Sunday, April 15, 2018

மழையில் திருடிய மலர்:உடெலெங்கும் பெய்யும் மழை


த்து மைல் இலக்கு என்று ஆரம்பித்த மிதிவண்டிப் பயணம் 4 மைல் தொட்டதும் மழையில் கரையத் தொடங்கியது. இளையராசாவின் இசையுடன் தலையாட்டிச் சென்ற எனக்கு முன்னே, வானம் ஓவென்று கொட்டத்தொடங்கி இசையை அணைத்தது. என்னை நனைத்தது.

பெருங்காற்றுடன் கூடிய மழையில் இனிமேல் நனைய ஏதும் இல்லை. காதில் இருந்த earbud உயிரழந்துவிட்டிருந்தது. அதைக் கழற்றி , வண்டியில் இருந்த பையில் போட்டுக்கொண்டேன். தார்பாலின் போன்ற பொருளில் செய்யப்பட்ட மஞ்சள்பை என் மிதிவண்டியில் இருக்கும்.அதில் போட்டுவைத்தேன்.
**

ஒரு காரை வைத்துக்கொண்டு, நானும் என் மனைவியும் சமாளித்த காலங்களில், எனது அலுவலகப் பயணம் மிதிவண்டியில்தான். வீட்டில் இருந்து சில மைல் மிதிவண்டியில் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து, பேருந்து இறக்கிவிடும் இடத்தில் இருந்து சில மைல் மிதிவண்டிப் பயணம் செய்து அலுவலகம் அடைவேன். பேருந்திலேயே வண்டியை வைத்துக் கொள்ள வசதியுண்டு.


மழை , வெயில், பனி என்று எல்லாக்காலங்களிலும் பயணிக்க, அதற்கான சில ஏற்பாடுகள் என் வண்டியில் உண்டு. அலுவலகக் கணினிக்காக தனி தோல்பை உண்டு. மிதிவண்டியில் இரண்டுபக்கமும் பைகளுடன், அந்தக்காலத்தில் என்னைப் பார்த்திருக்கலாம் நீங்கள்.

பனியோ மழையோ, மிதித்துக்கொண்டே இருக்கவேண்டும் வாழ்க்கைச் சக்கரம் ஓட.
**

இன்று ஐந்து மைல் இலக்கை அடைந்து , திரும்ப ஆயத்தமானேன். இந்த இடத்தில் இருந்து இன்னும் ஐந்து மைல்கள் சென்றேயாகவேண்டும் நிறுத்திவைத்துள்ள என் காரை அடைய. எதிர்காற்றும், பேரிடிச்சத்தமும் , மின்னலுமாக மழை இசைக்க ஆரம்பித்தது.

"அமெரிக்க புகையிலைப் பாதை" (https://en.wikipedia.org/wiki/American_Tobacco_Trail) என்ற இந்த பாதை, பல வரலாற்றுத் தழும்புகளைக் கொண்டது.

1890 ல் போடப்பட்ட இரயில்பாதை. புகையிலைத் தொழில் கொடிகட்டிப்பறந்த நேரம். இந்தப்பகுதியில் இருந்து புகையிலையை எடுத்துச் செல்லவென்றே போடப்பட்ட பாதை. இப்போது தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு , ஓடுபாதையாக உள்ளது.

நடக்க , ஓட மற்றும் குதிரை சவாரிகளுக்கு பயன்படுகிறது இப்போது. பெரும்பாலும் அடர்ந்த மரங்களுக்கிடையே செல்லும் பாதை, ஆங்காங்கே முக்கியச் தார்ச்சாலைகளை சந்திக்கும்.
**

மெதுவாக இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொட்டும் மழையில், போட்டிருந்த பனியன் சுமையானது. ஒரு இடத்தில் நிறுத்தி, பனியனைக் கழற்றிவிட்டு, மிதிக்க ஆரம்பித்தேன்.

உடெலெங்கும் பெய்யும் மழை, எனக்கு இன்னும் உறவானது இப்போது.சின்ன ஓடை ஒன்றைக் கடக்கும் போது, கரையில் தென்பட்ட வெள்ளை மலரொன்றை பறித்து, மிதிவண்டியில் வைத்துக் கொண்டேன்.

இருள்மூடும் வேளையில், பெருமழையில் உறவாடிக் கொண்டே செல்லும் என் தனித்தபாதையை, மலர் அழகாக்கியது மேலும்.