Monday, July 23, 2018

பறவைகளின் இறுதிக்காலம்: வானத்தில் இருந்து குதித்தவனா நீ?

றவைகளின் வாழ்வு குறித்து அதிக கேள்விகள் உண்டு எனக்கு. முக்கியமாக அதன் இறுதிக்காலம் குறித்து. கூட்டம் கூட்டமாய் அலையும் பறவைகளில், சில உயிர்கள் உதிர்ந்தபின், அந்தக் கூட்டம் என்னவாகும்? எங்கு இறக்கை இறக்கிறது? என்பது குறித்து அதிக கேள்விகள் உண்டு.

சின்ன வயதில் இருந்து, இன்றுவரை என்னைத் தொடரும் ஒரு கனவு, பறப்பது. ஆம். கனவில் அடிக்கடி பறந்துவிடுவேன். வெறும் கையை இறக்கை போல விரித்துக்கொண்டு
ஒரு கிளைடர் பொருத்தப்பட்டதுபோல் வேகமாகப் பறப்பேன். அப்படிப் பறக்கும் போது, மின் கம்பங்களில் மாட்டிக்கொள்ளாமல் பறப்பது ஒரு பெரிய சவால் எனக்கு. கனவு கலைந்து எழுந்தாலும், விட்ட இடத்தில் இருந்து, ஒரு வாரஇதழின் தொடர்கதை போல
போல தொடர்ந்துவிடுவேன் பறக்கும் கனவை மட்டும்.
**

விட்டுப்போன கனவுகளும் உண்டு. சின்னவயதில் சாம்பல் நிறப்பூனை ஒன்று என்னை அடிக்கடி விரட்டும் கனவில். சொல்லி வைத்ததுபோல ஒவ்வொரு முறையும் பூட்டிய அறையில் நான் மட்டும் தனியாக பூனையுடன் மாட்டிகொள்வேன். பூட்டிய அறையின் மூலையில் இருந்து என்னைக் குறிவைத்து பாயும். சாம்பல் நிறப்பூனை. கனவில், பயத்தில் நான் அலறும் பெரிய அலறல் சத்தம், வெற்று முனகலாக மெய்யுறக்கத்தில் முனகப்பட்டு கீச்சுக்குரலாய் வரும். அப்போதெல்லாம் அம்மா என்னை எழுப்பிவிட்டு , தண்ணீர் குடிக்கவைத்து
 மீண்டும் படுக்கச் செய்வார்கள். இப்போது பூனைக்கனவு வருவது இல்லை. ஆனால் வந்துவிடுமே என்ற பயம் இன்றும் உள்ளது.

அதுபோல நின்றுபோன ஒரு கனவு. தூக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்னுக்குப்போவது போன்ற கனவு. பூனைக் கனவில் சத்தம் வெளியில் கேட்காது. ஆனால், ஒன்னுக்குப் போகும் கனவில், மிகவும் சுகமாக மெய்யாகவே ஒன்னுக்குப்போய்விடும். அதுவும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே ரோட்டின் ஓரத்தில் சுகமாக ஒன்னுக்குப்போவது போல ஒரு கனவு. நின்றுபோன கனவுகளுக்கு நன்றி.
**

ஆனால், விடாது தொடரும் பறக்கும் கனவை என்ன செய்வது? மிகவும் பிடித்த‌ கனவாயிற்றே. அதுவும் மலைகளின் முகட்டில் இருந்து பறக்க ஆரம்பித்து, ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களுக்கு இடையில் சமார்த்தியமாக இறங்குவது என்பது சாதனை. சின்ன வயதில் எனக்கு பறக்கும் சக்தி உள்ளது என்று நம்பினேன். தனியாக இருக்கும்போது கையை விரித்து ஓடிப்பார்த்து ஏமாந்தும் இருக்கிறேன். இத்தனைக்கும் எனக்கு எனது மகளுடன் ரோலர்கோஃச்டரில் போவது இன்றுவரை பயமான ஒன்று.

ஆனால் அப்படியே பறவை போல பறப்பது பிடிக்கும். பறத்தலில் முரண். ஒருவேளை ரோலர்கோஃச்டரில் இறுகக்கட்டி இருப்பது ஒரு சிறைத்தன்மை என்ற உள்ளுணர்வாய் இருக்கலாம்.
**

நான் ஓவியன் அல்லன். ஆனால் மிகப்பெரிய ஓவியனாக வந்திருக்க வேண்டியவன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். மதுரை பிரிட்டோ பள்ளியில் படித்த போது, ஓவியப் பாடம் எடுத்த ஒரு ஆசிரியரால் எனக்கு ஓவியக் காதல் வந்தது. அந்தக் காதல் பிற்காலத்தில் அப்பா அம்மா பார்த்து வைத்த எஞ்சினியர் டாக்டர் என்ற வரன்களில் எஞ்சினியருக்கு வாக்கப்பட்டுவிட்டதால் அந்த‌ ஓவியக்காதல் கருகிவிட்டது. ஆம் எட்டாம் வகுப்பில் கிராமப்புற‌ மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைக்காக படிக்கத் தொடங்கிய வாழ்க்கை, வெறும் தேர்வை நோக்கிய படிப்பாகிவிட்டது. இப்படி பல காதல்கள் கருகிவிட்டது பிழைப்பிற்காக.
**

A comfort zone is a beautiful place but nothing ever grows there என்று சொல்வார்கள். நாடகம், மேடை இசை அமைப்பு, பாய்மரப் படகு, பலூன், மரவேலை என்று எனக்கான எல்லைகளைச் சோதித்துக்கொண்டே உள்ளேன். தொடரும் கனவுகளை ஏன்  மெய்யாக்கக்கூடாது என்று இந்த இரண்டு வாரங்களில், சட்டென திரும்பும் வளைவுகள் போல, சட்டென்று சிலவற்றுக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன்.
**

30 டாலர் கொடுத்தால், பீர் குடித்துக்கொண்டே தூரிகையில் படம் வரையலாம். இரண்டு மணிநேர சோசியல் அமர்வு என்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். இதுவே சரியான வாய்ப்பு என்று எனது பெயரைப் பதிந்துவிட்டேன்.

வந்திருந்தவர்ககளில் 75 சதவீதம் Millennials தான்.  இந்தக்காலத்து இளைஞர்களாக பிறந்திருக்கலாம் என்ற பொறாமை வந்தது மறுக்க முடியாதது. நானும் எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இளைஞர்களோடு கிழவனாக அமர்ந்துகொண்டேன். பயிற்சியாளர் சொல்லச்சொல்ல, நாம் வரைய வேண்டும். இரண்டு மணிநேரத்தில் ஒரு அழகிய ஓவியக்குழந்தையை பிரசவித்துவிட்டேன். சுற்றி இருந்த இளைஞர் பட்டாளத்துடன் படமும் எடுத்துக்கொண்டேன். 30 டாலர் செலவில் நானும் ஓவியனாகிவிட்டேன்.
**

"வீட்டில் அலங்காரத்திற்காக அடுத்தவன் வரைந்த படங்களை மாட்டுவதில்லை.நம் படங்களுக்கு காட்சியமாக நியூயார்க் கண்காட்சிகள் இடம் கொடுக்காது, நம் வீட்டில் நாம் வரைந்த படங்களே இருக்க வேண்டும்" என்று நான் என் மனைவியிடம் சொல்லி இருந்தேன். அவராக ஏதாவது வாங்கி மாட்டினால் நான் தடுக்கப்போவது இல்லை. ஆனால் நான் வாங்கமாட்டேன். என்று சொன்னது சண்டையாகி, இன்றுவரை எங்கள் வீடு வெறும் சுவராகாவே இருக்கும் எந்த அலங்காரப் படங்களும் இன்றி.

இதோ இன்று முதல் ஓவியம் 30 டாலர் செலவில் நன் வரைந்த ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது வீட்டில். இதைத் தொடர எண்ணம்.


https://www.facebook.com/pg/PinotsPaletteApex/photos/?tab=album&album_id=2123857307860097
**
வானத்தில் இருந்து குதிப்பது என்பது சகலவிதமான சவால்களையும் கொண்டது. முக்கியமான சவால், ஏதாவது ஒன்று நடந்து (வேறு என்ன சாவுதான்), பறவைகளின் இறத்தல் போல நானும் இறந்துவிட்டால், பிள்ளைகள் என்ன செய்வார்கள்? என்ற பயமே. இப்படியான விசயங்களுக்கு குறிப்பிட்டகால ஆயுள் காப்பீடு ஏதும் பணம் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், If Not NOW Then WHEN? என்ற  உந்துதலில், பறக்க ஆயத்தமானேன்.

அலுவலகம் அருகில் உள்ள சின்ன விமான நிலையம் அருகே skydiving கடை ஒன்று இருப்பது ஏற்கனவே தெரிந்து இருந்தாலும், எமனின் வாயிலை தள்ளிப் போடும் நோக்கத்தில் விலகியே இருந்தேன். இதோ இப்போது அதையும் செய்யத்துணிந்துவிட்டேன். சாவு கண்டு பயமில்லை என்றாலும், செத்தபிறகு குடும்பத்தினர் படப்போகும் துயரங்களே குதிக்கும்வரை இருந்தது. நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு இப்படியான செயல்கள் வில்லங்கமே. குடும்பத்தினர் யாரிடமும் சொல்லவில்லை. செத்தால் யாருக்கு தகவல் சொல்வது என்ற இடத்தில் மகனின் கைப்பேசி எண்ணைக் கொடுத்தேன். அவன் இப்போது ஒரு கல்லூரி ஒன்றில் ஒருமாத கோடை வகுப்பிற்காகச் சென்றுள்ளான். அவன் எண்ணைக் கொடுத்துவிட்டு, மீன்பாடி வண்டியை ஒத்த ஒரு அப்பாடக்கர் ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஏறிவிட்டேன்.
**

தனியாகக் குதிக்கப்போவது இல்லை. உடன் குதிக்கும் தேர்ச்சிபெற்ற ஒருவருடன், கங்காருகுட்டிபோல ஒட்டிக்கொண்டு குதிப்பதுதான் என்றாலும், அடிவயிற்றில் பயம் பந்துபோல எழும்பி, நெஞ்சை அடைத்துக்கொண்டது. ஒருவேளை என் சாவுச் செய்தி என் மகனின் தொலைபேசியில் ஒலித்தால்  அவன் என்ன செய்வான் என்ற கலக்கம் இருந்தது.

எல்லாம் அந்த விமானத்தில் இருந்து காலின் கடைசி உறவு முறியும்வரைதான். காற்றில் விழுந்து, மேகத்தில் கலந்து மிதந்தவுடன், எல்லாப் பயமும் போய்விட்டது. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தரை இறங்கும்வரை மகிழ்ச்சியாய் இருப்போம். இறந்தால், முகவரி இழந்த மற்றொரு பறவையாகிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.
**
ஆறாயிரம் மீட்டர் உயரம் வரை கூட்டிச் செல்லப்பட்டு, அங்கிருந்து காற்றில் குதிக்கவேண்டும். முதல் ஆயிரம் மீட்டர் தொலைவு, free fall எனப்படும் அப்படியே வீழ்தல். பாராசூட் அப்போது செயல்படுத்தப்பட்டிருக்காது. மணிக்கு 120 மைல் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டும், மேகத்தை முத்தமிட்டும் விழுதல். மெல்லிய மழை மூட்டம் இருந்ததால் சில்லென்ற மேகங்களின் கன்னம் தொட்டு முத்தமிட்டுச் செல்ல வாய்ப்புகிடைத்தது.
**
எங்கோ குதித்து சரியான இடத்தில் தரை இறங்குவதற்கு, பாராசூட்டில் சின்ன skydiving sailing அமைப்பும் உள்ளது. அதுவும் ஒரு துணிதான். ஆனால் பாய்மரப்படகின் sail போல அதை நேர்த்தியாய் கையாண்டு நம்மை அடுத்த ஆறாயிரம் மீட்டருக்கு பாதுகாப்பாக இறக்குவார்கள்.



**
சின்ன வயதில் வந்து இப்போது நின்றுபோன ஒரு இரகசியகக் கனவும் உள்ளது. ஏதோ ஒரு பெரிய நகரத்தின் வீதியில் நான் மட்டும் ஆடையின்றி கூனிக்குறுகி கவட்டில் கைவைத்து மறைத்து இருப்பது போன்ற ஒரு கனவு. சின்ன வயதில் கிழிந்த டவுசருடன் அலைந்த போது யாராவது கேலி பேசி அல்லது டவுசரை அவிழ்த்து அவமானப்படுத்தியதன் எஞ்சிய பயமாகக் கூட இருந்திருக்கலாம். அப்போது சட்டி போடும் வழக்கம் எல்லாம் இல்லை. செருப்பு சட்டி போன்றவை மேல்தர வர்க்கம் அப்போது. அரைஞான் கயிற்றின் சுறுக்கு முடிச்சு இறங்கி, தொங்கிக் கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து எவனாவது இழுத்துவிட்டு, வகுப்பு பெண்களின் மத்தியில் அவமானப்பட்டு இருக்கலாம். சுமதி இல்லாத கூட்டங்களில் அவமானங்களை ஏற்கத் தயாராகவே இருப்பேன். ஆனால் கேள்விப்பட்டு அடுத்த நாள் அக்கறையாக விசாரிப்பாள்.
**
இங்கு 5k clothing optional ஓட்டம் ஒன்று வருடாவருடம் நடக்கிற‌து. அடுத்து அதற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். Face your fears!

Sunday, July 15, 2018

எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்

மெய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்கையில் முதுமைக்கு என்ன செய்வது? முதுமையில் பிச்சையெடுப்பதைத் தவிர்க்க என்ன செய்வது?, என்ற பயத்தின் விளைவாக‌ , சில சேமிப்புகளை காலம் கடந்து ஆரம்பித்தேன்.

முதலீடுகள் பற்றிய அறிவுரைகள் எல்லாம், முதல் வைத்துள்ளவர்களுக்குத்தானே? இருந்தாலும், என் பிணத்தைப் புதைக்கக்கூட பணம் அவசியம் என்பதால், சேமிப்பு முக்கியம். எனது குழந்தைகளுக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் சேமிப்பின் முக்கியத்துவத்தைச் சொல்லுவேன். முதலீடுகளின் முக்கியத்துவம் அதில் இருக்காது. குறைந்தபட்ச சோறுக்கும், கூரைக்கும் உத்திரவாதமாக‌, வயதான காலத்தில் உதவ சேமிப்புகள் தேவை.
**

"பணத்தை வச்சி என்ன செய்ய?" என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இன்றும் பிள்ளைகள் படிப்பு , வீட்டுக்கடன், என்று க‌ழுத்துவரை கடன் வாழ்க்கைதான். வீடு வாங்கி விற்பது, நிலம் வாங்கி விற்பது, பங்குச் சந்தையில் நேரடியாக பணம் போடுவது எல்லாம் எனக்கு தெரியாத செயல்கள். அமெரிக்காவில் 401K எனும் ஓய்வுத்திட்டத்தில், முடிந்ததை போட்டுவிட்டு, மறந்துவிடுவேன். அதற்குமேல் என்ன செய்வது என்பது தெரியாது. உதாரணத்திற்கு "2050 ல் ஓய்வு பெறுபவர்களுக்கான திட்டம்" என்று இருக்கும். அதில் மாதம் சிறு தொகையைப் போட்டுவிடுவேன் அவ்வளவே என் டொக்கு. அதற்குமேல் முதல் இல்லை.

நாளையே நான் மூச்சை நிறுத்திவிட்டால், பிள்ளைகளும் மனைவியும் பிழைத்துக்கிடக்க காசு வேண்டும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கான உயிர்க்காப்பீடு எடுத்துள்ளேன்.  (Term life insurance or term assurance is life insurance that provides coverage at a fixed rate of payments for a limited period of time). அதில் போடும் பணம் கிணற்றில் போடும் பணம். அந்தக் காலத்திற்குள் நான் செத்தால் வாரிசுகளுக்கு வாழ்க்கையை நடத்த  பணம். நான் அந்தக் காலத்திற்குள் சாகாவிட்டால் , போட்ட பணம் கிணற்றில் உள்ள சதுக்க பூதத்திற்கு.

**
2008ல் வாங்கிய ஒரு கேம்ரி கார் அதன் இன்றைய மதிப்பு, $2000 டாலர். அதுதான் நான் அலுவலம் செல்லும் வாகனம். வாரத்தில் 400 மைல்கள் ஓடும். வழியில் நின்றுவிட்டால் சமாளிக்க‌ அதில் அத்தியாவசியமான ரிப்பேர் பொருட்கள் இருக்கும்  அவசர திட்டச் சாமான்கள் கிடக்கும். மாற்றுவதற்கு ஒரு உடை உட்பட.

பஞ்சரானால் டயரை மாத்திவிட்டு வேலைக்குப் போயாகவேண்டுமே? சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடும் வாகனம். பலமுறை ரோட்டில் மூச்சை நிறுத்தியுள்ளது. அள்ளிப்போட்டு ஆசுபத்திரி சேர்த்து அரைகுறை உயிரில் ஓடிக்கொண்டுள்ளது.
**

2008 ல் இருந்து 2012 வரை ஒரு வாகனம் மட்டுமே வைத்து இருந்தோம். நான் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று வருவேன். மழை,வெயில், பனி, புயல் எதுவானாலும், சைக்கிள்தான். ஒரு மஞ்சத் தோல் பையில், பருவநிலை ஆபத்தை சமாளிக்க அதற்கான சாமான்சட்டுகள் இருக்கும். 3 மைல் சைக்கிள் ஓட்டி , பின் பேருந்தில் ஏறி, இறங்கிய இடத்தில் இருந்து அடுத்து 5 மைல் சைக்கிள் ஓட்டி, அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலத்தில் குளிக்கும் வசதி இருந்ததால், சைக்கிளில் சென்ற பிறகு குளித்து வேறு உடைக்கு மாறிவிடுவேன்.


குழந்தைகளை பள்ளியில்விட, நீச்சல் போன்ற‌ பயிற்சிகளுக்கு கூட்டிச் செல்ல,  மனைவியின் பயன்பாட்டில் கார்  இருக்கும். பல நேரம் குழந்தைகளும் நகரப் பேருந்தில் பயணம் செய்தே காலம் ஓட்டினோம்.
**

இரண்டாவது காரின் தேவை இருந்தாலும், வசதி இல்லையாதலால் சமாளித்துகொண்டு இருந்தோம்.ஒருவரின் சம்பளத்தில் வண்டி ஓட்டுவது என்பது சிக்கலானது. ஒருவர் மட்டுமே சம்பாரிக்க வேண்டும். மற்ற ஒருவர் குழந்தைகள் ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை உடன் இருக்க வேண்டும் என்று, நானும் என் மனைவியும் போட்ட திட்டத்தினால், என்னைவிட கணினி மென்பொருள் தொழில்நுட்பத்தில் அதிகம் படித்து,அதிக வேலை வாய்ப்பிருந்த என் மனைவி வீட்டில் தங்கிவிட்டார்.

ஒரு கட்டத்தில் சமாளிக்கவே முடியாமல்தான் இரண்டாவது கார் வாங்கினோம் 5 வருட கடனில். 2012ல் வாங்கிய ஃகோன்டா வேன். அதன் இன்றைய மதிப்பு $12,000 டாலர்கள் இருக்கும். முந்தையதைவிட இது இளமையான‌(பாதுகாப்பான‌) வாகனம் என்பதால், மனைவி மற்றும் பிள்ளைகள் போய்வர பயன்படுத்துவோம். தொலைதூரப் பயணங்களுக்கு இதுதான்.

**
அம்பேரிக்கா வந்து 12 வருடம் கழித்தே வீடு வாங்கினோம்.அதற்கு இன்னும் 13 வருட கடன் உள்ளது. ஒரு மாதம் உழைக்காவிடில் ரோட்டுக்கு கூட்டிவந்துவிடுவார்கள் கடன் கொடுத்த வங்கியாளர்கள்.
**

எனது கதை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தினமும் மூன்று வேலைகள் பார்த்து, உடைந்த காரின் கண்ணாடியை, duct tape கொண்டு ஒட்டி, டயர் மாற்ற காசில்லாமல் ஏற்கனவே பயன்படுத்திய டயர்களை கயலான் கடையில் வாங்கி ஓட்டிக்கொண்டு இருக்கும் அமெரிக்க குடும்பங்கள் உண்டு.

ஒரு காலத்தில் இந்த ஊரில் அதிக நிலம் வைத்து இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர், ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் அந்த நாள் சோறு சாப்பிட முடியாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார். வாழ்ந்து கெட்ட குடும்பங்களும் உண்டு. வாழவே ஆரம்பிக்காத , ஆரம்பிக்கவே முடியாத, சமூகப் பொருளாதாரச் சூழலில் இருப்பவர்களும் உண்டு.

அமெரிக்க கிராமப் பகுதிகளில் நான் பார்க்கும் வாகனங்கள் கண்ணீர் கதைகளைக் கொண்டது.
**

உடன் வேலை செய்யும் தெலுகு நண்பர் ஒருவர், இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது , அவரின் இந்திய லாக்கரில் இருந்த ஒரு கோடிக்கு அதிகமான ரொக்கப்பணத்தை எப்படி வெள்ளையாக்கினார் என்று சொன்னபோது மலைத்துவிட்டேன். அமெரிக்காவில் என்னிடம் இருந்த‌ பத்து ஆயிரம், ரூபாயை எப்படி சட்டபூர்வமாக மாற்றுவது என்று, முறையான வழிகளில் தூதரகம், அதிகார பூர்வ பணமாற்றும் நிறுவனங்கள் அன்று அல்லாடி , விடை ஏதும் கிடைக்காமல், நொந்து போயிருந்த எனக்கு, இந்தியாவில் லாக்கரில் பணமாகக் கோடி என்பது மலைப்பே.ஆம் ,அதிசியமாகப் பார்க்கும் சாதரண வர்க்கமே நான்.

அவரும் அவர் மனைவியும் சம்பாதிக்கிறார்கள். கோவில்களுக்கு நன்கொடை என்றால் ஆயிரம் டாலர் கொடுத்தால்கூட அவரின் அன்றாட வாழ்க்கை அசராது. நூறு டாலர் டொக்கு விழுந்தாலே என் வாழ்க்கை நின்று நிதானிக்கும்.
**

அனைவருக்கும் கிடைக்கும் 24 மணி நேரம் போல, பணம் செய்யும் வாய்ப்புகள் சமமாகக் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும், நாம் எடுக்கும் முடிவுகள், நாம் எப்படியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், குழந்தைகளுக்கு எப்படியான முதலீடு செய்கிறோம்( பணம், நேரம், கல்வி, கலைகள்...) என்பதைப் பொறுத்து, பணம் பறக்கலாம் அல்லது பத்திரமாக இருக்கலாம். இவை எல்லாம் தனிமனித விருப்பங்கள்.
**

பணக்காரரர் ஆக வேண்டும் என்பது குறித்த சிந்தனைகளோ அல்லது ஆசையோ இல்லாவிட்டாலும்,பணம் என்பது பிழைத்திருக்க முக்கியமானது என்பதை ஆரம்பத்தில் இருந்து உணர்ந்தே உள்ளேன். கற்ற கல்வியே சோற்றுக்காகத்தான். கல்வியைக் கைக்கொள்ளாவிட்டால் சோறுக்கான உத்திரவாதம் இல்லை என்ற உந்துதலே என்னை தள்ளிக்கொண்டு கற்க வைத்தது. கற்றபின் கற்றதில் காதல் வந்தது வேறு.

முதலீடுகள் இல்லாத முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் வாழ்க்கை என்பதும், முதலாளி பிள்ளைகளின் வாழ்க்கை என்பதும் ஒன்றல்ல.
**

Financial Freedom என்று சொல்வார்கள். அது தரும் சுதந்திரம் எல்லையில்லாதது. ஆனால், இவ்வளவு பணம் இருந்தால்தான்  Financial Freedom  என்ற எந்த அள்வீடுகளும் இல்லை. இருக்கவும் முடியாது.

ஆசைகள் அளவில்லாதவை. வசதியும் வாய்ப்பும் வந்துவிட்டால், எல்லா ஆசைகளும் ஒரு கட்டத்தில் தங்களுக்கான நியாயங்களுடன், தேவையாக மாறி நிற்கும்.
**

செலவழிக்கப்படாத பணம் சேமிப்பு என்றாலும், சம்பாதிக்க வழி இருந்தால்தானே வருமானம்? பிறகு சேமிப்பு? இருக்கும் வருமானத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் வாழ்க்கை. கோடிகள் இருந்தால் Boat வாங்கலாம்தான். ஆனால், ஒரு மணிநேர வாடகையாக $8 கொடுத்து மாதம் ஒரு முறை, அரசு ஏரியில் பாய்மரப்படகு ஓட்டுவதைச் செய்ய முடியுமே? அதைத்தான் நான்  செய்கிறேன். இதுவே எனக்கான‌  Financial Freedom. அதிகம் சம்பாதிப்பவர்கள் BMW கார் வாங்க ஆசைப்படும்போது நான் $8 ல் மீன் தூண்டி வாங்க விரும்பினேன். இதுவே எனக்கு  Financial Freedom. இதுவே இல்லாமல் அன்றாட உணவிற்கே சிரமப்படும் அமெரிக்கர்கள் உண்டு.
**

உணர்வுகளில் சிறைப்படாமையும், பணத்தில் சிறைப்படாமையும் மனிதனை முழுமையாக‌ விடுவிக்கும் காரணிகள் என்பது என் சித்தாந்தம். அதிகப் பணம்தான் financial freedom என்று சொல்லவில்லை ஆனால், financial freedom  மிக அவசியமானது. அன்றாடம் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு financial freedom  இருக்கலாம், அதே சமயம் கோடிகளில் புரள்பவருக்கு financial freedom  இல்லாமல் இருக்கலாம்.

பணத்தை வைத்து என்ன செய்கிறோம் அல்லது எதற்காக பணம் சேமிக்கிறோம் என்பது முக்கியம். உதாரணத்திற்கு வாழ்க்கை என்பது நண்பர்களுடன் குடித்து பொழுது போக்குவது, அதிக விலை கார் வாங்குவது அல்லது அதிகவிலை போன் வாங்குவது என்ற நிலைப்பாடு உள்ளவர்கள், பணக்காரர் ஆகும்போது அந்த திசையில் செலவழிக்கலாம். இதில் தவறு ஏதும் இல்லை. மகிழ்ச்சி என்பது உனக்கான தனித்துவம். அதில் ஒப்பீடுகள் தேவை இல்லை.
**

நான் சொன்ன தெலுகு நண்பர், சில மாதங்களுக்கு முன் நூறாயிரம் டாலர் செலவில், டெஃச்லா  (Tesla) கார் வாங்கினார். நானும் அவரும் ஒரே அலுவலகம். 200 மைல் தொலைவு பயணம் என்பதால், அவர் காரில் ஒருநாளும், என் காரில் ஒருநாளும் சென்று திரும்புவோம். கை வலிக்கிறது என்பதற்காக, தானாக ஓடும் டெஃச்லா வாங்கிவிட்டடார் ஒருநாள். கார் அதுவாக ஓட, இவர் செல்போனில் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு வருவார். "அதுவாக ஓடும் கார்" எனக்கு பயம் என்பதால், நான்தான் கொட்டக்கொட்ட முழித்து, சாலையைப் பார்த்து வருவேன். தானாக ஓடும் காரில் இருக்கும் software bug எங்களைத் கொன்று இருக்கும் தருணங்களும் கடந்து போனது.
**

நான் பயணங்களுக்காக சேமிக்கிறேன். ஆயிரங்களில் அல்ல வெறும் பத்து இருபதுகளில். நான் வாழும் மாநிலத்தில் 100 கவுண்ட்டிகள் உள்ளது. கவுண்ட்டி என்பதை , நம்மூர் மாவட்டம் என்று ஒப்பீடு செய்துகொள்ளலாம். எல்லாக் கவுண்ட்டிகளின் முக்கிய ஊர்களில் ஒரிரு நாட்களாவது தங்கி வரவேண்டும் என்பதற்கு சேமிப்பதற்கே , குட்டிக்கரணம் அடிக்க வேண்டியுள்ளது. வாழ்தலுக்கான நோக்கங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சேமிப்பிற்கான நோக்கங்களும் செலவழித்தலுக்கான நோக்கங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். எதுவும் தவறு அல்ல.
**

சின்ன வயதில் 50 காசுகள் கொடுத்து வாடகைச் சைக்கிள் எடுத்து மாதம் ஒருமுறை ஓட்டுவதே உச்சகட்ட ஆசையாக இருந்தது. கல்லூரி சென்றபோது ,second hand  ல் அந்தக்கால இத்துபோன Atlas மாடல் சைக்கிள் ஒன்றை, தன் பட்செட்டிற்கு மேல் செல்வதால் நண்பரிடம் கடன் வாங்கித்தான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.

வயர் பிரேக்குகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் சைக்கிள்களும், Yamaha  மற்றும் பல வண்ண மோட்டார் பைக்குகளும் உலா வந்த அந்தக் கல்லூரியில், பெயிண்ட்போன சைக்கிளோடுதான் வலம் வந்தேன் 4 வருடங்களும். நான்கு வருடங்களும் ஒரே shoe தான்.

அமெரிக்கா வந்த பிறகு, தேவையின் பொருட்டு $15,000 கார் வாங்கிய பிறகும்கூட, ஆசைக்காக‌ $100 சைக்கிள் வாங்க நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. தேவைக்காக ஆயிரம் செலவழித்தாலும்,  ஆசைக்காக பத்து ரூபாய் செலவழிக்காமல் அதை அவசரத்தேவைக்கு சேமித்து வைப்போம்.

ஆசைக்காக 2 ரூபாய் டீ குடிக்காமல், மிடறு விழுங்கியே வளர்த்த தந்தைகளின் வளர்ப்பு. என் போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் இன்னும் இப்படி இருக்கலாம்.

தேவை என்ற நிலை வந்தபின்னர்தான், 10 வயதில் ஆசைப்பட்ட சைக்கிள் கனவு 37 வயதில் நிறைவேறியது எனக்கு.
**

வாழ்க்கை என்பது நாடகம் போல் ஒத்திகை அல்ல, சரிசெய்துகொள்ள. அது மெய். ஒவ்வொருகணமும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. ஆசை என்பது அற்ப செலவில் இருந்தாலும், தேவை கேட்கும் அதிகப் பணத்திற்காக பல ஆசைகள் நிராசையாக ஆகிவிடும். சின்னச் சின்னச் ஆசைகளுக்காக செலவழிக்கத் தயங்க வேண்டாம். சீமாட்டியிடம் சிகரட் வாங்கி புகைக்க வெட்கப்படவேண்டாம். அவளே பற்றவைத்தால் அது கூடுதல் அழகு.
**

பொருளின் மதிப்புகள்தாண்டி, ஆசையும் தேவைக்குமான இடைவெளி என்பது, நாம் வகுத்துக்கொள்வது. வாங்கும் சக்தி உள்ள‌வனின் ஆசைகள், சட்டனெ தேவையாக மாறிவிடும். வாங்க வசதிகள் இல்லாதவனின் தேவைகள்கூட, ஆசையாக தேங்கிவிடும். எனது ஆசை மற்றவரின் தேவையாகவும், எனது தேவை மற்றவரின் ஆசையாகவும் இருக்கலாம். எதையும் தட்டையாகப் பார்த்துவிடமுடியாது.

**
இன்றுவரை நிறைவேறாத ஆசைகள் இரண்டு.

Yezdi மோட்டார் சைக்கிள்மீது காதல் இருந்தது இந்தியாவில். வாடகை சைக்கிளே கனவாக இருந்த எனக்கும், TVS 50 யை கனவாக கொண்டிருந்த என் வசதியான நண்பர்களுக்கும் மத்தியில், தன் தாத்தாவின் Yezdi பைக் ஓட்டியிருந்த ஒருவன் பெரிய அம்பானியாகத் தெரிந்த காலம் அது.

கார் மற்றும் பைக் ஓட்டுநர் உரிமத்திற்காக, நண்பன் ஒருவனின் M80  ல் தான் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இன்றுவரை கியர் வைத்த பைக்குகள் சரியாத ஓட்டத் தெரியாது. ஓசியில் ஓட்டிப்பழக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை என்பதே உண்மை.

இத்தனைக்கும், கல்லூரியில் என் அறைத்தோழன் McDowell's Whisky  உற்பத்திச் சொழிற்சாலை வைத்திருந்த அப்பாவின் பிள்ளை. பணக்கார நண்பர்கள் இருந்தாலும், தன்மானம் என்பதும், ஆசைப்பட்டு அடிமையாகிவிடக்கூடாது என்பதும், கனலாக இருக்கும் எப்போதும்.  அறைத்தோழனிடம் பைக் கேட்டு ஓட்டியிருக்கலாம். ஆனால்  "டே, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வர்றியா?" என்று ஏவ வாய்ப்புள்ளது. அதனால் சைக்கிளே சக்கரவர்த்தி என்று வலம் வந்தேன்.

இப்போதுகூட அதிக பணம் புழங்கும் நண்பர்கள் எனக்கு இல்லை. அதிகம் பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளே என் வட்டத்தில்.

திருமணமான பிறகு, மனைவி கொண்டுவந்த அவரின் Bajaj Sunny யை அவர் ஓட்ட, நான் பின்னால் உட்கார்ந்து செல்லும் அளவிற்கே என் திறமை இருந்தது.

கடைசிவரை Yezdi  பைக்கை தொட்டுப்பார்க்கக்கூட முடியாமல் கனவு கலைந்துவிட்டது.
**

இரண்டாவது ஆசை நம்மூர்  Mahindra build Jeep


எனது 2009 கேம்ரி கார் ஓடவே முடியாத நிலையில் உயிரைவிட்டால், கடனை உடனை வாங்கியாவது இந்த ஊர்  Jeep Wrangler வாங்கிவிட வேண்டும் என்று மனது படுத்துகிறது. பார்க்கிங் இடத்தில் Jeep Wrangler ப் பார்த்தால் சுற்றிச் சுற்றி வருவேன் குழந்தையைப் போல்.


இதுவும் Yezdi மோட்டார் சைக்கிள் போல நிறைவேறாத ஆசையாக , கனவாக கலைந்துவிடலாம். ஆனால், ஏதோ ஒரு அழகிய கனவைக் காண்கிறேன். இருந்துவிட்டுப்போகட்டுமே? என்று சமாதானமும் சொல்லிக்கொள்கிறேன். இத்தைய சமாதானக் காரணங்கள் தனித்துவமானவை. ஆனால், என்ன ஆசைப் படுகிறோம் என்பது அனைவருக்கும் தனித்துவமானது. அது உங்களை யார் என்றும் காட்டும் உலகிற்கு.
**

ஏதாவது ஒரு ஆசையை வைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்திருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். Just one more reason to wake up and move forward. பெரும் முதலாளிகள் கோடியில் பணம் வந்தால் ஃபெராரி கார் வாங்க வேண்டும் என நினைத்துவிட்டுப் போகட்டும். ஆயிரத்தில் பணம் வந்தால் 10 ரூபாய் ஃகாபியை, இதுவரை பார்த்திராத ஒரு தெருமுனைக் கடையில் குடிக்க நினைப்பது நம் ஆசையாக இருந்துவிட்டுப் போகட்டும்.
**

ஆசையை தேவையாக மாற்ற நாம் சொல்லிக்கொள்ளும் காரணங்களைக் கலைந்து, ஆசையை ஆசையாகவே அணுகலாம் தவறில்லை. எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதும், எப்படி வாழ நினைக்கிறோம் என்பதும் மட்டுமே தனித்துவமானவை.

அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் இரகசியமாகவேணும்.

**