Sunday, January 26, 2020

மந்தை மந்தையாக‌வே நகரும் மனித உறவுகள்: தலைமுறை இடைவெளி

ழக்கமாக நாங்களே நாயகர்களாக வலம் வருவோம். அல்லது அப்படி ஒரு நினைப்பு. எங்களுக்கு அனைவரையும் தெரியும். அரசியல் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வந்திருப்பவர்களில் பாதிக்குமேல் தெரிந்திருக்கும். அனைவரிடமும் பேச ஏதாவது இருக்கும். ஏதாவது நாடகம் போடுவோம். எங்களின் நாடகம் ஏதாவது அரங்கேறிக்கொண்டே இருக்கும். எதையாவது செய்துகொண்டே இருப்போம். உள்ளூர் தமிழ்சங்க அரசியல் பொரணிகள் , சண்டைகள் , வம்புகள் என்று போகும் எங்கள் சந்திப்புகள். அதாவது நாங்களே எல்லாம் போல் ஒரு உணர்வு. ஆம், அப்போது அப்படித்தான் இருந்தது.

Wife, I & Veedu (Wi-Fi Veedu)
https://www.youtube.com/watch?v=8FcU-Qd191g

ங்களின் நாடகமோ அல்லது இசைக்குழுவோ அதிக நேரம் எடுக்கும் ஒன்று. கிடைக்கும் 10 முதல் 15 நிமிடங்களில் மேடையில் அரங்க அமைப்பு முதல் அனைத்தையும் செய்து, நாடகத்தை நடத்தி முடிப்பது என்பது போர்க்கால அடிப்படையில் செய்யப்படும். மேலும் ஒலி,ஒளி அமைப்புகளுக்கு சரியான வசிதிகள் இருப்பது இல்லை தமிழ்ச்சங்களில். ஏதாவது ஒரு சினிமா பாட்டை பின்னணியில் பாடவிட்டு,அதற்கு ஆடிவிட்டுபோவதிற்கு மட்டுமே ஏற்ற இடம் தமிழ்ச்சங்கம்.

எங்கே போகிறோம்?
https://www.youtube.com/watch?v=NklJbk9kAhA

குறைந்தது அரைமணிநேரம் கிடைத்தால் தவிர மேடை நாடகங்கள் போடமுடியாது என்று சொல்லிவிட்டேன். ஏனோதானோ என்று செய்வதில் உடன்பாடு இல்லை. இரண்டு வருடங்களாக தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

5th Dimension - Muthtamil Vizha 2016
https://www.youtube.com/watch?v=5T1oQNt2R3s

**
நேற்று தமிழ்ச்சங்க‌ பொங்கல்விழா. இதற்கான மேடை அமைப்பு மற்றும் அலங்கார வேலைகளுக்கு , என்னை விழாக்குழுவினர் அழைத்தார்கள். ஆம்  இங்கு நான் தோட்டாதரணியும்கூட நேரமின்மையால் என்னால் களத்தில் இறங்கி வேலை செய்யமுடியாது என்று சொல்லி, அவர்களுக்கு சில யோசனைகளைச் சொல்லி ஊக்குவித்தேன். இந்தமுறை சிறப்பாகவே செய்தார்கள் விழாக்குழுவினர்.

ந்த 2020 பொங்கல்விழா என்னை மேறுமாதிரியாக பாதித்தது. முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனாக மட்டுமே கலந்து கொண்டேன். மகள் , மகளின் தோழிகள் சேர்ந்து ஒரு சினிமா பாட்டுக்கு ஆடினார்கள். எனக்கு இது கருத்தளவில் ஒப்புமை இல்லாதது, ஆனால், இதுதான் இவர்களால் செய்ய முடிந்த ஒன்று இந்த மேடையில்.

ந்த ஒரு கலையிலும் ஒரு கதை சொல்லப்பட வேண்டும் (storytelling) என்பது என் நிலைப்பாடு. பரதநாட்டியம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு ஒரு காரணம், காலம் காலமாக கண்ணனையே அவர்கள் காதலிப்பதும், சனாதன வேதமத (aka Hindu) அடையாளங்களையே சுத்தி வருவதுமே.  இதை உடைக்க வேண்டும் என்று, வேறு ஒரு மேடையில் இந்தக் குழந்தைகளை வைத்து Sia - Cheap Thrills க்கு நடனம் அமைத்தேன்.

Sia - Cheap Thrills ft. Sean Paul || Dance Remake || Balloon MaMa
https://www.youtube.com/watch?v=cJhi5c6Wlyo

**
னக்கு வயது இப்போது 49. என் நண்பர்களும் அதே வயதினர். அதாவது, 40+ வயதினர்.எனது  90 % நட்புகள் எங்கள் குழந்தைகளின் வயதை ஒத்த குழந்தைகள் அவர்களுக்கும் இருப்பதால் உருவான ஒன்று. காலப்போக்கில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். புலம்பெயர் வாழ்க்கையில் நண்பர்களே உறவுகள். இப்போது எங்களின் முதல் குழந்தைகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். இரண்டாவது குழந்தைகளைச் சுற்றி பிழைப்பு ஓடிக்கொண்டுள்ளது நட்புவட்டத்தில். இதுதவிர காஃபி மற்றும் பீர் அருந்துவதற்காக வாரம், மாதம் சில சந்திப்புகள் நடந்தாலும், இவை அனைத்தும் எங்களுக்குள்ளே.

எனக்கான வட்டம் என்பது,எனது 40+ நண்பர்களே. வேறு யாரும் நெருங்கிய வட்டத்தில் இல்லை, ஏன் பழக்கமே இல்லாமல் போனது நேற்றுதான் எனக்கு உறைத்தது. எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் அப்படியே. நாம் ஒரு குழுவாக, நம் வயதை ஒத்தவர்களுடன் மட்டுமே பயணித்திக்கொண்டுள்ளோம். ஒரே ஊரில் இருந்தாலும், நமக்குப்பின் இருக்கும் தலைமுறையுடனோ, முன் இருக்கும் தலைமுறையுடனோ தொடர்பர்றவர்களாக ஆகிவிடுகிறோம்.
**
நேற்று வந்த தமிழ்ச்சங்க கூட்டத்தில்,70 சதவீதம் எனக்கு தெரியாத இளைய தலைமுறை. இருபது வருடங்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் இதே ஊரில்,நேற்று நான்
அந்நியனாக உணர்ந்தேன். எனது நண்பர்களில் சிலர் தொழில் முறையில் இளையதலைமுறையினரிடம் தொடர்பு வைத்துள்ளார்கள். அதாவது உணவகம் நடத்துவது , Tuition Center நடத்துவது போன்ற தொழில் செய்பவர்களுக்கு சில இளையதலைமுறைக் குடும்பங்கள் பழக்கமாக உள்ளது. எனக்கு சுத்தமாக அந்தச் சங்கிலி அறுந்துவிட்டது நேற்றுதான் தெரிய வந்தது. இரவு முழுக்க எனக்கு இதே சிந்தனை.

குழந்தைகளை வைத்து , அவர்களின் வயதுக்கேற்ற குழந்தைகளைக் கொண்டவர்களுடனே பழக ஆரம்பித்து, அதுமட்டுமே என்று ஆகி, முன்னாலும் , பின்னாலும் உள்ள மற்ற ஒரு மனிதக் கூட்டத்துடன் தொடர்பற்ற வாழ்க்கையை அதே ஊரில் வாழ்ந்துகொண்டுள்ளேன். இங்கே பெரும்பாலானவர்களுக்கு அதே நிலைமை. நாம் ஒரு மனிதக் கூட்டமாக, நம் வயதுடையவர்களுடன் Batch by Batch ஆக நகர்ந்துகொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன். என்னளவில் அதுதான் நிகழ்ந்துள்ளது.

னியாக காடுகளில் பலநாட்கள் இருக்கக்கூடியவன். நாடகம்,இசை, Balloon Sculptures என்று பல தளங்களில் செயல்படுபவன். ஆனால் , 49 வயதில் என்  Social வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும்போது, ஒரே மந்தையில் மட்டுமே நகர்ந்து வந்திருக்கிறேன். இதை கடந்த சில ஆண்டுகளாக உணரமுடிந்தாலும், நேற்று என் முகத்தில் அடித்த உண்மை.  இளையவர்களுடன், 30+ மனிதர்களுடனான தொடர்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏன் இல்லவே இல்லை  மெய்யுலகில்.

I am going to do something about that.

Saturday, January 18, 2020

களரி - தமிழர் விளையாட்டா?

களரி.
தமிழர் விளையாட்டா?
ஏதாவது தரவுகள்? ஏன் கேரளம் இதில் முன்னணியில்  உள்ளது?

இன்றைய சூழலில், களரி என்றாலே கேரளம் என்றே அறியப்படுகிறது. இது ஓரளவு உண்மை. எடுத்துக்காட்டாக, "சிலம்பம் தமிழர் கலை" என்று ஐயமறச் சொல்வதுபோல, களரியைச் சொல்வதில் சில மனத்தடை உண்டு. "பொங்கல் விழாவில் , களரி விளையாட்டை/தற்காப்பு கலையை தமிழர் விளையாட்டு என்று காட்சிப்படுத்தலாமா?" என்றால், அதற்கான விடை, 👉"ஆம். Why not?" என்பதே எனது பதில். ஆனால் இந்தக் கேள்வி ஏன் எழுகிறது? என்பதை அறிந்து, இதைப் பயன்படுத்தி ஒரு உரையாடலை முன்னெடுப்பது, வரலாற்றை ஒரளவு அறிய உதவும்.

'இன்றைய" தமிழகம் முழுமைக்குமான ,எல்லா மாவட்டங்களுக்குமான ஓரே பண்பாடு /சடங்கு என்று ஒன்றைத் தேடினால் அது "சாம்பாரும் இட்லியும்தான்". (இட்லியே சங்க காலத்தில் இல்லாத ஒன்று. சாம்பாரும் இறக்குமதியே) 

எல்லா பழக்கங்களும் சின்ன குழுப்பண்பாடுதான். சல்லிகட்டு கூட வட மாவட்டங்களில் இல்லாத ஒன்று.தென் மாவட்டங்களுக்கே அதுவும் மதுரை அதன் சுற்று வட்டாரங்களுக்கே உரிய ஒன்று.

மஞ்சுவிரட்டு,சல்லிகட்டு,எருதுகட்டு எங்கள் வாழ்வு.
http://kalvetu.blogspot.com/2017/01/blog-post.html

சல்லிகட்டை சென்னையில் தேட முடியாது. அதுபோல, காணும் பொங்கல் என்பது தென் மாவட்டங்களில் இல்லை. ஆனால் சென்னையில் உண்டு.
**
👉களர் நிலம் (உப்பு நிலம்)
👉களைதல் 
👉களை எடுத்தல் 
👉களைக் கொத்தி (அருவா)
👉களம் காணுதல்
👉நெற்களம்

என்று, "களம்",  "களரி' என்று சொற்களை தமிழில் தேடலாம். 
**
களரி
இந்த விளையாட்டு ஏன் மதுரையில் சிலம்பம் அளவிற்கு இல்லை. ஆனால், தூத்துக்குடி கன்னியாகுமரிப் பக்கம் உள்ளதே? என்றால் அதற்கான காரணம் உண்டு.

எனது இணைய தோழர் @rajavanaj அவர்கள், இந்த தற்காப்பு கலைகளில் வல்லுநராகவும் , ஆசிரியராகவும் உள்ளார். இது குறித்து ஒரு புத்தகமும் எழுதப்பட்டுக் கொண்டுள்ளது அவரால். அவர் வழியே அறிந்த தகவல்கள் இங்கே. கட்டுரைக்காக சில இடங்களில் எனது மொழிநடையில். ஆனால், இந்த தகவல்களுக்கான Credit @rajavanaj க்கே.👍💐
👇👇👇
-----  @rajavanaj ----
தற்காப்பு கலைகளில் எது யாருடையது என்று பிரித்து பார்க்க முடியாதபடி கலந்து விட்டது.  

"தெற்கன்சுவடு" என்பது, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதிகளில் ஆடப்படும் விளையாட்டுகளின் ஒரு Collective Umbrella பெயர். இதனுள், "சைலாத்து", "துள்முறிச்சுவடு" மற்றும் "தெற்கன் களரி" உண்டு.

"தெற்கன் களரி" ஆசான்கள் பெரும்பாலும் தமிழர்கள். அதன் சுவடிகள் எல்லாம் தமிழில் தான் இருக்கும். இதே கலை, மேல் கேரளத்துக்கு போன போது, அது அரபிகள் மற்றும் துருக்கியில் இருந்து வாணிபத்துக்காக வந்தவர்களின் முறைகளோடு சேர்ந்து, "வடக்கன் களரி" ஆனது. அதன் ஆசான்கள் பெரும்பாலும் மலையாளிகள்.

தமிழ் வீரக்களைகளின் மூலத்தை இரண்டு பெரும் பிரிவாக சொல்லலாம். (1)சோழ மண்டல கலைகள்.
(2) பாண்டிய மண்டல கலைகள். 

இன்று பரவலாக பயிலப்படும் சிலம்ப முறைகள் சோழமண்டலத்தை சேர்ந்தது. "குத்துவரிசை", "அடிதடா' எல்லாம் சோழ மண்டலம் தான். சோழ மண்டலத்து "கை விளையாட்டு"களில் நுணுக்கங்கள் குறைவு. "கம்பு விளையாட்டு"களில் நுணுக்கங்கள் அதிகம்.  இதே பாண்டிய மண்டலத்தில் முற்றிலும் மாறாாக இருக்கும்.

பாண்டிய மண்டலத்தின் "சைலாத்து", "துள்முறிச்சுவடு", "தெற்கன்களரி' போன்றவை, அண்ணன் தம்பிகள் போன்றவை. மெல்லிய வேறுபாடுகள் தான் இருக்கும். 

"துள்முறிச் சுவடு" தான் போதி தர்மன் வழியே சீனா சென்றது என்பது ஒரு பரவலான நம்பிக்கை.  எனவே அதை வழக்கத்தில் சீன அடி என்பர்.
**
ஒட்டு மொத்தமாக தமிழர் கலை, தமிழர் பண்பாடு என்று சொன்னாலும், இதன் ஆழத்தில் சாதி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், சாதி நீக்கப்பட்ட கலை என்று ஒன்றைச் சொல்லிவிடவே முடியாது. ஒவ்வொரு சாதிக்கும் என ஒரு விளையாட்டு முறை இருக்கிறது.

இன்று "தலித்" அரசியல் முன்னெடுக்கும் கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றே. கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான "சைலாத்து" மற்றும் "தெற்கன் களரி" ஆசான்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. 

சொல்லிக் கொடுப்பதிலேயே நிறைய feudal values பார்ப்பாங்க. உள்ளே வரும் போதே சாதி கேட்பார்கள். சாதி கடந்த, மொழி அடிப்படை அடையாளங்கள், இப்போதுதான் கடந்த நாற்பது வருடங்களாக கட்டி எழுப்ப முயற்சி நடக்கிறது. இன்றைய இளைய தலைமுறை , பல கலைகளில் இருந்து நல்லவற்றை எடுத்து ஒரு ஒருங்கிணைந்த, inclusive கலை வடிவத்தை சாதி கடந்து தமிழர் கலையாக உருவாக்க முயல்கிறார்கள். செய்யறாங்க. பழைய 
ஆசான்கள் இதை ஏற்பதில்லை என்பதும் உண்மை.

"அருந்ததிய வரிசை" என்று உள்ளது. ஆம் அதே அருந்ததி இனம்/சாதி தான். "கள்ளன் பத்து", "பனையேறி மல்லன்", "நடராசர் வரிசை", "அய்யங்கார் வரிசை", "துலுக்கான வரிசை" இப்படியும் இருக்கு. இதில் ஏதாவது ஒன்றை எடுத்து, "இதுதான் தமிழர் மரபு"ன்னு  அடையாளப்படுத்தும் போது மற்றவர்கள் ஏற்பது இல்லைை என்பது உண்மை.
-----  @rajavanaj ----

தேவர் ஆட்டம் என்பதை , பள்ளர், பறையர், அய்யங்காரன், அய்யரன் ஆடி பார்த்துள்ளீர்களா? ஒரு அய்யங்காரன் மிருதங்கம் அடிப்பான் ஆனால், முனியாண்டி கோவிலுக்கு பறை அடிக்க மாட்டான். விளையாட்டுகளில் கலைகளில் சாதி உள்ளது. இதை மறுக்கமுடியாது. 

இந்த உண்மையை இளைய தலைமுறைக்கு மறைக்காமல் சொல்வதன் மூலமே, அவர்கள் இதைக் களைந்து நல்லதொரு பண்பாட்டை முன்னெடுக்க முடியும். வரலாற்றை , சாதிய அசிங்கங்களை மறைத்து , வறட்டு பெருமையாக , "இதுதான் தமிழர் பண்பாடு" ஏமாற்றிக் கொள்ளாமல், நல்லவற்றை கட்டமைப்போம். நம் புதிய பண்பாடாக.👍💐🖤❤️💙

பண்பாடு= பண்படுத்தப்பட்ட /செப்பனிடப்பட்ட /சரிசெய்யப்பட்ட பழக்கங்கள்(பாடுகள்). அதாவது ,இன்றைய நிலையில் இருந்து, தவறுகள் கலைந்து முன்னேறும் progressive வழி. வெற்றுக் கலாச்சாரமாக (மாற்றமுடியாத செதுக்கல் கல்வெட்டு -Cult - Culture  ) வரலாற்றில் தேங்கி விட வேண்டாம்.

கலாச்சாரம் என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. Culture is a reference to a history not a current life. பழைய பழக்கங்களே நம் "கலாச்சாரம்" என்று இருந்தால், நாம் கோவலன் வப்பாட்டி வைப்பதை ஏற்றுக்கொண்ட, அவனுக்காக கசிந்துருகிய கண்ணகி போல வாழவேண்டும். இன்று நாம் அப்படியில்லையே? எனவே குழப்பிக்கொள்ளக்கூடாது.

பழக்கங்களை பண்படுத்தி நல்ல பண்பாடுகளை வளர்ப்போம்👍💐🖤❤️💙