Wednesday, July 24, 2013

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து --- கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பதிவர்/ப்ளசர்களே என் ப்ரியமானவர்களே,

ஜூலை 28 ஞாயிறு (28/07/2013) மாலை 4:30 மணி அள‌வில் ஓம்காரின் பிரணவபீடத்தில் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

நோக்கம்:
படமும், எழுத்துமாய் அறிமுகமாகி இன்றுவரை அதே படமும் எழுத்துமாய் இருக்கும் உங்களை எல்லாம் நேரில் காண்பதே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.

இடம்:
http://pranavapeetam.org/contact.htm

Pranava Peetam Trust
#47, Ponurangam Road(East),
Near Jain Temple.
R S Puram,
Coimbatore 641002.

ஓம்கார் அவர்கள் அவரது ஆன்மீக பயிற்சிவகுப்புகள் தொடர்பாக காலை முதல் மாலை 4 வரை வகுப்பில் இருப்பார். எனவே அவரை போன் போட்டு இம்சிக்காமல் , இந்த இடத்தை பேப்பரில் குறித்துக்கொள்ளுங்கள்.  :))

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து...

*******
1. சேலம் வைத்தியர் காளிமுத்து , ஊர் ஊருக்கு லாட்ஜ் போட்டு அன்பரகளுக்கு குணப்படுத்துவார். அவர் எப்போது எங்கே என்று தெளிவாக போஸ்டர் அடித்து மதுரை சந்து பொந்துகளில் இருக்கும். தேடிப்போவார்கள் தேவையானவர்கள்.

2. கட்சி தலைவர்கள், வட்டம் மாவட்டங்களில் சொல்லிவிட்டால் எல்லாம் தயாராய் இருக்கும்.

3. பிஸ்கோத்து பிளாக்கர்/ப்ளசரான எனக்கு இருக்க இடம் (மடம்) கொடுத்த சக பிளாக்கர்/ப்ளசர் ஓம்கார் அவர்களுக்கு என் நன்றி.

"இப்படி இப்படி என்ன செய்யலாம்"  என்றவுடன் "எங்கேயும் போகவேண்டாம், இங்கேயே வாருங்கள். மற்றவர்களையும் இங்கே வரச்சொல்லிவிடுங்கள்"  என்று சொல்லி பரசவப்டுத்திவிட்டார் ஓம்கார்.

ஓம்காருக்கும்  எனக்குமான ஆதிகால உரையாடல்களை அறிந்தவர்களுக்கு எங்களின் வெட்டு குத்துகள் தெரியும். ஆனால் அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ்?

#I feel honored

**
மனைவியிடம் சொன்னபோது "இந்த ஆளோட நான் எப்படி குடும்பம் நடத்துகிறேன்" என்ற‌ சொற்பொழிவும் இருக்கும் என்று சொல்லிவிடுங்கள் என்றார்.

பாதி வழியில் இறங்கிக் கொண்ட பயணி


பிறந்த இடம் தாண்டி வேறுமாநிலம் அல்லது வேறுநாடுகளில் வாழும் அனைவருக்கும் எப்போதாவது இது உணர்த்தப்பட்டு இருக்கும். உணர்வது அல்லது பிறரால் உணரவைக்கப்பட்டு இருக்கும். அப்படி இல்லை என்பவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம். இது வழியில் இறங்கிக்கொண்ட ஒரு பயணியின் புலம்பல்.

குடும்பத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு யாரும் புலம்பெயர்வது இல்லை. உள்ளூரில் பொருளீட்ட முடியாமல் அல்லது பொருளீட்ட வக்கற்ற நிலையில்தான் அடுத்த ஊர் நோக்கிய பயணங்கள் கனவுகள் தொடங்குகிறது. அப்படி சென்றபிறகு பல்வேறு காரணங்களால் பெயர்த்து நடப்பட்ட மரம்போல,  புதிய மண்ணில் கிடைத்த இடத்தில் வேர்விடத்துவங்கி , கிளைபரப்பி அடுத்து நகரமுடியாமல் ஆகிவிடுகிறது. ஒருவேளை புலத்தில் இருந்து மறுபடியும் பெயர்ந்து பிறந்த மண்ணில் மறுபடியும் பூத்துக்குலுங்கும் சோலைகள் நீங்கள் என்றால்  நீங்களும் பாக்கியவான்கள். நீங்களும் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம்.

கல்யாணம் காட்சி , நல்லது கெட்டது என்று வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கி அன்பு வளர்க்க  ஆசை இருந்தாலும், புலிவாலைப் பிடித்தகதையாக வாழ்வு ஒடிக்கொண்டுள்ளது. 20 ஆண்டுகள் குடும்பத்தில், உறவுகளில் வெறும் தொலைபேசியில் பேசி எந்தவிதமான உறவுகளையும் வளர்த்துவிடமுடியாது எனப்து நிதர்சனம். இடையில் 30 நாட்கள் விடுப்பில் வந்தாலும் சொந்தவீட்டில் விருந்தாளியாகவே நடத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.

அம்மா அப்பா கூட அவசரத்திற்கு உதவமுடியாத தொலைதூர பிள்ளைகளின் வெறும் போன் பேச்சுகளால் ஒருவிதபயனும் இல்லை என்பதை அறிந்தே உள்ளார்கள். குடும்பத்தில் நடக்கும் எந்த விதமான கொள்கை முடிவுகள், செயல்கள் என்றாலும் "நீ என்ன 10 நாள் இருந்துட்டு போயிருவ , சும்மா வந்தமா இருந்தமான்னு இரு. நாங்க பாத்துக்கிறோம்" என்று சொல்லி வலிய குடும்ப ஜீப்பில் ஏறினாலும் இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.

ஒரு பயணத்தின் பாதிவழியில் இறங்கிக்கொண்ட பயணியால், விடுபட்ட பயணத்தை ஒருக்காலும் தொடரமுடியாது. அது மற்றவர்களின் பயணமாகிவிட்டது.

Friday, July 05, 2013

சாதி ,காதல், கொலைகள்,கலாச்சாரம்....புற்றீசல் கருத்துகள்

Image Courtesy www.thelovelyplanet.net
மீபத்தில் நடந்தமுடிந்த சம்பவங்களின் நிழலில், தங்களின் இத்துப்போன கிழிந்த‌ டவுசர்களை உலர்த்தி இன்பம்காண ஆரம்பித்துவிட்டனர் பலர். இதில் மிகவும் பேசப்படும் இரண்டு வார்த்தைகள் கலாச்சாரம் மற்றும் திராவிடம். ஆளாளுக்கு கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும்முன் , சற்று நிதானித்து, கலாச்சாரம் என்ற சொல் உங்கள் மூளையில் என்ன பிம்பங்களை செதுக்கிச் செல்கிறது என்று யோசியுங்கள்.  உங்கள் மூளைக்கு நீங்களே அதிபதி. உங்களுக்கான விளக்கங்களை நீங்களே சமைத்துக்கொள்ளலாம்.

கலை
கலை (Art ) என்பது வெளிப்படுத்தும் ஒன்று. அதாவது exhibiting   தன்மை கொண்டதுதான் கலை. உள்ளுக்குள் வைத்து புகைந்துகொண்டு இருப்பது கலை அல்ல.

கலாச்சாரம்
கலைகளின் சாரம் அல்லது கலையின் ஆதாரம். என்று எப்படி வேணுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். காசா பணமா? ஆனால் அது எதோ ஒரு பழைய ஆதார மூலத்தைத்தைப் பற்றிக்கொண்டு தொங்கும் ஒரு வார்த்தை என்று நான் நம்புகிறேன்.  இன்று உள்ள ஒரு நிலைக்கு அதற்கு முந்தைய நிலையும் உண்டு என்பது.

பண்பாடு
பண்+பாடு. பண்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பழக்கங்கள் என்பதுவே பண்பாடு எனப்படுவது.

கலாச்சாரம் அல்லது பண்பாடு

பண்பாடு என்றாலே பழைய பழக்கம். ஏன் என்றால் புதிய பழக்கங்கள்,செயல்கள் பண்பட நாட்கள்/ஆண்டுகள் ஆகும்.

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. அல்லது நிகழ்காலத்தில் உள்ள ஒரு பழக்கத்திற்கு வேறு ஒரு பழைய வடிவம் இருக்கலாம் என்பதே கலாச்சாரம்.  (விக்கி ஆண்டவர்: The term "culture" appeared first in Europe in the 18th and 19th centuries, to connote a process of cultivation or improvement, as in agriculture or horticulture.)  மற்றபடி அந்த பழைய வடிவத்தை இன்றும் பின்பற்ற வேண்டும் என்பது கலாச்சாரம் அல்ல.  அதன் பொருளும் அதுவல்ல. அப்படி இருந்தால் நாம் இன்னும் கண்ணகிபோல, கோவலன் போல, வள்ளுவன் போல, அதே கால முறைகளில் ஜீவித்து இருக்க வேண்டும்.  நாம் அப்படியில்லை.  சேலையைக் கலாச்சார கம்பளமாக பறைசாற்றும் நாம், இரவிக்கையில் புரட்சிகள் படைத்துக்கொண்டே உள்ளோம் என்பதை மறக்கக்கூடாது.  அதாவது பிடித்த ஒன்றை கலாச்சாரம் என்று தொங்குவதும், காலத்துக்கு ஒத்துவராத ஒன்றை (உம்: தூக்குவாளி) அப்படியே கடாசிவிட்டு நவீனத்து மாறுவதும் (உம்:ஹாட்பாக்ஸ்) அவரவர் வசதி.

மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களின் பார்வையில் இருந்தே தீர்மானிக்கப்படுகிறது.  உதாரண‌த்திற்கு , இன்று நடக்கும் செயல்கள் எல்லாம் ஏதோ புதிய கலாச்சாரத்தை பதியவேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடப்பவை அல்ல. வாழ்வு அதன்போக்கில் இன்றைய காலகட்டத்திற்கு தக்க எதையோ கிறுக்கிச் செல்கிறது.  இன்று நடப்பவை கலாச்சார உற்பத்தி அல்ல. வெறும் செயல்கள்/நிகழ்வுகள்/படைப்புகள்.......ஆனால் பத்து வருடம் அல்லது 20 வருடம் அல்லது 100 வருடங்கள் கழித்து இதை அறியவரும் ஒரு கூட்டம், இன்று நாம் செய்து கொண்டிருப்பதை அவர்களின்முன்னோர்களின் கலாச்சாரமாகப் பார்க்கும்.

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்
http://kalvetu.balloonmama.net/2010/10/blog-post_13.html

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு
http://thekkikattan.blogspot.com/2010/11/template-post.html

  •  கலாச்சாரம் என்பது எப்போதுமே இறந்தகாலம். நிகழ்காலத்தில் அதை அப்படியே பிடித்து தொங்கிக்கொண்டிருக்க முடியாது.
  • அது போல இந்த கலாச்சாரம் அல்லது நிகழ்வுகள் அல்லது பழக்கங்கள் மண்,காலம்,சூழ்நிலை என்று கணம் தோறும் மாறுபவை. 
  • உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் அல்லது நல்ல பழக்கம் / கெட்ட பழக்கம் என்று எந்த அளவுகோலும் கிடையாது. 
  • ஜட்டி பிராவுடன் அம்பேரிக்கா பீச்சில் தாத்தா,பாட்டி,குழந்தைகள்,நண்பர்கள்,தோழிகள்..என்று இருப்பது அந்த ஊருக்கு இயல்பானது. குற்றாலத்தில் துண்டைக்கட்டிக்கொண்டு குளிப்பவன் , அவனது கோமணத்தை அளவுகோலாகக்கொண்டு,  இதைத் தவறு என்று சொல்ல இயலாது. 
  • அங்கீகரிக்கப்பட்ட அம்மணக்குளியல் தளங்களும், அம்மண ஓட்டங்களும் அம்பேரிக்காவில் உண்டு. அம்பேரிக்கா மட்டும் அல்ல பட இடங்களில்.
  • இதையெல்லாம் உனது கலாசார அடுப்பாங்கரை அடிஸ்கோலில் அளந்து இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் பயன் ஏதும் இல்லை.
இடம்,காலம்,சுற்றுப்புறம்,தட்பவெட்பம்,தேவை ...இன்னபிற காரணிகளில் அந்த அந்த சமூகம் அதற்கான தேவைகளை தீர்மானிக்கட்டும். உங்களின் கலாச்சார அளவுகோலை உங்கள் சமூகத்திற்கு மட்டும் அளக்க பயன்படுத்துங்கள்.

நீதி:
உங்களின் கலாச்சார சொம்புகள் உங்களுக்கானது அல்லது அதிக பட்சம் உங்கள் ஊருக்கானது / நீங்கள் வாழும் குழுவிற்கானது மட்டுமே. உலகமே அப்படிச் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்து உயர்வு தாழ்வைச் சொல்லித் திரியவேண்டாம்.

Wednesday, July 03, 2013

எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை ஒரு குழந்தை படைத்துக்கொண்டிருக்கலாம்

Image courtesy http://www.spencerart.ku.edu

டைப்பாளி அல்லது படைப்பு குறித்த தமிழ் இலக்கிய உலகின் வர்ணனைகளை ஒதுக்கிவிட்டு எனது பார்வையாக சொல்கிறேன். நீங்கள் ஏதேனும் ஒரு இலக்கிய மடத்திற்கு நேர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது "இது இப்படித்தான் இதைத்தாண்டி ஒன்றும் இல்லை" என்று இணைய மொண்ணை வசனம் பேசினாலோ இது உங்களுக்கானது அல்ல. மன்னிக்கவும். "நேற்றுள்ளவை இன்று மாறியுள்ளது, அதுபோல இன்றுள்ளவை நாளை மாறும் , மாறாமலும் போகும் எனக்குத் தெரியாது" என்று நினைப்பவர்களுக்கானது இது.  நான் உங்களுடன் பெஞ்சில் அமர்ந்து பேசுகிறேன்.  உங்கள் முன்னால் சிம்மாசனம் போட்டு செய்யும் போதனைகள் அல்ல இது.  நீங்கள் என்னைப்போல நிச்சயம் தனித்துவமானவர்கள் என்பதில் மாற்று இல்லை.

நான் என்னிடம் வரும் அனைத்தையும் மொத்தமாக விலக்கிவிட்டு , பிறகு தேவையானதை தேடிப் பொறுக்கிக்கொள்வேன். வரும் அனைத்தையும் மொத்தமாக ஏற்றுவிட்டு தேவையில்லாததை விலக்கிவிடும் பாக்கியம் வாய்க்கவில்லை. அதனால்தான் எனது பாத்திரம் எப்போதும் காலியாகவே உள்ளது. காலியாக இருந்தாலும் அதில் விழும் அனைத்து நீர்த்துளிகளும் தங்குவது இல்லை. எதிரொலி போல சிதிறியடிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. அப்படி ஏதேனும் தங்கிவிட்டாலும், கொட்டிக் கவிழ்த்துவிட்டு மறுபடியும் தேடி பொறுக்கிக்கொள்ளவே எத்தனிக்கிறேன்.

படைப்பு என்பது சீவிச் சிங்காரித்து வர்ணம் பூசி அழகு படுத்திக்கொள்வது அல்ல. மனிதன் பல வழிகளில் கருத்தைப் பகிர முடியும். ஓவியம், சிற்பம்,எழுத்து,பாட்டு,பேச்சு..இன்றைய மின் வடிவங்கள் என்று பல வழிகள். இவை எல்லாம் ஒரு வகை தொடர்பு சாதானங்கள் (medium) . இந்த சாதனம் வழியாக என்ன சொல்லப்படுகிறது என்பது முக்கியமா இல்லையா என்பதை ஆராயுமுன், இதில் என்னவும் சொல்லப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  "இதுதான், இது இப்படித்தான் , இதைத்தாண்டி சொன்னால்  அது இதுவல்ல"  என்று எப்போது நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே உங்களின் டவுசரின் ஒரங்கள் உங்களாலேயே கிழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்று அறிக.

சிறந்த இலக்கியவாதி பாக்யராஜ் (What is Literature?)
http://kalvetu.balloonmama.net/2013/02/what-is-literature.html

படைப்பாளன் என்பவன் இடித்துக்கட்டுபவன் அல்லது புத்தம் புதிதாக வேறு வடிவம் கொடுப்பவன். படைப்பு என்பது ஓவியம், சிற்பம், எழுத்து, பாட்டு, பேச்சு.. இன்றைய மின் வடிவங்கள் என்று எதுவாகவும் இருக்கலாம். படைப்பாளி குழந்தை மன நிலையில் (பிடித்ததைச் செய்யும் அடம்) இருந்து கொண்டே,  பெரியவர்கள் சொன்னதை இடித்துக்கட்ட முயல்பவன். ஆனால் அப்படி யாரும் இன்றைய சூழ்நிலையில் வாழ்ந்துவிட முடியாது. பல சமூகக் கட்டுப்பாடுகளுடன்தான் படைப்பாளியும் இயங்க வேண்டியிருக்கும். உடைக்கவே கூடாதவற்றை உடைக்க நினைக்கும்படைப்பாளி ,அதை உடைத்தால் அடைக்கலம் கேட்டு போராட வேண்டியதுதான் வழி.

இன்றைய கால கட்டத்தில் படைப்புக்கு எல்லை இல்லை என்று சொல்ல இயலாது. அது சமூகம் (பெரும்பான்மையினர்) வகுத்த வெளிக்குள் நொண்டிக்கொண்டுள்ளது. படைப்பாளி தன்னால் மக்கள் திரளை உருவாக்க (பெரும்பான்மை) இயலும் என்றால் அவனின் படைப்பு வழிவந்த சமூகம் பெரிதாகி, அது புதுவிதி செய்யும். அறிவியல் படைப்புகள் (கண்டு பிடிப்புகள்) எல்லாம்  பெரிய எதிரிகளை எதிர்கொண்டே வளர்ந்துள்ளது. அப்படி வந்தாலும் காலத்தால் "அழியாமல் இருப்பேன்" என்று சவால் விடாமல்,  புதியவை வரும்போது பழையவை மரணக்குழிக்குள் போய்க்கொள்கிறது.

இடித்துக்கட்டப்படுபவையே படைப்பு. அலங்கரிப்படும் குப்பைகள் அல்ல. அப்படிச் செய்பவனே படைப்பாளி.படைப்பு எந்த தளத்திலும் நிகழலாம். இதுதான் படைப்பு இதைத்தாண்டி இல்லை என்று எதுவும் இல்லை.

இதுவரை எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை தினமும் ஒரு குழந்தை உலகின் ஏதோ ஒரு மூலையில் படைத்துக்கொண்டிருக்கலாம். உடைக்கப்படும் அனைத்தும் அடுத்த ஒன்று உருவாக வழிவகுக்கலாம். இல்லாமலும் போகலாம்.படைப்பு கட்டிக்காக்கப்பட வேண்டியதும் இல்லை தொழப்பட வேண்டியதும் இல்லை. படைப்பு பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது, நிபந்தனை இல்லாமல் இரசிக்க கொடுக்கப்பட வேண்டியது. அதுபோல இரசிப்பவனை எடைபோடாததும் அதுவே.