Tuesday, July 14, 2015

நேற்று என்பது வரலாறு - புளூட்டோ

றிவியலில் எந்த ஒரு விசயத்திற்குமான‌ வரையறை (விதிகள்)  என்பது நிலையானது அல்ல. அது மாறிக்கொண்டு இருக்கும் ஒன்று.  இன்று நாம் சரி என்று நம்பும் விசயங்கள் நாளைய கண்டுபிடிப்பில் தவறாக மாற வாய்ப்புள்ளது.  இந்த சரி /தவறு என்பவை எல்லாம் அறிவியலின் தொடர் ஆராய்ச்சி சார்ந்த புரிதல்களின் பேரில், நாம் வரையறுத்துக்கொள்ளும் புதிய விதிகளே அன்றி வேறுயாவும் இல்லை.  நம் சூரியக் குடும்பத்தில் சூரியன் (sun) என்பது நட்சத்திரம்.  Mercury, Venus, Earth , Mars, Jupiter, Saturn, Uranus, Neptune என்பவைகள்  (கோள்) கிரகம்.  ஒவ்வொரு கோளுக்கும் சில நிலாக்கள் ( natural satellite)  இருக்கலாம்.  சந்திரன் என்பது பூமி என்ற கிரகத்தின் (நிலா) துணைக்கோள் .

ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பவை இப்படித்தான் அறிவியலில் பகுக்கப்படுகிறது.  இவையாவும் நம் அறிவியலின் புரிதலின்பேரில் நாமே ஏற்படுத்திக்கொண்ட பகுப்புகள். இவை நாளை மாறலாம். கடவுள்/சோசிய நம்பிக்கைகள் போல அறிவியல் மாறாதது அல்ல. சோசியத்தில் இருக்கும் கட்டத்தில் சந்திரன்,சூரியன்,சனி,செவ்வாய் என்று எல்லாம் ஒரே அவியலாக  கிரகம் (கோள் / Planet) என்ற மதிப்பீட்டில்தான் உள்ளது. ஆனால் அறிவியல் அதை ஏற்றுக்கொள்வது இல்லை.

சூரியக் குடும்பத்தில் புளூட்டோ ஒரு அப்புராணி அல்லது எடுப்பார் கைப்பிள்ளை போன்ற ஒரு "உருண்டை". என்ன செய்வது இதற்கு "உருண்டை" என்பது தாண்டி என்ன பெயர் கொடுப்பது?  முதன் முதலில் இந்த உருண்டை கண்டறியப்பட்டபோது (1930) அனைவரும் இதை சூரியக்குடும்பத்தின் கடைசிக் குழந்தையாகவே எண்ணி ஒரு கோளாக (planet) அங்கீகரித்தார்கள். இவரும் தனது அண்ணன், அக்காமார்களுடன் சேர்ந்து ஒன்பதாவது தம்பியாக சூரியக்குடும்பத்தில் சேர்ந்து கொண்டார். இப்படி இருந்த புளுட்டோவின் வாழக்கையில் விதி விளையாடியது . 1992 ஆண்டுவாக்கில் நடந்த சில கண்டுபிடிப்புகள் புளூட்டோவை கோள் (கிரகம்) என்ற மதிப்பீட்டில் இருந்து இறக்கிவிட்டது.  ஆம் சரியான எடை இல்லாதவர் என்பதாலும், தாறுமாறாக சுற்றிக்கொண்டு இருப்பவர் என்பதாலும் இவரை பதவியிறக்கம் செய்துவிட்டார்கள். ஆம் இன்றுவரை அவர் குள்ளக் கோள்   "Dwarf Planet" என்றுதான் அழைக்கப்படுகிறார்.

இப்படி எல்லாம் அசிங்கப்படுவோம் என்று தெரிந்துதான் அவர் ஆரம்பத்தில் இருந்து கோக்குமாக்கான ஒரு சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறார். மற்ற எல்லாச் சகோதர , சகோதிரிகளும் ஒரு ஒழுங்கான நீள் வட்டத்தில் சூரியனைச் சுற்றினால், இவர் ஒரு பிரமிப்பான குறுக்குப் பாதையில் அனைவரையும் டெரராக்கும் நோக்கில் சுற்றிவருகிறார்.


பூமியில் இருந்து இதுவரை தோன்றிய எந்தக் கடவுளும் நமக்கு புளூட்டோவை https://en.wikipedia.org/wiki/Pluto காண்பித்தது இல்லை. நாமும் ஒரு தோராயமாக அது நீலநிறப் பந்து அல்லது நிலா போன்ற‌ வெள்ளைப் பந்து (அதிகக் குளிர் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் தண்ணீர்ப்பந்து) என்ற அளவில் அதற்காக ஒரு படத்தை தயாரித்து நம்பிக் கொண்டு இருந்தோம். அதை எல்லாம் சுக்கு நூறாக்கிவிட்டது  New Horizons   எனப்படும் வெண்வெளி ஆராய்ச்சி விமானம் (Spaceflight) . ஆம் இது ஒரு விமானம்தான். பூமியைச் சுற்றும் வெண்வெளி ஆராய்ச்சி மையம் அல்லது கணக்கற்ற செயற்கை துணைக்கோள்கள் ( Satellite ) போல் அல்லாமல் இது அதன் போக்கில் பயணிக்கும் ஒரு விமானம். போகும் வழியில் புளுட்டோவைப் படம் பிடித்து நமக்கு செய்தி சொல்லும். இது புளுட்டோவையும் தாண்டி Kuiper Belt -ல் https://en.wikipedia.org/wiki/Kuiper_belt பயணித்துக்கொண்டு இருக்கும். என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஒரு குத்துமதிப்பாக இங்கே  https://en.wikipedia.org/wiki/New_Horizons  சொல்லியுள்ளார்கள். 2038 க்குப் பிறகு New Horizons நம்மைவிட்டு அதாவது நமது தொடர்பு எல்லைகளைத் தாண்டி விண்ணில் கலந்துவிடும்.

எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த செயலை கச்சிதமாக New Horizons நிறைவேற்றிவிட்டது. ஆம் புளூட்டோ எப்படி உள்ளது என்ற அக்மார்க் புகைப்படம் கிடைத்துவிட்டது. http://news.nationalgeographic.com/2015/150714-pluto-flyby-new-horizons-space/ .


அறிவியல் என்பது எப்போது அழித்து எழுதப்படுவது. சோசியக் கட்டங்கள்போல தலைமுறைக்கும் தொடரும் புனைவுகள் அல்ல. உங்களின் புளூட்டோ செல்பிகளை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம் புளூட்டோ  நிலாவைப் போன்ற வெள்ளையாகவும் இல்லாமல்,  செவ்வாய் போன்ற செவப்பாகவும் இல்லாமல் ஒருவித பழுப்பு நிறத்தில் உள்ளது.

குள்ளமாக உள்ளது என்று ஒதுக்கப்பட கோளாக இருந்தாலும் , அழகான ஐந்து நிலா மகள்களைக் கொண்ட மாமன் என்பதால் புளூட்டோ http://pluto.jhuapl.edu/   மாமனை கட்டி அணைப்போம்.

Image courtesy : NASA, Nationalgeographic & http://physics.stackexchange.com/