One Less Car Today
எங்க போற நீ?
அடையாறு.
அடையாறுன்னா எங்க எல்லாமே அடையாறுதான் எந்த ஸ்டாப்புல எறங்கனும் நீ?
அடையாறு சிக்னல்.
யே இன்னா நீ காலங்காத்தால வந்து உயிர வாங்குற..உனக்கு நாந்தான் கிடைச்சனா? சில்லரை இல்ல உன்னாண்ட? முழு நோட்டா நீட்டுற?
இல்லையேப்பா இதுதான் இருக்கு.
சரி இறங்கும்போது மறக்காம வாங்கிக்க. ஒன்ன மாதிரி 10 பேரு வந்தா நான் எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்க முடியாது. அப்புறம் கண்டக்டரு கொள்ளை அடிசுட்டானு, பொலம்பக்கூடாது இன்னா புரிஞ்தா?
சரிப்பா
..
சரியான சில்லறை இல்லாமல் எத்தனை முறை நாம் நம்மூர் பேருந்தில் சென்று திட்டு வாங்கியிருக்கிறோம்? சரியான சில்லரை தரவும் என்று எழுதி வச்சாலும் நாம் கண்டு கொள்வதில்லை. இதற்காக மாத பாஸ்,நிறுத்தத்திலேயே பயணச்சீட்டு வசதி என்று பல இருந்தும் அதிகப் பேர் இன்னும் சரியான சில்லரை இல்லாமல் தான் பயணம் செய்கிறார்கள்.
எங்க அப்பா எப்போதுமே சரியான சில்லரையுடன்தான் பஸ் ஏறுவார்.
ஆனாலும் ஒருமுறை ஒரு 10 பைசா குறைவினால் (சரியான சில்லரை இல்லை) முழு நோட்டை நீட்ட ..."சில்லரை இல்லைனா எறங்கிக்க", என்று இறக்கி விடப்பட்டார். யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. அன்னைக்கு அந்த கண்டக்டருக்கு என்ன பிரச்சினையோ? அப்பாவின் போதாத காலம். அப்பா, கண்டக்டர் சொன்னபடி இறங்கிக் கொண்டார்.
பஸ்சில் நாம் இறங்க வேண்டிய இடம் வந்தால் குதிக்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லைனா அம்புட்டுத்தான். அதுவும் ஏறும் வழி , இறங்கும் வழி எல்லாம் சும்மா ஒரு தாமசுக்காக எழுதி வைத்து இருப்பார்கள். யாரும் பார்ப்பது கிடையாது. ஆண், பெண்களுக்கான இருக்கைகளின் ரிசர்வேசன் ஒவ்வொரு மாவட்டங்களில் ஒரு மாதிரி இருக்கும்.
உதாரணமாக மதுரைப் பகுதியில் வலதுபுறம் ஆண்களும் இடதுபுறம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.சென்னை பட்டணத்திலும் கோயம்புத்தூரிலும் வேறுமாதிரி இருக்கும். பெரும்பாலும் இது அந்தந்த பேருந்துக் கழகத்தின் இயக்குனர்களின் முடிவைப் பொறுத்து அவ்வப்போது மாறும்.
கேரளாவில் ஒரு மணி (Bell) ட்ரைவரின் சீட்டுக்குமேலே இருக்கும். கண்டக்டரோ அல்லது இறங்க வேண்டிய பயணியோ அதைப்பிடித்து இழுத்தால் ட்ரைவர் பஸ்சை ஸ்டாப்பில் நிறுத்துவார். இதுபோன்று
கோயம்புத்தூரிலும் இருக்கும். மற்ற இடங்களில் பார்த்தது கிடையாது.
எனது பையன் பாலர் பள்ளி (Pre School) செல்ல ஆரம்பித்த பிறகு ஒரு காரை வைத்து சாமாளிக்க முடியாமல் போனதால், நான் வாரத்தில் 2 நாட்களுக்கு பஸ்சில் செல்ல ஆரம்பித்தேன். நியூஜெர்சி (New Jersey) -ல் தங்கி மான்ஹாட்டனில் (Manhattan) வேலை பார்த்துக் கொண்ட்டிருந்தபோது கார்
தேவைப்படவில்லை. ஆறுமாதங்கள் கார் இல்லாமலேயே ஓட்டிவிட்டோம்.
இந்த ஊர் அப்படி இல்லை. சின்ன ஊர். பொது வாகனப் போக்குவரத்து எல்லா நேரங்களிலும் இருக்காது.
TTA Bus புண்ணியத்தில் எப்படியோ எனக்கு குறைந்தபட்ச வசதி கிடைத்தது. வீட்டில் இருந்து பஸ் ஸ்டாப் அரைமணிநேர நடை (5 நிமிட கார் பயணம்)தொலைவில் உள்ளது. மழை,குளிர்காலத்தில் மனைவி என்னை இந்த பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார்.
மழை குளிர் இல்லாத காலங்களில் நான் நடந்து வந்து விடுவேன். என்ன ஒரே ஒரு பிரச்சனை. பஸ் ஸ்டாப் வருவதற்குள் வேர்த்து தொப்பலாக நனைந்து விடுவேன். இந்த ஊர் அப்படி. மேலும் பொதுவாகவே எனக்கு வேர்க்கும் உடம்பு.
பள்ளி, கல்லூரி காலங்களில் தேர்வின் போது பேப்பர் நனைந்துவிடும். அதற்காக கர்ச்சீப்பை கைக்கடியில் விரித்து வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவேன். நம்ம போதாத காலத்திற்கு கேள்விக்கு பதில் தெரியாமல் டென்சனானால், நம்ம பேப்பர் கதி அதோகதிதான்.
இந்த வேர்வைப் பிரச்சனைக்குத் தீர்வாக, நான் ஆபிசுக்கு போட வேண்டிய சட்டையை தனியாக எடுத்து பையில் வைத்துக்கொள்வேன். வீட்டில் இருந்து ஒரு சாதாரண சட்டையில் பஸ் ஸ்டாப் வந்து விடுவேன். இங்கு அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் உடை மாற்றிக்கொண்டு புதுசு கண்ணா புதுசாக பஸ் ஏறிவிடுவேன்.
இந்த வாரம் நம்ம TTA Bus காரர்கள் Smart Commute உடன் சேர்ந்து One Less Car Today என்ற வாரத்தை கொண்டாடுகிறார்கள். அதனால், இந்த வாரம் பூராவும் இலவச பஸ் பயணம். ஒரு தடவை பயணத்திற்கு (One trip) ஒரு காலத்தில் $1.50 வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது $2.00 வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களும் பாவம், என்ன செய்வார்கள். 40 இருக்கைகள் கொண்ட பஸ், அலுவலக நேரமான peak hour-ல் கூட 5 அல்லது 10 பேருடன்தான் செல்லும். அதுவும் சில சமயம் நானும் ட்ரைவரும் மட்டுமே இருப்போம்.
என்னை இறக்கிவிட்டுவிட்டு அவர் வெறும் வண்டியை அடுத்த அரைமணி நேரத்திற்கு சும்மா ஓட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தம் செல்வார்.
One Less Car Today ஓசிப் பயணம் நல்லாவே வேலை செய்கிறது.பல புது முகங்கள் வர ஆரம்பித்துவிட்டனர். சும்மா காத்தாடும் இந்த பஸ் கொஞ்சம் களை கட்டிவிட்டது. என்னெ இந்த இலவச பயணம் முடிந்த பிறகு அனைவரும் கழன்று விடுவார்கள். வழக்கம்போல் ரெகுலர் பயணிகளே இருப்பார்கள். அரைமணி நேர பஸ் பயணம் மிகவும் இனிமையாக இருக்கும். பேப்பர் படித்துக் கொண்டும்,காதில் மாட்டிய பலவிதமான ரேடியோ, சி.டி பிளேயர் இப்ப புதுசா iPod உடனும் பலவிதமான மக்களின் ஜாலியான இடம்.
இது மட்டும் இல்லாமல் GoTriangle என்னும்அமைப்பு இந்தப் பகுதியில் மக்களை காரைத்தவிர மாற்று ஏற்பாட்டில் ஆபிஸ் செல்ல வைப்பதற்கு பலவிதமான முயற்சிகளையும் திட்டங்களையும் புதுசு புதுசாக அறிமுகப் படுத்திக்கொண்டே இருப்பார்கள். சைக்கிளில் வந்து, சைக்கிளை பஸ்சின் முன்னால் உள்ள ஒரு கம்பியில் மாட்டிவிட்டு, பஸ்சில் ஏறிக்கொள்ளலாம். இறங்கியவுடன் எடுத்துக்கொண்டு நாம் பாட்டுக்கு கிளம்பிவிடலாம்.
இதைத்தவிர Car Pool Van Pool போன்ற திட்டங்களும் உண்டு. நமக்குப் பிடிச்சது சைக்கிள்தான். சின்ன வயசுல இருந்து ஒரு காதல் அதுமேல. என்ன கார் வாங்கலாமுன்னு திட்டம் போடுறத விட ,நான் எந்த சைக்கிள் வாங்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன். எப்படி நமக்குத் தோதான சைக்கிள் வாங்குறதுன்னு பின்னால ஒரு பதிவே போடலாம்.
TTA Bus சமீபத்தில் காத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட, பெட்ரோல் தட்டுப்பாட்டைக் குறைக்க குறிப்பிட்ட வழித்தடங்களில் (நெடுந்தூரப் பயணம்) இலவச சேவை செய்தது. பொதுவாகவே இங்கே உள்ள பஸ் நிறுத்தங்களில் ஆளே இல்லாட்டியும் நிறுத்தி, கதவைத் திறந்து, பஸ் ஸ்டாப்பின் பெயரை உரக்க ஒலி பெருக்கியில் அறிவித்தபின்தான் வண்டியை மறுபடி நகர்த்துவார்கள். ம்..ம்ம்.. இப்படி ஆளில்லா பஸ்டாப்பில் சும்மா வெட்டியாக நிற்காமல் சென்றாலே பெட்ரோலைச் சேமிக்கலாம். என்ன செய்வது இவர்களின் சேவைத்தரம் அப்படி.
நீங்கள் பஸ்டாப்பில் நிக்குறீங்கன்னு வச்சுக்குவோம். நீங்கள் ஏற வேண்டிய பஸ் வருகிறது. நீங்கள் கையைக் காட்டவோ அல்லது ரோட்டில் நின்று கொண்டு இரண்டு கையையும் காலையும் ஆட்டி டான்ஸ் ஆடவோ வேண்டாம். அப்படி ஆடினாலும், அரைக்கிலோ மீட்டர் தள்ளி நிறுத்துவது எல்லாம் சென்னைப் பட்டணத்தில்.(இப்படியே அவுங்கள நொள்ள சொல்லுங்க. நம்ம பிளாட்பாரத்தின் மேலே நிக்காமல் பாதி ரோட்டில் நின்றால் அவர்கள் எங்கே சரியாக நிறுத்த முடியும்.) இங்கே நீங்க சும்மா திரும்பி (வேறு பக்கம்) பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தாலும் , TTA காரர்கள் பஸ்சை நிறுத்தி, கதவைத் திறந்து சாவாசகமாக மைக்கை எடுத்து ஸ்டாப்பின் பெயரை உரக்க சொல்லுவார். நீங்கள் அப்புறம் ஏறிக் கொள்ளலாம். பஸ் ஸ்டாப்பில் யாருமே இல்லாட்டியும் அப்படித்தான் செய்வார்கள்.
ஊருப்பட்ட கார்களை வைத்துக் கொண்டு இவர்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க பஸ்ல வாங்க வாங்க அப்படீன்னு கூவாத குறையாக, தலைகீழ நின்னு தண்ணி குடிச்சுப் பாக்குராங்க, யாரும் கண்டுக்கிறது இல்லை.போக வர $4.00 செலவு செய்வதற்கு ஒன்ரைக் கேலன் பெட்ரோல் போட்டுட்டு சொகுசாக ஆபிஸ் போயிட்டு வந்துராலாம். பயணிகளைச் சொல்லியும் குத்தமில்லை.
இருக்கப்பட்ட மகராசனுங்க எப்படி வேணுமின்னாலும் போலாம். நம்ம ஊரில சைக்கிளுக்கு ஒரு தனிப்பாதை போட்டால், சைக்கிள் பயன் படுத்துபவர்களை ஊக்குவிக்கலாம். என்ன சொல்றீங்க? ஓ அதுவா நடக்கப் போட்ட பிளாட்பாரத்திலேயே கடைவச்சு அதுக்கு சங்கமமும் வச்சுட்டாங்க அப்படீங்றீங்களா? அதுவும் வாஸ்தவம்தான்.
யாரை நொந்துக்கிறது. கல்கோனா,கடலை மிட்டாயும், மசாலா மாங்காவும் வித்து ஜீவனம் நடத்துர பாட்டியும் தான் பிளாட்பாரத்துல கடை வச்சு இருக்கு.
பிளாட்பாரத்தை மொத்தமா ஆக்ரமிச்சுட்டு புள்ளையார் அந்தப் பக்கம் ஒக்காந்து அருள் செய்றார்.
தலைவன் தலைவிக்கு கொடி,சிலை மற்றும் மன்றம். அதெல்லாம் போக
பெரிய தாதா, அரசியல் தலிவர்களின் தலையீடு. ஒரு ஏக்கர் நிலம் கூட வாங்கிரலாம் பிளாட்பார கடையப் போடுறது தமிழ் நாட்டுல ரொம்ப சிரமங்க.
அய்யோ நம்ம பஸ்டாப்பு வந்துட்டதா TTA ட்ரைவர் சொல்லிட்டார், இறங்கனும். அப்புறம் பாப்பொமுங்க.
என்ன? கண்டக்டரா? நல்லாக் கேட்டீங்க போங்க. இங்க எல்லாமே ஒரே ஆளுதான்.
ட்ரைவர் கம் கண்டக்டர் கம் கிளீனர் அவர்தான். சில்லரை இல்லை இறங்கும் போது தாங்க, அப்படீன்ற பேச்சல்லாம் இல்லை. சரியான சில்லரை இல்லாட்டி ஒன்னும் பண்ண முடியாது. பெப்பேதான். ஆபிசுக்கு போக முடியாது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டியதுதான்.