Friday, January 13, 2017

மஞ்சுவிரட்டு,சல்லிகட்டு,எருதுகட்டு எங்கள் வாழ்வு

ரம்பப்பள்ளியில் படித்தபோது , வீட்டில் இருந்து பள்ளி செல்ல மூன்று வழிகள் இருக்கும். முதலாவது  வழி "பஃச்டாண்டு ரைஃச்மில்" அருகே உள்ள கேட்டின் வழியாக , ஊருக்குள் நுழைந்து , புளிய மரங்களின் நடுவே பயணித்து ஊரின் மத்தியில் போய், பள்ளிக்கூடத்தை பின்புறமாக அடைவது. எங்கள் ஆரம்ப பள்ளி அருகிலேயே, மகளிர் மேல்நிலைப்பள்ளியும் இருந்தது. காலை நேரத்தில் சின்னச் சின்ன செட்டுக்களாக, பள்ளியை நோக்கி போய்க்கொண்டு இருப்போம். பெரிய அக்காக்களிடம் எங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லி அனுப்பினாலும், பஃச்டாண்டு தாண்டியவுடன் நாங்கள் எங்கள் செட்டுகளுடன் திசை மாறி, குறுக்கு வழியில் போய்விடுவோம். இதற்காக அக்காக்களிடம் திட்டு வாங்குவது உண்டு.

இன்னொரு வழி "சங்கரன் ஃச்டோர்" தெருவில் நுழைந்து செல்வது. இந்த வழியில் எங்கள் அத்தைவீடும் இருந்தது. நான் அப்படிச் சென்றதற்கு என் ஆரம்பபள்ளி தோழியின் வீடும் இருந்தது முக்கியக் காரணம் . அவர்கள் வீடு பங்களா வகையானது. பசுமையான இளமைக்கால காதல்களைச் சொன்னால் சல்லிகட்டு கதை திசைமாறிவிடும். பள்ளிக்குச் செல்லும் இன்னொருவழி இந்தக்கதையில் முக்கிய இடம் பெறுகிறது. அதுதான் "போலீசு ஃச்டேசன்" வழியாகச் செல்லும் வழி. இப்போது அது "பழைய‌" போலீசு ஃச்டேசனாகிவிட்டது. இந்த வழியில் தான் சல்லிக்கட்டு நடக்கும் திடலும், வாடிவாசலும் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற‌ வாடிவாசல் எங்களுக்கு 'சுவர் ஏறி குதித்து' விளையாடும் இடமாகவே இருந்தது.

எங்கள் வீட்டோடு அந்த ஊரின் தென்மேற்கு எல்லை முடிகிறது. ஊரின் கடைசி என்பதால் அருகே உள்ள புளியங்காடுகள் எங்களுக்கு ஒதுங்க உதவியது.  வாடிவாசல் இருக்கும் இடம் ஊரின் மத்தியப் பகுதி. அங்குள்ள ஆண்கள், பெரியாற்றுக் கால்வாய்ப் பக்கம் போய்விடுவார்கள். பெண்களுக்கு இந்தக் கோட்டைச் சுவருடன் இருக்கும் திடல் ஒதுங்குமிடமாக இருந்தது. வாடிவாசலை ஒட்டி இருக்கும் இந்த‌ திடல், வருடத்தில் 360 நாட்கள் பெண்கள் ஒதுங்கும் இடமாகவே இருக்கும். மூன்றடி அகலமும் , ஐந்தடி உயரமும் கொண்ட அந்த சுவருக்கு உள்ளே இருக்கும் திடல் பீக்காடாகவும், வெளிச்சுவரில் சாணி (எருவு) தட்டப்பட்டும் இருக்கும்.



வாடிவாசல் தாண்டி , வலப்புறம் காளியம்மன் கோவிலும், அதற்கடுத்து இடப்புறம் 'நடுப்பிள்ளையார்' கோவிலும் இருக்கும். (ப‌ழைய)நூலகத்திற்கு எதிரே , 'போட்டா பிரேம்' போடும் கடையை ஒட்டிய சாக்கடை அருகே ஒரு பிள்ளையார் கோவில், அப்புறம் இந்தப் பிள்ளையார் கோவில், அடுத்து பெரியாற்றுக் கால்வாய் அருகே ஊர் சந்தையில் ஒரு பிள்ளையார் என்பதால் இவர் நடுப்பிள்ளையார். அருகில் காவலர் குடியிருப்பு ஒன்றும் இருந்தது. பிள்ளையார் கோவில்தாண்டிப் போனால், வலதுபுறம் ஒரு பால்பண்ணையும், கிராமத்துகூடமும் இருக்கும். அதுதாண்டி "ஊர் சந்தை" நடக்கும் திடல். அடுத்து பெரியாற்று துணைக்கால்வாயுடன் ஊர் முடிவடையும்.

இந்த நடுப்பிள்ளையார்  கோவில்தாண்டி நேராகச் சென்றால் ஊர் "ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்" முட்ட வேண்டும். அப்படி முட்டாமல் இடதுபுறம் சென்றால் முதலில் வருவது "ஆதி திராவிடர் நல விடுதி", அதற்கடுத்து பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளி, அடுத்து எங்கள் ஆரம்பப்பள்ளி . அந்தப் பகுதியைத் தாண்டி அதற்குப் பின்னால் இருக்கும் பெரியாற்றுப் பக்கம் போகவிடாமல் தடுக்கும்விதமாக, பேரூராட்சி அலுவலம் இருக்கும்.



"பொங்கல்" எங்கள் ஊருக்குச் ஆகச் சிறப்பான பண்டிகை. 'பென்னிகுக்' தயவால் ஊரின் வடக்கே ஓடிக்கொண்டிருக்கும் பெரியாறு எங்களின் இதயத் துடிப்பாக இருக்கும். அந்த ஆறு இருப்பதாலே பல புஞ்சை  நிலங்கள் நஞ்சையாக மாறி , எங்களுக்கு நல்வாழ்வு கொடுத்துக்கொண்டு இருந்தது. மூன்று போகம் வரை எடுக்கலாம். நெல் , கரும்பு, வாழை முக்கியமான பயிர்கள். அந்த பகுதியில் இருக்கும் கரும்பை சீனியாக்க , ஊரின் அருகிலேயே "தேசிய‌ கூட்டுறவு சர்க்கரை ஆலை" இருந்தது. சீனி தாண்டி அந்த சர்க்கரைக் கழிவு ,சாராயம் காய்ச்சவும் எடுத்துச் செல்லப்பட்டது.

சர்க்கரை ஆலைக்கும், "சாத்தியார் அணைக்கும்" சுற்றுலா செல்வது அந்தப் பகுதி ஆரம்பப்பள்ளிகளின் சடங்கு. சாத்தியார் (சாத்தி ஆறு) மேல் ஓட , பெரியாறு கீழே ஒட என்று , ஆற்றின் மீது ஆறு செல்ல பாலமும் உண்டு. அந்த பாலத்தை "அமுக்கு பாலம்" என்போம். பெரியாறு அமுக்கு பாலத்தின் அடியில் இறங்கிச் செல்லும்போது பெரும் சுழலை உருவாக்கும். அதில் சிக்கி இறந்தவர்கஃள் உண்டு.

ஊரில் ஒரே ஒரு தியேட்டர். தியேட்டரில் போடப்படும் பாடல்களை வைத்தும், சர்க்கரை ஆலை சங்கை வைத்துமே நேரம் சொல்வார்கள். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்தால் தியேட்டரில் ஓடும் படத்தின் கதை வசனம் கேட்கலாம் இரவில். மாடுகள் எங்களின் பங்காளிகள்.

ஊரில் அந்தப் கோட்டத்திலேயே பெரிய 'மாட்டாசுபத்திரி' இருந்தது. 'கேட்டுக்கடை' பக்கம் வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும் மாட்டுச் சந்தையும், வாடிவாசல் பக்கம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஒருமுறை நான் தியேட்டர் மதில் சுவரில் உட்கார்ந்து பருத்திப்பால் குடித்துக்கொண்டு இருந்த போது, ஆலையின்  சங்கொலி கேட்டது. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தவறாமல் ஒலிக்கும் அந்த சங்கு,  நேரம் கெட்ட நேரத்தில் ஒலித்தது. சர்க்கரை ஆலை பாய்லரில் ஒருவர் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் அதனால் தான் அப்படி அந்த நேரத்தில் சங்கு ஒலித்ததாக‌ பேசிக்கொண்டார்கள்.

ஊரின் பொருளாதாரம் விவசாயம் ,விவசாயம் மட்டுமே. வாத்தியார் வேலை பார்க்கிறார் என்பதற்காக என் தந்தைக்கு அந்த ஊரில் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. கடைசியில் அப்பாவின் அத்தை ஒருவர், அப்பாவிற்கு ஒரு ஏக்கர் வரை கொடுப்பதாகச் சொன்னதால், சூரங்குடியில் இருந்து என் அம்மா வாக்கப்பட்டார். அந்த ஒரு ஏக்கர் கதை தனி கிளைக்கதை. அந்தப் பக்கம் போகவேண்டாம். சகுனியின் தாயம் போல இருக்கும்.



மாட்டைக் கொடுமைப் படுத்துவதாகச் சொல்லப்படும் நவநாகரீக மாந்தர்களை எல்லாம் அன்று நான் பார்த்தது இல்லை. ஆடு மாடும் கண்மாயில் குளிக்க, நாங்களும் ஒருபக்கம் குளித்துக்கொண்டு இருப்போம். மாட்டோடு சேர்ந்து சக மாடாகவே மக்கள் வாழ்ந்து வந்த இடம் அது. வண்டிமாடுகளுக்கு லாடம் கட்டவும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்து இரும்பு பட்டி பூட்டவும் தனியான தேர்ச்சி பெற்ற ஆட்களும் இடமும் இருக்கும். காலை நேரத்தில் மாடுகளின் கால்களைக் கட்டி லாடம் கட்டும்போது,  அது கண்ணீர் விடுவது போல இருக்கும். பள்ளிக் காலத்தில் அதை நின்று பார்ப்பது எங்களுக்கு வாடிக்கை.

அதே மாடுகள் மாட்டுப் பொங்கல் அன்று , கொம்புகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, மிட்டாய் கலர் பிளாஃச்டிக் சரிகை பேப்பரில் மாலைகள் போடப்பட்டு, பொட்டுவைத்து ஊர் இராசாக்களாக பவனி வரும். தங்களின் அரசியல் சார்பை மாடுகளின் கொம்புகளில் வண்ணமாக தீட்டி வெளிப்படுத்துவார்கள். அச்சம்பட்டியார் 'டயர் வண்டி' மாடுகளுக்கு எப்போதும் காங்கிரசு வண்ணம் பூசப்பட்டு இருக்கும். கோவில் காளை , சல்லிகட்டு காளைகளின் கொம்பில் வண்ணம் பூசப்படாது. ஆனால் கொம்பு சீவிவிடப்பட்டு இருக்கும். இரண்டு கொம்புகளையும் சேர்த்து உருமா கட்டுவதுபோல பட்டு சேலை கட்டிவிடுவார்கள். அது கள்ளழகரை வரவேற்கச் செல்லும் தண்ணி பீச்சும் அழகர்களின் தலைப்பாகைபோல இருக்கும். மாட்டை வாடிவாசலில் விடுவதற்குமுன் இதை கழற்றிவிடுவார்கள்.

வாடிவாசலில் மாடு பிடிக்க முடியாத என் போன்ற சிறுவர்கள் , கன்றுக்குட்டிகளை விரட்டிப் பிடித்து எங்கள் வீரத்தைக் காட்டிக்கொள்வோம். காளைகள் காயடிக்கப்பட்டும், லாடம் கட்டப்பட்டும் மனிதர்களுக்காக உழைக்க வைக்கப்பட்டன. அவை எல்லாம் ஏதோ ஒரு தேர்ந்த நேர்கோட்டில் ஓடிக்கொண்டு இருந்தது. மாட்டை வதைப்பதாக யாரும் எண்ணவே இல்லை.


இப்படியான மனிதர்களும் , அவர்கள் மாடுகளும் உழைத்ததால் கிடைத்த அரிசி, கரும்பு மற்றும் வாழை எங்கள் ஊர்தாண்டி பலருக்கும் பயன் கொடுத்தது. அவர்களுக்கு எங்களின் சகதி வாழ்க்கையும் , மாடுகள் படும் பாடும் தெரியாமாலேயே இருந்தது.உழவு மாடுகள், வண்டி மாடுகள் என்று ஒருபக்கம் இருக்க, பால் கறக்கும் பசுவும் , எருமை மாடுகளும் அதிகம் இருந்து வந்தது. பசுமாடுகளை மேய்ப்பது முக்கிய வேலை. மாடுகள் மேயும் இடங்களில் அக்காமார்கள் 'சாணியள்ளப்' போவார்கள். வயலில் கிடைக்கும் புல், கரும்புத் தோகை என்று மாடுகளுக்கு தீனி கிடைக்கும்.

இப்படி நூற்றுக்கணக்கில் இருக்கும் மாடுகளுக்கு இடையே,  ஊரில் சில‌ காளை மாடுகள் இருக்கும். இந்தக் காளைகளின் ஒரே வேலை ஊரில் இருக்கும் பசுமாடுகளுக்கு 'கன்று' வரம் கொடுப்பது. இந்த காளைகளை வீட்டில் கட்டிப்போட மாட்டார்கள். ஊரில் அதுபாட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கும். தனிநபர்கள் வைத்து இருக்கும் காளைகள் தாண்டி,  ஊர்க் கோவிலுக்கு என்று ஒரு காளை இருக்கும். "கோயில்மாடு" என்ற பதவி , பட்டத்து யானை போன்ற பதவி. உங்கள் வயலில் நெல் தின்றாலும் , உங்கள் நெல் வயலை அது நாசப்படுத்தினாலும் கம்பால் அடித்து விரட்ட முடியாது. வாயால் மிரட்டி அதட்டி ஓட்ட வேண்டும். அடிக்கலாம் ஆனால் யாரும் பார்த்துவிட்டால் கோவில் மாட்டை அடித்த பாவம் வந்துவிடும்.

துடியான காவல் தெய்வாமான முனியாண்டி சாமிக்கு இரத்தம் காட்டவே ஊரில் சல்லிகட்டு நடத்தப்படுவதாகவும் ஒரு கதை உண்டு. அப்படிப்பட்ட கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட கோவில் மாட்டை அடிக்க யாரும் துணியார்கள். அல்லது அடித்தது தெரியவில்லை . என்னமாதிரியான கோபமான நிலையில் மாடு அடங்காமல் திமிறினாலும், கோவில் பூசாரி வந்து அதட்டினால் முனியாண்டி கோவில்மாடு அமைதியாகிவிடும் என்ற செவிவழிக்கதைகள் உண்டு.

எங்கள் முனியாண்டி கோவில் மாடு,மற்றும்  பக்கத்து ஊரில் உள்ள 'நல்லையன் சாமி' மாடும் எங்களுக்கு நண்பர்கள். எவ்வளவு மாடுகள் கூட்டத்தில் இவைகள் இருந்தாலும் எங்களால் அதை அடையாளம் காண முடியும். இப்படியான கோவில் மாடுகள், 'சினை'க்கான காளைகள், மூக்கணாங்கயிறு இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும். வேலை வெட்டி இல்லாத இந்த 'மைனர் மாடுகள்' , சில நேரங்களில் எங்காவது அருகே உள்ள குப்பைமேட்டை கொம்பால் குத்தி நோண்டிக்கொண்டிருக்கும். குப்பை போடப் போகும் பெண்கள் அதை ஒரு மிரட்டு மிரட்டி அனுப்பி வைப்பார்கள். அப்படிப் போகவில்லை என்றால் அல்லது சேட்டை செய்கிறது என்றால் , ஊரில் இதற்கென இருக்கும் இளந்தாரிகளிடம் சொல்லிவிடுவார்கள்.


சினையேற்றத்திற்காக அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக இப்படியான மூக்கணாங்கயிறற்ற காளைகளைப் பிடிப்பது ஒரு கலை. ஆம் எல்லோராலும்  செய்துவிட முடியாது. இதைச் செய்வதற்கு என்றே சிலர் இருப்பார்கள். எங்கள் வீடு சந்துகளில் வந்து நின்றுகொண்ட காளைகளைப் பிடிப்பது முதல், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 'கரடு' அருகே அலையும் மாடுகளை கயிறு வீசிப் பிடித்து வருவது வரை, கச்சிதமாக‌ செய்து கொடுக்க இளவட்டங்கள் இருப்பார்கள். மனிதர்கள், மாடுகள், விவசாயம், கண்மாய் , ஆறு , சகதி என்றுதான் எங்கள் ஊர் இருக்கும்.

அப்படியான மாடுகளுக்கும் மனிதனுக்குமான உறவில் , மனிதன் மாடுகளுக்கு எடுக்கும் விழாதான் மாட்டுப்பொங்கல். மாடு வைத்துள்ளவர்களுக்கு மாட்டுப்பொங்கலே முக்கியமான விழா. பொங்கல், மாட்டுப்பொங்கல் இதற்கடுத்து மூன்றாம் நாள் நடக்கும் விளையாட்டுதான் மஞ்சுவிரட்டு.

பொங்கலுக்கு ஒருவாரத்திற்கு முன் அந்த வாடிவாசல் திடல் சுத்தப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த ஒருவாரம் அப்பகுதி பெண்களுக்கு ஒதுங்கும் இடம் ஆற்றுப் பக்கம்தான். எங்கள் ஊர் முனியாண்டி 'கோவில் காளை' அலங்கரிக்கப்பட்டு ஊரின் முக்கியமான தெருக்களில் வந்து, இறுதியாக வாடிவாசல் மைதானத்திற்கு வரும். நாங்கள் அந்த ஊர்வலத்தில் இருப்போம். கத்திக்கொண்டே எங்கள் 'கோவில் மாட்டின்' பின்னால் செல்வது விருப்பமான ஒன்று. கிரிக்கெட் பற்றிப் பேசுவது போல , எங்கள் கோவில்மாடு எந்த எந்த ஆண்டு யாரை குத்தியது. பிடிக்க முயற்சித்தவர்கள் என்ன ஆனார்கள் என்று பேனைப் பெருமாளாக்கி கதை பேசுவோம்.

தேனி , கம்பம் பகுதியில் இருந்து வரும் காளைகள் எங்களின் எதிரி. அச்சம்பட்டி காளை  போன்ற‌ பக்கத்து ஊர் காளைகளைக்கூட சகித்துக்கொள்வோம். ஆனால் அடுத்த மாவட்டத்துக் காளைகள் பார்க்க அம்சமாக இருந்து விட்டால் கரித்துக் கொட்டி அவை தோற்க வேண்டும் என்று முனியாண்டி கோவிலில் சூடம் கொளுத்துவோம்.



சல்லிகட்டு சல்லிப்பயல்களுக்கானதது என்பது என் அம்மாவின் கருத்தாக இருந்து வந்தது. என் அம்மா விடைபெற்றது அதே பொங்கல் தருணத்தில் சல்லிகட்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்த நாளில் நடந்தேறியது. அந்த நாளை நான் மறக்க முடியாது. ஊரே பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தாலும், தடை விதிக்கப்பட்டு இருந்த சல்லிகட்டால் ஊர் ஒருவித நிம்மதியின்மையிலும் எப்போதும் நடந்துவிடக்கூடிய அசம்பாவித எதிர் நோக்கலிலும் இருந்துகொண்டே இருந்தது.  அதே சல்லிகட்டு நாளில், ஊர் முனியாண்டி கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் பால் வடிய, அதுவே தெய்வத்தின் சாபமாகவும் ஊர் மக்களால் கருதப்பட்டது. அந்த மரத்தருகே மக்கள் வேடிக்கை பார்க்க கூடியிருக்க, சல்லிக்கட்டு தடையால் காவலர்கள் திரண்டிருக்க, ஊரில் ஒரு முக்கிய துக்கநிகழ்வாக என் அம்மா இறுதி ஊர்வலத்தை மேற்கொண்டாள். அம்மாவிற்கு பிடிக்காத‌ சல்லிகட்டு, அவளின் இறுதி ஊர்வலத்தின்போது தடை செய்யப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது ஒரு தற்செயல்.

'மஞ்சுவிரட்டு' எப்படி 'சல்லிக்கட்டானது' என்று எனக்குத் தெரியாது. 'ஏறுதழுவுதல்' என்பது அன்று நடக்கும் போட்டி என்றாலும், இந்தக் காளைகளை சாதாரண‌ நாட்களில் பிடிப்பது அதைவிட பெரும் சவாலாகவே இருக்கும். தினந்தோறும் பொட்டி தட்டும் கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு கூகிள் போன்ற நிறுவனங்கள் வைக்கும் ஒருநாள் திருவிழா போல , இந்த மாடுபிடிக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு இந்த மஞ்சுவிரட்டு இருந்து வந்தது.

மஞ்சுவிரட்டு நாள்  அன்று நான் சொன்ன அந்த போலீசு ஃச்டேசன் ரோட்டில் , வாடிவாசலில் இருந்து தென்பக்கம் உள்ள சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு , வடக்கே பால்பண்ணை தாண்டி சந்தை வரை பரண் போட்டு இருப்பார்கள். இப்போது அந்த பால்பண்ணை இல்லை. அது பல வருடங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தில் ஏதோ ஒரு பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. பரண் சரிந்து காயமானவர்கள் உண்டு. வாடிவாசல் அருகே போடப்படும் பரணில் ஏற,  காசு மட்டும் தாண்டி அதிக சிபாரிசு வேண்டும். நானும் என் நண்பர்களும் படித்த ஆசிரியையின் வீடு வாடிவாசல் அருகே இருந்தது. அது போல என் நண்பர்களின் வீடுகள் கடைகள் என்று ஏதாவது ஒன்று எங்களுக்கு கிடைத்துவிடும். பரண் சரிய வாய்ப்புள்ளதால் எங்கள் அம்மா பரண் பக்கம் போகக்கூடாது என்று சொல்லித்தான் அனுப்பி வைப்பார். நாங்கள் வீடு வந்து சேரும் வரை எங்கள் அம்மாவிற்கு உயிர் ஒரு நிலையில் இருக்காது. இதனாலேயே சல்லிக்கட்டு எங்கள் அம்மாவிற்கு பிடிக்காத ஒன்றாக இருந்தது.  சல்லிகட்டிற்காக என் சின்ன மாமா ஊரில் இருந்து வருவதும், அவருடன் ஊர்க்காரர்கள் வருவதும் மட்டுமே அம்மாவிற்கு பிடித்தமான ஒன்று. சூரங்குடியில் இருந்து சல்லிகட்டு பார்க்க வரும் அவர்களால் ஓரளவிற்கு சல்லிகட்டு அம்மாவிற்கு பிடித்து இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை என் அண்ணன் அவன் நண்பர்களோடு சென்றுவிட, நான் நானும் எப்படியாவது போயே ஆகவேண்டும் என்று அழ , என் அப்பா என்னை அழைத்துச் சென்றார். சல்லிகட்டு அன்று ஊர் தெருக்களில் நடப்பதே குலை நடுங்கும் செயல். சல்லிகட்டு மாடுகள், சலங்கையுடனும், அதனைக் கொன்டு வருபவர்கள் பெரிய கம்புகளுடனும் நடந்து கொண்டும், ஓடிக் கொண்டும் இருப்பார்கள்.  ஏன் மாடுகளை திடல் தாண்டி ஊருக்குள் நடத்தி வருகிறார்கள் என்பதற்கு காரணம் உள்ளது. திடலில் தப்பி வரும் மாடுகள் ஊருக்குள் நுழைந்து தொலைந்துவிடாமல் இருக்க வெளியூர் மாடுகளுக்கு ஊர் சுற்றிக் காட்டுவார்கள்.

சிலமாடுகள் வாடிவாசல் திடல் செல்லும் முன்னரே திமிரிக்கொண்டு , கயிற்றை அறுத்து ஊருக்குள் ஓடிவிடும். அப்படி வந்த ஒருமாடு, எங்கள் வழியில் குறுக்கிட நானும் என் அப்பாவும் ஆளுக்கொரு பக்கமாக ஓடி விட்டோம். செல்போன்கள் இல்லாத காலத்தில் சல்லிகட்டில் தொலைந்த 10 வயது சிறுவனைத் தேடுவது என்பது கொடுமையான வேலையாக இருந்து இருக்கும் என் அப்பாவிற்கு. சல்லிகட்டு சூழல் அதீத பயம் நிறைந்த சுழல்.. நான் ஒரு வழியாக ஓடி பெண்கள் பள்ளி 10 வது வகுப்பு கட்டிடத்தின் அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறிவிட்டேன். சில அண்ணன்மார்கள் மாடு வருவது தெரிந்து ஏற்றிவிட்டார்கள். சில மணி நேரம் கழித்து என் அப்பா அந்த வழியாக வர, அவரைப் பார்த்தவுடன் நான் இறங்கி அவரோடு சேர்ந்துகொண்டேன்.

சரியாக சல்லிகட்டு நாளில்,  'தமிழ்நாடு சுற்றுலாத்துறை' வெளிநாட்டு பயணிகளை அழைத்து வருவார்கள். அவர்களுக்கான தனி மேடை  வாடிவாசலை ஒட்டி இருக்கும். வாடிவாசல் என்பது நான் சொன்ன அந்த திடலையும் , ரோட்டையும் இணைக்கும் விதமாக இருக்கும் சந்து போன்ற கட்டிடம். சல்லிகட்டுக்கு வந்த மாடுகள் திடலில் இருக்கும். அந்த திடலில் இருந்து, ஒவ்வொரு மாடாக இந்த வாடிவாசல் வழியாக திறந்துவிடுவார்கள். வாடிவாசல் பகுதியில் மாடுகள் நின்று விளையாடும். ஏறுதழுவும் வீரர்கள் அங்குதான் இருப்பார்கள். மாட்டை துன்புறுத்திவிட முடியாது. எழுதப்படாத சில விதிகளுக்கு எதிரா, க காளை சீண்டப்பட்டால் பின்னால் வரும் 'காளை ஓனர்' மற்றும் இளந்தாரிகள் கைகலப்பில் இறங்கிவிடுவார்கள். பின்னாட்க‌ளில் இந்த வெளிநாட்டு பயணிகளுக்கான மேடையை காங்க்ரீட் மேடையாக்கி இருந்தார்கள்.

சல்லிகட்டு ஊர்ப்பெருமை என்பது சிறுவர்களுக்கு தனியான போதை. எந்த ஊர் என்றாலும் "சல்லிகட்டு ஊரா?" என்று கேட்கும் போது ஒருவித திமிர் வரும். சல்லிகட்டு என்பது 'பறக்கும் கொடி' என்றாலும், விவசாயம் சார்ந்த உழைப்பு என்பது வேர் போன்றது எங்களுக்கு.

சல்லிக்கட்டில் விடப்பட்ட மாடுகள் அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரில் அலைந்து கொண்டு இருக்கும். உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர் மாடுகள் அதுவாக இடம் திரும்பிவிடும். வெளி மாவட்ட மாடுகள் திசை தெரியாமல் , இடம் தெரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கும். "அண்ணே தேனி மாடு இக்கிட்டு போச்சுண்ணே"  "அண்ணே அச்சம்பட்டு மாடு அக்கிட்டு போச்சுண்ணே" என்று  அவர்கள் கேட்காமலேயே வழி சொல்லிக் கொண்டு  இருப்போம் நாங்கள்..  வடக்கே  ஓடும் பெரியாற்றுத் தண்ணீரில் மாடுகள் விழுந்துவிடாமல் இருக்க , சல்லிகட்டிற்கு சிலநாள் முன் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள்.

ப்போதும் எல்லாம் இருக்கிறது அந்த விவசாயத்தைத் தவிர. ஊர்ச் சந்தை காணாமல் போய் ரோட்டிற்கு வந்துவிட்டது. கேட்டுக்கடையில் நடக்கும் மாட்டுச்சந்தை இல்லாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரின் இதயமாய் இருந்த மாட்டாசுபத்திரி பாழடைந்த இடமாகிவிட்டது. ஊரின் கடைசி என்று இருந்த எங்கள் வீடு தாண்டி, புதிய தெருக்கள் முளைத்து , ஊர் மேற்கே நீண்டு காந்திகிராமம் தாண்டி புதுப்பட்டிவரை போய்விட்டது. மாடுகள் சுற்றிக்கொண்டிருந்த 'கரடு' , காங்ரீட் வீடுகளாகிவிட்டது. விவசாயம் செத்ததால் , சர்க்கரை ஆலையும் சிதைந்து போய் பேருக்கு அரைத்துக்கொண்டுள்ளது.

மாடுகளும் நாங்களும் குளித்த கண்மாய்கள் இல்லாமல் போய் பல வருடங்களாகிவிட்டது. கொண்டாட்டமாக இருந்த சல்லிகட்டு சடங்காகிவிட்டது. அர்த்தம் எதுவும் இல்லாமல், ஆதார விவசாய வாழ்வைத் தொலைத்து விட்டபின்னர் , மூன்றுபோகம் விளைந்த இடத்தில் ஒரு போகம் எடுப்பதே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் இந்த சடங்கை வைத்து என்ன செய்ய என்று தான் எனக்கு தோன்றுகிறது. மனித வளர்ச்சியில்  கடந்து வந்துவிட்ட  வாழ்க்கைமுறைக்கு நாம் போக முடியாது. வெறும் சடங்காக ஆகிவிட்ட சல்லிகட்டில் மாடுகளின் வெற்றிக்காக வெறியூட்டப்பட்ட காலங்களும் இருந்தது உண்டு.

பசுமையான எங்கள் வாழ்வும் , எங்கள் மாடுகளையும் விட்டு நாங்களே வெகுதூரம் வந்துவிட்டோம். நான் வாழ்ந்த அந்த ஊர், ஊரின் பெயர் தவிர இன்று முற்றிலும் மாறியே உள்ளது. குடியிருப்புகளும் ,வள‌ர்ந்துவரும் வசதிகளும் பெரும் விவசாய நிலப்பரப்பை ஆட்கொண்டுவிட்டது.

இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விவசாயமும், மிச்சமிருக்கும் காளைகளும் அழிந்துபோன ஒரு பெரும் வாழ்வின் அடையாளமாகவே உள்ளது. சல்லிகட்டை வேண்டுமானால் சடங்காக நடத்தலாம், மீட்டெடுக்கலாம். ஆனால் அறுவடை விழாவாக இருந்த பொங்கலையும் அதை ஒட்டி நடந்த மாட்டுப்பொங்கல் மஞ்சுவிரட்டின் காரணத்தை மீட்டெடுக்க முடியுமா?


னக்கான கவலை என்னை ஆட்கொள்கிறது. நான் எனது  ஊரையும் , குடும்பத்தையும்
 , உறவுகளையும் , விரட்டித்திரிந்த‌ மாடுகளையும் தனியாக விட்டுவிட்டு பிழைப்புதேடி வந்துவிட்டவன். அதே ஊர் இன்றும் எனது சொந்தவூர் என்றாலும் , அங்கு வாழ்பவர்களுக்கே அதிக உரிமை உள்ளது. எனது நினைவில் இருக்கும் ஊருக்கு மட்டுமே நான் சொந்தக்காரன். இரண்டு மாதங்களுக்குமுன் ஊருக்குச் சென்ற நான், நான்கு நாட்களும் அப்பாவுடன் அருகில் இருந்துவிட்டு வந்துவிட்டேன். எனது ஊரில் நானே அந்நியமாகிக் கொண்டுள்ளேன். இந்த நிலையில் நான் அவர்களின் பிரதிநிதியாகப் பேசிவிடமுடியாது.

னால் என் நினைவில் இருக்கும் 'சல்லிகட்டு' நீங்கள் நினைக்கும் பிராணிகள் வதை அல்ல. அது பிராணிகளுடடான‌ விளையாட்டு. உங்களின் காதுகளுக்கு செய்தியாக‌ எட்டியுள்ள இந்த 'சல்லிகட்டு' இப்படி பொங்கல் விளையாட்டாக இல்லாதிருந்தால்கூட , வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் ஒரு வேலையாகவே இருந்து இருக்கும் எங்கள் ஊரிலும் எல்லா விவசாய பூமியிலும். இன்று உங்களுக்கு 'சல்லிகட்டு' அன்று நடக்கும் மாடு பிடிப்பு மட்டுமே தெரிந்து இருக்கும். அதே பாணி காளை மாடுபிடிப்பும், வண்டி மாட்டுக்கு லாடம் கட்ட அதை நான்குபேர் சேர்ந்து அமுக்கி , கால்களையும் ஒருமித்துகட்டி கால்களைக் 'லாடம்' கட்டுவதும் தினமும் நடந்த செயல்களே. உங்களுக்கு அது தெரியாமல் இருந்து இருக்கலாம்.

இன்று இராணுவ குதிரைகளின் குளம்புகளில் அடிக்கப்படும் இரும்பு வளையங்களும் , அவற்றின் முதிகில் ஏறி பயணிக்கும் சிப்பாயின் சுமையும் குதிரைக்கு உவப்பானது அல்லவே? அது போல உங்கள் வீட்டில் காயடிக்கப்பட்டு இருக்கும் நாய்குட்டிகளும், இரசாயனம் ஏற்றப்பட்ட வண்ணமீன்களும் மனிதன் செய்யும் கொடுமைகள்.

எங்களின் ஏறுதழுவுதல் ஒரு விளையாட்டு, சின்ன சீண்டல் பங்காளிச் சண்டை போன்றது. அதற்கு நானே சாட்சி. அது எங்கள் கொண்டாட்டம். எங்கள் வாழ்வு. தவறி மாட்டிற்கு ஏதேனும் ஆனால் பெரும் கொலைவிழும் அளவிற்கு சண்டை ஆகிவிடும். ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு 'சிங்கத்தை அடக்கு' என்று சத்தம் செய்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆம், பரமசிவன் கழுத்து பாம்புகள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

ந்தவிதமான வரலாறும் தெரியாமல் கொல்லாமை, சீவ காருண்யம் என்றும் பேசுபவர்கள், அவர்கள் தின்ற சோறும் இப்படி மாடும் மக்களும் புரண்ட சகதியில் இருந்தே விளைந்தது என்று தெரியாதவர்கள். நாங்கள் நடத்தும் மஞ்சுவிரட்டை குற்றம் சொல்லுமுன் ஏன் அப்படியான விழாக்கள் வந்தது என்று பார்க்கலாம்.

கோவிலில் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கும் யானைகளும் சரி, இந்திய இராணுவத்தில் இருக்கும் குதிரைப்படை குதிரைகளும் சரி , உங்கள் வீடுகளில் காயடிக்கப்பட்டு இருக்கும் நாய்களும் சரி மனிதனால் வதைக்கப்படுபவையே. காளை மாட்டை சினைக்காக அழைத்து வர சில இளந்தாரிகள் இருந்தார்கள். அது ஒரு கிராமம் சார்ந்த தொழிலாகவே இருந்தது. அந்த வேலை சார்ந்த ஒரு கொண்டாட்டமே "ஏறுதழுவுதல்". நிச்சயம் இராணுவக் குதிரை மற்றும் கோவில் யானைகளைவிட எங்கள் மாடுகள் எங்களில் ஒருவராகவே வாழ்ந்தது.


டுத்த முறை நீங்கள் சீவ காருண்யம் பற்றிப் பேசும் போது உங்களின் சேலைக்காக கொல்லப்பட்ட பட்டுப்புழுக்கள், உங்களின் முத்து மாலைக்காக கொல்லப்பட்ட சிப்பிகள்,  கோவில் யானைகள்,  இராணுவக் குதிரைக‌ள்  , உங்கள் வீட்டில் காயடிக்கப்பட்டு வாழும் நாய்கள் , புனித தளங்களில் வாசிக்கப்படும் மேள தாளங்களின் தோல் , மிருதங்க வார் எல்லாவற்றையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் எங்களின் தெய்வமாக மாடுகளை நடத்தவில்லை. சக தோழனாக , தொழிலில் ஒரு பங்காளியாகவே நடத்தினோம். எங்களின் வயிற்றுக்காக மட்டும் அல்ல உங்களின் வயிற்றுக்காகவும் அப்படி செய்யப்பட்டது.

*