Thursday, December 27, 2012

மந்தையில் இருந்து விலகிய ஆடு

நேற்று ஒரு விழாவிற்குச் சென்று இருந்தேன். எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் ஒருவர், புதியதாக வீடு வாங்கியுள்ளார். அதற்காக பால் காய்ச்ச அழைத்து இருந்தார். புது வீட்டில் பால் காய்ச்சுவது என்பது  சடங்கு. சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் குடி வருபவர்கள், பால் காய்ச்ச தவறாமல் எங்கள் அம்மாவை அழைப்பார்கள். உப்பு, சக்கரை, மஞ்சள் அரிசி என்று சில பொருட்கள் இருக்கும். சாணி வைத்து மொழுகிய அடுப்பில், கோலம் இட்டு, பால் காய்ச்சுவார்கள். ஆளுக்கு அரை டம்ளர் பால் கொடுப்பதுடன் அந்த விழா நிறைவு அடையும். பின்னாட்களில் சிலர்  நியூட்ரின் சாக்லட்டுகளையும் விழாவில் சேர்த்துக்கொண்டார்கள். நியூட்ரின் சாக்லட் கொடுப்பவர்கள் ஏதோ பெரிய பணக்காரர்கள் போல் எங்கள் பார்வையில் தெரிவார்கள். முறுக்கு , கல்கோணா, கடலை மிட்டாய், நெய்மிட்டாய் சிறுவர்களான எங்களுக்கு, நியூட்ரின் சாக்லட்டு ஒரு மேல்தட்டு பண்டமாகவே இருந்து வந்தது.

என்னுடன் படித்த மஞ்சுளா ஊரில் வசதியான குடும்ப பெண். எனக்கும் அவளுக்குமான நட்பில் அவள் வீட்டில் இருந்து கொண்டுவரும் நியூட்ரின் சாக்லட்டு முக்கிய பங்கு வகித்தது. மஞ்சுளா பற்றி நிறைய‌ பேசவேண்டும். அதை வேறு ஒரு நாள் பார்த்துக் கொள்வோம். இப்படியாக வெறும் பால் காய்ச்சுவது என்று இருந்த சின்ன சடங்கு என் கண் முன்னாலேயே கெரகப்பிரவேசம் என்று வேசம் கட்டியது. அப்படியான முதல் அனுபவம், எனக்கு எங்கள் வீட்டில் குடியிருந்து , பின்னர் தனியாக வீடு கட்டிச் சென்ற பொன்னையா ஆசிரியரால் வந்தது. அவர் விவசாயி கம் ஆசிரியர். மொசைக் தரையுடன் கட்டிய அந்த வீடு சினிமாவில் பார்க்கும் வீட்டை ஒத்ததாக இருந்தது என்று எண்ணிக்கொண்டேன். அங்கு நடந்த சில சடங்குகள் எனக்கு முற்றிலும் புதிதானது.

அய்யர் ஒருவர் வந்து எதோ மந்திரம் சொல்லி எதோ செய்து கொண்டிருந்தார். பெண்களாக (அம்மாக்கள் , அக்காமார்கள்) செய்யும் பால்காய்ச்சும் விழாவில் அன்க்கும் என் நண்பர்களுக்கும் இருந்த முக்கியத்துவம் இந்த விழாவில் இல்லை. விழாவில் கலந்து கொள்வதில் இருந்து மாறி, பார்வையாளர்களாகவே இருந்தோம். எல்லாம் முடிந்தவுடன் நல்ல உணவு பரிமாறப்பட்டது. அதற்குப்பிறகு புதுமனை புகுவிழா என்றும், கெரகப் பிரவேசம் என்றும் நடந்த இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளுதல் இல்லாமல், பார்வையாளர்களாகவே வந்து செல்லும் நிலைமை , என்போன்ற சிறுவர்களுக்கு புதிய அனுபவமாகவே இருந்தது. என் நண்பன் முருகன், ஒரு காலத்தில் இது போன்ற விழாக்களுக்கு வருவதை நிறுத்திவிட்டான். அவன் அம்மா வராவிட்டாலும், எங்களுடன் வந்துபோகும் அவன், பத்திரிக்கை கலாச்சாரத்தில், பத்திரிக்கை கொடுக்காத வீட்டிற்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதால் வரவில்லை என்று பின்னாட்களில் தெரிந்தது.

நேற்று நடந்த விழாவை  கவுஸ் வார்மிங் (House Warming ) என்றார்கள். இதற்கு முன்னால் இந்த ஊரில் இப்படியான பல கவுஸ் வார்மிங் சென்றுள்ளேன். எல்லா இடத்திலும் பெரும்பாலும் அவரவர் இஸ்டதெய்வ கோவிலில் இருந்து கொண்டை, பூணூல் சகிதம் ஒரு அய்யரை அழைத்து பல சடங்குகளைச் செய்வார்கள். நான் சொன்ன கலந்து கொள்ளல் அனுபவம் இருக்காது. ஒருவேளை நீங்கள் அதே இஸ்டதெய்வ கோவிலில் முக்கியஸ்தராகவோ அல்லது வீட்டு உரிமையாள‌ரின் நெருங்கிய நட்பாக இருந்தால், அவர்கள் செய்யும் பூசையில் எடுபிடி வேலைகளைச் செய்யலாம். சில இடங்களில் நான் பந்தி வேலையை எடுத்துக்கொள்வேன். மற்றபடி மனம்விட்டு வாழ்த்தவோ அல்லது உணர்வுகளைப் பகிரவோ இடம் இருக்காது. எல்லாத்தையும் கடவுளும் அவரின் பூசாரியும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களே.

சின்ன வயதில் கலந்துகொண்ட பால்காய்ச்சும் சடங்கில், அதிகாரபூர்வ பூசாரி இல்லையாதலால், அம்மாக்கள், அக்காமார்கள் அவர்களுக்கு தோணியதைச் செய்வார்கள். இருப்பவர்கள் நம்மவர்கள் என்பதால் ஏதும் அந்நியமாகப்படமால் ஏதோ நம் விழா போன்ற அனுபவத்தை தந்தது. இப்போது அப்படி இல்லை. கடவுளின் பார்வையாளர்களாகிப்போனோம்.

நேற்று நடந்த விழா இதில் இருந்து வித்தியாசம் பட்ட ஒன்று. ஃசிருடி பாபா என்ற பெரியவரின் பக்தர்களுக்கு என்று ஒரு குழு உள்ளது. இவர்கள் மாதம் ஒருமுறை ஒருவீட்டில் கூடி பாட்டுக்களைப்பாடி சந்தோசித்துக்கொள்வார்கள். புதியதாக வீடு வாங்கியவர் இந்தக் குழுவில் ஒருவர். வீட்டின் நடுவில் பட்டு, தங்கம் ,வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டி போன்ற (பல்லக்கு??) ஒன்றில் எளிமையாக உள்ள ஃசிருடி பாபாவின் படம் இருந்தது. ஃசிருடி பாபா இஸ்லாம் மற்றும் சனாதன மதங்களின் கலவையில் சில கருத்துகளை கொண்ட சூபி ஞானி.  ஆனால் அவர் சனாதனத்தில் இருக்கும் சாதிகளை ஆதரித்ததாக எனக்கு தெரிந்து இல்லை. அதுபோல அவர் மிகவும் எளிமையானவராகவே அவரைக் காட்டிக்கொள்ள முனைந்தவர். மேலும் அவரின் வழி நடப்பவர்களையும் எளிமையான வாழக்கை வாழவே அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாம் சூபி வழியையும், சனாதனத்தையும் கலந்து ஒருவகையான புதிய வழிபடலை ஆரம்பித்து வைத்தவர்.

ஆனால், இவரின் வழிபாட்டுக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பகட்டான (பட்டு , தங்கம், வைரம் ) ஆடை அலங்காரத்துடனே இருந்தனர். பிச்சைக்காரர் போல இருந்தவன் நானாகத்தான் இருப்பேன். அந்த பாபா இருந்திருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து இருப்பார் என்றே நினைக்கிறேன். அவரின் வழி நடப்பவர்கள் என்று யாரையும் அவரின் குழுவில் பார்க்க முடியவில்லை. பலர் எனக்கு நண்பர்களாக இருந்தபடியால் அவர்களைப்பற்றி நன்கு அறிவேன். அனைவரும் உலகில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் வாங்கிப்போட உழைத்துக்கொண்டு இருப்பவர்கள். தங்கம்,வெள்ளி,பட்டு என்று காதல் கொண்டவர்கள். இவர்கள் எப்படி சூபி வழி ஞானியிடம் என்று வியந்து கொண்டு இருந்தேன்.

மதங்கள் தாண்டிய பாபாவை, இவர்கள் ஹரி,ஓம், என்று சனாதன கடவுள் பெயரின் அழைத்து பாடிக்கொண்டு இருந்தார்கள். பல நேரம் பாபா பாபா என்று மந்திரம்போல அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். புட்டபர்த்தி பாபாவின் குழுவும் இந்த ஊரில் உண்டு . ஆனால் அவர்களில் இருந்து யாரையும் இங்கே பார்க்க முடியவில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர்கள், ரியல் எஸ்டேட் மனிதர்கள், விலை மதிப்பு மிக்க கார்களை வைத்து உள்ள மனிதர்கள் என்று அனைவரும் எளிமையான பாபாவை தூக்கி தங்க பல்லக்கில் வைத்து ஆராத்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

இப்படியான இடங்களுக்குச் செல்லும்போது, செல்லும் இடத்தின் தன்மை அறிந்து, அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பவன் நான். இருந்தாலும், பாட்டில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. பிச்சைக்கார உடையில் இருக்கும் பாபா என்னைப்பார்த்து , "நீயுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை, விட்டு விலகி இரு" என்று சொல்வதைப்போல இருந்தது. ஞானிகளின் கொள்கைகளைப் பின்பற்றாவிட்டாலும், அவர்களை அவமதிப்பதுபோல அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து, அவர்களுக்கு பட்டு,தங்கம் அணிவித்து மகிழ்வது என்ன மாதிரியான பக்தி என்று தெரியவில்லை.

இந்தக்கூட்டத்தைப் பார்க்கும்போது அவர்கள் அளவில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு பாபாவையும் மாற்றிவிட்டார்கள். ஞானிகளை வழிபடாமல் திண்ணையில் அவர்களுடன் உட்கார்ந்து "அப்புறம் சொல்லுங்க வாழ்க்கை எப்படி" என்று கேட்டு இயல்பாக வாழ முயற்சிக்கும் நான் ஏதோ திருவிழாவில் தொலைந்த ஆடுபோலத்தான் பல நேரம் உணர்ந்தேன். பாபாவைப்பற்றி பலருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. வழிபடலும் சடங்குகளுமே பிரதானமாய் இருந்தது.

நானும் மந்தையில் இருந்து விலகாமல் இவர்களுடன் இருந்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்து இருப்பேனோ என்னவோ? என்று எண்ணியபடியே விழா முடிந்து வெளியில் வந்தேன். பாபாவின் பக்தர்கள் இன்னும் பாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் விலையுயர்ந்த கார்கள் வெளியில் மழையில் நனைந்து கொண்டு இருந்தது.

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் ஜிப்ரான்

Wednesday, December 19, 2012

இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல

ட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல.
சமூகச் சமநிலையை இப்படியாவது கொண்டுவரமுடியும் என்று எண்ணி கொண்டுவரப்பட்ட ஒன்று..

சாதி என்ற ஒன்றே பிறப்பால் சீதனம்போல் கொடுக்கப்படுகிறது. அதை வேண்டாம் என்று சொல்வதும் பிராக்டிஸ் செய்யாமல் இருப்பதும் அடையாளங்களை கங்கையில் முழுகி கரைத்து மனிதனாக இருப்பதும் அவரவர் விருப்பம்.

< - - - - அய்யர், அய்யங்கர், தேவர் ,மறவர் ,பிள்ளை, கள்ளர், பறையர் ,பள்ளர்கள் ,சக்கிலியர்கள்  - - - > R சாதி அடுக்கு என்று கொண்டால்....

பார்ப்பனியம் என்ற ஒன்று இந்த எல்லா சாதிகளுக்கு இடையிலும் உள்ளது என்பதே எனது நிலை.

அதாவது, இடது புறம் (L)உள்ளவர்களில் ஆரம்பித்து ஒவ்வொருவரும் அவருக்கு அடுத்த (R) வல‌து புறத்தில் உள்ள ஒரு அடுக்கை கீழ் நிலையில்தான் பார்க்கிறார். அப்படிப் பார்க்கும்போதே அவர்களும் பார்ப்பனீயம் பிராக்டிஸ் செய்பவர்கள் ஆகிறார்கள்.

என்ன இதன் வீரியம் இடமிருந்து வலமாக மாறிச் செல்லும்.

இடப்புறம் ஒருவித கண்ணுக்குத் தெரியாத விலக்கல்கள் இருக்கும் நுட்பமான சீண்டல்கள் (அசைவத்திற்கு வீடு இல்லை என்பது போல) வலம் செல்லச்செல்ல அடிதடி என்று வரும்.

முதல்வரிசையில் உள்ளவர்கள் ஆணிவேராக அதைப் பற்றி இருப்பதால் அது வளருகிறது என்று நான் நம்புகிறேன்.

தலை முதல் வால் வரை ஒரே பார்ப்பனிய இரத்தம் என்றாலும் வாலை வெட்டுவதால் இது ஒழியாது, தலை நறுக்கப்படவேண்டும்.

தொப்பிகளை அனைவரும் கழற்ற வேண்டும் என்றால் , தொப்பி வியபாரி முதலில் அதை தூர எறிய வேண்டும். காஞ்சி மடாதிபதிகள் போன்றோர் சாதிய அடையாளங்களை அழித்து, மீன் விற்கும் சேரியில் இருந்து ஒருவரை அடுத்த வாரிசாக அறிவித்தால், அது ஆக்க பூர்வமானது என்பேன்.

**

இதை நான் சொல்லும்போது மற்ற ஒன்றையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. "அப்ப ஏன் சாதி வாரி இட ஒதுக்கீடு?"  என்று கேட்கலாம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ குடும்பங்களை,  "சுனாமி victim யார் யார்?" என்று தேட அதே சுனாமி என்ற சொல்லைக் கொண்டுதான் வகைப்படுத்த முடியும். எனவே, பல்லாயிரம் ஆண்டுகள் சாதி என்ற ஒன்றினை மூலமாக வைத்து ஒடுக்கப்பட்டவர்களை, அந்தப் பெயரில் தேடிதான் நிவாரணம் வழங்க முடியும். எனவேதான்.... அதாவது தொலைத்த இடத்தில் தேடுவது ...அல்லது காயத்தை  மருந்திட காயம் பெயர் சொல்லி தேட வேண்டிய நிர்ப்பந்தம். :((

மேலும் சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார சமநிலை அல்ல, சமூகச் சமநிலை.

அதாவது "படித்து நாலு காசு சம்பாரிச்சாலாவது சமூகம் இவர்களையும் சமமாக நடத்தும்" என்று எண்ணியே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கலெக்டரானாலும் இன்னும் சமூகச் ச‌மநிலை வரவில்லை என்பது உண்மை.  :((

சமூகச் சமநிலைக்கு என்ன தீர்வு?


உதாரணம் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ன சம்பளம் கம்மியான் வேலை என்பது போல நடக்க வேண்டும். எல்லா வேதத்தையும் கரைத்து குடித்தாலும், விஜய் மல்லையா போல பணம் இருந்தாலும் திருப்பதியில் அர்ச்சகராக இருக்க அனைவருக்கும் வழியில்லை ..எனும்போது சமுதாயச் சமநிலை என்பது கேள்விக்குறியே.

அமெரிக்காவில் இருக்கும் கோவிலுக்குகூட சாதி பார்த்துதான் அர்ச்சகர் இறக்குமதி எனும்போது எப்படி தமிழகத்தில்/ இந்தியாவில் சமூகச் சமநிலை வரும்? "நல்லா பாட்டுப்பாட, சாமியை அலங்காரம் செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம்" என்று சொல்ல அம்ரிக்கவாசிகளால்கூட முடியவில்லை. அர்ச்சகர் படிப்பு படித்துவிட்டு பல சாதியினர் உள்ளார்கள் வேலை செய்ய.
  • நான் பிறப்பால் ஒருவனை மேல்/கீழ் என்று பார்த்தால் நானும் பார்ப்பனீயன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில சாதி அடையாளங்களை அணிந்தால் (or some other way) நான் எனது சாதியை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில மத அடையாளங்களை அணிந்தால் (or some other way ) நான் மதத்தை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் தமிழை எழுதி /வாசித்து/ பேசி வந்தால் தமிழை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • எப்போது பிராக்டீஸ் நிற்கிறதோ அப்பபோது நான் அதுவல்ல. நான் அந்த வழியில் வந்தவன் அவ்வளவே.
Image Courtesy
http://online.wsj.com/article/SB118256120981545474-search.html