட்ட நிலையில் , மழைநீரை சேகரிக்க முயற்சிக்கிறாள் பாட்டிலில். எப்படியும் கிரிஃச்டியன் மறுபடியும் வருவான் என்ற உள்ளுணர்வில், அவன் வந்தால் அவனைத் தாக்க திட்டமிட்டுகிறாள். எதிர் பார்த்ததபடியே வந்த அவனைத் தாக்கிவிட்டு, அவனிடம் பிடுங்கிய‌ அவனின் கார்ச் சாவியை தூரத்தில் எறிகிறாள். மழை அதிகரிக்கிறது. இவள் கார் விழுந்துகிடந்த இடம் வற்றியிருந்த ஒரு ஓடையின் மையப்பகுதி என்பது, மழைநீர் வரத்துவங்கிய பின்னரே தெரிகிறது.

பள்ளத்தில் இருந்து மேலே ஏறி, சாலைக்கருகில் சாவியைச் தேடச் சென்ற கிரிஃச்டியனை, அவ்வழியே வந்த காவல் அதிகாரி விசாரிக்கிறார். காவலர் வாகனத்தின் சிகப்பு ஒளியை கண்ட 'மலோரி' முடிந்தவரை சத்தமிடுகிறாள். அது முனகலாகவே வருகிறது. எதோ ஒன்றை சந்தேகித்து, சரிவில் இறங்க முயன்ற காவலரையும் அடித்து நிலைகுலையச் செய்கிறான் கிரிஃச்டியன்.
**
கம்பிச்சுருளில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியை மெதுவாக வெளியேற்ற வேண்டும். சுருளின் விசையை வெளியேற்ற எதிர்ப்புறமாக (unwind)  சுற்றவேண்டும். இதற்கு சரியான உபகரணம் 'Ratchet and Sockets'. பிடித்திருக்கும் ரேச்சட் நம் கை வலிமை தாண்டி, கம்பிச்சுருளின் விசையை வெளியேற்ற, வேகமாக சுத்த எத்தனிக்கலாம். இதில்தான் அதிக விபத்து நடக்கிறது. முகரக்கட்டைகள் பிய்த்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. மெதுவாக விசையைக் குறைத்து, கம்பிச்சுருளைக் கழட்டினேன். எதிர்பார்த்தது போலவே கம்பிச்சுருள் உடைந்திருந்தது. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புதிய கம்பிச்சுருளை மாட்டி, அதற்கு விசை (wind) கூட்டினேன்.
**

காற்றும் மழையுமாக கொட்டியதில், காட்டாறு குப்புறக்கிடந்த ட்ரக்கை புரட்டிப்போடுகிறது. ட்ரக்கும் அவளும் மிதந்து போகிறார்கள் வெள்ளத்தில். எசகுபிசகாக சிக்குண்ட அவளின் கால், வெள்ளத்தாலும், ட்ரக் நேராகத் திரும்பியதாலும் கொஞ்சம் இலகுவாகி, வெளியில் எடுக்க முடிகிறது. ஆம் அவள் த‌ப்பிக்கிறாள். இரண்டு நாட்கள் கொடுமையில் இருந்து. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவள், கரையேறிய இடம், அந்த சைக்கோ கிரிஃச்டியனின் வீட்டருகில்.

**
Garage கதவைச் சரிசெய்த பிறகு, அதை இயக்கிப் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தாலும், கதவு மூடும்போது ஒரு சின்னச் சிக்கல் இருந்தது. என்ன முயற்சித்தும் அது என்ன என்று கண்டுபிடிக்கமுடியாமல், குருப்பானில் (Groupon) ஒரு நிறுவனத்தின் சேவையை 80 டாலர்களுக்கு வாங்கினேன். சென்சரில் இருந்த ஒரு பிரச்சனையை சரிசெய்தபின் கதவு இயங்கத் தொடங்கியது. காரும் ஓடத் தயாரானது.
**

அன்று அலுவலகத்தில் இருந்து புறப்பட நேரம் ஆகிவிட்டது. மெல்லிய மழை, கீற்றுகளாய் தரையைத்தொட்டு சிதறி விழுந்துகொண்டு இருந்தது. பாதிவழியில் இருள் கவியத் தொடங்கியது. ரேம்சர் (Ramseur) என்ற ஊரைத் தாண்டிய போது, சாலையின் ஓரத்தில், தனித்துவிடப்பட்ட காரும், அதற்கு 10 அடி தள்ளி பெண் ஒருத்தி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதையும் கண்டு மனம் பதைபதைத்தது. சென்ற வாரம் பார்த்த Curve (https://www.imdb.com/title/tt3212904/) என்ற படத்தின் நாயகி 'ம‌லோரி' மனதில் வந்துபோனாள்.


ஏதேனும் உதவி தேவையா என்று கேட்கலாமே என்று நினைத்துக்கொண்டே, நிற்காமல் சென்றுவிட்டேன் நான். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது. 'ம‌லோரி' போல இவளும், இறுதியில் வென்று விட்டிருப்பாள் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். கிரிஃச்டிய‌ன் வீட்டை தட்டித்த்டுமாறி அடைந்த அவள், அவனை வென்று சிலரை அவனின் சைக்கோ சித்ரவதைகளில் இருந்து மீட்டுவிடுவாள்.
**
தினமும் சாலையில் ஏதேனும் ஒரு வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதைக் காணும் போதெல்லாம், "என்னவாகியிருக்கும் இவர்களுக்கு? ஏதும் பெரிய பிரச்சனையாய் இருக்காது, இருந்திருக்கக்கூடாது' என்றே மனம் விரும்புகிறது. அன்றுகூட கைகாட்டி நிறுத்தச் சொன்ன ஒருத்தியை கடந்துவிட்டேன். வேகமான சாலைகளில் என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்குள் காரும், காலமும் கடந்துவிடுகிறது.

It’s The Things You Don’t Do That You Regret Most

சட்டெனத் திரும்பும் வளைவுகளில் கார் நின்றுவிட்டால் என்னாகும்? ஏதோ ஒன்று ஆகும்வரை இந்தக் கேள்வி ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
*

முந்தைய பகுதிகார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1http://kalvetu.blogspot.com/2018/05/curve-1.html

Thursday, May 17, 2018

கார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1

காலில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்திற்கும், அடிப்பட்ட புண் அகோரமாகி இருந்த வாடைக்கும், காட்டெலி ஒன்று 'ம‌லோரி' (Mallory)யைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதை விரட்டக்கூட முடியாது அவளால். 'மாறுகால் மாறுகை' போல, ஒரு காலில் முழங்காலுக்கு கீழே, பாதம் வரை காரின்  உடைந்த பாகத்தில் மாட்டிக்கொண்டது. ஒரு கையில் உடைந்த‌ எலும்புகளுடன், மல்லாக்க விழுந்த நிலையில், அந்த குப்புறக்கிடக்கும் காரினுள் அசைவதே சிரமமாயிருந்தது அவளுக்கு.
**

நெடிய பாதையின் பயணத்தில் இதயம் நின்றுவிட்டால் எந்தப் பிரச்சனைகளும் இருக்கப்போவது இல்லை. அதனோடு எல்லாம் முடிந்துவிடும். கவலைகள் சார்ந்தவருக்கே. ஆனால், பயணிக்கும் கார் நின்றுவிட்டால்?

எனது '2009' தயாரிப்பான 'கேம்ரி' 150,000 மைல்களுக்கு மேல் ஓடிவிட்ட ஒரு கிழட்டு கழுதை. அதன் மதிப்பு இப்போது சில ஆயிரங்களே இருக்கும். வாரம் 8 மணி நேரங்கள் அத்துவான வழியில் அதிகாலையில் பயணிப்பது சுகானுபவம் என்றாலும், எப்போதும் நின்றுவிடும் அச்சம் இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே Portable Jump Starter (Battery), தண்ணீர் பாட்டில்கள், அவசர உணவிற்காக சில பிசுகட்டு போன்றவைகள் எப்போதும் இருக்கும். டயர் மாற்றும்போது கீழே விரிக்க துணி போன்றவையும் இருக்கும். முடிந்த அளவு, எதிர்பாராத தருணங்களை எதிர் நோக்கிய பயணம்.
**

மலோரியும் மகிழ்ச்சியாகவே அவளின் பயணத்தை ஆரம்பித்தாள். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது அவளுக்கு. தனது மணநாளுக்குத் தேவையான அழகு ஆடையுடன், 'டென்வர்' நோக்கி போய்க்கொண்டிருந்தாள் அவள். இடையே தனது தங்கையுடன் பேசுகிறாள். 'கிராண்ட் கேன்யன்' வழியாக சுற்றுப்பாதையில் சென்றால் இயற்கையை இரசிக்க முடியும் என்று, நேரடிப் பாதையில் இருந்து சட்டென திரும்பும் திருப்பத்தில் நுழைகிறாள்.
**

இப்பொழுதெல்லாம் இரவு நேரங்களில், எனது காரின் முகப்பு விளக்கு சரியாகத் தெரிவதில்லை. விளக்கு புதிது என்றாலும், ஆக்சைடு படிமங்கள் படிந்துவிட்ட விளக்கின் வெளிப்புற கண்ணாடிப் பகுதி, மஞ்சளில் இருந்து, 'பழுப்பு மஞ்சளாகி' உயிரைவிடக் கெஞ்சிக் கொண்டிருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றால், குறைந்தது 200 டாலர்கள் தேவை. ஏற்கனவே 5 ஆயிரம் டாலர் அளவிற்கான வேலைப்பட்டியலே நிலுவையில் உள்ளது. ஓடும்வரை ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கும் காருக்கு மேலும் அதிப்பணம் செலவழிக்க விரும்பாமல், நானே விளக்கை சரிசெய்துவிடத் துணிந்தேன்.
**

கிராண்ட் கேன்யன் குறுக்குச் சாலையில் சென்றுகொண்டிருந்த 'மலோரி'யின் ட்ரக் அப்படியே நின்றுவிட்டது. அவசரத்திற்கு கைப்பேசியும் வேலை செய்யவில்லை. ட்ரக்கின் முன்பகுதியை திறந்து தன்னாலான சோதனையைச் செய்தாள். எரிக்கும் வெயிலில், மேலாடையை கழற்றியைக் கொண்டிருந்த நேரத்தில், எங்கிருந்தோ சட்டென்று தோன்றிய ஒருவனை  அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆள், அரவமற்ற அத்துவானப் பாதையில், எதிர்பாராமல் தோன்றிய ஒருவனைக் கண்ட அவள், தனது மேலாடையை அணிந்துகொண்டு, பேச ஆரம்பிக்கிறாள்.

**
எனது காரின் விளக்கை சரி செய்யத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு வார இறுதியில் என் வேலையை ஆரம்பித்தேன். உப்புக்காகிதத்தில், விளக்கின் முன் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தேய்க்க வேண்டும். அதிக சிராய்ப்புத்தன்மை உள்ள பேப்பரில் ஆரம்பித்து, மென்மையான பேப்பருக்கு மாறவேண்டும். மஞ்சள் நிறம் நீங்கியவுடன், ஆல்ஃககால் வைத்து கழுவிவிட்டு, கிளியர் கோட் (Clear Coat) அடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், இன்னும் பல மாதங்களுக்கு இருக்கும் விளக்கை வைத்து ஒப்பேற்றலாம். தேவையான பொருட்களின் விலை 50 டாலர் வரை ஆயிற்று.
**

பார்ப்பதற்கு கவர்ச்சியானவனாக இருந்த கிரிஃச்டியன் (Christian) அவளின் ட்ரக்கை மறுபடியும் ஓட வைக்க உதவுகிறான். நடந்தே பயணித்துக்கொண்டிருப்பதாக‌ச் சொன்ன அவனை, தன்னுடன் ஏற்றிச் செல்ல முதலில்  மறுத்தாலும், சில மீட்டர் தொலைவு சென்றபிறகு மனம் மாறி, அவனையும் தன் ட்ரக்கில் ஏற்றிக்கொள்கிறாள் மலோரி.

சில தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப்போடும்.  ஏன் நடக்கிறது என்பதற்கோ, ஏன் இப்படிச் செய்கிறோம் என்பதற்கோ விளக்கங்கள் அந்த தருணங்களில் கிடைப்பது இல்லை.

பேச ஆரம்பித்த சில வினாடிகளிளேயே, "எனது ஆண்குறியை உன் தொண்டையில் வாங்க முடியாது" என்று சொல்லி தன் சைக்கோ பக்கத்தைக் காண்பிக்கிறான் கிரிஃச்டியன். ட்ரக்கை நிறுத்தி அவனை இறங்கச் சொல்கிற 'மலோரி'யை கத்தியக் காட்டி மிரட்டி, தான் சொல்லும் ஒரு மோட்டலுக்கு ஓட்டச்சொல்கிறான் கிரிஃச்டியன்.
**
400 கிரிட் (Grit) உப்புக்காகிதத்தில் ஆரம்பித்து 600, 2000 என்று தேய்த்து முடித்தேன். இப்போது விளக்கில் இருந்த மஞ்சள் போய் பளிச்சென்று இருந்தது. இந்த நிறம் இப்படியே இருக்காது. சில நாட்களில் ஆக்சிடைசாகி மஞ்சள், பழுப்பு என்று மாறிவிடும். இதைத் தவிர்க்க இதன் மீது கிளியர் கோட் அடிக்க வேண்டும். கிளியர் கோட் அடிக்க அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்தேன்.  தேவையில்லாத இடத்தில் பட்டுவிடாமல் இருக்க, விளக்கின் முகப்பைச் சுற்றி பெயிண்டர் டேப்பை ( Painter's Tape) ஒட்டி, மீதிப்பகுதியை மறைத்தேன். ஆல்கஃகாலால் ஒற்றி எடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து கிளியர் கோட் அடித்து உலர வைத்தேன். மறுநாள் காலையில் விளக்கு பளிச் சென்று இருந்தது.
**

வன்முறையாக தன்னைக் கடத்துபவனை, என்ன செய்யலாம் என்று யோசித்து, சீட் பெல்ட் போடாமல் வரும் அவனை, எதிர்வரும் வளைவில் வேகமாக ட்ரக்கை திருப்புவதன் மூலம் வெளியே தள்ளிவிடலாம் என்று 'மலோரி' ட்ரக்கைச் செலுத்த, அது பெரும் விபத்துக்குள்ளாகிறது.

கிரிஃச்டியன் ட்ரக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும், 'மலோரி' தலைகீழே புரண்ட வண்டியின் உட்புறமாக , கால்கள் மாட்டிய நிலையில் தலைகீழாக தொங்கிய நிலையில் தேங்கிவிடுகிறாள்.

திறக்கவே முடியாத அளவிற்கு கதவும், எடுக்கவே முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்ட காலும், சேமடைந்த ட்ரக்கின்  நெளிவுகளில் அவளை சிறை வைத்தது. வலியுடன் குருதியும் சேர்ந்து ஒவ்வொரு நேரத்துளியும் மரண விசமாய் இறங்கியது அவளுக்கு. தூக்கி எறியப்பட்ட கிரிஃச்டியன் காயங்களுடன் பிழைத்துவிட்டான். அவனின் இருப்பு இவளின் பயத்தை அதிகமாக்கியது. ட்ரக்கை விட்டு வெளிவர முடியாத நிலையில், அவன் இவளை என்ன வேண்டுமானாலும் செய்வான்.

உணவிற்கு ஏதும் வழியில்லாத நிலையில், தன்னைக் கடிக்கவந்த காட்டெலியை அடித்து, சிகரெட் லைட்டர் உதவியுடன் சுட்டு தின்கிறாள். இருந்த கடைசிச் சொட்டு நீர்த்துளியும் தீர்ந்துவிட்டது. பகல் முழுதும் கழித்த நிலையில், குப்புற விழுந்திருக்கும் ட்ரக்கினுள் மல்லாந்து கிடக்கும் நிலையில், தனது டவுசரை சிறிது இறக்கி, தனது சிறுநீரையே பாட்டிலில் பிடிக்கிறாள். அதுவே அவளின் தாகம் தீர்க்கிறது.

தொடரும்......

Thursday, March 01, 2018

அஞ்சலி:பிரபல சாதிச்சங்க தலைவரும், மட அதிபருமான‌ இருள்நீக்கி சுப்பிரமணியம் aka செயேந்திரர் சுவாமிகள் மரணம்

கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ளே போய் வந்தாலும், பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியை தவிக்க விட்டுவிட்டு ஓடினாலும், இறப்பு என்பது அவர்களைச் சார்ந்த மக்களுக்கு இழப்பே.

அவர் சாதிக்காரார்கள் மற்றும் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஞ்சாவூருக்கு அருகே, "இருள்நீக்கி" என்ற ஊரில் எல்லாரையும் போலவே சாதரணக் குழந்தையாக  July 18, 1935 அன்று பிறந்தவர் திரு.சுப்பிரமணியம் அவர்கள். இவருடைய தந்தை by the power vested in him by Sanathanam, இவரை "அய்யர் சாதி" குழந்தையாக்கி, அதற்கு அடையாளமாக பூணூலும்
, பட்டையும் போட்டுவிடுகிறார்.

ந்தக்குழந்தையாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து கல்வி கற்று பெரிய நிலையை அடைய நிலைப்பார்கள் பெற்றோர்கள். பெரும்பாலான‌ குழந்தைகள் படித்து அரசுபதவிகளுக்கோ அல்லது தனியாரில் சிறப்பான பதவிகளுக்கோ போகும் காலத்தில், இவர் "வேதக் கல்வி" என்ற ஒன்றைப் படிக்கிறார். கோவில்களில் பூசை , புனசுகாரம், போன்றவற்றுக்கே பயன்படும் இந்தக் கல்வியால் , அதிக மணி(money)பார்க்க முடியாது என்பது உண்மை. தமிழ் பிடிக்காட்டியும், படிக்காட்டியும்கூட‌, ஆங்கிலம் நல்லாப் படித்து, அறிவாளியாகிவிடுவார்கள். சமசுகிரகம் வேலைக்காவாது என்று நன்கு புரிந்தவர்கள். இருந்தாலும் வேதம் சொல்லும் வர்ண‌ தீண்டாமையை அமுல்படுத்த வேதக் கல்வியின் அவசியத்தை உணர்ந்த இவர் அதை நன்றாக கற்கிறார்.


**
"வேதக் கல்வி" படித்து முடித்து  , அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கையில், காஞ்சியில் பிரபலமாக இருந்த அய்யர் சாதிச் சங்கமான‌ சங்கர மடத்தின் அப்போதைய மட‌அதிபர் திரு. சுவாமிநாதன் அவர்கள்( twitter handle போல காஞ்சிமட புனைபெயர் "சந்திரசேகர சர‌சுவதி") , தனக்கு கூடமாட உதவியாக இருக்க , தன் சாதிப் பையன் கிடைத்தால் நல்லது என்று தேடிக்கொண்டு இருந்தார். கேரளா நாயர் டீக்கடைக்கு அவர் சாதியில் இருந்து குழந்தைத் தொழிலாளர்களை அழைத்து வருவது போல, மளிகைக்கடை அண்ணாச்சி தூத்துக்குடி விருதுநகரில் இருந்து அவர் நாடார் சாதிப் பையன்களை வேலைக்கு வைப்பது போல,  காஞ்சி மடாதிபதி திரு . சந்திரசேகர சர‌சுவதி அவர்கள், தன் சாதிப் பையன் ஒருவனை மட வேலைக்குத் தேடிக்கொண்டு இருந்தார். அவரின் பார்வை எப்படியோ "இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர்" மீது பட்டுவிட்டது.

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் ஒரு 19 வயது இளைஞனாக‌ அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிக்கு , நல்ல காலத்தை நோக்கி பயணிக்கிறார் "இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர்". ஒரு விவசாயி வீட்டுக்கு  பண்ணைக்குப்போனால், கோவணம் கட்டி உழுவச் சொல்வார்கள், பரம்படிக்கச் சொல்லுவார்கள். "வன்னியர் சங்கம்" , "முக்குலத்தோர் சங்கம்" போல  காஞ்சி மடம், ஒரு சாதிச் சங்கம். அங்கே வேலைக்குப் போன திரு. சுப்பிரமணியம் அய்யருக்கு , ஒரு குச்சியும், அதில் கட்ட ஒரு துணியும், twitter handle போல ஒரு "செயேந்திரர்" என்ற‌ புனைப்பெயரும் கொடுத்து குச்சி சங்கரராக‌ உட்கார வைத்துவிட்டார்கள்.

**
19 வயதில் மடத்தில் குச்சிபிடித்த திரு. செயேந்திரர் அவர்கள், என்ன மன உளைச்சலுக்கு ஆளானாரோ தெரியவில்லை, 1987 ல் மடத்தைவிட்டு ஓடிவிடுகிறார். தன்னிடம் வேலைபார்த்த செயேந்திரர் ஓடிவிட்டதை அறிந்து பதறிப்போன மடாதிபர் , "சந்திரசேகர சர‌சுவதி" அவர்கள், நாடு தழுவிய தேடுதலுக்கு உத்தரவிடுகிறார். அதற்கிடையே தனக்கு உதவியாக "சங்கரநாரயணன்" என்ற குழந்தைப் பையனை,  "விசயேந்திர சரசுவதி" என்ற twitter handle போல புனைப்பெயர் & இன்னொரு குச்சி கொடுத்து வேலைக்கும் அமர்த்திக் கொள்கிறார்.

மூன்று நாட்களுக்குப்பிறகு ஒருவழியாக இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யரை (ஓடிவிட்டதால் twitter handle போல புனைப்பெயர் செயேந்திரர் பட்டம் பறிக்கப்பட்டு பழைய பெயருக்கு வந்துவிடுகிறார்?? ) தலைக்காவிரிப்பக்கம் கண்டுபிடிக்கிறார்கள்.
அவரிடம் மறுபடியும் குச்சியைக் கொடுத்து, அழைத்து வருகிறார்கள்.

ஏதோ பிரச்சனைபோல இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர் அவர்களுக்கு. அப்போது அவர் ஆரம்பித்த‌ "சன கல்யாணம்" என்ற ஒரு அமைப்பை சரியாகப் போகவில்லை. அதற்குப்பின்னால் வந்த "கல்யாண மாலை" கூட பிரபலமாகிவிட்டது.
**

ப்போது மடத்தில் மூன்று பேர் "பெரியவா" வேலை பார்க்கிறார்கள். "பெரியவா" என்பது அய்யர் பாசை. மதுரை பாசை, கோயம்புத்தூர் பாசை, திருநெல்வேலி பாசை என்று ஊருக்கு ஒரு வட்டார வழக்கு இருந்தாலும், எல்லா ஊரிலும் அய்யர் சாதிக்கு என்று ஒரு ஒரே வழக்குத்தான். பொதுப்பணித்துறையில் இருக்கும் "எஞ்சினியர்" பதவியை தரம் பிரித்து Junior Engineer, Assistant Engineer and Senior Engineer அழைப்பதுபோல, "பெரியவா" என்ற பதவியை , "பெரிய பெரியவா", "நடுப் பெரியவா" & "பாலப் பெரியவா" என்று
அழைக்க பணிக்கப்பட்டார்கள் அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

"நடுப் பெரியவா" வின் "சன கல்யாணம்" அமைப்பைப் பார்த்த "பெரிய பெரியவா", நடுப் பெரியவாவிடம் "பெரியவாக்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளமுடியாது" என்று சொல்லி இருப்பார்போல. "நடுப் பெரியவாவும்" அதை ஏற்று, "சன கல்யாண" வேலைகளை தீவிரப்படுத்தாமல் விட்டுவிட்டு ,வேறு வழிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
**

இந்த நேரத்தில் "அனுராதா ரமணன்" என்ற கதை எழுத்தாளர் ஒருவர், "நடுப் பெரியவா" தன்னிடம் காம இச்சையுடன் (lustful manner) பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அதற்கு ஒருபடி மேலே போய் "நீயெல்லாம் மனுசனா?" ("Are you human?") என்று கேட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்கிறது.

If You Cooperate, I Can Extend You All Benefits'
https://www.outlookindia.com/magazine/story/if-you-cooperate-i-can-extend-you-all-benefits/225947
//He then spoke in a lustful manner to me and expressed a desire for similar intimacy with me. I stood up, more shocked, and raised my voice and asked him, "Are you human?" //

**
பெரியவாக்களை "இப்படி மனுசனா?" என்று கேட்பது தவறு. அவர்கள் மனிதர்கள் அல்ல தெய்வங்கள். அய்யர் சங்க சங்கர தத்துவங்களின்படி, பெரியவாக்கள், அவர்களையே தெய்வம் என்று நம்புபவர்கள். அப்படியே நடந்துகொள்பவர்கள்.

"நானே கடவுள். சிலைகள் எல்லாம் சும்மா" என்று இவர்கள் நம்புவதாலேயே, இவர்கள் தலையில் பூக்களையும், சசுடியப் பூர்த்தி என்று தங்கக்காசுகளையும் கொட்டி,  இவர்களாகவே ஒருவருக்கொருவர் அர்ச்சனை செய்துகொள்வார்கள்.

அதற்கு ஒருபடி மேலே போய், இவர்கள் ஒரு காரியம் செய்வார்கள். அது நாத்திகவாதிகள்கூட செய்யாத ஒன்று.

ஒரு மனிதன் கோவிலுக்குப் போகிறான் என்றால், நடந்து போவான் அல்லது வசதிக்கு ஏற்றபடி காரில் போவான். என்ன வாகனத்தில் போனாலும், கோவிலுக்குள் நுழைவதற்குமுன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயபக்தியோடு கோவிலை அணுகுவான்.


கடவுள் பல்லக்கில்போக, மனிதன் அதைப் பார்த்து சாமி கும்பிடுவதுதான் வாடிக்கை. பெரியவாக்கள் அப்படியில்லை. கடவுளுக்கு தரிசனம் கொடுக்க இவர்கள் பல்லக்கில் போவார்கள். நாலு அப்பரண்டீசுகள் தூக்கிச் சுமக்க, இவர்கள் பகட்டாக கடவுளுக்கு தரிசனம் கொடுக்க கிளம்புவார்கள். கடவுளுக்கே கவுன்டர் கொடுக்கும் பெரியவாக்களே உண்மையான கடவுள் மறுப்பாளர்கள் என்று தோன்றும் சாமான்யனுக்கு.

***பெரிய பெரியவா மரணத்திற்குப் பிறகு, நடுப்பெரியவா "பெரிய பெரியவாக" பொறுப்பேற்கிறார் March 22, 1994 ல்.

பெரிய பெரியவா பெண்களை மட்டமாக நினைப்பவர். அதற்கு இரு உதாரணங்கள். இந்திராகாந்தியை மாட்டுக்கொட்டகையில் வைத்துப் பார்த்தது, வேலைக்குப் போகும் பெண்கள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள் என்று சொன்னது.

நடுப்பெரியவா அப்படியெல்லாம் இல்லை. பெரிய பெரியவாவைவிட பிராக்டிகலானவர். பல சீர்திருத்தங்களைச் செய்தவர். பெண்களிடம் வாஞ்சையானவர். அனுராதா ரமணனின் புகார் ஒரு உதாரணம்.

மேலும் இவரின் சமீபத்திய பேட்டியில்
பெண்கள் பற்றிப் பேசும்போது வாஞ்சையாகவே பேசியிருப்பார்.
https://youtu.be/1C5qW_nL8aA

நடிகை இரஞ்சிதாகூட இவர்மேல் வழக்கு போட்டிருந்தார்.
http://www.nithyananda.org/news/ma-ranjitha-files-criminal-defamation-against-kanchi-seer#gsc.tab=0
**
டுப்பெரியவா மற்ற சாதிச் சங்கத் தலைவர்களின் வழியைப் பின்பற்றி , கல்லூரி, பள்ளி என்று கட்டி அய்யர் சாதிச் சங்கமான சங்கரமடத்தை, பலவழிகளில் உயர்த்தியவர். அய்யங்கார் சீயர்கள் சோடாபாட்டில் கதை 2018ல் தான் சொல்கிறார்கள். ஆனால் இவர், பல வருடங்களுக்கு முன்னரே கொலைக்கேசில் உள்ளே போய் வந்தவர்.  "பெரியவா" என்ற சொல்லையே சிறப்பித்தவர். பகவான் அருளால் இவர்மேல் கயவர்கள் போட்ட‌ போட்ட‌ பொய் கேசு முடிவிற்கு வந்தது.
https://en.wikipedia.org/wiki/Sankararaman_murder_case

மேலும் , கடவுள்கள்னா கொலையும் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்தியவர்.
https://www.youtube.com/watch?v=iD9VHU-JCyU
**
பெரியவாக்கள் மட்டும் இப்படி இல்லை, இவர்களுடன் சகவாசம் வைத்துக்கொளும் மனிதர்களையும் வசியப்படுத்தி இவர்களின் குணங்களை பிரதிபலிக்கச் செய்வார்கள். செயகாந்தன் என்ற ஒரு எழுத்தாளர் இப்படித்தான் ஆனார். தமிழில் நல்ல கதைப் புத்தகங்களை எழுதிக்கொண்டு இருந்தவர், இவர்களின் சகவாசத்திற்குப் பிறகு "நக்கிப் பிழைக்கும் நாய்கள்" என்று தன்னை வளர்த்த தமிழைப் பார்த்தே சவுண்டு கொடுக்க ஆரம்பித்து "கர கர சங்கர" என்று புக் போட்டார். இன்னொரு உதாரணம் , எசு வீஈ சேகர் ஒரு பேட்டியில், "செயேந்திரர், மலத்தைச் சாப்பிடச் சொன்னா சாப்பிடுவேன்னு" சொன்னாரு.

பொதுவா விசுவசாத்தக்காட்ட "காலால் இட்ட வேலையை தலையால் முடிப்பேன்" என்றுதான் சொல்வார்கள். என்னமோ இந்தப்பக்கம் வந்தவர்கள் பலரை இப்படி "பீ",  "நக்கி பிழைப்பு" அளவில் திங் பண்ண வச்சிருக்கு.

**
ன்மீகவாதிகள் நிச்சயம் சொர்க்கம் போவார்கள்.
இவர் அய்யர் மட்டுமல்லாமல் சங்கர மடத்தில் CEO ஆக இருந்தவர். அவருக்கு இல்லாத சொர்க்கமா?

அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம். இவரைப்போல யாரும் இனிமேல் இப்படி 19 வயதில் வேலைக்குப் போய் இத்தனை இவ்வளவு சிரமப்படக்கூடாது.

பாவம் பகவான் படுத்தி எடுத்திட்டார் பெரியவாவை.

Image result for RIP