Sunday, June 23, 2013

மது, புகை , டேட்டிங் அம்பேரிக்கா டம்ளர் கலாச்சார மொக்கை

 Image Courtesy http://territrespicio.com
த்தனை தடவை புலம்பினாலும் மறுபடியும் மறுபடியும் இதே போன்ற செயல்களைச் சந்திக்க நேரிடுவதால் புலம்பிவைக்கிறேன்.

1.மது அருந்துவது
2.புகை பிடிப்பது
3.டேட்டிங்

இந்த மூன்றிலும் அம்பேரிக்காவில் வாழும் சுத்த ,சுயம்பு , Original கலாச்சார டம்ளர்களின் போக்கு எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் முதல் தலைமுறை அமெரிக்கவாசிகள். பலர் இங்கே படிக்கவந்து டாக்குடராகி பெரிய பதவிகளில் இருப்பவர்கள். பயணம், விழா என்று பல அய்ரோப்பிய வழி அமெரிக்கர்களிடம் பழகுபவர்கள். இவர்கள் அனைவரும் கார்,வீடு,பிட்சா,டவுசர்....என்று அய்ரோப்பிய வழி அமெரிக்கர்களிடம் இருந்து பலவற்றைக் காப்பியடித்து அவர்களின் அன்றாட வாழ்வில் செய்துகொண்டிருப்பவர்கள். இப்படியானவர்கள் கலாஆஆஆச்சாரம் என்ற பெயரில் வீட்டில் இன்னும் கண்ணகிகால கல்சுரவாதிகளாகவே இருக்கிறார்கள். அதில் பெருமையும் கொள்கிறார்கள் என்பதுதான் டம்ளர் கல்ச்சுராத்தின் மேல் வைக்கப்ப‌டும் செர்ரி பழம்.

ஒழுக்கம்:
ஒழுக்கம் என்பது ஒழுகுவது. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட பழக்கங்களை கடைபிடிப்பது. எது ஒழுக்கம்? எதை ஒழுகுவது ? என்பது இடம்,பொருள்,காலம் என்று பல காரணிகளால் கடைபிடிக்கப்படுவது. இதுதான் ஒழுக்கம் என்று உலகம் முழுக்க பொருந்தக்கூடிய எந்த விதியும் இல்லை. மேலும் அது தலைமுறை தலைமுறைக்கு மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.
 
மது அருந்துவது.
மது என்பது எது? என்பது தொடங்கி எந்த அளவிற்கு அருந்தலாம்? என்பது போன்றவை மண்டபம் போட்டு பேசக்கூடிய விசயங்கள். மேலும் அவை வாழும் இடத்தில் உள்ள அரசு அமைப்புகளால் தீர்மானிக்கப்படுபவை. குவைத்தில் ஃபாகில் பாண்டியன் அண்ணாச்சி மெஸ்ஸில் இருந்தால் அதிகாரபூர்வ மது தடை. அதே சமயம் அய்ரோப்பிய குடியுரிமையுடன் , சகல மரியாதையுடன் வாழும் மிட்டா மிராசு மேன்மக்களுக்கு  இந்த தடைஎல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

ok ok ok ...கள்ளுண்ணாமை ப‌ற்றி வள்ளுவர் சொன்னார் என்று சொல்லி கம்பு சுற்ற வேண்டாம். பெய்யனப் பெய்யும் மழை என்றுகூடத்தான் தாடித்தாத்தா சொன்னார். அப்படி என்றால் நம்மூரில் எத்தனை பத்தினிகள் தேருவார்கள்?

அதே திருதாத்ஸ் "சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும் இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா, வெறி கொண்ட ஆண் யானையின் முகம் மீது இட்ட
பட்டாடை போலக் காட்சி தருகிறது"

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


என்றுகூட கலக்கி எடுத்திருப்பார் . அவர் சொன்னார் என்பதற்காக, "குன்றென இருக்கும் உன் முலைமீது படர்ந்திருக்கும் சேலை அழகு" என்று தோழிகளிடம் சொல்லி, வாங்கிக்கட்டிக் கொள்ள முடியுமா என்ன? மென்று முழுங்கிவிட்டு, "you have beautiful eyes" என்று மொக்கையாக எதையாவது சொல்லிவைக்கத்தான் முடியும்.  அதாவது எதற்கெடுத்தாலும் பழைய காலங்களில் இருந்து சாதகமான உதாரணங்களை மட்டும் சொல்லித் திரிய வேண்டாம் அவ்வளவுதான். Back to the point...

மாலை வேளைகளில் பல குடும்பங்கள் கூடும் சந்திப்புகளில், பெரும்பாலான டம்ளர் வீடுகளில், மது குப்பிகளுடன் ஆண்கள் கும்மாளமிட்டுக்கொண்டிருக்க , பெண்கள் அவர்கள் பாட்டுக்கு தனி அறையில் (கூடத்தில் ) இருப்பார்கள். ஏதோ குடிப்பது ஆண்களின் ஏகபோக உரிமை, "எங்க ஏரியா உள்ளே வராதே" என்று எழுதப்படதா விதியாகவே கடைப்பிடிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் விருந்து என்றால், அது மதுவுடன் கூடியதா என்று சொல்லிவிடுங்கள். மதுவுடன் கூடியது என்றால், உங்கள் மனைவி மது அருந்துவாரா என்று கேட்டு ஆம், என்றால் அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மது அருந்தாத ஆணோ பெண்ணோ அனைவரும் ஒன்றாக இருந்து கலந்து பேசுவதுதான் நல்ல நிகழ்வுகள். அது போல வரும் ஆண்கள், பெண்கள் (பிற‌ரின் மனைவியர்) மது அருந்துவார்களா அவர்களின் விருப்பம் என்ன என்றும் கேட்டுவிடுங்கள்.

ஆண்கள் மட்டும் தனியாகப் போய் குடிக்க வேண்டும் என்றால், ஏதாவது பாரில் உங்களின் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் மத்தியில், இன்னும் திருட்டுத்தனம் போல, அல்லது அம்மா,பெண்கள் பங்குபெறாத (விலக்கப்பட்ட) ஒன்றுதான் மது என்று ப‌திய வைக்க வேண்டாம்.

டம்ளர் ஆண்கள் குடிப்பார்கள், அவர்களின் மனைவிமார்களை "குடிக்க விருப்பம் உள்ளதா? விரும்பினால் அவசியம் வா"  என்று சொல்லவே மாட்டார்கள். தொடைகளுக்கு இடையில் மட்டும் அல்ல பெண்ணின் குடலிலும் கவனமாக,  இன்றும் கலாச்சாரம் பேணப்படுகிற‌து ஆண்களால்.

புகை பிடிப்பது.
ஆண்கள் புகை பிடித்தாலும் பெண்கள் புகை பிடித்தாலும் உடல் ஒரே மாதிரிதான் எதிர்வினை செய்யும். பிள்ளையைச் சுமக்கும் பெண்களுக்கு அது  குழந்தையைப் பாதிக்கும். மற்றபடி,   உடல் கேடு என்பது பொதுவானதுதான். அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் புகை பிடிப்பதை எல்லாம் பார்க்கிறார்கள். இவர்களும் புகைக்கிறார்கள். ஆனால் டமிள் நாட்டு நடிகை ஒருவர் புகை பிடித்த படம் ஒன்றைப் பார்த்துவிட்டால் பேஸ்புக்கில் பொங்கிவிடுகிறார்கள். கல்சுராத் டம்ளர்கள்.

டேட்டிங்
பெண்ணின் உலகைப் புரிந்து கொள்ள பெண்ணுடன் பழகவேண்டும். வெறுமனே கதைப் புத்தகங்களைப் ப‌டித்து, சில மொக்கை கதைபுக் ரைட்டர்கள் எழுதிய மொக்கை கவிதைகளைப்படித்து, கடல் படம் புரியாதவன் வாழத் தகுதியில்லாதவன் என்று அவர்கள் சொல்லும் அலப்பரைகளை வேதவாக்காகக் கொண்டு குருடன் யானையைப் பார்த்த கதையாக வாழும் நிலைதான் இன்றும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னால்தான் பெண்ணிற்கும் மனசு உள்ளது, அவளுக்கும் தனியான ஆசை,கோபம்,துக்கம் உள்ளது என்று தெரியவருகிறது. அதுவரை பெண்களை முலையாகவும், தொடைகளாகவும், இடுப்பாகவுமே திரைப்படங்கள் மூலமாக கண்டுவந்த ஒருவனுக்கு, சடாரென்று பெண் உடன் சேர்ந்து வாழ்வது சிக்கலான ஒன்று.

அய்ரோப்பிய அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளது மிகவும் ஆரோக்கியமான டேட்டிங்.  வீட்டிற்கு வந்து , அப்பாவின் அனுமதி பெற்று,  அருகில் உள்ள மாலுக்கு அழைத்துச் சென்று சொன்ன நேரத்திற்கும் வீடு திரும்ப வேண்டும் என்ற விதிகளுடன் துவங்கும் ஒன்று. உங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு நல்ல எதிர்பால் தோழமைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். டேட்டிங் என்பது திருமணத்தில் முடிய வேண்டியதும் அல்ல. அல்லது தொடைகளுக்கு இடையே ஏதாவது நடந்துவிடுமோ என்று கவனத்தை அங்கேயே வைத்துக்கொண்டு இருக்கும், டம்ளர் திரைப்பட பாணி டான்சும் அல்ல.

சொல்லி வைத்த தேதி, நேரத்தில் இருவர் சந்தித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு. அதை எப்படி நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சொல்லித் தருகிறீர்கள் என்பதில்தான் அது நல்லதாகவும் / கெட்டதாகவும் குழந்தைகளால் உள்வாங்கப்படும்.

மிகவும் கட்டுக்கோப்பாக அனைத்து ஆச்சார குப்பைகளுடன் வளர்க்கப்பட்டு, மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்கள், கல்லூரிக்காக வைக்கப்படும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள்  வாங்கி கல்லூரியில் சேர்ந்த ஒரு பெண் இப்போது போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் அப்பா எதிர்பார்க்காதது.

அதற்காக போதைப் பொருளை பழக்க வேண்டும் எனது அல்ல.

சிம்பிள் ஜென்டில் மேன்...

21 வயதில் உங்கள் மகன் உங்களுடன் முதல் பியர் அருந்த வேண்டும் என்றும், 21 வயதில் உங்கள் மகளுடன் ஒயின் சாப்பிட ஆசை என்றும் சொல்லிவிடுங்கள். அவர்கள் உங்களுக்கு தெரியாமல் செய்யும் செயல்கள் குறைய‌ வாய்ப்பு உள்ளது.  குறைந்த பட்சம், மது அருந்துவது, டேட்டிங் போவது ஒரு இமாலயக் குற்றம் என்ற குற்றவுணர்வு இல்லாமல், உங்களிடம் பகிரிந்துகொள்ள ஒரு பாதை கிடைக்கும் அவர்களுக்கு.

அதற்காக குடித்தே ஆக வேண்டும், டேட்டிங் செய்தே ஆக‌ வேண்டும் என்று சொல்வதாக நினைத்து பஞ்சாயத்து செய்ய வந்துவிட வேண்டாம். அதைத் தவறு என்று கற்பிக்காதீர்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரியான வயதில் சரியாக செய்ய சொல்லிக்கொடுக்க நீங்கள் தயாராக இருப்பதை அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். அதே போல் நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் காட்டும் டம்ளர் கலாச்சாரச் சொம்புகளை அடுத்தமுறை ஊருக்குபோகும்போது உங்கள் ஊர் பஞ்சாயத்து ஆலமரத்தில் விட்டுவிட்டு வாருங்கள்.
.