Tuesday, March 19, 2019

2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது

1. வெளியுறவுக் கொள்கை முடிவுகளில், அடுத்த நாட்டுடன் கடல், நில எல்லையைப் பகிரும் மாநிலங்களின் கருத்து முதல் நிலையில் இருக்க வேண்டும். State inclusive decision on foreign policy. State interest first.

2. கவர்னர் &சனாதிபதி பதவிகள் நீக்கப்பட வேண்டும். State representative union govt.ல், கவர்னர் என்பது conflict of interest. Parliament (இரு சபைகளும்) approve செய்த மசோதாவை சனாதிபதி காலம் தாழ்த்துவது conflict of interest.

3. கல்வி என்பது மாநிலங்களின் உரிமையாகவே இருக்க வேண்டும். மத்திய அரசு பரிந்துரை மட்டுமே செய்யலாம். இறுதி முடிவு அந்த மாநில சட்டசபையின் முடிவாகவே இருக்க வேண்டும். NEET, 5th, 8th exam போன்ற குளறுபடிகள் உடனே களையப்பட வேண்டும்.

4. கடவுச்சீட்டு(passport) ஆங்கிலத்துடன் அந்த அந்த மாநிலங்களின் மொழி அட்டையில் இருக்க வேண்டும். நாட்டைவிட்டு செல்லும் போது பயன்படும் ஆவணத்தில் இந்தி தேவையற்றது. பார்வையற்றவர்களுக்கு Brille எழுத்துகள் அட்டையில் இருக்க வேண்டும்

5. இரயில் போக்குவரத்து என்பது மாநில மக்களின் அக்கறைகொண்ட  மண்டலங்களாக இயங்க வேண்டும். அந்த அந்த மாநிலங்களின் மொழி முதன்மையாகவும்,  இரண்டாவது ஆங்கிலமாகவும் மூன்றாவது அந்த மண்டலம் அமைந்துள்ள கூட்டு மாநிலங்களின் விருப்ப மொழி.

6.மாநிலத்தின் தலைமை மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் மத்திய துறை அதிகாரிகள்,அந்த அந்த மாநிலத்து அதிகாரிகளாக இருக்க வேண்டும். 70%அந்தந்த மாநில மக்களும்30% பிற மாநில மக்களும் இருக்கலாம் போன்றதொரு State represent சட்டம் must

7. India is a union of states. மாநிலங்களுக்கு அரசு இலச்சினை (state seal) வாழ்த்துப்பாடல் (State Anthem) உள்ளது போல, மாநில கொடிகள் குறித்தான சட்டம். தேசியக் கொடி , மாநிலக் கொடியை விட இரண்டடி உயரமாக பறக்கவிடவேண்டும்.

8. நதிநீர் பங்கீடு குறித்தான சட்டம்.  இதை ஒரு living document ஆக இருக்குமாறு. அதாவது வறட்சி காலத்தில் என்ன செய்வது , வெள்ளம் வரும்போது என்ன செய்வது போன்ற வழிகாட்டுதலுடன்.

9. மத்திய அரசின் மானியங்களில் (சமையல் எரிவாயு) நடந்த குளறுபடிகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.

10.கைரேகை, கண் retina , பெயர், முகவரி என்று அனைத்தையும் ஒரு அட்டையிலும் ஒரு database லும் வைத்திருக்கும் ஆதார் ஒரு அழிவுக்கான பார்முலா. ஆதாரை அழித்துவிட்டு,PAN , Voter # என்று தனியாக வைத்திருக்கும் முறைக்கு திரும்ப வேண்டும்.

11. பிறப்புச் சான்றிதழ் தவிர பாஃச்போர்டிற்கு எதுவும் தேவை இல்லை. வீட்டு முகவரி மற்றும் PAN# தவிர வங்கிகளுக்கு எதுவும் தேவை இல்லை. எல்லாவற்றையும் அனைவரும் கேட்கும் முறையை மாற்ற வேண்டும். டிசிட்டல் காலத்தில் இது security issue.

12. வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநித்துவம் MP க்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் உண்மையாக இல்லை. சின்ன மாநிலங்களுக்கு இது அநீதி.  Rajya Sabha பிரதிநிதித்துவத்தை அமெரிக்க செனட் போல அமைக்க சட்டம். அனைத்து மாநிலங்களுக்கும் இரண்டு (Rajys Sabha)  உறுப்பினர்கள் மட்டுமே irrespective of their MLA count in state assembly.

13. பல்கலைக் கழகங்களில் ஆளுநரை வேந்தராக வைக்கும் மரபு தேவையற்றது. மாநில அரசு நடத்தும் பலகலைக்கு.அந்த மாநில கல்வித்துறை அமைச்சரே வேந்தர். தனியார் பல்கலை இருக்கும் மாநிலத்தில் அந்த மாநிலத்திற்கு கட்டுப்பட்டது.

14. மாநில உயர்நீதி மன்றம்  தொடங்கி அதற்கு கீழே உள்ள நீதி அமைப்புகளில் அந்த மாநில மொழியே முதன்மை மொழி என்ற சட்டம். தலைமை நீதிபதி அந்த மாநிலத்தவர் அந்த மாநில மொழி தெரிந்தவர் என்ற சட்டம்.

15. பேச்சுரிமை என்பது even if you get offended I can say what I want என்று இருக்கவேண்டும்பத்திரிக்கை சுதந்திரம். Hate crime என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. குடிமகன் அரசாங்கத்தை , நீதிமன்றத்தை விமர்சிக்க உரிமை வேண்டும்.

16. இயற்கைவளம் , கனிம வளம் போன்ற கொள்கை முடிவுகளில் அந்தந்த மாநிலங்களேஇறுதி முடிவை எடுக்க வேண்டும். தேசிய நலன் என்ற போர்வையில், மாநில வளங்களைச் சூறையாடுவதை தடுக்க சட்டம்.

17. தேசியப் பூங்கா என்பது.மரம் காடு மட்டுமல்ல. பரந்த கடற்கரையும் மீன் பிடி தொழிலும் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கி கடல்சார் பாதுகாப்பு திட்டம், புவி வெப்பமயமாதல் குறித்தான தொலைநோக்கு திட்டங்கள்.

18. சமூகச் சமநீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மக்களை வர்ணம் பிரிக்கும் புத்தகங்களை குறித்தான விவாதமும், மத அமைப்புகள் நடத்தும் மேளாக்கள், நதிச் சீர்கேடு போன்றவற்றிற்கான வழிகாட்டும் சட்டங்களும் அவசியம்.

19. கட்சிகளுக்கு தனிநபர், தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பணம் வெளிப்படையாக இருக்க வைக்கும் சட்டம். Make every paisa accountable.

20. இந்தியா ஒரு துணைக்கண்டம். அதன் நடுவண் அரசு என்பது Union of State என்பது சொல்லிலும் செயலிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

https://twitter.com/kalvetu/status/1098594789480648711

Friday, March 15, 2019

சட்டெனத் திரும்பும் வளைவுகள்: பஞ்சாலைகளுடன் நின்றுவிட்ட சுவாசம் Franklinville,NC

வளைவுகள் என்றும் அபாயகரமானது. ஆச்சரியங்களை தேக்கி வைத்துள்ள, பள்ளம் மேடுகளைக் கொண்ட வளைவுகள், அலாதியானதும்கூட. அன்றும் அப்படித்தான். அலுவலகம் செல்லும் வழியில், ராம்சேர்(Ramseur) (ராமேசுவரம்?)  தாண்டி, வலதுபுறம் 'கைகாட்டி' காட்டிய ஊருக்குள் திரும்பினேன்.

ப‌யணம் என்பது, கண்டம் விட்டு கண்டம் தாண்ட வேண்டும் என்பது அல்ல. என் ஊரிலேயே நான் செல்லாத தெருக்களும், பார்க்காத மனிதர்களும் பல. தினமும் ஒரு புதிய பாதையில் செல்வதே புதிய பயணம் தான். உள்ளமும் உடலும் புதிய பாதையில் விழித்துக்கொள்ளும்.பழகிய இடங்களில் மூளைக்கு வேலை இல்லை.

Muscle memory என்று சொல்வார்கள். பழகிய இடங்களில் அது வேலையைக் காட்டும். மூளை ஓய்வெடுக்கும்.
**

"ஃபிராங்ளின்வில்" (Franklinville) என்ற ஊரை நான் அலுவலகம் செல்லும் பாதையில் உள்ள கைகாட்டி மரத்தில் பார்த்தது தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை என்னிடம் அப்போது. சட்டெனத்திரும்பி, சில மைல்தூரம் சென்றிருப்பேன்.இடிபாடுகளுடன் கூடிய, செடிகள் மண்டிய கட்டிடம் வரவேற்றது. அதன் அருகில் உள்ள ஒரு கார் ரிப்பேர் கடையில் சில தலைகள் தென்பட்டது.

ஒரு ஊரின் முகப்பே அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடும். "ஃபிராங்ளின்வில்" ஊர் சோம்பலுடன் காட்சி அளித்தது. எந்த ஆரவாரமும் இல்லை. ஏன், மக்களின் நடமாட்டம் இல்லை.
**

முக்கிய வீதி என்ற வீதியில் ஒரே ஒரு கடை இயங்கிக்கொண்டு இருந்தது. அதுதான் அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு உணவகமும்கூட‌. தயக்கத்துடனே உள்ளே நுழைந்தேன். "வழிதவறி வந்துவிட்டானோ இவன்?" என்றவாறு தலைகள் திரும்பியது. கிராமத்து மணம் நிரம்பிய கடை. உள்ளூர் மனிதர்கள் உள்ளே. அவர்களின் உடைந்த ட்ரக்குகள் வெளியே.

சங்கிலித் தொடர் உணவங்களில் இருப்பதுபோல பழக்கமான மெனு எதுவும் இல்லை. கல்லாவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், சமையல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களும் இருந்தார்கள்.என்ன கேட்பது என்று தெரியாமல், "நான் அகறி (No meat) .எனக்கு முட்டை மற்றும் காய்கறி கலந்து, ஆம்லேட் மாதிரி ஏதாவது செய்துதர முடியுமா?" என்றேன். தன்னிடம் இருக்கும் காய்கறிகளைச் சொல்லி, அது போதுமா என்று கேட்டு எனக்கான உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்.
**

1847 பதிவு செய்யப்பட்ட இந்த ஊரின் மக்கள் மன்றம் (Town Hall ) ஒரு பாழடைந்த கட்டடம்போன்ற‌ ஒன்றில் இயங்கி வருகிறது. அதன் பின்னால் நூலகம். அதை ஒட்டிய இன்னொரு பக்கம்தான் இந்த ஊரின் ஒரே ஒரு உணவகமான இந்த Franklinville Restaurant உள்ளது. எனக்கான சமையல் ரெடியாகிகொண்டிருந்தது. காத்திருக்கும் நேரத்தில் அங்கு வாங்கிய காஃபியை, கடைக்கு வெளியில் வந்து அந்த ஊரின் காற்றையும் சேர்த்து உறிஞ்சினேன்.
**

வடக்கு கேரொலைனா மாநிலம் புகையிலைக்கும், பஞ்சாலைக்கும் பெயர் பெற்றது. பஞ்சாலைத் தொழிலின்போது கம்யூனிசம் இருந்திருக்கிறது இந்த மாநிலத்தில். ஆலைதோறும் கூட்டம் போட்டு, தொழிற்சங்கங்களை வளர்த்தவர்களின் வரலாறு உண்டு இங்கே.

முக்கியமான திரைப்படம் -Norma Rae (1979)
https://www.youtube.com/watch?v=X8ulYIVcCeY

இந்த மாநிலத்தின் பழையகால பஞ்சாலைக் கதையை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டும் இந்தப்படம். கிராமங்களில் நடந்த வரலாறுகள் தேடினால் மட்டுமே கிடைப்பவை.

Norma Rae (1979) IMDB
https://www.imdb.com/title/tt0079638/

இந்தப்படம் உண்மையான ஒரு கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
https://en.wikipedia.org/wiki/Crystal_Lee_Sutton

இந்த மாநிலம் இப்படி பல தொழிற்சங்க கதைகளைக் கொண்டது.
https://en.wikipedia.org/wiki/Loray_Mill_strike

**
அமெரிக்க உள்நாட்டு போருக்கு (U.S. Civil War ) முன்னான காலத்தை, Antebellum (before the war) என்று சொல்வார்கள். அப்போது Deep River என்ற ஆற்றின் கரையில் இருந்த இரண்டு பஞ்சாலைகளைச் சுற்றி இரண்டு ஊர்கள் உருவாகி வந்தது. 1847 வாக்கில் இந்த இரண்டும் சேர்ந்து Franklinville என்ற ஊராக அதிகாரபூர்வமாக உருவாகிற்று. ஊரின் இரண்டு முனைகளில் முளைத்த பஞ்சாலைகள், அந்த ஊரின் நடுவில் ஓடும் Deep River என்ற ஆற்றின் ஆற்றுநீரைப் பயன்படுத்திக்கொண்டது.

இன்றும் அந்த ஆறு ஆரவாரமற்று ஓடுகிறது. ஆனால், ஆலைகள் அழிந்துவிட்டது. வெற்று கட்டிடங்களாக, ஊர் காக்கும் எல்லைக் காவல் தெய்வங்கள் போல செயலற்று நின்றுவிட்டது இரண்டு ஆலைகளும்.
**

கிரீன்ஃச்பொரோ (Greensboro) பக்கம் உருவாகும் இந்த Deep River ஆறு, ஆஃச்பரோ (Asheboro) ,ஃபிராங்ளின்வில் வழியாகப் பாய்ந்து , சான்போஃர்ட் (Sanford) வரை சென்று, அதற்குப்பிறகு Haw River டன் இணைந்து Cape Fear River,  என்ற ஆறாக மாறி கிழக்கு கடல்வரை செல்கிற‌து .
https://en.wikipedia.org/wiki/Cape_Fear_River

Deep River ம், Haw River ம் இணையும் இடத்தில்தான் (சான்போஃர்ட் - Sanford) ,நம் முப்பாட்டன் முருகனுக்கு கடைவிரித்து ஆன்மீகத் தொழில் செய்ய சிலர் முதல் போட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கான கூடுதல் தகவ‌ல்.
**

https://youtu.be/0h8WSR5Z1NM

எனக்கான உணவு சமைக்கப்பட்டுவிட்டதை அந்தப் பெண் வந்து சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அதை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.ஐந்து நிமிட கார் பயணத்தில் மொத்த ஊரையும் சுற்றிவிடலாம். டவுன் என்பது இந்த உணவகமும், அதன் மேல் இருக்கும் நூலகமும், அவற்றுக்கு நடுவில் இருக்கும் ஊர்ப்பஞ்சாயத்து கட்டிடமும்தான். மூன்றும் ஒரே கட்டிடத்தில் உள்ளது.

இதற்கு எதிர் புறத்தில் தீயணைப்பு நிலையம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் பள்ளிக்கூடமும், அஞ்சல் அலுவலகமும் வரும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தேன். நான் வசிக்கும் இடத்தில் உள்ள பள்ளியின் சொகுசும், இந்தப் பள்ளியின் நிலையும், சற்றே தடுமாற வைத்தது. இப்படியான கிராமங்கள் பல உள்ளது. இவர்களும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள். இதுவும் அமெரிக்காதான்.

இப்போது இந்த ஊரின் வருமானத்தைப் பெருகச் செய்ய, Deep River ஆற்றினை ஒட்டி, பூங்காக்கள், கேம்ப் சைட் , என்று விரிவாக்கம் செய்து வருகிறார்கள்.
**

அழகான அந்த ஆறு,பல கதைகளை கரைகளில் விட்டுவிட்டு, நீரோடு ஓடிக்கொண்டே உள்ளது. தங்கிவிட்ட கதைகள் கேட்பாரன்றி கிடந்தன. சிறிதுநேரம் அந்தப் புல்வெளியில் அமர்ந்து அவற்றின் கதைகளை உள்வாங்கிக்கொண்டேன் உணர்வில்.

இந்த ஊரில் வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இந்த நதியின் தோற்றுவாயில் ஆரம்பித்து இந்த ஊரின் கரையில் முடிக்கவேண்டும். இப்போதைக்கு இயலாதது. இடிந்த கட்டிடங்களை புகைப்படமாகவும், தொலைந்துபோன சுவாசங்களை மனதிலும் ஏற்றிக்கொண்டேன்.மறுமுறை இந்த ஊருக்கு வருவேனா என்று தெரியாது.
**

"ஃபிராங்ளின்வில்" ஊரின் சுவாசம், அங்கிருந்த பஞ்சாலைகள் நின்றபோது நின்றுவிட்டது போல.இரண்டாவது பயணம் என்பது சுவைக்கப்பட்ட கரும்பின் சக்கைபோல ஆகிவிடுகிறது எனக்கு. இருந்தாலும் இந்த ஊர் என்னை என்னவோ செய்கிறது. ஒரு இரவு ஏதேனும் ஒரு வீட்டில் கேட்டு தங்க வேண்டும். ஒரு இரவு தங்காத ஊர்களை சுவாசித்தேன் என்று சொல்லிக்கொள்வது இல்லை நான்.

http://www.townoffranklinvillenc.org/
http://www.livingplaces.com/NC/Randolph_County/Franklinville_Town/Franklinville_Historic_District.html
https://sites.google.com/site/macwhat/lowermill
http://eofp.net/franklinville.html

Wednesday, March 13, 2019

அதிக கடனுடன் நிறைவேறிய‌ கனவு : The Jeep wave

ன்று காலையில் அரைமணி  நேரத்திற்கு முன்பே எழுந்துவிட்டேன். வழக்கமாக 4:30 க்கு எழுந்திருப்பவன், இன்று 4:00 மணிக்கே எழுந்துவிட்டேன். காலையில் அனைவருக்கும் உணவு தயாரித்துவிட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவும் செய்ய, இரண்டு மணிநேரம் ஆகிவிடுகிறது. அதற்குப்பின் குளித்து அலுவலகம் கிளம்ப 30 நிமிடங்கள். வாகனத்துக்கு பெட்ரோல் போட Costco பேரங்காடி நிலையத்தை அடைந்தபோது நேரம் 6:40 ஆகி இருந்தது. காற்றில் அதிகாலை இருட்டுடன், மெல்லிய வாடைக் காற்றும் கலந்திருந்தது . ஞாயிற்றுக்கிழமைதான் நேரம் மாற்றப்பட்டது. குளிர்காலம் முடிந்து, இளவேனிற்காலம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் (forward) நகர்த்திவிடுவார்கள். இந்தக்காலத்தில் கிடைக்கும் அதிக பகற்பொழுதை பயன்படுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு. நவம்பர் முதல்வாரத்தில், பழையபடி கடிகாரத்தை பின்னோக்கி ஒரு மணிநேரம் தள்ளி வழக்கமான நேரத்திற்கு வந்துவிடுவார்கள்.

Costco பேரங்காடி பெட்ரோல் நிலையத்தில் அப்போது கூட்டம் இல்லை. பகல் நேரத்தில் குறைந்தது 20 வாகனங்கள் வரிசையில் இருக்கும். இப்போது என்னைததவிர ஒரே ஒரு வாகனம் மட்டுமே இருந்தது. மற்ற இடங்களைவிட இங்கே பெட்ரோல் விலை குறைவு. அதுவும் உறுப்பினர்களுக்கு மட்டும் என்பதால், முடிந்தவரை இங்கேதான் பெட்ரோல் நிரப்புவது. "Fill it quickly, price is going to change in few minutes" என்றவாறே வந்தார் அந்த நிலைய பணியாளர். அவருக்கு வணக்கம் சொன்னேன். "Are you enjoying your jeep" என்று கேட்டார் சிரித்துக்கொண்டே.

ப்பொழுது எல்லாம், யாராவது என் புது வாகனம் பற்றிக் கேட்டால், நிறுத்திக் கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறேன். எனது பழைய 2009 கேம்ரி கார் விபதிற்குள்ளானது, என் மகன் நலமாக இருப்பது தொடங்கி, என் சின்ன வயது கனவான வரை "Mahindra Jeep" வரை பேசிவிட்டுத்தான் ஓய்வேன். என்னை எப்போதாவது பார்க்க நீங்கள் நேர்ந்தால் உங்களுக்கும் இந்தக் கதை சொல்வேன்.

நான், தேவை (need) தாண்டி ஆசைக்காக (want) வாங்க நினைத்த இரண்டே இரண்டு பொருட்களில் ஒன்று வாங்கவே முடியாமல் போனது.
👇👇👇
எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்

ரண்டாவது ஆசையும், "ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஃச்டமோ கழுதை மேய்க்க” என்றொரு பழமொழி உண்டு. அதுபோல தள்ளிக்கொண்டே போனது. "இருக்கும் கார் அதுவாக நின்றால்தவிர, வேறு ஒரு வாகனம் வாங்கப் போவது இல்லை" என்றே இருந்தேன். சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் இருக்கும் கார் நின்றுவிட்டது.
👇👇👇
அன்று அவனும் போயிருப்பான்:நின்றுவிட்ட கார்

ரு மாத காலம், நண்பர் ஒருவர் இரவல் கொடுத்த, ஏற்கனவே 190,000 மைல்கள் ஓடியிருந்த "2001 Honda Accord" வாகனத்தை வைத்து ஓட்டிக்கொண்டிருந்தோம். அமெரிக்க மக்களுக்கு, வீட்டிற்கு அடுத்த பெரிய முதலீடு முதலீடு அல்ல அது கடன், வீட்டிற்கு அடுத்த பெரிய கடன் வாங்கல் வாகனத்திற்காகவே இருக்கும். பெரிய தொகை என்பதால், நிறுத்தி, நிதானமாக அடுத்து எந்த வாகனம் வாங்கலாம் என்று, ஒரு மாதம் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. குடும்பத்தில் அனைவருக்கும் எனது "Mahindra Jeep" ஆசை தெரியுமாதலால், "இனிமேல் நாம புதுசா ஏதும் வாங்கப் போவது இல்லை. இப்பொழுது உங்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். எனக்குத்தான், பணக்கணக்கு பலவாறு இடித்தது. மகன் இந்த ஆண்டு கல்லூரிக்கு போகிறான். அதற்கு திட்டமிடுவதற்குமுன், வாகனம் வாங்கவேண்டியதாகிப் போனது. தேவை என்ற அளவில் ஏதோ ஒரு வாகனம் நாலு பேர் உட்கார்ந்து செல்லும் அளவில் அவ்வளவே. ஆனால், எனது ஆசையானது பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது பின்னணியில்.

ருந்த இரண்டு வாகனங்களில் ஒன்று போய்விட்ட நிலையில், வாகனம் வாங்க வேண்டியது தேவை(need). இந்த தேவையுடன், எனது ஆசையை(want) பிற்சேர்க்கையாக சேர்க்காவிடில், நான் என்றுமே எனது "Mahindra Jeep" க‌னவை நிறைவேற்றிக்கொள்ள‌வே முடியாது என்பதை உணர்ந்தே இருந்தேன். அமெரிக்காவில், Jeep Wrangler ல் SPORT, SPORT S, SAHARA, RUBICON & MOAB என்று ஐந்து Trim level (different versions of the same model) உள்ளது. இங்கே உள்ள மூன்று முக்கிய முகவர்களிடமும், எனக்கு தேவையான வண்ணமும், வடிவமும், வேறு சில must have தேவைகள் எல்லாம் சேர்ந்ததுபோல ஒன்றுமே இல்லை. ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. அனைத்து முகவர்களும் அவர்களின் உள்ள இருப்பில்( inventory) உள்ள வாகனத்தை விற்கவே முயல்கிறார்கள் தவிர, என் ஆசைகளை மதிப்பது இல்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு. ஒரு மாதமாக தேடினேன். மஞ்சள் வண்ணம் முதலாவதாகவும், இரண்டாவாதாக பச்சை வண்ணமும் என் விருப்பமாக இருந்தது. ஆனால் மற்ற  must have  தேவைகளுடன் அந்த வண்ணம் கிடைக்கவில்லை நான் தேடிய காலத்தில்.

ன் விருப்ப பட்டியலிலேயே இல்லாத வெள்ளை வண்ணம் எனக்கு சட்டன்று பிடித்துவிட்டது. ஆம் அது தற்செயல். வெள்ளை மற்றும் சின்னச் சின்ன சிகப்பு அடையாளங்களுடன் இருந்த Jeep Wrangler-Rubicon அதன் கம்பீரம் பிடித்துவிட்டது. அதிலும் ஒரு குறை இருந்தது. அனைத்து வடிவங்களிலும் ( SPORT, SPORT S, SAHARA, RUBICON & MOAB) மேற்கூரைக்கு இரண்டுவிதமாக வரும். Hardtop or Soft Top என்று. இரண்டிலுமே நிறைகுறைகள் உண்டு. இதுதான் சிறந்தது என்று இல்லை. ஆனால், எனது தேர்வு Soft Top. அது இந்த வாகனத்தில் இல்லை. Jeep Wrangler ன் சிறப்பு என்பது, அதன் மேற்கூரை, கதவுகள், முன் புறக் கண்ணாடி(windshield) அனைதையும் கழற்றி வைத்துவிட்டு, வெறுமனே கீழ்ப்பகுதியுடன் பயன்படுத்த முடிவதே.

Best off Road vehicle Jeep Wrangler என்பது என் நிலைப்பாடு. இப்படி off road போகும் போது, மேற்கூரையை சுலபமாக நினைத்த நேரத்தில் சுருட்டிவிட ஏதுவானது   Soft Top என்பதால்,  அதுவே எனது விருப்பமாக இருந்தது. "இதற்கு  Soft Top மாற்றிக்கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்" என்றேன் விற்பனையாளரிடம். புதிய வாகனங்கள் எப்படி வந்ததோ, அப்படியே விற்கவே முயல்வார்கள். வேறு சில முகவர்கள் மாற்றிக் கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். நானே மாற்றிக் கொள்ளலாம்தான். நானே மாற்றிக்கொண்டால், தேவையான பொழுது Hardtop ம், தேவையான பொழுது Soft Top ம் மாறி மாறி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கழற்றிய Hardtop ஐ வைக்க இடமும், புதிய Soft Top வாங்க அதிகமாக சிறிது பணமும் தேவை. எனவே, முகவரே, Hardtop ற்கு பதில்  Soft Top மாற்றிக் கொடுத்துவிட்டால் நல்லது என்பதால், முகவரிடம் அந்த கோரிக்கையை வைத்தேன். தனது மேலாளரிடம் பேசிவிட்டு வந்த விற்பனை முகவர், "OK we will do it for you but we won't give the hardtop back" என்றார். சரி என்று ஒத்துக்கொண்டேன். இதோ என் கனவு அதிக கடனுடன் நிறைவேறிவிட்டது.

மெரிக்காவில் "Jeep wave" என்ற ஒரு பண்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை என்பது தெரியும். மற்ற நாடுகளில் இது உள்ளதா என்று தெரியாது. சாலையில் நீங்கள் செல்லும் போது, எதிரே மற்ற ஒரு Jeep Wrangler வாகனத்தை பார்த்தால், அவர்களுக்கு கையசைக்க வேண்டும். இது எப்படி ஆரம்பித்தது என்பதற்கு பல கதைகள் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதிகமாக இராணுவ வீரர்களே இந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்ததால், அவர்களுக்குள் ஆரம்பித்த வழக்க‌ம் என்றும், "இல்லை இல்லை, இது Jeep சிவிலியன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வந்த பழக்கம்" என்றும் பல கதைகள் உண்டு.

Jeep Wave Explained
https://www.youtube.com/watch?v=Pq1iJLQQox8

ல கோடிகள் கொடுத்து, ராக்கெட் வேகத்தில் செல்லும் வாகனத்தை வாங்கினாலும், அத‌ற்கு இல்லாத சிறப்பு Jeep Wrangler க்கு உண்டு. ஆம், தினமும் 5 முதல் 10 பேராவது எனக்கு கையசைப்பதும்(wave) நான் அவர்களுக்கு கையசைப்பதும் நடந்து கொண்டுள்ளது. எந்த அறிமுகமும் இல்லாமல், வினாடியில் கடந்து போகும் ஒருவர் மற்றொருவருக்கு wave செய்து கடப்பது சிறப்பு! மகிழ்ச்சி!

ந்த வாகனம் எனக்கு பல புதிய வழிகளைத் திறந்துள்ளது. கடற்கரையின் அருகில், தண்ணீரில் கால் நனையும் தூரத்தில் கூடாரம் அமைத்து (camping) தங்குவதற்கென்றே சில இடங்கள் உள்ளது. அதற்கான முக்கியத் தேவை 4 wheel drive . Jeep Wrangler அதில் அரக்கன். நடந்து போகும் (hiking)அப்பலாச்சியன் மலைப்பாதைகள் போல, வாகனத்தில் செல்லுவதற்கென்றே சவாலான மலைப்பாதைகள் உண்டு. Rubicon என்பதே புகழ்பெற்ற Rubicon Trail ஐக் குறிப்பது.

The Rubicon Trail Off Road Trail for Jeep Fans
https://www.youtube.com/watch?v=HoWXXcTdDMk


ஆம்  Jeep Wrangler வடிவம், அந்த புகழ்பெற்ற Jeep மலைப்பாதையான Rubicon Trail ஐ குறிக்கும் விதத்தில் வைக்கப்பட்ட பெயர்தான். இந்த மலைப்பாதை பயணத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. என்றாவது ஒருநாள் அந்தப் பாதையில் இதை ஓட்டிவிட வேண்டும்.

Sunday, March 03, 2019

மது குறித்து எனது நிலைப்பாடு விளக்கம்

டலுறவு தவறல்ல. நாம் அனைவரும் product of sexual act என்பது மெய். If you think sex is forbidden or shame, you are a living witness against your own case. உடலுறவு sexual act சமூகத்தில் சில விதிகளால் ஒழுங்கு செய்யப்படுகிறது. தடை செய்யப்படவில்லை. திருமணம் அதில் ஒன்று. It is registered according to law.வாகனங்களால் தினந்தோறும் விபத்துகள் உயிரிழப்பு. அதற்காக அது தடை செய்யப்படுவது இல்லை. அரசாங்கம் அதற்கான விதிகளை, பயிற்சிகளை வைத்து ஓட்டுநர் உரிமம் கொடுக்கிறது. மக்களாகிய நாம் அதை சரியாக பயன்படுத்துகிறோமோ என்பது இந்தியாவின் joke . எந்தவிதமான விதிகளும் மக்களால் கடைபிடிக்கப்படுவதில்லை. கூமுட்டைச் சமுதாயம் இது.

அரசாங்கமே சாராயம் விற்கலாமா என்றால் ஆம் என்பேன்.  அதற்கு உதாரணம்தான் அமெரிக்க ABC Liquor stores. ஒரு காலத்தில், அமெரிக்காவில் மது தடைசெய்யப்பட்ட ஒன்று. Moonshine என்று பட்டை சாராயம் கள்ளத்தனமாக விற்கப்பட்ட காலம் உண்டு. இன்று wine & beer மளிகைக்கடையில் உள்ளது. Marijuana இன்று பல மாநிலங்களலில் சட்டபூர்வமாக மாறிவருகிறது.அதே சமயம் Alcohol / Spirits (Whiskey வகையறா) அரசாங்கம் நடத்தும் கடைகளில் மட்டுமே கிடைக்கும்.  Alcoholic Beverage Control (ABC) the specialty liquor stores are owned and operated exclusively by the state government

அமெரிக்கா செய்கிறது என்பதற்காக, இந்தியாவில்/தமிழ்நாட்டில் செய்யலாமா கூடாதா என்பதற்குள் போகுமுன், அமெரிக்கா போல சட்டமும், அதைப் பின்பற்றும் Civic sense ம் இந்தியர்களிடம் உள்ளதா? என்பது ஆராய்ப்பட வேண்டும். அமெரிக்கா மது அருந்துவதற்கு அதிக கட்டுப்பாடுகளை வைப்பது மட்டுமில்லாமல், அதை implement செய்கிறது. குறிப்பிட்ட அளவிற்குமேல் நான் ஒரு பாரில் மது அருந்தி, வாகன விபத்தில் மாட்டிக் கொண்டால், எனக்கு மது விற்ற அந்தக் கடை ஊழியர் கம்பி எண்ண வேண்டும். ஆம் குடிப்பவனைவிட விற்பவன் ஊற்றிக் கொடுப்பவனை liable ஆக்குகிறது சட்டம். அமெரிக்க உணவகங்களில் உங்கள் மேசையில் பீர் வைக்கும் ஒருவர், நீங்கள் எவ்வளவு குடிக்கலாம் என்பதை தீர்மானிக்க அவருக்கு சட்டம் உரிமையை வழங்கியுள்ளது. தவறினால் அவர்களை சட்டம் தண்டிக்கும்.

"DRAM SHOP" CIVIL LIABILITY AND CRIMINAL PENALTY STATE STATUTES
http://www.ncsl.org/research/financial-services-and-commerce/dram-shop-liability-state-statutes.aspx

//An aggrieved party has a claim for relief for damages against a permittee or local Alcoholic Beverage Control Board if:
(1) The permittee or his agent or employee or the local board or its agent or employee negligently sold or furnished an alcoholic beverage to an underage person;//

மது விற்கும் கடைச் சிப்பந்தியை சட்டம் கடுமையான பயிற்சிக்கும் liability க்கும் உள்ளாக்குகிறது. குடிப்பவன் மறை கழன்றுவிடும் என்பதால், ஊற்றுபவனை LIABILITY ஆக்குகிறது சட்டம் அமபேரிக்காவில். நான் எனது மாநிலத்தின் லைசன்சு பெற்றவன். அதாவது நான் மது serve செய்யலாம் கடைகளில். இதற்கு தேர்வு உள்ளது. 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஒரு underage (less than 21 yrs) பையன்/பெண்ணிற்கு நான் பீர் serve செய்தால் நான் தான் கம்பி எண்ண வேண்டும். சட்டம் அப்படி.

அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், அப்பா அம்மா என்று குடும்பத்துடன் ஒரு எளிமையான பழக்கமாக அதற்கான வயதில் சேர்ந்தே மது அருந்துகிறார்கள் அமெரிக்காவில். (மேலை நாடுகளில் பொதுவாக) .கார் ஓட்ட வயசு, ஓட்டுப்போட வயசு , திருமண வயசு போல , இதற்கும் ஒரு மினிமம் வயது சட்டப்படி. இந்தியா / தமிழகத்தில், மது ஒரு சோசியல் குற்றமாகவே பார்க்கப்படுவதால், சந்தில் குடித்து  சண்டை, வளர்த்து, தவறான பாதையிலேயே பழக்கப்படுகிறது. do we have a healthy way of learning how to drink with dignity

மது தவறல்ல. அது குடிக்கப் பழகமால், அதற்கான விதிகள் ஏதும் இல்லாமல் அல்லது கடைபிடிக்கப்படாமல் "சந்துக்குள் நடக்கும்" கெட்ட பழக்கமாக பார்க்கப்டுவதே முதல் தவறு. மேலும் இதை ஆண்களுக்கான பழக்கமாகவும், ஆண்கள் மட்டுமே குடிக்கலாம் போலவும் ஆக்கி, வெளியில் அவர்களை "வீட்ல குடிக்காதா வெளியே என்ன வேணுமினாலும் பண்ணிக்கோ" அன்று வீடு சுத்தம் காக்கும் மன நிலையே உள்ளது. இதற்காக தெருவில் குடித்துக் கொண்டு வாகனத்தை ஓட்டிவரும் pathetic பண்பாடாக ஆக்கியுள்ளார்கள்.

அதிகம் சாப்பிட்டு Obesity ஒரு நோயாக, அதிகம் சக்கரை Diabetes ஒரு நோயாக உள்ளது. இதற்காக யாரும் sugar சாப்பிடவேகூடாது என்று சொல்வதும், ரேசன் கடையில் சீனி விறபதையும் தடுக்கமுடியாது. இதை சட்டத்தால் மாற்றமுடியாது. அதுபோல மதுவும், அதன் விற்பனையும். Hypocrisy இந்திய /தமிழக பண்பாட்டில், மது குறித்த இயல்பான புரிதலும், அது தவறல்ல என்பதும், அதை வகைப்படுத்தும் சட்டங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்தை கடைபிடிக்கும் பண்புமே தேவை. மதுவை தடை செய்வதோ அரசு விற்கலாமா என்ற வாக்குவாதங்கள் அல்ல. கட்டுப்பாடு எனபதைவிட வழிகாட்டும் விதிகள், அப்படியான விதிகளை கடைபிடிக்கும் civic தன்மைதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும். My kid's teacher is drinking alcohol/beer that doesn't mean she is a bad person. It is just a food habit nothing more. 

ஒழுக்கம்:
ஒழுக்கம் என்பது ஒழுகுவது. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட பழக்கங்களை கடைபிடிப்பது. எது ஒழுக்கம்? எதை ஒழுகுவது ? என்பது இடம்,பொருள்,காலம் என்று பல காரணிகளால் கடைபிடிக்கப்படுவது. இதுதான் ஒழுக்கம் என்று உலகம் முழுக்க பொருந்தக்கூடிய எந்த விதியும் இல்லை. மேலும் அது தலைமுறை தலைமுறைக்கு மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.
 
மது அருந்துவது.
மது என்பது எது? என்பது தொடங்கி எந்த அளவிற்கு அருந்தலாம்? என்பது போன்றவை மண்டபம் போட்டு பேசக்கூடிய விசயங்கள். மேலும் அவை வாழும் இடத்தில் உள்ள அரசு அமைப்புகளால் தீர்மானிக்கப்படுபவை. குவைத்தில் ஃபாகில் பாண்டியன் அண்ணாச்சி மெஃசில் இருந்தால் அதிகாரபூர்வ மது தடை. அதே சமயம் ஐரோப்பிய குடியுரிமையுடன் , சகல மரியாதையுடன் வாழும் மிட்டா மிராசு மேன்மக்களுக்கு,  இந்த தடைஎல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

கள்ளுண்ணாமை ப‌ற்றி வள்ளுவர் சொன்னார் என்று சொல்லி கம்பு சுற்ற வேண்டாம். பெய்யனப் பெய்யும் மழை என்றுகூடத்தான் தாடித்தாத்தா சொன்னார். அப்படி மழை பெய்யவில்லை என்றால்?

அதே தாடித்தாத்தா "சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும் இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா, வெறி கொண்ட ஆண் யானையின் முகம் மீது இட்ட பட்டாடை போலக் காட்சி தருகிறது" .என்றுகூட கலக்கி எடுத்திருப்பார் . 

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.

அவர் சொன்னார் என்பதற்காக, "குன்றென இருக்கும் உன் முலைமீது படர்ந்திருக்கும் சேலை அழகு" என்று தோழிகளிடம் சொல்லி, வாங்கிக்கட்டிக் கொள்ள முடியுமா என்ன? மென்று முழுங்கிவிட்டு, "you have beautiful eyes" என்று மொக்கையாக எதையாவது சொல்லிவைக்கத்தான் முடியும். அதாவது எதற்கெடுத்தாலும் பழைய காலங்களில் இருந்து சாதகமான உதாரணங்களை மட்டும் சொல்லித் திரிய வேண்டாம் அவ்வளவுதான். Back to the point...

நான் சொல்வதற்காக அல்லது அமெரிக்காவில் உள்ளது என்பதற்காக எதையும் செய்ய வேண்டாம் drink responsibly.

பழைய புலம்பல்கள்
மது, புகை , டேட்டிங் அம்பேரிக்கா டம்ளர் கலாச்சார மொக்கை
http://kalvetu.blogspot.com/2013/06/blog-post.html

மெய்நிகர் உலகம் பொய்யில் வாழும் நான்
‏http://kalvetu.blogspot.com/2013/12/blog-post.html

Saturday, March 02, 2019

A Celebration of Life : A Memorial Service

வர்களின் கதைகளும் நம்முடையது போலவேதான். பதின்ம வயதில் தந்தையை இழந்தவர், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் அவருக்கு. தன் அம்மா மற்றும் குடும்பத்தை தாங்கும் பொறுப்பு அவருக்கு சின்ன வயதிலேயே வந்துவிட்டது. 1935 ல் வெர்சினியா மாநிலத்தில் பிறந்தவர், 1962 ல் வடக்கு கெரொலைனா மாநிலத்தில் ஒரு சின்ன ஊருக்கு வேலை காரணமாக வந்தார். வந்த இடமே சொந்த இடமாகி, மூன்று பையன்கள், மனைவியுடன் வாழ்ந்து 83 வயதில், இறந்துவிட்டார்.

அழகான குடும்பம். மூன்றும் மகன்கள் அவருக்கு. மூத்த மருகமகள், குடும்பத்தினர் சார்பாக, பேசினார். ஆம் அவர் மட்டுமே மொத்தக் குடும்பத்தின் சார்பாக மேடையேறி பேசினார். மகன்களுடன் வாழ்ந்த ,தனது father-in-law, வீட்டுக்கு வந்த மருமகள்களிடம், கனிவாக இருந்ததையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததையும் சொன்னார். He didn't know what to do with three girls. He was used to live with three boys as a king" என்று சொல்லி அவரின் முதல் Thanksgiving Dinner  சவால்களை நகைச்சுவையாக சொன்னார். பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் மொத்தக் குடும்பத்தின் சார்பாக. தனது மாமியார் சார்பாகவும் அவரே பேசினார்

ல வருடங்களுக்குப் பிறகு இன்று , இப்படி ஒரு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இறந்தவரின் நண்பர் ஒருவர், நண்பர்கள் சார்பாக பேசினார். நண்பர்களுக்குள் நடந்த சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.

American White குடும்பம். கிறித்துவத்தை practice செய்பவர்கள். இயேசு யூதர் என்பதற்காக, ஃகீப்ருவில் யாரும் மந்திரங்களைச் சொல்லவில்லை. சடங்கு என்றளவில் சில பைபிள் வரிகளை மேற்கோள்காட்டி பாதிரியார் சிறிது நேரம் பேசியது மட்டுமே. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, இறந்தவரின் நினைவுகூறலாக பலவற்றை எளிய ஆங்கிலத்தில்தான் அனைவரும் பேசினார்கள்.

ந்த பேச்சுகள் முடிந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரும் ஒரு அறையில் வரிசையாக நின்று கொண்டனர். நண்பர்கள் உறவினர்கள் ஒவ்வொரிடமுமாக சென்று ஆறுதல் சொன்னோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னையும் சேர்த்து நான்கு பேர்.  அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், கைகொடுத்து, தோள் தட்டி,அணைத்து ஆறுதல் சொன்னோம்.

றந்தவரின் மனைவியிடம் (80 வயது இருக்கலாம்) பேசி , அவரின் மகனுடன் நான் வேலை பார்ப்பதைச் சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியாக என்னை அணைத்தவர் "நான் என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. எனக்கு திருமணமானால் அதிக பிள்ளைகளைப் பெறுவேன் என்று சொல்லி, மூன்று குழந்தைகளைப் பெற்றேன்" என்றார். "Big family is good" என்றார்.

உண்மைதான், மூன்று மகன்கள் அவர்களின் மனைவிமார்கள், பேரக்குழந்தைகள் ,அவர்களின் spouse என்று நிறைந்து இருந்தது அந்த அறை. பெரும்பாலான பெண்கள் , அறிமுகமாயிருக்கா விட்டாலும், 'I want to give you a hug. Thanks for coming " என்று அறிமுகம் இல்லாத என்னை அணைத்து, you too belong here with our relatives and friends என்பதைச் செய்கையில் சொன்னார்கள்.

சின்ன வயதில் வாரமலர் வழியாக அறிந்த ஃபிகினி அமெரிக்கா வேறு. இன்று இந்த 20 வருட அமெரிக்க வாழ்க்கையில், நான் காண்பது வேறு. இவர்களின் குடும்பங்கள் நம் விக்ரமன் திரைப்பட குடும்பத்தைவிட சிறப்பாகவே மெய் வாழ்க்கையில் இருக்கிறது.

Friday, March 01, 2019

அன்று அவனும் போயிருப்பான்:நின்றுவிட்ட கார்

வாகனக் காப்பீட்டு சார்பாக வந்தவர், வாகனத்தைப் பார்த்த உடன், "I have a bad news. Sorry,this is total loss" என்று சொல்லிவிட்டார். 11 வருடங்களாக உழைத்த கார் அது. வீடு வாங்கும்போது , கடனுக்காக‌ கொடுக்க வேண்டிய முன் பணத் தேவைக்காக  (down payment)  இதன் பேரில்  (collateral loan) பணக்கடன் வாங்கி இருந்தேன். எல்லாம் போக, கைக்கு 2000 டாலர் வந்தது. 

கால் இல்லாமல் கூட வாழலாம் இங்கே , ஆனால் கார் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன், அதிலும் பதின்மவயது, மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுடன் வாழ்வது சிக்கலானது.
**
அன்றும் வழக்கம் போல விடிந்தது. Civil calendar படியான புதுவருடம் 2019 பிறந்து, ஐந்தாவது நாள். கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்திருந்தது. இந்த ஆண்டு செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட, அருகில் உள்ள ஊரின் காஃபிக் கடையில் தனியாக அமர்ந்து இருந்தேன். டிசம்பர் மாதம் நடந்த ஒரு வாகன விபத்திற்கான காப்பீட்டுத் தொகை ஆவணங்களை, தயாரித்து அனுப்புவது, அன்றைய முதல் நோக்கமாக இருந்தது எனக்கு. 

எங்கள் ஊரில் நடந்த ஒரு பனிப்பொழிவின்போது, வழுக்கலாக இருந்த தரையில், Minivan ஐ வீட்டினுள் நிறுத்தும் போது, பக்கவாட்டுச் சுவரில் உராய்ந்து, வீட்டின் சுவறும், காரின் முன்பக்கமும் சேதமடைந்து விட்டது. வீட்டிற்கான வேலையை நானே பார்த்துவிடுவேன். காருக்கு 2000 $ வரை ஆகலாம். எனவே காப்பீட்டுத் தொகைக்காக ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். 
**


அந்தக் கடையில், "French Press Coffee சிறப்பாக இருக்கும்" என்று அந்தக்கடை பணியாளர் சொன்னதன் பேரில், அதை வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். முதல் அழுத்தத்தில் (Press ) வந்த‌ காஃபியை சுவைத்து முடித்த நேரத்தில், மனைவியிடம் இருந்து செல்பேசி அழைப்பு. "தம்பி கார் ஆக்சிடென்ட் ஆயிருச்சு. நீங்க எங்க இருக்கீங்க? உடனே போங்க" என்றார் பதட்டத்துடன்.

நரம்புகள் எல்லாம் அறுந்து உணர்வற்றவனாய் இருந்தேன் சில நொடிகள்.

காப்பீடு தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்த நான், அப்படியே கணினியை மூடிவிட்டு, மனைவியை அழைத்து, சில விவரங்களைக் கேட்டுகொண்டு, கடையில் இருந்து கிளம்பினேன். விபத்தின் தன்மை தெரியவில்லை. நான் இருந்த காஃபி கடையில் இருந்து, விபத்து நடந்த இடம் செல்ல, 10 ‍முதல் 15 நிமிடங்கள் ஆகும். போகும் வழியெல்லாம் பல கவலைகள்.
**
அமெரிக்காவில், மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியின் வழியாக‌, சில வகுப்புகளை நடத்தி, ( Driving Eligibility Certificate and a Driver's Education Certificate course) சில கட்டுப்பாடுகளுடன், ஓட்டுநர் உரிமம் கொடுப்பார்கள்.குறைந்தபட்ச வயது 15. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். 

Level 1: Limited learner permit Supervised operation of a Class C vehicle
பள்ளியின் வழியாக மேற்சொன்ன வகுப்புகளை முடித்துவிட்டால், 15 வயதில் கொடுக்கப்படும் இந்த‌ Level 1 உரிமத்துடன் மாணவர்கள்,  5:00 AM  முதல் 9:00 PM வரை மட்டுமே ஓட்ட முடியும். அதுவும் Adult ஒருவர் உடன் இருக்க வேண்டும். செல்பேசி பயன்படுத்தக்கூடாது. 

இப்படி ஓட்டி, 16 வயதில் சாலையில் ஓட்டிக்காட்டி தேறினால் ( road test) அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Level 2: Limited provisional license
(Unsupervised driving from 5 a.m. to 9 p.m. and to/from work or any volunteer fire, rescue or emergency medical service)

இந்தக்கால கட்டத்திலும், வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு செல்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. இப்படி குறைந்தது ஆறு மாதம் வாகனம் ஓட்டி, அந்தக் கால கட்டத்தில் எந்த வாகன விதி மீறல்களிலும் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

Level 3: Full provisional license. Unsupervised driving at any time
இந்தக் கால கட்டத்திலும், வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு செல்பேசி பயன்படுத்த அனுமதி இல்லை. இப்படி கடுமையான சட்டங்கள், விதிமுறைகள் உள்ளது. பள்ளியே இலவசமாக பயிற்சியும் கொடுக்கிறது அனைவருக்கும்.
**
மகன் இப்போது Level 3 நிலையில் உள்ளான். தனியாக செல்ல சட்டப்படி அனுமதியும் , எங்களின் அனுமதியும் உண்டு. 11 ஆம் வகுப்பில் இருந்து பகுதி நேர நீச்சல் பயிற்சியாளராகவும் வேலை செய்வதால், அவன் வேலைக்குச் செல்லவும் வாகனம்  தேவை. அன்று நண்பன் ஒருவனுடன் வந்தவன், இரண்டு சாலை சந்திப்பில், இடப்புறச் சாலைக்கு செல்ல எத்தனிக்கும் போது, நேராக வந்த ஒரு வாகனம் மோதிவிட்டது. என்ன நடந்தது என்று சிந்திப்பதற்குள், புகை மண்டலமாகி கார் நின்று விட்டது. 


**
மகளுக்கான இசைக்குழு மெதுவாகவே செல்கிறது. மகனைப் போல மகளிடம் அவ்வளவு ஆர்வம் இல்லை. இருந்தாலும், வாய்ப்பை வழங்க வேண்டியது நம் கடமை என்பதால், சின்ன குழுவை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்த முறை இன்னொரு நண்பரை  முன்னெடுக்கச் சொல்லி உள்ளோம். நான் பின்னிருந்து உதவுவதாக ஏற்பாடு. விபத்து நடந்த பொழுது அவர்களின் பயிற்சி வீட்டில் நடந்து கொன்டு இருந்தது. அவரும், என மனைவி மற்றும் மகளும் வீட்டில் இருந்து விபத்து நடந்த இடத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
**

கார் பலத்த சேதமடைந்து இருந்தது. மகனுக்கும், அவன் நண்பனுக்கும் எந்த சேதமும் இல்லை வெளிப்புறத்தில். இது போன்ற விபத்துகளில், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து , சில அறிகுறிகள் தெரியலாம். ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் ஒருமுறையும், இன்னொரு வாகன விபத்திலும் (என் மனைவி ஓட்டிய போது) ஒருமுறையும், என்று இதுவரை இரண்டு concussion (an injury to the brain that results in temporary loss of normal brain function) எற்பட்டுவிட்டிருந்தது.

இரண்டாவது முறை வந்தபோது, 11 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுத முடியாமல், அவனுக்காக சிறப்பு சலுகைகளை பள்ளி வழங்கியது. தொடர்ந்து மூன்று மாத சிகிச்சைக்குப்பிறகு நன்றாக இருந்தவன், இதோ இன்று மிகப்பெரிய விபத்தில், பிழைத்து நிற்கிறான்.

சிறிது நேரம் அவனையே பார்த்துகொண்டிருந்தேன். அவனோ, எதுவும் நடவாத மாதிரி, அவன் நண்பர்களுக்கு செய்தி சொல்லிக் கொண்டு இருந்தான்.

**

அவசர உதவிக்கு வந்த காவலர் சென்ற பிறகு, சேதமுற்ற வாகனத்தை மெதுவாக உருட்டி அருகில் உள்ள ஒரு அடுக்ககத்தின் அருகே நிறுத்திவிட்டு, மனைவி குழைந்தைகளை வீட்டுக்கு அனுப்பினேன். உடைந்து நொறுங்கிப்போன‌ காரை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல AAA towing service ஐ அழைத்துவிட்டு காத்திருந்தேன் அந்த இரவில். ஆம் விபத்து நடந்த நேரம் இரவு 8 மணி இருக்கும். அது சார்ந்த வேலைகளை முடிக்க நேரம் ஆகிவிட்டது. அனைவரையும் அனுப்பிவிட்டு தனியே நின்று இருந்தேன். நின்றுவிட்ட காருடன். தோழன் போன்ற வாகனம் இது எனக்கு. சோ வென்று மழை பெய்தால் தேவலை என்று தோன்றியது அப்போது. 

**
என் நண்பர் ஒருவரின் மகனும், என் மகனும் ஒரே வகுப்பு , ஒரே வயது , ஒன்றாக வளர்ந்தவர்கள். என் மகன் விபத்து நடந்த இடத்தில் இருந்து, அவனது நண்பனுக்கு செய்தி அனுப்பி இருந்திருக்கிறான். அதைப் பார்த்து, எனக்கு உதவுவதற்காக, அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது, அவசரத்தில் அவர் காரை அவர் வீட்டின் garage door ல் மோதி, கார் கதவு உடைந்து போனது. அந்த உடைந்த கதவுடன் எனக்கு உதவுவதற்காக அவர் வந்தார். 

அவரின் கதை கேட்டு நான் குற்றவுணர்வாய் உணர்ந்தேன்.
**


ஒரு வாரங்கள் ஓடியது காப்பீடு தொடர்பான பஞ்சாயத்துகளில். என் மகனுக்கும், அவனுடன் வந்த அவன் நண்பனுக்கும் எந்தவிதமான உள்காயங்களின் வலிகள் தெரியவில்லை. விபத்து குறித்து வாகனக் காப்பீடு நிறுவனத்தில் முறையிட்டுவிட்டு அடுத்து என்ன செய்வது என்று மருண்டு கொண்டு இருந்தேன். 

இரணடு வாகனங்களில், ஒன்று முன்புறம் உடைந்து ஓடிக்கொண்டுள்ளது. மற்ற ஒன்று இதோ நொறுங்கிவிட்டது.

பிள்ளைகளை அழைத்து, "அப்பா அம்மா இருக்கும்போது பிள்ளைகள் சாவது என்பது, உலகத்தில் நடக்கும் கொடுமைகளில் பெரிய கொடுமை. தயவு செய்து கவனமாக இருங்கள். வீடு, பொருள், பணம் குறித்தான கவலைகள் எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் இறந்துவிட்டாலோ அல்லது பெரிய அளவில் அடிபட்டு, நிரந்தரமாக படுத்த படுக்கையாகிவிட்டாலோ, அது போன்ற துன்பம் பெற்றோருக்கு கிடையாது. பெற்றோர்களுக்கு மிகுந்த வலியைக் கொடுக்கக்கூடியது அது . கவனமாக இருங்கள். வாழ்வதற்கு பிழைத்திருப்பதும் அவசியம்" என்று சொன்னேன்.
**

இதோ, எனது பயணங்களில் என் உடன் வந்த, என் குடும்பத்தைச் சுமந்த, என் மகனின் முதல் வாகனமாக இருந்த இந்த 2009 Camry அதன் வாழ்வை முடித்துக்கொண்டு , இறுதிப் பயணத்திற்கு தயாராகிவிட்டது. 

அன்று நடந்த விபத்தில், சில கோணங்கள் மாறியிருந்தால், என் மகனையும் இப்படி அனுப்பி வைத்துவிட்டு, மனங்கலங்கி நான் நின்றிருக்கக்கூடும் நான். நல்ல வேளை அவன் இருக்கிறான்.
**


இதற்கிடையில் நானும் அந்த நண்பரும் மேலும் இரண்டு வாகன விபத்துகளில் இருந்து மயிரிழையில் தப்பினோம். சாலை சந்திப்பில், எங்களின் பாதைக்கான போக்குவரத்து விளக்கு எரிவதற்கு காத்திருக்கும் போது, நின்று கொண்டிருந்த எங்கள் வாகனத்திற்கு முன் நடந்த ஒரு பெரிய விபத்தில், உருண்ட கார் ஒன்று, எங்கள் காரை மோதும் அள‌விற்கு வந்து, நின்று புகை கக்கி பாதி எரிந்து நின்றது. துடுக்குற்று, நாங்கள் நிதானத்திற்கு வருவதற்குள், சுற்றி இருந்த பிற வாகனங்களில் இருந்து பலர் இறங்கி வந்துவிட்டனர். 

அனைவரும் நலம்.

**
நவம்பரில் நான் அப்பலாச்சியன் மலையில் இருந்த போது என் அலுவலக மேலாளரின்( White) மகள் (முதுகலை மாணவி) இறந்துவிட்டாள். சென்ற‌ வாரம் அவரின் தந்தை இறந்துவிட்டார். இதோ நாளை சனிக்கிழமை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறேன் பக்கத்து ஊருக்கு.


நாளை என்பது வெறும் கனவு.
**

விட்டுப்போய்விட்ட காரின் பழைய நினைவுகள்


எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்
http://kalvetu.blogspot.com/2018/07/blog-post.html

கார், கதவு & Curve: கதவிற்குப் பின்னால் கவலை -1
http://kalvetu.blogspot.com/2018/05/curve-1.html

கார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்
http://kalvetu.blogspot.com/2018/05/curve.html