Friday, September 25, 2015

நான் ஏன் கடவுளை நம்பவில்லை - மைக் மால் (Mike Mal)

டவுள் அதாவது பைபிள் காட்டும் கடவுளை நம்பிய ஒருவர்,  இங்கே இவரின் நம்பிக்கை  சாதரண ஒன்று அல்ல. இவர் முற்றிலும் கடவுளை நம்பி ,  வரிக்கு வரி பைபிள் சொல்லும் அனைத்தையும் நம்பியவர் . கடவுள் அழைக்கிறார் என்று பாதிரியாருக்குப் படித்து முடித்து இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" (  Seventh-day Adventist Church. ) ஆலயத்தில் தனது பாதிரியப் பணியைத் தொடர்கிறார்.  இவர் கடவுள் , பைபிள் மற்றும் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்புகளின் போதனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர் என்பதைவிட முழு நம்பிக்கையாளர். அப்படியான அந்த காலகட்டத்தில், "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" ஆலயத்தின் / நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான "ஏலன் கெளவுஃட் வைட்" ( Ellen Gould White
பற்றி அப்போது பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது. (இன்றுவரை அது தொடர்கிறது) . கடவுள் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் இவர் "ஏலன்   வைட்" குறித்து மற்றவர்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க நினைத்தார்.  அந்த செயல்தான் இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆம், அதை ஆராய்ச்சி செய்ய இவர் முதன்முதலாக தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளைத் தாண்டி (பைபிள் மற்றும் அதுசார்ந்த கதைகள்) வெளியில் இருந்தும் படிக்க ஆரம்பித்தார்.

முடிவில் இவர் யாரை சரி என்று நிறுவ நினைத்தாரோ அவர் ( "ஏலன்  வைட்") ஒரு பொய்யர் என்று அறிந்துகொள்கிறார். ஏலன் சொன்ன கதைகள் எல்லாம் பிற புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறிந்ததருணம் இவரின் நம்பிக்கையில் விழுந்த முதல் நகக்கீறல் .அப்போதுகூட இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்பின்மீதுதான் நம்பிக்கை இழக்கிறாரே தவிர , பைபிள் மற்றும் அது காட்டும் கடவுளின் மீது வைத்த நம்பிக்கை மாறவே இல்லை. அடுத்த கட்டமாக, இவர் கடவுளிடமே தனக்கு சரியான வழியைக் காட்டுமாறு பிராத்திக்கிறார். இவர் அறிந்த தகவல்கள் (எல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் இன்றும் அனைவருக்கும் அது தெரியும் வண்ணமே உள்ளது)  பைபிள் ஒரு கட்டுக்கதை என்ற உண்மையைச் சொல்கிறது. சரி பைபிள் தவறு. கடவுளாவது உண்மையா?  என்றால் அதுவும் இவரை ஏமாற்றிவிடுகிறது.

கடைசியில் அறிவியலில் வந்து நிற்கிறார். ஆம் அறிவியல் என்பது இறுதி என்று எந்த ஒரு விதியையும் சொல்லாது. இன்று இருக்கும் தகவல், நாளைய கண்டுப்பிடிப்புகளால் மாறும் என்பதே அறிவியல் காட்டும் உண்மை.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie  என்ற இவரின் ஒரு மணி நேர இந்த ஆவணப்படத்தை பொறுமையாகப் பார்த்தால், கிறித்துவம் / பைபிள் என்பது எப்படி கட்டமைக்கப்பட்ட கதைகள் என்பது தெரிய வரும்.  இது ஏதோ இந்த ஒரு மதத்திற்கு மட்டுமே இருக்கும் சிக்கல் அல்ல. அனைத்து மதங்களும் புனைக்கதைகளின் மீது கட்டமைக்கப்பட்டவையே.

தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட மதப் புத்தகங்களதாண்டி , உண்மையான வரலாற்றுத் தேடல் ஆர்வம் இருந்தால் ஒவ்வொருவரும் அவர்கள் மத சொல்லிக்கொடுத்த கதைகளை அவர்களே நிராகரிக்கும் அளவிற்கு தகவல்கள் உண்டு.

இது சராசரியான ஆவணப்படம் அல்ல. தகவல்களால் நிரம்பிய ஒரு ஆவணம். கடவுளை கடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவலாம். உண்மையான மனிதம் மற்றும் அறிவியல் இந்த மனித குலத்திற்கு செய்தவற்றை அறிய ஒரு வாய்ப்பு.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie
https://www.youtube.com/watch?v=M5ZLuRYp8gk



Is God Moral?
https://www.youtube.com/watch?v=uUbz4mpXIbo



தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் Mike Mal இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நான் சொல்லியுள்ளது அவரின் ஆவணம் குறித்த எனது விமர்சனமே.

You Tube, Picture courtesy Mike Mal -https://www.youtube.com/channel/UCU8gjkOuh1b-_vYPCZGY0-g/feed

.

Wednesday, September 23, 2015

அசோகன் சவுண்ட் சர்வீஃச்

முதலில் எங்கள் ஊரில் பாப்புலராக இருந்தது "அசோகன் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், அசோகன் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள்.  ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு மூன்று சைக்கிள்களில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபைய‌ர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை  இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெள‌ம்பிவிடுவார்கள். சிலகாலம் கழித்து இவர்கள் மூன்று சக்கரவண்டி வாங்கியதாக நினைவு.

சின்ன வயதில் என் அண்ணன் இவர்களுடன் ஒட்டிக்கொண்டே சுத்துவான். வீட்டில் சண்டை நடந்தால் அவன் கோவித்துக்கொண்டு போகும் இடங்களில் 'அசோகன் சவுண்ட் சர்வீஃச்' ஒன்றாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, என் அண்ணன் போன்ற‌ பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் அசோகன், யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி இவனுக்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, அசோகன் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.

ல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது  இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப  குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில‌ நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து  "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக"  , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள்.  தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.

ரசியல் மேடைகளில் பெரும்பாலும் ஒரு மைக் இருந்தாலே ஒப்பேற்றிவிடலாம். எப்பவாவது இரண்டு மைக் வைக்க வேண்டி வரும். ஆனால் நாடக மேடைகளில் அதிக மைக் தேவைப்படும். பெரும்பாலும் மேளக்காரரருக்கு மைக் தேவைப்படாது. ஆனால் ஆர்மோனியத்திற்கு ஒரு மைக் அவசியம்.  நாதசுவரம் ஊதுபவர் அவர் முறை வரும்போது மைக் இருக்கும் பக்கம் திரும்பி ஊதித்தள்ளிவிடுவார். பொதுவிதியாக ஆர்மோனியம், நாதசுவரம், மேளம் அடங்கிய வாத்தியக் குழுவிற்கு இரண்டு மைக் வைக்கப்படும். நாடக நடிகர்கள் பேச ஒன்று அல்லது இரண்டு மைக் வைக்கப்படும்.  ராசபாட் நடிகராக இருந்தாலும் , பபூனாக இருந்தாலும் இருக்கும் மைக்கைத்தான் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.  இப்போது இருப்பதுபோல வயர்லெஃச் மைக்குகள் , மேடையில் தொங்கும் மைக்குகள் கிடையாது அப்போது.  மேடையில் எங்கு ஆடிக்கொண்டு இருந்தாலும் , வசனம் பேச வேண்டும் என்றால் மைக் அருகில் வந்தே பேச வேண்டும்.

த்தம் ..சத்தம் ..சத்தம் மட்டுமே. சத்தத்தை கூட்ட மற்றும் குறைக்க மட்டுமே முடியும். இப்போது இருப்பதுபோல வாத்தியங்களுக்கு தக்கவாறு தனித்தனி  அலைவரிசையில் தனித்த‌னியாக மிக்சிங் செய்ய முடியாது. சத்தம் அதிகம் வந்தால் "நல்ல மைக்செட் பார்ட்டி" இல்லை என்றால் வாடிக்கையாளர் குறைந்துவிடும். போட்டியே இல்லாத‌ ஊரில் புதிதாக "திருமலை ஒலி&ஒளி அமைப்பு" கடை போட்டது. இவர் அருகில் உள்ள கிராமத்துக்காரர். எங்கள் ஊரில் வந்துது கடை போட்டார். காலப்போக்கில் இருவருக்கும் தனித்தனி ஆர்டர்கள் கிடைத்து இருவரும் நன்றாகவே தொழில் செய்துகொண்டு இருந்தார்கள். காலத்திற்கு ஏற்ப இருவரும் ஃச்பீக்கர் டப்பாக்கள் வாங்கி அடுக்கி வைத்தார்கள்.

குழாய் வடிவ ஃச்பீக்கரில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அதை  எங்காவது கட்ட முடியுமே தவிர அருகில் வைத்து கேட்க முடியாது. விழாவீடுகளுக்கு வெளியே நல்லா கேட்கும் பாட்டு, அந்த வீட்டின் பந்தலின் உள்ளே கேட்காது. அந்தக் குறையை ஃச்பீக்கர் டப்பாக்கள் நிவர்த்தி செய்தன. அடுத்து வ‌ந்த தலைமுறையினர் மதுரையில் இருந்து பெரிய மைக்செட் பார்ட்டிகளை கொண்டுவந்து அதிக வித்தைகள் காட்டினார்கள். பம்பர் குலுக்கல் பரிசுடன் நடந்த பெரிய நாடகத்திறுகு மைக் செட்டு அமைக்க ஒரு பெரிய கம்பெனி மதுரையில் இருந்து வந்தது. போகஃச் லைட்டுகள் , கலர் கலர் மேடை லைட்டுகள் , 5 க்கும் மேற்பட்ட மேடை மைக்குகள் என்று வைத்தபோது அது பெரிய ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அசோகன் மற்றும் திருமலை குழுவிற்கு இப்படியான நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குறைந்துகொண்டே போனது.

ஒரு கட்டத்தில் அவர்களின் அலுமினிய கூம்பு ஃச்பீக்கர்கள் படிப்படியாக சத்தத்தை குறைத்து மெளனமாகிவிட்டன.

Picture courtesy: wikimedia.org 

Thursday, September 03, 2015

முற்போக்கு என்பது எது?

மிழில் பின்நவீனத்துவம் என்ற‌ ஒரு வார்த்தை புழக்கத்திற்கு விடப்பட்ட காலத்தில், அதை மொழி பெயர்த்தவர்கள்  Postmodernism என்பதை அப்படியே தமிழ்ப்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இது ஏதோ "முன்நவீனத்துவம் -- நவீனத்துவம் --- பின்நவீனத்துவம்" என்ற தொடர் பகுப்புபோல் புரிய வைக்கும்.  சரியாக இருக்க வேண்டும் என்றால் , "நவீனகாலத்திற்கு பிறகு" அல்லது "நவீனத்துவத்திற்கு பிறகான" என்றுதான் இருக்க வேண்டும். மாடர்ன் என்ற புள்ளியில் இருந்து அதை விமர்சித்து (கலை பண்பாட்டு வழிகளில்) எழுந்த ஒரு கோட்பாடு / இயக்கம்தான்  Postmodernism. ஆனால் அப்படியான ஒரு அர்தத்தை தமிழ் வார்த்தை "பின்நவீனத்துவம்" கொடுக்கவில்லை எனக்கு.

இப்படி பல சிக்கல்கள் உண்டு . பேசும் / எழுதும் வார்த்தைகள் உண்மையான பொருளை கடத்திவிடமுடியாது. அதுவும் மொழிபெயர்ப்புகளில் பெரும் சிக்கல்.

முற்போக்கு என்பது என்ன?

இதன் உடனடி அர்த்தம்,  இருக்கும் நிலையில் இருந்து முன்னோக்கிச் செல்வது.  அதாவது 2001 ல் இருந்தால் 2002 க்குச் செல்வது போன்றது.  தவறு என்று 2001 ல் அறியப்பட்ட ஒன்றை 2002 க்கு எடுத்துசெல்லாமல் , சுமைகளை உதறி முன்னேறுவது.

எது சுமை என்பதில் வேறுபாடுகள் வரும்போது ஒருவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் அடுத்தவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் வேறு வேறாகிவிடும். மதப் புத்தகங்களை எடுத்துக்கொள்வோம் அதில் "இந்த வரி தவறு இந்தக் காலத்திற்கு உதவாது" என்று சொல்லி அதை அகற்ற மாட்டார்கள். அதே புத்தகம் அச்சு மாறாமல் அடுத்த காலத்திற்கும் பயணித்துக்கொண்டு இருக்கும். இங்கே இதை யாரும் சுமை என்று  கருதவில்லையாதலால், அதைவிடாமல் எடுத்துக்கொன்டு போகிறார்கள்.

எது சுமை? என்பதை தனி ஒருவன் அவனுக்காக முடிவு செய்கிறான் (செய்ய வேண்டும்). எதை அடுத்த சந்ததிக்கு கடத்தலாம் என்பதையும் அவன்தான் முடிவு செய்ய வேண்டும். சில புனைக்கதைகளை (Fiction) கதைகள் என்று சொல்லி கடத்திக்கொண்டே இருக்கலாம் தவறே இல்லை. ஆனால் இன்றும்,  "உலகம் தட்டை" (Non-Fiction) என்ற தகவலை கடத்திக்கொண்டே இருந்தால் அதுதான் பிற்போக்குத்தனம்.  ஆனால் இன்றும் உலகம் தட்டை என்று நம்புபவர்களுக்கு அது பிற்போக்குத்தனம் இல்லை.

எனவே,  ஒருவர் பிற்போக்கா இல்லையா என்பது , அவரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்,  அவர்களின் சுமை குறித்த புரிதல்களின் பேரில் மாறுபடும் ஒன்று.

.
Picture courtesy: www.artafrica.info