Wednesday, March 11, 2015

சுமாரான போக்குவரத்து உள்ள சாலைகளின் சந்திப்பு அது. அருகில் புதிதாக வந்துள்ள வணிக வளாகம் அதன் பங்கிற்கு கூட்டத்தை இழுத்து சாலையில் விட்டுக்கொண்டு இருந்தது. முகப்பில் உள்ள டீசல்/பெட்ரோல் கடை அன்று வழக்கைத்தைவிட அதிக கூட்டத்துடன் காணப்பட்டது. சாலைகள் சந்திப்பின் அருகே இரு சாலைகளின் மையமாக இருக்கும் சிமெண்ட் தீவுப்பகுதியில் (Median) பெயிண்ட் டப்பாவைக் தலைகீழாகப் போட்டு அதில் அமர்ந்திருந்தாள் அவள். கலைந்துபோன தலை முடி, தொய்வான ஆடைகள் சகிதம்.  சாலைச் சந்திப்பில் எப்போதும் ஏதாவது ஒருபுறம் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும் ஒன்று மாற்றி ஒன்று. சிகப்பு விளக்கைத் துரத்திச் சென்று எல்லாப் பக்கமும் செல்ல முடியாது. இதனால் இவர்கள் ஏதேனும் ஒரு பக்கம் டப்பாவைக் கவுத்தி உட்கார்ந்து விடுவார்கள். தங்கள் பக்கம் உள்ள சாலையில் சிகப்பு விளக்கு எரிந்தவுடன்  வாகன ஓட்டியின் இடதுகை பக்கம் வருமாறு எழுந்து நின்றுவிடுவார்கள். வயதான சிலர் பல மணி நேரம் அப்படியே நின்று கொண்டு இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

அன்று குளிர்காலம் (பனிகாலம்) முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் வாரஇறுதி .எனக்கு மிகவும் பிடித்தமான காலம். அன்று சனிக்கிழமை அன்று இரவுதான் நேரத்தை ஒரு மணிநேரம் முன் தள்ள வேண்டும். இலையுதிர் காலத்தில் எடுத்துக்கொண்ட நேரத்தை இப்போது திருப்பிக்கொடுக்க வேண்டும். அன்று நான் செய்யும் பகுதி நேரவேலை/தன்னார்வப்பணி இடத்தில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும், நியூயார்க் சைரஃச் பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும் இடையேயான போட்டி ( Joe Biden, Vice President of the United States இந்தக் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.)  வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு அதுதான் அந்த பருவத்தின் இறுதிப்போட்டி. அதற்குப்பின் அவர்கள் பிற வெற்றி பெற்ற அணிகளுடன் நடக்கும் தொகுதிவாரிப் போட்டிக்குப் போய்விடுவார்கள்.

இப்படி சாலையில் இருப்பவர்களுக்கு உதவ‌ நினைக்கும் தருணங்கள் எப்போதும் குழப்பமானது. சாலையில் கார் நிற்கும் அந்த‌ சில நிமிடங்களில் கொடுக்கவா? வேண்டாமா? என்று முடிவு செய்து, அதிலும் எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்து , விளக்கு பச்சைக்கு மாறும்முன் கொடுத்துவிட வேண்டும். கொடுக்க நாம் தயாராக இருந்தாலும் அவர்கள் நம்மைக் கவனிக்காவிடில் சிக்கல்தான். இந்தமுறை நான் அவளை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டேன். இன்று கொடுத்தே ஆகவேண்டும் என்று முடிவுடன் காரின் சன்னல் கதவை இறக்கிவிட்டு கையில் சில ஒரு டாலர் பணத்துடன் இருந்தேன்.

எனது காருக்கு முன்னால் ஒரு கார் இருக்கும் வகையில்  சிகப்பு விளக்கு எரிந்து வாகனங்களை நிறுத்தியது. பஞ்சு மிட்டாய் கலரில் சின்ன கால்சட்டையும், கண்ணைப்பறிக்கும் பச்சை அரைப்பனியனுடனும் வலதுபுறம் ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண் எனது காருக்கு முன்னால் குலுங்கி குலுங்கி சாலையைக் கடந்தாள். ஒருவாரத்திற்கு முன் இந்த ஊர் பனியால் மூடிக்கிடந்தது, இந்தவாரம் இப்படி மாறி இருந்தது. சாலையில் ஓடுபவர்கள் எல்லாம் ஒருவகையில் எனக்கு நெருக்கமானவர்கள். ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி.

அதற்குள் அந்த அட்டைப்பெண் என் காரை நெருங்கிவிட்டிருந்தாள். கையில் பிடித்த அட்டையுடன் என்னை நெருங்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட அவள் என்னை நோக்கி "நன்றி , கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்" என்றார். கடவுள் தன்னை தெருவில் நிறுத்திவிட்டாலும் அடுத்தவனையாவது ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணமாக இருக்குமோ தெரியவில்லை. இங்கே இப்படி ரோட்டில் இருப்பவர்கள் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. ஒரு சின்ன அட்டையில் ஏதாவது ஒரு செய்தியை எழுதி வைத்துக்கொண்டு அப்படியே எங்கோ வெறித்தபடி இருப்பார்கள். போகும் காருக்கெல்லாம் "காட் ப்ளஃச் யு" சொல்லும் ஒருவர் எனக்குத் தெரியும். அவர் எழுந்து நிற்கமாட்டார். யாராவது அழைத்தால் மட்டுமே வந்து பணத்தை வாங்கிக்கொள்வார். ஒவ்வொருவரும் ஒருவிதம். நியூயார்க் சப்வே மனிதர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

அன்று நடந்த போட்டியில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.


Picture courtesy
http://www.pressherald.com