Tuesday, February 27, 2007

சுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?

தேன்கூட்டின் இந்த சுடர் தொடர் ஓட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சாகரன் தற்போது நம்மிடையே இல்லை.அவர் அறிமுகப்படுத்திய இந்தச் சுடர் ஓட்டத்தில் நானும் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.அவரின் குடும்பத்தினரின் வலிகளுக்கு காலம்தான் மருந்து. தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞ்சலி
**********************************************************


பசகுணமாக நினைக்க வேண்டாம்.இன்று இருப்பவர்கள் நாளையும் இருப்பதற்கான எந்த உறுதியும் கிடையாது.குழந்தைகளாகப் பிறக்கும்போது நாம் 60 அல்லது 70 வருட வாரண்டியுடன் அல்லது 50 வருட ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றம் இலவசம் என்பது போன்ற இலவசங்களுடன் பிறப்பது இல்லை.வாழும் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் முடிந்தவரை இன்பமாக,அடுத்தவருக்கு தொல்லை இல்லாதவாறு வாழ்ந்தாலே போதும்.எந்த மதங்களும் நமக்கு வாழும் காலத்தில் சொர்க்கத்தை காட்டுவது இல்லை.

யாருக்குத் தெரியும், வேற்று கிரகங்களில் நாம் முதலில் பிறந்து இருக்கலாம்.அங்குள்ள கடவுள்கள் அங்கு நாம் செய்த பாவத்திற்காக நம்மை தண்டித்து, இப்போது நம்மை இந்தப் பூமியில் பிறக்கச் செய்து இருக்கலாம்.அவர்களின் பார்வையில் நாம் வாழும் பூமியே உண்மையில் நரகமாக இருக்கலாம்.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையாக இல்லாமல், நாம் வாழும் இந்த கணத்தில் முடிந்தவரை அன்புடன் வாழ பழகிக்கொள்வோம்.எல்லா மதங்களும் அவற்றைப் பின் பற்றுபவர்களுக்கு மன்னிப்பு,சொர்க்கத்தில் ரம்பை,சுவனத்தில் பெருமுலைக் கன்னியர்,பரிசுத்த ஆவியின் அரவணைப்பு என்று இலவச சலுகைகளாக அள்ளி விட்டுக் கொண்டு இருகின்றன.என்ன கொடுமை என்றால், இவை எல்லாமே இங்கேயே, இதே பூமியில் இப்போதே கிடைக்கிறது. HIV இலவசம்.

இங்கே தவறு என்று அறியப்பட்டவை எல்லாம் சொர்க்கத்தில் இலவசம் என்பதால் மனிதனும் வரிசையில் நின்று சொர்க்கவாசல் திறக்க காத்து கிடக்கிறான்.தாய்லாந்தில் பெருமுலைக்கன்னியர் வியாபாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.அமெரிக்காவின் போர்னோ தொழில் பட்ஜெட் மெக்டொனால்டு + கோக் இரண்டும் சேர்ந்த வருடாந்திர பட்ஜெட்டைவிட அதிகம்.இதற்காக செத்து சுவர்க்கத்திற்கோ அல்லது சுவனத்திற்கோ போக வேண்டுமா? கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப்பதிலாக கணவன் மனைவி தங்களுக்குள் மன்னித்தும்,விட்டுக் கொடுத்தும் வாழத் தொடங்கினால் சொர்க்கம் வீட்டிலேயே இருகிறது. இதற்காக செத்து சுண்ணாம்பாகி அதன்பின் பரிசுத்த ஆவியால் மன்னிக்கப்பட வேண்டுமா?

ஒரு குழந்தையுடன் 10 நிமிடம் பேசினாலே சொர்க்கம் தெரியும்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் சொல்ல முடியாமல் நாம் திணரும் போது நரகம் நம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியும்.இதற்காக சொர்க்கவாசலில் காத்து இருக்க வேண்டுமா? நீ சொர்க்கவாசல் என்று எண்ணும் இடம்தான் பலர் கஞ்சிக்கே பிச்சை கேட்கும் இடமாக இருக்கிறது.கவனித்தது இல்லையா?


சொர்க்கமும் ,நரகமும் இங்கேயே உள்ளது.நீங்கள் எதை சொர்க்கம் என்று நினைக்கிறீர்கள் அல்லது நரகம் என்று நினைக்கிறீர்கள் என்பது உங்களின் தேவை சார்ந்தது.இதற்காக எல்லாம் வரிசையில் நின்று பஜனை பாடிக் கொண்டு இருக்க வேண்டாம். அவர்கள் நீங்கள் செத்த பிறகு கிடைக்கப் போகும் எதோ ஒன்றுக்கு,அதாவது பொருளை விற்காமலேயெ வாரண்டி தருகிறார்கள். யோசித்துப் பாருங்கள்.

அது தேவையா?
சாதி,மதம் பொருட்டு வரும் சச்சரவுகள் தேவையா?

எல்லாம் உங்களின் சிந்தனைக்கு......

இனி நிர்மல் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள். சுடர் யாருக்கு வரும் என்பதே தெரியாத விசயம். நானே தேன்கூட்டில் ஏன் சுடர் ரொம்ப நாளாக அப்படியே "Y" என்று நின்றுவிட்டது என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.நிர்மல் என்ன எழுதியிருக்கார் என்று படிக்கவும் நேரமில்லை.தற்செயலாக எனது பிளாக்கரை பார்த்தபோது பின்னூட்டமாக நிர்மல் சுடரை ஒப்படைத்து இருந்தார். நன்றி நிர்மல்!

************************************************
இவை யாவும் எனது கருத்துக்கள் மட்டுமே.வானத்தில் இருந்து பார்த்தால் ஒரு புள்ளியாகத் தெரியும் குதுப்மினார் , அருகில் இருந்து பார்த்தால் பிரமாண்டமாக இருக்கும்.எல்லாம் நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தது.இந்தக் கேள்விகளுக்கு பதில்.
1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன?

வளையங்கள்:
Human is a Social Animal. மனிதன் குழுவாகவே வாழ விரும்கிறான்.யாரும் அதற்கு விலக்கல்ல.நண்பர்களுடன் இருப்பது, தனக்கென்று ஒரு அடியாளம் ஏற்படுத்திக் கொள்வதும்,அந்த அடையாளங்களை ஒத்த பிறருடன் பழகுவதும் இயல்பானது.மனிதனுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஏதோ ஒரு குழு அடையாளம் தேவைப்படுகிறது.அரிமா சங்கத்தில் ஆரம்பித்து ஆகாயத்தை ஆராயும் Space Research Association வரை மனிதன் குழுவாக ஏதோ ஒரு வேலையை (அல்லது வெட்டி வேலையை) செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த வளையங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்பதும், அடையாளங்கள் எந்த தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதும்,எதை முன்வைத்து இவர்கள் குழுவாக இயங்குகிறார்கள் என்பதும் முக்கியமான ஒரு விசயம்.

சாய்பாபாவைச்சுற்றி ஒரு கூட்டம் அதே சமயத்தில் மைக்ரோ பைனான்ஸ்-யூனுஸ்சைச் சுற்றியும் ஒரு கூட்டம்.முத்துராமலிங்கத் தேவரைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் தேவகுமாரனைச் சுற்றியும் ஒரு கூட்டம்.அல்லாவைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் ஆறுமுகனைச் சுற்றி ஒரு கூட்டம்.விரும்பியோ விரும்பாமலோ ,தெரிந்தோ தெரியமலோ மனிதன் எப்போதும் ஏதோ ஒரு குழு வளையத்தில் இருக்கிறான்.

பள்ளிக்காலத்தில் (நான் 6 ஆம் வகுப்பு சேர்ந்தவுடன்) வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் உயரத்தின் அடிப்படையில், உயரம் குறைந்த மாணவனில் ஆரம்பித்து, அதிக உயரம் கொண்ட மாணவன் வரை வரிசையாக நிற்கவைத்து house பிரிப்பார்கள்.ஒரு பள்ளியில் 4 houses இருக்குமானால் 1,2,3 and 4 என்று சொல்லச் சொல்லியோ அல்லது Red,Blue,Green and Yellow என்று சொல்லச் சொல்லியோ பிரிப்பார்கள்.பிரித்தவுடன் அவனவன் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், ஒரு புதிய வண்ணம் பூசப்பட்டவன் ஆகி விடுவான். விளையாட்டுப் போட்டிகளின்போது, ஒரே வண்ண அடையாளம் உடையவர்கள் தனது வகுப்பையும் தாண்டி பள்ளியில் உள்ள மற்ற அனைவருடனும் சேர்ந்து அடுத்த வண்ணத்தினரை போட்டியில் வெல்ல முயற்சி செய்வார்கள்.

வளையங்கள் (குழுக்கள்) தேவையா என்றால் எனது பதில் ஆம் தேவையே.ஏனென்றால் இது தவிர்க்க முடியாதது.

ஆனால் நாம் அந்த வளையத்தில் இருப்பதன் நோக்கம் என்ன? என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி/எதனால் இந்த வளையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டோம்? என்பதும் தெரிய வேண்டும். அதே சமயத்தில் நமது சொந்த கொள்கை விருப்பு /வெறுப்புகளுக்கு மாறாக நாம் உள்ள வளையம் செயல்பட்டால், பிடிக்காத பட்சத்தில் வெளியேற தைரியம்/சுதந்திரம் இருக்க வேண்டும்.

20 வயது வரைக்கும் நாம் சில வளையங்களில் நமது விருப்பம் இல்லாமலேயே சேர்த்து விடப்பட்டு இருக்கிறோம்.அந்த காலங்களில் நம்மால் அதை கேள்வி கேட்கவோ அல்லது பிடிக்காத பட்சத்தில் வெளியேறவோ முடியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த வயதிற்கும் மேலும் பிடிக்காத,கருத்துக்கு ஒத்துவராத அல்லது கேள்வி கேட்பதே தெய்வக் குத்தம் என்ற அளவில் இருக்கும் வளையங்களில், மந்தையில் ஒரு ஆடாக இருப்பது கேவலம்.
பள்ளிக் காலத்தில் என்னால் ஒரு house -ல் இருந்து இன்னொரு house-க்கு மாற முடியவில்லை. House captain க்கும் எனக்கும் ஒத்து வராததால் விளையாட்டு ஆசிரியரிடம் hosue மாற விண்ணப்பித்தேன் அவர் "போடா வேலையப் பாத்துக்கிட்டு" என்ற ரேஞ்சில் பதில் சொல்லிவிட்டார். அது 11 வயதில். இப்போது நான் எனது வளையங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பிடிக்காத பட்சத்தில் விடவும் முடியும்.

தேசியம்:

Whether you like it or not you are a citizen of a country. You can change the citizenship from one country to other but you can not live without a citizenship. You always belong to A country. No choice.

முதலில் தேசியம் என்றால் என்ன? என்பது வரையறுக்கப்பட வேண்டும்.தேசியம் பற்றிய எனது புரிதல்களும் உங்களின் புரிதலும் வேறாக இருக்கலாம்.

நாடு என்ற கட்டமைப்பு புவியியல் எல்லை கொண்ட ஒன்று.தான் சார்ந்துள்ள நாட்டின்பால் அன்பும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொள்வதும் தேசிய உணர்வின் குறைந்தபட்ச தேவை என்று சொல்வேன்.ஒரு நாட்டின் நலனின்பால் அதன் குடிமகன் செலுத்தும் அக்கறை தேசியம் அல்லது தேசிய உணர்வு என்று சொல்லலாம்.

இது பற்றி ஒரு அருள் மற்றும் அசுரன் பதிவுகளில் பின்னூட்டமாக நான் ஏற்கனவே சொன்ன சிலவற்றை இங்கேயும் சொல்கிறேன்.

ஒரு தேசியத்துக்குள் வரும் மனிதர்கள் அந்த தேசியத்தின் கீழ் ஒரே அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள்.இவர்களின் தேசிய உணர்வு அடுத்த நாட்டு மக்களால் தவறாகப் பார்க்கப்படும்.இது உலகெங்கும் நடைபெறும் ஒன்று.இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடிய தேசபக்தர்கள் யாரால் மதிக்கப்படுவார்கள்? இந்தியர்களால் மட்டுமே.அது மற்ற தேசத்தவர்களுக்கு ஒரு பொர்ருட்டே அல்ல.பகத்சிங் நமக்கு ஹீரோவாக தோன்றும் அதே நேரத்தில் பிரித்தானியர்களுக்கு துரோகியாகத்தான் தெரிவார்.

ங்களுக்கு உங்களின் நாட்டின்பால் தேசிய உணர்வு இல்லை அல்லது அக்கறை இல்லை என்று கொள்வோம். இப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

 1. பிடித்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம்.கிடைக்கும் பட்சத்தில் மாறிவிடலாம்.
 2. இருக்கும் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிதாக ஒன்றை நீங்கள் நிர்மாணிக்கலாம்.(நீங்கள் நிர்மாணம் செய்யும் புதிய நாடு இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.)

நீங்கள் பூமியில் பிறக்கும் நாட்டை உங்களால் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஒரு வயதிற்குப்பின் எந்த நாட்டில் வாழலாம் அல்லது எந்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்பது உங்கள் கையில்.

ருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...பிடிக்காமல் எத்தனை முறை உடைத்தாலும் ,அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகவேண்டும்.

வேறு நாட்டிற்கு குடி பெயர்ந்தாலும் அந்த புதிய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவன் தானாக மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.தேசிய உணர்வு இல்லாத பட்சத்தில் கட்டுப்படல் என்பது முடியாது.பிறகு வாழ்க்கையே இம்சைதான்.

ந்த நாடும் பிடிக்கவில்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.அல்லது காட்டிற்குள் போய்விடவேண்டும்.

தேசியம்/தேசப்பற்று என்றால் என்ன?


ஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.

பிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது, விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.

முதலில் ஏதாவது ஒரு நாட்டைத் "தன் நாடு" என்று ஒருவன் நம்பினால்தான் நாட்டின் தேசியம் பற்றிய அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டோட இருக்கேன்.என்றால் தேசியம் பற்றிய எந்தக் கேள்விகளும் அர்த்தம் அற்றது.வாயை மூடிக் கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தலாம்.குறைந்த பட்சம் நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் தேசியம் என்ற ஒன்று உள்ளது தெரியும்.

மொழி:
 • மொழியறிவு
 • மொழிப்பற்று
 • மொழிதுவேசம்
 • மொழியுணர்வு
 • மொழிசார்ந்த அடையாளங்கள்
இதில் நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியாததால் மொழி என்ற வகையில் இருக்கும் எனக்குத் தெரிந்த அரசியலை விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

வாய் பேச முடியாத/காது கேட்காத மனிதர்களுக்கு மொழியுணர்வு இருக்குமா? கர்நாடகாவில் இருக்கும் ஒரு ஊமையும்,தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஊமையும் காவிரிப்பிரச்சனையில் மொழி சார்ந்து எந்த அணியில் சேர்வார்கள்? இறைவன் கொடுத்துள்ள புனிதப் புத்தகங்களால்,புனித மந்திரங்களால் அல்லது அந்த மந்திரங்கள் எழுப்பும் சத்தங்களால் (எந்த மதமாக இருந்தாலும்) இவர்களுக்கு ஏதேனும் பலன் உள்ளதா?

ண் தெரியாத ஒருவனுக்கு அய்யப்பன் அம்மணமாக இருந்தாலும் , வைர நகைகள் போட்டு குத்த வச்சு ஒக்காந்து இருந்தாலும் காட்சிப்பயன் ஒன்றும் இல்லை.கண் இல்லாத ஒருவனிடம் அல்லாவுக்கு உருவ வழிபாடு இல்லை என்று சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன? அவனுக்கு எல்லாம் இருட்டுதான்.எல்லாம் உருவம் இல்லாத கருப்புக்காடுதான்.

Communication is not what you say, it's what they hear, and what they think you meant. It's perception, NOT intent. நீங்கள் சொல்ல நினைத்ததை கேட்பவர் புரியும் வண்ணம் சொல்வதே Communication. இதற்கு மொழி is just a meduim.

ந்த மொழியில் உரையாடுவது என்பது அந்த உரையாடலில் ஈடுபடும் இருவர் அல்லது அந்த உரையாடலில் பங்கு கொள்ளும் மனிதர்களின் சுதந்திரம்.இதற்கு எந்த புனிதமும், நிறமும், அரசியலும் கிடையாது.

ஒருவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழியறிவு இருக்கலாம்.அதில் ஏதேனும் ஒரு மொழி அவனுக்கு மிகவும் பிடித்தாக இருக்கலாம்.அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அதே மொழி மற்றவனுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.எப்போது X மொழியைவிட Y மொழிதான் சிறந்தது என்று ஒருவன் சொல்ல ஆரம்பிக்கிறானோ அப்பொது மொழி துவேசம்/மொழிவெறி வந்துவிட்டது என்று கொள்ளலாம்.

நீ எந்த மொழியை விரும்புகிறாய் என்பது உனது விருப்பம். ஆனால் நான் விரும்பும் மொழி தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு அதிகாரம் இல்லை.

ரு மக்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்கள் பேசும் மொழியை அழித்தால் போதும்.இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்ததால்தான் தமிழகம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.ரு சின்ன உதாரணம்.தமிழின் தனித்தன்மையாலும் அதன் தீவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பாலும்தான் தமிழக சினிமாத்துறை இந்த அளவு வளர்ச்சி பெற்று உள்ளது(தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லவில்லை). இல்லையென்றால் மற்ற மாநிலங்கள் போல் Big-B யும் சில கான்-களும்தான் நம்மூர் போஸ்டர்களில் இருந்திருப்பார்கள்.

தமிழ் திரையுலகம் இந்தியாவில் இந்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது.குஜராத்தியிலோ அல்லது மாராத்தியிலோ எத்தனை படங்கள் வருகின்றன? கன்னடம் அல்லது தெலுங்கு இந்தப் போட்டியில் எங்கே உள்ளது? தனது அடையாளத்தை இழந்ததால் வந்த விளைவு.

இனம்:

இதுவும் ஒரு வளையமே.எந்த இனத்தைச் சொல்கிறீர்கள்? மனித இனம் என்றால் நாம் அனைவரும் ஒரே இனம்தான். மனித இனத்திற்குள்ளேயே உள்ள சிறிய/பெரிய உட்பிரிவாக உள்ள இனக்குழுக்களை நாடு/மதம்/மொழி என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

சாதி:

சாதி என்றால் என்ன என்று தெரியாமல் அது பற்றிப் பேச முடியாது.

னது பார்வையில், இந்தியாவில் சாதி என்பது சனாதன மதக் கோட்பாடு வழிவந்த அடக்குமுறை.அதனால் மதத்தைத் தொடாமல் சாதி பற்றி கருத்துச் சொல்ல முடியாது. இந்தியாவில் சனாதன தர்மமாக(அல்லது பிராமணீயமாக) அறியப்படும் இந்த ஏற்றத்தாழ்வு முறை வேறு நாடு அல்லது மதங்களில் மாற்றுப் பெயர்களில் அல்லது வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதுதான் இந்தியச் சாதி முறை. அதன் மூலம் சனாதன மதம்.

சாதி/மதம் இரண்டிலும் எனது கருத்து:
 • தனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் அதைத்தாண்டி மேலே போக முடியாது.
 • சரி அப்படி மேலே என்ன தான் இருக்கிறது..?
 • ஒன்றுமே இல்லை...
 • அது ஒரு வெற்றிடம்..
 • சாதி மதத்தை நம்புவர்களால் அது இல்லாத வெற்றிடத்தில் நிற்க முடியாது.
 • இவர்களுக்கு சாய்ந்து கொள்ள ஏதாவது வேண்டும்.

பெ ண்ணடிமை விசயத்தில் மதங்கள்/சாதிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை.காதலர்தினக் கொண்டாட்டத்தை மத வேறுபாடுகள் தாண்டி அனைத்து மதவாதிகளும் இந்தியாவில் எதிர்த்தார்கள். ஏன் தெரியுமா? அது இவர்கள் கட்டிக் காத்து வந்த புனிதக் கோட்பாடுகளை மீறுவதால்.(இந்தியாவில் கொண்டாடப்படும் காதலர் தினம் ஒரு கோமாளித்தனமானது அது பற்றி எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.காதல் என்பது இங்கே ஆண்-பெண் affection என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதால் love இங்கே கேலிக்கூத்தாகிவிட்டது.)

குடும்ப அடையாளம் தேவை.ஆனால் அது அந்தக் குடும்பம் சாதியால் மட்டுமே கட்டப்படவேண்டும் என்பது தவறு.10 வருடங்களுக்கு முன் இருந்த நம்பிக்கைகள் எல்லாம் இப்போது கேலிக்கூத்தாகத் தெரிகிறது.

ந்த தலைமுறையினரால் முடிந்தது தமது குழந்தகளுக்குச் சாதி.மதச் சுமையை கொடுக்காமல் இருப்பது மட்டுமே. குழந்தையிலேயே ஒரு மதத்தை போதிப்பதும்/பழக்குவதும் குழந்தைத் திருமணமும் ஒன்று.குழந்தைகள் 10 அல்லது 15 வயது ஆனவுடன் பெற்றோர்கள் அவர்களிடம் மதங்கள்/சாதி பற்றிய உண்மையச் சொல்ல வேண்டும்.உதாரணமாக....

"உலகில் பல மதங்கள் உள்ளன.நாங்கள் (பெற்றோர்) இந்தக் காரணத்திற்காக் இந்த மதம்/சாதியைப் பின் பற்றுகிறோம். நீ விரும்பும் மதம்/சாதியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அல்லது எந்தவிதமான அடையாளங்களும் இன்றி இருப்பதும் உனது விருப்பம்."

.....என்று சொல்லலாம்.


2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா?


:-)))

சீனா உயர்ந்து உள்ளதா? எனக்குத் தெரியவில்லை.இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் சீனாவில் அதன் குடிகளுக்கு கிடையாது.
"tiananmen square china" என்று http://www.google.co.in இல் தேடுவதும் http://www.google.cn இல் தேடுவதும் ஒரே விடையை அளிக்காது.

னவே, எந்த ஒரு நாட்டின் வளர்சியையும் மற்ற நாட்டின் வளர்ச்சியிடன் ஒப்பிடுவது என்னளவில் சரியல்ல.

ஒரே மைதானத்தில் ,ஒரே விதிகளுடன் ,ஒரே கோப்பைக்காக விளையாடும் இரண்டு அணிகள் பற்றி ஒப்பிடலாம்.வேறு வேறு மைதானங்களில்,இரு வேறு விளையாட்டுகள் விளையாடும் அணிகளை ஒப்பிடக்கூடாது.

ந்தியாவிற்கு இது(SEZ) தேவையா? தேவை என்றால் எப்படி செயல்வடிவம் தரவேண்டும்? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர,குளிர் பிரதேசத்தில் உள்ளவன் கோட்-சூட் போட்டு ,டை கட்டினால் அதுதான் நாகரீகம் என்று நாமும் செய்வது போல் , சீனா SEZ பின்பற்றினால் நாமும் பின்பற்ற வேண்டும் என்று ஆட்டு மந்தையாய் செயல்படக்கூடாது. ஏன் தஞ்சாவூரில் விவசாய SEZ அமைத்து விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்கக்கூடாது?

நிற்க.

ந்தியாவின் உயர்வு என்று நான் நினைப்பதும் நீங்கள் நினைப்பதும் வேறாக இருக்கலாம்.

சென்னையில் எளிதாக பார்க்கக் கிடைக்கும் காட்சி.
 • மூக்கில் ஒரு உறை( காற்று மாசு பட்டுள்ளதால் அதை வடிகட்டி சுவாசிக்க).
 • கையில் ஒரு நீளமான உறை.இது மற்ற நாடுகளில் வாகன ஓட்டிகள் போடும் சிறிய கையுறை கிடையாது. முழங்கையையும் தாண்டி புஜம் வரை நீண்டி இருக்கும் உறை. அதிகமாக பெண்கள் அணிவதைப் பார்க்கலாம்.
 • பாட்டில் குடி நீர்.
 • எந்த விதிக்கும் கட்டுப்படாத வாகன ஓட்டிகள்.
 • அப்படியே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஒண்ணுக்குப்போகும் IT இளைஞர்கள்.
 • இதை எல்லாம் கடந்து ஒரு அடுக்கு மாடியில் ஏறி பொட்டி தட்டிவிட்டு இந்தியா வளருது என்றால்...?
எது வளர்ச்சி? சுத்தமான காற்றையும்,நீரையும்,சுற்றுப்புறத்தையும் சாக்கடையாக்கிவிட்டு அது பற்றிய சொரணை கொஞ்சமும் இல்லாமல் ,புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல , மேற்கு நாடுகளைப் பார்த்து அதன்படி வாழ்ந்து கழிப்பது வாழ்க்கை அல்ல, அது வளர்ச்சியும் அல்ல.

வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம்? அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.

டிப்படைக் குணம் திருந்தாத வரையில் எத்தனை திட்டங்கள் வந்தாலும் நம் குணம் மாறது. SEZ வருவதற்கு முன்னால் சும்மா ரோட்டில் ஒண்ணுக்குப் போனவன் , SEZ வந்தபின் டை கட்டிக்கொண்டு ,காரில் வந்து இறங்கி அதே வீணாய்ப்போன ரோட்டில் ஒண்ணுக்குப்போவான்.

இந்தியாவின் IT தலைநகர் பெங்களூரில் ஒண்ணுக்குப்போக பள்ளியில் இடமில்லாமல் (இருக்கும் கக்கூசை மாணவர்கள் உபயோகிக்கா வண்ணம் பூட்டி வைத்துள்ளார்கள்) அருகில் இருக்கும் சாக்கடைப் பக்கம் ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தவறி விழுந்து இறந்து விட்டனர்.

நம் முதல் தேவை கக்கூசுக்கும் குப்பைக்கும் SEZ.

3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா? அலலது அணிகலனா?

 • Culture is an outsider's view of what the insider produces. This is contrary to popular opinion that argues that culture is a group who demonstrate similar qualities.
 • It is a learned behavior. From our child hood some things are taught by our parents. We must learn that every culture has different types of values, beliefs, customs, norms and taboos. We have to respect them for what they are and who they are.
 • Culture has been called "the way of life for an entire society." As such, it includes codes of manners, dress, language, religion, rituals, etc.,“A set of distinctive intellectual, emotional, spiritual, materialistic, artistic, literary attributes of a society along with the lifestyle, traditional beliefs and value system defines a culture”
 • Stereotypes are considered to be a group concept, held by one social group about another. They are often used in a negative or prejudicial sense and are frequently used to justify certain discriminatory behaviors. More benignly, they may express sometimes-accurate folk wisdom about social reality.
லாச்சாரம் என்பது மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்ப ஒரு காலத்தில் அமைந்த வாழ்க்கை முறைகள்.அரபுக்களின் கலாச்சாரம் மொக்கையாக தலைமுதல் கால் வரை அங்கி அணிவது.கலாச்சாரம் காக்கிறேன் என்று அலாஸ்கா செல்லும் ஒரு ஷேக் அங்கேயும் வெறும் அங்கி மட்டும் அணிந்தால் குளிரில் உடல் என்னவாகும்? கலாச்சாரம் சூடுதருமா? கடலோரத்தில் வாழ்ந்த ஒருவன் மலைப்பிரதேசத்திற்கு வந்தும் மூன்று வேளையும் சாப்பிட மீன் தான் வேண்டும் என்றால் என்னாவது? ஆர்டிக் பகுதியில் வாழும் நானூக் இன மக்களை பிராமணீயத்திற்கு மாற்றி ,பச்சையாக கடல் மிருகத்தை துண்ணாதே என்றால், அவன் என்ன செய்வான்? அவனுக்கு சிவனா வந்து சீனிக்கிழங்கு பயிரிடுவார்?

எதுவாக இருந்தாலும் நாமே விரும்பி அணிந்தால் அணிகலன்.அதுவே சாதி/மதம்/அல்லது அது சார்ந்த பிறரால் திணிக்கப்பட்டால் விலங்கு.

4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது?

குழந்தைகளுடன் விளையாடுவது,நெடுந்தூர ஓட்டம்,கடலோரம் அமர்ந்து இருப்பது போன்றவை.இவைகள் நான் நினைத்தால் செய்ய முடிந்தவை என்பதால் அதிகம் பிடிக்கும்.

நாம் விரும்பியபோது பொங்கலோ புது வருடமோ கொண்டாட முடியாது அது ஒரு சமுதாயக் கொண்டாட்டம். நீங்கள் இந்த சமுதாயக் கொண்டாட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கொண்டாட்டங்கள் அனைத்திலும் நண்பர்கள்,குடும்பத்துடன் நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்வது பிடிக்கும்.

நன்றித் திருநாளாகிய தமிழர்களின் பொங்கல் விழா நான் மிகவும் விரும்பும் சமுதாயக் கொண்டாட்டம்.

5) சிங்குரில் விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா?

:-)))

எது வாழ்க்கைத்தரம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பது தெரியவில்லை. iPOD,செல் போன்,கார்,அபார்ட்மெண்ட் இருந்தால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதாக நினைப்பது சரியா?

பெரும்பாலும் மக்கள் அதுவே வாழ்க்கைத்தரம் என்று நம்புகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு.இந்தியாவில் வசதியான மக்கள் சம்பாதிக்கிறார்களே தவிர வாழவில்லை.வாழ்க்கை என்பது வாழ்வது. வசதிகளுடன் உயிரோடு இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. :-)

உணவு,உடை,இருப்பிடம் என்பது வாழத் தேவையான குறைந்தபட்சத் தேவைகள்.இவை இருந்துவிட்டால் தரமான வாழ்க்கை வாழ்வது என்பது நம் கையில்தான் உண்டே தவிர, டாடாவின் கையில் இல்லை.சிங்குரில் வாழும் மக்களுக்கு இந்த குறைந்தபட்சத் தேவைகள்கூட இதுவரை இல்லை என்றால் ,அது டாடாவால்தான் வருகிறது என்றால், டாடாவை வரவேற்கலாம்.

நான் அறிந்த வரையில்(பத்திரிக்கைகள் வாயிலாக) இந்தப் பகுதி விவசாயிகள் டாடா வருவதற்கு முன் மிக நன்றாகவே வாழ்ந்துள்ளார்கள்.நலிந்தவர்கள் அல்ல.கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போன்றதுதான் இங்கே SEZ ன் வருகை.இந்த விவசாய நிலங்கள் தவிர வேறு தரிசு நிலங்களே அந்தப் பகுதியில் கிடையாதா?

Singur farmers: Why they oppose Tata plant
http://ia.rediff.com/money/2006/dec/09tata.htm

//"Till recently," Majhi says, "it was my land. I cultivated three crops in it," he says, while staring at the distance, "There would be paddy, potato, jute, til. . ." he trails off. Did Majhi voluntarily give up his land?
"No, never," he says fiercely, adding, "I'll never agree to give away my land. It has been with us for generations. It has fed and clothed me and my family of 18 people." How will he support himself? Majhi's face clouds over: "I don't know. Starve, I suppose."//

********************************************


இந்தச் சுடரை யெஸ்.பாலபாரதி அவர்களிடம் அளிக்கிறேன்

 1. உங்களின் எழுத்துக்கள் நீங்கள் வாழ்க்கையை இரசித்து அதன் போக்கில் வாழ்பவர் என்ற தோற்றத்தை எனக்குத் தருகிறது.உண்மையா? நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் சந்தோசமாக இருக்கிறீர்களா?
 2. இன்னும் 2 நாட்களே உங்களுக்கு இந்த உலகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் கொள்வோம்.அந்த இரண்டு நாட்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புவீர்கள்?(இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.இரண்டு நாளை எப்படிப் பயன்படுத்துவேன் என்பதைவிட, எனது பிள்ளைகள்,எனது மனைவி நான் இல்லாமல் என்ன செய்வார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். மன பாரம் விளக்கமுடியாதது :-( வயதான என் தாய் ,தந்தையை நினைத்தால் அதைவிடக் கொடுமையாக இருக்கிறது.)
 3. நிறைய நண்பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா? (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது?)
 4. உங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள்? ஏதாவது திட்டங்கள்?
 5. கடவுள் நம்பிக்கை உண்டா? அந்தக் கடவுள் எந்த மதத்தையாவது சார்ந்தவரா?Picture courtesy
http://www.modernartimages.com
http://www.art.co.za/ilsefourie/2005work09i.jpg
http://www.sankofadot.com/images/thinker.gif
http://www.fireiceglass.com/Portfolio/images/D/12a.jpg
15 comments:

 1. I liked most of it. Very well written.
  ஆரம்ப வரிகள் ஒரு சிலரையாவது சிந்திக்க வைக்கும்.

  1) இந்தி எதிர்ப்பால் நமக்கு லாபம் இருந்தது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு நல்ல பாஷையை படிக்க இயலாமல் போனதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தியின் கண்ணதாசன்களை ரசிக்க முடியாமல் போனது பெரிய நட்டம்.

  --பொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு--

  வேதனையான உண்மை இது. வீட்டுக்குள் a/c, plasma, car என்று மிகவும் 'கிடைத்த' வாழ்க்கையே வாழ்கிறார்கள்.

  வீட்டிர்க்கு வெளியே சரியான சாலை இல்லை, தேங்கி நிற்கும் சாக்கடை போன்ற இன்னல்களிலிருந்து 'immunity' கிடைத்தது போல் ஒரு வெத்து வாழ்க்கை வாழ்கிறார்கள். கேள்வி கேட்டு வாழும் சூழ்நிலையை சரிபடுத்திக் கொள்ள வகை இருந்தும் செய்யாமல் இருக்கும் இவர்களின் நிலை வருத்தம் தருகிறது.

  குழந்தைகள் gate உள்ளேயே அடைந்து வாழ்கிறார்கள். எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை.

  SEZ நல்ல விஷயம். ஆனால், இருக்கும் நல்லவைகளை (farm land and farmers) அழித்துவிட்டு SEZ வளர்த்துவது வெட்டி வேலை என்பது ஆள்பவர்களின் புத்திக்கு எட்டாமலா இருக்கும்?

  We are missing a lot and neglecting the ways to give a good future for our kids.

  ReplyDelete
 2. கல்வெட்டு,

  நல்ல பதிவு.

  இரவு தூக்கத்தில் தட்டச்சு செய்கையில் நிர்மலுக்கு பதிலாய் Y என அடித்து அதுவே தேன்கூடு முகப்பில் உள்ளது.

  ReplyDelete
 3. mikavum rasiththup padiththa tharamaana neermaiyaana varikaL! mikka nadri!

  ReplyDelete
 4. கல்வெட்டு,
  அருமையான சுடர். ஆடாமல், அசங்காமல், சேனல் மாற்றாமல் [அதாவது, வேறு IE பக்கத்துக்குத் தாவாமல் :) ] படித்து விட்டேன்.

  இரண்டு நாள் கழித்து வந்ததாலும், பிரகாசிக்கிறது...

  நிர்மலின் கேள்விகளைப் பார்த்தபோதே உங்களின் பதில்களைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துவிட்டது. தேசம், இனம், மொழி, SEZ, கலாச்சாரம், எல்லா விளக்கங்களும் அருமை.. பாலபாரதியை நோக்கி நீங்கள் வைத்திருக்கும் கேள்விகளும் நல்ல கேள்விகள்.. விரைவில் பதில்களுடன் வருவார் என்று நம்புகிறேன்..

  ReplyDelete
 5. ரெண்டு கேள்விகளைப் பார்த்ததும் இந்தப் பதிலைச் சொல்லாம இருக்க முடியலை.. சீரியஸான உங்கள் பதிவுக்கு நடுவில் விளையாட்டு வேண்டாம்னு நினைச்சீங்கன்னா, பிரசுரிக்காதீங்க :)

  //நிறைய நண்பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா? (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது?)//
  அதான் இருக்கோமே.. சங்கம் அமைத்துக் கலாய்க்கும் பா.க.ச தான் பாலாவுக்கு நிரந்தர எதிரி :))

  // உங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள்? ஏதாவது திட்டங்கள்?//
  ரிட்டையர்மென்ட்டா? அவர் கடைசி பதிவு பின்னூட்டங்கள் பார்க்கலியா? அதான் தாத்தாக்கள் முன்னேற்றக் கழகத்தில் தலைமை தாங்க கூப்பிட்டுட்டாங்களே இப்பவே :)))

  ReplyDelete
 6. பொன்ஸ்,
  பா.க.ச என்பதே ஒரு பெரிய நட்பு வட்டம்தானே :-)
  *
  பாலாவின் சமீபத்திய பதிவை இபோதுதான் பார்த்தேன்.so..ரிட்டையர்மென்ட் பிளானும் பா.க.ச வே இவருக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் பாருங்கள்.

  ******************

  BadNewsIndia,
  தமிழகம் எதிர்த்தது கட்டாய இந்தி திணிப்பைத்தான்.நீங்களாக விரும்பி இந்தி படிப்பதையோ அல்லது லத்தீன் படிப்பதையோ தமிழகம் தடை செய்யவில்லை. உங்களின் தேடலை யாரும் தடை செய்ய முடியாது.

  இந்தியை அப்படியே எடுத்துக் கொண்டதால்தான் பல வட மாநிலங்கள் சுயமிழந்து இருக்கின்றன்.அதற்குத்தான் சினிமாத் தொழில் உதாரணம்.

  இந்தி இந்தியாவில் மட்டுமே செல்லும்.இந்த கண்டம்தாண்டி எங்கேயும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இந்தி இல்லை.சிங்கப்பூர்,மொரிசியஸ் போன்ற இடங்களில் தமிழ் அங்கீகரிக்கப்பட மொழியே.

  லத்தீன் தெரியாததால் நான் லத்தீன் கண்ணதாசன்களையும்தான் இழக்கிறேன் என்று சொல்லலாம்.:-))

  இந்தியா முழுக்க ஒரே மொழியைத் திணிப்பதால் மாநிலங்கள் சுய அடையாளங்களை இழந்து போகும்.பல மொழிகளை தெரிந்து கொள்வது என்றும் நல்லதே.ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்.

  ***************************

  நிர்மல்,
  நானும் இது யார் புதிதாக "Y" என்று கவனிக்காமல் விட்டுவிட்டேன். :-)

  *********************

  பொன்ஸ்,BNI,நிர்மல் மற்றும் செல்லா வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 7. மிக பெரிய மொக்கை! அதுதான் இந்த பதிவினை பற்றி எனது கருத்து....
  இதுக்கொரு பஜனை கோஷ்டி ஆஹா! ஓகோ...

  சுடர் மங்குகிறது....50%வீதமாவது ஏதாவது நல்லா எழுதுமான்னு பாக்கணும்.

  ReplyDelete
 8. கல்வெட்டு, அற்புதம். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன்.உங்கள் எழுத்துக்களை ஆரம்பம் முதல் கவனித்து
  வருவதால், விடைகள் நன்றாக வரும் என்று தெரியும், ஆக பெரிய பாராட்டு உங்களை எழுத வைத்த நிர்மலுக்கு :-)

  உங்களிடம் இரண்டு கேள்விகள்.
  1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?
  2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா?

  ReplyDelete
 9. //வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம்? அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.//

  கல்வெட்டு, இவ்விசயத்தில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. வளர்ந்த நாடுகள், தொழிற்புரட்சிக்குப் பின்னரே தங்களது அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரம் போன்றவறில் கவனம் செலுத்தினர். அவர்களூக்கு காலனியச் சுரண்டல்கள் மூலமும் பொருளாதார பலம் இருந்தது.

  ReplyDelete
 10. தெளிவான ஆழமான கருத்துக்களுடன் சுடர் பிரகாசிக்கிறது. கேள்வியின் மையத்தை விட்டு நகராதது மேலும் சிறப்பு.

  //பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?//

  தோற்றுப்போனதாக சொல்ல முடியாது. அதன் வீச்சு குறைந்துவிட்டதாக வேண்டுமானால் சொல்லலாம்.

  ReplyDelete
 11. மிகச் சிறந்த பதிவு. நான் வலைப்பூக்களுக்கு (மைக்ரோசாப்ட் இணையத்திற்கு வந்தது போல) மிகவும் தாமதமாக வந்தவன். வந்தவுடன் மிகவும் ஈர்த்தது தங்களுடைய பதிவுகள் - அதன் கருத்தாளம்.

  இந்தி மொழி பற்றி badnewsindia விற்கு தங்களின் பதில் அருமை. என்னுடைய வீட்டில் என் அப்பா தமிழின் மீது மிகவும் பற்றுடையவர். ஆனால் என்னுடைய அம்மா எங்களை ஹிந்தி கற்றிக்கொள்ள அனுப்பினார். அது கண்டிப்பாக திணிப்பு அல்ல நானாக விரும்பிப் படித்தேன். அதனாலேயே பிரேம்சந்தையும், பச்சனையும் அறிய முடிந்ததது.

  கண்டிப்பாக நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பைப் பற்றி சொல்லிக் குடுத்தவுடன், ஹிந்தியுடன் வேறு பல மொழிகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். சிறுவயதில் குழந்தைகள் 15 மொழிகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்று எங்கோ படித்த நியாபகம்.அதனாலேயே ஹதராபாதில் இருக்கும் என் நண்பரின் குழந்தை அவர் தமிழர் என்பதால் தமிழிலும், அவர் மனைவி தெலுங்கு என்பதால் தெலுங்கிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக மாறி மாறிப் பேசும் திறமை உடையது, இத்தனைக்கும் அதன் வயது 8/9 தான்.

  தங்களிடம் இருந்து அடிக்கடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :)

  ReplyDelete
 12. I submitted a comment this morning and I am not seeing it. Has it been rejected?

  ReplyDelete
 13. உஷா,
  உங்களின் கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதில் சொல்கிறேன்.

  தங்கவேல்,
  எந்த மாற்றங்களும் உடனடியாக நிகழ்த்துவிடுவது இல்லை.இந்தியாவில் அது பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பதுதான் என் ஆதங்கம்.மேலை நாடுகளில் தொழில் புரட்சிக்கு முன்னும் அடிப்படைக்கல்வி,சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருந்ததாகவே எனக்குப் படுகிறது.

  வளர்ச்சி என்ற ஒற்றை நோக்கில் செல்லும் நம் இந்தியா என்ன செய்கிறது தெரியுமா? ஒரு சின்ன உதாரணம்:
  ஏற்கனவே (20 வருடங்களுக்கு முன்னால்) அமைக்கப்பட்ட அமைந்துள்ள பாதள சாக்கடைகள்,குடிநீர் வசதிகள்,சாலை வசதிகள் எல்லாம் அப்படியே இருக்க 5 வருடங்களில் சென்னை,பெங்களூர் போன்ற நகரங்களில் சும்மா குடிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போகிறது.அலுவலகங்கள் கூடுகிறேதே தவிர அந்தக் கூட்டத்தைச் சாமளிக்கும் வகையில் பள்ளிகளோ,வாழும் வசதிகளோ செய்யப்படவில்லை.

  வளர்ச்சியின் திட்டமிடல் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.வளர்ச்சி தேவை இல்லை என்பது அல்ல.

  இளங்கோ,
  இளங்கோ சிதம்பரமும், Elango CT யும் ஒருவரா இல்லை வேறு வேறா தெரியவில்லை :-( .

  இப்போதுதான் உங்களின் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன். வெளியிட வேண்டாம் என்று வந்துள்ள ஒரே ஒரு பின்னூட்டம் தவிர எல்லாம் வெளியிட்டாகிவிட்டது.ஏதும் வெளியாகவில்லை என்றால் மறுபடி இடவும்.

  உஷா,தங்கவேல்,ஆழியூரான்,இளங்கோ சிதம்பரம்,Anonymous (February 28, 2007 1:59:00 AM ) வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 14. இளங்கோ சிதம்பரமும், Elango CT-ம் ஒருவரே. நான் தான் பின்னூட்டங்கள் சரியாக update ஆக வில்லையோ என்று அவசரப்பட்டுவிட்டேன். :)

  ReplyDelete
 15. wow nice and attractive post. I like that post

  ReplyDelete