Friday, April 05, 2013

பழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில்


 தல நாற்று
---------------
நாற்று நடவு காலங்களில், வரப்புகளிலும், வயலை ஒட்டிய சின்ன சாலைகளிலும் தல நாற்று என்ற ஒன்றை (ஒற்றை நாற்றுக்கட்டு) வைத்து , அந்த வழியே போவோவரிடம் காசு கேட்பார்கள், நடவுப் பெண்கள்.

மாமா , மச்சான், கொழுந்தியா கிண்டல்கள் சத்தமாகப் பேசப்படும்.அதுவும், கொழுந்தியா, அத்தை மகள் வகையறா முறைப்பெண்கள் இருந்துவிட்டால் அவ்வழியே செல்லும் ஆண்களுக்கு திண்டாட்டம்தான்.

காசு போட்டால் பெண்களின் குலவை ஒலி இலவசம். நன்றாக தெரிந்தவர்கள் வந்தால் கண்ணில் பட்டவுடன் குலவை ஒலியை தொடங்கி விடுவார்கள். காசு போடாமல் நகர முடியாது. பைக்கில் போகும் மைனர்கள் அதிக காசு போடுவார்கள்.

சின்ன வயதில் காசு இல்லை போடுவதற்கு. இப்போது ஒவ்வொருமுறை ஊர் போகும் போது யாராவது கேட்க மாட்டார்களா என்று இருக்கும். வயல்கள் அழிந்த நிலையில் , கேட்பதற்கு யாரும் இல்லை.

என் சின்ன வயது அத்தைகளும், அக்காமார்களும், பாட்டிமார்களும் மட்டுமே கனவாக வந்து போகிறார்கள்.

கமலை
------------
புன்செய் நிலங்கள் மோட்டார் தோட்டமாக மாறுவதற்கு முன், கமலை மாடுகள் பூட்டி நீர் இழுக்கும் கமலைகளின் பெரிய அண்டா போன்ற பாத்திரமும் (தக‌ரத்தில் செய்யப்பட்ட ஒன்று) அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் தோல் பையும் இன்னும் கண்ணில் இருக்கிறது. இழுத்த தண்ணீர் மேலே வந்தவுடன், அண்டாவைக் கவிழ்ப்பது போல செய்ய , இழுக்கும் கயிற்றில் ஏறி உட்கார்ந்து கீழ்நோக்கி அமுக்க வேண்டும். ஒரு வாகாக உட்கார்ந்து செய்ய வேண்டும்.

உறவு வழித் தாத்தா ஒருவர், கமலை இறைக்கும் அழகைப் பார்த்து நானும் கமலை இறைக்க வேண்டும் என்று அழுது அழிச்சாட்டியம் செய்த காலங்கள் நினைவில் வந்து போகிறது.

தேவையற்றுப் போய்விட்ட திறன்களால், மனிதர்களும் மண்ணும் தேவையற்றுப்போய் விட்டது.

கட்டை வண்டி
---------------------
கட்டை வண்டிக்கு சக்கரம் செய்து, இறுதியாக பட்டை போடுவார்கள். இரும்பாலான பட்டை. சக்கரத்தின் அச்சு செய்வது முதல், ஆரங்களை ஒவ்வொன்றாகச் செய்து சக்கரம் கோர்ப்பது ஒரு கலை. ஒரு கட்டை வண்டி உருவாகும் ஒவ்வொரு நிலைகளையும் பள்ளி செல்லும் வழியில் இருந்த தச்சர் ஒருவரின் வீட்டில் கண்டிருக்கிறேன். வில்லு வண்டி வைத்து இருந்த உறவு வழித்தாத்தா ஒருவர், தச்சரின் நண்பர். தாத்தாவின் வண்டித் தேவைகள், ஏர், பரம்பு, என்று எல்லாவற்றையும் செய்து தருபவர் இவர். பல நேரம் அவர் பட்டரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கியுள்ளேன்.

கட்டை வண்டி , டயர் வண்டியாக மாறி, ட்ராக்டர் + ட்ரக் ஆக கண்முன்னே மாறி பழமை ஒழிந்துவிட்டது. அருகில் இருந்த கரும்பாலையும், வயலும், கட்டைவண்டி செய்யும் தொழிலும் மாறி மாறி இன்று எதுவும் இல்லை.

*****

பழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில் இருக்கிறேன். கனவும் நினைவும் மட்டுமே எச்சங்கள்.