Thursday, August 02, 2018

திசை தொலைத்த பயணி: மெதுவாய்க் கொன்ற பசி

ளர்ந்த மனிதர்கள் நாலு பேர். அது ஒன்றும் ஆளரவமற்ற அத்துவானக்காடு அல்ல. மலை முகட்டில் இருக்கும் சிற்றூரின் (Lansing, NC) நடுவில் இருக்கிறோம். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீடு தெரியாது. அருகில் ஒரு கார் பழுதுபார்க்கும் கடை உள்ளது. அதற்கு அருகில் பெட்ரோல் கடை. இருந்தாலும் தொலைந்ததாக உணர்கிறோம். நடுஇரவு, ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாது. தெருவிளக்குகள் என்ன, மருந்திற்குக்கூட ஒளி கிடையாது. நாங்கள் விடும் மூச்சுக்காற்றே அந்த நடுநிசி அமைதியைக் குலைக்கும் ஒலி.

தேடிவந்த வீட்டைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், ஆட்கள் அனைவரும் எங்கோ இருக்கும் வீடுகளில் உறங்குகிறார்கள். வந்த ஒரு வாகனமும் எங்களைப் பார்த்து மிரண்டு நிறுத்தாமல் போய்விட்டார்கள். மழை கொட்டுகிறது. கைப்பேசி வழியாக காட்டும் பாதை இரண்டுமுறை இருவிதமான வழியைக் காட்டுகிறது. யாரையும் கைப்பேசியில் அழைக்க முடியாது. அங்கு ஃச்பெக்ட்ரம் இழைகளும் துளிர்த்திருக்கவில்லை.

இதுதான் வீடு என்று நினைத்து, பேய்பங்களா போன்ற ஒரு வீட்டை இரவில் தட்டி, உள்ளிருந்து எட்டிப்பார்த்த‌, உள்ளாடை மட்டுமே அணிந்த முதியவரை திகைக்க வைத்தோம். அதுவே முரட்டு மனிதராய் இருந்திருந்தால் எங்களை சுட்டிருக்கவும் வாய்ப்புண்டு. நடுநிசியில் அடுத்தவர் வீட்டுக்கதவை நாலுபேர் தட்டினால் என்ன செய்வார்கள் அவர்களும்?
**
மலையைவிட்டு கீழே இறங்கி, கைப்பேசி வேலை செய்த இடத்தில் இருந்து, வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு, மறுபடியும் மலையேறி, மறுபடியும் தொலைந்து திரும்பினோம்.
**

தமிழில் மலையேற்றம் என்ற ஒற்றைச் சொல்லில் இந்த Hiking, Trekking and Mountaineering மூன்றையும் அடக்கிவிடமுடியாது. மூன்றுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், முக்கியமான வேற்றுமைகளும் உள்ளது.  திசைகள் குறித்தும், செல்லப்போகும் மலைகளின் அமைப்புகள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கைப்பேசியோ அல்லது எந்த எலக்ட்ரானிக் உபகரணங்களும் உதவாது. பேட்டரி தீர்ந்துபோனால் உயிரற்ற உடல்தான அவைகள்.
**

When You Find My Body, Please Call My Husband

66 வயதான Geraldine Largay திசைகாட்டும் கருவியும் அடிப்படையான மலைகளின் அமைப்பும் தெரிந்து வைத்து இருந்திருந்தால் அன்று அப்படி உணவில்லாமல் இறந்து போயிருக்கமாட்டார்.

தன் தோழியுடன் பலநாட்கள் பயணத்திட்டமாக அப்பலாச்சியன் மலைகளில் சென்ற Gerry (Geraldine Largay, known to her friends as Gerry)
பாதையைவிட்டு விலகி, இயற்கைக்கடனைக் கழிக்க சிறிது தூரம் சென்றவர், தான் பயணம் செய்த பாதைக்கு திரும்பத் தெரியாமல் தொலைந்துபோனார். உடன் வந்த தோழி, (இந்தத் தோழியின் நண்பர் எனக்கு திசைகள் குறித்து பாடம் எடுத்தவர்
)  ஒருநாளுக்கு முன்பே தனது பயணத்தை முடித்துக்கொண்டு மலையிறங்கிவிட்டிருந்தார். தனியாகப் பயணப்பட்ட Gerry , தொலைந்துபோனார். இத்தனைக்கும், இவர் தொலைந்த இடத்திற்கு சிலமைல்கள் தொலைவில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பது அவருக்கு தெரிந்திருந்ததா என்பது தெரியாது. அப்படியே தெரிந்து இருந்தாலும், திசைகள் அறியாமல் , ஆழமான காட்டின் அடிப்பகுதியில் இருந்து அதை நோக்கி எப்படி பயணிப்பது?.

பாதையை தொலைத்த தினத்தில் இருந்து, 26 நாட்கள் உயிரோடு உலவிருக்கிறார் அந்த காட்டில். பாதைதேடியும், உதவி தேடியும் திசை தேடியும் அலைந்திருக்கின்றார். இவரின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த கணவருக்கு, இவர் அனுப்பிய தொலைபேசி குறுஞ்செய்திகள் போய்ச்சேரவில்லை. தனது முடிவை உணர்ந்த அவர், தனது போராட்டத்தை கடிதமாக எழுதிவைத்துவிட்டு இயற்கையுடன் போரிடமுடியாமல் தோற்றுவிட்டார்.
**

22 சூலை 2013 அன்று தொலைந்த இவர், இரண்டு ஆண்டுகள் தொலைந்தவராகவே இருந்தார். அக்டோபர் 2015 மலைப்பகுதியில் சிதிலமடைந்த டென்ட், மற்றும் மண்டை ஓடுகளைப் பார்த்த ஒருவரால், இவரின் இறப்பு வெளி உலகிற்கு தெரிய வந்தது. இத்தனைக்கும் சில மைல்கள் தொலைவில்தான் இவர் தொலைத்த‌ பாதை உள்ளது.  எட்டிவிடும் தூரத்தில் உள்ள பாதையின் திசை அறியாமல் எங்குள்ளோம் என்ற குறிப்புணர முடியாமல், தன் டென்ட்டிலேயே இறந்துபோனார்


Hiker who went missing on Appalachian trail survived 26 days before dying
https://www.theguardian.com/us-news/2016/may/26/hiker-who-went-missing-on-appalachian-trail-survived-26-days-before-dying

Map & Compass Navigation

நமது உரையாடல்களை திசையற்ற உரையாடல்கள் எனலாம். ஏன் என்றால், நாம் அன்றாட உரையாடல்களில் திசையைப் பயன்படுத்துவது இல்லை.  " அந்தக் காஃபிக் கோப்பையை வடகிழக்குப்பக்கம் நகர்த்தி வை" என்றோ, "எங்கு போகிறீர்கள்?" என்ற கேள்விக்கு "வட மேற்கே ஆறு மைல் செல்கிறேன்" என்றோ பதில் சொல்வதில்லை. ஆனால், அன்றாட உரையாடலில் திசையைப் பயன்படுத்தும் மக்களும் உள்ளார்கள். ஆசுதிரேலியாவில், அப்ரிசனல் இன, குக் டயர் மக்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். அவர்கள் காடுகளில் தொலைந்து போகும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கலாம் அல்லவா?

How language shapes the way we think - Lera Boroditsky
https://www.ted.com/talks/lera_boroditsky_how_language_shapes_the_way_we_think

//Aboriginal community in Australia that I had the chance to work with. These are the Kuuk Thaayorre people. They live in Pormpuraaw at the very west edge of Cape York. What's cool about Kuuk Thaayorre is, in Kuuk Thaayorre, they don't use words like "left" and "right," and instead, everything is in cardinal directions: north, south, east and west. And when I say everything, I really mean everything. You would say something like, "Oh, there's an ant on your southwest leg." Or, "Move your cup to the north-northeast a little bit." In fact, the way that you say "hello" in Kuuk Thaayorre is you say, "Which way are you going?" And the answer should be, "North-northeast in the far distance. How about you?"//

**
மலைகளுக்கு சாதகம் உள்ளது. Ridge, Spur, Saddle என்று சில நுட்பங்களும், கையில் இருக்கும் வரைபடத்தை வைத்து எங்கே இருக்கின்றோம்? அருகில்  எது உள்ளது? அதை எப்படி அடைவது? என்பதற்கான Backstop , Contour , Contour Interval, Declination, Bearing இன்னபிற‌  தகவல்களும் பயிற்சிகளும் முக்கியம்.  திசை காட்டும் திசைமானியும், அச்சிடப்பட்ட ஒரு மேப்பும் (காடுகளுக்கென்றே Contour & Contour Interval  தகவல்களுடன் தனியான வரைபடம் உள்ளது.

திசைகள் சிக்கலாகுமிடம் வடதுருவம். இங்கு திசைமானி வேலை செய்யாது அல்லது கிறுக்குபிடித்த குரங்காகிவிடும். அது போல எந்த அடையாளங்களும் வைத்துக்கொள்ள முடியாத (reference points) கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் மணலாய் காட்சியளிக்கும் பாலைவனம், அல்லது பனிப்பிரதேசம் சிக்கலைக் கொடுக்கும்.
**

வைத்திருக்கும் திசைமானி மற்றும் அவசர உபகரணங்கள் வாழ்க்கை முழுக்க பயன்படுத்தப்படாமலேயே போய்விடலாம். ஆனால், திசை தவறிய நேரங்களில் இது காக்கவல்லது. எனது வாகனத்தில் இந்த மாநில வரைபடம் அச்சுவடிவம் இருக்கும். அதுபோல மலைப்பயணத்திற்கு "வாக்கி டாக்கி"யும் எடுத்துச் செல்வேன். இரண்டு வாகனங்களில் பயணிக்கும்போது அல்லது கேம்ப் இடத்தில் இருந்து ஒருவர் எங்காவது செல்கிறார் என்றால் (குழந்தைகள் மிதிவண்டி ஓட்டும்போதும்) அவர்களிடம் ஒரு வாக்கி டாக்கி கொடுத்துவிடுவேன். கைப்பேசிகள் வேலை செய்யாது. கண் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டால் இரு மனிதர்களுக்கான தொடர்பு துண்டிக்கப்படும்.

சிக்கலான தருணங்கள் செய்தி சொல்லிவராது. ஆனால், அது எப்போதும் வரலாம் என்று எதிர்பார்த்தே இருப்பது, இப்படியான தருணங்களில் சிறிது சுவாசிக்க, சிந்திக்க இடம் கொடுக்கும்.

தொலைந்தால் என்ன செய்வது? என்பதுதான் மலைப்பயணங்களில் முதலில் சிந்திக்கவேண்டியது. கவிழ்ந்தால் என்ன செய்வது? என்பது கடற்பயணங்களில் முதலில் சிந்திக்க வேண்டியது.
**

அப்பலாச்சியன் மலைத்தொடர் என்பது 14 அமெரிக்க மாநிலங்கள் (Georgia, North Carolina, Tennessee, Virginia, West Virginia, Maryland, Pennsylvania, New Jersey, New York, Connecticut, Massachusetts, Vermont, New Hampshire, and Maine) வழியாகச் செல்லும் 2,200 மைல்கள் (3,500 கிமீ) மலைப்பாதை. பாதை என்பது சாலை அல்ல வெறும் பாதை. தொலைந்தவர்கள், மீண்டவர்கள் இறந்தவர்கள் என்று பல சம்பவங்கள் உண்டு.

Appalachian Trail
https://en.wikipedia.org/wiki/Appalachian_Trail
**

Thru-hiking  என்று சொல்வார்கள். End to End பயணம் செய்ய ஐந்து முதல் ஏழு மாதங்கள் ஆகலாம். அப்படிச் செய்யும் போது "Thru-Hiker Resupply Point" என்ற இடங்களில் உணவு மற்றும் தேவையானவற்றை நிரப்பிக்கொள்வார்கள். குடும்பத்தினர் இந்த இடங்களில் இவர்களைச் சந்திக்கலாம். "இந்த நாளில், இந்த இடத்தில் இருப்பேன்" என்பது திட்டமிடப்பட்ட ஒன்று. அந்த நாள் தவறும்போது, கவலைகள் வந்து கரைசேறும் குடும்பத்தினருக்கு. Resupply Points  விட்டால் எந்தவித தொடர்பும் இருக்காது. பலர் சேர்ந்து பயணப்படுவார்கள். தனியாகச் செல்பவர்களும் உண்டு.
**

இப்படியான பயணங்களில் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடை முக்கியம். உதாரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று 5 லிட்டர் பாட்டில்களை கொண்டுசெல்ல முடியாது. தெளிந்த ஓடைகள் பல இருந்தாலும், நீரை அருந்திவிட முடியாது தாகத்திற்கு. அதற்காக சின்னச் சின்ன வடிகட்டிகள் உள்ளது. எவ்வளவு எடையை முதுகில் தூக்கிச் சென்றால், பாதுகாப்பாக நடந்து வரமுடியும் என்ற கணக்குகள் உண்டு.
https://www.rei.com/blog/camp/how-much-should-your-pack-weigh
**

இந்த ஆண்டு அப்பலாச்சியன் மலைத்தொடரின் ஒரு சிறு பகுதியையாவது கடந்து பார்க்கவேண்டும் (மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் பயணமாக) என்ற ஆசை உள்ளது. மரவேலை செய்பவனான‌ எனது சாவிக்கொத்தில், அளக்கும் டேப் இருக்கும். எனது பயணப்பெட்டியில் ஒரு திசைமானி இருக்கும். வானத்து நட்சத்திரங்களைப் பார்க்க தொலைநோக்கியை வைக்கும்போது உதவுவதற்காக. அதை வேறு செயல்களுக்கு பயன்படுத்தியது இல்லை.

உடன் வருபருக்கு எல்லாம் தெரியும் என்று நாம் இருந்துவிடவும் முடியாது. ஏதோ ஒரு காரணங்களினால் அவர் இல்லாமல் போய் , நாம் காட்டில் தனித்துவிடப்பட வாய்ப்புண்டு.  Jungle (2017) என்ற படத்தின் கதை இது போன்றது.
https://en.wikipedia.org/wiki/Jungle_(2017_film)

இதற்காக Map & Compass Navigation வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன். இங்குள்ள Recreational Equipment, Inc. (REI) என்ற கடையில் இதற்கான பயிற்சி உண்டு. $30 டாலர் அடிப்படைப் பயிற்சி முதல் ஒருநாள் முழுக்க உள்ள  $60 Field Workshops வகுப்புகளும் உண்டு.

தொலைந்து போவது குறித்தான பயம், காடுகளில் தனியாக இறந்துவிடுதல் குறித்தான கவலைகள் என்னை இந்த வகுப்புகளுக்கு துரத்தியுள்ளது.

பாதை மாறி காட்டில் தொலைந்துபோய் , உணவின்றி இறந்து போவது ஒருவகை என்றால், கூட்டமாக செய்யும் பயணங்கள்கூட‌, பாதைமாறி இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகி, ஒருவருக்கு ஒருவர் உணவான கதைகள் உண்டு அமெரிக்காவில். அப்படி முடிந்த ஒரு பெரிய பயணம் ....

தொடரும்...

**