Tuesday, November 29, 2005

தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

பதிவு23:தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

எனது அம்மா திருச்சியில் இருக்கிறார். இவர் எனது மனைவி வழி வந்த அம்மா அதாவது புரியும்படி தமிழில் சொல்லவேண்டுமானால் மதர் இன் லா. என்னைய முறைக்காதீங்க. யாராவது தனது சொந்தங்களை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போது தமிழில் சொல்கிறார்களா என்ன? இவுங்க தான் என்னோட யொவ்பூ. இவருதான் கஸ்பெண்டு, இவரு கசின் அப்படித்தான் நடைமுறை பேச்சு வழக்கம் உள்ளது. நீங்கள் அப்படி இல்லையென்றால் சந்தோசமே. தொலைக்காட்சி தொடர்களின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் மாமியார் என்றாலே எதோ வில்லி போல் இருக்கிறது.அத்தை என்பது மாமியாராகவும் இருக்கலாம் அல்லது அத்தையாக மட்டும் இருக்கலாம்.யாராவது மாமியாருக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் இருந்தால் சொல்லுங்கள். அதுவரை அம்மா என்று சொல்வதே எனக்குப் பிடித்திருக்கிறது.போனவாரம் வியாழன் இரவு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை வேளையில் நாங்கள் அவரிடம் பேசுவோம். மற்றபடி ஏதும் முக்கிய விசயம் என்றால் வார நாட்களிலும் பேசுவது உண்டு.இந்தியாவில் இருந்து திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் நமக்கு வருவது பயம் தான் . யாருக்கு என்னவோ? ஏதாவது பிரச்சனையா ? என்பது போல் எதிர்மறை எண்ணங்களே முதலில் வரும். அது என்னவோ தொலைதூரத்தில் வசிக்கும் போது வீட்டில் இருந்து வரும் "எதிர்பாராத" தொலைபேசி அழைப்புகள் சிறிது பயத்தையே கொடுக்கின்றன. அதுவும் திருச்சியே தனித்தீவு போல் கிடப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் நம்மை பயம் கொள்ளச்செய்கின்றன. நல்லவேளை "சன்" போன்ற சமாச்சாரங்கள் வீட்டில் இல்லை.இருந்தாலும் இங்கே உள்ள உள்ளூர் தொலைக்காட்சியிலேயே தமிழ்நாட்டில் பெய்யும் மழையையும், பேருந்து ஆற்றில் மூழ்கி கிடப்பதும் முக்கியச் செய்தியாக வந்து போனது. இவ்வாறான சூழ்நிலையில் அம்மாவின் அழைப்பு வந்தது கொஞ்சம் பயத்தையே கொடுத்தது.அவரிடம் பேசியபின்பு, அவர் பத்திராமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொஞ்சம் நிம்மதியோனோம்.

தொடர்ந்து பெய்த மழையில் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளம் (தரைத்தளம் Ground Floor) தண்ணீரால் ஆக்ரமிக்கப்பட்டது. குளியலறை,கழிப்பறைகளின் கழிவுநீர்க்குழாய்களின் மூலமாகவும் தண்ணீர் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சாமான் சட்டுகளை கட்டில்,பரண் மற்றும் உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு தெரிந்த வேறு நண்பர்களின் வீடுகளில் சென்று தங்கியுள்ளனர்.தெருவில் ஓடும் மார்பளவு தண்ணீரில் இவரும் ஒருவழியாக தப்பித்து அருகில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
















மழை,வெள்ளம் சேதங்களைப் பயன்படுத்தி ஆங்காங்கே திருட்டுகள் நடந்துள்ளது.இதன் பொருட்டு பலர் வீடுகளைக் காலி செய்யாமல் தண்ணீரிலேயே வாசம் செய்துள்ளனர். அல்லது வீட்டுக்கு ஒருவர் என்று வீடுகளைப் பாதுகாக்க இருந்துள்ளனர். எனது அம்மாவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்கள், பெரிய உதவிகளைச் செய்து உள்ளனர். காலி செய்துவிட்டுப்போன வீடுகளைக் கண்காணித்து திருட்டு போன்ற செயல்களில் இருந்து காத்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சமையல் செய்யமுடியாமல் இருந்த அக்கம் பக்கத்தவர்களுக்கு உணவு வழங்கியும், சில வீடுகளில் ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கிப் பொழுதைக் கழித்துள்ளனர்.இது போன்ற துயர் நேரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது நல்லது. எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல் , திருட்டுக் குற்றங்கள் நடத்துவோரை என்ன செய்வது?

இப்போது தமிழகத்தில் சமீபத்தில் நிலவும் சூழ்நிலை அசாதாரணமானது. சுனாமி வந்த பின்பும் இது போன்ற இயற்கைச் சீற்றங்களின் வீரியம் இன்னும் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.வெள்ள நிவாரணப் பொருட்கள் தருவது,பணம் தருவது போன்ற தற்காலிகத் தீர்வுகள் அவசியமானவைகளே.ஆனால், இதுபோன்ற காலங்களில் மக்கள் என்ன செய்யவேண்டும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.சென்னையில் நிவாரண உதவி வழங்குவதில் வந்த குழப்பத்தினால் சில அப்பாவி உயிர்கள் பலியாயின.பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் அல்லது அறியாமையால் அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் பேருந்துகள் தண்ணீரில் மூழ்கி பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. நடந்துவிட்ட இயற்கைச்சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசின்மீதோ அதன் செயல்பாட்டிலோ, குற்றம் குறை காண்பது எனது நோக்கமல்ல.இனிவரும் காலங்களில் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதே நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விசயமாகும்.

இயற்கையின் சீற்றமும் அதனால் ஏற்படப்போகும் மழையின் அளவு, புயலின் பாதை போன்றவை 99% கணிக்கப்படக்கூடியதே. சுனாமி வேண்டுமானால் நமது நாட்டுக்கு புதிய இதுவரை கண்டிராத இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். மழை,புயல் போன்றவை இப்போதுள்ள தொழில்நுட்பங்களால் துல்லியமாக கணிக்கப்படக்கூடியவையே. அமெரிக்காபோல் தினமும் ஒரு தட்பவெப்பம், பனி, சூறாவளி போன்ற தொடர் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நாம் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.தற்போது உள்ள சாலைகளையோ, ஏரி மற்றும் குளத்தையோ உடனே சீர்திருத்திவிடமுடியாது.உடைந்து போன கரைகளையும், சாலைகளையும் செப்பனிடலாமே தவிர அதனை முழுதுமாக சீர்திருத்திவிடமுடியாது. பலியான அப்பாவி உயிர்கள் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதவை.நல்ல திட்டங்களை 5 அல்லது 10 வருட தொலை நோக்குத்திட்டமாகப் பிரித்து பல காரியங்களைச் செய்ய வேண்டும்.இதற்கான நிதிநிலை (பட்ஜெட்) மக்களின் நலத்தை கவனத்தில் கொண்டு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்படி ஏதாவது செய்யவேண்டும். அரசியல் கட்சிககளின் மாற்றத்தால் பாதிக்கப்படாத ஒரு தொலை நோக்குத்திட்டமாக இருக்க வேண்டும்.


இயற்கைச் சீற்றங்கள் வருவதற்குமுன் கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.
இது ஏதோ ஒருமுறை செய்துவிட்டு பின்பு கிடப்பில் போடும் திட்டமாக இல்லாமல் உண்மையான அவசரகாலத் திட்டமாக இருக்க வேண்டும்.

வானிலை அறிக்கையை உண்மையான ஒரு ஆக்கபூர்வமான அறிக்கையாக மாற்றவேண்டும்.

புயலின் திசை, அதன் வீரியம் பாதிக்கப்போகும் பகுதிகள் போன்றவை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறப்படவேண்டும்.

மக்களை எச்சரிகை செய்ய சரியான ஊடகங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.அனைத்துப்பகுதி மக்களுக்கும் சரியான நேரத்தில், சரியான தகவல் போய்ச்சேரும்படி இது அமைக்கப்படவேண்டும்.

கிராம,வார்டு அளவில் இது போன்ற நேரங்களில் மக்கள் எங்கு தங்கவேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பவை முன்னரே திட்டமிடப்படல் வேண்டும். இது வருடம் ஒருமுறை சரிபார்க்கப்படல் வேண்டும்.மாற்றங்கள் இருப்பின் அதுபற்றி மக்கள் அறிவுறுத்தப்படவேண்டும்.

தங்குமிடங்கள் சரியான தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.தங்குமிடங்களில் உணவு,தண்ணீர்,மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.சரியான கால அளவிகளில் இவை சரிபார்க்கப்பட்டு, எப்போதும் நல்ல பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.(பள்ளிகள்,கல்லூரிகள் போன்றவை நல்ல இடங்களாகும்)

ஒவ்வொருஅரசு மற்றும் தனியார் பேருந்துகள்,கனரக வாகனம் போன்றவைகளில் சரியான தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவேண்டும்.


இயற்கைச்சீற்றங்கள் வரும் போது ,நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.

அரசு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.இதற்கென்று ஒரு செய்தித்டொடர்பாளர் இருக்க வெண்டும்.

அரசின் செய்தி அரசின் செய்தியாக அப்படியே மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும்.

அனைத்து (தனியார்,அரசு) ஊடகங்களும் அரசின் செய்தித்தொடர்பாளர் தரும் செய்தியை அப்படியே மக்களுக்கு ஒளி/ஒலி பரப்பவேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அரசு உண்மையச் சொல்லுமா என்று கேட்கவேண்டாம். நிச்சயம் ஆளும் அரசுகள் பீதியைக் கிளப்பும் (சன் வகையறா அல்லது தாத்தா ஆட்சியில் ஜெயா வகையறா) வண்ணம் தகவல் தராது.

நீண்ட காலத்திட்டங்களாக செயல்படுத்த வேண்டியது.

கண்மாய்/குளம்/ஏரி மற்றும் ஆறுகள் தூர்வாருதல்/சுத்தப்படுத்துதல்.

கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள கழிவு நீர்/மழை நீர் வெளியேற்றும் வழிகளைச் சீர் செய்வது.

தொழில் சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்போர் தங்களின் நிலத்தில் 1/3 பங்கு அப்படியே நிலமாக வைத்து இருக்க வேண்டும். அதாவது அந்த பங்கு நிலம் தார்,சிமெண்ட் கொண்டு பூசப்படாமல் (மூடப்படாமல்) இருக்க வேண்டும்.அதில் மரங்கள் வளர்ப்பதோ தோட்டங்கள் போடுவதோ ஊக்குவிக்கப்படவேண்டும்.

தனிநபர் இடங்கள் (வீடுகள்) 1/4 பங்கு நிலத்தை நிலமாக வைத்து இருக்க வேண்டும்.

நிலத்தடி நீருக்கு வரி வேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது நிலத்தில், தானாக கிணறோ, ஆழ்துளைக் கிணறோ வைத்திருப்பாரேயானால் அவர்கள் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.

அரசும் இதன் மூலம் வரும் வருமானத்தை வேறு வகையில் திருப்பாமல் நிலத்தடி நீர் மற்றும் அது சார்ந்த மூன்னேற்றத்திட்டங்களுக்கும், நீர் வளம்/கழிவு நீர் சார்பான திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.

இதுபற்றி மற்றவர்களின் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

















இதுபோன்ற நெருக்கடிக்காலத்தில் கடமையாற்றும் அரசு,இராணுவம்,காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வ நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் வீரர்கள்.

படங்கள்: நன்றி தினகரன்

****************


****************

Friday, November 25, 2005

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

பதிவு22:பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

நான் இதற்கு முன் எழுதிய "பொங்கல் கொண்டாட்டம்-தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி " என்ற பதிவில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்.


1.ஈழத்தில் இது தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அங்கே இது தீபாவளியைவிட முக்கியத்துவம் பெறுகிறது.

2.தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொங்கலுக்கு அளிப்பதில்லை.

3.ஒரு சிலர் இந்துவாக இருந்தாலும் தமிழன் என்ற வட்டத்திற்குள் வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். திராவிடம் ஆரியம் போன்ற பிரச்சனைகளால் இருக்கலாம். என்பது எனது எண்ணம்.

4.கிறித்துவர்களில் RC பிரிவினர் இதனைக் கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் அப்படியே கொண்டாடவிட்டாலும் இது தமிழர் பண்டிகைதான் என்பதை எதிர்க்கவில்லை.(மற்ற பிரிவினர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்).

5.இஸ்லாமியர்கள் மட்டுமே இதனைக் கீழ்கண்ட காரணங்களால் கொண்டாடத் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்லாமியரின் நிலையையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட "
நல்லடியாருக்கும்" "நண்பனுக்கும்" நன்றி.

நல்லடியார் தனது புதிய தளத்தில் "பண்டிகைகளும் நல்லிணக்கமும்" என்று மூன்று பகுதிகள் எழுதியுள்ளார்.

http://nalladiyar.blogspot.com/2005/10/1.html
http://nalladiyar.blogspot.com/2005/10/2.html
http://nalladiyar.blogspot.com/2005/11/3.html

நல்லடியார் மற்றும் நண்பனின் பதில்களில் இருந்து ,பொங்கலைத் தமிழர் பண்டிகையாக ஏற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக இவர்கள் நினைப்பது.

1.கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம்.அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு பொருளைக் கொண்டு வழிபாடுதல்.

நான் சொல்ல வருவதே இதுதான்.பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.எதையும் வழிபாடு செய்யவேண்டாம். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகவும் எதுவும் செய்யவேண்டாம்.


2.பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது.

இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றியைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். இதே பொங்கலை, இஸ்லாம் நண்பர்கள் வைத்து அல்லாவுக்கும், அவர்கள் விரும்பும் (இஸ்லாம் நெறிப்படி) வேறு மனிதர்களுக்கோ பெரியவர்களுக்கோ நன்றி சொல்லிக் கொண்டாடலாம்.

3.பொங்கல் கொண்டாட்டத்தில் சூரிய வழிபாடு உள்ளது.

மீண்டும் நான் சொல்வது. சூரியனுக்கு (கடவுள் இல்லை...சூரியன் என்ற கோளுக்கு அது நமக்கு ஒளி தருவதற்காக.), விவசாயிக்கு, மாட்டுக்கு...என்று நன்றி சொல்வதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு கிடையாது. வழிபாடுகள் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

4.பொங்கலுக்கு முன்வரும் போகி இந்திரவிழா. அது எங்களுக்குப் பொருந்தாது. நல்லடியார் காட்டும் ஆதாரம் http://uyirppu.yarl.net/archives/000190.html

இந்த இந்திரக் கதை எப்படியோ தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது. சிலப்பதிகார இந்திரவிழாவிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதாகப் பேசப்படுகிறது. இது பற்றிய எனது எண்ணங்கள்.
போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html


அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:


இந்துக்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள், அதனால் நாங்கள் இஸ்லாமியர்கள் கொண்டாடத் தடை உள்ளதாக நினைப்பது தவறு.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும்.ஆனால் அதையே காரணம் காட்டி ஒரு நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

தமிழர் சார்பாக கருத்து தெரிவிக்க எனக்கு உரிமையை அந்த இரு தரப்பினரும் (குஷ்பூ ஆதரவு & எதிர்ப்பு) கொடுக்கவில்லை என்பதால், நான் என் சார்பாக மட்டும் இதனை எப்படிச் சிறப்பாக சாதி, மத அடையாளம் இல்லாமல் சமூக விழாவாகக் கொண்டாடலாம் என்பதை இன்னொரு நாள் பதிகிறேன்.


****************



****************

Wednesday, November 23, 2005

சாய்பாபாவின் விழா மனது கஷ்டமாய் இருக்கிறது.



பதிவு 21: சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள்- மனது கஷ்டமாய் இருக்கிறது.

நாத்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளும், ஆத்திகத்துக்குள்ளேயே இருக்கும் மத வேறுபாடுகளும், ஒரு மத அமைப்புக்குள்ளேயே இருக்கும் சாதிப் (அல்லது உட்பிரிவுகள்) பிரிவுகளும் மனித இனம் இருக்கும் வரைக்கும் தீராதவை. இது பற்றிய விவாதங்களும் முடிவு பெறாதவை. கோவில்களில் இருக்கும் பணம் சார்ந்த அணுகுமுறைகளும் கடவுளைக் கும்பிடுவதில் புகுத்தப்பட்டுள்ள பல இடியாப்பச் சிக்கல்களும் (சாமிய இப்படிக் கும்பிடனும், இப்படி பூசை செய்யாட்டி கெட்டது... ) ,சாதீய அணுகு முறைகளும், என்னை கோவில்களில் இருந்து வெகுதூரத்தில் வைத்து விட்டன.

மேலும் கடவுள் பற்றிய எனது நம்பிக்கைகள் சிறுவயதில் இருந்த அளவிற்கு இப்போது இல்லை.எனது முயற்சிகள் தோல்வி அடைந்து அலுப்பாய் இருக்கும் போது "கடவுள் நகரத்தில்" உள்ள எல்லாக் கடவுள்களுக்கும் முருகா என்றோ, இன்சா அல்லா என்றோ, ஓ ஜீசஸ் என்றோ ஒரு தூதுவிடுவேன். மற்றவர்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. :-). "இன்சா அல்லா " என்ற வார்த்தை நான் குவைத்தில் வேலை பார்க்கும் போது வந்து ஒட்டிக்கொண்டது. கிறித்துவப் பள்ளிகளில் படித்ததால் ஜீசமும் , சிறுவயதில் ராணிமுத்துக் காலண்டரில் பார்த்த அழகான உருவத்தால் முருகனும மனதில் ஒட்டிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிறருக்கு உதவுவதன் மூலம் மிக எளிதாக மன அமைதியை அடைய முடிவதால் கடவுளைவிட்டு வெகுதொலைவுக்கு வந்துவிட்டேன். குழந்தைகளை நல்வழிப்படுத்த இந்த (சாப்பிடாட்டி சாமி கோச்சுக்கும் என்பது போன்ற பய முறுத்தல்களுக்கு) நம்பிக்கைகள் உதவும் என்பதற்காகவே சில சமயங்களில் கோவிலுக்குச் செல்வது உண்டு.

இன்று சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க நேர்ந்தது. சுனாமியாலும் , மழை வெள்ளத்தாலும் இன்னும் பல இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருக்கும் பல குழந்தைகளைக் கொண்ட நமது நாட்டில், இப்படி ஒரு ஆடம்பர விழா தேவையா?. பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களும் சில சினிமா நட்சத்திரங்களும் செய்யும் இந்த ஆடம்பர விழாக்களை இவர் ஏன் செய்ய வேண்டும்?
















படங்கள்: தினமலர்

இவர் கடவுளா, கடவுளின் அவதாரமா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.இவரையோ அல்லது வேறு எந்த மனிதர்களியும் கடவுளாகவோ அல்லது கடவுளின் அவதாரமாகவோ நான் பார்க்கவில்லை. இவர் ஏற்கனவே செய்துள்ள ஒரு தண்ணீர்த்திட்டம் மக்களுக்கு உண்மையாக உபயோகமானது. எப்படியோ ஒரு பெரிய கூட்டமும் பணமும்,செல்வாக்கும் இவருக்கு சேர்ந்துவிட்டது. இதை நல்லமுறையில் பயன்படுத்தி மேலும் பல நல்ல திட்டங்களைச் செய்யலாமே.அதுபோல் இவர் மனது வைத்தால் பல காரியங்கள் செய்யலாம்.

பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை. கொண்டாட்டங்கள் தேவைதான் ஆனால் கட்டவுட்டும்,அரசியல் தலைவர்களைப் போல கார் பவனியும் கொஞ்சம் என்னை வெட்கப்படவைக்கிறது. இவருக்கு முன்னோடியாக அறியப்படும் "ஸ்ரீடி பாபா" http://www.saibaba.org/ இந்த அளவுக்கு கொண்டாட்டங்களை விரும்பியவராகத் தெரியவில்லை.

சத்ய சாய் பாபாவின் 80 ஆவது பிறந்தநாள் விழாப்படங்களை தினமலரில் பார்க்க
http://www.dinamalar.com/photo_album/23nov2005/index.asp


பி.கு:
இவருக்கு ஆதரவாக http://www.sathyasai.org/ போன்ற எண்ணற்ற செய்தித்தளங்களும் ,இவர் செய்யும் செயல்களை விமர்சித்தும் பல செய்தித்தளங்களும் உள்ளது. இவரைப்பற்றி BBC ன் செய்திகள் பல முறை வலைப்பதிவுகளில் விவாதிக்கப்பட்டு விட்டது.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

மேலும் இவரது முன்னாள் பக்தர்கள் பல செய்திகளை இந்த இணையத்தளதில் பதிந்துள்ளார்கள்.http://www.exbaba.com/

****************



****************

Monday, November 21, 2005

தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

பதிவு20:பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.

ன்புள்ள தமிழ் வலைப்பதிவு நண்பர்களே,
நாம் சாதி,மத,சமய மற்றும் இன்னபிற கொள்கைகளில் மாறுபட்டு இருந்தாலும் தமிழ், தமிழர் என்பதில் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறோம். சாதி,மத,சமய மற்றும் பல கருத்து வேறுபாடுகள் மனித சமுதாயம் உள்ள வரை இருக்கப்போவது நிச்சயம். இந்த வேறுபாடுகள் முற்றும் அழிந்தால் நாம் அனைவரும் நிச்சயம் சந்தோசப்படுவோம். அதில் சந்தேகமே இல்லை.
நமக்குள் கருத்து வேறுபாடு கொண்ட இந்த விசயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாம் அனைவரும் இணைந்து நிற்கும் இந்த தமிழ், தமிழர் என்ற புள்ளியில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

துன்பங்கள் (சுனாமி போன்ற இயற்கைத் துயரங்கள்) என்று வரும் போது நாம் அனைவரும் நமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நமது விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக , அடுத்தவர் கலந்து கொள்ள முடியாத, கலந்து கொள்ள விரும்பாத குட்டிக் குட்டிக் தீவாகவே உள்ளது.மேலும் ஒருவர் கொண்டாடும் சாதி,மத விழாக்கள் அடுத்தவர்களுக்கு பிரச்சனை தருவதாகவோ ,சீண்டுவதாகவோ பல சமயங்களில் உள்ளது. இந்த தவறுகளை எல்லாம் சாதி,மத வேறுபாடுகள் உள்ளவரை முற்றிலுமாக நம்மால் நீக்க முடியாது.

மனித வாழ்விற்கு கொண்டாட்டங்கள் மிகவும் அவசியமானவை, அவைதான் மனித வாழ்வை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பவை என்று நம்புகிறவன் நான். நீங்களும் இதனை ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.நாம் அனைவரும் சேர்ந்து, சாதி மத சமய வேறுபாடு இல்லாமல் சந்தோசமாக விமர்சையாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாள் இல்லை, என்பது எனது நெடுநாளைய ஆதங்கம். இவ்வாறு கொண்டாடுவதற்கு நாம் புதிதாக ஒரு பண்டிகையை கண்டுபிடிக்கத்தேவை இல்லை. அது அநாவசியமானதும் ஆகும்.

நமக்கு இதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இருந்தும் அது அவ்வளவாக கொண்டாடப்படுவது இல்லை. அதுதான் பொங்கல் பண்டிகை.

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்.

பொங்கல் திருநாள் ஒரு அறுவடைத் திருநாள்.

பொங்கல் திருநாள் நமக்காக உழைத்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

பொங்கல் திருநாள் வயலுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லும் நாள்.

இந்துக்கள் (யார் இந்துக்கள் என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். வேண்டுமானல் இந்துக்கள் என்று தன்னைத்தானே நம்புபவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.) என்று சொல்லப்படுவர்களைத் தவிர வேறு யார் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து இதனைக் கொண்டாடுகிறார்கள்? கிறித்துவ , முஸ்லிம் மதங்களில் ஒரு சிலர் இதனைத்னைத் தங்கள் விழாவாக,தமிழ் விழாவாக நினைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கும், தீபாவளிக்கும்,மற்ற சமய விழாக்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் யாரும் இந்த நன்றித் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு கொடுப்பது இல்லை.நான் விரும்புவது இதுதான். சாதி,மத,சமய மற்றும் எந்தவிதமான வித்தியாசங்களும் இல்லாமல்,ஒவ்வொரு தமிழனும் வெகு விமர்சையாக இந்த விழாவைக் கொண்டாட வேண்டும்.

இதில் எங்கு வந்தது சாதி, மதச்சடங்குகள்?
தமிழர்கள் அனைவரும் ஏன் இந்த விழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடக் கூடாது?

உங்களின் கருத்துகளை அறிய ஆசை.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html




****************



****************

Friday, November 18, 2005

பதிவு 19: இராஜாமணி (UTD) guilty in Waterview rape

நேற்று இரவு abc தொலைக்காட்சியில் Primetime என்னும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அமெரிக்க கல்லூரிகளில் மற்றும் Dorm எனப்படும் கல்லூரி விடுதிகளில் நடக்கும் திருட்டு,வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களைப் பற்றிக் காண்பித்தார்கள். நம்மூர் போன்று ராகிங் கொடுமை போல் இது அமெரிக்க மாணவர்களையும் ,பெற்றோர்களையும் கவலை கொள்ளச் செய்யும் செய்தி.


முதலில் பார்த்தது ஒரு கல்லூரி மாணவியிடம் காரைப் பறிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கடுமையான தலைக்காயம் அடைந்து இப்போது அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு 8 வயது குழந்தைபோல் பேச எழுத கற்று வருகிறார்.


இரண்டாவது சம்பவத்தில் ஒரு மாணவி அவளது அறையிலேயெ உயிருடன் கொளுத்தப்பட்டு விடுகிறார். இதற்கு காரணமானவன் கல்லூரிக்குச் சம்பந்தம் இல்லாத வெளிநபர்! எப்படி உள்ளே வந்தார்? கல்லூரி பாதுகாப்பு சரியில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் வாதம். பாதிக்கப்பட்ட பெண்ணே அவனை உள்ளே அழைத்து வந்து இருக்கலாம் என்பது வேறுசிலரின் வாதம். எது எப்படியோ இது கொடுமை.


மூன்றாவது பார்த்த சம்பவம்தான் நான் இதை இங்கே எழுதக் காரணம்.
தொலைக்காட்சியில் வந்த மூன்றாவது சம்பவத்தின் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் இந்தியர்.அவர் செய்த குற்றம் தன்னுடன் சேர்ந்து படிக்க வந்த (Join Study ??) தனது சக வகுப்பு தோழியை மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது. அவரது பெயர் "பிரதாப் இராஜாமணி" (University of Texas at Dallas) .

பார்க்க இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். இவர் செய்த அனைத்தையும் ஒத்துக் கொள்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணும் (Amy Smith) இந்தியராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.இவர்கள் இருவரும் இந்தியாவில் கல்லூரிக் காலத்தில் இருந்தே நண்பர்கள் என்று இருவமே ஒத்துக் கொள்கிறார்கள். இராஜாமணி இவர்களின் உறவைக் காதல் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணோ இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.


"..Smith testified that Rajamani, a "best friend" she knew from her college days in India..."
Rajamani maintained throughout the trial that his relationship with Smith had been an intimate one, while the victim maintained the two were "best friends," but not intimate.


இராஜாமணி தான் செய்த செயலுக்கு கூறும் காரணம்தான் என்னை நோகடித்தது.


Rajamani testified he planned the attack after learning of Smith's impending arranged marriage....."In Southern India ... they marry them if someone does what I did, rape," he said. "I was looking for an opportunity to convince her parents for this particular marriage.

வன்புணர்வின் மூலம் திருமணம் சாத்தியமாகலாம் என்று ஊடகங்களின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் சொல்லிவந்த குப்பையான கருத்துக்கள் இவரை இவ்வாறு எண்ண வைத்துவிட்டது.இவர் தனது நெடுநாளைய தோழிக்குச் செய்த நம்பிக்கைத்துரோகம் இவரை ஒருநாளாவது வருத்தமடையச் செய்யும்.

மேலும் படிக்க:
http://www.utdmercury.com/media/paper691/news/2005/07/18/WebExclusive/Rajamani.Guilty.In.Waterview.Rape-967777.shtml

Tuesday, November 15, 2005

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

பதிவு18:போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?

போகிப் பண்டிகை பற்றி யாராவது ஆராய்ச்சி செய்து சொன்னால் நல்லது. எனக்குத் தெரிந்து யாரும் எங்கள் கிராமத்தில் வேண்டாத பொருட்களைத் தீ வைத்துக் கொழுத்தி புகை போட்டுப் பார்த்ததில்லை. "போகி" என்ற வார்த்தை தமிழ் போல் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த ஹிந்தி அறிவில், இரயில் பெட்டியைத்தான் போகி என்று சொல்வார்கள் ஹிந்திக்கார மக்கள். அப்புறம் இது எப்படி தமிழ்நாடு வந்து இப்படிக் குப்பையாய் நாறுகிறது? இது பற்றி கூகிள் ஆண்டவரிடம் கேட்டால் அவர் கீழ்க்கண்டவாறு சோதிடம் சொல்கிறார்.

"Bogi festival or Bhogi is the first day of Pongal and is celebrated in honor of Lord Indra, "the God of Clouds and Rains". Lord Indra is worshiped for the abundance of harvest, thereby bringing plenty and prosperity to the land. Thus, this day is also known as Indran"

http://www.familyculture.com/holidays/pongal.htm
http://www.pongalfestival.org/bogi-festival.html

இந்திரன் கொஞ்சம் விவகாரமான ஆளு. குப்பைய எரிக்கிற சடங்கு அவருக்குப் பொருந்தும்.அவருக்கெல்லாம் மாலை போட்டா நன்றி சொல்ல முடியும்? ஆனா மழைக்கும் இந்த புகை மூட்டத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
குப்பைய எரிக்கிற, இந்த குப்பை-புகைத் திருவிழாவ சென்னையில் இருக்கும் போது பார்த்து "புகைந்து" இருக்கிறேன். அதிலும் குப்பை கிடைக்காத பட்சதில் இந்த
இ(ய)ந்திரமயமான குப்பை/பழைய பொருள் எரிப்புச் சடங்கை நிறைவேற்றுவதற்காக வாகனங்களின் (சைக்கிள், மோட்டார் சைக்கிள்) பழைய டயர்களை எரித்து புகை போடுவார்கள்.கிராமத்தில் பெரும்பாலான மக்கள் "புது துணிகூட கிடைக்கும் பழைய துணிக்கு எங்கே போவது" என்று பழைய துணியை சேர்த்து வைத்ததைத்தான் பார்த்து இருக்கிறேன். எங்கள் அம்மா கிழிந்து போன பழைய துணிகளை, ஒரு மஞ்சப் பையில் அடைத்து தைத்து, பல தலையணைகளை செய்து வைப்பார்.

துணிகள் நல்ல உபயோகத்தில் இருக்கும் போது எங்களால் போட முடியாமல் போய்விட்டால் (வளர்ச்சி காரணமாக) அது நெருங்கிய சொந்தங்களுக்கு போய்ச் சேரும். இப்போது நான் அமெரிக்காவில் இருந்தாலும் , நான் என் அம்மாவிடம் பேசும் போது ,ஒவ்வொரு முறையும் அவர் "பழைய துணியை கீழே போடாமல் எடுத்துவாடா" என்று சொல்லுவார்.

13 வயசில் நான் போட்ட எனது முதல் "பேண்ட்" எனது அத்தை மகனின் பழைய "பேண்ட்" தான். எனது அத்தைக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. எங்கள் வீட்டில் எனது அக்கா, அண்ணன் அப்புறம் நான். பள்ளிப் புத்தகங்ளில் ஆரம்பித்து மறு உபயோகத்திற்கு தோதாக உள்ள அனைத்து பொருட்களும் ஒரு முழுச் சுற்று சுற்றிவிடும். இதில் எனது அத்தை மகள் தான் கடைசி. பாவம்,அவளுக்குப் போகும் போது புத்தகம் கிழிந்து நொந்து நூலாகி இருக்கும். இடையில் அரசாங்கம் பாட அட்டவணையை மாற்றிவிட்டால் அந்தச் சுற்றில் வருபவர்களுக்கு மணக்க மணக்க புதுப் புத்தகம் கிடைக்கும்.


அமெரிக்கா வந்தபின்பு இங்குள்ள "Yard Sale" (Garage Sale) எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமான விசயம். சொந்த வீடு உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் அவர்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை Sofa ல் ஆரம்பித்து உள்ளாடைகள் வரை அனைத்தையும் குறைந்த விலைக்கு விற்பார்கள். மறுஉபயோகத்திற்குத் தோதான பொருட்களை குப்பைத்தொட்டிக்கு அருகே பத்திரமாக விட்டுச் செல்வார்கள். எங்கள் அலுவலகத்தில் "Scrap Swap" நடக்கும் (Give one scrap and take one scrap).நமக்குத் தேவையில்லாத அல்லது நாம் பயன்படுத்தி முடித்த பொருட்கள் பிறருக்குத் தேவைப்படுவதாய் இருக்கலாம். Recycling என்பதை இங்கே அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம். குப்பைக்கு அருகில் விடப்பட்டுள்ள பழைய பொருட்களை யாருக்கும் தெரியாமல் இரவில் எடுத்து வரும் நமது மக்களையும் , பகல் நேரத்தில் எந்த குற்றவுணர்வோ, கூச்சமோ இல்லாமல் பொறுமையாக அதேவகைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அமெரிக்க மக்களையும் பார்க்கலாம்.


Yard Sale செய்வது ஒரு கலை. இதை விளம்பரப்படுத்த , விற்பனை பற்றி அறிந்து கொள்ள என்றே பல இணையத் தளங்கள் உள்ளன.

Garage Sale Hunter
http://www.garagesalehunter.com/
How To Operate A Successful Garage Sale
http://www.ifg-inc.com/Consumer_Reports/GarageSale.shtml
Garage Sale Tools
http://garagesaletools.com/

அதே போல் "Yard Sale" ல் பொருட்கள் வாங்குதையே பொழுது போக்காகக் கொண்ட நமது மக்களும் உண்டு. நான் எனது மூத்த பையனுக்கு வாங்கிய Crib (குழந்தைக் கட்டில்) எனது பக்கத்து வீட்டு அமெரிக்கரிடம் இருந்து இலவசமாகப் பெற்றது. அதே போல் மற்றொரு தமிழ் நண்பரிடம் இருந்து , அவரது பையனுக்குச் சிறியதாகிப்போன உடைகளை எனது மகனுக்குப் பயன் படுத்தியுள்ளோம்.

இங்குள்ள சில நண்பர்களுடன் எங்களுக்குள் பழைய துணிகள் , பழைய விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் மறு உபயோகம் செய்து கொள்வதில் எந்த தயக்கமோ,கூச்சம், குற்றவுணர்வோ ஏற்பட்டது இல்லை. இப்போது எங்களிடம் பல குழந்தைச் சாமான்கள் சேர்ந்து விட்டது. பையனுக்கு 4 வயதாகிவிட்டதால் அவனின் பொருட்களும், மகளின் ஒரு வயது விளையாட்டுப் பொருட்களும் பல உண்டு. எனக்குத் தெரிந்து நெருங்கிய வட்டத்தில் யாருக்கும் தேவை இல்லாததால் ,இதை வேறு சில தமிழ் நண்பர்களிடம், அவர்களுக்கு வேண்டுமா ( அவர்கள் அந்தப் பொருட்களின் தேவைக் காலத்தில் உள்ளார்கள்) என்று கேட்டால், யாரும் வேண்டும் என்று சொல்வது இல்லை. நாங்கள் எல்லாத்தையும் இங்குள்ள பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க உள்ளோம்.நம் மக்கள் ஏன் இந்த விசயத்தில் இப்படி இருக்கிறார்கள்.

அது அவரவர் உரிமை, பழக்க வழக்கம் என்றாலும் அதற்கான காரணங்களாக நான் நினைப்பது.
**முதல் குழந்தைக்கு பழைய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.
**பழைய பொருட்களைத் தெரிந்தவரிடம் வாங்குவது தவறு. (கார் இதற்கு விதி விலக்கு!)
**பழைய பொருட்களை வாங்குவது கெளரவக் குறையானது.
**நம்மை நாலுபேர் தப்பாக நினைத்துக் கொள்வார்கள்.
**சாஸ்திர சம்பிரதாய விசயங்கள்...

பிச்சைக்காரர்களும், வீட்டு வேலைக்காரப் பெண்களும்தான் நம்மூரில் பழைய துணிகளைச் சந்தோசமாப் பெறுபவர்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் இந்தப் பழைய துணியை(பொருட்களை) நல்ல முறையில் சுத்தமாக அடுத்தருக்கு கொடுக்கவும் மாட்டார்கள். அப்படியே தேவைப்படுபவர்களுக்கு நாம் நல்ல முறையில் இந்த உதவிகளைச் செய்ய முயன்றாலும், அவர்கள்(உதவி பெறுபவர்கள்) கேட்ட நம்மைத் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து பலர் இந்த வகை உதவி செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.

1.இந்த பழைய பொருள்/குப்பை எரிக்கும் இந்திரச் சடங்கு தேவையா?
2.இது எப்போது இருந்து தமிழ் கலாச்சாரமாக மாறியது?
3.குப்பை எரிப்பினால் வரும் புகைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்?
4.இந்த "இந்திரன்" சாமி எப்படி இந்தக் குப்பையோட சம்பந்தப்படுறார்?
5.இந்துக்களைத் தவிர யாரும் இப்படிக் குப்பைத் எரிப்பு போன்ற பண்டிகைகளை வேறு எங்கும் நடத்துகிறார்களா?


தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


****************


****************

படங்கள்:
நன்றி Hindu மற்றும் பிற இணையப் பக்கங்கள்.

Monday, November 14, 2005

17: ஜம்மு-காஷ்மீர் வரைபடம்(Map) குழப்பும் இந்தியா


இந்தியனாப் பொறந்த ஒவ்வொருவனுக்கும் இன்னமும் விடைதெரியாத அல்லது குழப்பமான கேள்வி எதுன்னு கேட்டா இந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றிய வரைபடம் முக்கியமா இடம் பெறும். அப்படி உங்களுக்கு இது அவ்வளவு முக்கியமாத் தெரியலைனா ப்ளீஸ் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க. உங்களுக்குப் பிடிக்காதத படிச்சுட்டு சும்மா என்னைய போட்டு தாக்கக்கூடாது.இப்போதைக்கு ஜனரஞ்சகமான, சுவாரசியமான விவாதம் குஷ்பூ பற்றியதுதான் அதப்பத்தி இங்க நிறையப் படிக்கலாம். இதைவிடக் கொடுமை என்னன்னா இந்த திருப்பதி சாமி சும்மா இருந்தாலும் அவரோட அடிப்பொடிகள் பெண்கள் பூ வச்சா சாமி கோச்சிக்கும் அப்படீன்னு சொல்லியிருக்கிறதா ஒரு கேள்வி. குஷ்பூவைப் பத்தியோ அல்லது வெறும் பூவைப் பத்தியோ நம்ம அறிவுக்கு ஒரு மண்ணும் புரியல. சுகாசினி மேடம் வந்து குட்டைய குழப்புறாங்க . வழிதவறி இங்க வந்தவங்கள் எல்லாம் உஷாவோட பதிவுல போயி குஷ்பூ ஜோதில ஐக்கியமாயிருங்க. பின்னால குஷ்பூ முதலமைச்சரா வந்தாலும் வந்துருவார்.

சரி இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.தமிழ் இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், யாகூ குழுமங்கள் போன்ற பலவற்றில் இருக்குற குழாச்சண்டை தெருச்சண்டை போதாது என்று கருத்து என்ற புதிய விவாதத் தளம் வந்து இருக்கிறது. நாம இங்கே செய்ற விவாதங்கள் நமது முன்னோடிகளான சட்டசபை, மக்களவை உறுப்பினர்களின் விவாதங்களைவிட படு சுவராசியமாக போய்க்கொண்டு இருக்கும் போது இதற்கென்றே ஒரு விவாதத் தளமா? எது எப்படியோ அவர்களும் அவர்கள் பங்குக்கு பேசிவிட்டுப் போகட்டும். தமிழன் பேசாம இருந்தா டீக்கடை பிஸினஸ் எல்லாம் படுத்திடும் . அப்புறம் என்னையமாதிரி எழுதற ஆளுங்களை யாரு படிக்கிறது?

கருத்து இணையத்தளத்துல வந்திருக்கும் இந்தியாவின் வரைபடம் தப்பும் தவறுமா இருகிறதா நம்ம ரவி புலம்பியிருக்கார். அவர் கருத்துவின் இந்தியா படம் பற்றி புலம்பினா நம்ம பத்ரி "...இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை..." அப்படீன்னு சொல்கிறார்.


ரொம்ப நாளைக்கு முன்னேலேயே நம்ம இளவஞ்சி இந்த வரைபட குழப்படிகளை தனது "இருவகை இந்தியா"
என்ற பதிவுல சொல்லிய்ருந்தார். அப்போதே நான் இது பற்றி அவரது பதிவில் நான் எனது கருத்தைச் சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு.

இந்தியாவில் பிறந்த/ கல்வி பயின்ற / ஓரளவு இந்தியாவைப் பற்றி அறிந்த அனைவரும் முழுமையான தலையுடன் கூடிய இந்தியாதான் உண்மையான இந்தியா என்று நம்புவார்கள். எங்காவது தலையற்ற இந்தியாவைப் பற்றிப் படிக்க/பார்க்க நேர்ந்தால் இவர்களுக்கு(இவர்களில் நானும் ஒருவன்) கோவம் வருவது இயல்பு. இந்தக் கோவச் சமாச்சாரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்திவிட்டு உண்மை என்ன என்று அறியவேண்டுமானால் நமக்கு உள்ள ஒரே வழி நமது அரசாங்கத்திடம் கேட்பது. கேட்பது என்ன அவ்வளவு சுலபமா என்ன? யாருகிட்ட கேட்கிறது? சும்மா நாட்டை விட்டு அனாதையா ஊர்சுத்திக்கிட்டு இருக்கிற என்னைய மாதிரி பரதேசிகளுக்கெல்லாம் இணையமே உலகம். அதில் வரும் தகவல்களே உண்மை.


இந்தியாவின் புதிய இணையவாசல் http://www.india.gov.in/ ல் தேடியபோது, அவர்கள் அட சும்மா போய்யா POK (Pakistan Occupied Kashmir ) என்பதெல்லாம் கதை, நம்ம தலை நம்மகிட்டத்தான் இருக்கு. வேணுமின்னா நீயும் வந்து நிலம் வாங்கிக்க அப்படீன்னு சொன்னாங்க. http://www.india.gov.in/maps/jammu.php அடடா எவ்வள்வு சுலபமா போச்சு நம்ம கேள்வி. அப்படீன்னு சந்தோசப்பட்டுக்கிட்டேன். இது போன்ற இணையத்தகவல்களால் என் போன்றவர்களுக்கு எவ்வளவு வசதி. சும்மாவா பின்னே? சின்ன வயசில தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் பார்த்த , படித்த இந்தியா உண்மைதான். POK எல்லாம் சும்மா டுபாக்கூர் மேட்டர் என்று தெரியவரும் போது எவ்வள்வு மகிழ்ச்சி. நம்ம ஆசை அதோட நின்னு இருந்தா பரவாயில்லை. ஆசை யாரவிட்டது. தமிழ் நாட்டுல யார் யாரோ கட்சி ஆரம்பிக்குறாக, எல்லாரும் அகில இந்திய கட்சியாத்தான் ஆரம்பிக்குறாங்க. தமிழ் நாட்டுல இருக்குற ஒரு அகில இந்திய கட்சியில இருந்து நாளைக்கே எனனை ஒரு M.P யாத் தேர்ந்துடுக்க விருப்பம் தெரிவிச்சா சும்மா தொகுதிக்காக லோக்கல் மக்களிடம் சண்டை போடக்கூடாதுன்னு ஒரு பரந்த
மனப்பான்மையில் ஜம்மு-காஷ்மீர் பக்கம் ஒரு தொகுதியைத் தேடினால் அதைவிட எனக்குப் பேரானந்தம். ஆமா POK ல நம்ம நிக்கலாம். நம்ம தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ஜே. அவர்கள் இணையத்தளத்துல, POK உட்பட எல்லாப் பகுதியையும் தொகுதியாப் பிரிச்சு வச்சுருக்காங்க.



இப்படியே இந்த ஆசைய நான் நிறுத்தி இருந்தாப் பரவாயில்லை. கொஞ்சம் பேராசைப்பட்டு, நம்ம M.P தொகுதில (அதாவது உயிருக்குப் பயப்படாம நான் இந்த POK பகுதில நின்னு ஒருவேளை வெற்றி பெற்றால்) எத்தனை M.L.A இருக்குறாங்க அப்படீன்னு பார்க்க ஆசைப்பட்டதுதான் தப்பாப் போச்சு. பின்ன என்னங்க ஒரு Assembly Constituency கூட இந்தப்பக்கம் கிடையாது ,தமிழ்நாட்டுக்கே ஓடிப்போயிடு அப்படீன்னு அதே தேர்தல் ஆணையம் சொல்லுது. ஒரு பக்கம் M.P தொகுதி இருக்குன்னு சொல்றாங்க. மறுபக்கம் ஒரு Assembly Constituency யைகூட POK பக்கம் காட்ட மாட்டேன்னு சொல்றாங்க. .( http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm , http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm )






















இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா என்னையப் போட்டு குழப்பினபடியால் , தீவிரவாதிகளின் குண்டுக்குப் பயப்படாவிட்டாலும் நம்ம அரசாங்கம் படுத்தும் இந்தத் தகவல் குழப்பத்துக்குப் பயந்து கொஞ்ச நாளைக்கு ஜம்மு-காஷ்மீர் M.P ஆசைக்கு மூட்டை கட்டி வைக்குறதா இருக்கேன்.

யாருங்க இதப் படிச்சுட்டு கருத்து சொல்லாமப் போறது. ப்ளீஸ் நம்ம தலை எங்க, எப்படி இருக்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்.

காஷ்மீர் சம்பந்தமான சக வலைப்பதிவர்களின் கருத்துக்கள்:
தருமியின் "MY KASHMIR PROBLEM"
http://data-entry-bpo.com/data-entry/2005/08/03/my-kashmir-problem/

தமிழ் சசி யின் காஷ்மீரின் விடுதலைக் கட்டுரைகள்
http://thamizhsasi.blogspot.com/2005/06/1.html
http://thamizhsasi.blogspot.com/2005/07/2.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/3.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/4.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/5.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/6.html


என்னால் முடிந்தது இந்தக் கடிதத்தை அனுப்பியது மட்டுமே
-----------------------------------------------------------------

Greetings NIC Team (National Informatics Centre),
I am very happy to see our new website http://www.india.gov.in/. It looks great. I want to thank and appreciate your work. NIC team deserves lot for this for great work.

I was comparing the information found in ECI ( Election Commission of India) pages and new website http://www.india.gov.in/ and I got confused. I wanted to bring this to your knowledge.

This is about the Jammu & Kashmir Map that you put on this site.Jammu & Kashmir map displayed in this http://www.india.gov.in/maps/jammu.php page does not match with the Election Commission's Map.

Conflict found within the ECI webpage information.

ECI website agrees that POK is not a part of INDIA. http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm

There is NO Assembly Constituency defined in this POK area by ECI. http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm .

But for some reason they (ECI) have highlighted the POK area for Parliamentary Constituencies in a different page. http://eci.gov.in/ElectionMaps/PC/S09/index_fs.htm

Conflicts between ECI and www.india.gov.in page.

As per ECI map POK is a separate area and not a part of our country. Also we do not see any Assembly Constituencies in that area. Your site http://www.india.gov.in/maps/jammu.php
shows that POK is within the (part of) Jammu & Kashmir state.I do not want to debate on the Jammu & Kashmir issue and it is not my point. But as a citizen of India I expect that our website should show the correct information. There should not be any conflict between two government WebPages.

Since http://www.india.gov.in is the India's main Website, I would request you to fix this conflict. ECI website is maintained by CMC http://www.cmcltd.com/ may be you can work with them to put a SOLID and correct information about our country.
=============================================

மேலே கண்ட கடிதம் Feedback option வழியாக "http://mit.gov.in/" க்கும் அனுப்பினேன். மேற்கொண்டு email வழியாக CMC ( lh_corp@cmcltd.com ) மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் ( feedback@eci.gov.in) அனுப்பிவிட்டேன்.


****************



****************