Monday, January 13, 2014

அன்று நீங்களும் இருந்தீர்கள்!

"இதுவரை நான் சொந்தவீட்டில் இருந்ததே இல்லை" என்றான் எனது மகன்.  "நம்முடன் இருந்த அனைவரும் சொந்தவீடு வாங்கி போய்விட்டார்கள், நாம் மட்டும் என்னும் ஏன்?" என்ற கேள்விகள் குழந்தைகளிடம் இருந்து பல வருடங்களுக்கு முன்னரே வரத்தொடங்கிவிட்டது.  குழந்தைகள் உலக அளவு ஆசைப்பட்டாலும் , பொருளாதாரம் சார்ந்தே இத்தகைய முடிவுகள் எடுக்க முடியும். மேலும் தேவைகளுக்கும் ஆசைகளுக்குமான வேறுபாட்டை சமயம் கிடைக்கும்போது எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தே வந்துள்ளேன். இன்னும் 5 வருடங்கள் கழித்து மூத்த மகன் கல்லூரி போய்விடுவான். "அப்பா கடைசி 5 வருடமாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும்" என்று சொன்னான். எப்படியாவது இசைவு தெரிவிக்க வைத்துவிட வேண்டும் என்று பல அம்புகளை குழந்தைகள் இருவரும் எய்தவண்ணம் இருந்தார்கள்.

வெளிநாட்டு மண்ணில் வேலை பார்த்தாலும் , வரவிற்கு இணையான‌ செலவுடனே வாழ்க்கை ஓடுகிறது. குழந்தைகளின் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் வீட்டு வாடகை அளவில் பணம் செலவாகிவிடுகிறது. எல்லாம் நமது திட்டமிடல் மற்றும் விருப்பம் சார்ந்தது என்றாலும், "நித்தியகண்டம் நிறைய ஆயுள்" என்ற அளவில் திரிசங்கு சொர்க்கமாகவே வாழ்க்கை கடந்த 12 வருடகாலமாக இருந்துள்ளது. இன்னும் அப்படியே. குடியுரிமைப் பிரச்சனைகள், வேலை சார்ந்த நிலையில்லாத்தன்மை , என்று அமெரிக்க மண்ணில் இருக்கும் பலருக்கு பலவிதமான சிக்கல்கள் இருக்கும்.  வாடகை குடியிருப்பின் மாதவாடகையும் ஒருபுறம் ஏறிக்கொண்டேயுள்ளது.

பிரச்சனைகள் எல்லாம் தலைக்குமேல் போய்க்கொண்டே உள்ளது. "சரி இதற்குமேல் சாண் போனால் என்ன? முழம்போனால் என்ன?" என்று,   குழந்தைகளுக்காக சவாலை ஏற்றுக்கொள்வது என்று நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இருக்கும் சேமிப்பு கடனுக்கான ஆதார பணத்தைக் காட்டமட்டுமே உதவும் , 80 சதவீதம் வங்கியில் கடன்வாங்கி வீடு ஒன்றைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தோம். கடன் தொகை மற்றும் அதற்கான நடைமுறைகள் எல்லாம் மலைபோல் பயம்கொள்ளச் செய்கிறது.

வீட்டுக்கடன் அமெரிக்காவில் ஒருவரை முழுநேர பொருளாதார அடிமையாக மாற்றிவிடும். சொந்தவீடு  (அப்ப‌டி நினைத்துக்கொள்ளலாம்), ஏதேனும் ஒருமாதத்தில்  சரியான நேரத்தில் தவணைத்தொகை கட்ட தவறினால் , சுருக்கு இறுக்கப்படும். உடலை ஓய்வில்லாமல் வருத்தினால்தான் கடன் தொகையைத் தொய்வில்லாமல் கட்டிக்கொண்டு இருக்கலாம்.

ஆனால் இப்படியான கடன்களும், பொறுப்புகளுமே தினமும் காலையில் எழுந்திருக்க வைக்கிறது என்பதும் உண்மை.

***

அமெரிக்காவில் பொறுமையும் ,அதற்கான நேரமும், மற்ற வசதிகளை விட்டுக்கொடுத்தலும் இருந்தால் தவிர , பிடித்தமான வீட்டைக் கட்டிக்கொள்ள முடியாது. எங்காவது ஒரு அனாமத்தான கிராமத்தில், மாடு, கோழிகளுடன் வசிக்க நான் நினைத்தாலும், மனைவி குழந்தைகளின் விருப்பம் வேறுமாதிரி இருந்தது. குழந்தைகளுக்கு எது சிறந்த பள்ளி? அவர்களின் நண்பர்கள் அருகில் உள்ளார்களா? என்பது போன்றவை அவர்களின் கணக்குகள். சுற்றமும் அன்பும் சூழ இருக்கவேண்டும் என்றால், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டியுள்ளது. வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் கொடுக்கும் குறைந்தபட்ச வடிமைப்புகளில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காசு நாம் கொடுத்தாலும்,  நகர சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நமக்குப்பிடித்த வீட்டின் வெளிப்புற வடிவமைப்பைக்கூட தேர்ந்தெடுக்க முடியாது.  பக்கத்தில் உள்ளவர் அதே வெளிப்புற வடிவமைப்பை ஏற்கனெவே தேர்ந்தெடுத்துவிட்டால், நாம் வேறு ஏதேனும் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

****

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விட , என்னவென்றே தெரியாமல்  கைகொடுத்த உங்களின் அன்பு , வீடு எழுப்பப்படும் மண்ணில் கலந்துவிட்ட செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஆம் நேற்று நீங்களும் எங்களோடு இருந்தீர்கள்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் வீடுகட்டுதல் என்பது ஒரு சமூக நிகழ்வாக இருந்துள்ளது.  http://en.wikipedia.org/wiki/Barn_raising விவசாயம் சார்ந்த பொருளாதார காலங்களில், ஒருவருக்கான பண்ணையைக் கட்டிக்கொடுத்தல் என்பது ஒரு சமூக நிகழ்வு. அனைவரும் அவர்களின் நேரத்தைக் கொடுதிருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கையில் அது எட்டாக் கனியாகிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் பல நிறுவனங்கள் சேர்ந்து களத்தில் இறங்கும் இந்த கட்டுமான வேலையில், எல்லாவேலைகளும் முடிந்த பின்னரே வீட்டின் உரிமை , மாற்றிக்கொடுக்கப்படும் .அதுவும் நேரடியாக வங்கிக்கு அடமானப் பத்திரமாகப் போய்விடும்.

குறைந்தபட்சம் நம் ஆசைக்கு அந்த மண்ணை நோண்டி திருப்தி அடைந்துகொள்ளலாம்.  மண்ணிற்கு  கொடுக்கப்பட்ட மரியாதை என்பது , சாமி, பூசை என்று வெறும் சடங்குகளாக ஆகிவிட்டது. இந்த நிகழ்வை அர்த்தமான கொண்டாட்டமாக்க , மண்ணில் மரம் வைத்து ஆரம்பித்தேன் நேற்று.

புதியதொரு மரக்கன்றை வாங்கி, குடும்பத்தினர் அதற்கு நீர் ஊற்றி, புதிய வீட்டுவேலையைத் தொடங்கினோம். இந்த மரம், வீட்டு வேலைகள் முடிந்தவுடன் வீட்டின் பின்புறம் நடப்படும்.

நான் இல்லாவிட்டாலும்  , வெட்டி சாய்க்கப்படாதவரை,  இப்படி ஒரு நிகழ்வு நடந்தமைக்குச் சாட்சியாக இம்மரமும் இந்த பூமியில் இருக்கும்,  மனதிலும் , மண்ணிலும் கரைந்த உங்களின் அன்போடு.

பந்தக்கால் நடனும் ஒரு கை குடுங்க!
http://kalvetu.balloonmama.net/2014/01/blog-post_9.html