Tuesday, August 09, 2016

இரோம் சர்மிளா ‍ - காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை

ணிப்பூர் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. அங்கே உள்ள "லோக்டக்" ஏரி ( Loktak Lake) உலகில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா.

http://www.thebetterindia.com/38244/loktak-lake-manipur-floating-national-park/

https://www.youtube.com/watch?v=ieEkp_jgsLU

பார்க்க வேண்டிய இடங்கள் என்ற எனது ஆசை மற்றும் பேராசைப் பட்டியலில் இன்றுவரை இந்த இடம் இருந்து கொண்டுள்ளது. மணிப்பூர் , இந்தியா என்ற அடையாளத்துடன் இருந்தாலும், லாட்டரி சீட்டுகளே தமிழகத்தில் அந்த மாநிலத்தின் இருப்பை எனக்கு உணரச் செய்தது. பாடப்புத்தகங்கள் சொன்னதைவிட மதுரை "கே.ஏ.எஃச் சேகர்" லாட்டரி கடைகளே இந்த மாநிலத்திற்கு அதிக வெளிச்சம் அடித்துக்காட்டியது.

அதன் பிறகு மணிப்பூர் என்றாலே என் நினைவிற்கு வருவது இரோம் சர்மிளா.
AFSPA என்ற இந்திய இராணுவச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியவர். இப்போது அதை கைவிடுகிறார்.

Armed Forces Special Powers Act (AFSPA), which gives soldiers sweeping powers to arrest without warrants and even shoot to kill in certain situations. AFSPA is in effect in several Indian states, including in Manipur and Indian-administered Kashmir.

ஆம் இப்படியான சட்டம் காந்தியின் தேசத்தில்தான் உள்ளது. அதை எதிர்த்து ,அதே காந்தி தேசப் பெண்தான் , அதே காந்திய வழியில் 16 வருடமாக போராடினார். காந்தியின் பேர் சொல்லும் கட்சியோ, கடவுளின் பேர் சொல்லும் கட்சியோ ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. கிரிக்கெட்டுக்கு கூவும் மக்களும் , மதத்திற்கு மல்லுக்கட்டும் மக்களும் கார்பரேட்டு அடிமைகளான என்போன்ற சாம்பிராணிகளும் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

உலகில் ஏதேனும் போராட்டங்கள் நடந்தால் பலர் தங்களின் சொம்புகளைத் தூக்கிக்கொண்டு மடச்சாம்பிராணி பக்த கோடிகளுக்கு காந்தியம் உபதேசம் செய்வார்கள். காந்தி குல்லா போட்டு கல்லா கட்டுவார்கள். ஆம் நீங்கள் காலம்முழுக்க தாங்கிப்பிடித்த காந்தீயம் இன்று பல்லிளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு துரும்பைக்கூட அசைக்க வலுவற்றது இந்த போராட்ட முறை. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு போராட்ட முறையின் வெற்றி தோல்வியில், அதன் மறுமுனையில் உள்ளவர்களின் பங்கும் முக்கியமானது. காந்தியின் அகிம்சைப் போராட்டம்தான் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது என்று நீங்கள் நம்பினால், அதன் அர்த்தம், அந்த போராட்ட வடிவத்தை மறுதரப்பு மதித்தது என்பதுதான் உண்மை. இன்று உலகில் உள்ள அரசாங்கங்கள் எதுவும் நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் மனிதநேயம் கொண்டது அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் , அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட அமைப்புகள்.

ஒரு கொள்ளையர்களின் கூட்டத்திற்கு பெருங்கொலைகாரனே தலைவானக‌ இருக்க முடியும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று மக்களின் மீதான ஒரு அவ நம்பிக்கையை கோடிட்டுகாட்டியுள்ளார் சர்மிளா.

Irom Sharmila: World's longest hunger strike ends
http://www.bbc.com/news/world-asia-india-37007494

//Some people are seeing me as a strange woman because I want to join politics. They say politics is a dirty, but so is society.//

-சர்மிளா உங்களின் அரசியல் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

-அரசியல்பாதை சரியானதுதான் அதில் பங்கெடுக்கும் மக்கள் சரியானவர்களாக‌ இருக்கும்வரை.

-இந்தியாவில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக‌ வேண்டும்.


கல்வெட்டு: பாலஸ்தீனம்-இலங்கை ...
http://kalvetu.balloonmama.net/2009/11/blog-post_17.html

பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்



நீங்களும் என்னைப்போல ஒரு ‘இணைய மொண்ணையாக’ இருப்பின் உங்களுக்கு நான் ஒரு இணைய மொண்ணையாக மட்டுமே அறிமுகமாயிருப்பேன். நான் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் இணைய மொண்ணையின் கருத்தாகவே இருக்கும். நான் மெய்வாழ்வில் என்ன செய்கிறேன் ( What I do for living ) என்பது உங்களுக்கு தெரியாதததால் , நான் சொல்லும் கருத்தின் அளவு (வீச்சு) "ஒரு இணைய மொண்ணையின் கருத்து" என்ற அளவில்தான் உங்களுக்கு வந்து அடையும். நீங்களும் அந்த அளவில்தான் என்னை எடைபோடுவீர்கள் அல்லது எனக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உங்களுக்கு தமிழகத்தின் வார /மாத பத்திரிக்கைகளின் நடைமுறை தெரிந்து இருக்கும். நீங்கள் ஒரு செயலினால் மக்களை அதிகம் கவர்ந்துவிட்டால், உங்களுக்கு அதிக பக்கம் ஒதுக்கி, உங்களை மற்ற ஒன்றையும் செய்யச் சொல்வார்கள். இதற்கு நல்ல உதாரணம் கார்ட்டூனிஃச்ட் "மதன்". இவரின் முகவரி கார்ட்டூன். அதில் கிடைத்த வெளிச்சத்தில் இவர் கேள்வி பதில் சொல்ல ஆரம்பித்தார். "அயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி?" என்பதில் இருந்து அம்பேரிக்கா வரை சளைக்காமல் பதில் சொல்வார். "எனக்கு இது தெரியாது?" என்று பதில் இருக்கவே இருக்காது. அப்படியான கேள்விகள் ஒதுக்கப்படும் ஏன் என்றால் இங்கே பதில் வேண்டும்.

இவரின் பதில்கள் மக்களால் எப்படி உள்வாங்கப்படும் என்றால் "மதனே சொல்லிவிட்டார்" என்றுதான் இருக்கும். இங்கே இவரது ஒலி பெருக்கி இவரின் "கார்ட்டூன்" தானே தவிர உண்மையான கருத்தின் சத்தம் (உண்மைத்தன்மை ) அல்ல. இப்படித்தான் அண்ணன் பா. ராகவனும் இணையத்தில் சவுண்டு விடுவார் "எப்படி எழுத வேண்டும்?" என்று. இங்கே அவரின் ஒலிபெருக்கி அவரின் கதை எழுதும் திறன். பா.ராவே சொல்கிறார் என்றுதான் கருத்து சென்றடையும்.

பிளாக்கர் செ.மோ யும் இப்படித்தான். அவரின் ஒலிபெருக்கி புனைவுக் கதை எழுதும் திறன்.

**

கிளிண்ட் ஈஃச்ட்வுட்

இவர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார் என்று தெரியாது. எனக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் நடிகராக மற்றும் இயக்குநராகவே அறிமுகமாயுள்ளார். ஒரு துறையில் கிடைத்த புகழின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி (விரும்பியோ விரும்பாமலோ அதுதான் அவர்களின் ஒலிபெருக்கி) அடுத்த துறையில் கருத்துச் சொல்லும்போது "நடிகர் கிளிண்ட்" என்ற சத்தமே மக்களை திரும்ப வைக்கிறது. இவரே ஒரு இணைய மொண்ணையாக இருந்திருந்தால், நானும் மெனக்கெட்டு இருக்க மாட்டேன் நீங்களும் வந்து பேசி இருக்க மாட்டீர்கள். இங்கே அவர்களின் பழைய தொழில் சத்தமே மூலதனமாக உள்ளது அவர்களின் கருத்து அல்ல.

இவர்களுக்கு கிடைத்த ஒலி பெருக்கியின் அளவு சாமான்யனைவிட அதிகமானது. இவர்களின் சத்தத்தின் அளவில்தான் இவர்களின் கருத்துகள் பெரும்பாலும் எடைபோடப்படுகிறதே தவிர அதன் உண்மைத் தன்மையில் அல்ல. இவர்கள் பழைய‌ தொழில் ( What they do for living  ) வெளிச்சத்தின் உதவியால் வைக்கும் கருத்துக்களையே விமர்சிக்கிறேன்.

நான் சொல்வது இவர்களின் ஒலிபெருக்கியின் சத்தங்களில் தொலைந்துபோகாமல் ( Just because they are great in that profession doesn’t mean ) கருத்தை எடைபோடவேண்டும் என்பதே.

எனக்கு அவர்களின் கருத்தில் ஏற்பில்லை கோமாளித்தனமாக உள்ளது. ஆனால் அவர்களின் ஒலிபெருக்கியின் அளவு (சத்தம்) பலரைச் சென்றடையவும், அதன் பேரில் அதை ஏற்கவும் வாய்ப்பு இருப்பதால் , ஒரு துறையில் கிடைக்கும் ஒளிவட்டத்தால் எடைபோட வேண்டாம் என்கிறேன்.

எனக்கு இருக்கும் "இணைய மொண்ணை" ஒலிபெருக்கியில்தான் என் கருத்து சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அது கருத்திற்காக மட்டும் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். நான் என் துறையில் கொம்பன் அல்லது சும்பன் என்பதற்காக அல்ல.