Thursday, October 24, 2019

தீபாவளி 2.0: சூர்ப்பனதேவியின் பேரழகு -1

மிரண்டுபோய் ஓடிவந்து, கட்டிலில் இன்னும் உறக்கம் கலையாமல் படுத்திருந்த த‌ன் தாயை அணைத்தபடி ஒட்டிக்கொண்டாள் இளவரசி பூங்கோதை. பூங்கோதைக்கு 13 வயது ஆகிறது. அதிகாலையில் எதற்கோ வெளியில் சென்றவள் இப்படி ஓடோடி வந்துவிட்டாள்.தன்னை அணைத்த மகளின் கையை இழுத்து அணைத்தபடி, மறுபுறம் கணவனைத் தேடிய சூர்ப்பனதேவி, கணவன் படுக்கையில் இல்லாததைக் கண்டு சட்டென எழுந்துவிட்டாள்.

அழகுக்கு இலக்கணமானவள் சூர்ப்பனதேவி. இடையை விட்டு விலகி, காலோடு பின்னிக்கிடந்த ஆடை மேல்நோக்கிப் பார்த்து, வெட்கத்தால் தரையில் முற்றிலுமாய் விழுந்து த‌ன்முகம் மூடியது. தூக்கத்தில் தளர்வாய் இருந்த மார்புக்கச்சை, மெல்லிய சூரிய ஒளியில் மினுமினுக்கும் அவளின் முலையழகில் மேலும் நாணித் தளர்வாய் இறங்கியது. அவள் எழுந்துகொண்டதை அறிந்த  அதிகாலைச் சூரியன், மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டது.

கலைந்த கூந்தலை சரிசெய்து கொண்டும், பொங்கித் தெறிக்கும் பேரழகை ஆடைக்குள் அணிந்து கொண்டும், படுக்கையறையைவிட்டு மெதுவாக வெளிவந்தாள். மகள் காலையில் எங்கு போனாள்? ஏன் பயந்து வந்தாள்? எங்கே தன் கணவன் நரகாசுரன்? என‌ பல கேள்விக‌ள் அவளுக்குள் ஓடின. உறங்குவது போல நடிக்கும் மகள் பூங்கோதையின் தலைவாரி, அவளை மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள். மெல்ல அவளை எழுப்பி, என்ன நடந்தது? எங்கே சென்றாய்? என வினவினாள். தன் கண்களைத் திறக்காமலேயே, முனகிக்கொண்டே பதில் கொடுத்தாள் பூங்கோதை. அரைகுறையாய் தன் மகள் விவரித்த காட்சிகள் சூர்ப்பனாதேவியை அதிர்ச்சியடையைச் செய்தது.

சட்டென மகளை படுக்கையில் கிடத்திவிட்டு, அந்தப்புரத் தோட்டம் நோக்கி ஓடினாள். அவள் ஓடும்போது அவளுக்கு முன் குதித்து ஓடின , அங்கிருந்த மான்களும், மானுடன் போட்டி போட்டபடியே அவள் மார்பு சுமந்த‌ முலைகளும். சின்னக் குளத்தில் மெதுநடை போட்டுக்கொண்டிருந்த அன்னப்பறவைகள், இவளின் அழகால் வெட்கி, தண்ணீருக்குள் தலையை வைப்பதுபோல நடித்தன. தோட்டம் கடந்து, வீணைக் கால்களுடன் வீதியைத் தொடும் நேரத்தில், சட்டென ஒன்று தரையில் இருந்து விண்வெளியை நோக்கிப் போவது போல இருந்தது. அது என்னவென்று சரியாக ஊகிப்பதற்குள், அது இவளின் கண்களில் இருந்து மறைந்துவிட்டது.
**

டுஇரவில் தன்னை அழைக்க வந்திருந்த அரண்மனை தலைமைக் காவலர் முனியாண்டியை,  ஆச்சர்யத்தோடு வரவேற்றார் அமைச்சர் அய்யனார். முக்கியமான செய்திகள் இருந்தால்தவிர, தலைமைக்காவலர் வரமாட்டார். அதுவும் இரவில்.  வெறுமனே செய்தி சொல்லிச்செல்ல‌, தலைமைக்காவலர் இதுவரை வந்தது இல்லை. முனியாண்டி வந்தால் அது முக்கியமான செய்திகாவே இருக்கும் என்பதை அறிந்த அமைச்சர் அய்யனார், உடனே புறப்பட்டார். இருவரும் அரண்மனையை நோக்கி விரைந்தார்கள். அரண்மனையை நெருங்கும்போது, வான்வெளியில் சில புதிய நட்சத்திரங்கள் போன்ற எதுவோ தோன்றி மறைந்தபடியே இருந்தது. மன்னர் எதற்கு அழைத்திருப்பார்? என்று எண்ணியபடியே சென்ற அமைச்சர் அய்யனார் இதை கவனித்தாலும் அதிக சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், குதிரையைச் செலுத்துவதிலேயே கவனமாய் இருந்தார்.

அமைச்சரை எதிர்நோக்கி அரசர் நரகாசுரன் கோட்டை வாயிலுக்கே வந்துவிட்டார். அரசர் காத்து இருப்பதை தூரத்திலேயே சன்னமான விளக்கொளியிலும் பார்த்துவிட்ட அமைச்சர், தன் குதிரையில் இருந்து, இறங்கி ஓடோடி வந்தார். அய்யனார் அமைச்சர் என்றாலும், போர்க்கலையில் வல்லவர். தளபதி மாடனுடன் சரிக்குச்சமமாக மல்யுத்தம் செய்வதில் வல்லவர் அய்யனார். மதி நுட்பமும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்றவர்.

அய்யனாரைத் தழுவி வரவேற்ற அரசர் அவரை அங்கிருந்த மர நாற்காலி ஒன்றில் அமரச் சொன்னார். அப்போது அங்கே தலைமைக் காவலர் முனியாண்டியும் வந்துவிட்டார் . அவரையும் அமரச் செய்துவிட்டு, அன்று இரவில் தான் கண்ட காட்சியை விவரித்தார் மன்னர்.
**

ழக்கம்போல அன்று இரவும், உப்பரிக்கையில் நின்றுகொண்டு ,நட்சத்திரங்களை வெறித்தபடி சிந்தனையில் இருந்தார் அரசர் நரகாசுரன். நேற்று தன் மைத்துனன் இராவணனிடம் இருந்து வந்த செய்தி அவரை கவலையில் ஆழ்த்தி இருந்தது. மைத்துனன் என்றாலும், இராவணனார் இவருக்கு நல்ல நண்பராகவே இருந்தார். நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

இராவணனார் இலங்கை மன்னர். சிறப்பான நிர்வாகி. அவரின் ஆட்சியில் மக்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். வருடம் ஒருமுறை அவர் தன் தங்கை சூர்ப்பனதேவியைப் பார்க்கவும், மருமகள் பூங்கோதையைப் பார்க்கவும்,  திராவிட நாட்டிற்கு தவறாமல் வந்துவிடுவார். திராவிடநாட்டையும் இலங்கையையும் கடல் பிரித்தாலும், இராவணனார் தன் தங்கை சூர்ப்பனதேவிமீது கொண்டிருந்த பாசத்தை எதுவும் பிரிக்கமுடியவில்லை.

கணவனின் கொடுமை தாங்காமல், திராவிட நாட்டுக் கடல் பகுதியில் குதித்து, இலங்கை கடற்கரைபக்கம் பாதி உயிருடன்  ஒதுங்கிய ஆரியப்பெண்னொருத்தி, ஊர் திரும்ப மறுத்து , இலங்கையிலேயே இருக்கவேண்டும் என உண்ணாமல் அடம்பிடிப்பதையும், அதனால் தன் அரசுக்கு வரும் தேவையற்ற சிக்கல்களையும் விளக்கி, இராவணனார் தன் மாமன் நரகாசுரனாருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அது குறித்தான சிந்தனையில், இருந்தபோதுதான், விண்வெளியில் இருந்து கலன் போல ஒன்று  பறந்து வந்து , அந்தப்புர தோட்டத்தில் இறங்கியது.

காவலர்கள் கண்ணயர்ந்து இருப்பார்கள் போல யாரும் கவனித்ததாக தெரியவில்லை. மன்னர் நரகாசுரனார், கீழிறங்கி வருவதற்குள் அது மறுபடியும் பறந்துவிட்டது அல்லது மறைந்துவிட்டது. அதே நேரத்தில்,விண்வெளியில் வேறு சில மர்மமான நிகழ்வுகள் நடப்பதுபோலவும் தோன்றியது மன்னருக்கு. தோட்டம் தாண்டி வெளியில் வந்த மன்னர், வீதியில் மாடுகளை ஓட்டிக்கொண்டுபோன சில வித்தியாசமான மனிதர்களைப் பார்த்தார். சட்டை போடாத, தலையில் முடியை வழித்து குடுமி வைத்த அப்படியான மனிதர்கள் அவர் நாட்டில் இல்லை அவர் எங்கும் பார்த்ததும் இல்லை. அவர்களை சிறிதுதூரம் பின் தொடர்ந்து, அவர்களின் இருப்பிடத‌தை அறிந்துகொண்ட மன்னர், சிந்தித்துக்கொண்டே அரண்மனை திரும்பி தலைமைக்காவலர் முனியாண்டியை அழைத்துவரச் சொன்னார்.


தொடரும்*****

Wednesday, October 23, 2019

சொந்தக்காரங்களே மோசம்:நீயும் பிறருக்கு சொந்தம்தானே?

"ஏன்டா நீ அண்ணனுக்கு உதவலாமே? கவனிக்கிறதே இல்லைன்னு வருத்தப்படுறான்" என்று ஆரம்பித்தார் என் அண்ணனின் பள்ளித்தோழர். அண்ணன் வழியாக அவருக்கு வந்த செய்திகளின்படி அவருக்கு நான் கெட்டவன் . அல்லது, என் அண்ணனின் "சொந்தக்காரங்களே மோசம்" என்ற புலம்பலில், அந்த மோசமானவன் நான்.

ஊருக்குப்போனால், அங்கு என் நண்பர்களிடம், என் அப்பாவின் நண்பர்களிடம் நான் பேசுவேன். இவர்கள் எனக்கான வட்டம். இங்கே அவர்களின் பேச்சில் "சொந்தக்காரர்களே மோசம்" என்ற வரியின் "மோசம்" என் அண்ணனைச் சுட்டும்.

நண்பர்களுக்குள்ளும் இது பொருந்தும். "யாரையும் நம்பவே கூடாது. பழக்கவழக்கம் சரியில்லை" என்று ஒருவர் ஒரு இடத்தில் புலம்பினால், இவரைப்பற்றி இன்னொருவர், இதே வரிகளை வேறு ஒரு இடத்தில் சொல்லிக் கொண்டிருப்பார்.

நல்லது கெட்டது, நல்லவன் கெட்டவன், சரி தவறு என்பது absolute value அல்ல. அது ஒரு ஒப்பீட்டு அளவு (relative term). பிறர் சரியில்லை, உறவுகள் சரியில்லை,நண்பர்கள் சரியில்லை என்று புலம்புவது வீண்வேலை. அவர்கள் அளவீட்டில் நீங்களும் சரியில்லாதவரே.

உங்களைப் பிடிக்காதவர்கள் உண்டு. உங்களைப் போலவே அவர்களும், அவர்களின் நட்பு வட்டத்தில் "யாரையும் நம்பக்கூடாது. இன்று எனக்கு புரிந்தது" என்று எழுதி வைத்தால், அதை ஆமோதிக்க ஐந்துபேர் இருப்பார்கள்.

நல்லவன் கெட்டவன் யோக்கியன் மோசமானவன் என்பது , யாரின் பார்வையில் எந்த குழுவில் என்பதைப் பொறுத்தது.

நீங்கள் யாரையாவது பாராட்டி உள்ளீர்களா? இல்லையென்றால் அதைச் செய்யுங்கள். சொந்தம் மோசம் , நட்பு ஏமாற்று என்று புலம்புவது வெட்டிவேலை. நீங்கள் யாரை நோக்கி புலம்புகிறீர்களோ அவர்களின் நட்புவட்டத்தில் வில்லன் நீங்கள்தான்.

Monday, October 21, 2019

மயிறு, ஆன்ட்ரே அகாசி & சங்கீதா பிச்லானி


கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஆரம்பித்த மையல் (crush) பலகாலம் போகவில்லை. இன்று இதை எழுத அமரும்போது பல நினைவுகள் வந்து போகிற‌து. மதுரையில் அலங்கார் திரையரங்கம் என நினைக்கிறேன். அங்குதான் திரிதேவ் (Tridev) பார்த்தேன். கூடைநிறைய பூக்களைக் கொடுத்து ஒன்றை எடுத்துக்கொள் என்றால் என்ன செய்வது? "ஓயே ஓயே" பாட்டு அப்படித்தான் இருந்தது. மூன்று இளம்பெண்கள் "அங்கிள்"களுடன் ஆடவைக்கப்பட்டார்கள். நான் இன்று அங்கிளாகிவிட்டேன் என்பது தனிக்கதை. 

அப்போதெல்லாம் "மாதுரி" இந்த அளவுக்கு வருவார் என்று நான் நினைக்கவே இல்லை. என் மனதில் அப்போது இடம் பிடித்தது "சங்கீதா" தான். "சோனம்" அந்தப்பாடலில் இருந்தாலும் அவ்வளவாக என்னைக் கவரவில்லை. திரிதேவ் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சென்னை "கேசினோ" (Casino) திரையரங்கில் பல ஃகிந்தி படங்கள் பார்த்துள்ளேன். ரங்கீலா படம் அங்கு வெளியானது என நினைக்கிறேன். அதை பார்த்து "ஊர்மிளா" மீது சிறிது மையல் வந்து போனது.

ஆனால் கல்லூரி காலத்தில் என் அறையில் இருந்த படம் Sangeeta Bijlani ன் படம்தான். பச்சைக்கலர் பாவாடை உடையில் இருக்கும் படம் இன்றும் நினைவில் உள்ளது. 1996 ல் Sangeeta Bijlani அசாருதீனை மமுடித்த போது அசாருதீன்மேல் வெறுப்பு வந்தது. அதே காலகட்டத்தில் பார்த்திபன் சீதா திருமணம் நடைபெற்று, பார்த்திபன் மீதும் வெறுப்பு வந்தது.கல்லூரிக்காலத்தில் வகுப்பறையில் , கணக்குப்பாடம் நடக்கும் போது, ஓயே ஒயே பாடலைப் பாடி ஆசிரியையால் வெளியில் அனுப்பப்பட்டேன். அதே ஆசிரியரை 20 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து மனம்விட்டு பேசிக்கொண்டோம் என்பது தனிக்கதை. என்னை மன்னித்ததோடு என்னுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

கல்லூரிக் காலத்தில் என் அறையில் சங்கீதாவின் படத்துடன் நான் வைத்திருந்த இன்னொரு படம் Andre Agassi ன் படம். 

இப்போது யாரவது Andre Agassi என்று தேடினால் மொட்டத்தலை Andre Agassi தான் வருகிறார். நான் அகாசியை விரும்பியது அவரின் டென்னிஃச் ஆட்டத்திற்காக அல்ல. அவரின் கூந்தல். ஆம் ஆண்களில் அழகான முடி வைத்திருந்தவர் அப்போது அவர்தான் ன்பது என் கணிப்பு. அவரைப் போலவே முடி வளர்க்க ஆசைப்பட்டு, கல்லூரி இம்சைகள், அப்பாவின் கெடுபிடிகள் என கூந்தல் வளர்க்க முடியவில்லை. ஆனால், கழுத்துக்குகீழேயும் முடி தொங்கும் வண்ணம் ஓரளவிற்கு வைத்து, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை அளவில் தேற்றிக்கொண்டேன்.


கல்லூரி முடித்து வேலைதேடி அம்பத்தூர் முதல் அம்பானியின் ரிலையன்சுவரை அலைந்து திரிந்த காலங்களில், "கூந்தல் ஒரு கேடா?" என்று முடிவெடுத்து காலம் ஓடிவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய கூந்தல் வளர்க்கும் ஆசையைச் சொன்னபோது முதல் எதிர்ப்பு என் மகளிடம் இருந்து வந்தது. சரி என்று தள்ளிப்போட்டுவிட்டேன்.

2020 ல் ஒன்றை புதிதாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்து "சரி மயிரை வளர்ப்போம்" என்று 'முடி'வெடுத்துள்ளேன். சென்றவாரம் எனக்கு முடி திருத்தும் கசகஃச்தான் (Kazakhstan) பெண்மணியிடம், "கூந்தல் வளர்க்க ஆசைப்படுகிறேன். என்ன செய்யவேண்டும்? அதற்கு ஏற்ப வெட்டிவிடவும்" என்றேன். கடந்த இரண்டு வருடங்களாக இவர்தான் எனக்கு முடி திருத்திவிடுகிறார். அவர் சொன்ன ஆலோசனையின்படி இரண்டுமாதங்கள் வளர்த்துப் பார்க்கப்போகிறேன். பராமரிப்பு மற்றும் மற்ற சவால்களை வைத்து, கூந்தலின் நீளம் மாறும்.

எனது முடிவை மனைவி, மகளிடம் சொன்னேன். மகள் " அப்பா, I don't know you " என்று சொல்லிவிட்டாள். மனைவியும் "எப்படியோ போங்க" என்று சொல்லிவிட்டார். "பெண்கள் மட்டும்தான் கூந்தல் வளர்க்க வேண்டும் என்பது sexism" என்று தத்துவ விளக்கம் கொடுத்துவிட்டு, மயிறு குறித்தான சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.

கல்லூரிக்காலங்கள் வேறு. இப்போது உள்ள நிலையில் இரண்டு இஞ்ச் வளர்ந்தாலே எனக்கு தலையில் கல்லை வைத்தது போல உள்ளது. இருந்தாலும் முடி வளர்த்துப் பார்ப்போம் வந்தால் கூந்தல் போனால் மயிறு என்று இறங்கிவிட்டேன்.

நேற்றும் மழை பெய்தது:நான் இறந்துவிட்டால் இப்படிச் சொல்லுங்கள்

நேற்றும் மழை பெய்தது.
சன்னல் ஓரத்தில் கண்ணீராய் கொட்டி கவிதை பாடியது. மழைக்கும் எனக்குமான் உறவு அந்தரங்கமானது. காட்டில் நாங்கள் தனியாய் இருந்துள்ளோம். நடு இரவில் எனக்கு தாலாட்டுப் பாடியுள்ளது மழை. நாங்கள் இருவரும் உடல்தழுவி, நிர்வாணமாய் ஆறுகளில் விழுந்து கரைந்துள்ளோம். 

நேற்றும் அப்படியே மழை பெய்தது. என் வழக்கமான பாதையில் ஓட ஆரம்பித்தேன். குடை மட்டுமல்ல ஆடையும் மழைக்கு எதிரியே. 

சட்டையை கழற்றிவிட்டு, மெலிதான தூறலில் ஓட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மழையின்போதும் பாதைகள் புதிய காட்சிகளைத் தருகிறது. அன்று என்னமோ இறப்பு குறித்தான எண்ணங்கள் அதிகமாக வந்துபோனது. ஒருவேளை அன்று எனக்கு வந்த ஒரு செய்தியின் தாக்கமாக இருக்கலாம். அலுவலகத்தில் ஒருவர் (45+ வயது) புற்று நோயால் இறந்துவிட்டார். அதே சமயம், எனது அலுவலக நண்பர் (white) ஒருவரின் aunt 101 வயதில் இறந்துவிட்டார். 1918 ல் பிறந்தவர்  அவர். அவரின் புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்த போது ஒரு வரலாற்றைப் பார்ப்பது போல இருந்தது. அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, எனது இருப்பு குறித்தான சிந்தனைகளும் வந்து போனது.
**
"நல்லாத்தான் இருந்தாப்ல. தினமும் எக்சர்சைசு செய்வாப்ல. கறி கூட சாப்ட மாட்டார். சுத்த வெசிடேரியன்.அவருக்கே இப்படியா? என்னத்த வாழ்க்கை. என்ன செஞ்சு என்ன புண்ணியம்?" கேள்விப்படும் மரணச்செய்திகளில் எல்லாம், யாரோ ஒருவர் இப்படி அங்கலாய்ப்பது தொடருகிறது. சமீபகாலமாக கேள்விப்படும் மத்திய வயது மரணங்கள்,அதுவும் ஆணின் மரணத்தின் போது இது அதிகம் பேசப்படுகிறது. இப்பொழுதுதான் இப்படியான செய்திகள் அதிகம் வருவது போல இருந்தாலும், அகால மரணங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. என்றும் இருக்கும். இணையமும் செய்தித்தொடர்பும் வளர்ந்த நிலையில், செய்திகள் அதிகமாக‌ நம்மை வந்து சேர்கிறது அவ்வளவே.

 70 வயது அல்லது 80 க்கு மேலான மரணங்களும் உறவுகளுக்கு வலியானது என்றாலும், அது எளிதில் கடக்கப்படுவதன் காரணம், இறந்தவரின் நிறைவான வாழ்க்கை மட்டும் அல்ல. பொருளாதார ,வாழ்வியல் காரணங்களுக்காக அவரை நம்பி அவரின் குழந்தைகள் இல்லை என்ற ஆறுதலே அத்தகைய மரணங்களை எளிதாகக் கடக்க உதவுகிறது என எண்ணுகிறேன். 40 அல்லது 50 வயதில் ஒரு ஆண் மரணிக்கும்போது, மனம் சார்ந்த துன்பம்தாண்டி, அவர் விட்டுச் சென்ற பொருளாதர சிக்கல்கள் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும்.
**
சரியான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆயுளை நீடிக்கும் என்று யாராவது  நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்பது என் நிலைப்பாடு. வாழும் காலத்தில், உடல்நலத்தோடு சிறப்பாக வாழ இவைகள் உதவலாமே தவிர அதிக நாள் வாழ அல்ல. நான் நாளையே இறந்துவிடலாம். மைல் கணக்கில் ஓடும் நரம்புகளில் எங்காவது, ஏதாவது நடந்து, என் மூளை செயலிழக்கலாம். ஏதோ ஒரு உறுப்பு, ஏதோ ஒரு காரணத்தால் செயலிழக்கலாம். நான் சரியாகவே வாகனம் ஓட்டினாலும், யாரோ ஒருவர் என் வாகனத்தின்மீது மோதி என்னைக் கொன்றுவிடலாம். காட்டில் நடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்து, அதளபாதாளத்தில், கேட்க நாதியற்று புழுத்துப்போய் இறந்துவிடலாம்.

எந்தச் செயலும் அதிக நாள் வாழ உறுதிகொடுக்காது. ஆனால், பிழைத்து இருக்கும் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழலாம் என்று நாம் திட்டமிடலாம் அவ்வளவே.
நான் இறந்துவிட்டால்..
"எல்லாத்தையும் செஞ்சான். வாரம் 15 மைல்கள் ஓடினான். சமைச்சி சாப்பிட்டான். அப்படி இப்படி பேசினான். காடு மலையெல்லாம் சுத்துனான். ஆனா பாருங்க, 50 வயசுலேயே பொக்குன்னு போயிட்டான். என்ன வாழ்க்கை?" என்று சொல்ல சிலர் இருக்கலாம். நான் இறந்துவிடுவதாலேயே, வாழும் போது நான் செய்தவை எனக்கு பயனற்றைவையாகிப்போனது என்று யாராவது புலம்பி, அவர்களின் வாழ்வையும் கசந்துகொண்டால், அதை மறுத்து எழுத நான் இருக்க மாட்டேன்.

இப்படிச் சொல்லுங்கள்..
இதை நான் G+ ல் அடிக்கடி சொல்வேன். இங்கும் சொல்கிறேன். 

எனது இறப்புச் செய்திகேட்டால் , உங்களின் மதுக்கோப்பையை உயர்த்தி சொல்லுங்கள், "போறதுக்கு முன்னால நல்லா வாழ்ந்துட்டான்யா" என்று. ஏதாவது ஒரு புதிய‌ ஊரின் காஃபிக்கடையில் மழையில் நனைந்து கொண்டு காஃபி குடியுங்கள். எங்கேனும் ஒரு இடத்திற்கு தனியாக ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். 
பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு.
There are differences between being alive and living. Life is more than just breathing.

**
மழையில் திருடிய மலர்:உடெலெங்கும் பெய்யும் மழை

https://kalvetu.blogspot.com/2018/04/blog-post.html

Tuesday, October 08, 2019

நேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound


ன்றும் அப்படித்தான், வீடு வந்து சேர்ந்தும் இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த வானொலி நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வரமுடியவில்லை. காரின் சாவியை பிடுங்கிய மறுவினாடி துண்டிக்கப்படும் குரல் தொடர்பை, அது சொல்லும் தகவலை இழக்க விரும்பாமல் அமர்ந்து இருந்தேன். நான் வசிக்கும் ஊரில், இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகும்  Fresh Air நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் Terry Gross. Pennsylvania மாநிலம் Philadelphia ல் உள்ள WHYY   (https://whyy.org/ ) என்ற வானொலி நிலையத்தால் தயாரிக்கப்பட்டு, அமெரிக்கா முழுமைக்கும் 624 வானொலி நிலையங்களில் NPR  (https://www.npr.org/) மூலம் கொண்டு செல்லப்படும் பெரிய நிகழ்ச்சி.


https://en.wikipedia.org/wiki/Fresh_Air
//As of 2017, the show was syndicated to 624 stations and claimed nearly 5 million listeners.//

**
“This Fresh Air I am Terry Gross”
இந்த ஒலியை கேட்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வந்து போகும் எனக்கு. இந்த ஒலி, பலரைக் கட்டிபோட்டுள்ளது அமெரிக்காவில்.

அரசிய‌ல்,சினிமா, இசை,புத்தகம் என்று இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். இது நேரடி ஒலிபரப்பு அல்ல. பதிவு செய்யப்பட்டு, வெட்டி ஒட்டி தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் ஒன்று. எது ஒலிபரப்பக்கூடாது என்று பேட்டிஎடுக்கப்படுபவர் சொல்கிறாரோ அது ஒலிபரப்பாகாது. அது போல, டெர்ரி குரோஃச் இதுதான், இப்படித்தான் கேள்வி என்று விதி வைத்துக்கொள்ளமாட்டார்.

எது வேண்டுமானாலும் கேட்பேன். ஆனால் கேட்கப்படும்போது, எதுகூடாது என்பதைச் சொல்லும் உரிமையை பேட்டிஎடுப்பவருக்கு கொடுத்துவிடுவார். அப்படி இருந்தும்,இவர் உரையாடலின்போது எழுந்து போனவர்கள் உண்டு.
**
இது ஏன் பலரால் கொண்டாடப்படுகிறது என்றால், டெர்ரி குரோசின் உரையாடும் திறமை. என்னை யாராவது நேர்காணல் செய்யவேண்டும் என்றால் நான் விரும்புவது இவராகவே இருக்கும் இந்த தேதியில்.விருந்தினர் எதிர்பார்க்காத கோணத்தில் கேள்வி கெட்டு சிதறடிக்கவேண்டும் என்பது இவரின் நோக்கமாக இருக்காது. ஆனால் இவரால் கேட்க்கப்படும் கேள்விகள், விருந்தினரையே அவரின் தெரியாத அல்ல அவர் எண்ணிப்பார்க்காத திசைகளில் திருப்பி செய்திகளைக்கொண்டு வரும்.

**
Radio is pure sound. No nods or wings or nudges என்பது இவரின் நம்பிக்கை. இதுவே இவரின் உரையாடல்களை சிறப்பாக்குகிறது. இவர் யாரையும் "நேர்"காணல் செய்ய மாட்டார். ஆம் நேர்கால் இல்லை. உரையாடுவது மட்டுமே. வானொலியில், நேயர்களுக்கு ஒலி மட்டுமே கடத்தப்படுவதால், இவர் பேட்டியெடுக்கும் யாரையும் இவர் நேரில் பார்த்து பேட்டியெடுக்க மாட்டார். அதுவே சிறப்பு.

அமெரிக்க அதிபராக இருந்தாலும், அல்லது பேட்டி கொடுப்பவர் ஃபிலடெல்பியாவில் WHYY வானொலி நிலையத்திற்கு அருகே இருந்தாலும், உரையாடல் நேரில் நடக்காது. டெர்ரி குரோஃச் அவருக்கான அறையில், மங்கிய ஒளியில் விரித்து வைக்கப்பட்ட புத்தகங்கள், எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் இருக்க, பேட்டியாளர் வேறு ஒரு அறையில் இருப்பார். அல்லது வேறு ஒரு ஊரில் ,மாநிலத்தில் இருந்து குரல் தொடர்பு மட்டுமே.

**
நாம் அனைவரும், சினிமாவை வெறும் வசனமாக‌ வானொலியில் , திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கேட்டு இருப்போம். "திருவிளையாடல்" & "விதி" பட வசனங்கள் நல்ல எடுத்துக்காட்டு. சினிமா பார்க்காமல் வெறும் வசனத்தை மட்டுமே, கூம்பு குழாய்களில் முதன் முறையாக கேட்பவரால் அதை முழுவதுமாக உள்வாங்க முடியாது. படத்தை திரையில் ஏற்கனவே பார்த்திருந்தால், வசனத்தோடு உங்களின் மனதில் நீங்கள் ஏற்கனவே பார்த்த காட்சிகள் ஓடி அதை நிறைவு செய்யும்.

**
"அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த அவளை, 'சோ'வெனக் கொட்டிய மழை அனைத்தது. அவளின் தலையில் இருந்து நழுவும் மயிர் கீற்றின் வழியே இறங்கி, கன்னம் தொட்டு, கழுத்தின் வழியே வழிந்து, இடைக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முலைக்காம்பு தொட்டு தேனாக மாறிவந்த மழைத்துளியை. தொட்டுவிட‌, காலிலிருந்த எறும்பொன்று இடைநோக்கி படையெடுத்தது........" நீங்கள் வாசிக்கும் கதையில் இப்படி ஒரு வர்ணிப்பு இருந்தால், உங்கள் மனது இதை காட்சிப்படுத்த என்ன செய்யும்?

புத்தகம் எழுதிய ஆசிரியர் கண்ட காடோ, அவள் யாரை நினைத்து அந்தப் பெண்ணை புனைந்தாரோ அந்தப் பெண் உங்கள் காட்சிக்கு வரமாட்டாள். மாறாக‌ நீங்கள் மெய்வாழ்வில் கண்ட ஒரு காட்டையும், பெண்ணையுமே உருவகப்படுத்தி கதையில் நகர்வீர்கள். முலையின் அழக‌றியாத சிறுவர்கள் இதை வாசித்தால், முழுச்செய்தியும் அவர்களுக்கு கடத்தப்படாது. அதனால்தான், எந்த ஒரு ஊடகமும், அது செய்தியைக் கடத்தும் தன்மையில் தனித்து நிற்கிறது.

எழுதிய கதை சினிமாவாக‌ காட்சிப்படுத்தும்போது அதில் வரும் காடும், பெண்ணும் நீங்கள் உங்கள் மனதிற்குள் பார்த்து இரசித்ததாக இருக்காது.. கதை எழுதிய ஆசிரியர் நினைவில் விரிந்த காட்சிகளும் கிடையாது. அது, அந்தப் பட இயக்குநரின் பார்வையில் விரியும் காட்சியாகும். பெண்ணாகும். மழையாகும்.முலையாகும். அதனாலேதான் புத்தகமாக படித்தவர்களுக்கு திரையில் ஏமாற்றம்.

**
நீங்கள் என்றாவது, யாருடைய பேட்டிகளின் YouTube நிகழ்ச்சிகளை, "காணொளி"யாக இல்லாமல், "ஒலி"யாக மட்டுமே கேட்டு இருக்கின்றீர்களா?

Lost in Translation என்பது போல, உங்களின் காதுகளுக்கு "ஒலி"யாக மட்டுமே வந்தடையும் "காணொளி" செய்தி முழுமையாக இருக்காது. 

நேர்காணலில், பேட்டி காண்பவருக்கும் பேட்டி கொடுப்பவருக்கும் நடக்கும் உரையால் என்பது, வெறுமனே "ஒலி" யாக இல்லாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் nods ,wings & nudges  உங்களுக்கு ஒலியாக கடத்தப்படமுடியாது தொலைந்துவிடும். ஏதோ ஒரு காரணத்திற்காக பார்வையால் பார்த்து, அவர்கள் சிரித்துக்கொண்டால்கூட, ஏன் சிரிக்கிறார்கள் என்ற context உங்களுக்குத் தெரியாது.

**

வானொலியில் "ஒலி"யை மட்டுமே நம்பியுள்ள தனது நேயர்களுக்காக நிகழ்ச்சி தயாரிக்கும் டெர்ரி குரோஃச், அவர் காணும் பேட்டிகளை 100% ஒலி உரையாடலாக மட்டுமே செய்வார். 

இது வேறுவகையிலும்அவருக்கு வசதியாக உள்ளது. முகம் பார்த்து கேட்கமுடியாத கடினமான கேள்விகளை,தொலைதூர உரையாடலாக இருக்கும் போது எளிதாக கேட்டுவிட முடிகிறது. மேலும், நிகழ்ச்சிக்கான குறிப்புகளை,  பேட்டியெடுக்கப்படுபவருடன் கவனம் சிதறா வண்ண‌ம், இவரின் தனி அறையில் பரப்பி வைத்துக் கொள்ளவும் வசதி.
**
ஒலிகோர்வையோ , ஒளிக்காட்சியோ அது யாருக்காக, எந்த வடிவத்தில் செல்கிறதோ, அந்த வடிவத்தில் தயாரிக்கப்படும்போதும், கேட்கப்படும்போதும் மட்டுமே, அங்கு சிந்தாமல் சிதறாமல் எல்லாம் கடத்தப்படும்.


Terry Gross. 
Peabody Award-winning interviews on arts & issues.

https://www.npr.org/programs/fresh-air/
https://twitter.com/nprfreshair