பதிவு 13:காசியின் தமிழ்மணமும் எனது கல்வெட்டு மனமும்
நான் எழுதும் பதிவுகள் எனது ஆத்ம திருப்திக்காக மட்டும்தான் என்றால் நான் எதைப்பத்தியும் கவலைப்படத்தேவை இல்லை. நான் எழுதுவதை ஒருசிலராவது படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.மரத்தடி,திண்ணை,ராயர் காப்பிக்கடை போன்றவைகள் எனக்குத்தெரியாது. கலை , இலக்கியம் மற்றும் கவிதையும் தெரியாது. சனரஞ்சகமான தமிழ், ஆங்கிலப்படங்களையும் மட்டுமே பார்த்து வந்தவன். கணனித்துறையில் இருந்தாலும் இந்த வலைப்பதிவு,திரட்டி பற்றியெல்லாம் ஒன்னும் தெரியாது.ஆனந்த விகடனும் குமுதமும், தினமலர்,தினத் தந்தி தினகரன் போன்ற தினப்பத்திரிக்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணன். எனக்கு பலரை அறிமுகப்படுத்தியது இந்த இணையம்தான்.
முதலில் ஒருவரின் பதிவில் இருக்கும் இணைப்புகளை வைத்து பிறரின் பதிவுகளை சென்றடைந்தேன். பின்பு http://tamilblogs.blogspot.com/ வழியாக
பல புதிய தமிழ் இணையத்தளங்களை கண்டுகொண்டேன்.தமிழ்மணம் வந்தவுடன் சினிமா,இலக்கியம்,சாதி மதம்,நக்கல்,நையாண்டி அனைத்தையும் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆரம்பத்தில் பா.ரா போன்றோர் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் எது இலக்கியம் என்று முட்டி மோதி மல்லுக்கட்டி ஓடிவிட்டனர். பலபதிவுகள் பின்னூட்டத் தொல்லையால் நிறுத்தப்பட்டன. பல மனஸ்தாபங்கள். டோண்டு படதா கல்லடியா. அவரும் பின்னூட்டப் பிரச்சனைக்காக பலரிடம் புலம்பிப்பார்த்தார். இப்போது நாம் அனைவரும் போலி டோண்டுவுடன் வாழப் பழகி விட்டோம்.
காசி தமிழ்மணத்தை ஆரம்பிக்கவில்லை என்றால் வேறுயாரும் ஆரம்பித்து இவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களா தெரியாது. அவரது பலமும் பலவீணமுமே அவர் இலக்கிய வட்டத்தில் இருந்து வந்தவரல்ல.இலக்கிய வட்டம்,சதுரம் ,செவ்வகம் போன்ற பலர் இங்கே உள்ளார்கள்.அவரவர் அவர் தொழில் சார்ந்த இணையங்களையே ஆரம்பிக்கிறார்கள் யாரும் இது போன்ற பொதுவான ஒரு தளத்தை அமைக்கவில்லை.அப்படியே அமைத்தாலும் அது வியாபார நோக்கோடுதான் இருக்கிறது. அல்லது மிகவும் கனமான விசயங்களான பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம்,இடது,வலது என்ற விசயங்களே பெரிதும் பேசப்படும்.அது போன்ற இடங்களில் என்னை மாதிரி வெகு சாதாரணன் எதையும் சொல்லவோ,கருத்தாடவோ முடியாது.அவர்களைக் குற்றமோ குறையோ சொல்லவில்லை, என்னிடம் சரக்கு இல்லை.
நான் எழுதும் மிகச்சாதாரணமான, இந்தக் "கல்வெட்டு" மற்றும் "பலூன் மாமா" பதிவை ஒருசிலராவது படிக்கக் காரணம் தமிழ்மணத் திரட்டி மட்டுமே. "யார்ரா இவன் புச்சா இருக்கானே , என்னனு பார்ப்போம்" அப்படீனு வந்தவர்கள்தான் அதிகம். இங்கே பலருக்கு பலரைத் முன்பே தெரிந்து இருக்கிறது. பலர் பலருக்கு தங்களின் பதிவுகள் வழியாக தொடுப்புக் கொடுத்துள்ளார்கள். எனக்கு தெரிந்த ஒரேவாசல் தமிழ்மணம் மட்டுமே. வேறு தொழில்நுட்பங்கள் தெரியாது. இந்த தள அமைப்பே பலரது வடிவமைப்பைப் பார்த்து பார்த்து செய்ததுதான்.
எனது பதிவுகளைத் தமிழமணம் திரட்டி மூலம் ஒருசிலராவது படிக்கிறார்களே என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றே. அதே சமயம் தற்போது காசி அவர்கள் அறிவித்துள்ள மாற்றங்களினால் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட முகமறியா நண்பர்களை நினைத்து வருத்தமாகவே உள்ளது. பலசுவையுடன் இருந்த கதம்ப மணம் இனிமேல் இருக்காது. தமிழமணத் திரட்டியால் திரட்டப்பட வேண்டுமானல் நமக்குப் பிடித்ததை எழுதுவதற்குமுன் அது தமிழ்மண சட்ட திட்டங்களுக்குள் இருகிறதா என்று பார்த்தே எழுத வேண்டும்.
தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,இதுபோல் வேறு எந்த திரட்டியும் இல்லாததாலும் நான் 100% தமிழ்மணத்தைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.இப்போதுதான் வாய்ஸ் ஆப்த விங்-ன் புண்ணியத்தில் http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" -ல் இணைத்துக்கொண்டு உள்ளேன். காசியின் இந்தக் கட்டுப்பாடு மேலும் பல புதிய திரட்டிகளைக் கொண்டுவரும் என்றே நம்புகிறேன். அவர்களும் எதேனும் கட்டுப்பாடு வைக்கலாம். யார் கண்டார்?
எனது பார்வையில் இந்த "திரட்டி" , சினிமாத் தொழிலில் இருக்கும் "டிஸ்ரிப்யூட்டர்" போன்றது. டைரக்டர் என்னதான் சினிமா எடுத்தாலும் டிஸ்ரிப்யூட்டர் இல்லாமல், அவரின் கருத்து மக்களை அடையாது.
அதுபோல்தான் இங்கேயும். அவரவர்கள் எதில் சிறந்தவர்களோ, அவர்களுக்க்கு எது பிடித்திருக்கிறதோ அதை எழுதலாம். பிறரின் விருப்பத்துக்கெல்லாம் யாரலும் எழுத முடியாது, அதில் ஒரு போலித்தன்மை வந்துவிடும். அவரவர் அவரவருக்குத் தெரிந்ததையே எழுத முடியும். அதேபோல் காசி எல்லாத்தையும் திரட்டனும் என்று யாரும் கட்டாயப்படுதவும் முடியாது.காசியே இதனைத் தற்காலிகமான ஒன்றுதான் என்று சொல்லி இருப்பதால்
//இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும்.//
யாரும் யாரையும் காயப்படுத்திக் கொள்ளாமல், மாற்று யோசனைகளை காசிக்கு வழங்கலாம். அல்லது திறமையுள்ளவர்கள் வேறு நல்ல திரட்டிகளை அமைக்க முயற்சிசெய்யலாம்.
சொல்லலாமா? வேண்டாமா?
சிங்கம் வலம் போனால் என்ன இடம் போனால் என்ன,நம்ம மேல பாயாமல் இருந்தா சரி அப்படீன்னு சும்மா இருக்க முடியல. எது சொன்னாலும் அது எல்லாரையும் திருப்திப்படுத்துமுன்னு சொல்லமுடியாது. எல்லாரையும் திருப்திப்படுத்த நினைச்சா நாம நம்ம சொந்த அடையாளங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும். தன்மானம் உள்ள யாராலும் அப்படி இருக்க முடியாது என்பதால் காசியின் முதல் "தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்பில்" நான் இதை "இது ஏதோ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடு போல் உள்ளது" என்றும் "நண்பராகிய நீங்கள் தவறு செய்யும் போது இடித்துரைக்காமல் இருக்க முடியவில்லை" கடுமையாக கூறியிருந்தேன்.
அதற்குப்பின் அவர் அந்த மாற்றங்களை தனது அடுத்த பதிவில் அறிவித்தேவிட்டார். அதற்குமேல் யாராலும் ஒன்னும் செய்யமுடியாது. அதில் "வருந்தமான முடிவு." என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.
இன்று நான் பலவிசயங்களை சொல்ல நினைத்தேன். ஆனால் ஜெயஸ்ரீ அதனையே மிகச்சிறப்பாக கூறிவிட்டார். நன்றி ஜெயஸ்ரீ
அவரின் கருத்துகளில் இருந்து கீழ்க்கண்டவற்றை நான் வழிமொழிகிறேன்.
காசி அவர்களுக்கு கல்வெட்டு எழுதிக்கொள்வது,
தமிழ்மணத்தை பயன்படுத்துபவன் வேறு தொழில்நுட்பங்கள் தெரியாததால் இந்தத் தளத்தை மட்டுமே வலைப்பதிவுகள் படிக்க தொடர்ந்து உபயோகித்து வருபவன் என்ற முறையில் என் கருத்தையும் சொல்லநினைக்கிறேன்.
நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்று யாரும் இங்கு சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை என்று திடீரென நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது... நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.
இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம்.
அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.
உங்கள் இந்தச் செயல் இனி தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதப்போகும் ஒவ்வொரு பதிவாளர்களையும் பதிவுகள் எழுதுவதற்கு முன்னும், புதிதாக சேர நினைப்பவர்களை, சேருவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவைப்பதாகவே இருக்கும்.
உங்கள் ரசனையோடு தங்கள் எழுத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பதாகவே அது இருக்கும்.
உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். ...லாம் ...லாம் ...லாம். மிக மிக நல்ல விஷயம்.
ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து! வருந்துகிறேன்!!!
உள்ளபடியே உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகக் குழுவினரின் சேவைக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.
*********************
தமிழ்ப்பதிவுகள்
*********************