அப்பா அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருப்பார். அல்லது "பனாமா" பிளேடு கொண்டு, பாதி இரசம் போன கண்ணாடியை, ஸ்டூலில் வைத்து, அதற்கு ஒரு சொம்பு (போநி) முட்டுக்கொடுத்து முகச்சவரம் செய்து கொண்டு இருப்பார். சரசரவென சத்தம் கேட்கும். சின்னாளபட்டு சேலையை கட்டிக்கொண்டு "அண்ணே முகூர்த்தக்கால் ஊன்றோம், ஒரு கை பிடிக்க வந்துருங்க" என்று பக்கத்துவீட்டு அக்கா அல்லது அத்தைமார்கள் வந்து சொல்லிச்செல்வார்கள். மாதம் ஒருமுறையாவது இது நடக்கும். என்ன அவசரம் என்றாலும், தட்டவே முடியாத ஒன்று. அப்பா வேகமாக வேலையை முடித்துவிட்டு , மற்றவர்களுடன் சேர்ந்து அந்த வீட்டு வாசலில் போய் நின்றுவிடுவார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, பக்கத்துவீட்டில் கூப்பிட்டு பந்தக்கால் நட அப்பா போகாமல் இருந்தது இல்லை.
அது என்னவோ தெரியவில்லை , ஆண்கள் மட்டுமே பந்தக்கால் நட அழைக்கப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு தன் வீட்டு ஆண் அழைக்கப்பட்டதே ஒட்டு மொத்த குடும்ப அழைப்பு என்று பெருமிதமாக , அருகில் இருப்பார்கள். ஆண்கள் எல்லாம் பந்தக்கால் நட, பெண்கள் மஞ்சள், குங்குமம் , என்று தட்டில் வைத்து அவர்களின் சடங்குகளைச் செய்து கொ
ண்டு இருப்பார்கள். பந்தக்கால் தயார் பண்ணுவதில் பலருக்கும் பங்கு உண்டு. முக்கியமாக பந்தல்காரர். பந்தல்காரர்கள் இதற்கு என்றே சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட உயரமான மூங்கில் மரங்களை வைத்து இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருந்தே ஒன்றைத் தயார்செய்வார்கள். மூலையில் நடப்பட இருக்கும் மூங்கில் மரத்தின் உச்சியில் மாவிலை,தென்னம் பாளை, கூரைப்பூ, மஞ்சள்..இப்படி அவரவர் நம்பிக்கை மற்றும் அந்த நேரத்தில் கிடைக்கும் விவசாய பொருள்/தவரம்/பயிர் சார்ந்த ஏதாவது இருக்கும்.
பெண்கள் குழந்தைகள் அந்த மரத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து தயாராக ஓரமாக சாத்தி வைத்து இருப்பார்கள். இதற்கு என்றே நல்ல நேரம் குறிக்கப்பட்டு இருக்கும். நேரம் குறிப்பதற்கு என்று சில தாத்தாக்கள் உண்டு. அவர்கள் மரம் நட கைகொடுக்க வரமுடியாவிட்டாலும், ஆயிரத்தெட்டு நொள்ளைகள் சொல்லிக்கொண்டு திண்ணை அல்லது கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அவர்களின் மகள், மருமகள், மகன், மருமகன், மனைவி என்று யாரின் தலையையாவது உருட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அப்படித்தான் அன்பைக் காட்டத்தெரியும் என்று இப்போது எனக்குப் புரிகிறது.
அப்பா ஒவ்வொருமுறை போகும் போதும், "நம்மளும் பெரிய மனுசன் ஆகி இப்படி பந்தக்கால் நட அழைக்கப்படவேண்டும்" என்று எண்ணிக்கொள்வேன். பல அக்கா,அத்தைகள் "சின்னப் பசங்களையும் பிடிக்க விடுங்க " என்று சிபாரிசு செய்து, என் போன்ற சிறுவர்களையும் பெரிய ஆண்களோடு, அல்லக்கைகளாக பந்தக்கால் நட கைகொடுக்க தள்ளிவிடுவார்கள். அப்போதெல்லாம் அது ஒரு சாதனைபோல இருக்கும் .பெருமிதமாக எண்ணிக்கொள்வேன். பல நேரங்களில் அம்மா ஏதாவது மளிகைச் சாமான் வாங்க அருகில் உள்ள "போஸ்" கடைக்கு அனுப்பிவிடுவார்கள். "போஸ்" அண்ணனுக்கும் இப்படியான அழைப்புகள் வரும். கடையில் ஒற்றை ஆளாக இருந்தாலும், (அவரின் திருமணத்திற்கு முன்) "கொஞ்ச நேரம் கடையப் பாத்துக்கங்க" என்று கடைக்கு வந்த வாடிக்கையாளரை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுவார் பந்தக்கால் நட கைகொடுக்க.
பந்தக்கால் நடும் நிகழ்வில் யாரை அழைப்பது என்ற பெரிய விதிகள் ஏதும் கிடையாது. அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைப்பதுதான் நோக்கம். பல நேரங்களில் குழாயடி , கிணத்தடிச் சண்டைகள் காரணமாக சிலரை வேண்டுமென்றே தவிர்ப்பார்கள். பந்தக்கால் நட ஆரம்பிக்கும்போது , ரோட்டில் யாராவது பெரிய மனிதர்கள் வந்துவிட்டால், முன்திட்டம் ஏதும் இல்லாமல்கூட "அண்ணே நீங்களும் வாங்க" என்று அழைப்பார்கள். அழைத்தால் மறுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். திருமணப்பத்திரிக்கை கொடுத்து , சம்பிரதாயத்திற்கு அதை வாங்கி வைத்துக்கொண்டு , முன்விரோதம் காரணமாக திருமணத்திற்கு போகாமல், வெறும் மொய் பணத்தை மட்டும் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பந்தக்கால் நட அழைக்கும்போது மறுக்க முடியாது. ஒருவேளை அழைக்கப்பட்டவர் போகமுடியாவிட்டாலும், வீட்டில் இருந்து யாராவது ஒரு பெரியவர் போக வேண்டும்.
அர்த்தம் பொதிந்த பல பழக்கவழக்கங்கள் இப்போது சம்பிரதாயச் சடங்குகள் ஆகிவிட்டாலும் , பந்தக்கால் நடும் நிகழ்வு அதற்கான அர்த்தத்தை இன்றும் ஓரளவேனும் தன்னகத்தே கொண்டுள்ளது. பக்திமார்க்க சடங்குகள் சேர்ந்து கொண்டாலும், "என் வீட்டில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வில், என் அக்கம் பக்கமும் ஒரு பங்காளி" என்று சொல்வதே அந்த நிகழ்வின் நோக்கம். இரத்த உறவுகள் எல்லாம் பல ஊர்களில் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் திருமணத்தின் அன்றோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னரே தான் வருவார்கள். பந்தக்கால் நடுவது போன்ற நிகழ்வின் ஆரம்பகாலத்தில் , கை கொடுப்பவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களே. மேலும் அவசரகால உதவிக்கு எப்போதும் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் , அக்கம் பக்கம் நண்பர்கள்தான் கைகொடுப்பார்கள். அப்படியான நண்பர்களை நம்வீட்டு நிகழ்வில் கைகொடுக்க வைப்பது, அவர்களுக்குச் செய்யும் மரியாதை மட்டும் அல்ல, "முக்கிய உரிமைகளை உனக்கும் கொடுக்கிறேன்" என்ற அர்த்தம் கொண்டது. பெண்களின் சடங்குகளில் , தாய்மாமன் வந்து குச்சு கட்டுவத்ற்கு முன்னரே, அக்கம் பக்கம் மாமாக்கள்,அண்ணன்கள்,தாத்தாக்கள் அனைவரும் சேர்ந்து பந்தக்கால் நட்டு இருப்பார்கள். மாமன் அதே ஊரில் வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தால்தான் வருவார்.
பந்தக்கால் நடும் நிகழ்வை நான் என்னளவில் சாதி,மத சம்பந்தம் இல்லாத , உறவுகள் தொடர்பு இல்லாத , அக்கம் பக்கம் நண்பர்களின் நிகழ்வாகவே பார்க்கிறேன்.அய்யப்பசாமி, உள்ளூர் மாரியம்மா என்று எல்லாச் சடங்குகளையும் செய்யும் ஒருவர், அவரின் வீட்டு பந்தக்கால் நடும் நிகழ்வில் , பக்கத்துவீட்டு கறிக்கடை பாயையும் அழைத்து இருந்தார். பாய் அண்ணன் அவரின் லுங்கி, தொப்பி சகிதம் பக்திபழமாக வந்து, அல்லாவின் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே பந்தக்கால் நட கைகொடுத்தார்.
மனிதம் வாழ்க!
***
இந்தவார இறுதியில் முக்கியான ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன். பந்தக்கால் நடும் நிகழ்வு அல்ல , இருந்தாலும் உங்களின் அன்பும் சேர்ந்து கலக்க வேண்டிய நிகழ்வு
அக்கம் பக்கம் நண்பர்கள் இருந்தாலும். கூப்பிடும் தொலைவில் உள்ள பிளாக்,பிளஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள என் நண்பர்களையும் பங்குகொள்ள அழைக்கிறேன்.
செய்யவேண்டியது இதுதான் உங்களின் கையை இங்கே கொடுங்கள், அதுவே நான் செய்ய இருக்கும் செயலில் அன்பாய் கலந்து, நீங்களும் பங்குகொண்ட ஒரு நிகழ்வாக எனக்கு இருக்கும்.