Friday, December 15, 2017

அப்பா:விலையில்லா பண்டம் "மனிதம்"

"நாலு இட்லி பார்சல்" என்று கேட்டு இரசீது வாங்கி , மதுரை அண்ணாநகர் 'அன்னபூர்ணா' உணவகத்தின் "பார்சல்" கவுன்டரில் நின்றேன். வீட்டில் இருந்து இட்லி கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அப்பாவுடன் போகும் போது அவர் நினைத்ததுதவிர ஒன்றும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்.

கைகள் , விரல்கள் என்று உடல் நடுங்கும் அப்பாவிற்கு, உணவை கையில் எடுத்து சாப்பிட அவருக்கான சில வசதிகள் வேண்டும். வீட்டில் அது உள்ளது.

பேப்பரில் பொட்டலமாக கட்டிக்கொடுக்கும் இட்லியை அவரால் சாப்பிடவே முடியாது. தட்டு போன்ற ஒரு தகரம் கிடைத்தால்கூட ரோட்டில் பொறுக்க தயாராக இருந்தேன். 

ஓட்டல் பார்சல் கவுன்டரில் கவலையுடன் நின்று கொண்டிருந்தபோது, அவர்களிடம் சின்ன செவ்வக வடிவில் அலுமினிய டப்பா ( Aluminium Foil Pressed ) இருந்தது பார்வைக்கு தெரிந்தது.

"பார்சலை அந்த கப்பில் கொடுக்க முடியுமா?" என்றேன்.

 "இல்லீங்க இட்லி பார்சலுக்கு பொட்டலம் தான்" என்றார். 

என் அப்பாவின் நிலையைச் சொல்லி , அட்டை போன்ற ஒன்றின் தேவையை,  பிச்சை எடுக்காத குறையாகச் சொன்னேன். 

"இல்ல சார் அதில இட்லி பார்சல் வராது" என்று சொல்லிவிட்டார் கவுண்டரில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் .

"அம்மா,  அந்த கப்புக்கான விலையைக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.

 "அப்படியெல்லாம் கொடுக்க முடியாது" என்றார். 

"என்ன வாங்கினால் கப்பில் கொடுப்பீர்கள்?" என்றேன். 

"எதுக்கும் கிடையாது" என்று இட்லியை தினத்தந்தி நாளிதழில், ஒரு பிளாஃச்டிக் பேப்பரை வைத்து கட்ட ஆரம்பித்துவிட்டார்.

அப்பா மருத்துவச் சோதனைக்கு வந்துள்ள "ஆசிர்வாதம்" மருத்துவமனையில் , உட்கார சேர் தவிர ஏதும் இல்லை. அதுவும் சந்து போன்ற ஒரு பகுதி. உணவு சாப்பிடும் முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சோதனைகள் உண்டு. ஆனால் 82 வயது ஆன , நடக்க , உட்கார,  சாப்பிட அனைத்திற்கும் உடல் நடுங்கும் மனிதர்களுக்கு , உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லை.

பழைய சோற்றுக்கே பிச்சை எடுக்கும் சம்முவத்தில்,  பிரியாணியில் கறி கம்மி என்று , தனியார் மருத்துவமனை குறித்து நான் புலம்புவதை யாரும் கேள்வி கேட்கலாம். நகைக்கலாம். அது உண்மையும்கூட. 

20 வருடமாக அப்பா இங்குதான் வருகிறார் என்பதால், எத்தனை மணிக்கு வீட்டில் எழுந்திருக்க வேண்டும் என்பதில் இருந்து , என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர் கட்டளை. அதை மீறி சிந்தித்தால்கூட சண்டை வந்துவிடும். அவர் திட்டப்படி "கடலில் இறங்கி கப்பலைத் தள்ளு" என்றாலும் தள்ளியாக வேண்டும்.

இந்த மருத்துவமனை மற்றும் அதன் சோதனை முறைகள் குறித்து புரிதல் ஏதும் இல்லாத தற்குறி நான். அக்கா பிள்ளைகள் இருந்தவரை அவர்கள் அழைத்து வருவார்கள். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கு இதுஎல்லாம் இயல்பானதாய் இருந்திருக்கும் போல.

எனக்குத் தெரிந்திருந்தால் ஒரு தட்டு மற்றும் நாலு இட்லியை வீட்டில் இருந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து வந்திருப்பேன்.

ஒரு தட்டு கிடைத்தால் இட்லி சாப்பிட வசதியாய் சாம்பார் ஒழுகாமல் , சிந்திவிடாமல் சாப்பிட முடியுமே என்பதே என் கவலை. அழுதாலும் அந்த அலுமினிய டப்பா (3 " x 3" அளவு. இரண்டு இட்லி வைக்கலாம்) கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண்.

எனது 'தாய்மாம்' உடன் வந்திருந்தால் அவரை , அப்பாவுடன் விட்டுவிட்டு சிறிது தொலைவில் உள்ள கடையில் ஏதேனும் 2018 காலண்டர் அட்டையாவது வாங்கி வந்திருப்பேன். வீட்டில் இருந்து கிளம்பும் போது, எதற்கு "இத்தனைபேர். அவன் வந்தால் நான் வரலை" என்று சண்டை செய்துவிட்டார் அப்பா. வீட்டில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் அப்பா.

பொட்டலத்தை பிரித்து அப்பா எப்படி சாப்பிடுவார் என்ற கவலையில் இட்லி கவுண்டரில் நின்று கொண்டு இருந்தேன். பொட்டல இட்லியில் சாம்பார் ஊற்றி நடுங்கும் ஒரு கையில் பிடித்து, அடுத்த நடுங்கும் கையில் அவரால் சாப்பிடவே முடியாது. 

அவருக்கு ஊட்டி விடுவது என்பது , அவரின் கௌரவக் குறையாகிவிடும் என்றோ அல்லது என்ன காரணமோ, எதுவும் செய்ய விடமாட்டார். வேண்டுமானால் , ஓரமாக உட்கார்ந்து அழுகலாம் நான். அதுவே என்னால் , என் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்ணீர்கூட என் கட்டுப்பாட்டில் இல்லை.

*
இட்லி வாங்க ஓட்டல் வருவதற்கு முன்னரே , மருத்துவமனை கழிப்பறைத் தொழிலாளி ஒருவரிடம் அதன் அருகில் உள்ள ஒரு சேரில் உட்கார்ந்து சாப்பிடலாமா என்று கேட்டு அனுமதி வாங்கிவிடேன். அவர் பார்த்து "இங்கெல்லாம் முடியாது" என்று சொல்லி இருந்தால், அப்பாவை ஓட்டலுக்குத்தான் அழைத்துவர வேண்டும்.

மருத்துவமனையில் டோக்கன் வாங்கி விட்டால், அங்கேயே இருக்க வேண்டும். டோக்கன் எண்படி , செவிலியர் யாராவது அப்பாவை சோதனைக்கு அழைத்தால் உடனே "உள்ளேன்" சொல்லவேண்டுமாதலால் அப்பா அங்கே இருப்பது அவசியம்.

கண்ணீரைக் கடத்திக்கொண்டே அன்னபூர்னா பார்சல் கவுண்டரில் நிற்கிறேன். 

என் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துகள், வங்கி டெபாசிட்டுகள், என் பணம் , எதுவும் உதவாத நிலை. அந்த ஓட்டலில் பொட்டலம் கட்டும் பெண்ணின் மனமிரங்க எந்த சொத்து /பணம் மசிரும் உதவவில்லை. மனிதம் புரியாத இடத்தில் ஒன்றும் வேலைக்காவாது.

அப்போது அந்த கவுண்டரில் இட்லி எடுக்க வந்த ஒரு சர்வர் , "என்னக்கா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அவர் உள்ளே சாப்பிடுபவர்களுக்கு சப்ளை செய்யும் சர்வர். இந்த பார்சல் கவுன்டர் பெண்ணும் , எனது 'வேண்டுகோளை' , 'பிரச்சனையாக' அவரிடம் சொன்னார்.

அவரிடமும் என் வேண்டுகோளை வைத்தேன். 

அவராலும் முடியாவிட்டால் நாலு வார இதழ்களை வாங்கி அட்டைபோல் வைக்க எண்ணம். அப்படி வைத்தாலும் , அப்பாவால் சாம்பார் ஊற்றிச் சாப்பிடவே முடியாது. 

அந்த சர்வர், என்னிடம் "சார் கேசியர்ட்ட போய் கேளுங்க" என்று சொன்னார். 

கேசியரிடம் சென்று முறையிட்டேன். அவர் அங்கருந்தே, "டப்பால குடுங்க" என்று பார்சல் கவுன்டர் பெண்ணிடம் சொன்னார்.

சர்வர் மற்றும் கேசியர் இருவரும் 20 ல் இருந்து 25 வயதிற்குள் இருப்பார்கள்.

மறு பேச்சு பேசாமல் , பார்சல் கவுன்டர் பெண் , அந்த டப்பாவில் இரண்டு இட்லி வைத்து ( அதற்கு மேல் அது கொள்ளாது) , பொட்டலத்தில் இரண்டு இட்லிகளை மடித்துக் கொடுத்தார்.

அதற்குள் அப்பாவின் டோக்கன் வந்துவிடுமே என்று ஓடி வந்துவிட்டேன். அந்த பார்சல் பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு.

**
மருத்துவமனை , கக்கூசிற்கு அருகில் அப்பா அப்படியே உட்கார்ந்து இருந்தார்.அவருக்கு ஒவ்வொரு இட்லியாக இந்த அலுமினிய கப்பில் கொடுத்து, சிறிதே சாம்பார் ஊற்றி சாப்பிட வைத்தேன். அப்படி இருந்தும் வேட்டியில் சாம்பார் சிந்திவிட்டது . அவரின் நடுங்கும் கைகளால்.

*
மறுபடி அதே ஓட்டலுக்குச் சென்று அந்த சர்வரைத்தேடி நன்றி சொன்னேன். "காசு கொடுத்தாலும் கிடைக்காத உதவி நீங்கள் செய்தது" என்று சொல்லி சின்னதாக சன்மானம் கொடுத்தேன். அந்த பணம் பிழைக்கத்தேவையாய் உள்ளதே தவிர அவரின் உதவியை அளவிட அல்ல.

கேசியரைத்தேடினேன். அவர் இல்லை. அவரிடமும் என் அன்பைத் தெரிவிக்கச் சொல்லி , சர்வரிடமே , கேசியரின் சன்மானப் பணத்தையும்  கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

*
படியில் ஆரம்பித்து, கதவு , தரை வரை நோயாளிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுவதில்லை. கம்பு ஊன்றி நடந்தாலும் வழுக்கும் பள பள தரை, ஒருக்களித்துச் சென்றாலும் முதியவரை கைபிடித்துச் செல்ல முடியா கதவு . இப்படி பல.

நாலு அறை நாற்பது செவிலியர் என்று தொடங்கப்படும் மருத்துவமனைகள். ஆனால் அவற்றைத்தான் நம்புகிறார்கள் மக்கள். ஒரு வீல் சேர் இருந்திருந்தால் உதவியாய் இருந்து இருக்கும்.

கண் பார்வை குறைந்த , நடுங்கும் கை கால்கள் கொண்ட , குச்சி ஊன்றிய தாத்தாக்கள் , சிறுநீர் சோதனைக்காக சிறுநீர் பிடிக்க முடியாத 2x2 கக்கூசு. 

*
செவிலியர்களையோ ஓட்டல் சிப்பந்திகளையோ குறை சொல்ல முடியாது. 

வழிகாட்டிகள் இல்லா நாடு. என்பதைத்தவிர யாரை நோவது. 😢😢

*
மனிதம் என்பது விலைமதிப்பற்ற உணர்வு. அது எல்லாமட்டத்திலும் இருக்க வேண்டும். கட்டடம் கட்டும் வரைபடத்தில் ஆரம்பித்து ஓட்டல் பார்சல் கவுண்டர் வரை இருக்க வேண்டும்.