மொழி என்பது ஒரு இனத்துக்கான அடையாளம். அல்லது ஒரு இனம் அவர்களுக்காக சமைத்துக்கொண்ட முதல் ஊடகம் மொழி. மொழி ஒரு இடத்தில் தோன்றினாலும், காலப்போக்கில் அந்த மனிதர்களுடன் பயணித்து எல்லா இடங்களிலும் அவர்களுடன் வாழும். அப்படி புலம் பெயர்ந்தவர்கள் அந்த மொழியைப் பேணாவிடில் மொழி அதுபாட்டுக்கு செத்துப் போகும்.
மொழிவாழ , இனம் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இனம் வாழ மொழி என்பது ஒரு வரலாற்றுத் தொடர்பு.
இரட்டைக்கிளவி போல ஒன்று இல்லாமல் மற்ற ஒன்று இல்லை.
தமிழ் மொழியானது , இந்தியாவில் பண்டைய தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் அது மணப்பெண் சீர்போல குடும்பத்துடன் பயணித்து தமிழ்க் குடும்பத்துடன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து உள்ளது. தாய்வீட்டில் ஒரு விசேசம் என்றால் அது தாய்வீட்டிற்கு மட்டுமானது அல்ல. தாய்வீட்டில் வேர்விட்டு இன்று எல்லா இடங்களிலும் கிளைபரப்பி வாழும் அனைவருக்குமான ஒன்று. யாருக்கு அதிக பொறுப்பு அதிகம் என்று கேட்டால் தாய்வீட்டில் வாழபவர்களுக்கு.
பொங்கல் நாளை தமிழ் ஆண்டின் தொடக்கமாக அறிவித்ததை அனைத்து நாட்டு தமிழ் பிரதிநிதிகளுடன் தாய்வீட்டில் இருந்து அறிவித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே , என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அடுத்து ஒரு வரலாற்றுத்தவறு.
மொழியையும் இனத்தையும் காரணம் காட்டி, ஒரு எதிரி நமது சகோதரன் வீட்டில் கொலைகளை நடத்திவிட்டு சினிமா விழா எடுக்கிறான். ஆனால் ஈழத்தில் சண்டையை நிறுத்த உண்ணாவிரதம் இருந்து தமிழர்களைக் காத்த(??) உலகத் தமிழ் தலைவர் (??) தலைமையில் விழா. மொழியாலும் ,இனத்தாலும் வேறுபட்ட காரணத்தால் ,இழவு நடந்து பல ஆயிரம் பேர் புதைக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகும் இந்த நாளில் அந்த துக்கம் , ரணம் ,வடு ஆறாமல் , அதே மொழிக்கு விழா எடுப்பேன் என்று தாய்வீட்டில் நடந்தால் என்ன சொல்வது?
வாங்க செத்து செத்து விளையாடலாம் என்றுதான்.
இந்தக் களேபரத்திலும் ஞாநி வழக்கம் போல பரீட்சா நாடகம் நடத்திப் பார்க்கிறார். அவரவர் அரசியல் அவர்களுக்கு.
ஈழம் குறித்தான எனது புரிதல்கள் எனது அனுபவங்களில் தோன்றியவை. இரசினி போல மணிரத்னம் படம் பார்த்து மட்டும் தெரிந்து கொண்டதல்ல. ஈழத்து அரசியல் மற்றும் போராளிகள் அனைவரது செயல்களிலும் விமர்சனங்கள் உண்டு.அது குறித்த விரிவாக ஒரு நாள்.
வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html
"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1
http://masivakumar.blogspot.com/2010/06/1.html
Image courtesy:
http://sunshinedaydream.biz
http://www.stolaf.edu