Wednesday, December 14, 2005

நீ எப்படி கொல்லப்படுகிறாய் என்பதும் முக்கியம்

பதிவு 24: நீ எப்படி கொல்லப்படுகிறாய் என்பதும் முக்கியம்.

மரணம் என்பது அனைவருக்கும் வருவதுதான் அல்லது வரப்போவதுதான்.மரணம் விளைவிக்கும் துயரங்கள் பலவிதம்.எல்லா மரணங்களும் தனது நெருங்கிய சொந்தங்களுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பே. ஆனால் இயற்கையான மரணங்களை தவிர்த்து மற்ற மரணங்கள் (கொலை,விபத்து) சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.பொது மக்களில் ஒருவன் கொல்லப்பட்டால் அல்லது விபத்தில் உயிர் நீத்தால், அவன் எப்படி இறக்கிறான் எங்கே கொல்லப்படுகிறான், அவனை கொலை செய்தவர்கள் உலக அரங்கில் வகிக்கும் இடம் போன்றவைகளைப் பொருத்து அந்த மரணத்தின் விலை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.

பத்திரிக்கைகளும் மரணச் செய்திகளை அதன் விற்பனை விலையை பொருத்து வெளியிடும். மேலும் பல கொலைகளும் விபத்துகளும் ஒரு சிலருக்கு அரசியல் இலாபத்தையும் எதிர் தரப்பினருக்கு அரசியல் நஷ்டத்தையும் கொண்டுவரும்.சமீபத்தில் நான் பார்த்த இரண்டுவகையான கொலைகள் அரசியல் மற்றும் பத்திரிக்கைச் சமுதாயத்தில் பெற்ற இடங்கள் என்னை கவலை கொள்ளச் செய்கிறது.

கடமையில் இறந்துபோன மஞ்சுநாத் சண்முகம் பற்றிய செய்தி:
http://www.domesticatedonion.net/blog/?item=662

இன்று தினகரனில் வந்த செய்தி:
மணல் லாரி ஏற்றி போலீஸ் ஏட்டு கொலை.
http://www.dinakaran.com/daily/2005/Dec/14/flash/flasnews1.html

மேற்சொன்ன இரண்டு செய்திகளைவிட மணியப்பன் என்பவரின் மரணம் அரசியலுக்கும்,பத்திரிக்கைகு அதிக தீனி போடுவதால் அனைவரும் அந்த சோகத்தில் பங்கெடுக்கவே விரும்புகிறார்கள்.

மணியப்பனின் மரணம் தொடர்பான அரசியல் கூத்துக்களை ஆசிப் மீரான் இங்கே பட்டியலிடுகிறார்.
http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_27.html

****************


****************

Tuesday, November 29, 2005

தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

பதிவு23:தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

எனது அம்மா திருச்சியில் இருக்கிறார். இவர் எனது மனைவி வழி வந்த அம்மா அதாவது புரியும்படி தமிழில் சொல்லவேண்டுமானால் மதர் இன் லா. என்னைய முறைக்காதீங்க. யாராவது தனது சொந்தங்களை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போது தமிழில் சொல்கிறார்களா என்ன? இவுங்க தான் என்னோட யொவ்பூ. இவருதான் கஸ்பெண்டு, இவரு கசின் அப்படித்தான் நடைமுறை பேச்சு வழக்கம் உள்ளது. நீங்கள் அப்படி இல்லையென்றால் சந்தோசமே. தொலைக்காட்சி தொடர்களின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் மாமியார் என்றாலே எதோ வில்லி போல் இருக்கிறது.அத்தை என்பது மாமியாராகவும் இருக்கலாம் அல்லது அத்தையாக மட்டும் இருக்கலாம்.யாராவது மாமியாருக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் இருந்தால் சொல்லுங்கள். அதுவரை அம்மா என்று சொல்வதே எனக்குப் பிடித்திருக்கிறது.போனவாரம் வியாழன் இரவு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை வேளையில் நாங்கள் அவரிடம் பேசுவோம். மற்றபடி ஏதும் முக்கிய விசயம் என்றால் வார நாட்களிலும் பேசுவது உண்டு.இந்தியாவில் இருந்து திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் நமக்கு வருவது பயம் தான் . யாருக்கு என்னவோ? ஏதாவது பிரச்சனையா ? என்பது போல் எதிர்மறை எண்ணங்களே முதலில் வரும். அது என்னவோ தொலைதூரத்தில் வசிக்கும் போது வீட்டில் இருந்து வரும் "எதிர்பாராத" தொலைபேசி அழைப்புகள் சிறிது பயத்தையே கொடுக்கின்றன. அதுவும் திருச்சியே தனித்தீவு போல் கிடப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் நம்மை பயம் கொள்ளச்செய்கின்றன. நல்லவேளை "சன்" போன்ற சமாச்சாரங்கள் வீட்டில் இல்லை.இருந்தாலும் இங்கே உள்ள உள்ளூர் தொலைக்காட்சியிலேயே தமிழ்நாட்டில் பெய்யும் மழையையும், பேருந்து ஆற்றில் மூழ்கி கிடப்பதும் முக்கியச் செய்தியாக வந்து போனது. இவ்வாறான சூழ்நிலையில் அம்மாவின் அழைப்பு வந்தது கொஞ்சம் பயத்தையே கொடுத்தது.அவரிடம் பேசியபின்பு, அவர் பத்திராமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொஞ்சம் நிம்மதியோனோம்.

தொடர்ந்து பெய்த மழையில் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளம் (தரைத்தளம் Ground Floor) தண்ணீரால் ஆக்ரமிக்கப்பட்டது. குளியலறை,கழிப்பறைகளின் கழிவுநீர்க்குழாய்களின் மூலமாகவும் தண்ணீர் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சாமான் சட்டுகளை கட்டில்,பரண் மற்றும் உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு தெரிந்த வேறு நண்பர்களின் வீடுகளில் சென்று தங்கியுள்ளனர்.தெருவில் ஓடும் மார்பளவு தண்ணீரில் இவரும் ஒருவழியாக தப்பித்து அருகில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மழை,வெள்ளம் சேதங்களைப் பயன்படுத்தி ஆங்காங்கே திருட்டுகள் நடந்துள்ளது.இதன் பொருட்டு பலர் வீடுகளைக் காலி செய்யாமல் தண்ணீரிலேயே வாசம் செய்துள்ளனர். அல்லது வீட்டுக்கு ஒருவர் என்று வீடுகளைப் பாதுகாக்க இருந்துள்ளனர். எனது அம்மாவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்கள், பெரிய உதவிகளைச் செய்து உள்ளனர். காலி செய்துவிட்டுப்போன வீடுகளைக் கண்காணித்து திருட்டு போன்ற செயல்களில் இருந்து காத்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சமையல் செய்யமுடியாமல் இருந்த அக்கம் பக்கத்தவர்களுக்கு உணவு வழங்கியும், சில வீடுகளில் ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கிப் பொழுதைக் கழித்துள்ளனர்.இது போன்ற துயர் நேரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது நல்லது. எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல் , திருட்டுக் குற்றங்கள் நடத்துவோரை என்ன செய்வது?

இப்போது தமிழகத்தில் சமீபத்தில் நிலவும் சூழ்நிலை அசாதாரணமானது. சுனாமி வந்த பின்பும் இது போன்ற இயற்கைச் சீற்றங்களின் வீரியம் இன்னும் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.வெள்ள நிவாரணப் பொருட்கள் தருவது,பணம் தருவது போன்ற தற்காலிகத் தீர்வுகள் அவசியமானவைகளே.ஆனால், இதுபோன்ற காலங்களில் மக்கள் என்ன செய்யவேண்டும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.சென்னையில் நிவாரண உதவி வழங்குவதில் வந்த குழப்பத்தினால் சில அப்பாவி உயிர்கள் பலியாயின.பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் அல்லது அறியாமையால் அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் பேருந்துகள் தண்ணீரில் மூழ்கி பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. நடந்துவிட்ட இயற்கைச்சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசின்மீதோ அதன் செயல்பாட்டிலோ, குற்றம் குறை காண்பது எனது நோக்கமல்ல.இனிவரும் காலங்களில் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதே நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விசயமாகும்.

இயற்கையின் சீற்றமும் அதனால் ஏற்படப்போகும் மழையின் அளவு, புயலின் பாதை போன்றவை 99% கணிக்கப்படக்கூடியதே. சுனாமி வேண்டுமானால் நமது நாட்டுக்கு புதிய இதுவரை கண்டிராத இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். மழை,புயல் போன்றவை இப்போதுள்ள தொழில்நுட்பங்களால் துல்லியமாக கணிக்கப்படக்கூடியவையே. அமெரிக்காபோல் தினமும் ஒரு தட்பவெப்பம், பனி, சூறாவளி போன்ற தொடர் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நாம் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.தற்போது உள்ள சாலைகளையோ, ஏரி மற்றும் குளத்தையோ உடனே சீர்திருத்திவிடமுடியாது.உடைந்து போன கரைகளையும், சாலைகளையும் செப்பனிடலாமே தவிர அதனை முழுதுமாக சீர்திருத்திவிடமுடியாது. பலியான அப்பாவி உயிர்கள் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதவை.நல்ல திட்டங்களை 5 அல்லது 10 வருட தொலை நோக்குத்திட்டமாகப் பிரித்து பல காரியங்களைச் செய்ய வேண்டும்.இதற்கான நிதிநிலை (பட்ஜெட்) மக்களின் நலத்தை கவனத்தில் கொண்டு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்படி ஏதாவது செய்யவேண்டும். அரசியல் கட்சிககளின் மாற்றத்தால் பாதிக்கப்படாத ஒரு தொலை நோக்குத்திட்டமாக இருக்க வேண்டும்.


இயற்கைச் சீற்றங்கள் வருவதற்குமுன் கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.
இது ஏதோ ஒருமுறை செய்துவிட்டு பின்பு கிடப்பில் போடும் திட்டமாக இல்லாமல் உண்மையான அவசரகாலத் திட்டமாக இருக்க வேண்டும்.

வானிலை அறிக்கையை உண்மையான ஒரு ஆக்கபூர்வமான அறிக்கையாக மாற்றவேண்டும்.

புயலின் திசை, அதன் வீரியம் பாதிக்கப்போகும் பகுதிகள் போன்றவை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறப்படவேண்டும்.

மக்களை எச்சரிகை செய்ய சரியான ஊடகங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.அனைத்துப்பகுதி மக்களுக்கும் சரியான நேரத்தில், சரியான தகவல் போய்ச்சேரும்படி இது அமைக்கப்படவேண்டும்.

கிராம,வார்டு அளவில் இது போன்ற நேரங்களில் மக்கள் எங்கு தங்கவேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பவை முன்னரே திட்டமிடப்படல் வேண்டும். இது வருடம் ஒருமுறை சரிபார்க்கப்படல் வேண்டும்.மாற்றங்கள் இருப்பின் அதுபற்றி மக்கள் அறிவுறுத்தப்படவேண்டும்.

தங்குமிடங்கள் சரியான தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.தங்குமிடங்களில் உணவு,தண்ணீர்,மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.சரியான கால அளவிகளில் இவை சரிபார்க்கப்பட்டு, எப்போதும் நல்ல பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.(பள்ளிகள்,கல்லூரிகள் போன்றவை நல்ல இடங்களாகும்)

ஒவ்வொருஅரசு மற்றும் தனியார் பேருந்துகள்,கனரக வாகனம் போன்றவைகளில் சரியான தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவேண்டும்.


இயற்கைச்சீற்றங்கள் வரும் போது ,நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.

அரசு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.இதற்கென்று ஒரு செய்தித்டொடர்பாளர் இருக்க வெண்டும்.

அரசின் செய்தி அரசின் செய்தியாக அப்படியே மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும்.

அனைத்து (தனியார்,அரசு) ஊடகங்களும் அரசின் செய்தித்தொடர்பாளர் தரும் செய்தியை அப்படியே மக்களுக்கு ஒளி/ஒலி பரப்பவேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அரசு உண்மையச் சொல்லுமா என்று கேட்கவேண்டாம். நிச்சயம் ஆளும் அரசுகள் பீதியைக் கிளப்பும் (சன் வகையறா அல்லது தாத்தா ஆட்சியில் ஜெயா வகையறா) வண்ணம் தகவல் தராது.

நீண்ட காலத்திட்டங்களாக செயல்படுத்த வேண்டியது.

கண்மாய்/குளம்/ஏரி மற்றும் ஆறுகள் தூர்வாருதல்/சுத்தப்படுத்துதல்.

கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள கழிவு நீர்/மழை நீர் வெளியேற்றும் வழிகளைச் சீர் செய்வது.

தொழில் சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்போர் தங்களின் நிலத்தில் 1/3 பங்கு அப்படியே நிலமாக வைத்து இருக்க வேண்டும். அதாவது அந்த பங்கு நிலம் தார்,சிமெண்ட் கொண்டு பூசப்படாமல் (மூடப்படாமல்) இருக்க வேண்டும்.அதில் மரங்கள் வளர்ப்பதோ தோட்டங்கள் போடுவதோ ஊக்குவிக்கப்படவேண்டும்.

தனிநபர் இடங்கள் (வீடுகள்) 1/4 பங்கு நிலத்தை நிலமாக வைத்து இருக்க வேண்டும்.

நிலத்தடி நீருக்கு வரி வேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது நிலத்தில், தானாக கிணறோ, ஆழ்துளைக் கிணறோ வைத்திருப்பாரேயானால் அவர்கள் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.

அரசும் இதன் மூலம் வரும் வருமானத்தை வேறு வகையில் திருப்பாமல் நிலத்தடி நீர் மற்றும் அது சார்ந்த மூன்னேற்றத்திட்டங்களுக்கும், நீர் வளம்/கழிவு நீர் சார்பான திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.

இதுபற்றி மற்றவர்களின் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

இதுபோன்ற நெருக்கடிக்காலத்தில் கடமையாற்றும் அரசு,இராணுவம்,காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வ நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் வீரர்கள்.

படங்கள்: நன்றி தினகரன்

****************


****************

Friday, November 25, 2005

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

பதிவு22:பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

நான் இதற்கு முன் எழுதிய "பொங்கல் கொண்டாட்டம்-தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி " என்ற பதிவில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்.


1.ஈழத்தில் இது தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அங்கே இது தீபாவளியைவிட முக்கியத்துவம் பெறுகிறது.

2.தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொங்கலுக்கு அளிப்பதில்லை.

3.ஒரு சிலர் இந்துவாக இருந்தாலும் தமிழன் என்ற வட்டத்திற்குள் வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். திராவிடம் ஆரியம் போன்ற பிரச்சனைகளால் இருக்கலாம். என்பது எனது எண்ணம்.

4.கிறித்துவர்களில் RC பிரிவினர் இதனைக் கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் அப்படியே கொண்டாடவிட்டாலும் இது தமிழர் பண்டிகைதான் என்பதை எதிர்க்கவில்லை.(மற்ற பிரிவினர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்).

5.இஸ்லாமியர்கள் மட்டுமே இதனைக் கீழ்கண்ட காரணங்களால் கொண்டாடத் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்லாமியரின் நிலையையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட "
நல்லடியாருக்கும்" "நண்பனுக்கும்" நன்றி.

நல்லடியார் தனது புதிய தளத்தில் "பண்டிகைகளும் நல்லிணக்கமும்" என்று மூன்று பகுதிகள் எழுதியுள்ளார்.

http://nalladiyar.blogspot.com/2005/10/1.html
http://nalladiyar.blogspot.com/2005/10/2.html
http://nalladiyar.blogspot.com/2005/11/3.html

நல்லடியார் மற்றும் நண்பனின் பதில்களில் இருந்து ,பொங்கலைத் தமிழர் பண்டிகையாக ஏற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக இவர்கள் நினைப்பது.

1.கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம்.அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு பொருளைக் கொண்டு வழிபாடுதல்.

நான் சொல்ல வருவதே இதுதான்.பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.எதையும் வழிபாடு செய்யவேண்டாம். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகவும் எதுவும் செய்யவேண்டாம்.


2.பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது.

இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றியைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். இதே பொங்கலை, இஸ்லாம் நண்பர்கள் வைத்து அல்லாவுக்கும், அவர்கள் விரும்பும் (இஸ்லாம் நெறிப்படி) வேறு மனிதர்களுக்கோ பெரியவர்களுக்கோ நன்றி சொல்லிக் கொண்டாடலாம்.

3.பொங்கல் கொண்டாட்டத்தில் சூரிய வழிபாடு உள்ளது.

மீண்டும் நான் சொல்வது. சூரியனுக்கு (கடவுள் இல்லை...சூரியன் என்ற கோளுக்கு அது நமக்கு ஒளி தருவதற்காக.), விவசாயிக்கு, மாட்டுக்கு...என்று நன்றி சொல்வதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு கிடையாது. வழிபாடுகள் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

4.பொங்கலுக்கு முன்வரும் போகி இந்திரவிழா. அது எங்களுக்குப் பொருந்தாது. நல்லடியார் காட்டும் ஆதாரம் http://uyirppu.yarl.net/archives/000190.html

இந்த இந்திரக் கதை எப்படியோ தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது. சிலப்பதிகார இந்திரவிழாவிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதாகப் பேசப்படுகிறது. இது பற்றிய எனது எண்ணங்கள்.
போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html


அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:


இந்துக்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள், அதனால் நாங்கள் இஸ்லாமியர்கள் கொண்டாடத் தடை உள்ளதாக நினைப்பது தவறு.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும்.ஆனால் அதையே காரணம் காட்டி ஒரு நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

தமிழர் சார்பாக கருத்து தெரிவிக்க எனக்கு உரிமையை அந்த இரு தரப்பினரும் (குஷ்பூ ஆதரவு & எதிர்ப்பு) கொடுக்கவில்லை என்பதால், நான் என் சார்பாக மட்டும் இதனை எப்படிச் சிறப்பாக சாதி, மத அடையாளம் இல்லாமல் சமூக விழாவாகக் கொண்டாடலாம் என்பதை இன்னொரு நாள் பதிகிறேன்.


********************************

Wednesday, November 23, 2005

சாய்பாபாவின் விழா மனது கஷ்டமாய் இருக்கிறது.பதிவு 21: சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள்- மனது கஷ்டமாய் இருக்கிறது.

நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளும், ஆத்திகத்துக்குள்ளேயே இருக்கும் மத வேறுபாடுகளும், ஒரு மத அமைப்புக்குள்ளேயே இருக்கும் சாதிப் (அல்லது உட்பிரிவுகள்) பிரிவுகளும் மனித இனம் இருக்கும் வரைக்கும் தீராதவை. இது பற்றிய விவாதங்களும் முடிவு பெறாதவை. கோவில்களில் இருக்கும் பணம் சார்ந்த அணுகுமுறைகளும் கடவுளைக் கும்பிடுவதில் புகுத்தப்பட்டுள்ள பல இடியாப்பச் சிக்கல்களும் (சாமிய இப்படிக் கும்பிடனும், இப்படி பூசை செய்யாட்டி கெட்டது... ) ,சாதீய அணுகு முறைகளும், என்னை கோவில்களில் இருந்து வெகுதூரத்தில் வைத்து விட்டன.

மேலும் கடவுள் பற்றிய எனது நம்பிக்கைகள் சிறுவயதில் இருந்த அளவிற்கு இப்போது இல்லை.எனது முயற்சிகள் தோல்வி அடைந்து அலுப்பாய் இருக்கும் போது "கடவுள் நகரத்தில்" உள்ள எல்லாக் கடவுள்களுக்கும் முருகா என்றோ, இன்சா அல்லா என்றோ, ஓ ஜீசஸ் என்றோ ஒரு தூதுவிடுவேன். மற்றவர்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. :-). "இன்சா அல்லா " என்ற வார்த்தை நான் குவைத்தில் வேலை பார்க்கும் போது வந்து ஒட்டிக்கொண்டது. கிறித்துவப் பள்ளிகளில் படித்ததால் ஜீசமும் , சிறுவயதில் ராணிமுத்துக் காலண்டரில் பார்த்த அழகான உருவத்தால் முருகனும மனதில் ஒட்டிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிறருக்கு உதவுவதன் மூலம் மிக எளிதாக மன அமைதியை அடைய முடிவதால் கடவுளைவிட்டு வெகுதொலைவுக்கு வந்துவிட்டேன். குழந்தைகளை நல்வழிப்படுத்த இந்த (சாப்பிடாட்டி சாமி கோச்சுக்கும் என்பது போன்ற பய முறுத்தல்களுக்கு) நம்பிக்கைகள் உதவும் என்பதற்காகவே சில சமயங்களில் கோவிலுக்குச் செல்வது உண்டு.

இன்று சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க நேர்ந்தது. சுனாமியாலும் , மழை வெள்ளத்தாலும் இன்னும் பல இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும் பல குழந்தைகளைக் கொண்ட நமது நாட்டில், இப்படி ஒரு ஆடம்பர விழா தேவையா?. பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களும் சில சினிமா நட்சத்திரங்களும் செய்யும் இந்த ஆடம்பர விழாக்களை இவர் ஏன் செய்ய வேண்டும்?
படங்கள்: தினமலர்

இவர் கடவுளா, கடவுளின் அவதாரமா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.இவரையோ அல்லது வேறு எந்த மனிதர்களியும் கடவுளாகவோ அல்லது கடவுளின் அவதாரமாகவோ நான் பார்க்கவில்லை. இவர் ஏற்கனவே செய்துள்ள ஒரு தண்ணீர்த்திட்டம் மக்களுக்கு உண்மையாக உபயோகமானது. எப்படியோ ஒரு பெரிய கூட்டமும் பணமும்,செல்வாக்கும் இவருக்கு சேர்ந்துவிட்டது. இதை நல்லமுறையில் பயன்படுத்தி மேலும் பல நல்ல திட்டங்களைச் செய்யலாமே.அதுபோல் இவர் மனது வைத்தால் பல காரியங்கள் செய்யலாம்.

பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை. கொண்டாட்டங்கள் தேவைதான் ஆனால் கட்டவுட்டும்,அரசியல் தலைவர்களைப் போல கார் பவனியும் கொஞ்சம் என்னை வெட்கப்படவைக்கிறது. இவருக்கு முன்னோடியாக அறியப்படும் "ஸ்ரீடி பாபா" http://www.saibaba.org/ இந்த அளவுக்கு கொண்டாட்டங்களை விரும்பியவராகத் தெரியவில்லை.

சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க
http://www.dinamalar.com/photo_album/23nov2005/index.asp


பி.கு:
இவருக்கு ஆதரவாக http://www.sathyasai.org/ போன்ற எண்ணற்ற செய்தித்தளங்களும் ,இவர் செய்யும் செயல்களை விமர்சித்தும் பல செய்தித்தளங்களும் உள்ளது. இவரைப்பற்றி BBC ன் செய்திகள் பல முறை வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்டு விட்டது.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

மேலும் இவரது முன்னாள் பக்தர்கள் பல செய்திகளை இந்த இணையத்தளதில் பதிந்துள்ளார்கள்.http://www.exbaba.com/

********************************

Monday, November 21, 2005

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

துன்பங்கள் (சுனாமி போன்ற இயற்கைத் துயரங்கள்) என்று வரும் போது நாம் அனைவரும் நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நமது விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக , அடுத்தவர் கலந்து கொள்ள முடியாத, கலந்து கொள்ள விரும்பாத குட்டிக் குட்டிக் தீவாகவே உள்ளது.மேலும் ஒருவர் கொண்டாடும் சாதி,மத விழாக்கள் அடுத்தவர்களுக்கு பிரச்சனை தருவதாகவோ ,சீண்டுவதாகவோ பல சமயங்களில் உள்ளது. இந்த தவறுகளை எல்லாம் சாதி,மத வேறுபாடுகள் உள்ளவரை முற்றிலுமாக நம்மால் நீக்க முடியாது.

மனித வாழ்விற்கு கொண்டாட்டங்கள் மிகவும் அவசியமானவை, அவைதான் மனித வாழ்வை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பவை என்று நம்புகிறவன் நான். நீங்களும் இதனை ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.நாம் அனைவரும் சேர்ந்து, சாதி மத சமய வேறுபாடு இல்லாமல் சந்தோசமாக விமர்சையாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாள் இல்லை, என்பது எனது நெடுநாளைய ஆதங்கம். இவ்வாறு கொண்டாடுவதற்கு நாம் புதிதாக ஒரு பண்டிகையை கண்டுபிடிக்கத்தேவை இல்லை. அது அநாவசியமானதும் ஆகும்.

நமக்கு இதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இருந்தும் அது அவ்வளவாக கொண்டாடப்படுவது இல்லை. அதுதான் பொங்கல் பண்டிகை.

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.

பொங்கல் திருநாள் ஒரு அறுவடைத் திருநாள்.

பொங்கல் திருநாள் நமக்காக உழைத்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

பொங்கல் திருநாள் வயலுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் நாள்.

இந்துக்கள் (யார் இந்துக்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். வேண்டுமானல் இந்துக்கள் என்று தன்னைத்தானே நம்புபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.) என்று சொல்லப்படுவர்களைத் தவிர வேறு யார் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து இதனைக் கொண்டாடுகிறார்கள்? கிறித்துவ , முஸ்லிம் மதங்களில் ஒரு சிலர் இதனைத்னைத் தங்கள் விழாவாக,தமிழ் விழாவாக நினைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கும், தீபாவளிக்கும்,மற்ற சமய விழாக்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் யாரும் இந்த நன்றித் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு கொடுப்பது இல்லை.நான் விரும்புவது இதுதான். சாதி,மத,சமய மற்றும் எந்தவிதமான வித்தியாசங்களும் இல்லாமல்,ஒவ்வொரு தமிழனும் வெகு விமர்சையாக இந்த விழாவைக் கொண்டாட வேண்டும்.

இதில் எங்கு வந்தது சாதி, மதச்சடங்குகள்?
தமிழர்கள் அனைவரும் ஏன் இந்த விழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடக் கூடாது?

உங்களின் கருத்துகளை அறிய ஆசை.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html
********************************

Friday, November 18, 2005

பதிவு 19: இராஜாமணி (UTD) guilty in Waterview rape

நேற்று இரவு abc தொலைக்காட்சியில் Primetime என்னும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அமெரிக்க கல்லூரிகளில் மற்றும் Dorm எனப்படும் கல்லூரி விடுதிகளில் நடக்கும் திருட்டு,வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களைப் பற்றிக் காண்பித்தார்கள். நம்மூர் போன்று ராகிங் கொடுமை போல் இது அமெரிக்க மாணவர்களையும் ,பெற்றோர்களையும் கவலை கொள்ளச் செய்யும் செய்தி.


முதலில் பார்த்தது ஒரு கல்லூரி மாணவியிடம் காரைப் பறிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கடுமையான தலைக்காயம் அடைந்து இப்போது அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு 8 வயது குழந்தைபோல் பேச எழுத கற்று வருகிறார்.


இரண்டாவது சம்பவத்தில் ஒரு மாணவி அவளது அறையிலேயெ உயிருடன் கொளுத்தப்பட்டு விடுகிறார். இதற்கு காரணமானவன் கல்லூரிக்குச் சம்பந்தம் இல்லாத வெளிநபர்! எப்படி உள்ளே வந்தார்? கல்லூரி பாதுகாப்பு சரியில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் வாதம். பாதிக்கப்பட்ட பெண்ணே அவனை உள்ளே அழைத்து வந்து இருக்கலாம் என்பது வேறுசிலரின் வாதம். எது எப்படியோ இது கொடுமை.


மூன்றாவது பார்த்த சம்பவம்தான் நான் இதை இங்கே எழுதக் காரணம்.
தொலைக்காட்சியில் வந்த மூன்றாவது சம்பவத்தின் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் இந்தியர்.அவர் செய்த குற்றம் தன்னுடன் சேர்ந்து படிக்க வந்த (Join Study ??) தனது சக வகுப்பு தோழியை மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது. அவரது பெயர் "பிரதாப் இராஜாமணி" (University of Texas at Dallas) .

பார்க்க இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். இவர் செய்த அனைத்தையும் ஒத்துக் கொள்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணும் (Amy Smith) இந்தியராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.இவர்கள் இருவரும் இந்தியாவில் கல்லூரிக் காலத்தில் இருந்தே நண்பர்கள் என்று இருவமே ஒத்துக் கொள்கிறார்கள். இராஜாமணி இவர்களின் உறவைக் காதல் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணோ இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.


"..Smith testified that Rajamani, a "best friend" she knew from her college days in India..."
Rajamani maintained throughout the trial that his relationship with Smith had been an intimate one, while the victim maintained the two were "best friends," but not intimate.


இராஜாமணி தான் செய்த செயலுக்கு கூறும் காரணம்தான் என்னை நோகடித்தது.


Rajamani testified he planned the attack after learning of Smith's impending arranged marriage....."In Southern India ... they marry them if someone does what I did, rape," he said. "I was looking for an opportunity to convince her parents for this particular marriage.

வன்புணர்வின் மூலம் திருமணம் சாத்தியமாகலாம் என்று ஊடகங்களின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் சொல்லிவந்த குப்பையான கருத்துக்கள் இவரை இவ்வாறு எண்ண வைத்துவிட்டது.இவர் தனது நெடுநாளைய தோழிக்குச் செய்த நம்பிக்கைத்துரோகம் இவரை ஒருநாளாவது வருத்தமடையச் செய்யும்.

மேலும் படிக்க:
http://www.utdmercury.com/media/paper691/news/2005/07/18/WebExclusive/Rajamani.Guilty.In.Waterview.Rape-967777.shtml

Tuesday, November 15, 2005

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

பதிவு18:போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

போகிப் பண்டிகை பற்றி யாராவது ஆராய்ச்சி செய்து சொன்னால் நல்லது. எனக்குத் தெரிந்து யாரும் எங்கள் கிராமத்தில் வேண்டாத பொருட்களைத் தீ வைத்துக் கொழுத்தி புகை போட்டுப் பார்த்ததில்லை. "போகி" என்ற வார்த்தை தமிழ் போல் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த ஹிந்தி அறிவில், இரயில் பெட்டியைத்தான் போகி என்று சொல்வார்கள் ஹிந்திக்கார மக்கள். அப்புறம் இது எப்படி தமிழ்நாடு வந்து இப்படிக் குப்பையாய் நாறுகிறது? இது பற்றி கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் அவர் கீழ்க்கண்டவாறு சோதிடம் சொல்கிறார்.

"Bogi festival or Bhogi is the first day of Pongal and is celebrated in honor of Lord Indra, "the God of Clouds and Rains". Lord Indra is worshiped for the abundance of harvest, thereby bringing plenty and prosperity to the land. Thus, this day is also known as Indran"

http://www.familyculture.com/holidays/pongal.htm
http://www.pongalfestival.org/bogi-festival.html

இந்திரன் கொஞ்சம் விவகாரமான ஆளு. குப்பைய எரிக்கிற சடங்கு அவருக்குப் பொருந்தும்.அவருக்கெல்லாம் மாலை போட்டா நன்றி சொல்ல முடியும்? ஆனா மழைக்கும் இந்த புகை மூட்டத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
குப்பைய எரிக்கிற, இந்த குப்பை-புகைத் திருவிழாவ சென்னையில் இருக்கும் போது பார்த்து "புகைந்து" இருக்கிறேன். அதிலும் குப்பை கிடைக்காத பட்சதில் இந்த
இ(ய)ந்திரமயமான குப்பை/பழைய பொருள் எரிப்புச் சடங்கை நிறைவேற்றுவதற்காக வாகனங்களின் (சைக்கிள், மோட்டார் சைக்கிள்) பழைய டயர்களை எரித்து புகை போடுவார்கள்.கிராமத்தில் பெரும்பாலான மக்கள் "புது துணிகூட கிடைக்கும் பழைய துணிக்கு எங்கே போவது" என்று பழைய துணியை சேர்த்து வைத்ததைத்தான் பார்த்து இருக்கிறேன். எங்கள் அம்மா கிழிந்து போன பழைய துணிகளை, ஒரு மஞ்சப் பையில் அடைத்து தைத்து, பல தலையணைகளை செய்து வைப்பார்.

துணிகள் நல்ல உபயோகத்தில் இருக்கும் போது எங்களால் போட முடியாமல் போய்விட்டால் (வளர்ச்சி காரணமாக) அது நெருங்கிய சொந்தங்களுக்கு போய்ச் சேரும். இப்போது நான் அமெரிக்காவில் இருந்தாலும் , நான் என் அம்மாவிடம் பேசும் போது ,ஒவ்வொரு முறையும் அவர் "பழைய துணியை கீழே போடாமல் எடுத்துவாடா" என்று சொல்லுவார்.

13 வயசில் நான் போட்ட எனது முதல் "பேண்ட்" எனது அத்தை மகனின் பழைய "பேண்ட்" தான். எனது அத்தைக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. எங்கள் வீட்டில் எனது அக்கா, அண்ணன் அப்புறம் நான். பள்ளிப் புத்தகங்ளில் ஆரம்பித்து மறு உபயோகத்திற்கு தோதாக உள்ள அனைத்து பொருட்களும் ஒரு முழுச் சுற்று சுற்றிவிடும். இதில் எனது அத்தை மகள் தான் கடைசி. பாவம்,அவளுக்குப் போகும் போது புத்தகம் கிழிந்து நொந்து நூலாகி இருக்கும். இடையில் அரசாங்கம் பாட அட்டவணையை மாற்றிவிட்டால் அந்தச் சுற்றில் வருபவர்களுக்கு மணக்க மணக்க புதுப் புத்தகம் கிடைக்கும்.


அமெரிக்கா வந்தபின்பு இங்குள்ள "Yard Sale" (Garage Sale) எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமான விசயம். சொந்த வீடு உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் அவர்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை Sofa ல் ஆரம்பித்து உள்ளாடைகள் வரை அனைத்தையும் குறைந்த விலைக்கு விற்பார்கள். மறுஉபயோகத்திற்குத் தோதான பொருட்களை குப்பைத்தொட்டிக்கு அருகே பத்திரமாக விட்டுச் செல்வார்கள். எங்கள் அலுவலகத்தில் "Scrap Swap" நடக்கும் (Give one scrap and take one scrap).நமக்குத் தேவையில்லாத அல்லது நாம் பயன்படுத்தி முடித்த பொருட்கள் பிறருக்குத் தேவைப்படுவதாய் இருக்கலாம். Recycling என்பதை இங்கே அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம். குப்பைக்கு அருகில் விடப்பட்டுள்ள பழைய பொருட்களை யாருக்கும் தெரியாமல் இரவில் எடுத்து வரும் நமது மக்களையும் , பகல் நேரத்தில் எந்த குற்றவுணர்வோ, கூச்சமோ இல்லாமல் பொறுமையாக அதேவகைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அமெரிக்க மக்களையும் பார்க்கலாம்.


Yard Sale செய்வது ஒரு கலை. இதை விளம்பரப்படுத்த , விற்பனை பற்றி அறிந்து கொள்ள என்றே பல இணையத் தளங்கள் உள்ளன.

Garage Sale Hunter
http://www.garagesalehunter.com/
How To Operate A Successful Garage Sale
http://www.ifg-inc.com/Consumer_Reports/GarageSale.shtml
Garage Sale Tools
http://garagesaletools.com/

அதே போல் "Yard Sale" ல் பொருட்கள் வாங்குதையே பொழுது போக்காகக் கொண்ட நமது மக்களும் உண்டு. நான் எனது மூத்த பையனுக்கு வாங்கிய Crib (குழந்தைக் கட்டில்) எனது பக்கத்து வீட்டு அமெரிக்கரிடம் இருந்து இலவசமாகப் பெற்றது. அதே போல் மற்றொரு தமிழ் நண்பரிடம் இருந்து , அவரது பையனுக்குச் சிறியதாகிப்போன உடைகளை எனது மகனுக்குப் பயன் படுத்தியுள்ளோம்.

இங்குள்ள சில நண்பர்களுடன் எங்களுக்குள் பழைய துணிகள் , பழைய விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் மறு உபயோகம் செய்து கொள்வதில் எந்த தயக்கமோ,கூச்சம், குற்றவுணர்வோ ஏற்பட்டது இல்லை. இப்போது எங்களிடம் பல குழந்தைச் சாமான்கள் சேர்ந்து விட்டது. பையனுக்கு 4 வயதாகிவிட்டதால் அவனின் பொருட்களும், மகளின் ஒரு வயது விளையாட்டுப் பொருட்களும் பல உண்டு. எனக்குத் தெரிந்து நெருங்கிய வட்டத்தில் யாருக்கும் தேவை இல்லாததால் ,இதை வேறு சில தமிழ் நண்பர்களிடம், அவர்களுக்கு வேண்டுமா ( அவர்கள் அந்தப் பொருட்களின் தேவைக் காலத்தில் உள்ளார்கள்) என்று கேட்டால், யாரும் வேண்டும் என்று சொல்வது இல்லை. நாங்கள் எல்லாத்தையும் இங்குள்ள பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க உள்ளோம்.நம் மக்கள் ஏன் இந்த விசயத்தில் இப்படி இருக்கிறார்கள்.

அது அவரவர் உரிமை, பழக்க வழக்கம் என்றாலும் அதற்கான காரணங்களாக நான் நினைப்பது.
**முதல் குழந்தைக்கு பழைய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.
**பழைய பொருட்களைத் தெரிந்தவரிடம் வாங்குவது தவறு. (கார் இதற்கு விதி விலக்கு!)
**பழைய பொருட்களை வாங்குவது கெளரவக் குறையானது.
**நம்மை நாலுபேர் தப்பாக நினைத்துக் கொள்வார்கள்.
**சாஸ்திர சம்பிரதாய விசயங்கள்...

பிச்சைக்காரர்களும், வீட்டு வேலைக்காரப் பெண்களும்தான் நம்மூரில் பழைய துணிகளைச் சந்தோசமாப் பெறுபவர்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் இந்தப் பழைய துணியை(பொருட்களை) நல்ல முறையில் சுத்தமாக அடுத்தருக்கு கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியே தேவைப்படுபவர்களுக்கு நாம் நல்ல முறையில் இந்த உதவிகளைச் செய்ய முயன்றாலும், அவர்கள்(உதவி பெறுபவர்கள்) கேட்ட நம்மைத் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து பலர் இந்த வகை உதவி செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.

1.இந்த பழைய பொருள்/குப்பை எரிக்கும் இந்திரச் சடங்கு தேவையா?
2.இது எப்போது இருந்து தமிழ் கலாச்சாரமாக மாறியது?
3.குப்பை எரிப்பினால் வரும் புகைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்?
4.இந்த "இந்திரன்" சாமி எப்படி இந்தக் குப்பையோட சம்பந்தப்படுறார்?
5.இந்துக்களைத் தவிர யாரும் இப்படிக் குப்பைத் எரிப்பு போன்ற பண்டிகைகளை வேறு எங்கும் நடத்துகிறார்களா?


தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


****************


****************

படங்கள்:
நன்றி Hindu மற்றும் பிற இணையப் பக்கங்கள்.

Monday, November 14, 2005

17: ஜம்மு-காஷ்மீர் வரைபடம்(Map) குழப்பும் இந்தியா


இந்தியனாப் பொறந்த ஒவ்வொருவனுக்கும் இன்னமும் விடைதெரியாத அல்லது குழப்பமான கேள்வி எதுன்னு கேட்டா இந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றிய வரைபடம் முக்கியமா இடம் பெறும். அப்படி உங்களுக்கு இது அவ்வளவு முக்கியமாத் தெரியலைனா ப்ளீஸ் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க. உங்களுக்குப் பிடிக்காதத படிச்சுட்டு சும்மா என்னைய போட்டு தாக்கக்கூடாது.இப்போதைக்கு ஜனரஞ்சகமான, சுவாரசியமான விவாதம் குஷ்பூ பற்றியதுதான் அதப்பத்தி இங்க நிறையப் படிக்கலாம். இதைவிடக் கொடுமை என்னன்னா இந்த திருப்பதி சாமி சும்மா இருந்தாலும் அவரோட அடிப்பொடிகள் பெண்கள் பூ வச்சா சாமி கோச்சிக்கும் அப்படீன்னு சொல்லியிருக்கிறதா ஒரு கேள்வி. குஷ்பூவைப் பத்தியோ அல்லது வெறும் பூவைப் பத்தியோ நம்ம அறிவுக்கு ஒரு மண்ணும் புரியல. சுகாசினி மேடம் வந்து குட்டைய குழப்புறாங்க . வழிதவறி இங்க வந்தவங்கள் எல்லாம் உஷாவோட பதிவுல போயி குஷ்பூ ஜோதில ஐக்கியமாயிருங்க. பின்னால குஷ்பூ முதலமைச்சரா வந்தாலும் வந்துருவார்.

சரி இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.தமிழ் இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், யாகூ குழுமங்கள் போன்ற பலவற்றில் இருக்குற குழாச்சண்டை தெருச்சண்டை போதாது என்று கருத்து என்ற புதிய விவாதத் தளம் வந்து இருக்கிறது. நாம இங்கே செய்ற விவாதங்கள் நமது முன்னோடிகளான சட்டசபை, மக்களவை உறுப்பினர்களின் விவாதங்களைவிட படு சுவராசியமாக போய்க்கொண்டு இருக்கும் போது இதற்கென்றே ஒரு விவாதத் தளமா? எது எப்படியோ அவர்களும் அவர்கள் பங்குக்கு பேசிவிட்டுப் போகட்டும். தமிழன் பேசாம இருந்தா டீக்கடை பிஸினஸ் எல்லாம் படுத்திடும் . அப்புறம் என்னையமாதிரி எழுதற ஆளுங்களை யாரு படிக்கிறது?

கருத்து இணையத்தளத்துல வந்திருக்கும் இந்தியாவின் வரைபடம் தப்பும் தவறுமா இருகிறதா நம்ம ரவி புலம்பியிருக்கார். அவர் கருத்துவின் இந்தியா படம் பற்றி புலம்பினா நம்ம பத்ரி "...இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை..." அப்படீன்னு சொல்கிறார்.


ரொம்ப நாளைக்கு முன்னேலேயே நம்ம இளவஞ்சி இந்த வரைபட குழப்படிகளை தனது "இருவகை இந்தியா"
என்ற பதிவுல சொல்லிய்ருந்தார். அப்போதே நான் இது பற்றி அவரது பதிவில் நான் எனது கருத்தைச் சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு.

இந்தியாவில் பிறந்த/ கல்வி பயின்ற / ஓரளவு இந்தியாவைப் பற்றி அறிந்த அனைவரும் முழுமையான தலையுடன் கூடிய இந்தியாதான் உண்மையான இந்தியா என்று நம்புவார்கள். எங்காவது தலையற்ற இந்தியாவைப் பற்றிப் படிக்க/பார்க்க நேர்ந்தால் இவர்களுக்கு(இவர்களில் நானும் ஒருவன்) கோவம் வருவது இயல்பு. இந்தக் கோவச் சமாச்சாரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்திவிட்டு உண்மை என்ன என்று அறியவேண்டுமானால் நமக்கு உள்ள ஒரே வழி நமது அரசாங்கத்திடம் கேட்பது. கேட்பது என்ன அவ்வளவு சுலபமா என்ன? யாருகிட்ட கேட்கிறது? சும்மா நாட்டை விட்டு அனாதையா ஊர்சுத்திக்கிட்டு இருக்கிற என்னைய மாதிரி பரதேசிகளுக்கெல்லாம் இணையமே உலகம். அதில் வரும் தகவல்களே உண்மை.


இந்தியாவின் புதிய இணையவாசல் http://www.india.gov.in/ ல் தேடியபோது, அவர்கள் அட சும்மா போய்யா POK (Pakistan Occupied Kashmir ) என்பதெல்லாம் கதை, நம்ம தலை நம்மகிட்டத்தான் இருக்கு. வேணுமின்னா நீயும் வந்து நிலம் வாங்கிக்க அப்படீன்னு சொன்னாங்க. http://www.india.gov.in/maps/jammu.php அடடா எவ்வள்வு சுலபமா போச்சு நம்ம கேள்வி. அப்படீன்னு சந்தோசப்பட்டுக்கிட்டேன். இது போன்ற இணையத்தகவல்களால் என் போன்றவர்களுக்கு எவ்வளவு வசதி. சும்மாவா பின்னே? சின்ன வயசில தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் பார்த்த , படித்த இந்தியா உண்மைதான். POK எல்லாம் சும்மா டுபாக்கூர் மேட்டர் என்று தெரியவரும் போது எவ்வள்வு மகிழ்ச்சி. நம்ம ஆசை அதோட நின்னு இருந்தா பரவாயில்லை. ஆசை யாரவிட்டது. தமிழ் நாட்டுல யார் யாரோ கட்சி ஆரம்பிக்குறாக, எல்லாரும் அகில இந்திய கட்சியாத்தான் ஆரம்பிக்குறாங்க. தமிழ் நாட்டுல இருக்குற ஒரு அகில இந்திய கட்சியில இருந்து நாளைக்கே எனனை ஒரு M.P யாத் தேர்ந்துடுக்க விருப்பம் தெரிவிச்சா சும்மா தொகுதிக்காக லோக்கல் மக்களிடம் சண்டை போடக்கூடாதுன்னு ஒரு பரந்த
மனப்பான்மையில் ஜம்மு-காஷ்மீர் பக்கம் ஒரு தொகுதியைத் தேடினால் அதைவிட எனக்குப் பேரானந்தம். ஆமா POK ல நம்ம நிக்கலாம். நம்ம தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ஜே. அவர்கள் இணையத்தளத்துல, POK உட்பட எல்லாப் பகுதியையும் தொகுதியாப் பிரிச்சு வச்சுருக்காங்க.இப்படியே இந்த ஆசைய நான் நிறுத்தி இருந்தாப் பரவாயில்லை. கொஞ்சம் பேராசைப்பட்டு, நம்ம M.P தொகுதில (அதாவது உயிருக்குப் பயப்படாம நான் இந்த POK பகுதில நின்னு ஒருவேளை வெற்றி பெற்றால்) எத்தனை M.L.A இருக்குறாங்க அப்படீன்னு பார்க்க ஆசைப்பட்டதுதான் தப்பாப் போச்சு. பின்ன என்னங்க ஒரு Assembly Constituency கூட இந்தப்பக்கம் கிடையாது ,தமிழ்நாட்டுக்கே ஓடிப்போயிடு அப்படீன்னு அதே தேர்தல் ஆணையம் சொல்லுது. ஒரு பக்கம் M.P தொகுதி இருக்குன்னு சொல்றாங்க. மறுபக்கம் ஒரு Assembly Constituency யைகூட POK பக்கம் காட்ட மாட்டேன்னு சொல்றாங்க. .( http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm , http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm )


இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா என்னையப் போட்டு குழப்பினபடியால் , தீவிரவாதிகளின் குண்டுக்குப் பயப்படாவிட்டாலும் நம்ம அரசாங்கம் படுத்தும் இந்தத் தகவல் குழப்பத்துக்குப் பயந்து கொஞ்ச நாளைக்கு ஜம்மு-காஷ்மீர் M.P ஆசைக்கு மூட்டை கட்டி வைக்குறதா இருக்கேன்.

யாருங்க இதப் படிச்சுட்டு கருத்து சொல்லாமப் போறது. ப்ளீஸ் நம்ம தலை எங்க, எப்படி இருக்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்.

காஷ்மீர் சம்பந்தமான சக வலைப்பதிவர்களின் கருத்துக்கள்:
தருமியின் "MY KASHMIR PROBLEM"
http://data-entry-bpo.com/data-entry/2005/08/03/my-kashmir-problem/

தமிழ் சசி யின் காஷ்மீரின் விடுதலைக் கட்டுரைகள்
http://thamizhsasi.blogspot.com/2005/06/1.html
http://thamizhsasi.blogspot.com/2005/07/2.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/3.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/4.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/5.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/6.html


என்னால் முடிந்தது இந்தக் கடிதத்தை அனுப்பியது மட்டுமே
-----------------------------------------------------------------

Greetings NIC Team (National Informatics Centre),
I am very happy to see our new website http://www.india.gov.in/. It looks great. I want to thank and appreciate your work. NIC team deserves lot for this for great work.

I was comparing the information found in ECI ( Election Commission of India) pages and new website http://www.india.gov.in/ and I got confused. I wanted to bring this to your knowledge.

This is about the Jammu & Kashmir Map that you put on this site.Jammu & Kashmir map displayed in this http://www.india.gov.in/maps/jammu.php page does not match with the Election Commission's Map.

Conflict found within the ECI webpage information.

ECI website agrees that POK is not a part of INDIA. http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm

There is NO Assembly Constituency defined in this POK area by ECI. http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm .

But for some reason they (ECI) have highlighted the POK area for Parliamentary Constituencies in a different page. http://eci.gov.in/ElectionMaps/PC/S09/index_fs.htm

Conflicts between ECI and www.india.gov.in page.

As per ECI map POK is a separate area and not a part of our country. Also we do not see any Assembly Constituencies in that area. Your site http://www.india.gov.in/maps/jammu.php
shows that POK is within the (part of) Jammu & Kashmir state.I do not want to debate on the Jammu & Kashmir issue and it is not my point. But as a citizen of India I expect that our website should show the correct information. There should not be any conflict between two government WebPages.

Since http://www.india.gov.in is the India's main Website, I would request you to fix this conflict. ECI website is maintained by CMC http://www.cmcltd.com/ may be you can work with them to put a SOLID and correct information about our country.
=============================================

மேலே கண்ட கடிதம் Feedback option வழியாக "http://mit.gov.in/" க்கும் அனுப்பினேன். மேற்கொண்டு email வழியாக CMC ( lh_corp@cmcltd.com ) மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் ( feedback@eci.gov.in) அனுப்பிவிட்டேன்.


********************************

Friday, October 28, 2005

பதிவு16: தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


மொத மொத இந்த அமெரிக்காவுக்கு கையில
இரண்டு சூட்கேசோட வந்து, டெக்சாஸ் மாகாணம் Dallas அருகில் இருக்கும் Irving என்ற ஊரில்தான் "பெஞ்ச" தேய்ச்சுக்கிட்டு இருந்தோம். இருந்தோமுன்னா அந்த அபார்ட்மெண்ட்டுல 8 பேர் இருந்தோம். எல்லாரும் அமெரிக்கா கனவுகளோட "ஜாவா" கப்பல்ல ஏறி வந்த மக்கள். ஜாவாவ அரைகுறையாப் படிச்சுட்டு டாட்காம் புண்ணியத்துல எப்படியோ எங்களுக்கும் விசா கிடைச்சு ( அதான் விசா விசா மட்டுமே வேலை இல்லை ) வந்து சேர்ந்து ஆறு வருசமாகப் போகிறது. என்ன இருந்தாலும் எனக்கும் என் நண்பனுக்கும் Irving -ல் ஏற்பட்ட Halloween அனுபவம் மறக்க முடியாதது.

நாங்க இருந்த அந்த அபார்ட்மெண்ட் தரைத்தளதில் இருந்தது. நாங்கள் வந்து இரண்டுவாரமே ஆகி இருந்தது. எங்களை அழைத்து வந்த கன்சல்டிங் கம்பெனிக்காரர்கள் எங்களை " அநாவசியமாக வெளியில் போகக்கூடாது. அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பலர் இந்த அபார்ட்மெண்ட்டில் தங்கி இருப்பதால் ,அபார்ட்மெண்ட்காரர்கள் எதாவது நடவடிக்கை எடுக்கக்கூடும்" என்று எச்சரித்து இருந்தார்கள். அதனால் சமைப்பது,இரவில் மட்டும் போய் தாபால் செக் பண்ணுவது டெலிபோன் இன்டர்வியூ attend பன்ணுவது என்று எங்கள் இரண்டுவார வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.

ஒருநாள் இரவில் கதவில் தட் தட் தட் என்று பலர் தட்டும் சத்தம். போச்சுடா அபார்ட்மெண்ட்காரர்கள்தான் வந்துவிட்டார்கள் என்று நினைத்து இருந்த 8 பேரில் 4 பேர் போய் ஒளிந்து கொள்ள, நானும் மற்ற நண்பர் ஒருவரும் கதவில் உள்ள Eye Piece வழியாகப் பார்த்தோம். வீட்டுக்கதவுமுன் பல சிறுவர் சிறுமியர்கள் நின்று கொண்டு இருந்தனர்.கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேய்,நாய்,சூப்பர் மேன், தேவதை போன்ற பலவிதமான் ஆடை அலங்காரத்தில் நின்று கொண்டுஇருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய கூடை நிறைய பலவிதமான வண்ண சாக்லேட்டுகளும், இன்னும் பல பேர் புரியா வகை வஸ்துகளும் இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன ஏது என்று புரியவில்லை.

அவர்களைப் பார்த்து Hello சொன்னோம். அவர்கள் கோரசாக என்னமோ சொன்னார்கள். அவர்கள் பேசிய ஆங்கிலம் எங்களுக்குப் புரியவில்லை,நாங்கள் பேசிய ஆங்கிலம் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு எங்கே இருந்து அது தோன்றியதோ தெரியவில்லை. நான் அது அவர்களின் பிறந்த நாள் என்று நினைத்து,ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, அவர்களுக்குள் என்னமோ பேசிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமானர்கள். அவர்களை நிறுத்தி எனது நண்பனும் அவன் பங்குக்கு சாக்லேட் எடுத்துக்கொண்டு அவர்களிடம் தேங்க்யூ சொன்னான். அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள்.பிறந்தநாள் சாக்லேட் கொடுத்துட்டு ஏன் இதுக இப்படி ஓடுதுக? அப்படீன்னு நொள்ள பேசிக்கிட்டு சாக்லேட்டை வாயில் போட்டோம்.

பின்பு நாங்கள் இருவரும் விசயம் தெரிந்த சிலரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அது "Halloween" விழாவாம். நாம் தான் குழந்தைகளுக்கு மிட்டாய் போடவேண்டுமாம். அவர்கள் சட்டி பானையில் இருந்து மிட்டாய் எடுக்கக்கூடாதாம். அன்று குழந்தைகளிடம் மிட்டாய் எடுத்த பாவத்திற்காக இப்போது வருடா வருடம் நான் பல குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி Halloween ஐ சிறப்பாக கொண்டாடி வருகிறேன்.

Halloween வரலாறு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (அப்பல்லாம் நம்ம தமிழ் மொழி இருந்துச்சுபோல அதனாலதன் செம்மொழி அந்தஸ்து ஆமா) இப்போது அயர்லாந்து,இங்கிலாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதிகளில் "செல்ட்ஸ்" இன மக்களின் புத்தாண்டு நவம்பர் 1. கோடைகாலம் முடிவடைந்து, வயல் வரப்பு வேலைகள், அறுவடை எல்லாம் முடிஞ்சு கடுங்குளிர் காலத்தோட தொடக்கம் தான் இந்த நவம்பர் 1. அந்த "செல்ட்ஸ்" இன மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கை இருந்தது. இந்த அக்டோபர் 31 இரவு முடிந்து நவம்பர் 1 ஆரம்பிக்கும், அந்த நடுநிசி வேளையில், இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஒரு நம்பிக்கை. அந்தக் காலங்களில் அவர்கள் விதவிதமான உடைகள் அணிந்து இரவில் அவர்களுக்குள் குறி சொல்லிக்கொண்டும், அந்தப் பேய்களுக்கு தானியங்கள்,விலங்குகளைப் பலியாகக் கொடுப்பதும் வாடிக்கை. இந்த விழா Samhain (pronounced sow-in) என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த இன மக்கள் AD 43 வாக்கில் ரோமர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் ரோமர்களின் "பெரலியா "(Feralia) பண்டிகை மற்றும் "பொம்னா" (Pomona) பண்டிகைகளுடன் கலந்தே இதுவும் கொண்டாடப்பட்டு வந்தது. கி.பி 800 ஆம் ஆண்டுவாக்கில் கிறிஸ்துவ மதத்தின் தாக்கம் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்பட்டு இருக்கிறது. அப்போது போப் ஆண்டவர் "Pope Boniface IV" நவம்பர்1 ஐ இறந்தவர்களுக்கும்(martyrs), சாதுக்களுக்குமான நாளாக அறிவிக்கிறார். இறந்தவர்களுக்காக "செல்ட்ஸ்" மக்கள் கொண்டாடிய விழாவை கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட விழாவாக போப் மாற்றி விட்டதாக நம்பப்படுவதும் உண்டு.

இந்த விழா "அல் ஹாலோஸ்" (All-hallows) அல்லது "அல் ஹலோமாஸ்" (All-hallowmas) என்றும் அழைக்கப்படும். (Alholowmesse meaning All Saints' Day). அதுவே இப்போது ஹலோவீனாக (Halloween) மாறி உள்ளது.

Halloween தகவலின் மூலம்:
http://www.historychannel.com/exhibits/halloween/?page=origins

மேலும் விவரங்களுக்கு:
http://www.halloween.com/
http://www.historychannel.com/exhibits/halloween/


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்:
நம்ம ஊர் கிறிஸ்துவர்கள் ஏன் இதைக் கொண்டாடுவது இல்லை?தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்


****************


****************

Wednesday, October 26, 2005

பதிவு15:தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்ன வயசில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது எவன் எந்த மாதிரி சட்டை எடுத்திருக்கான், எந்தக்கடையில தைக்கக் கொடுத்திருக்கான் அப்படீன்னு பாக்குறதே வேலையா இருக்கும். கொஞ்சம் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் ஒரு மாசம் அல்லது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே துணி எடுத்து தைக்கக் கொடுத்துருவாங்க, எங்க அப்பா கொஞ்சம் லேட்டாத்தான் எடுப்பார். அரசாங்கம் கொடுக்கிற போனஸ் அப்புறம் "கோ-ஆப் டெக்ஸ்" ல வர்ற தள்ளுபடி விற்பனை, போன்ற பல விசயங்கள் எங்களது தீபாவளி புதுச்சட்டையின் விலையையும் அது எடுக்கப்படும் காலத்தையும் நிர்ணயிக்கும். எங்க அப்பா "கோ-ஆப் டெக்ஸ்" ல இருந்து எப்பவுமே துண்டு,போர்வை,ஜமுக்காளம் மற்றும் அவருக்கு வேட்டி மட்டும் எடுப்பார்.அம்மாவுக்கு பிடித்தது சின்னாளபட்டுதான். அதை எப்பவுமே உள்ளூர் செட்டியார் கடையிலேயே எடுத்துவிடுவோம். சில சமயம் தீபாவளி பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அம்மாவிற்கு சின்னாளபட்டும் கிடையாது.

எங்களுக்கு எப்போதும் உள்ளூர் செட்டியார் கடையில்தான் துணி எடுப்பார் அப்பா. எங்க ஊர் போஸ்டாபீஸ் பக்கதிலேயே செட்டியார் கடை இருக்கும். நல்ல வசதியாக இருந்த அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் எங்கே இருகிறார்கள் என்று தெரியாது. இந்த முறை ஊருக்கு போகும் போது விசாரிக்க வேண்டும்.அப்பா கொஞ்சம் முன்பணம் கொடுத்து பாக்கியை பின்பு கட்டுவார். அந்தக் கடை பக்கத்திலேயே தாவாரத்தில் (தாழ்வாரம்) மணி டெய்லர் இருப்பார். அவர்தான் எங்களது ஆஸ்தான டெய்லர். அவர் எல்லாருக்குமே தீபாவளித்துணியை தீபாவளிக்கு முன்னமே கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், எல்லாரிடமும் வாக்கு கொடுத்துவிடுவார்.

தீபாவளி அன்று காலை வரை புதுச்சட்டை கிடைக்காமல் எண்ணெய் தேய்த்த தலையோடு பல குழந்தைகள் அவர் கடை முன் காத்து இருப்பார்கள்.நாங்கள் அவரை இடைவிடாமல் படுத்தி எப்படியும் தீபாவளிக்கு முந்தின இரவே துணி வாங்கி விடுவோம்.இதற்காக தினமும் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது மணி டெய்லர் கடையில் கொஞ்சநேரம் நின்று, அவர் நம்ம சட்டையை எடுக்கிறார என்று பார்ப்போம். பட்டாசுக் கடையில் கொஞ்ச நேரம் , துணிக்கடையில் கொஞ்ச நேரம் என்று வேடிக்கை பார்த்துவிடு மெதுவாக வீடு வந்து சேருவோம்.

தீபாவளிப் பண்டிகை நாளின் இரவில் ஒரே சோகமாக இருக்கும். "அய்யோ தீபாவளி முடிஞ்சு போச்சே இனி அடுத்த வருசம் தானே வரும்" அப்படீன்னு பக்கத்து வீட்டு நண்பர்களோடு சோகத்தைப் பகிர்ந்து கொள்வோம். என்னதான் சொல்லுங்கள் குழந்தப் பருவ தீபாவளி நாட்கள் மறக்க முடியாத இனிய நினைவுகள். இப்படி கொண்டாடிக் கொண்டிருந்த தீபாவளி எனக்கு வயசு ஆக ஆக விருப்பம் குறையத் தொடங்கியது.அதுவும் கல்லூரிக் காலத்தில் நான் தற்செயலாக சந்தித்த ஒருவரின் கேள்விகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

இது கல்லூரிக் காலத்தில் நான் ஒரு முறை தீபாவளி விடுமுறைக்காக ஊர் செல்லும் போது நடந்தது. அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் என் நினைவில் இருந்து. கல்லூரி முதலாண்டு என்று நினைக்கிறேன்.

என்ன தம்பி என்ன படிக்கிறீங்க?

இஞினியரிங் காலேஜ்

இப்ப என்ன தீபாவளி லீவா?

ஆமா?

உங்க காலேஜுல தீபாவளிக்கெல்லாம் லீவு விடுவாங்களா என்ன? அது கிறிஸ்டியன் காலேஜு ஆச்சே.

இல்ல லீவு விடுவாங்க.

கேட்குறேன்னு தப்பா நினைக்காத தம்பி, உனக்கு இந்த தீபாவளியோட பின்னனி தெரியுமா?

என்னடா இப்படி தொந்தரவு பண்ணாறாரேன்னு நினைச்சுக்கிட்டு நான் "அதுதான் நரகாசுரன கடவுள் கொன்ன நாள்" என்றேன்.

தம்பி ராமரோ துர்க்கையோ அந்த சாமிகள் வதம் செய்யும் கொடுமைக்காரர்கள் எல்லாம் ஏன் கருப்பா இருக்காங்கன்னு தெரியுமா? என்னிக்காவது எங்கேயாவது கருப்பசாமியோ அல்லது முனியாண்டி
சாமியோ செவப்பா இருக்கிறவங்கள வதம் பண்றதா பாத்து இருக்கீங்களா? என்றார்.

எனக்கு அப்போது இருந்த அறிவில் இதல்லாம் தலையில் ஏறவில்லை. ஆனால் அவர் எதோ தி.க கட்சிக்காரர் என்று என் மனது சொன்னது.

"இல்லங்க எனக்கு தெரியாது" என்று சொல்லிவிட்டு கையில்
இருந்த குமுதத்தை விரித்துக் கொண்டு படிப்பது போல் நடித்து அவரது பேச்சைப் தவிர்க்கப் பார்த்தேன்.

"இல்ல தம்பி, இந்த கதைகள் எல்லாம் திராவிட நாட்டுக்காரங்கள கேவலப்படுத்த மற்றவங்க கட்டிய கதை. இதையும் நம்பி நாமளும் அவுகளோட சேர்ந்து இதக் கொண்டாதுவது சரியில்ல. நானோ எனது குடும்பமோ தீபாவளி கொண்டாட மாட்டோம்" என்றார்.

"நீங்க என்ன தி.க கட்சியா?" என்று கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே " நான் எந்தக் கட்சியும் இல்ல தம்பி. புராணத்துல இருக்குற இந்த விசயம் எனக்கு ஒத்துவராத ஒன்னு. அதனால இந்தப் பண்டிகைய கொண்டாட மாட்டேன். " என்றார்.

பின்பு அவரும் அவர் கையில் இருந்த தினசரியைப் படிக்கத் தொடங்கி விட்டார். அப்பாடா ஆள விட்டாரே என்று நிம்மதியாக இருந்துவிட்டேன். தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடத ஆட்களும் இருக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் போன்ற பிற மதக்காரர்கள்தான் தீபாவளி கொண்டாட மாட்டர்கள் என்றும், எதோ தீபாவளியை இந்தியா முழுக்க அனைத்து இந்துக்களும் கொண்டாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு அப்போது இது பேரதிர்ச்சியாக இருந்தது.

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள் மேலும் ஆச்சர்யத்தைத் தருகின்றன.

எனக்கு இன்றும் புரியாதவை

1.வட மாநிலங்களில் இது 5 நாள் பண்டிகை. தமிழ் நாட்டில் மட்டும் ஒரு நாள்.

2.இந்த விழா நவ ராத்திரியோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிகிறது. தீபாவளி கொண்டாடும் எல்லாரும் நவராத்திரியோ கொலுவோ கொண்டாடுவது இல்லை.

3.தீபத்திருநாள் என்று சொல்லப்பட்ட போதும் யாரும் கார்த்திகை அளவுக்கு தீபம் ஏற்றுவதாகத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் இதை யாரும் தீபத்திருநாளாக கொண்டாடியது இல்லை. சும்மா நரகாசுரனுக்காக எண்ணெய் தேய்த்து குளிப்பதாகவே தெரிகிறது.

அதிக தகவல்களுக்கு
http://diwalimela.com/celebrations/index.html
http://www.kamat.com/kalranga/festive/diwali.htm
http://www.diwalifestival.org/diwali-in-history.html

குழந்தையாய் இருக்கும் போது கொண்டாடினேன். இப்போது குழந்தைகளுக்காக கொண்டாடுகிறேன்.ஏன் கருப்பு மனிதர்கள் மட்டும் அரக்கர்களாச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்

****************


****************

Tuesday, October 25, 2005

பதிவு14: தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!

அன்பு வலைப்பதிவர்களே,
இங்கு நாம் விவாதித்த நாப்கின் விசயம் தமிழக அரசு அதிகாரிகள்,காவல்துறையின் உளவுப் பிரிவு ஆகியோர் பார்வைக்கு செல்லும் வகையில் " முதல்வருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் தினமலர் செய்திமலர் (அக்டோபர் 2005) என்ற இலவச இணைப்பில் வந்துள்ளது.இது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் வரும் இணைப்பாக இருந்தாலும் வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. தினமலர் போன்ற ஒரு வெகுசன ஊடகம் மூலம் இந்த செய்தி மக்களுக்கு சென்றடைவதே ஒரு சிறந்த விழிப்புணர்வு முயற்சியாகும்.

தினமலரின் இந்த முயற்சிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் நேரமாக வேறு இருப்பதால், எந்த மூலையில் இருந்தாவது ஆதரவுக் குரல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முன்பே சொன்னபடி இந்த விசயம் விவாதிக்கப்படுவதே ஒரு நல்ல முன்னேற்றம்.

வலைப்பதிவில் முதன் முதலில் இதுபற்றி எழுதிய ரம்யா,நாம் விவாதித்த இந்த விசயத்தை தினமலர்வரை எடுத்துச்சென்ற நமது சக வலைப்பதிவாளர் மற்றும் ஆதராவாய் இருந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

நல்ல விவாதக்களமாக,தமிழ் வலைப்பதிவின் திரட்டியாக இருந்துவரும் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி.
சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்
சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

செய்தியை தெளிவாகப் பார்க்க படத்தின்மேல் சொடுக்கவும்.

தினமலரின் முன்னுரை...

வலைப்பதிவுகளில் காணப்படும் பல செய்திகள் நம்மை வியக்க வைக்கக் கூடியவையாக உள்ளன.

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கடிதமாக 'கல்வெட்டு' என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தி,இதுவரை யார் கவனத்திலும் படாத,ஆனால் மிக அடிப்படையான பிரச்னையைப் பேசுவதாக இருக்கிறது. முதல்வரின் கவனத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குக்கிராமத்து, இளம் பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டிய செய்தியாகவும் இது இருப்பதால் இதை இங்கே வெளியிட்டிருக்கிறோம். படித்து முடித்த பிறகு 'இதுவா...?' என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் காலம் காலமாக வெளியில் சொல்ல முடியாத பல்வேறு ரணங்களையும்,வலிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி அடித்தட்டு பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் நிச்சயமாகப் புரியும்.


**************************
தமிழ்ப்பதிவுகள் , தமிழ்
***************************

Friday, October 21, 2005

பதிவு 13:காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றி

பதிவு 13:காசியின் தமிழ்மணமும் எனது கல்வெட்டு மனமும்


நான் எழுதும் பதிவுகள் எனது ஆத்ம திருப்திக்காக மட்டும்தான் என்றால் நான் எதைப்பத்தியும் கவலைப்படத்தேவை இல்லை. நான் எழுதுவதை ஒருசிலராவது படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.மரத்தடி,திண்ணை,ராயர் காப்பிக்கடை போன்றவைகள் எனக்குத்தெரியாது. கலை , இலக்கியம் மற்றும் கவிதையும் தெரியாது. சனரஞ்சகமான தமிழ், ஆங்கிலப்படங்களையும் மட்டுமே பார்த்து வந்தவன். கணனித்துறையில் இருந்தாலும் இந்த வலைப்பதிவு,திரட்டி பற்றியெல்லாம் ஒன்னும் தெரியாது.ஆனந்த விகடனும் குமுதமும், தினமலர்,தினத் தந்தி தினகரன் போன்ற தினப்பத்திரிக்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணன். எனக்கு பலரை அறிமுகப்படுத்தியது இந்த இணையம்தான்.

முதலில் ஒருவரின் பதிவில் இருக்கும் இணைப்புகளை வைத்து பிறரின் பதிவுகளை சென்றடைந்தேன். பின்பு http://tamilblogs.blogspot.com/ வழியாக
பல புதிய தமிழ் இணையத்தளங்களை கண்டுகொண்டேன்.தமிழ்மணம் வந்தவுடன் சினிமா,இலக்கியம்,சாதி மதம்,நக்கல்,நையாண்டி அனைத்தையும் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆரம்பத்தில் பா.ரா போன்றோர் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் எது இலக்கியம் என்று முட்டி மோதி மல்லுக்கட்டி ஓடிவிட்டனர். பலபதிவுகள் பின்னூட்டத் தொல்லையால் நிறுத்தப்பட்டன. பல மனஸ்தாபங்கள். டோண்டு படதா கல்லடியா. அவரும் பின்னூட்டப் பிரச்சனைக்காக பலரிடம் புலம்பிப்பார்த்தார். இப்போது நாம் அனைவரும் போலி டோண்டுவுடன் வாழப் பழகி விட்டோம்.

காசி தமிழ்மணத்தை ஆரம்பிக்கவில்லை என்றால் வேறுயாரும் ஆரம்பித்து இவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களா தெரியாது. அவரது பலமும் பலவீணமுமே அவர் இலக்கிய வட்டத்தில் இருந்து வந்தவரல்ல.இலக்கிய வட்டம்,சதுரம் ,செவ்வகம் போன்ற பலர் இங்கே உள்ளார்கள்.அவரவர் அவர் தொழில் சார்ந்த இணையங்களையே ஆரம்பிக்கிறார்கள் யாரும் இது போன்ற பொதுவான ஒரு தளத்தை அமைக்கவில்லை.அப்படியே அமைத்தாலும் அது வியாபார நோக்கோடுதான் இருக்கிறது. அல்லது மிகவும் கனமான விசயங்களான பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம்,இடது,வலது என்ற விசயங்களே பெரிதும் பேசப்படும்.அது போன்ற இடங்களில் என்னை மாதிரி வெகு சாதாரணன் எதையும் சொல்லவோ,கருத்தாடவோ முடியாது.அவர்களைக் குற்றமோ குறையோ சொல்லவில்லை, என்னிடம் சரக்கு இல்லை.

நான் எழுதும் மிகச்சாதாரணமான, இந்தக் "கல்வெட்டு" மற்றும் "பலூன் மாமா" பதிவை ஒருசிலராவது படிக்கக் காரணம் தமிழ்மணத் திரட்டி மட்டுமே. "யார்ரா இவன் புச்சா இருக்கானே , என்னனு பார்ப்போம்" அப்படீனு வந்தவர்கள்தான் அதிகம். இங்கே பலருக்கு பலரைத் முன்பே தெரிந்து இருக்கிறது. பலர் பலருக்கு தங்களின் பதிவுகள் வழியாக தொடுப்புக் கொடுத்துள்ளார்கள். எனக்கு தெரிந்த ஒரேவாசல் தமிழ்மணம் மட்டுமே. வேறு தொழில்நுட்பங்கள் தெரியாது. இந்த தள அமைப்பே பலரது வடிவமைப்பைப் பார்த்து பார்த்து செய்ததுதான்.

எனது பதிவுகளைத் தமிழமணம் திரட்டி மூலம் ஒருசிலராவது படிக்கிறார்களே என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றே. அதே சமயம் தற்போது காசி அவர்கள் அறிவித்துள்ள மாற்றங்களினால் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட முகமறியா நண்பர்களை நினைத்து வருத்தமாகவே உள்ளது. பலசுவையுடன் இருந்த கதம்ப மணம் இனிமேல் இருக்காது. தமிழமணத் திரட்டியால் திரட்டப்பட வேண்டுமானல் நமக்குப் பிடித்ததை எழுதுவதற்குமுன் அது தமிழ்மண சட்ட திட்டங்களுக்குள் இருகிறதா என்று பார்த்தே எழுத வேண்டும்.

தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,இதுபோல் வேறு எந்த திரட்டியும் இல்லாததாலும் நான் 100% தமிழ்மணத்தைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.இப்போதுதான் வாய்ஸ் ஆப்த விங்-ன் புண்ணியத்தில் http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" -ல் இணைத்துக்கொண்டு உள்ளேன். காசியின் இந்தக் கட்டுப்பாடு மேலும் பல புதிய திரட்டிகளைக் கொண்டுவரும் என்றே நம்புகிறேன். அவர்களும் எதேனும் கட்டுப்பாடு வைக்கலாம். யார் கண்டார்?

எனது பார்வையில் இந்த "திரட்டி" , சினிமாத் தொழிலில் இருக்கும் "டிஸ்ரிப்யூட்டர்" போன்றது. டைரக்டர் என்னதான் சினிமா எடுத்தாலும் டிஸ்ரிப்யூட்டர் இல்லாமல், அவரின் கருத்து மக்களை அடையாது.
அதுபோல்தான் இங்கேயும். அவரவர்கள் எதில் சிறந்தவர்களோ, அவர்களுக்க்கு எது பிடித்திருக்கிறதோ அதை எழுதலாம். பிறரின் விருப்பத்துக்கெல்லாம் யாரலும் எழுத முடியாது, அதில் ஒரு போலித்தன்மை வந்துவிடும். அவரவர் அவரவருக்குத் தெரிந்ததையே எழுத முடியும். அதேபோல் காசி எல்லாத்தையும் திரட்டனும் என்று யாரும் கட்டாயப்படுதவும் முடியாது.காசியே இதனைத் தற்காலிகமான ஒன்றுதான் என்று சொல்லி இருப்பதால்
//இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும்.//

யாரும் யாரையும் காயப்படுத்திக் கொள்ளாமல், மாற்று யோசனைகளை காசிக்கு வழங்கலாம். அல்லது திறமையுள்ளவர்கள் வேறு நல்ல திரட்டிகளை அமைக்க முயற்சிசெய்யலாம்.


சொல்லலாமா? வேண்டாமா?
சிங்கம் வலம் போனால் என்ன இடம் போனால் என்ன,நம்ம மேல பாயாமல் இருந்தா சரி அப்படீன்னு சும்மா இருக்க முடியல. எது சொன்னாலும் அது எல்லாரையும் திருப்திப்படுத்துமுன்னு சொல்லமுடியாது. எல்லாரையும் திருப்திப்படுத்த நினைச்சா நாம நம்ம சொந்த அடையாளங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும். தன்மானம் உள்ள யாராலும் அப்படி இருக்க முடியாது என்பதால் காசியின் முதல் "தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்பில்" நான் இதை "இது ஏதோ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடு போல் உள்ளது" என்றும் "நண்பராகிய நீங்கள் தவறு செய்யும் போது இடித்துரைக்காமல் இருக்க முடியவில்லை" கடுமையாக கூறியிருந்தேன்.

அதற்குப்பின் அவர் அந்த மாற்றங்களை தனது அடுத்த பதிவில் அறிவித்தேவிட்டார். அதற்குமேல் யாராலும் ஒன்னும் செய்யமுடியாது. அதில் "வருந்தமான முடிவு." என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.


இன்று நான் பலவிசயங்களை சொல்ல நினைத்தேன். ஆனால் ஜெயஸ்ரீ அதனையே மிகச்சிறப்பாக கூறிவிட்டார். நன்றி ஜெயஸ்ரீ

அவரின் கருத்துகளில் இருந்து கீழ்க்கண்டவற்றை நான் வழிமொழிகிறேன்.
காசி அவர்களுக்கு கல்வெட்டு எழுதிக்கொள்வது,
தமிழ்மணத்தை பயன்படுத்துபவன் வேறு தொழில்நுட்பங்கள் தெரியாததால் இந்தத் தளத்தை மட்டுமே வலைப்பதிவுகள் படிக்க தொடர்ந்து உபயோகித்து வருபவன் என்ற முறையில் என் கருத்தையும் சொல்லநினைக்கிறேன்.

நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்று யாரும் இங்கு சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை என்று திடீரென நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.


இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது... நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.

இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம்.

அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.

உங்கள் இந்தச் செயல் இனி தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதப்போகும் ஒவ்வொரு பதிவாளர்களையும் பதிவுகள் எழுதுவதற்கு முன்னும், புதிதாக சேர நினைப்பவர்களை, சேருவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவைப்பதாகவே இருக்கும்.

உங்கள் ரசனையோடு தங்கள் எழுத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பதாகவே அது இருக்கும்.

உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். ...லாம் ...லாம் ...லாம். மிக மிக நல்ல விஷயம்.

ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து! வருந்துகிறேன்!!!

உள்ளபடியே உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகக் குழுவினரின் சேவைக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.


*********************

*********************

Wednesday, October 19, 2005

பதிவு12:குற்றவுணர்வும் Thanks Giving Day யும்


அமெரிக்க Thanks Giving Day பற்றி பல கதைகள் இருந்தாலும் அதிகப்படியாக நம்பப்படுவது அல்லது ஊடகங்கள்,குழந்தைகளின் புத்தகங்கள் வழியாக நம்பவைக்கப்படுவது இதுதான்.


 • இது ஒரு அறுவடைத் திருவிழா ( Harvest Festival )
 • ஆரம்பகாலத்தில் வந்தேறிகளாக குடிபுகுந்த மக்கள், இந்த கண்டத்தில் இருந்த அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ( Native Americans ) நன்றி சொல்ல கொண்டாடும் திருவிழா.


http://www.rumela.com/events/events_november_thanksgiving.htm

 • The actual origin, however, is probably the harvest festivals that are traditional in many parts of the world Festivals and Feasts. After the first harvest was completed by the Plymouth colonists in 1621, Governor William Bradford proclaimed a day of thanksgiving and prayer, shared by all the colonists and neighboring Native Americans. The Pilgrims of Plymouth Rock held their Thanksgiving in 1621 as a three day "thank you" celebration to the leaders of the Wampanoag Indian tribe and their families for teaching them the survival skills they needed to make it in the New World.

 • As tradition has it in most families, a special prayer of thanks precedes the meal. In many homes, family members will each mention something they are very thankful for. Thanksgiving is a time for families to create traditions and memories that last a lifetime.

 • http://www.gkindia.com/holidays/thanksgivingday.htm
  http://www.thanksgiving.org/2us.html

உதவி செய்த அந்த செவ்விந்தியர்களை அப்புறம் இந்த வந்தேறிகள் ஓட ஓட விரட்டி அவர்கள் நிலபுலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டு "நன்றி" சொன்னது தனிச் சோகக்கதை.

 • Fact & Myth about Thanksgiving
 • The REAL story of the "first" Thanksgiving
 • Thanksgiving Today


http://www.angelfire.com/biz2/turquoisebutterfly/thanksgiving.html


 • For many Native American Indians of present day, the traditional "Thanksgiving" holiday is not recognized as the Pilgrim/Indian day popularized in children’s history books; rather it is a day of sorrow and shame. Sorrow for the fallen lives of those who were lost so long ago, and shame for living in a country who honors people who used religion and self-righteousness to condone murder, treachery and slavery.

அதிகம் தெரிந்து கொள்ள:

http://www.reformation.org/new-world-holocaust.html

http://www.nativeamericans.com/http://www.danielnpaul.com/TheRealThanksgiving.html


இப்போது அமெரிக்கர்கள் இதை "வான்கோழி" (Turky) சாப்பாடும் , நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி இரவு சாப்பாடை சேர்ந்து உண்ணுவது என்ற சம்பிரதாய விழாவாக்கிவிட்டார்கள். யாரும் அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ( Native Americans ) நன்றி சொல்வதாத் தெரியவில்லை.அவரவர் அவர் நம்பும் கடவுளர்களுக்கு நன்றி சொல்லி விருந்தை ஆரம்பிக்கிறார்கள்.


செவ்விந்தியர்களை அழித்துவிட்டு தங்களது காலனி ஆதிக்கத்தையும் கிறித்துவத்தையும் பரப்பிய அமெரிக்கர்களுடன் சேர்ந்துகொண்டு "Thanks Giving Day" கொண்டாடுவதா? அல்லது செவ்விந்தியர்களுடன் சேர்ந்து இந்தியர்களாகிய நாம் இதனைப் புறக்கணிப்பதா? தெரியவில்லை.


ஒரு பூர்வ பழங்குடி மக்களின் நிலத்தையும் வளத்தையும் அழித்துவிட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா இருந்தாலும், அரிக்கேன் விளக்கில் இருந்து ஆகாய விமானம் வரை நவீன உலகிற்கு இவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

Thanks Giving Day யும் அதன் வரலாறும் பல வகையான குழப்பத்தையும், குற்றவுணர்வையும் தந்தாலும்,நன்றி சொல்ல ஒரு நாள் என்றளவில் Thanks Giving Day எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாள்.

அந்த நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேருவது, தனக்குச் செய்த நல்ல செயல்களை நினைவுகூர்ந்து ஒருவர் மற்றவருக்கு நன்றி சொல்வது நல்ல விசயம்.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்

*********************

*********************

தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு
http://valaipadhivan.blogspot.com/2005/10/blog-post_19.html

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள்.

Wednesday, October 12, 2005

பதிவு10: கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்

கே ளா ... சொல்லும் போதே ஒரு மகிழ்ச்சி, கண்ணுக்குள் வெளிச்சங்கள், மனதில் பல நினைவுகள் வந்து போகின்றன.

சிறுவயதில் நாயர் டீக்கடையையும், ஐயப்பன் கோவிலையும் மட்டுமே கேரளாவுடன் இணைத்துப் பார்த்திருக்கிறேன். விடலைப் பருவத்தில் கேரளா என்றாலே "மாமனாரின் இன்ப வெறி" போன்ற படங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் ஒரு காமக் கோட்டையாக நினைத்து இருந்திருக்கிறேன்.

கல்லூரிக்குச் சென்ற பிறகு எனக்கு இருந்த கேரளா பற்றிய அடையாளங்கள் முற்றிலும் மாறியது. நல்ல மலையாளப் படங்களும் கேரளப் பெண்களின் அழகும் என்னுள் கேரளா பற்றிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்தின.

நான் படித்த கல்லூரி கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சிறுவாணிப் பகுதியில் உள்ளது. எப்போதும் மிக இரம்மியமான சூழல் கொண்டது. மலைக்கு அந்தப்பக்கம் கேரளா. உடன் படிக்கும் கேரள நண்பர்கள். அதே கல்லூரியில் வேறு பாடப் பிரிவுகளில் படிக்கும் கேரளத்துப் பெண்கள் என்று ஒரே மலையாள வாசனையாக இருந்தது. அப்போது எனக்கு இருந்த கூச்ச சுபாவத்தால் அந்தப் பெண்களுடன் பேசிப் பழக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்தக் கல்லூரியில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

அதற்குப் பிறகு பலமுறை கேரளா சென்றுள்ளேன்.

எனக்கு மிகவும் பிடித்த விசயம் "ஓணம்" .
ஓணம் என்றாலே சந்தனக்கலர் புடவைப் பெண்களும், நீண்ட படகுப் போட்டியும் தான் வருகிறது.இந்தப் பண்டிகையின் தோற்றம் இந்துக் கடவுள்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நான் அறிந்த வரை இந்தப் பண்டிகை சாதி, மத, சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து கேரள மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களுக்கென்று ஒரு விழா!

சாதி சமய வேற்றுமை இல்லாமல் அனைவரும் சேர்ந்து கொண்டாட ஒரு வாய்ப்பு!!

http://www.southindia.com/onam.htm
Onam is one of the greatest festivals of Kerala. It is the festival, which the keralites celebrates unitedly without the differecnce of caste and religion.


http://www.malayalifestivals.dgreetings.com/malayalifestivals/onam/
This festival is not celebrated by Hindus only but by Christians and Muslims as well. It is one festival that unites all people regardless of race and religion

http://hinduism.about.com/od/festivalsholidays/a/onam.htm
Onam is For AllAlthough this festival has its origin in Hindu mythology, Onam is for all people of all class and creed. Hindus, Muslims and Christians, the wealthy and the downtrodden, all celebrate Onam with equal fervor. The secular character of Onam is peculiar to this land where unity had always coexisted with diversity, especially during festivals, when people come together to celebrate life's unlimited joys.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது?

Thursday, October 06, 2005

பதிவு09: தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

செய்தி என்னவென்று சொல்வதற்கு முன்னால் யார் தமிழர் என்பதை முதலில் பார்ப்போம்.

தமிழர் என்பவர் யார்?

வீட்டிலும்,வெளியிலும் தமிழ் பேசி, தனது குழந்தைகளுக்கும் தமிழ் போதித்து சக தமிழரிடம் தமிழில் பேச வெட்கப்படாமல் தமிழைப் பேசி, கற்று வாழ்வன் தமிழனா?

தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழனா?

வீட்டினுள் பிற மொழி பேசி வெளியில் தமிழ் பேசுபவன் தமிழனா?

தமிழே பேசாமல் அதைப் பேசுபவனையும் கேவலமாகப் பார்த்துக் கொண்டு பீட்டரிங் விட்டுக்கொண்டு தமிழ் நாட்டில் வாழுபவன் தமிழனா?

வேறு நாட்டிற்குப் போனபின், தனக்குரிய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழ்/தமிழர் விழா/பண்டிகை கொண்டாட்டம் வைத்து, அந்த விழாவில் வேட்டி சேலை கட்டி, அந்த விழா மேடையில் ஆங்கிலத்தில் எல்லாரையும் வரவேற்றுப் பேசுபவன் தமிழனா?

அதே கூத்தை தமிழ் நாட்டில் செய்பவன் தமிழனா?

ஆரியன் தமிழனா?

திராவிடன் தமிழனா?

இந்து தமிழனா? முஸ்லிம் தமிழனா? கிறித்துவன் தமிழனா? சேட்டு தமிழனா?

என்னைப் போல எங்கேயோ வேறு நாட்டில் ஒக்காந்து இப்படி லொட்டு லொட்டுனு தமிழில் தட்டிக் கொண்டு இருப்பவன் தமிழனா?

அப்பாடா எல்லாத்தையும் சொல்லியாச்சு (எல்லாரையும் திட்டியாச்சு) .வேறு ஏதேனும் விடுபட்டுப் போயிருந்தால் நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டமாக எழுதி திட்டித் தீர்த்துக் கொள்ளவும். இப்போதே திட்டிக் கொள்ளவும்.

எந்த சாதியா இருந்தா என்ன?
எந்த மதமா இருந்தா என்ன?
எங்கே இருந்தால் என்ன?
எங்கே பிறந்தால் என்ன?
எந்தக் கட்சியில் இருந்தால் என்ன?
யார் ரசிகராய் இருந்தால் என்ன?
யாருக்கு ரசிகர் மன்றம் வைத்தால் என்ன?
பிழைப்ப்பிற்காக... ஜாவாவில் புரோகிராம் எழுதினால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஓதினால் என்ன?
ஆங்கிலத்தில் பண்டிதனாய் இருந்து அரபியில் சாமி கும்பிட்டால் என்ன? குஷ்பூவைத் திட்டினால் என்ன?
புஷ்பவனம் குப்புசாமியை நடிக்க வைத்தால் என்ன?
புஷ் செய்வதெல்லாம் நடிப்பு என்று சொன்னால் என்ன?

என்னைப் பொறுத்தவரை, யார் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும், தமிழ் பேசுவதிலும் கர்வம் கொள்கிறார்களோ அவரே தமிழர் .... அம்புட்டுத்தான்.

"யார் தமிழன் , எது தமிழ்க் கலாச்சாரம் என்பதைத் தீர்மானிக்க பல பெரியவர்கள் இருக்கும் போது , நாம் ஏன் கவலைப்படனும்"...அப்படீன்னு சொன்னா அதுவும் சரிதான்.

எது எப்படியோ......
நீ தமிழனா இல்லையா என்பதை நீயே தீர்மானம் செய்து கொள்.

தமிழனாக தன்னை அடையாளம் காண்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்து இருக்கிறது.

பதிவு08: சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

மாவட்டத்துக்கு ஒரு சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை -அரசு திட்டம்!

நான் எனது முந்தைய பதிவில் சானிடரி நாப்கின் சம்பந்தமாக சில யோசனைகளை முன்வைத்து இருந்தேன்.அது சம்பந்தமாக தமிழக அரசு இணையத்தளத்தில் தேடிய போது ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இருந்தன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை" திட்டத்தினை தமிழக அரசு RURAL DEVELOPMENT DEPARTMENT ANNOUNCEMENTS 2004-2005 -ல் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/citizen/announcement/rural2004-05.htm

http://www.tn.gov.in/policynotes/performance_budget/pb-social-2004-05.pdf


அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஒரு Royal Salute !!!


மேலும் Total Sanitation Campaign (TSC) என்று 25 க்கும் மேற்பட்ட சிறந்த பல திட்டங்களை வடிவமைத்துள்ளனர். நான் கூறிய யோசனைகளுடன் மிகச் சிறந்த மற்ற திட்டங்களையும் தமிழக அரசும், அது சார்ந்த துறைகளும் ஏற்கனவே மிகவும் சிறப்பாக திட்டம் தீட்டி சில ஊர்களில் அதனை செயல் படுத்தவும் செய்துள்ளனர்.

அவற்றில் சில:

18. Sanitary napkins:
Awareness has been created among the rural women to alarge extent on use of sanitary napkins for improvement of menstrual hygienein women. SHGs in Tamil Nadu are being trained for production of low/affordable cost sanitary napkins for the purpose. These SHGs have startedselling their products to other SHGs, girl students in schools, local maternityhospitals etc.

19. Sanitary Napkin Incinerator:
A simple, easy-to-operate, low cost Incineratorhas been developed and installed in many WSCs and girls’ school toilets forsafe and hygienic disposal of sanitary napkins. This also helps solve theproblems of clogging of toilet traps and other components.


கடுவஞ்சேரி ஊராட்சியில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை கிராமப் பெண்களே செய்கின்றனர்.
Panchayat : KaduvancheriBlock : SriperumbudurDistrict : Kancheepuram.women’s SHGs. There is usually a woman caretaker appointed/ selected by theSHG, who takes care of the daily maintenance of the complex. The lady is paidaround Rs. 300/- to Rs. 500/- a month. Funds towards this and other materials likephenyl, bleaching powder etc. for day-to-day maintenance is raised from the userson a monthly basis ranging between Rs. 5/- to Rs. 10/- per household per month.Sanitary Napkin Incinerators are an innovative intervention in the State.Such Incinerators are now seen in many recently constructed sanitary complexes.In some villages, SHGs have started production of Sanitary Napkins to be madeavailable to users at a reasonably lower cost, such that it could be popularizedamong women.அதிக விவரங்களுக்கு
http://ddws.nic.in/rev_tamil_04.pdf

அனைவருக்கும் அறிமுகமான ஜனாதிபதி பரிசு பெற்ற கீரப்பாளையம் என்ற ஊர் இந்த விசயத்தில் முதன்மை பெறுகிறது.

அது பற்றிய case studyhttp://ddws.nic.in/casestudy_keeraplayam.pdf


இத்தகைய நல்ல திட்டங்களும் அதற்கு செலவழிக்கப்பட்ட அரசின் நேரம்/பணம்/திட்ட அமைப்பாளர்களின் நேரம்/முயற்சி அனைத்தும் சரியாகப் பயன் படுத்தப்பட்டால் மிக நல்லது.

அரசின் திட்டப்படி எல்லா மாவட்டமும்/ஊராட்சிகள்/கிராமங்கள் இந்த சலுகைகளைப் பெற முடியும். என்னைப் போல் இன்னும் பலருக்கு இப்படி ஒரு திட்டங்கள் இருப்பது தெரியாது என்றே எண்ணுகிறேன்.

இதுபற்றி மேலும் சில தகவல்களைச் சேர்த்துக்கொண்டு உள்ளேன்.எனக்குத் தெரியும் விவரங்களைப் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

யாராவது அரசியல் தலைவர்கள்,மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்கள் இது பற்றிப் பேசினால் நல்லது.ஆனால் குஷ்பூ பிரச்சனைக்குப்பின் யாரும் இந்த பேசப்படாத விசயங்களை பொதுவில் பேசி குரல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

ஆணுறை,AIDS,குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசே செய்தால்தான் நல்லது.


ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி....
"என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன் " என்று உறுதி அளித்துள்ளார். ரம்யா வலைப்பதிவில் ஆரம்பித்த இந்த நல்ல செயல் ராம்கியால் முடிந்தால் சந்தோசமே.

ஊர்கூடி தேர் இழுப்போம். தேர் அசையா விட்டாலும் முயற்சி செய்த திருப்தியாவது கிட்டும்.

வலைப்பதிவர்களுக்கு:
அரசின் நல்ல திட்டங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டுமானால் மக்களுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் அது பற்றி தெரிந்து இருக்க வேண்டும். யாராவது அரசியல் தலைவர்களின் தொடர்பிருந்தால் இந்தச் செய்தியை அவர்களின் காதுக்கு கொண்டு செல்லுங்கள்.

பி.கு:
நேற்று போட்ட பதிவு தலைப்பின் நீளம் காரணமாக பிளாக்கர் முழுங்கி விட்டது. அதன் மறு பதிப்பு.

Friday, September 23, 2005

பதிவு07:சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்

கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
http://kalvetu.blogspot.com/

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதற்குமுன், நான் எழுதுவதா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்தேன். பெரும்பாலும் கவனிக்கப்படாத, இதுவரை பொது விவாதத்திற்கு வராத,இந்த விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினேன்.

நான் இதுவரையில் அரசாங்கம் சார்ந்த மனுக்களையோ, விண்ணப்பங்களையோ எழுதியது கிடையாது.அதனால் நான் ஏதாவது விதிமுறைகளை (Protocol) மீறியிருந்தால் மன்னிக்கவும்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.

பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை.
அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anshu K. Gupta தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல சேவைகளைச் செய்து வருகிறார்.பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார்.அவரின் சேவை,முகவரி பற்றிய விவரங்களை இந்த இணையத் தளத்தில்காணலாம் http://www.goonj.org/ .

நீங்கள் தாயன்புடன் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கியது போல, அனைத்துப் பெண்களுக்கும் இது கிடைக்கச் செய்ய தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்,
கல்வெட்டு
தேதி: செப்டம்பர் 23,2005
==========================

இந்தக் கடிதம் தமிழக முதல்வரின் பார்வைக்கு cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு pdf கோப்பாக அனுப்பப் பட்டுள்ளது. முதல்வரின் 044-25671441 என்ற எண்ணில் Fax செய்ய முடியவில்லை. தொழில்நுட்பக் கோளாராக இருக்கலாம். மேலும் இதன் நகல், மங்கையர் மலருக்கும் (Fax: 91-44-2225 1021) குமுதத்திற்கும் ( +91 44-26425824 ) அனுப்பப் பட்டுள்ளது.

====

வலைப்பதிவு (தமிழ்மண) நண்பர்களுக்கு,
நான் அனுப்பிய இந்தக் கடிதம் எந்த அளவுக்கு முதல்வரின் கவனத்தைப் பெறும் என்று தெரியாது. ஆனால், அவரின் பார்வையில் பட்டால் நிச்சயம் ஏதாவது செய்வார் என்றே நம்புகிறேன்.பெண்களின் இந்தப் பிரச்சனை ஊமை கண்ட கனவாக அதிகம் பேசப்படாமலே உள்ளது.

நண்பர்கள் யாராவது இதனை வேறு எங்கேனும்(பத்திரிக்கை/அரசு) அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கடிதத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். யாரேனும் இதனை அரசு அதிகாரிகள்/அமைச்சர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்றாலும் மிக்க நல்லதே.

பொதுத் தொண்டு நிறுவனங்கள் நல்லது செய்தாலும், அரசின் தலையீடு உதவியைப் பரவலாக்கும் என்றே எண்ணுகிறேன். பிரச்சனை நாம் விரும்பிய வண்ணம் தீர்க்கப் படாவிட்டாலும்,குறைந்தபட்சம் இதுபற்றி வெளிப்படையான விவாதம் தொடங்க அது வகை செய்யும்.