Tuesday, November 17, 2009

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா

மைதிக்கான நோபல் பரிசு என்பது சினிமா நடிகர் விஜய் வாங்கிய டாக்டர் பட்டம் போன்றது. எந்த விருதுகளும் அது யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதில்தான் தனக்கான பெருமையை, தனிச்சிறப்பை வெளிக்காட்டுகிறது. பத்மசிரி என்ற விருது சினிமா நடிகர் விவேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சத்யஜித்ரேக்கும்(1958) ஒருகாலத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. நாகேஷ் என்ற ஒரு நடிகர், நம்பியார் என்ற ஒரு நடிகர், இவர்கள் எல்லாம் அவர்கள் பாட்டுக்கு நடித்துவிட்டுப் போனவர்கள்.

விவேக் காமெடி நடிகரா அல்லது விருதே காமெடியா?

அறிவியல் வரிசையில் கொடுக்கப்படும் நோபல் பரிசிற்கான தகுதிகள் தீர்க்கமாக இருப்பதாலும் , அதை நிரூபிக்க முடிவதாலும் இன்னும் அதன்மீது நம்பகத்தன்மை இருக்கிறது எனக்கு. அமைதிக்கான நோபல் என்பது இந்த நூற்றாண்டின் அதிகபட்சக்காமெடி.

**
பாமா
ஒபாமாவிடம் இதுவரை பிடித்தது அவரின் பேச்சு. திராவிட இயக்கத்தலைவர்கள்போல தீர்க்கமான பேச்சு. இவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாய் வெளியில் வரத்தொடங்கியுள்ளது. இதுவரை மருத்துவக்காப்பீடு, பொருளாதாரம் என்று அமெரிக்கப் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதற்கான உரைகளை கனகச்சிதமாக வழங்கிவந்துள்ள ஒபாமா , உலகளாவிய விசயங்களில் இப்போது நாட்டாமையை ஆரம்பித்துள்ளார். தலாய்லாமா அமெரிக்கா வந்தபோது அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. தலாய்லாமா சும்மா திரும்பிப்போனார்.

ஜெயலலிதாவிற்குப்பயந்து , கருணாநிதி குடும்பவிழாவில் கலந்துகொள்ளத் தயங்கும் அதிமுக பிராண்ட் முன்னாள் அமைச்சர்கள் போல , சீனாவிற்காக தலாய்லாமாவைத் தவிர்த்துவிட்டார் ஒபாமா என்று நினைக்கத் தோன்றியது. அது இன்று உண்மையாகியுள்ளது.

"We did note that while we recognize that Tibet is part of the People's Republic of China,” - Mr. Obama
http://whitehouse.blogs.foxnews.com/2009/11/17/5619/

***

யாசர் அராபத் ‍- தலாய்லாமா
தலாய்லாமா போல‌ ஒருகாலத்தில் யாசர் அராபத் இப்படித்தான் எல்லா நாட்டிற்கும் பறந்து பறந்து போனார். பல முறை அவர் அந்தநாளைய அமெரிக்க ஜனாதிபதிகளைப்பார்த்து பேசியுள்ளார். இருந்தாலும் சாகும்வரை அவரால் அவர் நினைத்ததை அடையமுடியவில்லை. தலாய்லாமா என்ன நினைக்கிறார் என்று தெரியாது. ஆனால் இவருக்கு அடுத்து "திபெத்தின் தனித்தன்மை" என்ற ஒன்று கேள்விக்குறியே. இனிமேல் ஒபாமா தலாய்லாமாவைச் சந்தித்தாலும் ஒபாமாவின் பேச்சு எந்தத்திசையில் இருக்கும் என்பது தெரிந்ததே.திபெத்தை சீனாவின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவித்தபின் , "தனித்துவம் கொண்ட திபெத் நாடு" என்று தலாய்லாமா பேச்சை ஆரம்பிக்க முடியாது.

***

ந்தியா ‍ - தர்மசாலா - திபெத்


"திபெத்திற்கு வெளியே திபெத் அரசாங்கம்" என்று இந்தியாவின் ஆதரவில் இருக்கும் தலாய்லாமாவின் குறைந்தபட்ச மரியாதை இனிமேல் என்ன ஆகுமோ? அமெரிக்காவின் ஆசிர்வதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி , ஆசிர்வதிக்கப்பட்ட அரசுகளைத் தாண்டி போட்டி அரசாங்கம் எத்தனைகாலம் தலாய்லாமா நடத்துவார்? அமெரிக்காவின் ஆசியுடன் திபெத் ஒருங்கிணைந்த சீனாவின் பகுதியாக கலந்துவிட்டபிறகு, தனி ஆவர்த்தணம் செய்யும் தலாய்லாமா தீவிரவாதி போன்றவரே.

"அருணாச்சலப் பிரதேசம் இன்னும் பிரச்சனைக்குள்ளான ஒரு பகுதி" என்று இந்தியாவின் பிரதமர் அங்கே சென்றால்கூட யாராவது ஒரு சீனக்குடிமகனை வைத்து சத்தம்போட வைக்கும் சீனா, இனி அமெரிக்கா உதவியுடன் "இந்தியா -தலாய்லாமா - தர்மசாலா" அமைப்பை ஆட்டிப் பார்க்கும்.

இந்திய அர‌சாங்கம், கிரிகெட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் உதவியுடன் எத்தனை காலத்திற்கு பாகிஸ்தானை எதிர்த்து தேசியம் வளர்க்க முடியும்?

**
சீ
னா - இலங்கை - இந்தியா
யாசர் அராபத் ஒரு காலத்தில் போராளியாக‌ இருந்து பின்னர் அரசியல் பேச்சு வார்த்தை என்று திரும்பியவர். இவரால் இவர் காலம் உள்ளவரை நினைத்ததை அடையமுடியவில்லை. அவர் காலத்திற்கு பின்னாலும் அதே நிலை.



















லாய்லாமா அமைதிவழியில் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பவர். சீனா அமெரிக்க கூட்டணியைத்தாண்டி நிச்சயம் இவரால் இவர் நினைத்ததை அடையமுடியாது.



















பி
ராபாகரன்போராளியாக மட்டும் இருந்து, எந்தவித அரசியல் முயற்சிகளிலும் (தலாய்லாமா,யாசர்அராபத் போல) ஈடுபடாமல் , போர் ஒன்றையே நம்பி இறந்துவிட்டவ‌ர். பிரபாகரனாலும் தான் நினைத்ததை தனது காலத்தில் அடைய முடியவில்லை.





















(Civilians stand behind the barbed-wire perimeter fence of the Manik Farm refugee camp located on the outskirts of northern Sri Lankan town of Vavuniya)

ஆயுதமாகட்டும் (பிராபாகரன்), பேச்சுவார்த்தையாகட்டும் (லாய்லாமா), ஆயுதம் + பேச்சுவார்த்தையாகட்டும் (யாசர் அராபத்) வலிமையான நாடுகளின் ஆதரவு இல்லாமல் இனிமேல் யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடைக்கப்போவது இல்லை. ஈரான் அல்லது வட கொரியாபோல அணு ஆயுதம் (எதிரியும் பயப்படும்/யோசிக்கும்) இருந்தால் மட்டுமே வலிமையானவர்களுடன் பேச்சுவார்த்தையாவது நடத்தமுடியும் என்ற அளவிற்கு உலகம் சென்றுவிட்டது.




















(A group of black children and men standing behind a barbed-wire fence, the boundary of their township, just southwest of the city of Johannesburg, S.Af., 1950.)

ந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கை
இந்தியாவின் சர்வதேச / அயலுறவுக் கொள்கைகள் என்பது உச்சகட்ட‌ காமெடிக் கதம்பம் போல உள்ளது. திடமான நேர்மையான தலைவர்கள் இனி வரப்போவது இல்லை. காசுக்கு ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும்வரை அதிக காசு உள்ளவர்தான் நாளைய இந்தியாவின் தலைவர்.



.

Friday, November 13, 2009

சுரேஷ் பிள்ளையின் கடுமையான உழைப்பு

சுரேஷ் பிள்ளையின் கடுமையான உழைப்பு . உழைப்பு என்றால் மேசையில் உட்கார்ந்து கொன்டு 15 புத்தகங்களை படித்து விட்டு அதனை சுவராசியமாக் தனது நடையில் தொகுத்து வழங்கும் சுண்டைக்காய் படைப்பு அல்ல. கள ஆய்வுகளுடன் கடின உழைப்பில் ஆவணமாக கொண்டு வரப்பட்டுள்ள நூல்.

மிகவும் நுட்பமான தகவல்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஆராயப்படவேண்டியது.

பைத்தியக்காரன் பதிவில் பேசப்பட்ட புத்தகம்.
http://naayakan.blogspot.com/2009/10/blog-post_20.html

**

இந்த நூலின் அடுத்த கட்டமாக (நேரம்/காலம் வாய்க்கும்போது ) செய்ய வேண்டியது.....

1.வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
2.சிற்பக்கலைஞர்கள்.
3.ஓவியர்கள்.
4.புகைப்படக் கலைஞர்கள்
5.திரைப்பட வல்லுனர்கள்

இன்னும் தேவையான துறை வல்லுனர்களுடன் குறைந்தது 5 வருடகாலத்திற்கான களஆய்வைச் செய்து இந்துக்கோவில்களில் மறைக்கப்பட்ட புத்த சமண ஆய்வுகளைச் செய்து திரைப்படமாக, புகைப்படமாக, புத்தமாக ஆவணப்படுத்த வேண்டும்.

பல கோடிகள் செலவாகும் திட்டம். நிதானமாக அடியெடுத்து வைத்தால் முடிக்க வாய்ப்ப்பு உள்ளது....பார்க்கலாம்.

















































*******
1.Introduction to the study of temple art
Author
Pillai, Suresh B., 1934-
Publication Date
1976

2.The Chola temples : Thañjāvūr, Gaṅgaikoṇḍachoḷapuram & Dārāsuram
Author
Sivaramamurti, C.
Publication Date
1973

3.Heritage of the Tamils : temple arts
Publication Date
1985

4.Koṅku nāṭṭuk kōyilkaj
Author
Cuppaiyā, Civakaḷai Mu., 1932-

Publication Date
1967

5.Temples of Tamilnad
Author
Das, R. K., 1906-
Publication Date
1964

http://blacklight.betech.virginia.edu/

இணைய வளர்ச்சியில் ஆன்மீக,ஜோசிய, தகடு வியபாரிகள்.

ணைய வளர்ச்சியில் ஆன்மீக ஜல்லிகள் அடிப்பது தாண்டி அறிவியலை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். ஆன்மீக,ஜோசிய,தகடு வியபாரிகள்.

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்
http://kalvetu.blogspot.com/2007/11/blog-post_20.html

ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஓம்கார் இப்போது விவசாய ஜல்லியை ஆரம்பித்து இருக்கிறார். ஓம்காரின் விவசாய ஜல்லி (http://vediceye.blogspot.com/2009/11/11.html) .

-----இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை ---- என்று அவர் மூடர்களைப் பார்த்துச் சொல்கிறார். உழுவதற்கு ஏர் இரும்பின் பயன்பாடு இல்லாமல் (இரும்பு மண்ணைத் தொடக்கூடாதாம்) மரத்தில் இருந்தது என்று சொல்கிறார்.. இவர் எந்தக் காலத்திய ஏரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஏர் முனையில் நீளமான கூரிய இரும்பு பட்டை இருக்கும் . அது மரத்தோடு இணைக்கப்பட்டு மண்ணைக்கீற உதவும். கத்தியை சாணை பிடிப்பதுபோல இதையும் அவ்வப்போது பட்டை தீட்ட வேண்டும்.

ஓம்கார் ஏர் பார்த்துள்ளாரா என்று சந்தேகம். எந்தக்கால / எந்த நாட்டு ஏரைப்பற்றிப்பேசுகிறார்? புண்ணாக்கு வேதகாலம் எந்த நூற்றாண்டில் இருந்து எந்த நூற்றாண்டுவரை இருந்தத்து அல்லது இருந்ததாக இவர் நம்புகிறார் என்று சொன்னால் இவரை இன்னும் வெளிச்சம்போட்டுக்காட்டலாம். கும்ஸாக வேதகாலம் என்று கப்ஸாகாலத்து கதையில் ஏர் மரத்தில் மட்டும் செய்யப்பட்டது என்று சொல்கிறார். அவருக்கு ஜால்ரா போடுபவர்களில் எத்தனைபேர் விவசாய பிண்ணனி கொண்டவர்கள் என்று தெரியவில்லை.

பரம்படிக்கும் கட்டையிலும் இரும்பு இருக்கும். பாத்தி கட்ட , வரப்பு வெட்ட மற்றும் விவசாயிகளின் முக்கியமான டூல் மண்வெட்டி. அது என்ன ருத்திராட்ச கொட்டையில் செய்ததா? கதிர் அருக்கும் அரிவாள் நெய்யில் செய்ததா? இப்படி பல கருவிகள் விவசாய்த்தில் நேரடி மண் / பயிர் தொடர்பு கொண்டவை.

தகடு விற்கும் சாமியார்கள் , அல்லது காமகேடிகள்கூட பரவாயில்லை. இப்படி விவசாயத்தையும் அறிவியலையும் மனிதனின் வாழ்வு சம்பந்தப்பட்ட உண்மைகளையும்... கேட்க ஒரு கூட்டம் உள்ளது என்பதற்காக திரிக்கக்கூடாது ஓம்கார்.

விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடைகள் "எல்லாம்" மொழுகப்படுவது இல்லை. கேப்பை, கம்பு போன்ற சிறியவகைத் தானியங்கள் பின்னப்பட்ட கூடை இடுக்கில் வழியாக கசிந்து, சிந்தாமல் இருக்க சாணி கொண்டு மொழுகப்பட்டது. பின்னர் அது எல்லா மூங்கில் கூடைகளுக்கும் சகட்டு மேனிக்கு "ஸ்டாராங்கா இருக்கும் " என்று எக்ஸ்ட்ரா கோட்டிங்காக பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
எனது அம்மா , பஞ்சாரத்திற்கும் சாணி மொழுகுவார். கோழி அடைக்கப்பயன்படும் பஞ்சாரம் காற்றோட்டமாய் இருக்க வேண்டியது அவசியம். "இருக்குற ஓட்ட (சன்னல்கள்) போதுண்டா, சாணி போட்டா ரொம்ப நாளைக்கு வரும்" என்று மாதம் ஒருமுறை மொழுகுவார்.

விதை நெல் விதைப்பதற்கு பெரும்பாலான விவசாயிகள் இரும்பாலானா , பித்தளையில் சட்டம் போட்டு அழகுபடுத்தப்பட்ட மரக்காயை விரும்பி பயன்படுத்துவார்கள். மரக்காய் பார்த்தது உண்டா ஓம்கார் ?

---- " நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை." -----

இப்படி ஒரு ஜல்லி அடிக்கிறார் ஓம்கார்.
இரும்பாலான கருவிகளை விடுங்கள்.விளைநிலத்தில் உள்ள இருக்க வேண்டிய கட்டாய தாது வகைகள் தெரியுமா? தண்ணீர் இருந்தால்கூட எல்லா தாவரங்களும் (மரம் ,செடி,கொடி ,கீரை..) எல்லா நிலத்திலும் வளராது/விளையாது. ஏன் என்றால் மண்ணில் அவற்றுக்கான தாதுக்கள் இருக்க வேண்டியது அவசியம்.

இவர் எந்த பயிரைப்பற்றி ஜல்லி அடிக்கிறார் என்று தெரியாது. பொதுவாக நெல், கரும்பு வாழை என்று சொன்னால்கூட அதற்கு மண்ணில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச இரும்புச் சத்து என்ன என்று மண்ணாய்வு செய்து சொல்லப்படவேண்டிய விசயம்.

ஓம்கார்,
அறிவியல் ஜல்லி , விவசாய அடிப்படை தெரியாமல் "ஜல்லி" என்று கலந்து கட்டி மசாலாவுடன் ஆன்மீகம் விற்கிறீர்கள். மனசாட்சி இல்லாமல் அறிவியலை இப்படிக் கேவலப்படுத்தாதீர்கள்.

----------------------------

நீங்கள் அண்ணாமலைக்கு காசில்லாமல் நடந்தது சப்பை மேட்டர். பலர் பல காரணக்களுக்காக பலவிதமாக காசில்லாமல் அண்ணாமலை இல்லாமல் ஊர்சுற்றுகிறார்கள். இந்தியா முழுவதும் கையில் காசில்லாமல் நடந்து சென்றவர் உண்டு .

நான்கு வருடங்கள் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். அதுவும் 2002ல் இருந்து 2006 வரை யான இந்த காலகட்டத்தில்.

நடந்து தீராத கால்கள்.
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=218&page=3

இந்தியாவில் இருந்து அமெரிக்காவரை நடந்த மனிதர்கள் உள்ளார்கள்.
நடையால் வென்ற உலகம்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=88&page=5

//டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் இருந்து தங்களது நடைபயணத்தைத் துவக்கினார்கள். ....பிச்சை எடுத்து வாழ்வது போல ஆங்காங்கே கிடைத்தை சாப்பிட்டு வழியில் தூங்கி நடந்து சென்றனர். பயணத்திற்கு எதிரி சுமை என்பதால் இரண்டே மாற்று உடைகளுடன் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.//


**

ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !
http://govikannan.blogspot.com/2009/11/vs.html

Image Courtesy
http://media.photobucket.com

Monday, November 09, 2009

திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்

முன் குறிப்பு:
யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றுவதோ அல்லது கேள்வி கேட்பதோ எனது நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் என்ற பொது இடத்தின் வரலாற்றைக் கேள்வி கேட்கவே நான் முயற்சி செய்கிறேன். அந்த பொது இடத்தின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் உங்களை எதிர்வினையாற்ற வைக்கலாம். நாம் அனைவரும், ஒரு பொது இடத்தின் வரலாற்றை பேச முனைகிறோம். அதைத்தாண்டி எந்தவிதமான உரையாடலுக்குள்ளேயும் நான் போகப்போவது இல்லை. அப்படியே எங்காவது நான் திசைமாறி வேறுவிசயங்களுக்குள் என்றால் அதை தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன்.

நேரடியாக 1,2,3...என்று கேள்விகளையும் ,பதிலையும் மட்டும் எழுதுவோம். இது கேள்விகள் கிளைபரப்பாமல் எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் உரையாட வசதியாய் இருக்கும்.

******
கீதா,
நீங்கள் எத்தனை முறை திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் இருப்பீர்கள் என்று தெரியாது. அதில் எத்தனைமுறைகள் அதன் வரலாற்றை அர்ச்சகரிடம் கேட்டு இருப்பீர்கள் என்றும் தெரியாது. குறைந்தபட்சம் இந்த முறை நீங்கள் கேட்க முயற்சித்து உள்ளீர்கள். இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கும் பல புதிய கோணங்கள் தெரியவரலாம்.

இனி கேள்வி/பதில்/விளக்கங்கள்....


எனது கேள்வி:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

உங்கள் பதில்:
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

எனது விளக்கம்:
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இது ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் என சொல்வது?

ஒரு கோவில் என்றால் அதில் ஒரு மூலவர் இருப்பார். அவர் இருக்கும் இடம் கருவறை என்று சொல்லப்படும். பார்க்க வந்தவர், கல்யாணத்திற்கு வந்தவர்,கோபுரம் கட்ட காசு கொடுத்தவர் யாராக இருந்தாலும் மூலவர் அந்தஸ்தில் சிலை வைக்க மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்களுக்கு கருவறைகு வெளியில் சிலைகள் இருக்கலாம். (ஒரு உதாரணம்: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் : பெயரிலும் இருவரும் அறியப்படுகிறார்கள். இருவருக்கும் தனித்தனி கருவறை உண்டு. கல்யாணத்திற்கு வந்தவர் போனவர் எல்லாம் இங்கும் உண்டு.)

திருப்பரங்குன்றம் 5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் இடம். மாம்பழம்,பலா,வாழை,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் உள்ள ஒரு கடையை பழக்கடை என்றுதான் சொல்ல வேண்டும். அதை 'பலா'க்கடை என்றுதான் சொல்வேன் என்றால். அது உங்கள் விருப்பம்.

எனது கேள்வி:
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

உங்கள் பதில்:
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

எனது விளக்கம்:
5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் ஒரு இடம் முருகனுக்கு மட்டுமான ஒரு கோவிலாக கட்டமைக்கப்பட்டது எப்படி? இந்த தலம் முருகனுக்கானது மட்டும் அல்ல, 5 பேருக்கும் உரியது. கருவறை அமைப்பே அதற்கு சாட்சி.

தற்போது முருகன் கோவிலாக (மத்தவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்) அறியப்படும் இந்த இடத்திற்கு வேறு கோணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்திலேயே அதற்கான தேடல் தொடங்கும். மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பும் போது அர்ச்சகர் என்ன , தேங்காய் விற்கும் கடைக்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.

பக்கவாட்டு குறிப்பு:
கேள்விகள் 1 , 2 ற்கான பதில்கள் உங்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துவிட்டது. உங்களிடம் மேற்கொண்டு இந்த 1,2 சம்பந்தமாக உரையாடுவது உங்களின் நம்பிக்கைகளை நான் நேரடியாக கேள்வி கேட்கும் சூழலில் கொண்டுவிடும். நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் மட்டுமே 1,2 ல் தொடர விருப்பம்.

எனது கேள்வி:
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

உங்கள் பதில்:
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன்.

எனது விளக்கம்:
நீங்கள் சொல்லிய காரணங்களை பல முறை படித்துப்பார்த்தேன்.கீழே உள்ள காரணங்களால்தான்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரியா? தவறு என்றால் திருத்தவும்.

1.படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன்
படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும்.

2.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே.

3.முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும்,குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

மேலதிகக் கேள்விகள்:
1.போர் சம்பந்தமான காரணத்தினால் இது முதல் படைவீடாடக ( படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின்) அறியப்படுகிறது என்றால், இங்கே நடந்த போர், மற்ற 5 இடங்களில் நடந்த போருக்கு எல்லாம் முந்தைய ஒன்று. சரியா?

ஆறு இடங்களில்லும் நடந்த போர்களில் முருகன் எதிர் கொண்ட எதிரிகளின் பெயர் ,இடம் ,காலம் பட்டியல் உள்ளதா? அப்படி இருந்தால், முதன் முதலில் நடந்த போரின் போது முருகன் தன் படைகளோடு தங்கி இருந்த இடம் ஆதலால் இது முதல் படைவீடு என்று சொல்லலாம்.

2.சூரனை வதம் செய்யும் முன்னரே பிரணவப் பொருள் சமாச்சாரம் திருப்பரங்குன்றத்திற்கு வந்துவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் படைவீடு என்ற விளக்கமும், இது முதல் போரில் தங்கியிருந்த இடம் என்ற விளக்கம் ஒத்துவராது. //ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?// கதாகலாட்சேபம் பாணியில் நீங்களே "அல்லவா" என்று கேட்டுக் கொண்டால் "அல்ல" என்றுதான் நான் சொல்ல முடியும்.

3.இடையில் "மூலாதார" கணக்கு வேறு சொல்கிறீர்கள். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம்.

  • எந்த வகையில் திருப்பரங்குன்றம் மூலாதாரத்தை குறிக்கிறது?
  • மூலாதாரம் என்றால் என்ன?
  • மூலாதாரத்திற்கு ஏன் திருப்பரங்குன்றம் பொருத்தமானது?
ஆறுபடை வீடுகளின் வரிசை ...

(அ) திருவிளையாடல் படி வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஆ) போர் புரிந்த காலங்களில் முருகனின் படைகள் தங்கியிருந்த கால வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?

நீங்கள் இப்படித்தான் என்று சொல்லி அந்த வரிசையில் ஆறு படைவீடுகளையும் ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தினால் நல்லது. உ.ம்: நீங்கள் போர் வரிசை என்று சொன்னால், இந்த இடத்தில், இந்த வருடத்தில் இந்த பெயர் கொண்ட அசுரனுடன் முருகன் போர் புரிந்தார்? என்று ஆறு வீடுகளையும் வரிசைப் படுத்தலாம்.

அடிக்குறிப்பு:
நீங்கள் 3 வது கேள்விக்கான பதிலையும் உங்களின் நம்பிக்கைகளில் பேரில் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் பதில் சொல்லவிரும்பினால் நான் ஜகா வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சித்திரைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரும் முழிப்பீர்களேயானால் பார்க்க எங்களின் பழைய பதிவுகளை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கீதா
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_09.html

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்

நான் சென்ற பதிவில் சொன்னது போல் 'திருப்பரங்குன்றம்' என்ற இடத்தில் உள்ள குன்று, பல வரலாற்றுச் சம்பவக்களுக்கு மவுனச் சாட்சியாய் இருக்கும் ஒரு இடம். ஒரு சிறந்த ஆய்வுக் குழுவால் மட்டுமே அதன் இரகசியங்களை வெளிக்கொணரமுடியும்.

வரலாற்றில் இதுதான் உண்மை என்று யாராலும் வரையறுக்க முடியாது. எந்த தகவல் உண்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று வேண்டுமானால் பேசலாமே தவிர, இதுதான் உண்மை என்று சொல்லவே முடியாது. நாளை தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கல்வெட்டு , இதுவரை நாம் நம்பிவந்த எல்லாத் தகவல்களையும் புரட்டிபோடும் ஒரு புதிய ஆதாரத்தை வைத்து இருக்கலாம், யார் கண்டார்?

வரலாறும் , அறிவியலும் இன்றைக்கு உள்ள நிலையில் சில உண்மைகளைச் சொல்லும். நாளையே வேறு ஒரு ஆராய்ச்சி, முற்றிலும் புதிய ஒரு கருத்தைச் சொன்னால , அதையும் ஏற்றுக்கொண்டுவிடும். "இதுதான் இறுதி" என்று சொல்லாமல், தகவல்களைப் பதிவதே உண்மையான அறிவியல்.

வரலாறும் அப்படியே , இன்று அறியப்படாமல் இருக்கும் சில உண்மைகள்,நாளை கண்டறியப்படலாம். இன்று காணக்கிடைக்காத வரலாறு சம்பந்தமான தகவல்கள், வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.அப்போது புதிய தவல்கள் கிடைக்கும்.புராணங்களும் புனிதப் புத்தகங்களும் அப்படி அல்ல. அவை கேள்விக்கு அப்பாற்பட்டவைகள். "நம்பிக்கை", "நம்பு" என்ற கட்டளைக்குள் வருபவை. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி கேட்ப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. முகம்மதின் இருப்பை கேள்வி கேட்பவன் ஒரு முஸ்லிமாக இருக்கமுடியாது. மதம் சார்ந்த புராணங்கள், நம்பிக்கை என்ற ஒரு சாவி இருந்தால் மட்டுமே நம்மை ஏற்றுக் கொள்ளும். கேள்விகள் கேட்கும் பட்சத்தில் கதவுகள் அடைக்கப்படும்.

கேள்வியைக் கேட்டவன் அவன் நினைக்கும் பதில்களைப் பகிரவேண்டும் அல்லது எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிவிக்க வேண்டும். நான் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகளை எனது பார்வையில் சொல்கிறேன். இங்கே சொல்லப்போகும் பதில்கள் யாவும் எனது சாதாரணப் பார்வையில் தோன்றிய தனிப்பட்ட எனது கருத்துகளே தவிர எந்த ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. அது போல் ஒட்டுமொதத மதுரைப்பதிவர்களின் சார்பானதும் அல்ல.


(1) 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதே கோவில் கல்கத்தாவில் இருந்திருந்தால் "திருப்பரங்குன்றக் காளி" கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டு , துர்க்கை முக்கியமான தெய்வமாகக் கொண்டாடப்பட்டு , மற்றவர்கள் இரண்டாம் கட்ட தெய்வங்களாக கட்டமைக்கப்பட்டு இருப்பார்கள்.

இதே கோவில், காசி போன்ற இடங்களில் இருந்திருந்தால் அர்த்த கிரீஸ்வரர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பார்.

ஆந்திராவில் இருந்திருந்தால் பவளக்கனிவாய் ,அருள் கொடுக்க முதல் வரிசைக்கு வந்து இருப்பார்.

பல தெய்வ உருவங்கள் சமமாக உள்ள கோவில்கள், அது இருக்கும் இடம் பொருத்து நேயர் விருப்பம் போல் எதோ ஒரு தெய்வம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும். எது, எங்கு, விலைபோகிறதோ அதுவே முன்னிலைப்படுத்தப்படும். இது சந்தைப்படுத்தலின் உத்தியே தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

பல்வேறு காரணங்களால் முருகன் தமிழ்க்கடவுளாக அறியப்படும் தமிழகத்தில், அவனே முதற் பொருளாய் இருப்பதில் வியப்பில்லை.

முருகன் விலை போவான் என்றானவுடன், அவன் சார்ந்த கதைகளும், காவியங்களும் அதிகமாக இடம் பிடித்துவிட்டது. மீனாட்சி- சொக்க்கநாதர் ஆலயத்திலும் இந்த சந்தைப்படுத்தல் உத்தியைக் காணலாம். இந்தியா அளவில் சிவபெருமான் என்னதான் பெரிய கடவுளாக இருந்தாலும், மதுரை மண் வாசம் கதைகளுக்குச் சொந்தக்காரியான மீனாட்சியே முக்கிய இடம் வகிக்கிறாள்.
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

என்னிடம் இதற்கான துல்லியமான விடையில்லை. ஆனால், எனது புரிதல்களின் அடிப்படையில் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

மதுரையில் சமணம் அழிந்து சைவ,வைணவ சித்தாந்தங்கள் தலையெடுக்கும் போது முருகனின் கதைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம். சமணத்தை அழிக்கும் நோக்கில் இடைவிடாது கதைகள் புனையப்பட்டு இருக்கலாம்.13ம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளின் கடைசிக்காலங்களில் புராணங்கள் திருத்தப்பட்டு இருக்கலாம்.

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

தமிழக வரலாற்றில் மதுரை என்பது மிகப்பழமையான நகரம். இக்கால அரசியலில், கட்சி ஆரம்பிப்பவர்கூட முதல் மாநாட்டை மதுரையில் தொடங்கவே ஆசைப்படுகிறார்கள். மேலும் தமிழ்ச் சங்கம் என்றால் அது மதுரை என்று ஆகிவிட்டது.

முருகன் தமிழக் கடவுளாக அறியப்படும்போது ,அவனின் முதல்வீடு மதுரையில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதன் பொருட்டே தனியான அறை ஏதும் இல்லாமல், ஒரே குன்றில் மற்ற தெய்வங்களுடன் இருந்தாலும், இந்த இடம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஆன்மீக அரசியலில் நடந்துள்ள மிக நுண்ணியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன்.

அல்லது இந்த இடம் மற்ற முருகன் தலங்களுடன் ஒப்பிடும்போது பழமையான ஒன்றாக (கால அளவில்) இருக்கும் வேளையில் , முதல் வீடாக அடையாளம் காட்டப்பட்டு இருக்கலாம்.
விரிவான முந்தைய கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்க...
திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html


Picture Courtesy:
http://www.yogamalika.org/

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்

தி ருப்பரங்குன்றம்! தன்னுள் வரலாற்றின் காயங்களையும், எண்ணற்ற மக்களின் வேண்டுதல்களையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு குன்று.இந்தக் குன்றைப் பற்றி பேசவேண்டும் என்றால் எந்தக் கோணத்தில் இருந்தும் பேசலாம். யாரும் தட்டையாக இதுதான் இதன் 'தல' புராணம் என்று ஒரு சில பக்கங்களில் சொல்லிவிட்டுப்போக முடியாது.சரித்திர/வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு புதையல் கிடங்கு என்பது எனது எண்ணம்.

பலருக்கும் இந்தக் குன்று முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு என்ற வடிவத்தில்தான் அறிமுகமாயிருக்கும்.

குன்றைப்பற்றி கேள்விகள் கேட்க முனைந்தால் ...

  • மலையின் மேல் இருக்கும் சமணப்படுகை பற்றி...
  • மலையின் மேல் இருக்கும் சிக்கந்தர் தர்கா பற்றி...
  • மலையின் தென்புறமும் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைச் சிவன் கோவில் பற்றி (கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சமணர் கோவிலாக இருந்திருக்கிறது)
















  • இபோது இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஒருகாலத்தில் சமணர்களின் குடைவரைக் கோவிலாக இருந்திருக்குமோ என்ற அய்யங்கள் பற்றி ... (சமணர் கோவிலாக இருந்ததை அழித்து அல்லது மறைத்து ,ஒட்டுமொத்தமாக இந்துத் தெய்வங்கள் அனைத்தையும் சுவற்சிற்பமாக செதுக்கிவிட்டார்களோ என்று சந்தேகம் , கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் வந்தது உண்டு.)

....என்று பல விசயங்களை ஆராயலாம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. மேற்சொன்னவை எல்லாம் ஆராய்ச்சிக்கான விசயங்கள். வரலாற்றின் பாதையில் கட்டுக்கதைகளை நீக்கிவிட்டு ஆராய வேண்டும்.

பக்த கோடிகள் மற்றும் வரலாற்றை அறிந்தவர்களுக்கான கேள்வி.

ஒவ்வொரு கோவிலிலும் கருவறை அல்லது மூலஸ்தானம் அல்லது சன்னிதி என்ற ஒரு தனிப்பட்ட அறை இருக்கும். இந்த அறையில்தான் அந்தக் கோவிலின் கதாநாயக கேரக்டர் இருக்கும். திருப்பரங்குன்றத்தில் அப்படி ஏதும் கிடையாது.

அநேக வீடுகளில் 5 தெய்வங்களின் ஒரே சட்டகத்தில் இருக்குமாறு ஒரு படம் இருக்கும். திருப்பரங்குன்றமும் அப்படியே. இது தனியொரு கேரக்டருக்கான கோவில் இல்லை.

(மேலே உள்ள படத்தில்,பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை அப்பிராணி பக்தர்களுக்கு.நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை 10 ரூபாய் மொய் செய்பவர்களுக்கு. நீல வண்ணப்பாதையில் சென்றால்தான் (A) மற்றும் (E) கேரக்டர்களைப் பார்க்க முடியும்)

இங்கே...
(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை

(D) கற்பகவிநாயகர்

(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.


யாருக்கும் தனியாக ரூம்கள் இல்லை. மேலே சொன்ன அனைவருக்கும் ஒரே அந்தஸ்து கொடுக்கப்பட்டே சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். அது அந்தக்காலம், அதாவது கோவில் சிற்பத்தை செதுக்கியவர்களின் காலத்தில்.

இப்போது முக்கியத்துவம் எல்லாம் முருகனுக்கே. அதுவும் (A) பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் (E) அர்த்தகிரீஸ்வரர் இருவரும் பக்தகோடிகளுக்கு நேரடிப்பார்வை அளித்துவிடாவண்ணம் அல்லது முருகனுக்கு மட்டுமேயான கூட்டத்தை ஒதுக்கி வழிவிடுவதற்காக (A) & (B) க்களை ஓரம் கட்டி இருப்பார்கள். அதற்கு சாட்சியாக இருப்பது (A) & (B) மறைத்து கட்டப்பட்டுள்ள சுவர்.மக்களை ஏமாற்றும் வண்ணம் இந்தச் சுவர் கற்களுக்கு இணையாண வண்ணம் பூசப்பட்டு இருக்கும். அதை அறிந்து கொள்ள ஆராய்ச்சிப்பார்வை எல்லாம் தேவை இல்லை. அருகில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:

(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?


தகவலுக்காக:

திருப்பரங்குன்றம் - தலவரலாறு
http://sriramprasath.blogspot.com/2007/01/blog-post.html

திருமலையின் மதுரை சமணக்குகைகள் குறித்தான பதிவுகள்


மதுரை சமணக் குகைக் கோவில்கள் - ச. திருமலை
http://www.maraththadi.com/article.asp?id=2696

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2698

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2699

மேலக்குயில்குடி சமணர் குன்று, குகை, திருப்பரங்குன்றம்
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சமணர் குகைக் கோவில் மற்றும் படுக்கைகள் - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2708

**

கல்லில் ஊரும் காலம் -எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1

தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும் -மு. நளினி
http://www.varalaaru.com/Default.asp?articleid=416


Picture Courtesy:
www.madurawelcome.com
http://thiruparankundram.blogspot.com/2007/04/blog-post_06.html

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி

ரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு கடந்தகால நிகழ்வு.வரலாறு என்று சொல்லும்போதே, அது அதைப் படிப்பவனின் காலத்துக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் என்றாகிவிடுகிறது. இப்படி, வரலாறு என்பது அதை வாசிப்பவனின் காலத்திற்கு முந்தைய சம்பவங்கள் என்று சொல்லும்போதே, அது குறித்த நம்பகத்தன்மை மற்றும் ஐயப்பாடுகளும் வந்துவிடும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற தொனியில், இந்து (யார் இந்துக்கள் என்பது என்னளவில் இன்னும் புரியாத ஒன்று . அது இங்கே விளக்கப்படப்போவது இல்லை) அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை கண்டு வேதனைப்படவே செய்வான். கடவுளர்களை ஒரு மதத்திற்குள் கட்டிப்போடும்போதே அந்த மதம் சொல்லும் கடவுள் நாடு/இன/மத எல்லையுடைய சாதாரணமானவர்கள் என்று புரிந்துவிடும். சிவனுக்கு முருகன் என்று ஒரு பிள்ளையாண்டான் இருக்கிறார் என்பதை இந்தியாவின் வட மாநிலத்தவர்கள் கண்டுகொள்வது இல்லை. முருகனும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

கண்ணே தெரியாதவனுக்கு அல்லாப்பிச்சையும் , பிச்சைப்பெருமாளும்,மாத்தேயுப் பிச்சையும் ஒரே நிறத்தவர்கள்தான். நாமும் அதுபோல வாழப் பழகவேண்டுமோ?

மதம்/கடவுள் நம்பிக்கைகளைத்தாண்டி, இந்தக் கோவில் ஒரு அருமையான கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சான்று. எந்த ஒரு நம்பிக்கையாளராக இருந்தாலும், தனது நாட்டில் (அ) தனது ஊரில் உள்ள ஒரு பொக்கிசத்தைக் காணக்கூடாது என்று சில கோமாளிகள் சொல்லும்போது வருத்தப்படவே செய்வான். தாஜ்மகால் பற்றி எண்ணற்ற conspiracy theory கள் இருந்தாலும், அதை நாட்டின் ஒரு கலைப் பொக்கிசமாகவே நான் கருதுகிறேன். அதைப் பார்க்க சில மதக் கட்டுப்பாடுகள் விதித்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறே சொல்கிறது. ஒரு அரசியின் கோவிலுக்கு வருபவர்களை இந்து என்று எப்படி அளக்கிறார்கள் என்று தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த மதத்தில் வருவான்?

சமீபத்தில் மீனாட்சி கோவிலுக்கு சென்ற போது மீனாட்சி சன்னிதியின் அர்த்த மண்டபத்தின் (கருவறையச் சுற்றி உள்ள வெளிப்பிரகாரம்) சுவர்களில் மீனாட்சியின் பல பருவங்கள் சுவற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு , அதற்குக்கீழே பெயிண்டில் விளக்கம் கொடுத்து இருப்பார்கள். அதில் ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரையின் காரணம்.

மீனாட்சி "சேர,சோழர்களை வென்று இமயம் முதல் குமரிவரை ஆட்சி புரிந்தாள்" என்றவாறு எழுதப்பட்டு இருந்தது. இதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரவர் அவருக்கு உள்ள மனுக்களை எப்படி மீனாட்சியிடம் கொடுத்து சிபாரிசு வாங்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர்.


எனது கேள்விகள்.

1.மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்த அதே காலத்தில் வாழ்ந்த சேர மற்றும் சோழ மன்னர்கள் யார்?

2.அந்த மன்னர்களை மீனாட்சி போர் புரிந்து வெற்றி பெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உண்டா?(சும்மா தெருவோரம் புளியமரத்தில் இருக்கும் பாம்பிடம், பரமசிவன் பல்விளக்கும் போது சொன்னார் ..என்ற ரீதியில் ஆதரங்கள் வேண்டாம். அவை கோவில் சுவற்றிலேயே உள்ளது)

3.வடக்கே மீனாட்சி வென்ற மன்னர்கள் யார்? எத்தனை நாட்கள் போர் புரிந்தார்? பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்புகள்?

4.எத்தனை காலம் மீனாட்சி இமயம் முதல் குமரை வரை நாட்டை ஆண்டார்?

5.மதுரையில் இருந்து ஆளப்பட்ட இந்தியா குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஏதேனும்?

வரலாறு தெரிந்தவர்கள் சொல்லும் பதிலுக்கு இப்போதே நன்றி !!

**********

கோவிலில் பார்த்த சில கொடுமைகள்:
1. கோலம் போடுகிறேன் பேர்வழி என்று பெயிண்டால் எல்லா இடங்களி்லும் கோடுகளைப் போட்டு , வரலாற்றின் பக்கங்களில் பிழையை எழுதியுள்ளது.

2.சும்மா தேமே என்று இருக்கும் தூண்களுக்கு பித்தளைத் தகடுகளைப் போட்டு (அர்த்த மண்டபம்) வரலாற்றை சிறைசெய்து இருப்பது.

3.ஆங்காங்கே நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்சிற்பங்களை துளையிட்டு கம்பி கேட்டுகள் /தடுப்புகள் (Iron gates) போட்டு இருப்பது.

பார்த்த நல்ல விசயம்:

கற்பூரங்களுக்கு தடைவிதித்து எண்ணெய் விளக்குகளை அனுமதித்தது. புகையின் அளவு கொஞ்சமேனும் குறைய வாய்ப்பு உள்ளது.


Picture Courtesy:
www.wayfaring.info

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை


நா ன் ஒட்டு மொத்த மருதை மாவட்டத்திற்கோ அல்லது மருதவாழ் மக்களுக்கோ representative அல்லது அதிகாரபூர்வ spokesperson கிடையாது.மீனாட்சி கோவில் குறித்தான வரலாற்றை ஆய்வு செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நியமித்த ஒரு ஆய்வு அறிஞரும் கிடையாது. உலகில் பல விசயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம் சில நேரங்களில் அவற்றிற்கு எதிவினையாற்றுகிறோம் அல்லது அது பற்றி மேலும் ஆராய முயற்சி செய்கிறோம்.எதை விமர்சிக்கிறோம் அல்லது எதை கேள்வி கேட்கிறோம் என்பது , அந்த செய்தி அல்லது நிகழ்வு , நம்முள் எற்படுத்தும் தாக்கத்தை பொருத்து இருக்கும். அது ஒருவருக்கொருவர் மாறுபடும். பெண்ணின் கைப்பை கீழே விழுந்தால் எடுத்துக் கொடுக்க வரும் அதே ஆண்கள்தான் அவள் நிர்வாணமாக உதவி கேட்டு கதறும்போது வேடிக்கை பார்கிறார்கள்.

நிகழ்காலத்தில் உள்ள மக்களால் பதியப்பட்டுக் கொண்டு இருக்கும் விக்கிப்பீடியா சொல்லும் தகவலை நம்பாதவர்கள், அவர்கள் பிறக்காத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புனைவுகளையும்,புராணங்களையும் அப்படியே உண்மை என்றும் அவற்றின் வழியாக சொல்லப்படும் வரலாற்றை நம்பவும் செய்கிறார்கள். புராணங்கள் அல்லது புனைவுகள் எல்லாம் வரலாறு அல்ல. அதுபோல் பெரும்பான்மையினர் பேசுவதும் வரலாறு அல்ல. இது குறித்து நமது வலைப்பதிவுகளிலே பல முறை நிரூபிக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை மேற்கோள் காட்டலாம். ஆனால், அது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.

பொன்னியின் செல்வன் என்பது ஒரு கதை/புனைவு இலக்கியம். நாம் வாழ்ந்த இதே காலத்தில் ஒரு கதையெழுதி எழுதிய கதை இது. சோழர் வரலாற்றை அறிய வேண்டும் என்பவனுக்கு இந்தக் கதை ஒரு தூண்டுகோலாக இருக்காலாம். ஆனால், இந்தக் கதையின் வழித்தடத்தில் மட்டும் வரலாற்றைத் தேடுவது அல்லது கட்டமைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் மற்றும் வரலாற்றுத் துரோகம்.புராணங்களில் அல்லது புனைவுகளில் வரலாற்றின் குறிப்புகள் ,கட்டிடத்தில் உள்ள செங்கற்களை ஒட்டவைக்கும் சுண்ணாம்பைப்போல (அல்லது சிமெண்ட் போல)காணப்படும். அதை பகுத்து அறிவது அல்லது எப்படி உள்வாங்குவது என்பது அவரவரின் நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விசயம்.

பழைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு வந்த புராணங்கள்,இலக்கியங்கள் போன்ற புனைவுகள் போல இந்த நூற்றாண்டில் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பது சினிமா. நாம் வாழும் இந்த காலகட்டத்தில் சினிமாவில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.நமக்கு அடுத்து வரும் புதிய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து..."நம் முன்னோர்கள் காதலிக்கும் போது பக்கத்தில் பத்து இருவது ஆட்களை கூட்டிவைத்துக் கொண்டு் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று மேற்கோள் காட்டக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன். இன்று உள்ள விக்கிப்பீடியாவை நம்பாதவர்கள், பக்தி என்ற பெயரில் பழைய புராணங்களை அப்படியே வரிக்குவரி எப்படி நம்புகிறார்களோ , அதே போல் நாளய தலைமுறை ,இன்று சினிமாவில் உள்ள கற்பனைகளை உண்மை என்று நம்ப வாய்ப்பு இருக்கிறது. இது புரிந்தால், நீங்கள் நம்பும் புராணங்களில் இருந்தும் , புனைவுகளில் இருந்தும் உள்ள வளமான வர்ணனைகளையும், கற்பனைகளையும் பிரித்தெடுக்க முடியும்.

சங்ககால வரலாறுகளை, இதுதான் வரலாறு என்று தேதிவாரியாக யாராலும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த காலத்திற்குள் நுழைய, நம்மிடம் இருப்பவை புராணங்களும்,சமயக் கதைகளும் ,செவி வழிக் கதைகளும், எப்போதாவது கண்டெடுக்கப்படும் கல்வெட்டுக்களுமே. இதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாறு அப்பட்டமான வரலாறாக பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக , வரலாறே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் முட்டாளாகவில்லை என்றே நினைக்கிறேன்.என்னதான புராணங்கள்,கதைகள்,இலக்கியங்கள் வாசித்தாலும் அவற்றை சீர்தூக்கி , ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இல்லையென்றால் கடந்த கால வரலாறுகள் நாம் வாழும் இந்தக் காலத்திலும் சரிபார்க்கப்படாமல் , அப்படியே அடுத்த தலைமுறைக்கும் சென்றுவிடும்.

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் புதைந்து இருக்கும் சரித்திர உண்மைகள் இன்னும் நமக்கு புராணங்களின் வாயிலாகவே அறியப்பட்டு வருகிறது. புராணங்களை "பக்தி" என்னும் கண்ணாடி வழியாகப் பார்ப்பவர்களுக்கு, மீனாட்சி தெய்வப்பிறவியாக , யாக குண்டத்தில் தோன்றியவளாக ,மூன்று முலைகளுடன் இருந்தவளாக ,இமயம் முதல் குமரி வரை ஆணடவளாகவே தெரிவாள். மேலும் அவர்களுக்கு இதுபோன்ற போன்ற விசயங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

இதுதான் இறுதி இறைவேதம் என்று சொன்னபின்னால், அதை வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு சமயத்தடை வந்துவிடும். அதுபோல , சொன்னது எல்லாம் உண்மை என்று நம்பிவிட்டால், வரலாற்றை ஆராய வாய்ப்பே இல்லை.குழப்பமாக அல்லது தெய்வதன்மை வாய்ந்த , நம்பிக்கை சார்ந்த மீனாட்சி புராணக்கதைகளை , ஓரளவிற்காவது அறியப்பட்ட/நிரூபிக்கப்பட்ட சேர,சோழ வரலாறுகளுடன இணைக்காமல் இருப்பது பக்தர்கள் வரலாற்றிற்குச் செய்யும் பெரிய நன்மை.மீனாட்சி சிலையின் காலத்தை ( கார்பன் டேட்டிங்) அறிவியல் பூர்வமாக கணித்தாலே, புராணங்கள் சொல்லும் காலத்திற்கும், மீனாட்சி வடிவமைக்கப்பட்ட காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை அல்லது வேற்றுமைகளை அறிய வாய்ப்பு உள்ளது. தெய்வத்தின் சிலையை சோதிப்பதா? என்று பக்தர்கள் தவறாக என்னைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அல்லது ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தலாம்.

மீனாட்சி கோவிலின் தற்போதைய வடிவம் ஒரே நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டதில்லை. அதன் பழைய வடிவங்கள் நமக்கு புராணங்களில் விவரணையாக ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மை இன்னும் அறிவியல்பூர்வமாக ஆராயப்படவில்லை.அல்லது எனக்கு மட்டும் புரியவில்லை. ஒரு பெயிண்டர் எழுதிவைத்த தவறான தகவல் என்று என்னால் இதைக்கடந்து போக முடியவில்லை. இங்கே பினூட்டமிட்ட நண்பர்களும் பக்தி வழியில் அதையே நம்புகிறார்கள்.

மீனாட்சி வாழ்ந்த காலத்தில் இருந்த இந்தியாவின் புவியியல் எல்லைகள் இப்போது இருக்கும் இமயம்-குமரியாக இருந்திருக்கவே முடியாது என்பது எனது திடமான எண்ணம்.சுமைதாங்கிக் கல்லாக இருந்த ஒரு பட்டியக்கல் ஒன்று, சென்ற தலைமுறையில் ஊர் தேவதையாகவும், இன்று பார்வதியுடன் இணைத்து கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதையும் அறிவேன். நாளைய தலைமுறை இதை இன்னும் விரிவு படுத்தி புதிய கதைகளைச் சேர்த்தாலும் சேர்க்கும். ஆனால் , உண்மையைச் சொல்ல அந்த இரகசியம் அறிந்த கிழவிகள் இருக்க மாட்டார்கள்.புராணக்கதைகளை ஒரு கடந்த காலத்தை பார்க்க உதவும் ஒரு ஜன்னலாக மட்டுமே கொண்டு, இன்றைய அறிவியல் நுட்பங்களின் உதவியுடன் மீனாட்சியின் காலமும், வரலாறும் கணிக்கப்பட்டு சரியாக எழுதப்படவேண்டும். அதுவே அடுத்து வரும் மதுரைத் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பரிசு.

ஒரு அழகிய பெண்ணை இன்னொரு பெண் பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணை அவளின் கணவன் பார்க்கும் பார்வைக்கும், அவளின் தந்தை பார்க்கும் பார்வைக்கும், அவளின் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும், ரோட்டில் போகும் ஒரு ரோமியோ பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணின் மருத்துவர் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் ஒரே ஆள்தான். ஆனால், அவள் ஒவ்வொருவரிடமும் ஒரு புதிய முற்றிலும் வேறான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்.

அனைத்துப் பார்வைகளும் ஒன்று அல்ல. அதுபோல் ஒன்று மட்டுமே உண்மையும் அல்ல.நாம் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தும், நமது கடந்தகால அனுபவங்களைப் பொறுத்தும் , நாம் பார்க்கும் பார்வைக்கோணம் மாறுபடும்.


  • எனது கோணத்தில் மீனாட்சி என்பவள் வரலாற்றின் பக்கங்களில் நம்மைப்போல் ஒரு மனுசியாக இடத்தை நிரப்பியவள்.
  • அவளின்பால் ஈர்க்கப்பட பலர் அல்லது நலம் விரும்பிகள் அல்லது சுற்றம் சொந்தம்,அவளுக்கு ஒரு இடத்தை பட்டியக்கல்லாக ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
  • பிற்காலத்தில் அவள் பல புனைவுகளுடனும், கிளைக்கதைகளுடனும் தெய்வமாக்கப்பட்டு, இன்று கேள்வி கேட்கமுடியாத புனிதத்தை அடைந்து இருக்கலாம்.
  • இவள் நிச்சயம் நாம் அறிந்து வைத்துள்ள எந்த சேர, சோழர்களுடனும் போரிடவில்லை. இமயமும் குமரியும் அவளது ஆட்சி எல்லைகளாக இருத்திருக்கவும் இல்லை.

நான் சொல்வதுதான் இறுதி என்று சொன்னால், இது பழையபடி "இதுதான் இறுதி இறைவேதம்" என்ற முற்றை அடைந்து , அதற்குமேல் வளர்த்தெடுக்க முடியாத ஒன்றாக போய்விடும்.நான் சொல்பவைகள், இன்று எனது 36 வயதில் இருக்கும் புரிதல்கள். ஒருகாலத்தில் மீனாட்சியின்பால் அதிக காதல் கொண்டவன் நான். அதிகாலைத் தரிசனத்தில் அவளின் சாய்ந்த கொண்டையிலும், ஒய்யாராமாக சாய்ந்து நிற்கும் பேரழகிலும் என்னை மறந்தவன். ஒரு ஆணாக அவளை கடவுள் என்பதையும் மீறி என் சிறுவயதில் மெய்மறந்து இரசித்து உள்ளேன்.

அவை எல்லாம் ஒரு சிறுவயது பையன் பக்கத்துவீட்டு அக்காதான் உலகின் பேரழகி என்று எண்ணும் காலகட்டங்கள். மீனாட்சியின் மூக்குத்தியழகில் சொக்கிப்போன அனுபவமும் உண்டு. இராதை, ஆண்டாள் போன்ற சாதரணர்கள் ஆண் தெய்வங்களைக் கண்டு மெய்மறந்து புலம்பியது போல , நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. ஆண் தெய்வங்களுக்கு பெண் இரசிகைகளை அனுமதித்து ஆர்ப்பாரிக்கும் நாம் , பெண் தெய்வங்களுக்கு ஆண் இரசிகர்களை அனுமதிப்பது இல்லை. இதையெல்லாம் இங்கே விரிவாகப் பேசினால் பதிவின் நோக்கம் திசைமாறிப் போய்விடும்.

நான் சொல்லவருவது , இந்த மதுர மீனாட்சி என் சிறுவயதுக் காலங்களில் என்னால் இரசிக்கப்பட்ட/போற்றப்பட்ட/துதிக்கப்பட்ட ஒருவளாகவே இருந்தாள்.அந்த காலகட்டத்தில் நான் அப்படி இருந்ததும் உண்மை. இன்று அவளின் வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துவதும் உண்மை. நாளை, நான் இதே மீனாட்சியை வேறுவிதமாக, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கலாம்.

யாரும் யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டாலும், மதுரை மீனாட்சியின் வரலாறு குறித்தான மாறுபட்ட கோணங்கள் இருக்கிறது, என்றாவது சிலர் புரிந்துகொள்ள எனது கேள்விகள் உதவி இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் உதவாத ஒன்றாகவும் இருந்து இருக்கலாம். மாறுபட்ட விளக்கங்கள் இருப்பதால் இன்னும் உண்மை தேட வேண்டிய நிலையிலேயே உள்ளது அல்லது எனக்கு புரியாமல் உள்ளது.

புராணங்களை நான் வரலாற்றை அறிய உதவும் ஒரு ஜன்னலாகவே பார்க்கிறேன். அதுவே வரலாறு அல்ல. மேலும் அதீத பக்தியால், அதுதான் வரலாறு என்று இந்த blogspot காலத்திலும் நண்பர்களை நம்பவைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் பக்தியன்றி வேறு எதுவும் இல்லை என்றும் எனக்குப் புரிகிறது.

பொன்னியின் செல்வன் குந்தவை நாளை கடவுளாக்கப்பட்டு அது பற்றிய விவாதங்கள் வந்தாலும் வரலாம். யுகங்கள் மாறினாலும் இவைகள் தொடரும் என்றே நினைக்கிறேன்.

கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!

ஆரம்பித்து வைத்த கேள்விக்கு முடிவுரையை கொடுத்துவிட்டேன். விரும்புபவர்கள் மேலும் தேடிக் கொள்ளலாம். எனது தேடுதல் தொடரும் ,அது இங்கே பகிரப்படாவிட்டாலும்... !


முந்தைய விரிவான கருத்துப்பரிமாற்றங்களைக் காண...
மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி
http://pathivu.madurainagar.com/2007/11/blog-post_28.html



Picture Courtesy:
digitalmadurai.com