Thursday, April 06, 2017

"மாது ஒரு பாகன்" :பெருமாள்முருகன் . அம்பேரிக்காவிலும் சாதித்திமிர் தமிழன்

னக்கும் கதைப் புத்தகங்களுக்குமான உறவு பலர் அறிந்தது. போகாத‌ பொழுதுகளை இழுத்துப்பிடித்து , போகவைக்க எனக்கு கதைப் புத்தங்களின் தேவை கிடையாது. அதே சமயம் புனைவுக்கதைகள் நம் சன்னலை திறக்கும் சாவிகள் என்பதில் மாற்றுக்கருத்தும் கிடையாது. சுவாசிப்பது போல வாசிப்பதும் ஒரு தன்னிச்சையான செயலாக இருக்கலாம். அதில் எந்த சிறப்பும் கிடையாது என்பது என் நிலை.

நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் ஒன்றில், மாதொருபாகன் என்ற கதை,  உள்ளூர் அம்பேரிக்க தமிழ்சங்க அரசியல் விளையாட்டில் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது என்று அறிய வந்தேன். ஏற்கனவே இணையப் பஞ்சாயத்துகளில் பெருமாள்முருகனுக்கு நேர்ந்த சம்பவங்கள் எனக்கு தெரிந்தே இருந்தது. ஆனால் அம்பேரிக்காவரை வந்து ஆடும் இந்த சாதிக்கொடுமைகள் குறித்து பேச வேண்டிய தேவையால் இன்று பேசுகிறேன்.

புனைவுக்கதைகளை அப்படியே தனக்கான சட்டையாக  எடுத்துப்போட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்புவதில் பயன் இல்லை. சல்மான் ருஃச்டி , ஓவியர் ஃகுசேன், தஃச்லிமா என்று பலரை ஓட ஓட விரட்டியுள்ளது இந்த சம்முவம். அதே சமயம் , பைபிள்,குரான்,இராமயணம் என்று பலவற்றை கொண்டாடி,  அப்படியே உண்மை என்று   நம்பும் சம்முவமும் இதுதான்.  எது புனைவு? எது வரலாறு?   எது வரலாற்றின் மீதான ஆசிரியரின் பார்வை? என்று பிரித்துப் பார்ப்பது நம் மூளை என்பதால், அதன் பகுத்தாயும் திறனையொட்டியே நமது பகுத்தறியும் அறிவின் எல்லை இருக்கும்.

நோவாவின் கப்பலில் , அண்டார்டிகாவில் இருந்து மண்டைய மண்டைய ஆட்டி, பல ஆயிரம் மைல்கள் தூரம் நடந்து வந்து , அரபு நாட்டுப்பக்கம் நோவாவின் கப்பலில் ஏறியதால்தான் இன்றும் பெங்குவின்கள் உள்ளது என்றும், அப்படி கப்பலைத் தவறவிட்டதால்தான் டைனோசர்கள் இல்லை என்றும் நம்பி, வாரம்தோறும் அந்த கதைகளை வாசிப்பவர்கள் இன்றும் உள்ளார்கள். சீக்கா வைரசுகூட ( zika virus)இப்படி நோவாவின் கப்பலில் ஏறிக்கொண்ட ஒன்றுதான். 2016 ஒலிம்பிக்கில் இது பிரேசிலைப் பாடாய்படுத்தியது. இதுபோன்ற வைரசுகளை நோவா ஏற்றிக்கொண்டு வராமலேயே இருந்து இருக்கலாம்.

இப்படியான கதைகளில், புதியதாய் வந்து சேர்ந்து இருப்பது பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'. எந்த ஒரு புனைவிலும் வரலாற்றின் எச்சங்கள் அல்லது வரலாற்றுச் சம்பவங்கள் என்று நம்பியவற்றை ஆசிரியர் கருவாக வைத்து , அவரின் கற்பனையைப் பின்னுவார். இது வாசிக்கும் இரசிகர்களுக்கு வாசிப்பின்பம் கொடுக்க. பெருமாள்முருகனின் இந்தக் கதை மையமாக வைக்கும் கருத்து அல்லது இந்தக் கதை வழியாக அவர் சொல்லவரும் வரலாற்றுக் கருத்து அல்லது வரலாற்றில் அவரின் பார்வை அல்லது அவரின் ஆராய்ச்சிகளின் வழி வந்த கருத்து எது என்று கேட்டால், "திருச்சங்கோடு திருவிழாவில் கிடைக்கும் கட்டற்ற புணர்வுச் சுதந்திரம்". அவ்வளவே. அதைத் தாண்டி இதில் வரலாற்றுப் பார்வை அல்லது குறிப்பு என்று வேறு ஏதும் இல்லை. இந்த இழையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைமாந்தர்களால் இந்தக் கருத்து , கதையாக வளர்க்கப்படுகிறது.

என்னைப் போன்ற ஆட்களுக்கு விவரணைகள் தேவை இல்லாதது. "சரி பாசு மேட்டர் என்ன சொல்லுங்க" என்று குறுக்குவெட்டுத் தோற்றத்தை மட்டுமே காண விளையும் இரகம் நான். இருந்தாலும் பொறுமையாக பெருமாள்முருகனின் கதையைப் படித்தேன். பெருமாள்முருகன் அப்படி என்னதான் எழுதியுள்ளார் என்று வாசித்தேன். 190 பக்கங்கள் சில மணி நேரங்களில் முடிந்து போயிற்று. பொன்னாவின் வீட்டை அறிமுகப்படுத்தும் போது இருக்கும் விவரணைகள் , வீடு, பூவரச மரம் என்று நின்றுவிடுகிறது. ஏதோ வெட்ட வெளியில் 'செட்' போட்ட மாதிரி விட்டுவிட்டார் வீட்டை. ஊரை, தெருவை கொஞ்சம் எழுதிக்காட்டி இருக்கலாம் அறிமுகத்தில். திருச்செங்கோடு , பாவாத்தா ,தேவடியாள்தெரு என்று அவர் சொல்லிச் சென்றாலும் முழுமையாக ஒரு ஊரின் சித்திரத்தை வரைந்துகொள்ள‌ முடியவில்லை என்னால். திருவிழாவிற்கு நம்மைக் கூட்டிச்செல்ல அவசரப்படுகிறார். அதிக விவரணைகள் அங்கே இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

பெருமாள்முருகன் இந்தக் கதைவழியாக சொல்லவரும் செய்தி அல்லது இந்தக் கதைக்காக அவர் மெனக்கெட்டுச் செய்த ஆராய்ச்சியின் முடிவு எது என்று பார்த்தால் , கட்டற்ற புணர்வுச் சுதந்திரம் கொண்ட அந்தக்கால திருவிழா என்ற விடைதான். அதுதாண்டி இங்கே வரலாற்றுக்குறிப்பாக ஏதும் இல்லை. இந்தியாவில் பல கோவில் சுவர்களில் புடைப்புச் சிற்பமாக, கோபுரங்களில் பதுமைகளாக அலங்கரிப்பவை பாலியல் உறவு சார்ந்த கலவிநிலைகளே. காமசூத்திரம், கசுரகோ சிற்பங்கள் என்று பல சாட்சிகள் இந்தியாவின் கட்டற்ற பாலியல் உறவுகளுக்கு இன்றும் சாட்சியாக உள்ளது.

14 Temples In India Where You Get A Lot More Than Just The Traditional Prasad
http://www.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html
இவை எல்லாம் வரலாற்று எச்சங்கள்.  இன்று வாழும் நம்மை அது பெருமைப்படுத்துகிறதா அல்லது அசிங்கப்படுத்துகிறதா என்பது, நம் மூளையில் ஏற்றப்பட்டு இருக்கும் புனித/மத/சாதிய/ கருத்துக்களைப் பொறுத்து மாறும். இந்தியாவை இந்தக் கோவில்கள் அசிங்கப்படுத்துகிறது என்று சொல்லி இவற்றை இடித்துவிட்டால் இழப்பு நமக்கே. மகாபாரதக் கதையை உக்காந்து படிச்சாலே தலை சுத்தும். பாலியல், கலவி குறித்தான அந்தக் கால நடைமுறைகள், பிள்ளை பெற அவர்கள் செய்த முயற்சிகள் அதற்கான சாமி விளக்கங்கள், சப்பைக் கட்டுகள், என்று பல உள்ளது அதில். நாம் இன்றும் அதை படிக்கிறோம். வேலை வெட்டி இல்லாத சிலர் அதை தூர்வாரி, அதன்மேல் அவர்களின் புனைவைச் சமைக்கிறார்கள்.

தமிழில் உள்ள பல வரலாற்றுக் கதைகள் , காப்பியங்கள், கவிதைகளில் களவொழுக்கம், தொடுப்பு, திறப்பு என்று பலகூறுகள் உள்ளது. தலைவன் தலைவி என்பது கணவன் மனைவி அல்ல. கதையில் வரும் முக்கிய ஆண் பெண் கதாபாத்திரங்கள். அவர்களின் காதல் , கலவி, களவொழுக்கம் எல்லாம் படித்து வளர்ந்தவர்கள்தான் நாம்.

பொன்னாவையும் மகாபாரத குந்தியையும் , காளியையும் மகாபாரத  பாண்டுவையும் ஒப்பிடலாம்.  அப்படி ஒப்பிட்டால் பெருமாள்முருகன் எதையும் புதிதாகச் சொல்லவில்லை என்ற உண்மை தெரியவரும். அவர் புதிதாகச் சொன்னது , கதை நடக்கும் இடமாக அவர் சொன்ன திருச்சங்கோடும் , அந்த சாதி சனங்களும்தான்.

பெருமாள்முருகன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு "நம்ம சாதிப் பொம்பளைகளை திருவிழாவில் பிள்ளைவரம் தேடுபவர்கள் என்று ஆக்கிவிட்டார். அவரைக் குத்து , கொல்லு, தடை செய்" என்பதுதான். இதைச் சொல்பவர்கள் மகாபாரத்தைப் போல மாதொருபாகனையும் முழுக்க முழுக்க அக்மார்க் வரலாறாகப் பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இவர்களிடம் புனைவாய் 'காதில் செய்தி சொல்வது' வேலைக்காவாது. கதை எழுதும் தொழிலாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

ஊர்த்திருவிழாவில் காளியும் , முத்துவும் , மற்றவர்களும் அடுத்தவர்களின் பெண்களுக்கு 'சாமி'யாய் அலைந்த கதையும் இதில்தான் உள்ளது. எந்த ஒரு நபரும் "நம்ம சாதி ஆண்களை , திருவிழாவில் கோவணத்தோடு நீட்டிக்கொண்டு அலையும் காமுகன்கள்   என்று சொல்லிவிட்டார் பெருமாள்முருகன்" என்று சொல்லவேயில்லை. ஒரு காமச் செயலில் ஈடுபடும் ஆணை ஒன்றும் சொல்லாமல் , பெண்ணை முன் வைத்து , கலாச்சாரம் காப்பதே நம் வேலை என்றாகிவிட்டது.

பிள்ளை இல்லை என்பதால் பொன்னாவை அந்த ஊர் பெண்கள் (அதே சாதி சனம்) குத்திக்கிழிக்கிறது வார்த்தைகளால். பிள்ளை இல்லாத காரணத்தால் அவளை நம் படுக்கைக்கு கடத்திவிடலாம், வந்துவிடுவாள் என்று அதே ஊர் ஆண்கள் (அதே சாதி சனம்) வலைவிரிக்கிறது. இதையும் அவர் காட்சிப்படுத்தியுள்ளார். பெருமாள்முருகனை எதிர்த்துப் போரிட்டவர்களில் யாரும் " அட பக்கிகளா இன்றும் நம் பொம்பிளைகளை , பிள்ளை இல்லை என்று இப்படித்தானே பாடாய்ப் படுத்துகிறீர்கள். நம்ம சாதிப் பிள்ளைகளை நாமே இப்படிப் படுத்தினா என்னதான் விடிவு" என்று அதே சாதி சனத்தை கண்டிக்கவில்லை. மாறாக பெண்களை கேவலப்படுத்திவிட்டார் என்று கொடிபிடித்தார்கள். அதே பெண்களுடன் உறவு கொண்ட அதே சாதி சன ஆண்களை ஒன்றும் சொல்லவில்லை.

பிள்ளை இல்லாத பெண்களை , அதே சாதி மதப் பெண்கள் வார்த்தைகளால் மறைமுகமாக சாட்டையடி அடிப்பதும், நல்ல காரியங்கள் துக்க காரியங்களில் அவர்களை சடங்குகள், சாத்திரங்கள் என்ற பெயரில் அதே சாதி மதப் பெண்கள் அசிங்கப்படுத்துவதும் இன்றும் உள்ளது.

"இப்படியான சாதி மத சாங்கியங்களை நாம் இன்றும் கட்டிக்கொண்டு அழுகிறோமே, இப்படி இருந்தால் நாமே இவர்களுக்கான திருவிழாவை திணிப்பவர்களாகிவிடுவோமே" என்று இவர்கள் நினைப்பதே இல்லை. பெருமாள்முருகன் கதையினால் ஏற்பட வேண்டிய மாற்றம் என்றால், அந்த சாதி /சன/ மத மக்கள் , அவர்களின் பிள்ளையில்லாப் பெண்களை நடத்தும்  முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இதை விட்டுவிட்டு கதைசொல்லிய பெருமாள்முருகனை சட்டையைப் பிடிப்பது சரியல்ல.

"மாதும் ஒரு பாகம்" என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் அதை எப்படி நியாயப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. பெண்ணுக்கும் சம வாய்ப்பு திறந்தவெளிக்கலவியில் உள்ளது என்பதாலா? அல்லது உடலால் பிரியாமல் இருக்கும் பிரியத்தை , காளி பொன்னாவின் மீது வைத்துள்ள காதல் என்று சொல்கிறாரா தெரியவில்லை. பாவாத்தாதான் மாதொருபாகன் என்று சொல்கிறார். ஆனால் பாவாத்தாவின் கதை வேறாக உள்ளது. காட்டில் வன்புணர்வு செய்யப்பட்ட மலைப்பெண்தான் பாவாத்தா என்று நான் புரிந்துகொண்டேன். ஆனால் கோவில் பூசாரி அதுதான் இந்தப்பழம் என்று செந்தில் காமெடியாய் குழப்புகிறார் மிசுடர் முருகன்.

இன்றுவரை "மாதும் ஒரு பாகம்" என்பது சிலையாய்தான் உள்ளதே தவிர செயல்பாட்டில் இல்லை. ஆம் அந்தக் கோவிலுக்கு பெண்கள் அர்ச்சகராக முடியுமா? அல்லது அய்யப்பன் கோவிலுக்கு நாப்கின் போட்ட பெண்கள் போகத்தான் முடியுமா? கோவணத்தில் விந்துசிந்தினாலும் ஆண் எங்கும் போகலாம். ஆனால் பெண் அப்படிப்போக முடியாது. எனவே "மாதும் ஒரு பாகம். எங்ககிட்ட அர்த்தநாதிசுவரர் இருக்கார்" என்று சொல்லாமல் செயலில் காட்டலாம அந்த சாதி சன மக்கள்.

விழிப்பதற்கான‌  ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வதைவிட்டுவிட்டு கதைசொல்லியைப் பழிப்பது வீண். ஆஃப்டரால் அது ஒரு புனைவு.

**

இந்த வருட அம்பேரிக்க டான்ஃசு கிளப்பிற்கு (FeTNA) பெருமாள்முருகன் வந்தால் தங்களின் சாதித்திமிரில் ஒரு மாற்று குறைந்துவிடும் என்று நினைக்கும் ஆண்களும் பெண்களும் ,  உங்கள் வீட்டில் , நீங்கள் எப்படி உங்கள் மத சாதி சாங்கிய சடங்குகளில் பிள்ளையில்லாப் பெண்கள், கணவனை இழந்த  கைம்பெண்கள், குருதி கொட்டும் நாளில் இருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் அல்லது நீங்களே உங்களை நடத்திக்கொள்கிறீர்கள் என்று சிந்திக்கலாம்.

#மாது ஒரு பாகன்

கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்
http://kalvetu.balloonmama.net/2010/06/fetna.html

No comments:

Post a Comment