Thursday, September 15, 2005

பதிவு04:வாஷிங்டனில் வளைகாப்பு-4

வாஷிங்டனில் வளைகாப்பு - நிறைவுப் பகுதி


நாங்கள் எங்கே தொலைந்துபோய் விடுவோமோ என்று நண்பர் விழாமண்டபத்தின் வாசலிலேயே காத்து இருந்தார். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு மூட்டை முடிசுக்களை இறக்கி குழந்தைகளுடன் மண்டபத்தை (Community Center) நோக்கி நடந்தோம்.

இங்கெல்லாம் கம்யூனிட்டி சென்டர் என்பது ஒரு நல்ல நோக்கத்துடன் நடந்து வருகிறது. குழந்தைகள் விளையாட இடம், பெரியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், தனியார் /பொது நிகழ்ச்சி நடத்துவதற்கான சிறிய மற்றும் பெரிய அரங்கங்கள் ,குழந்தைகளுக்கான கோடை விடுமுறைப் பயிற்சிகள் எனப் பல வகைகளில் இந்த கம்யூனிட்டி சென்டர்கள் செயல்படுகின்றன. இவையெல்லாம் அந்த அந்த பகுதி County (மாவட்டம் ??பேரூராட்சி ??முனிசிபல் ?? ) நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன.

விழாவிற்கான சிறிய அறைகளும் பெரிய அரங்கங்களும் மிகக்குறைந்த வாடகையில் கிடைக்கும். பூங்காக்களை பராமரிப்பு செய்வத்ற்கென தனி துறையே இருக்கும். இதைவிடச் சிறப்பம்சம் குழந்தைகளின் கல்வியில் இவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு. http://projectenlightenment.wcpss.net/ என்னும் ஒரு அமைப்பு பல வழிகளில் குழந்தைகளுக்கு உதவுகிறது. இது அந்த county பொது நூலகத்துறையுடன் சேர்ந்து செயல்படுகிறது.

நூலகங்கள்..... இங்கு உள்ள நூலகங்களின் அமைப்பும் பயன்பாடும் பற்றி எழுத தனிப் பதிவே போடவேண்டும். எனக்குப் பிடிச்சது நூலகத்தில் இலவசமாகக் கிடைக்கும் வீடியோ கேசட்தான் ( ஹி..ஹி.. நம்ம புத்தி).

கம்யூனிட்டி சென்டரின் உள்ளே நுழைந்தவுடன் பெரிய அந்தக்காலத்துக் கடிகாரம் பார்வைக்காக(Show case) வைக்கப்பட்டு இருந்தது. கவுண்ட்டியால் பராமரிக்கப்படும் இந்த இடம் ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒப்பானதாக தூய்மையுடனும் அழகாக அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.ஒரு பெரிய மீன் தொட்டியும் அதனுள் இருந்த பெரிய மீன்களும் பொடிசுகளை கவர்ந்து விட்டது. இரண்டு பொடிசுகளும் மீன் தொட்டியை விட்டு வர மறுத்து விட்டார்கள்.

இவர்களை இப்படியேவிட்டால் விழாவிற்கு யார் போவது? ஒருவர் இவர்களுடன் நிற்க மற்றவர்கள் விழா அறைக்குச்சென்றோம்.நண்பர் ஏற்பாடு செய்து இருந்த விழா அரங்கம் 40-50 பேர்களுக்குப் போதுமானதாக இருந்தது. எங்களுக்கு முன்னரே ஒரு சிலர் வந்து இருந்தனர். Baby Shower என்று எழுதப்பட்ட பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. பெண்கள் தங்களுக்குள் பட்டுப்புடவையில் ஆரம்பித்து ஊர்ப்பொரணி உலகப்பொரணி பேச ஆரம்பித்துவிட்டனர்.

நாமளா...நாம்மாளுவ என்னத்தப் பேசுவானுக? வழக்கம் போலதான்.


வேலை எப்படிப் போகுது?

என்னமோ இன்னும் 3 மாசம் ஓடுமுன்னு நினைகிறேன்..பாப்போம்.

எக்ஸ்டன் பண்ணுவாங்க?

தெரியல போனதடவ பண்ணினாங்க இப்ப என்ன ஆகுமோ?

இங்க எல்லாருக்கும் நிலையான வேலையோ இருப்பிடமோ அமைந்துவிடுவதில்லை. வேலையும் இருப்பிடமும் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கும். குழந்தை குட்டியுடன் அடிக்கடி ஊர் மாறுவது மிகச் சிரமம்.


அனைவரும் நண்பருக்கு விழா அமைப்பு வேலையில் உதவ ஆரம்பித்து விட்டோம். சாப்பாடு எடுக்க சிலர் சென்றனர். வாண்டுகள் சத்தம் அறைய நிரப்பியது. வாண்டுகள் இல்லாத பங்ஷன் என்னா பங்ஷன் ? இந்தப் பொடுசுகள் இருந்தால்தான் விழாவுக்கு அழகே. அதுகள் போடும் சத்தமும், சண்டையும், மாறி மாறி வந்து போகும் சிரிப்பும், அழுகையும் அரங்கை நிறைத்துவிடும்.

நான் அப்படியே அந்த community center ஒரு சுற்று சுற்றி வந்தேன். அருகிலே உள்ள பெரிய விழா அரங்கில் வட இந்திய சமுதாய மக்கள் Graduation Party கொண்டாடிக் கொண்டு இருந்தனர். சும்மா தீபாவளியையும் ஹோலிப் பண்டிகையயுமே ஒரு கலக்கு கலக்கும் இளசுகள் Graduation Party யில் கலக்கோ கலக்கு என்று கலக்கிக் கொண்டு இருந்தனர். ம்..ம்.. நம்ம ஊரில் விழாக் கொண்டாட்டங்கள் குறைவு. என்ன செய்வது என்று தெரியாமல் பல நாட்கள் சும்மவே இருப்போம்.

தீபாவளியை விட்டால் நம்மக்கு ஏதானும் பண்டிகைக் கொண்டாட்டம் உண்டா?

பொங்கல்..?

அட விடுங்க சார் எத்தனை பேர் பொங்கலை கொண்டாடுறோம். தமிழகம் ரொம்ப மோசம். கேரளாவில் ஓணம் ஒரு நல்ல சமுதாயக் கொண்டாட்டம். நான் இங்கு வந்த பிறகு எந்தக் கொண்டாட்டங்களையும் விடுவதில்லை.

அடடா நம்ம பங்ஷன் ஆரம்பிச்சுருச்சு வாங்க வாங்க எல்லோரும் உள்ளே போவம்.

ஒரு நல்ல ஹோட்டலில் இருந்து அட்டகாசமான உணவு வகைகள் வந்து சேர்ந்த்தாயிற்று. நம்ம விழா நாயகி, கர்ப்பிணி வயிற்றோடு வலம் வந்து கொண்டு இருந்தார். ஊரில் இருந்து அவரது மாமியார் தான் கொண்டுவந்த நகைகள் , சடைக்குத் (ஜடை ??) தேவையான அலங்காரப் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்து மிக நன்றாக அலங்காரம் செய்து இருந்தார். ஒரு தட்டில் அழகாக ரோஜா மலர்களை வைத்து நன்றாக அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.

போட்டோ எடுப்பது வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை நானும் நியூஜெர்சி நண்பரும் செய்து கொண்டு இருந்தோம். எனக்கு வீடியோ எடுக்கும் வேலை. நண்பரின் அம்மா தனது மருமளின் சடை அலங்காரத்தை மறக்காமல் படம் பிடிக்கச் சொன்னார். பெண்கள் அனைவரும் கூடி சம்பிரதாயமான வளையல் போடும் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். ஒவ்வொருவராக விழா நாயகிக்கு வளையல் போட்டு வாழ்த்தை தெரிவித்தனர்.

இந்த விதமான நிகழ்ச்சிகளுக்கு மத ரீதியாக அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி தாயாகப் போகிறவரை வாழ்த்துவதற்கு இது வழி செய்கிறது. எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இது ஏதோ பெண்கள் விழாவாகவே நடத்தப்படுகிறது. ஒரு பொதுவான வைபவ நிகழ்ச்சியாக (ஆண்களும் பங்கேற்கும்) யாரும் நடத்திப் பார்த்ததில்லை.

அதுவும் பெரும்பாலும் பெண்ணின் அம்மா வீட்டில் (சில சமயம் கணவர் இல்லாமலேயே ) நடத்தப் படுகிறது. பூப்புனித நீராட்டு விழாவுக்கெல்லாம் (இது தேவையா?? அந்த சண்டைக்கெல்லாம் நான் வரலீங்க) ஊரையே கூப்பிடும் நம்ம சாதி சனம், இதில் யாரையும் கண்டுகொள்வதில்லை. மக்கட்தொகை அதிகமுள்ளதால் புதுக்குழந்தைக்கும் புதுத்தாயிற்கும் வரவேற்பு இல்லையோ?

ஆனால் இங்கு, இந்த விழாக்களும் குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களும் இல்லை என்றால் குடும்ப விழாக்களே இல்லாமல் போயிருக்கும்.

காதுகுத்து, கல்யாணம் போன்றவைகள் ரொம்ப அரிதாக நடைபெறும். 90% மக்கள் கல்யாணம் காது குத்துக்கு இந்தியா போய்விடுகின்றனர். ஒரு வேளை இந்த புதுக் குழந்தைகளுக்கு சிட்டிசன்சிப் இல்லாமல் இருந்தால் மகப்பேறுக்கு மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி இருப்போமோ? இருக்கலாம் யார் கண்டார்.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தது. அனைவரும் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தோம். காலையில் இருந்து அலைந்த அலைச்சலுக்கு அருமையான சாப்பாடு. சாப்பாட்டின் போதுதான் பல புது நண்பர்களுடன் அறிமுகம் செய்துகொள்ள முடிந்தது.

என்னதான் சொல்லுங்கள் இந்த மாதிரியான விழாக்களில் சாப்பிட்டுக்கொண்டே சினிமா , அரசியல், ஊர்வம்பு பேசுவது ஒரு நல்ல பொழுது போக்கு. ஜாக்கிரதை அரசியல் பேசி சண்டையில் முடிந்துவிடக்கூடாது. எனக்கு அது பல முறை நடந்துள்ளது. இப்போதெல்லாம் மிகச் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.



விழா முடிந்த கையோடு நண்பரின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

மற்றொரு நண்பன் வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடித்துவிட்டு பல நல்ல நினைவுகளோடு அனைவரும் பிரியாவிடை பெற்றோம்.

முற்றும்.

பி.கு:

நண்பரின் விழா சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அனுமதி இல்லாததால் இப்படி நெகட்டிவ்வாகப் போடப்பட்டுள்ளது.