Wednesday, July 11, 2007

Rs Vs $$$ யார் எக்கேடு கெட்டால் என்ன?

பெரும்பாலான NRI க்கள் இந்தியாவின் ரூபாய் எப்போது குறையும் என்றே காத்து இருப்பார்கள். சந்தையில் தனது நாட்டு நாணய மதிப்பு குறைந்தால் சந்தோசப்படும் வித்தியாசமான மனிதர்கள். இவர்கள் மட்டும் அல்ல, உள்நாட்டில் இருந்து கொண்டே ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பருப்புக்கடை முதலாளி தொடங்கி, பனியன் தயாரிப்பு ஓனர் முதல் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் கார்ப்புரேட் கம்பெனி வரை இந்தியாவின் நாணய மதிப்பு அதிகமானால் அதற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். Rs குறைந்து $$$ அதிகமானால் நல்லதே (யார் எக்கேடு கெட்டால் என்ன? )

பணவீக்கம் என்ற ஒன்று இந்தியாவில் வாழும் ஒரு சாதாண விவசாயியை,கூலித் தொழில் செய்பவனை எப்படி பாடாய் படுத்துகிறது என்று இவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை. சுயநலம் இருக்கலாம் ஆனால், அடுத்தவன் அழிவில் அது வரக்கூடாது . மற்றும் ஒரு தேசம் நாசமாய்ப் போகட்டும் என்று எண்ணுவது தவறு.

இந்தியாவின் பண மதிப்பு குறைய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்களுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதும் ,இல்லாததும் அவர்களின் சுய மதிப்பீடு சார்ந்த விசயம். இந்தியாவின் ரூபாய் மதிப்பு எப்பொழுது குறையும் என்று காத்து இருப்பவர்களும்,வெளிநாட்டு வருமானத்திற்கு வரி இல்லை என்ற போதும் இன்னும் ஹவாலாவாக மாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அவரவரின் உணர்ச்சிகளை சுய மதிப்பீடு செய்து கொள்ளட்டும்.

அதிக மதிப்பை எட்டிய கரன்ஸிகளை உடைய நாடுகள் ஒன்றும் பிச்சைக்கார நாடுகள் இல்லை.அவர்களின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இன்னும் 1 cent ம் 10 fils ம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.பைசாதான் அழிந்துவிட்டது பணவீக்கத்தால்.

இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும், அதை கட்டுப்படுத்தக்கூடாது அப்போதுதான் $$ ன் மதிப்பு ரூபாய்க்கு எதிராக உயரும் என்று நினைப்பது பச்சையான சுயநலம் இன்றி வேறு என்ன? பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது?

இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.."ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை... ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது" என்று சொல்லலாம். இப்படியே சிந்திப்பதால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப் பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும்.


ரூபாயின் மதிப்பு கூடினால் பணவீக்கம் குறையும் என்பது உண்மையானால்,அதன் பயன்
சாமான்யனுக்கும் கிட்டும்.

பணவீக்கம் எக்கேடு கெட்டால் என்ன, ரூபாயின் மதிப்பு குறைந்தால் சரி என்றால்,
அதன் பயன் சாமான்யனுக்கு கிட்டாது.ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் பணவீக்கம் குறையும் என்பதே எனது புரிதல்.

உள்நாட்டுப்பிரச்சனை,பொருளாதாரம் மற்றும் சர்வதேச பிரச்சனைகளால் $ன் மதிப்பு அதுவாக குறையும் போது , அதனைக் கொண்டு அளக்கப்படும் மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்ந்து காணப்படுவது இயற்கை. இந்த நேரத்தில் நமது ரிசர்வ் வங்கி டாலரை வாங்குவதும், அதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டு டாலர் சரியாமலும், ரூபாய் அதிகம் உயராமல் இருக்கும்படி செய்து ,ரூபாய் உயர்வதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் என்ன வகை பொருளாதாரம் என்று இன்றுவரை புரிந்தது இல்லை.

எனக்கு புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பணவீக்கத்தால் அழியும் சில வாழ்க்கைகள் தெரியும் என்றே நினைக்கிறேன்.பொருளாதாரப் புலி மன்மோகனுக்கே இந்த விசயம் இப்போதுதான் புரிந்துள்ளது.

பண வீக்கம் குறைந்து ஒரு சாதாரண மனிதன் தான் வாங்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் அது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு ரூபாயின் மதிப்பு கூட வேண்டும்.

தொடர்புடைய பதிவு:

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?
http://stockintamil.wordpress.com/2007/07/10/indian-rupee-appreciates-to-nine-year-high

தகவலுக்காக:
Manmohan: taming inflation main aim http://www.hindu.com/2007/03/01/stories/2007030105441200.htm

Inflation in India is now uncontrollable because of Indian Government’s greed for Western money – PM Manmohan really scared now!
http://www.indiadaily.com/editorial/15407.asp

மற்றவர்களின் பார்வைகள்:

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்http://porulsey.blogspot.com/2007/07/blog-post.html

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?
http://ullal.blogspot.com/2007/06/blog-post_5067.html

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post.html

Picture Courtesy
http://www.savedahorses.com/