Friday, May 25, 2018

அனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA

A1 இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால்? அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்மீது கடத்திக்கொண்டு பதவியில் இருக்கிறது எடப்பாடி தலைமையிலான மாநில அரசு.

நீட் தேர்வில் தமிழகத்தை அடகுவைத்ததில் முக்கிய சூத்திரதாரியான மாஃபாவை, அமெரிக்க ஃபெட்னா இந்த வருடம் அழைத்து அவரின் சேவையைப் பாராட்ட இருக்கிறது.
https://fetnaconvention.org/en/special-guests

ஆம் அனிதாவிற்கு எடுத்துக்கொடுத்த தூக்குக்கயிறுக்காகவும், தூத்துக்குடிக்கு எடுத்துக்கொடுத்த துப்பாக்கிக்காகவும், நெடுவாசல் தொடங்கி எல்லா இழவுகளுக்கும் காரணமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியை, நீட்டின் சூத்திரதாரியான மாஃபா"வை   அமெரிக்க தமிழர்களின் அமைப்பு கொண்டாட இருக்கிறது. என்னவென்று கேட்டால் அவர்கள் ஃகார்வர்டின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தார்களாம்.

தூத்துக்குடி கொலைகாரர்களை அழைத்து கவுரவிக்கும் ஃபெட்னா, எட்டப்பன்களின் சங்கமாகிறது.இராசபக்சே இவர்களின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தால், அவரையும் அழைப்பார்கள் இவர்கள். தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில், தமிழனுக்கு பாடை கட்டியவர்களை அழைத்து சிறப்பிக்க இருக்கிறது ஃபெட்னா 2018.

ஃகார்வர்டு சேர் செய்கிறோம் என்ற பெயரில், அனிதாக்களைக் கொன்ற , தூத்துக்குடியை சுடுகாடாக்கிய ஒரு ஆட்சியின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறார்கள்.
**

நாஞ்சில் பீட்டர் என்ற ஒருவர் ஃபெட்னாவில் இயக்குநராக இருக்கிறார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தமிழனைக் கொலைசெய்து, யாருக்காக இந்தச் ஃகார்வர்டுச் சேர்? ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அவரின் மறுமுக‌த்தைக் காட்டுகிறார்.

மேலும் "ஃபெட்னா அறத்தின்மீது கட்டப்பட்ட அமைப்பு" என்கிறார் நாஞ்சில் பீட்டர்.

இல்லை அய்யா, ஒருவேளை அது அப்படி கட்டப்பட்டதாக இருக்கலாம், இன்று, உங்களைப் போன்ற எட்டப்பன்களால், எடப்பாடிகள் கொன்ற தமிழர்களின் பிணத்தில் வாழ முயற்சிக்கிறது.

‍‍‍‍==
அமைச்சர் வந்தால் ....
அவரிடமே உங்கள் சினத்தை காட்டுங்கள்.
கோரிக்கையை வையுங்கள்.
யார்வேண்டாம் என்பது.
குறிப்பு: நான் திமுக;
தந்தை பெரியார் தொண்டன்.
சாதி மதமற்றவன்.
==
எடப்பாடிகளும் இப்படியான எட்டப்பர்களும் தமிழர் கொலையில் விழாஎடுப்பவர்கள்.
FETNA's 31st Annual Tamil Conference Press Meet Stills
https://www.youtube.com/watch?v=ph6jvSJTrsQ

அதாவது கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து இவர்கள் விருந்து வைப்பார்களாம், நாம் அந்த விழாவிற்கு மொய் எழுதி , கொலைகார அரசின் பிரதிநிதியிடமே கோரிக்கை வைக்கலாமாம்.

என்ன மாதிரியான மனநிலை. இதில் நான் பெரியார் தொண்டன் என்ற அடிக்குறிப்பு வேறு.

பெரியார் அனிதாக்களின் சமாதியில் அழுது கொண்டிருக்கும்போது, நீங்கள் கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறீர்கள். தயவு செய்து பெரியாரின் தொண்டன் என்று சொல்லி, கிழவனை மறுபடியும் சாகடிக்காதீர்கள்.

இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்வது போல, "உங்களின் பிணங்களைத் தோண்டி தூக்கில் ஏற்றும் காலம் வரும்".

ட்வீட்டர் உரையாடல்.
https://twitter.com/naanjilpeter/status/999713487927631873

https://twitter.com/kalvetu/status/999969019867357184

https://twitter.com/naanjilpeter/status/999744469699366915

Thursday, May 17, 2018

கார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்

சொந்தவீடாக இருந்தாலும் திறக்கமுடியாத கதவு என்பது சிறையே. மேல்தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், 'டொம்' என்ற சத்தத்துடன் ஒரு அதிர்வை உணர்ந்தேன். கீழே இறங்கி, கார் நிறுத்தி இருக்கும் இடத்தில் (garage) கண்களால் நோட்டம் விட்டேன். ஒன்றும் வித்தியாசமாய்த் தெரியவில்லை அந்த அறையில். ஏதோ நடந்துள்ளது. ஆனால், என்ன என்பது தெரியவில்லை. ஏதேனும் பொருட்கள் விழுந்திருந்தால் தடயம் இருக்கும். எல்லாம் சரியாகவே இருந்தது.

மாலையில் காரேச் (garage) கதவைத் திறக்க முயற்சித்தபோது அது திறக்கவில்லை. மோட்டார் மட்டும் 'ஃகம்' என்ற சத்தத்தோடு திணறிக் கொண்டு இருந்தது.
**
மறுநாள் விடிந்தது. அடிபட்டுச் சென்ற கிரிஃச்டியன் , உடைமாற்றிக் கொண்டு வந்திருந்தான். அருகில் அவனது வீடு இருப்பதாகவும், அதில் சில மனிதர்களை அடைத்து வைத்து இருப்பதாகவும் சொன்னான். உயிர் போகும் நிலையில் கொடியவனிடமும் உதவி கேட்க மனம் துணியும்.

தண்ணீரும் உணவும் கேட்ட அவளுக்கு,  ரம்பத்தைக் கொடுத்தான். ஆம் அவளின் காலை அவளே அறுத்துக் கொண்டு வெளியில்வர. "நீ என்னை சந்தித்தது விதி. இது இப்படித்தான் முடியும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கபட்ட ஒன்று. அதுவே என்னைச் சந்திக்க வைத்தது. நான் உன்னைத் தேடி வரவில்லை. நீதான் என்ன சந்திக்க இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாய். தப்பிக்க வழியே இல்லை." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் மறுபடியும்.
**
Garage Door என்பது 200 முதல் 300 பவுண்டுகள் எடை இருக்கும். அதிக எடையில் இயங்கும் ஒரு இயந்திரம் என்றே சொல்லலாம். வீடுகளில் மோட்டாரால் தூக்கி இறக்கப்படும், அதிக எடையுள்ள ஒரே பொருள் இது. திறப்பதற்கு மோட்டார் இருந்தாலும், எடையைத் தாங்குவது அதனுள் இருக்கும் கம்பிச் சுருள்(Spring). ஊர்ப்பக்கம் கடைகளின் ஃசட்டர்களின் (shutter)மேலே இப்படியான கம்பிச் சுருளைப் பார்த்திருக்கலாம். கதவை மேலே தூக்கும்போது எடையைத்தாங்கி சுலபமாக்குவது கம்பிச்சுருளே. அது உடைந்துவிட்டால் கதவை நகர்த்த நாலுபேர் வேண்டும்.

எனது காரேச் கதவின் கம்பிச்சுருள் உடைந்திருக்க வேண்டும் என்று சில சோதனைகளில் அறிந்து கொண்டேன். மோட்டார் நன்றாக உள்ளது. கதவைத் தூக்கும் 'பெல்ட்& உருளைகள்' சரியாகவே வேலை செய்கிறது. மோட்டாரை விலக்கிய நிலையில் (disengage), ஒரு கையால் உயர்த்தினாலே சுலபமாக மேலே செல்லும் கதவு, இன்று ஒரு அங்குலம்கூட நகரவில்லை. இது உடைந்த கம்பிச்சுருளின் அறிகுறி.

பெரும்பாலான பழைய கதவுகளில் கம்பிச்சுருள் வெளியில் இருக்கும். எங்கள் கதவின் கம்பிச்சுருள் Torquemaster spring என்ற ஒன்று. இதில், கம்பிச்சுருள் இரும்புக்குழாயினுள் இருக்கும். வெளியில் தெரியாது. விசையேற்றப்பட்ட கம்பிச் சுருளை கழற்றி மாற்றுவது என்பது சிக்கலானது. உயிரழப்போ மற்றும் பெரிய காயங்களையோ ஏற்படுத்திய  விபத்துகள் அதிகம். இதை மாற்றுவது என்றால் 700 டாலர்கள் ஆகலாம். கம்பிச்சருளின் விலை 200 என்றாலும், வேலைக்கான கூலி அதிகம்.
**
யாருமற்ற சூழல்களிலும், நிராதரவான நிலைகளிலும் உயிர் பிழைத்திருக்க மனம் மிருக நிலைக்குச் சென்றுவிடும். பிழைத்திருக்க எது வேண்டுமானாலும் செய்யத்துணியும். காலை மட்டும் வெளியில் எடுத்துவிட்டால் தப்பிவிடலாம் என்ற நிலையில், தனது காலை தானே அறுக்கத் துணிகிறாள் 'ம‌லோரி'. அறுக்க ஆரம்பித்த சில நொடிகளில், வலி தாங்கமுடியாமல் நிறுத்திவிடுகிறாள்.

மழை கொட்ட ஆரம்பிக்கிறது. சிறுநீரும் உடலில் வற்றிவிட்ட நிலையில் , மழைநீரை சேகரிக்க முயற்சிக்கிறாள் பாட்டிலில். எப்படியும் கிரிஃச்டியன் மறுபடியும் வருவான் என்ற உள்ளுணர்வில், அவன் வந்தால் அவனைத் தாக்க திட்டமிட்டுகிறாள். எதிர் பார்த்ததபடியே வந்த அவனைத் தாக்கிவிட்டு, அவனிடம் பிடுங்கிய‌ அவனின் கார்ச் சாவியை தூரத்தில் எறிகிறாள். மழை அதிகரிக்கிறது. இவள் கார் விழுந்துகிடந்த இடம் வற்றியிருந்த ஒரு ஓடையின் மையப்பகுதி என்பது, மழைநீர் வரத்துவங்கிய பின்னரே தெரிகிறது.

பள்ளத்தில் இருந்து மேலே ஏறி, சாலைக்கருகில் சாவியைச் தேடச் சென்ற கிரிஃச்டியனை, அவ்வழியே வந்த காவல் அதிகாரி விசாரிக்கிறார். காவலர் வாகனத்தின் சிகப்பு ஒளியை கண்ட 'மலோரி' முடிந்தவரை சத்தமிடுகிறாள். அது முனகலாகவே வருகிறது. எதோ ஒன்றை சந்தேகித்து, சரிவில் இறங்க முயன்ற காவலரையும் அடித்து நிலைகுலையச் செய்கிறான் கிரிஃச்டியன்.
**
கம்பிச்சுருளில் சேர்த்து வைக்கப்பட்ட சக்தியை மெதுவாக வெளியேற்ற வேண்டும். சுருளின் விசையை வெளியேற்ற எதிர்ப்புறமாக (unwind)  சுற்றவேண்டும். இதற்கு சரியான உபகரணம் 'Ratchet and Sockets'. பிடித்திருக்கும் ரேச்சட் நம் கை வலிமை தாண்டி, கம்பிச்சுருளின் விசையை வெளியேற்ற, வேகமாக சுத்த எத்தனிக்கலாம். இதில்தான் அதிக விபத்து நடக்கிறது. முகரக்கட்டைகள் பிய்த்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. மெதுவாக விசையைக் குறைத்து, கம்பிச்சுருளைக் கழட்டினேன். எதிர்பார்த்தது போலவே கம்பிச்சுருள் உடைந்திருந்தது. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புதிய கம்பிச்சுருளை மாட்டி, அதற்கு விசை (wind) கூட்டினேன்.
**

காற்றும் மழையுமாக கொட்டியதில், காட்டாறு குப்புறக்கிடந்த ட்ரக்கை புரட்டிப்போடுகிறது. ட்ரக்கும் அவளும் மிதந்து போகிறார்கள் வெள்ளத்தில். எசகுபிசகாக சிக்குண்ட அவளின் கால், வெள்ளத்தாலும், ட்ரக் நேராகத் திரும்பியதாலும் கொஞ்சம் இலகுவாகி, வெளியில் எடுக்க முடிகிறது. ஆம் அவள் த‌ப்பிக்கிறாள். இரண்டு நாட்கள் கொடுமையில் இருந்து. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவள், கரையேறிய இடம், அந்த சைக்கோ கிரிஃச்டியனின் வீட்டருகில்.

**
Garage கதவைச் சரிசெய்த பிறகு, அதை இயக்கிப் பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தாலும், கதவு மூடும்போது ஒரு சின்னச் சிக்கல் இருந்தது. என்ன முயற்சித்தும் அது என்ன என்று கண்டுபிடிக்கமுடியாமல், குருப்பானில் (Groupon) ஒரு நிறுவனத்தின் சேவையை 80 டாலர்களுக்கு வாங்கினேன். சென்சரில் இருந்த ஒரு பிரச்சனையை சரிசெய்தபின் கதவு இயங்கத் தொடங்கியது. காரும் ஓடத் தயாரானது.
**

அன்று அலுவலகத்தில் இருந்து புறப்பட நேரம் ஆகிவிட்டது. மெல்லிய மழை, கீற்றுகளாய் தரையைத்தொட்டு சிதறி விழுந்துகொண்டு இருந்தது. பாதிவழியில் இருள் கவியத் தொடங்கியது. ரேம்சர் (Ramseur) என்ற ஊரைத் தாண்டிய போது, சாலையின் ஓரத்தில், தனித்துவிடப்பட்ட காரும், அதற்கு 10 அடி தள்ளி பெண் ஒருத்தி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதையும் கண்டு மனம் பதைபதைத்தது. சென்ற வாரம் பார்த்த Curve (https://www.imdb.com/title/tt3212904/) என்ற படத்தின் நாயகி 'ம‌லோரி' மனதில் வந்துபோனாள்.


ஏதேனும் உதவி தேவையா என்று கேட்கலாமே என்று நினைத்துக்கொண்டே, நிற்காமல் சென்றுவிட்டேன் நான். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது. 'ம‌லோரி' போல இவளும், இறுதியில் வென்று விட்டிருப்பாள் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். கிரிஃச்டிய‌ன் வீட்டை தட்டித்த்டுமாறி அடைந்த அவள், அவனை வென்று சிலரை அவனின் சைக்கோ சித்ரவதைகளில் இருந்து மீட்டுவிடுவாள்.
**
தினமும் சாலையில் ஏதேனும் ஒரு வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதைக் காணும் போதெல்லாம், "என்னவாகியிருக்கும் இவர்களுக்கு? ஏதும் பெரிய பிரச்சனையாய் இருக்காது, இருந்திருக்கக்கூடாது' என்றே மனம் விரும்புகிறது. அன்றுகூட கைகாட்டி நிறுத்தச் சொன்ன ஒருத்தியை கடந்துவிட்டேன். வேகமான சாலைகளில் என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்குள் காரும், காலமும் கடந்துவிடுகிறது.

It’s The Things You Don’t Do That You Regret Most

சட்டெனத் திரும்பும் வளைவுகளில் கார் நின்றுவிட்டால் என்னாகும்? ஏதோ ஒன்று ஆகும்வரை இந்தக் கேள்வி ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
*

முந்தைய பகுதிகார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1http://kalvetu.blogspot.com/2018/05/curve-1.html

Wednesday, May 16, 2018

கார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1

காலில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்திற்கும், அடிப்பட்ட புண் அகோரமாகி இருந்த வாடைக்கும், காட்டெலி ஒன்று 'ம‌லோரி' (Mallory)யைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. அதை விரட்டக்கூட முடியாது அவளால். 'மாறுகால் மாறுகை' போல, ஒரு காலில் முழங்காலுக்கு கீழே, பாதம் வரை காரின்  உடைந்த பாகத்தில் மாட்டிக்கொண்டது. ஒரு கையில் உடைந்த‌ எலும்புகளுடன், மல்லாக்க விழுந்த நிலையில், அந்த குப்புறக்கிடக்கும் காரினுள் அசைவதே சிரமமாயிருந்தது அவளுக்கு.
**

நெடிய பாதையின் பயணத்தில் இதயம் நின்றுவிட்டால் எந்தப் பிரச்சனைகளும் இருக்கப்போவது இல்லை. அதனோடு எல்லாம் முடிந்துவிடும். கவலைகள் சார்ந்தவருக்கே. ஆனால், பயணிக்கும் கார் நின்றுவிட்டால்?

எனது '2009' தயாரிப்பான 'கேம்ரி' 150,000 மைல்களுக்கு மேல் ஓடிவிட்ட ஒரு கிழட்டு கழுதை. அதன் மதிப்பு இப்போது சில ஆயிரங்களே இருக்கும். வாரம் 8 மணி நேரங்கள் அத்துவான வழியில் அதிகாலையில் பயணிப்பது சுகானுபவம் என்றாலும், எப்போதும் நின்றுவிடும் அச்சம் இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே Portable Jump Starter (Battery), தண்ணீர் பாட்டில்கள், அவசர உணவிற்காக சில பிசுகட்டு போன்றவைகள் எப்போதும் இருக்கும். டயர் மாற்றும்போது கீழே விரிக்க துணி போன்றவையும் இருக்கும். முடிந்த அளவு, எதிர்பாராத தருணங்களை எதிர் நோக்கிய பயணம்.
**

மலோரியும் மகிழ்ச்சியாகவே அவளின் பயணத்தை ஆரம்பித்தாள். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது அவளுக்கு. தனது மணநாளுக்குத் தேவையான அழகு ஆடையுடன், 'டென்வர்' நோக்கி போய்க்கொண்டிருந்தாள் அவள். இடையே தனது தங்கையுடன் பேசுகிறாள். 'கிராண்ட் கேன்யன்' வழியாக சுற்றுப்பாதையில் சென்றால் இயற்கையை இரசிக்க முடியும் என்று, நேரடிப் பாதையில் இருந்து சட்டென திரும்பும் திருப்பத்தில் நுழைகிறாள்.
**

இப்பொழுதெல்லாம் இரவு நேரங்களில், எனது காரின் முகப்பு விளக்கு சரியாகத் தெரிவதில்லை. விளக்கு புதிது என்றாலும், ஆக்சைடு படிமங்கள் படிந்துவிட்ட விளக்கின் வெளிப்புற கண்ணாடிப் பகுதி, மஞ்சளில் இருந்து, 'பழுப்பு மஞ்சளாகி' உயிரைவிடக் கெஞ்சிக் கொண்டிருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றால், குறைந்தது 200 டாலர்கள் தேவை. ஏற்கனவே 5 ஆயிரம் டாலர் அளவிற்கான வேலைப்பட்டியலே நிலுவையில் உள்ளது. ஓடும்வரை ஓடட்டும் என்று போய்க்கொண்டிருக்கும் காருக்கு மேலும் அதிப்பணம் செலவழிக்க விரும்பாமல், நானே விளக்கை சரிசெய்துவிடத் துணிந்தேன்.
**

கிராண்ட் கேன்யன் குறுக்குச் சாலையில் சென்றுகொண்டிருந்த 'மலோரி'யின் ட்ரக் அப்படியே நின்றுவிட்டது. அவசரத்திற்கு கைப்பேசியும் வேலை செய்யவில்லை. ட்ரக்கின் முன்பகுதியை திறந்து தன்னாலான சோதனையைச் செய்தாள். எரிக்கும் வெயிலில், மேலாடையை கழற்றியைக் கொண்டிருந்த நேரத்தில், எங்கிருந்தோ சட்டென்று தோன்றிய ஒருவனை  அவள் எதிர்பார்க்கவில்லை.

ஆள், அரவமற்ற அத்துவானப் பாதையில், எதிர்பாராமல் தோன்றிய ஒருவனைக் கண்ட அவள், தனது மேலாடையை அணிந்துகொண்டு, பேச ஆரம்பிக்கிறாள்.

**
எனது காரின் விளக்கை சரி செய்யத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு, ஒரு வார இறுதியில் என் வேலையை ஆரம்பித்தேன். உப்புக்காகிதத்தில், விளக்கின் முன் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக தேய்க்க வேண்டும். அதிக சிராய்ப்புத்தன்மை உள்ள பேப்பரில் ஆரம்பித்து, மென்மையான பேப்பருக்கு மாறவேண்டும். மஞ்சள் நிறம் நீங்கியவுடன், ஆல்ஃககால் வைத்து கழுவிவிட்டு, கிளியர் கோட் (Clear Coat) அடிக்க வேண்டும். இப்படிச் செய்தால், இன்னும் பல மாதங்களுக்கு இருக்கும் விளக்கை வைத்து ஒப்பேற்றலாம். தேவையான பொருட்களின் விலை 50 டாலர் வரை ஆயிற்று.
**

பார்ப்பதற்கு கவர்ச்சியானவனாக இருந்த கிரிஃச்டியன் (Christian) அவளின் ட்ரக்கை மறுபடியும் ஓட வைக்க உதவுகிறான். நடந்தே பயணித்துக்கொண்டிருப்பதாக‌ச் சொன்ன அவனை, தன்னுடன் ஏற்றிச் செல்ல முதலில்  மறுத்தாலும், சில மீட்டர் தொலைவு சென்றபிறகு மனம் மாறி, அவனையும் தன் ட்ரக்கில் ஏற்றிக்கொள்கிறாள் மலோரி.

சில தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையையே புரட்டிப்போடும்.  ஏன் நடக்கிறது என்பதற்கோ, ஏன் இப்படிச் செய்கிறோம் என்பதற்கோ விளக்கங்கள் அந்த தருணங்களில் கிடைப்பது இல்லை.

பேச ஆரம்பித்த சில வினாடிகளிளேயே, "எனது ஆண்குறியை உன் தொண்டையில் வாங்க முடியாது" என்று சொல்லி தன் சைக்கோ பக்கத்தைக் காண்பிக்கிறான் கிரிஃச்டியன். ட்ரக்கை நிறுத்தி அவனை இறங்கச் சொல்கிற 'மலோரி'யை கத்தியக் காட்டி மிரட்டி, தான் சொல்லும் ஒரு மோட்டலுக்கு ஓட்டச்சொல்கிறான் கிரிஃச்டியன்.
**
400 கிரிட் (Grit) உப்புக்காகிதத்தில் ஆரம்பித்து 600, 2000 என்று தேய்த்து முடித்தேன். இப்போது விளக்கில் இருந்த மஞ்சள் போய் பளிச்சென்று இருந்தது. இந்த நிறம் இப்படியே இருக்காது. சில நாட்களில் ஆக்சிடைசாகி மஞ்சள், பழுப்பு என்று மாறிவிடும். இதைத் தவிர்க்க இதன் மீது கிளியர் கோட் அடிக்க வேண்டும். கிளியர் கோட் அடிக்க அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்தேன்.  தேவையில்லாத இடத்தில் பட்டுவிடாமல் இருக்க, விளக்கின் முகப்பைச் சுற்றி பெயிண்டர் டேப்பை ( Painter's Tape) ஒட்டி, மீதிப்பகுதியை மறைத்தேன். ஆல்கஃகாலால் ஒற்றி எடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து கிளியர் கோட் அடித்து உலர வைத்தேன். மறுநாள் காலையில் விளக்கு பளிச் சென்று இருந்தது.
**

வன்முறையாக தன்னைக் கடத்துபவனை, என்ன செய்யலாம் என்று யோசித்து, சீட் பெல்ட் போடாமல் வரும் அவனை, எதிர்வரும் வளைவில் வேகமாக ட்ரக்கை திருப்புவதன் மூலம் வெளியே தள்ளிவிடலாம் என்று 'மலோரி' ட்ரக்கைச் செலுத்த, அது பெரும் விபத்துக்குள்ளாகிறது.

கிரிஃச்டியன் ட்ரக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும், 'மலோரி' தலைகீழே புரண்ட வண்டியின் உட்புறமாக , கால்கள் மாட்டிய நிலையில் தலைகீழாக தொங்கிய நிலையில் தேங்கிவிடுகிறாள்.

திறக்கவே முடியாத அளவிற்கு கதவும், எடுக்கவே முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்ட காலும், சேமடைந்த ட்ரக்கின்  நெளிவுகளில் அவளை சிறை வைத்தது. வலியுடன் குருதியும் சேர்ந்து ஒவ்வொரு நேரத்துளியும் மரண விசமாய் இறங்கியது அவளுக்கு. தூக்கி எறியப்பட்ட கிரிஃச்டியன் காயங்களுடன் பிழைத்துவிட்டான். அவனின் இருப்பு இவளின் பயத்தை அதிகமாக்கியது. ட்ரக்கை விட்டு வெளிவர முடியாத நிலையில், அவன் இவளை என்ன வேண்டுமானாலும் செய்வான்.

உணவிற்கு ஏதும் வழியில்லாத நிலையில், தன்னைக் கடிக்கவந்த காட்டெலியை அடித்து, சிகரெட் லைட்டர் உதவியுடன் சுட்டு தின்கிறாள். இருந்த கடைசிச் சொட்டு நீர்த்துளியும் தீர்ந்துவிட்டது. பகல் முழுதும் கழித்த நிலையில், குப்புற விழுந்திருக்கும் ட்ரக்கினுள் மல்லாந்து கிடக்கும் நிலையில், தனது டவுசரை சிறிது இறக்கி, தனது சிறுநீரையே பாட்டிலில் பிடிக்கிறாள். அதுவே அவளின் தாகம் தீர்க்கிறது.

தொடரும்......